செப்டம்பர் 2022 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு
பகுதி 1 பகுதி 2 பகுதி 3 பகுதி 4 பகுதி 5 பகுதி 6 பகுதி 7 பகுதி 8 பகுதி 9
விலகி விலகி நீ போனாலும்
என் விழி கொண்டே உனை
ஈர்த்திழுப்பேன்..
திமிர் கொண்டு நீ திமிறினாலும்
என் காதல் கொண்டே உனை
கரைத்திடுவேன்..
அபி தன் திருமணம் பற்றித் தாத்தாவிடம் பேச வேண்டும் என்று கூறியதும் அங்கிருந்த மற்ற அனைவரும் சிறிது அதிர்ந்து தான் போயினர். ஆனால் ஒரே ஒருவனைத் தவிர, அது வம்சி கிருஷ்ணா.
அவனுக்குத் தான் தெரியுமே… தன்னுடனான திருமணம் பற்றி அபியின் மனநிலை. ஆனால் இப்பொழுது அவனுக்கும் கொஞ்சம் சலிப்பு தட்டத் தான் செய்தது.
‘ஆமாம்… எந்தவொரு காரணமும் கூறாது, காதலிக்க முடியாது… கல்யாணம் செய்து கொள்ள முடியாது என்று வரட்டுத் தவளை போலக் கத்திக் கொண்டிருப்பவளை என்ன தான் செய்வது?’ என்று யோசித்தவாறே அவளைப் பின் தொடர்ந்தான் கிருஷ்ணா.
தோட்டத்திலிருக்கும் தாத்தாவை பார்க்க போன அபியின் பின்னே அவனும் செல்ல, சிறிது தூரத்திலேயே அவன் தன் பின்னோடு வருவதை உணர்ந்து திரும்பிப் பார்த்தாள் அபி.
“நீங்க இங்கயே இருங்க க்ரிஷ்… நான் தாத்தாகிட்ட தனியா பேசணும்” என்று கூறிவிட்டு அவள் முன்னே செல்லவும்
அவனோ… ‘தாத்தாகிட்ட தான.. பேசு டி பேசு.. நீ மட்டும் அவர்கிட்ட பேசி ஜெயிச்சுட்ட, நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்கறேன்’ என்று மனத்திற்குள் கூறியவன்…
வெளியே, “தாத்தாகிட்டயா அபிமா.. போ.. போய் உனக்கு என்னென்ன பேசணுமோ, எல்லாத்தையும் பேசிட்டு வா.. போம்மா.. போ..” என்று மிகவும் பணிவாகக் கூறுவது போல அவளுக்கே தெரியாமல் அவளை நக்கலடித்து அனுப்பி விட்டான்.
அவனது பேச்சில் இருந்த கேலியைப் புரிந்து கொள்ளாத அபியோ, அவனை ஒரு மாதிரி பார்த்துவிட்டுத் தாத்தாவிடம் சென்றாள்.
தோட்டத்திற்குச் செல்லும் படியில் கால் நீட்டி அமர்ந்து, அவர்களது பேச்சை தெளிவாகக் கேட்க தயாரானான் கிருஷ்ணா.
இனி தாத்தா மற்றும் அபியின் உரையாடல்…
“தாத்தா…”
“சொல்லு அபிரதி.”
“வந்து.. வந்து.. இன்னைக்குக் காலையில என்ன நடந்துச்சுன்னா..”
