அக்டோபர் 2022 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு
பகுதி 1 பகுதி 2 பகுதி 3 பகுதி 4 பகுதி 5 பகுதி 6 பகுதி 7 பகுதி 8 பகுதி 9 பகுதி 10 பகுதி 11 பகுதி 12 பகுதி 13 பகுதி 14 பகுதி 15
கரை தொடாது பாதியிலேயே அடங்கிவிடும் கடலலையாய்..
நின் காதல் காணாது எனக்குள்ளே கரைகிறேன் நான்!!
அரங்கநாதன் தாத்தாவைப் பார்த்து நேருக்கு நேரே அபி அப்படியொரு வார்த்தை பேசிவிடுவாளென யாரும் நினைத்திடவில்லை. ஏன் அவளே கூட அவ்வளவு பெரிய மனிதரிடம் அப்படி நடந்து கொள்ள வேண்டும் என நினைத்திருக்கவில்லை.
ஆனால், அவளுக்கு அவளது குடும்பத்திற்கு அநீதி இழைக்கப்பட்டிருப்பதாய் நினைத்துக் கொண்டிருக்கும் அவள் மனது, வெளிப்பார்வைக்கு அமைதியானதாய்த் தெரிந்தாலும், உள்ளுக்குள் ஆர்ப்பரிக்கும் கடலெனப் பொங்கிக் கொண்டிருந்தது.
அதுவே ஒவ்வொரு சிறுவிஷயத்திற்கும் உணர்ச்சிவயப்பட்டு, இடம், பொருள் என எதையும் நினையாது அவளை வார்த்தைகளைக் கொட்டிவிடச் செய்தது. ஆனாலும் கூட இறுதிவரை அதை எதையும் உணராமலே இருந்தாள் அபி.
அவள் பேசியதைக் கேட்டு அனைவரும் அதிர்ந்து நிற்க, அபிக்கு அருகில் நின்றிருந்த கிருஷ்ணா, “அபி, யார்கிட்ட என்ன பேசற? இப்படித் தான் பெரியவங்ககிட்ட மரியாதை இல்லாம பேசுவியா?” என்று அதட்ட, அதற்குச் சற்றும் தயங்காமல் வந்து விழுந்தது அபியின் பதில்.
“நான் சொன்னதுல என்ன கிருஷ்ணா தப்பிருக்கு? உண்மைய தான சொன்னேன். இங்க இருக்கற எல்லாரும் உங்களோட மனசாட்சியைத் தொட்டு சொல்லுங்க. கிருஷ்ணா பண்ணின இதே காரியத்தை… அதாவது வீட்டு பெரியவங்க உங்க சம்மதமும் இல்லாம, என் விருப்பமும் இல்லாம எனக்குக் கிருஷ்ணா தாலி கட்டினாரே… அதே மாதிரி உங்க வீட்டு பொண்ணு, உங்களோட விருப்பம் இல்லாம கல்யாணம் பண்ணிக்கிட்டு வந்தா, இந்த மாதிரி உங்கள ஜோடியா பார்க்க சந்தோசமா இருக்குனு சொல்லுவீங்களா? இல்ல வீட்டை விட்டு அடிச்சு துரத்துவீங்களா?” என்றவள் கேட்டதும், மின்னதிர்வாய் முற்கால நிகழ்வு அவர்கள் மனதுள்.
அரங்கநாதன் தாத்தாவிற்கு மட்டுமே, அந்த நிகழ்வு நிழற்படமாய்.
“இந்த வீட்டை விட்டு நீங்க துரத்தினாலும், என் வாழ்க்கையை உங்க யாரோட துணையும் இல்லாம நான் நல்லபடியா வாழ்ந்து ஜெயிச்சு காட்டுவேன். எனக்கு ஏதாவது பிரச்சனை வந்துச்சுன்னா, அதுக்கு உங்க உதவிய நாடி நான் மறுபடி இந்த வீட்டுக்குள்ள காலடி எடுத்து வச்சன்னா.. அந்த நிமிஷம் என் உயிர் என்னை விட்டு போய்டும்” என்று ஒரு கம்பீரக் குரல் பெண் சிங்கமாய்க் கர்ஜித்தது, இன்றளவும் அப்படியே வார்த்தை பிசகாது… குரலின் கம்பீரம் குறையாது அரங்கனாதனுக்கு அவர் செவிப்பறையில் மோதிக் கொண்டிருந்தது.
அதனாலும் கூட அவர் அபியை எதிர்த்து எவ்வித மறுமொழியும் கூறாது, தலை நிமிர்ந்து கண்களில் கோபக்கனலுடன் நின்றிருந்த அவளை இருகணம் ஊன்றிக் கவனித்தவர், கண்களில் ஒரு ஆச்சர்ய ஒளி தென்பட அமைதியாக அவ்விடம் விட்டு அகன்று விட்டார்.
