in ,

விடியல் தேடும் கண்ணம்மாக்கள் (சிறுகதை) – ஸ்ரீவித்யா பசுபதி

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

“கண்ணம்மா, இன்னும் கிளம்பலையா? கூலி வாங்கியாச்சில்ல, வா போகலாம். நாங்கெல்லாம் கிளம்பறோம்.”

“இல்ல, ஒரு சந்தேகம். அதான் மேஸ்திரிகிட்ட கேட்டுட்டு வரேன்.”

“மேஸ்திரிகிட்ட இந்த நேரத்துல போய் என்ன சந்தேகம்  கேக்கப் போறே?”

“இல்ல மீனா, நம்மளை மாதிரியே கலவை சுமக்கற ஆம்பளைங்களுக்கு,  கூலி கூடுதலா கொடுக்கற மாதிரி இருக்கு. அந்த கோபால் அண்ணன் கூலி வாங்கிட்டு வந்து, என் பக்கத்துல நின்னுதான் பணத்தை எண்ணிட்டு இருந்துச்சு. அப்போ எதேச்சையா நான் பார்த்தேன். எனக்குக் கொடுக்கறதைவிட அந்த அண்ணனுக்கு மட்டும் நூறு ரூபா கூடுதலா இருக்கு.”

“சரி, அதுக்கு என்ன இப்போ? உனக்குக் கொடுக்க வேண்டிய கூலியைக் கொடுத்துட்டாங்க இல்ல. அதை வாங்கிட்டுக் கிளம்பு. இதெல்லாம் போய் மேஸ்திரிகிட்ட பேசிட்டிருப்பியா?”

“பின்ன, கேட்க வேண்டாமா? ஒரே மாதிரி வேலை பாக்கற ஆம்பளைங்களுக்கு மட்டும் நூறு ரூபா கூலி அதிகம். நமக்கு மட்டும் ஏன் கம்மி?”

“என்ன கண்ணம்மா புதுசா பேசறே? வருஷக்கணக்கா இந்த மேஸ்திரிகிட்ட தான் வேலை பார்க்கறேன். இதே மாதிரிதான் கூலி குடுத்துட்டிருக்காங்க. இதையாவது ஒழுங்காக் கொடுக்கறாங்களேன்னு நினைச்சு வாங்கிட்டுத்தான் இருக்கேன். இந்த மேஸ்திரி மட்டுமில்ல, இதே மாதிரி கட்டட வேலை பார்க்கற எல்லா இடத்துலயும் கேட்டுப் பாரு. ஆம்பளைகளுக்குக் கூடுதலாத்தான் கூலி இருக்கும். நம்மள மாதிரி பொம்பளைங்களுக்குக் கூலி குறைச்சலாத்தான் குடுப்பாங்க.”

“அதுதான் ஏன்னு கேக்கறேன்?”

“இது என்னடி இது, புதுசா கேள்வி எல்லாம் கேட்டுக்கிட்டு? காலங்காலமா இருக்கறது தானே.”

“திரும்பத் திரும்ப இதே பதிலைத்தான் சொல்லிட்டிருக்கே மீனா. காரணம் மட்டும் உன்னால சொல்ல முடியல.”

“யம்மாடி, ஆளை விடு. உன்னை மாதிரி எல்லாம் கேள்வி கேட்க நான் தயாரா இல்ல தாயி. ஏதோ கிடைக்கற கொஞ்ச நஞ்ச கூலில குடும்பத்த ஓட்டிகிட்டு இருக்கேன். உன்கூட சேர்ந்து பேசிட்டிருக்கறதைப் பார்த்தாலே, அந்த மேஸ்திரி என்னை வேலையை விட்டு அனுப்பிடுவாரு. அப்புறம் நாளைய பொழுது கஞ்சிக்குத் திண்டாட வேண்டியதுதான். நான் வீட்டுக்குக் கிளம்பறேன். நீ கேள்வி கேப்பியோ,  சண்டை போடுவியோ, என்ன வேணா பண்ணு. என்னை விட்டுடு.”

அதற்கு மேல் அங்கே நிற்காமல், மதிய சாப்பாடு கொண்டு வந்த கூடையைத் தூக்கிக் கொண்டு விடுவிடுவென்று நடந்து விட்டாள் மீனா. கண்ணம்மாவிற்கு மட்டும் போகவே மனமில்லை.

சற்று தொலைவில் உட்கார்ந்து, அந்த வாரக் கூலியைப் பட்டுவாடா செய்து கொண்டிருக்கும் மேஸ்திரியைப் பார்த்தாள் கண்ணம்மா. மேஸ்திரி சங்கரலிங்கம் கொஞ்சம் முரட்டுப்  பேர்வழிதான். அதற்காக நியாயத்தைக்  கேட்காமல் விடுவானேன். ஆனது ஆகட்டும் என்று துணிச்சலோடு மேஸ்திரியிடம் போய் நின்றாள்.