“நீ அதுக்கு விளக்கம் கொடுக்கணும்னு எந்த அவசியமும் இல்ல அபிரதி. ஏன்னா ஒரு ஆள பார்த்ததும் அவங்களோட குணாதிசியங்களை எடை போடற அளவுக்கு எனக்கு அனுபவம் இருக்கு. அதுமட்டுமில்லாம என் பேரன் வம்சி பத்தியும் எனக்கு நல்லா தெரியும். (ரொம்ப நல்லா தெரியும் போங்க – இது அபி மைண்ட் வாய்ஸ்). அதனால எனக்கு உங்க மேல சந்தேகம் இல்ல”
“அப்பறம் ஏன் தாத்தா எனக்கும் அவருக்கும் அடுத்த முகூர்த்தத்துல கல்யாணம்ன்னு சொன்னீங்க? இது அப்போதைக்குக் கிருஷ்ணாவோட மாமா வீட்டு வாய அடைக்கறதுக்காக மட்டும் சொன்னீங்களா? இல்ல நிஜமாவே எங்களுக்குக் கல்யாணம்ன்னு முடிவு பண்ணிட்டிங்களா?” என்று இப்பொழுது அபி சிறிது படபடப்புடன் கேட்கவும், அவளைப் பார்த்து பரிவாகச் சிரித்தார் அரங்கநாதன்.
“ஏம்மா.., இத்தனை வயசுக்கு மேல நான் பொய் சொல்லி என்னம்மா பண்ணப் போறேன்? அதுவும் என் பேரனோட கல்யாண விசயத்துல?” என்று அவர் நிதானமாகக் கேட்கவும், இம்முறை அபிக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.
“ஆனா தாத்தா… உங்களுக்கு எங்க மேல தான் சந்தேகம் இல்லையே? அப்பறம் ஏன்?” என அவள் கேட்கவும், இப்பொழுது அவளைத் தீர்க்கமாகப் பார்த்தார் அரங்கநாதன்.
“அந்த மஞ்சு சொன்னது மாதிரி நீங்க ரெண்டு பேரும் தப்பா நடந்துகிட்டீங்கன்னு நான் நினைக்கல மா… ஆனா வம்சி உன்ன தான் விரும்பறான்னு எனக்குத் தெரியும்” என்று அவர் கூறியதும்,
ஏற்கனவே தாத்தாவிற்கு இந்த விடயம் தெரிந்திருக்கலாம் என்று தன்யா கூறியதிலேயே சிறிது கலக்கமுற்றிருந்தவள், இப்பொழுதோ… ‘என்னடா இது… ஒரு பையன் ஒரு பொண்ண காதலிச்சா, அந்தப் பையனோட வீட்டுல இருக்கறவங்க, முக்கியமா இந்த வயசானவங்க அந்தக் காதலுக்கு எதிர்ப்பு தான தெரிவிக்கணும். இங்க என்னடான்னா, எதுடா சாக்கு.. உடனே கல்யாணத்த பண்ணிடுவோம்னு இல்ல காத்துட்டு இருக்காங்க..’ என்று மனதில் நினைத்தவள், அங்கே சற்றுத் தூரத்தில் படிகளில் அமர்ந்து அந்த உரையாடலை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த கிருஷ்ணாவைப் பார்த்துச் சங்கடமாக நெளிந்தாள்.
அதற்கு அவனோ, ‘ம்ம் பேசுடி… இப்போ பேசு.. நீ தான் தைரியமான ஆளாச்சே.. பேசு..’ என்று பார்வையாலேயே அவளைக் கலாய்க்க
அதற்கு அவனை முறைத்தவள் மீண்டும் தாத்தாவிடம் திரும்பி, “உங்க பேரன் என்ன விரும்பினா மட்டும் போதுமா தாத்தா? எனக்கும் அவர் மேல விருப்பம் இருக்க வேண்டாமா?” என்று மிகவும் சீரியஸாய்க் கேட்க…
அவரோ.. ‘ஆஹான்..?’ என்பது போல அவளைப் பார்த்துக் கொண்டிருந்தார்.
அதைப் பார்த்த அபி, ‘அய்யயோ என்னடா ரியாக்ஷன் இது?’ என்று திருதிருவென விழித்தாள்.
அவளது இந்தத் தவிப்பை பார்த்த அரங்கநாதன், அவளது திணறல் கண்டு சிறிது இரக்கமுற்றவராக, “இங்க பாரு அபிரதி.. நான் முன்னாடியே சொன்னது மாதிரி தான். இத்தனை வருஷ அனுபவத்துல, எனக்கு மனிதர்களோட குணாதிசியங்கள் பத்தி எடை போடவும் தெரியும், மனிதர்களோட மனசுக்குள்ள என்ன இருக்குன்னு புருஞ்சுக்கவும் தெரியும். அதுவும் உனக்குப் பளிங்கு முகம்… மனசு நினைக்கறது முகத்துல தெரிஞ்சுடும். அதனால இனியும் நீ நடிக்க வேண்டியதில்லை” என்று அவர் தீர்மானமாகக் கூறவும், வாயடைத்துப் போனாள் அபி.
