in ,

ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் (அத்தியாயம் 39) – ரேவதி பாலாஜி

இந்த தொடரின் அனைத்து அத்தியாயங்களும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

“மல்லிகா அக்காகிட்ட கேட்டேன் கவி.. மாசமா இருக்கப் பொண்ண சாமி செய்யக் கூட்டிட்டு போறதுலாம் நம்ம பழக்கம் இல்லைனு சொல்றாங்க.. நீ வேணா உங்க மாமியார் கிட்ட கேக்றியா”

“வேணாம் மா.. இனி யார்டையும் கேக்க வேணாம். நான் வர்ல”

“ஏன்டி ஆசையா இருக்குனு சொன்ன.. ஒரு தடவை நான் வேணா உன் மாமியார் கிட்ட கேட்டுப் பாக்கறேன்”

“இல்லை அதெல்லாம் வேணாம் மா”

“கோவிச்சிக்கிட்டியா.. கேட்டு தான் பார்ப்பமே.. வந்து சாப்டுட்டு கோவில் மண்டபத்துல இருந்துட்டு போய்டு அப்படி வேணா கேக்கலாம்”

“நான் முடிவு பண்ணிட்டேன். வேணாம் விடு.. என் குழந்தைக்காக நான் இதைக் கூட விட்டுக் கொடுக்கலன்னா எப்படி.. மொதல்ல நீ வேணாம்னு சொன்னதும் ஒன்னும் புரியாம கத்திட்டேன். இப்போ எனக்கும் வேணாம்னு தோணுதுமா”

“ஒன்னும் வருத்தப் படாத கவி.. நம்மை கோவில்ல வருஷம் வருஷம் புடவை படைப்பாங்க.. அடுத்த வருஷம் போலாம்.. பாட்டி வீட்டு கோவில்ல தை பூசத்தப்ப பெருசா பூஜை பண்ணுவாங்க.. அப்போ நம்மை பாப்பாவும் கூட்டிட்டு போலாம்”

“சரிம்மா”

உண்மையில் அந்த காலத்தில் ஏன் இத்தனை கட்டுப்பாடுகள் விதித்து இருப்பார்கள்?

பேருந்திலோ வண்டியிலோ கோவிலுக்குச் செல்ல வேண்டும். அங்கே சென்றதும் கூட்டம் எப்படி இருக்குமோ. உட்கார இடம் இருக்குமா இல்லை நெரிசலாக இருக்குமா?

கோவிலில் இருந்து உணவுக் கூடத்திற்கு கொஞ்ச தூரம் நடந்து செல்ல வேண்டும். சில நேரங்களில் உணவு சாப்பிட பயங்கர கூட்டம் வந்துவிடுமே. அதற்குள் எனக்கு அதிக பசி வந்துவிட்டால் எப்படி பொறுத்துக் கொள்வது?

கழிவறைகள் எப்படி இருக்குமோ. சுகாதாரமாக இல்லையென்றால் அதனால் பின் நாளில் எதாவது பிரச்சனை வந்தால் என்ன செய்வது?

பம்பை மேள சத்தங்கள் அதிகம் வந்தால் எப்படி பொறுத்துக் கொள்வது. அந்த சத்தத்திற்கு திடீரென சிலருக்கு சாமி வந்து ஆட ஆரம்பித்து விடுவார்களே அப்பொழுது அங்கே நான் நின்றாள் எப்படி என்னைப் பாதுகாத்துக் கொள்வது?

இது போன்ற காரணங்களால் தான் நம் முன்னோர்கள் பல சாம்பிரதாயங்களை உருவாக்கி வைத்துள்ளார்களா?

மனைவி கர்ப்பமாக இருக்கும் பொழுது கணவன் மலை ஏறக் கூடாது என்பார்கள் அந்த காலத்தில் அலைபேசி இல்லாத சமயத்தில் கணவர் மலை மீது இருக்கும் பொழுது மனைவிக்குப் பிரசவ வலி வந்தால் எப்படி சொல்லி விடுவது அல்லது அந்த மனைவி தனியாக இருக்கும் பட்சத்தில் யார் அவளை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வார்கள். இப்படி ஏதும் சிக்கல்கள் நேர்ந்து விடக் கூடாது என்பதற்காக அப்படி கூறப்பட்டிருக்கலாம்.

இந்நேரத்தில் பாதுகாப்பு தான் நமக்கு மிகவும் முக்கியம். மற்றதை எல்லாம் பிறகு பார்த்துக் கொள்ளலாம்.

ஒரு வாரம் இருந்துவிட்டு அம்மா அப்பா தங்கை மூவரும் ஊருக்குக் கிளம்பினார்கள்.

அப்பா வீட்டு கோவில் பூஜையும் நன்றாக நடந்ததாம். பாட்டி வீட்டு சாமி செய்யும் திருவிழாவும் மிகச் சிறப்பாக நடந்ததாம். நானாக கேட்டால் தான் சொல்வார்கள். இல்லையெனில் இதைப்பற்றி என்னிடம் பேசுவதில்லை.

கோவில் பண்டிகைகளுக்குக் சென்ற புகைப்படங்களைக் கூட யாரும் பகிரவில்லை. நான் கஷ்டப்படுவேன் என்பதாற்காக பகிரவில்லையாம் அமுதினி பேசும் பொழுது கூறினாள்.

ஆதியும் நான் திருவிழாவிற்கு செல்லவில்லை என்கிற குறை தெரியக் கூடாது என்பதற்காக வெளியில் செல்ல அழைத்தார்.

