அக்டோபர் 2022 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு
பகுதி 1 பகுதி 2 பகுதி 3 பகுதி 4 பகுதி 5 பகுதி 6 பகுதி 7 பகுதி 8 பகுதி 9 பகுதி 10 பகுதி 11
“ஞெகிழி கக்கும் ஞாயிறு கண்டு
விலகிச் செல்லும் வெண்மதியோ இவள்?
காத தூரம் அவள் ஓடினாலும் – அவன்
காதல் கொண்டே இவள் ஜீவன் ஒளிரும்”
துரத்துகின்ற துர்சொப்பனத்திலிருந்து அடித்துப் பிடித்து, வியர்த்து விறுவிறுத்து, பின் அதில் மீண்டு, துயில் களைந்து கண் விழித்து, கண்டதெல்லாம் கனவென்று உணர்ந்து ஆசுவாசப்படும் நேரமதில், கனவின் நிழலாது, நனவாக மாறும் கொடுமையைத் தான் அபி அனுபவித்துக் கொண்டிருந்தாள்.
ஆனாலும் கூடப் பல இழப்புகளைக் கடந்த சற்றுப் பக்குவப்பட்ட பெண்ணானதால், சற்று ஆசுவாசமாக யோசித்ததுமே, அவளுக்கு அடுத்துச் செய்ய வேண்டியது என்னவெனப் புரிந்தது.
அதன்படி, மறுநாள் அதிகாலையிலேயே எழுந்து விட்டாலும் கூட, வீட்டினர் அனைவரின் நடமாட்டமும் உணர்ந்த பிறகே அறையை விட்டு வெளியே வந்தாள் அபி.
அவள் கதவைத் திறந்து வெளியே வந்ததும், அவளது அறையைப் பார்த்து அமர்ந்தபடி அவன் தாத்தாவிடமும், அப்பாவிடமும் பேசிக் கொண்டிருந்த கிருஷ்ணா தான் அவளை முதலில் பார்த்தது.
அவனது பேச்சுப் பாதியில் நின்றதைக் கண்டு, அவனது பார்வை செல்லும் திசையை நோக்கி திரும்பிப் பார்த்தனர்… கிருஷ்ணாவிற்கு எதிர்ப்புறம் அமர்ந்திருந்த கோவேந்தனும், அரங்கநாதனும்.
அங்கே நின்றிருந்த அபியின் கோலத்தைக் கண்டு அவர்களுக்கும் ஆச்சர்யம் தான். ஏனென்றால் அவள் கையில் அவளது பெட்டியுடன் அங்கிருந்து கிளம்பத் தயாராக நின்றிருந்தாள்.
அவளைக் கண்டு சற்றுப் புருவம் சுருக்கியபடி பார்வையாலேயே கிருஷ்ணா கேட்ட கேள்விக்கு அசட்டையாக முகத்திருப்பலை பதிலாகத் தந்தவளால், அரங்கநாதன் தாத்தா வாய்விட்டே அவள் எங்கே கிளம்புகிறாள் என்று கேட்டதும், அப்படி அமைதியாக இருக்க முடியவில்லை.
அது மட்டுமில்லாமல், யாரிடமாவது உள்ள நிலைமையை விளக்கத் தான் வேண்டுமல்லவா?
எனவே தான், “எங்க அபி கிளம்பிட்ட? அதுவும் இவ்வளவு காலையில?” என்று அரங்கநாதன் கேட்டதும்
“அது வந்து தாத்தா… நான் இப்போ வேலூர் போறேன். அங்க போய் என்னோட காலேஜ் சர்டிபிகேட் எல்லாம் எடுத்துட்டு வரணும்” என்று அவள் பதிலளிக்க, இன்னும் ஆச்சர்யமாகி விட்டது அங்கிருந்தவர்களுக்கு.
அரங்கநாதன் பேசத் துவங்கியதுமே பூஜை அறையில் இருந்து வெளியே வந்த கிருஷ்ணாவின் அம்மா நளினியும், பாட்டி வெண்மணியும்.
அவள் கூறிய பதிலைக் கேட்ட நளினி, “உன்னோட சர்டிபிகேட்ஸ்க்கு இப்போ என்ன அவசரம் அபி? அப்படியே அது இப்போ உடனே உனக்கு வேணும்னாலும், வேலூர் போனதும் உடனே திரும்பி வரதுக்கு, எதுக்கு உனக்கு இவ்வளவு பெரிய சூட்கேஸ்?” என்று கேட்டார்.