பெரியவர் அமைதியாகச் சென்றதும், அவர் மனதை படித்த அவரது மனையாளும் தலைகுனிந்தபடியே சென்று விட்டார்.
ஆனால் மனம் பொறுக்காத கோவேந்தனும், நளினியும் அபியின் அருகே வந்து, “அபி என்னம்மா இவ்வளவு பெரியவர்கிட்ட இப்படிப் பேசிட்டே?” என்று கேட்க
அவளோ, “நான் எதையும் தப்பா பேசலையே? உண்மைய தான சொன்னேன்” என்று அப்பொழுதும் பிடிவாதமாய்க் கூறினாள்.
ஆனால் அவளை நண்றாக உணர்ந்திருந்த நளினி, அபியின் சிகையை வருடியவாறே, “என்னடா இப்படியெல்லாம் பேசற? தப்பு செஞ்சது கிருஷ்ணா தான? அதுக்கு உனக்குக் கோபம் வந்துச்சுன்னா, நீ அவன் மேல தான கோபப்படணும். அதை விட்டுட்டு எல்லாருக்கும் பெரியவர்… அவர் மேல உன் கோபத்தைக் காமிக்கலாமா?” என்று கேட்டார்.
அவரது அந்தத் தன்மையான பேச்சிலும் கூடச் சாந்தமாகாத அபி, “என்ன அத்தை இப்படிச் சொல்றீங்க? எனக்குக் கிருஷ்ணா மேல பெரும் கோபம் தான். ஆனா அத விட அவரோட தவறுகள் ஆதரிக்கறவங்க மேல அதிகக் கோபமிருக்கு.
ஒரு வீட்டுல பெரியவங்க, அதுவும் தலைமையில் இருக்கறவங்க மாதிரி தான் மத்தவங்களுக்கு அவங்களோட அடி பற்றி நடப்பாங்க. அதே மாதிரி தான் தாத்தாவோட வழியில, தாத்தவோட கட்டுப்பாட்டுல தான் இந்த வீடு நடக்குது. சோ அவர் எடுக்கற முடிவுகள் எப்பவும் சரியானதா இருக்கணும். அதே சமயம் அவர் ஒருதலைப் பட்சமாவும் நடந்துக்கக் கூடாது. ஆனா இதுல அவர் எதையுமே கடைபிடிக்கலையே?
ஆனா நீங்க… கிருஷ்ணாவோட அப்பா, அம்மா. நீங்க ரெண்டு பேரும் அவர் செஞ்சது தப்புனு உணர்ந்து அவர் கூடப் பேசாம இருக்கீங்க. ஒருத்தர் தப்பு செஞ்சா… அது நம்ம குழந்தையாவே இருந்தாலும் கண்டிக்கணும், மீறினா தண்டிக்கணும். என்னை பொறுத்தவரைக்கும் அது தான் சரியான வளர்ப்பு. அது மட்டுமில்லாம, தாத்தாக்கு இருக்கறது ஆணாதிக்க மனோபாவம் தான். அதுல எனக்கு எந்தவொரு சந்தேகமும் கிடையாது” என்று ஆணித்தரமாகச் சொல்லிவிட்டு விறுவிறுவெனத் தனதறைக்குள் சென்று விட்டாள்.
அவள் பேசியதில் இருந்த சிறு உண்மை, அவர்கள் மூவரையும் சுடவே செய்தது.
மறுபுறம், அரங்கநாதனும், வெண்மணி அம்மாளும் தங்களது அறையில் பேசிக் கொண்டிருந்தனர்.
“என்னங்க அபி பேசினதையே நினைச்சுட்டு இருக்கீங்களா? விடுங்க அவ சின்னப் பொண்ணு. அதுமட்டுமில்லாம, தகப்பனை பறிகொடுத்துட்டு, தாயும் இருந்தும் இல்லாம இருக்கற பொண்ணு. அவளுக்கு மனசலவுல நிறைய காயங்கள் இருக்குங்க. இந்த நேரத்துல போய் நம்ம வம்சி இப்படிப் பண்ணிட்டான். அதுவே அந்தப் புள்ளைக்குப் பேரதிர்ச்சியா இருந்துருக்கும். நாமளும் அவளுக்கு ஆதரவா நின்னு, வம்சியைக் கண்டிச்சிருக்கணும். ஆனா நாம அதையும் செய்யல. அந்தக் கோபத்துல தான் அவ அப்படிப் பேசிட்டா, நீங்க எதையும் மனசுல வச்சுக்காதீங்க” என்று அபிக்கு ஆதரவாய் பேசினார்.
