sahanamag.com
Short Story Contest 2021 Entries சிறுகதைகள்

வேண்டுதல் (சிறுகதை) – ✍ அன்னபூரணி தண்டபாணி, சென்னை

இந்த போட்டிக்கான சிறப்புப் பரிசுகளை வழங்குபவர்கள், Madhura Boutique நிறுவனத்தார். அவர்களின் https://madhuraboutique.in/ என்ற தளத்திற்கு சென்று, உங்களுக்கோ அல்லது உங்களுக்கு வேண்டியவர்களுக்கு பரிசு தரவோ, தரமான புடவைகள், வெள்ளி நகைகள், ஜெர்மன் சில்வர் நகைகள் பெற்றுக் கொள்ளலாம்

சிறுகதைப் போட்டி 2021 (கதை எண் 60)

கமலிக்கும் தினகரனுக்கும் திருமணமாகி எட்டு ஆண்டுகள் ஆகின்றன. ஆனால் அவர்களுக்கு குழந்தை இல்லை. அதற்கு முக்கிய காரணம் தினகரனின் குடிப்பழக்கம் தான் என்று சொல்லி அதை நிறுத்திச்  சொன்னால் தினகரனும் கேட்க மாட்டான். அவனுடைய அம்மா பரிமளமும் ஒத்துக் கொள்ள மாட்டாள்.

கமலி அவர்களிடம் மாட்டிக் கொண்டு முழித்தாள்.  

இந்த சமூகத்தில் ஒரு தம்பதிக்கு குழந்தையில்லை என்றால் அதன் காரணம் பெண் தான் என்று உடனே முடிவு செய்து விடுவார்களே. அது தான் கமலியின் வாழ்விலும் நடந்துள்ளது.

“இன்னுமா உன் மருமகளுக்கு புள்ள உண்டாகல? சீக்கிரம் நல்ல டாக்டரா பாரு பரிமளம்..” என்று இலவச அறிவுரைகள்

“டாக்டர பாத்தீங்களா? என்ன சொல்றாரு? யாருகிட்ட பிரச்சனையாம்?” என்று வெறும் வாய்க்கு அவல் தேடும் அக்கம் பக்கம்

“நா சொல்றத கேளு பரிமளம், உன் மருமக ஜாதகத்தை எடுத்துக்கிட்டு வா. எனக்கு தெரிஞ்ச ஜோசியர் ஒருத்தர் இருக்கார். அவரு முக்காலமும் உணர்ந்தவரு, உம்மவனுக்கு எப்போ புள்ள பொறக்கும்ன்னு டக்குன்னு சொல்லிடுவாரு” என்று ஆலோசனைகள்

“எதுவும் ஒத்து வரலைன்னா பேசாம அவளத் தள்ளி வெச்சுட்டு வேற பொண்ண பாத்து கட்டி வெச்சுடு” என்று கமலி வாழ்க்கையில் சத்தமில்லாமல் குண்டைத் தூக்கிப் போடும் சொந்தங்கள்

இதெல்லாம் ஒரு புறம் என்றால், எதைப் பற்றியும் கவலைப்படாமல் எப்போதும் முழு போதையிலேயே இருக்கும் தினகரன். இவர்களால் பொறுமை இழந்தாள் கமலி

இதோ, கடைசி கட்ட நடவடிக்கையாக கோவிலுக்கு வந்துள்ளார்கள். 

“இன்னும் ஒரு வருஷத்தில ஆம்பளப்புள்ள பொறக்கணும்னு நல்லா சாமிய வேண்டிகிட்டு இந்த தொட்டிலக் கட்டுடீ” கடுகடுவென்று கூறிய மாமியாரைக் கோபமாகப் பார்த்தாள் கமலி

“என்னை ஏன் மொறைக்கிற? நீ காலா காலத்தில புள்ளைய பெத்திருந்தா நா ஏன் உன்ன இப்டி கோபப்படப் போறேன். உன்னத் திட்டணும்னு எனக்கு மட்டும் ஆசையா என்ன” என்று கழுத்தை வெட்டினாள் கமலியின் மாமியார் பரிமளம். 

கமலியின் கோபமான முகத்தைப் பார்த்த அவளுடைய அம்மா சித்ரா, கமலியை சமாதானம் செய்யும் நோக்கில் அவளருகில் வந்து கிசுகிசுத்தாள். 