அதைக் கேட்டு இரண்டு நிமிடம் மௌனம் சாதித்தவள்… பிறகு.. “நான் எனக்கு ஒரு வேலை தேடிக்கலாம்னு இருக்கேன் அத்தை. அம்மாவை அங்க கூட்டிட்டு போக முடிஞ்சா அங்கேயே… வேலூர்லயே இருந்துக்குவோம். அப்படி இல்லனா… இங்க என்னோட பிரண்ட் ஒருத்தி இருக்கா, அவ மூலமா இங்கயே வேலைக்கு ஏற்பாடு செஞ்சுட்டு, ஏதாவது ஹாஸ்ட்டல்ல தங்கிக்கலாம்னு இருக்கேன். எதுவா இருந்தாலும் நான் இப்பவே வேலூர் போறது அவசியம். அப்பறமும் கூட மறுபடியும் நான் இந்த வீட்டுக்கு வரதா இல்ல. அதனால தான் என்னோட திங்ஸ் எல்லாத்தையும் எடுத்துட்டு கிளம்பறேன்” என்று அவள் கூறியதும், அனைவருக்கும் பேரதிர்ச்சியுடன் கூடிய குழப்பமும் கூட.
அவள் கூறியதைக் கேட்டு கிருஷ்ணாவை விட அதிகம் பதறியது அரங்கநாதன் தாத்தா தான்.
“என்ன அபி… இங்க உனக்கு என்ன பிரச்சனை? எதுக்கு இந்தத் திடீர் முடிவு? இன்னும் கொஞ்ச நாள்ல நாம உனக்கும், வம்சிக்கும் கல்யாணம் செய்ய முடிவு செஞ்சுருக்கோம். அத மறந்துட்டு என்னமா இது?” என்று அவர் பதட்டத்துடனும், ஆதங்கத்துடனும் கேட்டதும்
அதுவரை மனதிற்குள் கிருஷ்ணாவை பிடித்திருந்தாலும், மனதார காதலித்திருந்தாலும், அவனை மணம் செய்யும் வாய்ப்புக் கை மேல் கிடைத்திருந்தாலும் அத்தனையையும் உதறிவிட்டு செல்லும்படி செய்த விதியை நொந்து கொண்டிருந்தவள், அந்த விதி உண்டாக, அரங்கநாதன் என்றோ அவரது கோபத்தினாலும், ஆவேசத்தினாலும் செய்த தவறு தான் காரணமென்பதால், அவர் மீதே இப்பொழுது பாயத் துவங்கினாள்.
“என்ன தாத்தா கல்யாணம்? யாரை கேட்டு யாரோட விருப்பத்துக்காக இந்தக் கல்யாணத்த பேசி முடிச்சீங்க? உங்க பேரனை பத்தி எனக்குத் தெரியாது. ஆனா எனக்கு இந்தக் கல்யாணத்துல சுத்தமா விருப்பம் இல்ல…” என்று கூசாமல் பொய் பேசினாள்.
தனது அந்தப் பொய்யில் தன் நெஞ்சே சுட, அந்த வெப்பக் கனலையையும் எதிரில் இருந்தவர் மீதே வீசினாள்.
“நான் எனக்கு இந்தக் கல்யாணத்துல விருப்பம் இல்லனு உங்ககிட்டயும் சொன்னேன் தான? ஆனா நீங்க உங்க விருப்பம்… உங்க குடும்பக் கௌரவம் தான் முக்கியம்னு உங்க முடிவுல பிடிவாதமா இருந்துட்டீங்க. மத்தவங்க மனசு.. அதுல இருக்கற ஆசை.. இதெல்லாம் உங்களுக்கு ஒரு பொருட்டே இல்லல்ல?
தப்பு தாத்தா.. நீங்க செஞ்சது ரொம்பப் பெரிய தப்பு. உங்களுக்கு நீங்க நினைச்சது நடக்கணும். அதுக்காக நீங்க யாரை வேணாலும் தூக்கி எரிவீங்க.. யார் மனச வேணாலும் உடைச்சு தூள் தூளாக்குவீங்க?
அதுவும் எனக்கு என் அப்பா இல்ல. என் அம்மாவும் சுயநினைவு இல்லாம இருக்காங்க. நான் உங்க ஆதரவுல உங்க வீட்டுல இருக்கறதுனால தான, என்னோட விருப்பத்துக்கு மதிப்பு குடுக்காம நீங்க இந்தக் கல்யாணத்த நடத்தியே ஆகனுன்னு முடிவு செஞ்சிங்க?