ஆனால் அரங்கநாதனோ, “இல்ல வெண்மணி. எல்லாருமே.. நீ உட்பட நான் கண்மூடித்தனமான நம்ம வம்சிக்குச் சப்போர்ட் பண்றேன்னு நினைக்கறீங்க. ஆனா வம்சி செஞ்ச இந்தக் காரியத்தை நான் அவ்வளவா கண்டிக்காததுக்குக் காரணம் என்ன தெரியுமா? என்ன தான் இருந்தாலும் அபி என் பேத்தி. அதுவும் இத்தனை வருஷம் தொடர்பே இல்லாம… எங்க இருந்தா எப்படி வளர்ந்தான்னு எதுவுமே தெரியாம இப்போ திடீர்னு கண்ணுல பட்டு பொக்கிஷமா எனக்குக் கிடைச்சுருக்கற பேத்தி.
ஆனா அவ என்ன நிலைமையில வந்துருக்கறா? அவளுக்கு இனி ஆதரவு யாரு? ஒருவேளை துளசி நல்லபடியா பிழைச்சு வந்தாலும் கூட அவங்களுக்கு இத்தனை வருஷம் கழிச்சு இந்த வீட்டுல அவ்வளவு ஓட்டுதல் இருக்குமா? அப்படி இருந்துச்சுன்னா சந்தோசம் தான். ஆனா யோசிச்சுப் பாரு. துளசி பிழைக்கலைனா… இந்த வீட்டுல அபியோட நிலைமை என்ன? அவளோட இடம் என்ன?
சரி நாம இருக்கறோம்… நாமளே நம்ம பேத்திக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைச்சு கொடுப்போம்ன்னு வச்சுக்கோ. ஆனா அந்த நாகேந்திரன், மஞ்சு மாதிரி ஆட்கள் எல்லாம் நம்ம குழந்தையை அவ வீடு தேடி போய்ப் பிரச்சனை பண்ண மாட்டாங்களா? நாம எத்தனை நாளுக்கு அவளுக்குப் பக்கபலமா, உறுதுணையா இருக்க முடியும்? எல்லாமே நம்ம காலம் முடியற வரைக்கும் தான? அதுக்கப்பறம் என்னனு யோசிச்சுப் பாரு.
ஒரு பொண்ணுக்கு அவளோட புகுந்த வீட்டுக்காரங்க எவ்வளவு தான் நல்லவங்களா, வசதியானவங்களா இருந்தாலும்.. அவளோட பிறந்த வீட்டுல அவளுக்கு எவ்வளவு முக்கியத்துவம் இருக்கு, அவ பிறந்த வீட்டு மனுஷங்க அவளுக்கு எந்தளவுக்கு ஆதரவா இருக்காங்கன்றத வச்சு தான் அவளோட மதிப்பு இருக்கும்.
அப்படி நம்ம அபிக்கு பிறந்த வீடே இல்லாம, நாம அவளுக்கு வெளில கல்யாணம் பண்ணி வச்சா, ஏதோ நம்ம பேருக்காக, நாம செய்யற சீர், செனத்திக்காகத் தான் அவளை மதிப்பாங்களே தவிர, அவளோட உண்மையான குணத்துக்கு அங்க மதிப்பிருக்காது.
அது மட்டுமில்லாம நம்ம வம்சி, அவளை உயிரா நேசிக்கறான் மா. அவளை நல்லபடியா பார்த்துப்பான். எப்பயும் அவளுக்கு ஆதரவா.. உறுதுணையா இருப்பான். அதனால தான் அவன் அபியை இப்படிக் கல்யாணம் செஞ்சும் கூட நான் பெருசா எதிர்க்கல” என்று கூறியதும், வெண்மணி அம்மாவுக்குக் கண்களில் கண்ணீரே வந்து விட்டது.
“என்ன மன்னிச்சுடுங்க… நான் கூட உங்கள கொஞ்சம் தப்பா நினச்சுட்டேன். இதுக்குப் பின்னாடி இவ்வளவு பெரிய காரணம் இருக்கும்னு நான் கூட யோசிக்கல” என்று வர உணர்ந்து கூறவும் ஆறுதலாக அவர் கரத்தை தட்டிக் கொடுத்தார்.
பின், “இதுல இன்னொன்னும் இருக்கு வெண்மணி” என்று அரங்கநாதன் கூறியதும், அவரை யோசனையாக ஏறிட்டார் அவர்.
“நான் ஏற்கனவே ஒரு பொண்ண முழுசா தொலைச்சுட்டு நிக்கறேன். அதே மாதிரி இன்னொரு பொண்ணோட உறவையும் முழுசா தொலைக்க விரும்பல” என்று அவர் கூறியதும், அப்பட்டமான ஆமோதிப்பு வெண்மணியம்மாவின் மௌனத்தில்.