“கோவில்ல வந்து உன் கோவத்த காட்டாத கமலி. அவங்க கோவமா பேசினாலும் உன் நல்லத்துக்கு தானே சொல்றாங்க, போம்மா போய் அந்த தொட்டில வாங்கி நல்லா வேண்டிகிட்டு கட்டும்மா”

கமலிக்கு கோபம் கோபமாய் வந்தது. அவளுடைய கணவன் தினகரனின் முகத்தை ஏறிட்டாள். அவன் தன் தாயின் அருகில் பவ்யமாய் நின்றிருந்தான். 

நெற்றியில் பட்டை, நடுவில் ஒரு குங்குமப் பொட்டு, கழுத்தில் ருத்திராக்ஷக் கொட்டை, மார்பில் சந்தனம் காதில் துளசி தளம். நல்ல வேஷம் தான். 

உண்மையான பக்தன் தோற்றான். 

இவனால் தான்.. இந்தப் படுபாவி மனிதனால் தான்.. நான் இவனுடைய அம்மாவிடம் இத்தனை பேச்சு வாங்க வேண்டியிருக்கிறது என்று நன்றாகத் தெரிந்திருந்தும்.. எப்படி எதுவும் நடக்காதது போல இங்கே வந்து இப்படி எல்லார் முன்னாடியும் வேஷம் போட இவனால் முடிகிறது என்று தோன்றியது கமலிக்கு. 

அதற்குள் பொறுமையிழந்தவளாய் கத்தத் தொடங்கினாள் பரிமளம்

“போய் அந்த தொட்டிலக் கட்டுன்னா எதுக்கு எல்லாரையும் மொறைச்சிப் பாத்துகிட்டே இருக்க. நீ எந்த ஜென்மத்தில என்ன பாவம் செஞ்சியோ.. இந்த ஜென்மத்தில உன் வயிறு காய்ஞ்சி போய் கிடக்கு..” என்று கமலியை நன்றாகத் திட்டிவிட்டு, அவளுடைய அம்மாவிடம் திரும்பி

“நல்லா கேட்டுக்கோங்க சம்மந்தியம்மா… இன்னும் ஒரு வருஷத்தில இவளுக்கு புள்ள பொறக்கலன்னா இவள தள்ளி வெச்சிட்டு நா எம்பையனுக்கு வேற பொண்ண பாத்து கட்டி வெச்சிருவேன். அப்றம் என்ன குத்தம் சொல்லக் கூடாது நீங்க..” என்றாள். 

இதைக் கேட்ட சித்ரா, ”ஐயோ.. என்ன சம்மந்தி.. அப்டிலாம் உங்க வாயால அபசகுனமா சொல்லாதீங்க.. முன்னப்பின்ன ஆனாலும் கமலிக்கு கண்டிப்பா குழந்தை பிறக்கும்..” என்று கூறினாள். 

இதைக் கேட்ட கமலிக்கு இன்னும் கோபம் வந்தது. 

“எப்டியெப்டி.. இன்னும் ஒரு வருஷத்தில எனக்கு புள்ள பொறக்கலன்னா என்னத் தள்ளி வெச்சிட்டு உங்க புள்ளைக்கு வேற பொண்ண கட்டி வெப்பீங்களா.. ஏன்.. என் வாழ்க்கையில மண்ணள்ளி போட்டது பத்தாதா.. இன்னும் எத்தன பொண்ணு வாழ்க்கையில மண்ணள்ளி போடுவாரு உங்க புள்ள..” என்று கோபமாகக் கேட்டாள். 

“ஏய்.. என்னடீ வாய் நீளுது.. அம்மாவ எதிர்த்துப் பேசற அளவுக்கு நீ என்ன பெரியாளோ.. ஆமாடீ.. உன்ன தள்ளி வெச்சிட்டு வேற பொண்ண கட்டிப்பேன்டீ..” என்று கமலியின் கணவன் அவளிடம் கோபமாகப் பேசினான். 

“ஐயோ.. என்ன மாப்ள.. அவ தான் எதோ புள்ள பொறக்கலங்கற வேதனையில பேசறான்னா.. நீங்களும் ஏன் இப்டி பேசறீங்க?” என்று சித்ரா தன் மருமகனிடம் மன்றாடலுடன் கேட்க

“வேற எப்டி பேசறதாம்.. அம்மா அவ நல்லதுக்கு தான் சொல்றான்னு புரிஞ்சிக்காம, உங்க பொண்ணு இவ்ளோ திமிரா பேசக் கூடாது..” என்றான். 