“அட கண்ணம்மா, உனக்குத்தான் கூலி கொடுத்தாச்சே. இன்னும் கிளம்பலையா?”

“அண்ணே, எனக்கு ஒரு சந்தேகம்.”

“என்னமா சந்தேகம்?”

“இல்ல, என்னை மாதிரியே வேலை பாக்கற கோபாலன் அண்ணனுக்கு மட்டும் 100 ரூபாய் சம்பளம் கூடுதலா கொடுக்கறீங்களே, அது ஏன்?”

“அப்படிப் போடு. வா, இந்தக் கேள்வியை நீ கேட்பேன்னு எனக்குத் தெரியும். இதுக்கு முன்னாடி வேலை பார்த்த இடத்துல எல்லாம் நீ இந்த மாதிரி ஏதோ பெரிய புரட்சி பண்ற மாதிரி பேசி, அதனாலத்தான் வேலையை விட்டுத் தூக்கிட்டாங்க அப்படிங்கற விஷயமும் என் காதுக்கு எப்பவோ வந்துடுச்சு. அதனால, இன்னைக்கு முதல் கூலி வாங்கற நீ, இப்படி ஏதாவது பேசுவேன்னு எதிர்பார்த்துட்டேதான் இருந்தேன். இப்ப உனக்கு என்ன பிரச்சனை?”

“ஒரே மாதிரி வேலை பார்க்கற பொம்பளைங்களுக்குக் கம்மி சம்பளம், ஆம்பளைங்களுக்கு அதிக சம்பளம் கொடுக்கறீங்களே, அது ஏன்? இதுதான் என் கேள்வி. நீங்க சொன்னீங்களே, எல்லா இடத்துலையும் நான் பிரச்சனை பண்ணினேன்னு, அண்ணே, இதைப் பிரச்சனையா நீங்க பார்க்கறீங்க. இது எனக்கான உரிமையா நான் நினைக்கறேன். யாராவது ஒருத்தராவது இதை சரியா புரிஞ்சிக்க மாட்டாங்களான்னு தான், நான் போற இடத்துல எல்லாம் இந்தக் கேள்வியை கேட்கறேன்.

என்னை வேலையை விட்டுத் தூக்கினாலும், நான் கேள்வி கேட்கறதை மட்டும் நிறுத்தல. நான் கேக்கறது மட்டும் தப்புன்னு சொல்றீங்க. எல்லா இடத்துலயும் அதே தப்பைத்தானே எல்லாரும் பண்ணிட்டு இருக்கீங்க. ஒருத்தருக்குக்கூட ஒரே மாதிரி சம்பளம் கொடுக்கணும்னு  தோணலை. இதுல பாரபட்சம் பார்க்கக் கூடாதுன்னு தோணவே இல்ல.”

“நீ கேக்கறது தப்பில்ல கண்ணம்மா. நியாயம்தான். ஆனா காலங்காலமாக இப்படித்தான் பண்ணிட்டிருக்கோம். எந்த எடத்துல வேணாலும் போய்க் கேட்டுப் பாரு. சித்தாள் வேலை பார்க்கற ஆம்பளைகளுக்குக் கூடுதல் கூலிதான். பொம்பளைகளுக்குக் கம்மி சம்பளம்தான். இவ்வளவு ஏன், எங்க ஊர்ல வயக்காட்டுல வேலை பார்க்கற ஆம்பளைங்களுக்கு சம்பளம் கூடுதல், பொம்பளைகளுக்கு கம்மி சம்பளம்தான். எனக்குத் தெரிஞ்சதை நான் சொல்லிட்டேன்.

இன்னும் நாலு இடத்துல போய் விசாரிச்சுப் பாரு. எல்லாரும் இப்படித்தான் பண்ணிட்டிருக்கோம். உன்கூட வேலை பாக்கற மத்த பொம்பளைங்க பேசாமத்தான் இவ்வளவு வருஷமா சம்பளத்தை வாங்கிட்டு போயிட்டிருக்காங்க. புதுசா வேலைக்குச் சேர்ந்து ஒரு வாரம்தான் வேலை பார்த்திருக்கே. முதல் கூலி வாங்கின இன்னைக்கே நீதான் இப்படித் தகராறு பண்றே. இப்படித்தான் கூலி தருவேன். உனக்கு விருப்பம் இருந்தா தொடர்ந்து வேலை பாரு. இல்லையா நீ பாட்டுக்குக் கிளம்பிப் போயிட்டேயிரு. எனக்கு எந்தப் பிரச்சனையும் இல்ல.”