அதுமட்டுமில்லாம, நான் இங்க இருந்தா உங்க பேரனோட நல்ல பேரும் கெட்டுப் போகுது. எதுக்கு இந்தப் பிரச்சனைகளெல்லாம்? நான் இங்க இருந்து போய்ட்டாலே எல்லாமும் சரியாகிடும்.
மத்தபடி எல்லாரும் என் மேல ரொம்பப் பாசமாவே நடந்துகிட்டீங்க. அம்மாவையும் நல்லா பார்த்துக்கறீங்க. அதுக்கு நான் என் மனசார நன்றி சொல்லிக்கறேன்” என்று கையெடுத்துக் கும்பிட்டுவிட்டு, தனது பெட்டியை எடுக்கக் குனிந்தவள், “தொப்” என்று ஏதோ கீழே விழும் சத்தம் கேட்டு திடுக்கிட்டு நிமிர்ந்தாள்.
அப்பொழுது அவள் கண்ட காட்சி, அவளைக் குலை நடுங்க வைத்தது. ஏனென்றால் அங்கு அரங்கநாதன் தன் நெஞ்சை பிடித்துக் கொண்டு கீழே விழுந்து விட்டிருந்தார்.
ஏனென்றால்… இதே போல இன்னொரு பெண்ணின் மனதை புரிந்து கொள்ளாமல் இத்தனை ஆண்டுகள் அவளுக்குத் தான் தவறிழைத்து விட்டோமோ என்ற குற்றவுணர்ச்சியும், இப்பொழுது இந்தச் சிறுபெண்ணின் மனதையும் தனது மூடத்தனத்தால் சிதைத்து விட்டோமோ என்ற எண்ணமும்… இந்தக் கல்யாண விஷயத்தினால் வாழ்க்கையில் முதல் முறையாகாது தோற்றுப் போய் விடுவோமோ என்ற வருத்தமும்…
இவை அத்தனைக்கும் மேலாக, ஆசைப் பேரனின் விருப்பம் நிறைவேறாமல் போய் விடுமோ… அதனால் அசட்டுப் பிடிவாதமும், முரட்டுத்தனமான கோபமும் கொண்டவனான அவனின் வாழ்க்கை என்னவாகுமோ என்ற பயமும் தான் அவரை இதயத்தில் குத்தீட்டியாய்த் தாக்கி கீழே சரித்தது.
அவர் அப்படிக் கீழே விழுந்ததைக் கண்டு அனைவரும் பதறி அடித்துக் கொண்டு அவரிடம் செல்ல, நளினி தருணுக்கு அழைத்துத் தாத்தாவைப் பற்றிக் கூறி அங்கு உடனே வரச் சொன்னார்.
ஒருபுறம் வெண்மணி பாட்டியும், கோவிந்தனும் அரங்கநாதன் அருகே அமர்ந்து அவரை ஆசுவாசப்படுத்த முயன்று கொண்டிருக்க, நளினி தான் இப்படிப்பட்ட நேரத்தில் அவருக்குக் கொடுக்கப் பரிந்துரைக்கப்பட்டிருந்த மருந்தை எடுக்க அவரது அறைக்குள் விரைந்தார்.
இங்கு அபியோ, தன்னால் தானே தாத்தாவுக்கு இப்படி ஆகிவிட்டது என்ற கழிவிரக்கத்தில், “தாத்தா.. நான் உங்கள காயப்படுத்தணும்னு இதையெல்லாம் சொல்லல. ஆனா நான் இங்க இருக்கறது தான் இவ்வளவு பிரச்னைக்குக் காரணம்னு சொன்னேன். தயவு செஞ்சு என்ன மன்னிச்சுடுங்க தாத்தா.
அதுமட்டுமில்லாம நாம இன்னும் வெளிப்படையா எங்க கல்யாணத்த பத்தி யார்கிட்டயும் சொல்லல இல்ல? அதனால நான் இந்த வீட்டை விட்டுப் போயிட்டான்னா கூட யாருக்கும் அது பெரிய விஷயமா இருக்காது. இவ்வளவு ஏன் மஞ்சு ஆண்ட்டி கூட அவங்க பொண்ணு கல்யாணத்துல பிசி ஆகிடுவாங்க. அதனால நீங்க எத பத்தியும் கவலைப்படாதீங்க தாத்தா” என்று தன் மனதிற்குத் தோன்றியபடியெல்லாம் தன் வார்த்தைகளால் அவருக்குச் சமாதானம் கூறிக்கொண்டிருக்க, அதைக் கண்ட கிருஷ்ணா எதுவும் பேசாமல் கோபத்துடன் அபியை நெருங்கிக் கொண்டிருந்தான்.