கமலிக்கு நொடியில் அவனுடைய திட்டம் முழுமையாக விளங்கிப் போயிற்று! 

‘ஓஹோ! சார் என்ன கத்தற மாதிரி என் வாய அடைக்கிறாரா? பின்ன.. வேற என்ன பண்ணுவார் அவர்.. நா கோவப்பட்டு கத்தி உண்மையெல்லாம் சொல்லிட்டா.. இவரு குட்டு இல்ல வெளிப்பட்டுப் போகும். அதான் ஐயா ப்ளான் போட்டு நம்மள கத்தறார். கத்து.. கத்து.. நல்லா கத்து.. மவனே.. உனக்கு வெக்கிறேண்டா வேட்டு..’என்று மனதில் கசந்து நினைத்துக் கொண்டு ஒரு முடிவுடன் தன் மாமியாரின் கையிலிருந்த தொட்டிலைப் பிடுங்காத குறையாக வாங்கிக் கொண்டு கோவிலின் அந்த வேப்ப மரத்தினருகில் சென்றாள்.

இவள் தொட்டிலுடன் மரத்தினருகில் செல்வதைப் பார்த்த சித்ரா, அம்மனை உருகி வேண்டிக் கொண்டே மகளைப் பார்த்தாள். 

தினகரனும், ‘ஹப்பாடா.. இவள அடக்கறதுக்குள்ள.. ஐயோன்னு ஆயிடுச்சி.. நல்ல வேளை.. பெரிசா பிரச்சனை பண்ணாம அடங்கிட்டா’ என நிம்மதிப் பெருமூச்சு விட்டபடி அவளைப் பார்த்தான். 

‘எதுக்கும் கையாலாகலன்னாலும் கோவத்துக்கு ஒண்ணும் கொறச்சல் இல்ல.. இவளுக்கு மட்டும் புள்ள பாறக்காம போகட்டும்.. இந்த பிசாச வெரட்டிட்டு எம்மவனுக்கு வேற பொண்ண கண்டிப்பா கட்டி வெப்பேன்’ என திடமாய் நினைத்துக் கொண்டே கமலியை கோபமாகப் பார்த்தாள் பரிமளம். 

மரத்தினருகே சென்ற கமலி, கைகூப்பி கண்மூடி அம்மனை மனதுக்குள் ஒரு நிமிடம் வேண்டிக் கொண்டாள். பின்னர், 

“அம்மா தாயே! மகமாயி.. இந்த ஜென்மத்திலயும் சரி.. இதுக்கப்பறம் எனக்கு எத்தன ஜென்மம் இருந்தாலும் சரி.. எனக்கு குழந்தையே பிறக்க வேணாம்.. ஆண் குழந்தையும் வேணாம்.. பெண் குழந்தையும் வேணாம்.. ஏன்.. என் வயித்தில ஒரு புழு பூச்சி கூட உருவாக வேணாம்..” என்று சத்தமாகக் கூறிக் கொண்டே அந்தத் தொட்டிலைக் கட்டினாள். 

கேட்டிருந்த பரிமளமும், சித்ராவும் தினகரனும், அருகில் நின்றிருந்த அர்ச்சகர் உட்பட, கோவிலுக்கு வந்திருந்தவர்கள் அனைவரும் அதிர்ந்தார்கள். 

“ஏய்” என்று தினகரனும்

“அடிப்பாவீ” என்று பரிமளமும் கோபமாக அவளை அடிக்க வர

“பாவி மகளே.. இப்டி அழிச்சாட்டியம் பண்றியேடீ..” என்று அழுது கொண்டே அவளை அடித்தாள் சித்ரா. 

கோவிலில் கூடியிருந்தவர்கள் வந்து அவளைத் தடுத்து விட்டு, “என்னம்மா.. இப்டி செய்யலாமா? என்ன தான் கோவம்னாலும் இப்டியா பண்றது? அவங்களுக்கும் தன் பேரக் குழந்தைய கொஞ்சணும்னு ஆசையிருக்கும்ல.. அந்த ஆசைனால தானே உன்ன இந்த வேண்டுதல செய்ய சொல்றாங்க” என்று கமலியிடம் சமாதானம் பேசினார்கள். 