“எல்லாருமே காலங்காலமா இப்படி செஞ்சுட்டு இருக்கோம்னு மட்டும்தான் சொல்றீங்க. அதுக்கான காரணத்தை ஒருத்தர் கூட சொல்ல மாட்டேங்கறீங்க. நான் இன்னைக்கு எவ்வளவு சட்டி கலவை சுமந்தேனோ அதே அளவுதான் அந்த அண்ணனும் சுமந்திச்சு. நான் செங்கலைத் தூக்கிட்டு வந்த மாதிரிதான் அந்த அண்ணனும் செங்கலைத் தூக்கிட்டு வந்துச்சு. இன்னும் சொல்லப் போனா, நான் கூடுதலாவே தூக்கிட்டு வந்தேன். அந்த அண்ணன் அப்பப்ப பீடி குடிக்க ஓரமா ஒதுங்கிட்டு, என்னைவிட கம்மியாதான் தூக்கிச்சு. அப்ப ஏன் சம்பளம் மட்டும் எனக்குக் கம்மியா கொடுக்கறீங்க? காரணம் சொல்லுங்க.

நீங்க சொல்ற காரணம் நியாயமா இருந்தா, நான் ஏத்துக்கறேன். நான் வேலை பார்த்த இடத்துல எல்லாம் இதே கேள்வியைத்தான் கேட்டேன். எல்லாரும் இதே பதில்தான் சொல்றீங்க. நியாயமான ஒரு காரணத்தைக்கூட சொல்லல. பொம்பளைங்கறதால எனக்கு சம்பளம் கம்மின்னு சொல்றதை என்னால ஏத்துக்க முடியல.

ஒரு பேச்சுக்குக் கேக்கறேன் அண்ணே. உங்களை மாதிரி மேஸ்திரியா ஒரு பொம்பள இருந்து, பொம்பளைங்களுக்குக் கூடுதலா கூலியும், ஆம்பளைங்களுக்குக் கொறைச்சலான கூலியும் கொடுத்தா சும்மா விடுவீங்களாண்ணே?”

“ஒரே கேள்வியை நீ மாத்தி மாத்திக் கேட்டாலும் பதில் ஒண்ணேதான் கண்ணம்மா. இதுதான் பழக்கம். எனக்கு இவ்வளவுதான் விளக்கம் தெரியும். வேற யாராவது நல்லா விளக்கம் சொன்னா, அங்கே போய் நீ கேட்டுக்கோ. என்னால இதுக்கு மேல விளக்கம் சொல்ல முடியாது. உனக்குக் கூலியும் கூட்டித் தர முடியாது.”

கோபத்துடன் அங்கிருந்து வெளியேறினாள் கண்ணம்மா. அவள் கையில் இருந்த காலித் தூக்குச் சட்டி சத்தமெழுப்பியது போல், அவள் மனதிலுள்ள கேள்விகளும் பேரிறைச்சலுடன் கோபமாக வெளிவந்தன.

இவ்வளவு நடந்த பின்னும் கண்ணம்மாவுக்குக் கண்ணீர் மட்டும் வரவில்லை. இதோடு இது போல் ஏழெட்டு இடங்களில் இதே கேள்வியைக் கேட்டு, பதில் கிடைக்காமல், வேலையை விட்டு விட்டாள்.

அவளால் இந்த பாகுபாடை மட்டும் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. உழைப்புக்கு ஏற்ற கூலி என்றில்லாமல், ஆண், பெண் பாகுபாட்டிற்காக வேறுபடும் கூலியைத் தட்டிக் கேட்காமல் பொறுத்துப் போக கண்ணம்மாவால் இயலவில்லை. ஆனால் இப்படி தைரியமாகக் கேள்வி கேட்டதற்கு, அவளுக்கு மிஞ்சியது அவப்பெயர்கள் மட்டும்தான். அவள் வீட்டில் உள்ளவர்களே இதை ஏற்றுக் கொள்ளவில்லை.

வாயாடி, திமிர் பிடிச்சவ, பிழைக்கத் தெரியாதவ, பெரிய புத்திசாலின்னு நெனப்பு, ராங்கிக்காரி, இப்படி நிறைய பட்டப் பெயர்கள்.

பாரதியைப் பற்றியோ, பாரதியின் கண்ணம்மா பற்றியோ படித்து அறிந்து கொள்ளாத இந்தக் கண்ணம்மா, தன் நியாயமான கேள்விக்கு பதில் கிடைக்காமல் அல்லாடுகிறாள்.

இதேப் போல் எவ்வளவோ கண்ணம்மாக்கள் கேள்வி கேட்கத் துணிவில்லாமலும், கேள்வி கேட்டதற்காக அவமானப்பட்டும், கேட்ட கேள்விக்கு பதில் கிடைக்காமலும்தான் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    கண்களில் மின்னிடும் மின்னல் (மின்னல் 16) – ஜெயலக்ஷ்மி

    சுயத்தை எதுவோ சுட்டதடி (சிறுகதை) – முகில் தினகரன், கோவை