“சென்னை போலாமா கவி.. வீக் எண்ட்ல ரெண்டு நாள் போய்ட்டு செல்வா வீட்டுல இருந்துட்டு வரலாம்”

“பாக்கலாம்ங்க”

“எந்த வாரம் போலாம்ன்னு சொல்லு.. ட்ரெயின் டிக்கெட் புக் பண்ணலாம்”

“இல்லை வேணாம் ஆதி.. இந்த ப்ளான்லாம் எதும் வேணாம்”

நான் ஆசையாக போலாம் என்று கூறிய இடத்திற்கு ஆதி அழைத்துச் செல்கிறேன் என்று கூறியும் எனக்குள் தயக்கம் நிலவியது.

வாய் வார்த்தையாக கேட்கும் பொழுது ஆசையாகத் தான் இருந்தது. கிளம்பலாம் தேதி சொல் என்று கேட்டதும் என்னவோ போல் ஆகிவிட்டது.

இப்பொழுதெல்லாம் அடிக்கடி சிறுநீர் செல்ல வேண்டும் போல் இருக்கிறது. வயிற்றில் சில மாறுதல்கள் ஏற்பட்டிருக்கின்றன. லேசாக முதுகு வலி அவ்வப்பொழுது ஏற்படுகிறது.

ஒருக்களித்து படுக்கப் பழகிக் கொண்டாலும் சில நாட்களில் உறக்கம் வர வெகு நேரம் ஆகிறது.

உணவையும் சத்து மாத்திரைகளையும் நேரத்திற்கு எடுத்துக் கொள்ள வேண்டும்.

பாதாம் ஊற வைத்து சாப்பிட வேண்டும். ஒரு கீரை வகை எடுத்துக் கொள்ள வேண்டும். அவ்வப்போது பழங்களோ பழச் சாறோ எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த முறையான பழக்கங்கள் யாவும் பயணிப்பதில் மாறும்.

இரண்டு நாட்கள் தானே பரவாயில்லை என்று ஒருபுறம் கூறினாலும் இன்னொரு புறம் அப்படி செல்வதில் என்ன கிடைக்காத மகிழ்ச்சி கிடைக்கப் போகிறது. ஏற்கனவே சென்ற கடற்கரை தானே!

அதற்காக கர்ப்பிணி பெண்கள் எங்கேயும் போகக் கூடாது என்று நான் சொல்ல வரவில்லை.

நானும் தான் இரண்டு வாரத்திற்கு ஒருமுறை ஈரோட்டில் இருந்து சேலமும் சேலத்தில் இருந்து ஈரோடும் சென்று வருகிறேன். எழுபது முதல் எண்பது கிலோமீட்டர் பயணிக்கிறேன். எனக்கு அது அத்தியாவசியத் தேவை.

செல்வாவின் மனைவி ராதா மாதம் ஒருமுறை சேலத்தில் இருந்து சென்னை சென்று வருகிறார்கள். அவள் வேலை அப்படி அவள் உடல் அதை ஏற்றுக் கொள்கிறது.

வேலைச் சூழல் ஏற்கனவே அவர்கள் செய்திருந்த பயணங்கள் உடல் சார்ந்த பிரச்சனைகள் எல்லாமும் பார்க்க வேண்டியது அவசியம்.

கர்ப்பகாலத்தில் விமானத்தில் சென்று வருபவர்களும் இருக்கிறார்கள் வீட்டில் மாடிப் படி கூட ஏறாமல் அறையிலேயே இருப்பவர்களும் இருக்கிறார்கள்.

எனக்கு ஆசை வந்த பொழுது வா பார்த்துக் கொள்ளலாம் என்று அம்மா கூறியிருந்தால் நானும் சுலபமாக சென்று வந்திருப்பேன். அவர் வேண்டாம் என்றதும் எனக்குள்ளும் பயம் வந்தது.

ஆகையால் கர்ப்பகாலத்தில் பயணம் என்பது அவரவர் நிலை வாழும் இடம் குடும்ப சூழல் உடல்நிலை யாவையும் சார்ந்திருக்கிறது.

எனக்கு ஐந்து மாதம் முடிந்து ஆறாவது மாதம் பிறக்கப் போகிறது. இனி என் குழந்தைக்காக நான் கர்ப்பகாலம் முழுவதும் பாதுகாப்பாக இருக்கப் போகிறேன்.

வேலைக்காக ஈரோடு மற்றும் சேலம் சென்று வருவதை தவிர வேறு எந்த பயணமும் எனக்கு வேண்டாம் என்று மனத்திற்குள் சொல்லிக்கொண்டேன்.

அப்பொழுது அலமாரியில் இருந்த அம்மா எடுத்துத் தந்த மஞ்சள் நிற புடவை என்னைப் பார்த்து சிரித்தது.

‘கோவிலுக்குக் கட்டிச் செல்லவென்று விருப்பப்பட்டு என்னை எடுத்தாயே இப்படி பயன்படுத்தாமல் ஓரமாக வைத்து விட்டாயே’ என்று கேட்பது போல் தோன்றியது.

வயிற்றில் வளரும் குழந்தைக்காக இப்போது இருந்தே நான் தியாகம் செய்ய ஆரம்பித்து விட்டேனா! என் மனநிலை சரிதானா!

முடிவெடுத்த பின்னும் சில கேள்விகள் என்னைச் சூழ்ந்தன.

இந்த தொடரின் அனைத்து அத்தியாயங்களும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(தொடரும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் (அத்தியாயம் 38) – ரேவதி பாலாஜி

    ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் (அத்தியாயம் 40) – ரேவதி பாலாஜி