“என்ன தான் மாடர்னா இருந்தாலும் தெய்வ நம்பிக்கை வேணும்மா.. தெய்வத்த நிந்தனை பண்ணப்படாது..” என்றார் அர்ச்சகர். 

“ஹூம்.. தெய்வத்தை நா நிந்தனை பண்ணல சாமி.. இதோ நிக்கிறாரே.. என் கழுத்தில மூணு முடிச்சி போட்ட அந்த மகானுபாவர்.. அவர் தான் நிந்தனை பண்றார்..” என்றாள் கமலி. 

“ஏண்டீ.. நீ தப்பு தப்பா வேண்டிகிட்டு எம்புள்ளைய தப்பா சொல்றியா..” என்று பரிமளம் கோபமாகக் கேட்க,

“அம்மா! நீங்க ஏம்மா இந்த கேடு கெட்டவ பேச்செல்லாம் கேக்கறீங்க.. பாத்தீங்கல்ல.. எப்டி வேண்டிகிட்டான்னு.. இவள இப்பவே தள்ளி வெச்சிடலாம்மா.. வாங்க..” என்று கோபமாகக் கூறி அவசரமாகத் தன் தாயை அங்கிருந்து அழைத்துச் செல்ல முயன்றான் தினகரன். 

“ஹா.. ஹா.. அதானே பாத்தேன்.. நீ இப்டி தான் திட்டம் போடுவன்னு எனக்கு ரொம்ப நல்லா தெரியும்!” என்று கத்தினாள் கமலி. 

“ஏய்! என்னடீ திட்டம் போட்டான் எம் புள்ள?” என்று கோபமாகக் கேட்ட பரிமளத்தை எப்படியாவது அங்கிருந்து அழைத்துப் போக முயன்றான் தினகரன்.

ஆனால் பரிமளம் மகனைத் தள்ளி விட்டு விட்டு ஆவேசாகக் கமலியிடம் சென்றாள். அவளின் கன்னத்தில் பளாரென்று அறைந்தாள். 

ஆனால் கமலி கொஞ்சமும் அசரவில்லை. அப்படியே கல் போல நின்றாள். 

“ம்மா! இவ அடங்க மாட்டா! நீங்க என்ன பண்ணாலும் இவ இப்டிதான் நிப்பா! அவ்ளோ பிடிவாதம்! உடம்பு முழுக்க பிடிவாதம்! வாங்கம்மா!” என்று அம்மாவை இழுத்தான் தினகரன். 

“இவ நல்லதுக்காக நா பொறுத்துகிட்டேன்.. ஆனா இவ இவ்ளோ பிடிவாதம் பிடிச்சா என்ன செய்யறது.. வாடா.. நா உனக்கு இன்னிக்கே வேற பொண்ண பாக்கறேன்..” என்று பரிமளம் நகர, தினகரன் சத்தமில்லாமல் நிம்மதிப் பெருமூச்சை விட்டான். 

ஆனால் சித்ராவோ, பரிதவித்தாள். 

“வேணாம் சம்மந்தியம்மா.. போகாதீங்க.. எதுனாலும் பேசி தீர்த்துக்கலாம்.. மாப்ள.. நீங்களாவது நில்லுங்க.. அம்மாகிட்ட சொல்லுங்க மாப்ள..” கெஞ்சினாள். 

“உங்க பொண்ணுக்கே இவ்ளோ இருந்தா.. நா ஆம்பள.. எனக்கு எவ்ளோ இருக்கும்..” என்று திமிராய்க் கூறிவிட்டு கமலியை ஏளனமாய் ஒரு பார்வை பார்த்து விட்டு தன் அம்மாவை அழைத்துக் கொண்டு நகரத் தொடங்கினான். 

அவனை விட ஏளனமாய்ப் பார்த்த கமலி, “போ.. போ.. உன்னால ஒரு ஆணியும்.. நா டைவேர்ஸ் குடுத்தா தான் உனக்கு வேற கல்யாணம் நடக்கும்.. அப்டியே உனக்கு கல்யாணம் நடந்தாலும் உன்னால புள்ள பெத்துக்க முடியாதுன்னு எனக்கு மட்டும் தான் தெரியும்..” என்று சத்தமாக எல்லாருக்கும் கேட்பது போலக் கத்தினாள். 

பரிமளம் அதிர்ந்து போய்த் தன் மகனின் கையைத் தட்டி விட்டு விட்டு. கமலியினருகே ஓடி வந்து, “என்னடீ ஔற்ர.. என் புள்ளையால புள்ள பெத்துக்க முடியாதா.. என்ன சொல்ற?” என்று கோபமாகக் கேட்டாள். 