பிறகு, “தாத்தா…” என்று அவன் அழைக்க, அவனது அந்த ஒற்றை வார்தையில் சிரமப்பட்டு விழி திறந்த பெரியவரிடம்..
“இனி அபி இங்க இருக்கறதால எனக்கோ அவளுக்கோ எந்தக் கெட்ட பேரும் வராது. ஏன்னா… அவ என்னோட அத்தை பொண்ணா இங்க இருந்தா தான தப்பு? என் பொண்டாட்டியா இங்க இருந்தா தப்பில்லையே?” என்று கூறியவன், மற்றவர்கள் சுதாரிக்கும்முன், அவர்கள் வீட்டின் கூடத்தில் இருந்த அம்மன் சிலையின் கழுத்திலிருந்த தாலியை எடுத்து அபியின் கழுத்தில் கட்டி விட்டான்.
அவனைத் தடுக்கக் கூடத் தோன்றாமல் அதிர்ந்து போய் அவனையே வெறித்த அபி, சட்டென நிலை தடுமாறி மயங்கினாள்.
அவளை மற்றவர் வந்து பிடிக்கும்முன் தானே ஏந்தியவன், அவளை அவளது அறைக்குத் தூக்கிச் செல்ல முயல, “நில்லு கிருஷ்ணா..” என்று நிறுத்தினார் கோவேந்தன்.
அவன் நிதானமாக நின்று திரும்பிப் பார்க்க, “நீ என்ன காரியம் செஞ்சுருக்கன்னு உனக்குப் புரியுதா? ஒரு பொண்ணோட சம்மதம் இல்லாம, அவளுக்குத் தாலி கட்டியிருக்க. அபிக்கு அவளோட விருப்பத்தை மதிக்காம கல்யாணத்த முடிவு செஞ்சதே பிடிக்கல, ஆனா நீ தாலியே கட்டியிருக்க? உன் மனசுல கொஞ்சமாவது அவளோட நிலைமையை யோசிச்சு பார்த்தியா? உன்ன நாங்க இப்படியா வளர்த்தோம்?” என்று அவர் ஆவேசப்பட
“என்ன டா இப்படி ஒரு காரியம் செஞ்சுட்ட? தனக்கு அப்பா இல்ல, அம்மாவும் இப்படி இருந்தும் இல்லாம இருக்காங்கன்னு தான் நாம அவளோட உணர்வுகளை மதிக்காம இருக்கோம்னு இப்போ தான் அந்தப் பொண்ணு அவ்வளவு வேதனை பட்டுச்சு. ஆனா அவ பேசி வாய மூடறதுக்குள்ள நீ என்ன காரியம் டா செஞ்சுருக்க? நீ ஆம்பள… அதனால நீ என்ன வேணாலும் செய்யலாம்ன்னு நினச்சுட்டியா?” என்று அவர் கண்ணீருடன் பேசிக் கொண்டிருக்க, அந்நேரம் அங்கு வந்த தனுவுக்கும், தருணுக்கும் கூட அங்கு நடந்தது முழுவதுமாய்ப் புரிந்துவிட, அவர்கள் இருவரும் அதிர்ந்து உறைந்து தான் போனார்கள்.
ஆனாலும் தாத்தாவின் நிலையும் அவர்களைக் கனமாகத் தாக்க, தருண் தாத்தாவை பரிசோதிக்க முனைய, தனுவோ தன் அண்ணனிடம் எதுவும் பேசாது அவனையே முறைத்துக் கொண்டிருந்தாள்.
அத்தனை பேரின் கோப பேச்சுகளும் கூடக் கிருஷ்ணாவை அவ்வளவு பாதிக்கவில்லை. ஆனால் தனது மனம் உணர்ந்த தங்கை.. எவரிடத்திலும் தன்னை விட்டுக் கொடுக்காத தனது செல்லத் தங்கை.. அவளின் அந்த ஒரு வெறுத்த பார்வையே அவனை உயிர் வரை தாக்கியது.
எனவே, “அபி என்னை விரும்பலையா தனு?” என்று உள்ளே உடைந்ததை காண்பிக்காமல் அவன் கேட்க, அப்பொழுது தான் தன் மௌனம் கலைத்தாள் அவள்.