ஆனால் அப்பொழுதும் கூட விடாமல், தனது கடைசி அஸ்திரத்தை பிரயோகித்து விடுவதென முடிவெடுத்து.. “தாத்தா… நான் என் அம்மா இல்லாம எந்த முடிவும் எடுக்கறதா இல்ல. அம்மா கண் முழுச்சதுக்கு அப்பறம் நாம இத பத்தி பேசிக்கலாம்” என்று பேச்சில் அவருக்குத் தானும் சளைத்தவளல்ல என்று நிரூபித்தாள் அபி.
அதற்கு அவரோ, “உன் அம்மா எழுந்து வர இன்னும் பத்து வருஷம் ஆச்சுன்னா என்ன பண்ணுவ அபி? சும்மா ஏதாவது பேசணுமேன்னு பேசாத. அது மட்டுமில்லாம, உன்னோட ஒவ்வொரு அசைவும் அவளுக்குப் பாதிப்பு ஏற்படுத்தும். அது அவ கோமால இருந்தாலும் கூட. இப்படி அவளுக்கு உடம்பு சரி இல்லைன்றத்துக்காக நீ கல்யாணத்தைத் தள்ளி போட்டா, அதுவே அவளுக்கு மனசுக்குள்ள குற்ற உணர்வை ஏற்படுத்தாதா?
அதனால உன் கல்யாணம் நடந்தா தான் உன் அம்மாவுடைய உடல் நலத்துல முன்னேற்றமும் நடக்கும். இது நானா சொல்லலம்மா… தருண் மாப்பிள்ளை சொன்னது தான். அதாவது உன் அம்மாக்கு உன்ன பத்தி ஏதாவது நல்ல விஷயம் தெரிஞ்சாலோ, இல்ல.. அவ சந்தோசத்தை மீட்டு எடுக்கற விஷயம் நடந்தாலோ தான் அவளோட உடல்நிலை சீக்கிரமா முன்னேற்றம் அடையும்னு சொன்னார்.
அது தான் நான் இந்த முடிவு எடுக்கறதுக்கு முக்கியமான காரணம் . இது தான் இறுதி முடிவும் கூட. அப்பறம் இன்னொன்னு, இதுவரைக்கும் என் பேச்சுக்கு யாரும் மறுபேச்சு பேசினது இல்ல.. இனியும் யாரும் பேசமாட்டாங்க…. பேசக் கூடாது” என்று இறுதியாக அவளது கண்களை ஊடுருவிப் பார்த்து கூறிவிட்டு அவர் எழுந்து சென்று விட்டார்.
ஆனால் அபி தான் அப்படியே கால்கள் வேரோடியது போல அவரது மறைமுக ஆணையில் பிரமித்துப் போய் நின்றிருந்தாள்.
‘இத்தனை வயதிலும் கூட யாருக்கேனும் இவ்வளவு கம்பீரம் நிலைத்திருக்குமா? எதிராளி பேச வந்ததையே மறந்து அவரது ஆளுமையில் தொலைந்து அவர் கூறுவதற்கெல்லாம் ஆமாம் சாமி போட வைத்து விடுகிறாரே..’ என்று அரங்கநாதனை நினைத்துச் சிலாகித்துக் கொண்டிருந்தவள்… அவரது நேர் வாரிசான கிருஷ்ணாவையம் அவருடன் மனதிற்குள் இணைத்து பார்த்தவாறே, திரும்பி அவன் இருக்குமிடம் நோக்க, அந்த மாயவனோ, இப்பொழுது அவளருகில் வந்து நின்றிருந்தான்.