மேலும், “நீ நம்ம அபிகிட்ட ஒன்னு கவனிச்சியா வெண்மணி? அவ வார்த்தைகள்ள இருந்த கோபத்தையும், அவ பார்வையில இருந்த திமிரையும், அவ கண்ணுல தென்பட்ட தைரியத்தையும் பார்க்கறப்போ உனக்கு வேற ஒருத்திய நியாபகப்படுத்தல?” என்று கேட்க, அப்பொழுது தனது அழுகையை மிகவும் கஷ்டப்பட்டு அடக்கினார் அவர்.
“நீ அழுகையை அடக்கணும்னு நினைக்கற, ஆனா நான் அழணும்னு நினைக்கறேன்” என்று கரகரத்த குரலில் அரங்கநாதன் கூறியதும், பதறிப் போனார் வெண்மணியம்மாள்.
“ஐயையோ… ஏங்க… என்னாச்சுங்க?” என்று அவர் கேட்டதற்கு,
“என்னோட வைராக்கியம் எல்லாம் கரைஞ்சு போய் ரொம்ப வருஷம் ஆச்சு” என்று கலங்கிய விழிகளுடன் கூறினார் அரங்கநாதன்.
அங்கே கிருஷ்ணாவும் கலங்கிய விழிகளுடன் அபியின் முன் நின்றிருந்தான்.
“ஏன் அபி… உனக்கு என் மேல கோபம்னா அத என்கிட்ட காட்ட வேண்டியது தான? தாத்தா… அவ்வளவு வயசானவர்கிட்ட பேசற பேச்சா இதெல்லாம்?” என்று கேட்க
அபியோ மிகவும் அசால்ட்டாக அங்கிருந்த நாற்காலியில் கால்மேல் கால் போட்டுக் கொண்டு, ” எத்தனை பேர் இதே கேள்வியைக் கேட்பீங்க?” என்று சலிப்புடன் கேட்டாள்.
“இங்க பாரு அபி… உன்னோட கோபமும் திமிரும் என் அளவுல நின்னுச்சுன்னா, இந்த வம்சி கிருஷ்ணா ரொம்ப நல்லவனா இருப்பான். ஆனா அது என் மரியாதைக்குரியவங்ககிட்ட காமிச்சன்னா… என்னோட மிருகத்தனத்தை நீ பார்க்க வேண்டி இருக்கும்” என்று கர்ஜித்தான்.
அவனது கர்ஜனையை கேட்க அங்கம் பதறினாலும், சற்றும் அசராதது போலக் காட்டிக்கொண்டபடி, “ஹோ.. நான் உங்க தாத்தாகிட்ட பேசினத்துலையே உங்களுக்கு இவ்வளவு கோவம் வருதுன்னா.. நீங்க பண்ணின காரியத்துக்கு எனக்கு எவ்வளவு கோவம் வரணும். நான் இப்படித் தான் பண்ணுவேன். உங்க கூடவே இருந்துட்டு உங்க எல்லாரையும் வார்த்தையாலே குத்தி கிழிப்பேன்” என்று அங்காரமாய் கூறவும், நிஜமாகவே வெறிப் பிடித்துவிட்டது கிருஷ்ணாவிற்கு.
சட்டென அவளுக்கு அருகாகச் சென்றவன், “என்னடி விட்டா ரொம்பத் துள்ற? யார் என்ன சொன்னாலும், ஏன் நீயே மறுத்தாலும் நீ தான் என்னோட பொண்டாட்டி, நான் தான் உன்னோட புருஷன். இது நான் தாலிகட்டிட்டேன்ற காரணத்துக்காக மட்டும் இல்ல. உன் மனசுல என்ன தவிர வேற யாரும் இல்ல. அது உன் கண்களோட தவிப்புல எனக்கு நல்லாவே தெரியுது. ஆனா.. உன்னோட அந்தக் காதலை எல்லாம் மீறி.. நீ இப்படி நடந்துக்கறதுக்குக் காரணமா என்னமோ நடந்துருக்கு. அத என்னனு தெரிஞ்சுக்காம உன்ன குணப்படுத்த முடியாது. அத சீக்கிரம் கண்டுபிடிக்கறேன். அதுக்கப்பறம் உன்ன கவனிச்சுக்கறேன்” என்று கோபமாக அவளைத் தள்ளி விட்டு சென்றான்.
கோபமாய்ச் செல்லும் அவன் பின்னாடியே அவன் கரம் பற்றிச் சென்றது அபியின் மனமும்.
(தொடரும் – சனிக்கிழமை தோறும்)
பகுதி 1 பகுதி 2 பகுதி 3 பகுதி 4 பகுதி 5 பகுதி 6 பகுதி 7 பகுதி 8 பகுதி 9 பகுதி 10 பகுதி 11 பகுதி 12 பகுதி 13 பகுதி 14 பகுதி 15
GIPHY App Key not set. Please check settings