“என்ன கேட்ட? அபி உன்ன விரும்பலயான்னா? அவ உன்ன விரும்பியே இருக்கட்டுமே, ஆனா ஏதோ ஒரு காரணத்துனால உன்ன கல்யாணம் செஞ்சுக்க அவ மறுக்கறாள்ன்னா அத நீ மதிச்சுருக்கணும் இல்ல? ஆனா இதெல்லாம் உனக்கு ஒரு பொருட்டே இல்லைல்ல? இதுக்கும் நீ இதெல்லாம் அவ மேல இருக்கற காதல்ன்னால தான்னு சொல்லுவ. ஆனா இதுக்குப் பேர் காதல் இல்ல… அரக்கத்தனம். நீ.. ச்சே.. என் அண்ணனா இப்படின்னு இருக்கு” என்று அவள் பட்டாசாய்ப் பொறியவும், சற்றே இறுக்க இமை மூடித் திறந்தவனின் கண்கள் மீண்டும் பிடிவாதத்தையே காட்டியது.
அதைக் கண்டு கொண்ட தருணோ, இப்பொழுது எது பேசினாலும் அவன் எதையும் மதிப்பதாய் இல்லை என்றுணர்ந்தவனாகத் தன்யாவின் பேச்சை தடுத்தான்.
“கொஞ்சம் அமைதியா இரு தனுமா. முதல்ல நாம தாத்தாவையும் அபியையும் கவனிக்கணும், அப்பறம் பேசிக்கலாம்” என்றுவிட்டு தாத்தாவின் உடல்நிலையைப் பற்றி விவரிக்கலானான்.
“தாத்தாக்கு இப்போ கொஞ்சம் அதிர்ச்சியினால தான் இப்படி ஆகி இருக்கு. அதுவும் நீங்க சரியான நேரத்துக்கு அவருக்கு மாத்திரை குடுத்துட்டதால இப்போதைக்கு எந்தப் பிரச்சனையும் இல்ல. அதனால அவர் கொஞ்சம் ரெஸ்ட் எடுத்தாலே போதும்” என்று விட்டு அப்பொழுது முழுவதுமாக மயக்கத்திலிருந்து மீண்டிருந்தவரிடம்…
“தாத்தா… நீங்க உங்க ரூம்ல எதையும் நினைக்காம கொஞ்ச நேரம் தூங்குவீங்களாம்..” என்று கூறிவிட்டு அவரைத் தூக்கிக்கொண்டு தருண் அவர் அறைக்குச் செல்ல, கிருஷ்ணாவோ அபியை தூக்கிக்கொண்டு அவளறைக்கு வந்தான்.
வந்ததும் அவளைப் படுக்கையில் கிடத்திவிட்டு, அருகிலிருந்த தண்ணீர் பாட்டிலில் இருந்த தண்ணீரை அவள் முகத்தில் தெளிக்க, அவளின் மயக்கமும் உடனே தெளிந்தது.
மயக்கத்திலிருந்து தெளிந்ததும், கிருஷ்ணா அவளுக்குத் தாலி காட்டியதே முதலில் ஞாபகத்திற்கு வர, குனிந்து தன் கழுத்தைப் பார்த்தவள், பார்த்தது பார்த்தபடி கண்ணில் நீர் மட்டும் தன்னால் வர அப்படியே இருந்தாள்.
ஆனால் கிருஷ்ணாவோ, அவளருகே சென்று அந்தப் படுக்கையிலேயே அமர்ந்து, “இதுக்கு மேல நீ இந்த வீட்டை விட்டு போக முடியுமா அபி?” என்று கேட்டான்.
அவன் அவ்வாறு கேட்டதும் நீர் தெளித்த விழியிரண்டும் அவனை நோக்கி அனலை வாரி இறைக்கத் தலை நிமிர்ந்தவள், “நான் எது நடக்கக் கூடாதுன்னு நினைச்சனோ அத நீ நடத்திட்ட கிருஷ்ணா. இதுக்கெல்லாம் நீ நல்லா அனுபவிப்ப…” என்று வார்த்தையைக் கடித்துத் துப்ப
அதற்குக் கிருஷ்ணாவோ.. “யார்கிட்ட அனுபவிப்பேன் அபி? உன்கிட்ட தான?” என்று நமட்டுச் சிரிப்புடன் கூறினான்.
இனி இங்கு யார் மிஞ்ச எவர் கெஞ்ச… இவர்களின் திருமணப் பந்தம் எதை நோக்கிச் செல்லுமோ? கிருஷ்ணனின் குழலின் லயம் இன்னிசையாய் சேர்ந்திசைக்குமா?
(தொடரும் – சனிக்கிழமை தோறும்)
பகுதி 1 பகுதி 2 பகுதி 3 பகுதி 4 பகுதி 5 பகுதி 6 பகுதி 7 பகுதி 8 பகுதி 9 பகுதி 10 பகுதி 11
GIPHY App Key not set. Please check settings