வந்ததோடு மட்டுமல்லாது அவளுக்கு மிக நெருக்கத்தில் நின்று.. “என்னங்க மேடம்… தாத்தாகிட்ட பேசிட்டீங்களா? அவர் நீங்க சொன்னதுக்கு எல்லாம் சரி சரின்னு தலையாட்டின மாதிரி தெரிஞ்சுதே. சே.. நீங்க பயங்கரமான ஆளு தான் போங்க..” என்று வஞ்சப்புகழ்ச்சி அணி கொண்டு அவளைப் புகழ்ந்தான்.
அவன் கூறியதில் கடுப்படைந்த அபி.. அவனைப் பார்த்தது முறைக்க, “என்ன முறைக்கற? நான் அப்படியே பயந்துட்டேன் போ.. சரி சரி விடு. இப்போ கூட… கிருஷ்ணா ப்ளீஸ் இந்தக் கல்யாணத்த நிறுத்திடுங்க, என்ன விட்டுடுங்கனு என்கிட்ட கெஞ்சி கேளு, நான் கல்யாணத்த நிறுத்திடறேன். பாவம் பொழச்சு போவியாம்” என்று அவளைப் பார்த்து அவன் இளக்காரமாகக் கூற, அதில் மேலும் இரத்த அழுத்தம் எகிறியது அபிக்கு.
அந்தக் கோபத்தில், “யார்.. யார்கிட்ட கெஞ்சறது? என்னை நீங்க பொழச்சு போனு விடறீங்களா? உங்கள கல்யாணம் பண்ணி, உங்கள என்கிட்ட கெஞ்ச வைக்கல.. என்ன என்னன்னு கேளுங்க. என்கிட்டயே சவால் விடறீங்களா?” என்று அவள் வாயை விட, அதைக் கேட்ட கிருஷ்ணாவோ, அவளைப் பார்த்துச் சத்தமாகச் சிரித்து விட்டு அங்கிருந்து அகன்றான்.
‘இப்போ இவன் எதுக்கு இப்படிச் சிரிக்கறான்?’ என்று யோசித்தவள், அப்பொழுது தான் தான் செய்த தவறு உரைக்க, ‘ஹய்யயோ இவன் பக்கத்துல வந்தாலே என் மூளை இவனுக்குப் பிரண்டாகிடுதே…’ என்று எண்ணியவாறே, “ஹே கிருஷ்ணா நில்லுங்க.. உங்ககிட்ட நான் இன்னும் பேசி முடிக்கல..” என்று கத்திக்கொண்டே அவன் பின்னே ஓடினாள்.
அதற்கு அவனோ, “பேசலாம் பேசலாம்.. எல்லாம் கல்யாணத்துக்கு அப்பறம் பேசி முடிக்கலாம்..” என்று சிரித்துக் கொண்டே கூறிவிட்டு சென்று விட்டான்.
அரங்கநாதன் தாத்தாவும் சரி, வம்சி கிருஷ்ணாவும் சரி.. சாதாரணமாகப் பேசுவது போல வெளிப்பார்வைக்குத் தோன்றினாலும், இருவருள்ளும் வஜ்ஜிரத்தின் உறுதி இருக்கிறது என்பதை உணர்ந்தாள் அபி.
என்ன செய்தாலும் இந்தக் கல்யாணத்தைத் தடுக்க இயலாது போய் விடுமோ, ஒருவேளை கல்யாணமும் நடந்து, அதன் பிறகு அவளைப் பற்றிய உண்மை தெரிந்தால் என்னாகுமோ என்றெண்ணியவளுக்குக் குலை நடுங்கியது.
ஆகவே இந்தக் கல்யாணத்தை எப்படி நிறுத்துவது என்று தீவிரமாக யோசிக்கத் துவங்கினாள், அபிரதியாக இருக்கும் அபிலயா.
(தொடரும் – சனிக்கிழமை தோறும்)
பகுதி 1 பகுதி 2 பகுதி 3 பகுதி 4 பகுதி 5 பகுதி 6 பகுதி 7 பகுதி 8 பகுதி 9
GIPHY App Key not set. Please check settings