“சொல்லுங்க.. பதில் சொல்லுங்க.. உங்கம்மா கேக்கறாங்கல்ல.. அவங்ககிட்ட சொல்லுங்க..” என்று மேலும் கத்தினாள் கமலி. 

“ம்மா! அவ தேவையில்லாம ஏதேதோ சொல்றா.. நீங்க வாங்க..” என்று அவசரமாக மறுத்தான் தினகரன். 

“ஏன் பதறறீங்க? தைரியமான ஆளு தானே நீங்க? சொல்லுங்க! தைரியமா சொல்லுங்க! எம் பொண்டாட்டி ஏற்கனவே ஒரு முறை கருத்தரிச்சா! அத உங்களுக்கு தெரிய வேணாம்னு நாந்தான் மறைச்சேன்னு சொல்லுங்க!” என்று அழுது கொண்டே கத்தினாள் கமலி. 

பரிமளமும் சித்ராவும் அதிர்ந்து போய் பார்க்க, கமலி தொடர்ந்தாள். 

“அப்டி கர்ப்பமா இருக்கும் போது அவளை கட்டாயப்படுத்தி பார்ட்டிக்கு கூட்டிட்டு போய் முட்ட முட்ட குடிச்சிட்டு முழு போதையில கார் ஓட்டிகிட்டு திரும்பி வரும் போது ஆக்சிடென்ட் ஆனதில அவ கரு கலைஞ்சிடுச்சி.. சொல்லுங்க..” 

“அம்மா.. அது..” திணறினான் தினகரன். 

“அது மட்டுமில்ல ரொம்ப குடியால என் ஆண்மையையும் பறி குடுத்துட்டேன்னு உங்கம்மா காதுக்கு கேக்கற மாதிரி நல்லா சொல்லுங்க. ஏன்.. வாயடைச்சி போச்சா.. இந்த உண்மைய உங்கம்மா தெரிஞ்சிகிட்டா அவங்க உயிருக்கு ஏதாவது ஆகிடும்.. எதையும் சொல்லாதன்னு என்கிட்ட கெஞ்சினீங்கல்ல.. அதையும் சொல்லுங்க. அவங்க நல்லா இருக்கணும்னு என் உடம்பில தான் பிரச்சனைன்னு நா பழி ஏத்துகிட்டேனே.. அதையும் அவங்ககிட்ட சொல்லுங்க.. 

இதனாலயே ஒவ்வொரு முறையும் அவங்க என்ன தப்பா பேசும் போது அவங்க நல்லா இருக்கணும்ங்கற ஒரே காரணத்துக்காக அத்தனையும் பொறுத்துக்கிட்டேன்னு அவங்ககிட்ட சொல்லுங்க..” என்று கத்திவிட்டு பெருங்குரலில் அழுதாள் கமலி. 

கேட்டிருந்த அத்தனை பேரும் மீண்டும் அதிர்ந்தனர்.  பரிமளத்துக்கு மயக்கமே வரும் போல இருந்தது. 

சுதாரித்தவளாய் தன் மகனைப் பார்த்து,”இவ சொல்றதெல்லாம் உண்மையா?” என்று கேட்டாள். 

அவன் பதில் பேசாமல் நிற்க, அவன் கன்னத்தில் பளார் பளார் என்று பலமுறை அறைந்தாள். 

“பாவீ! பாவீ! உன்ன போய் நம்பினேனே! உனக்காக அந்தப் பொண்ண என்னல்லாம் சொல்லி கரிச்சி கொட்டினேன்.. ஒரு வார்த்தை.. ஒரு வார்த்தை சொல்லியிருப்பியாடா. மனுசனாடா நீல்லாம்.. உன்னப் போய் இந்த வயித்தில பெத்தேனேன்னு இருக்கு. நீல்லாம்.. ச்சே.. இனிமே என் முகத்திலயே முழிக்காத..” என்று கோபமாகக் கத்தி விட்டு கமலியிடம் வந்தாள். 

“என்ன மன்னிச்சிடு கமலி! எனக்காக நீ பொறுத்துக்கிட்டியா? நா பெரிய தப்ப பண்ணிட்டேம்மா.. மன்னிச்சிடும்மா..” என்று உணர்ந்து போய் மன்னிப்பு கேட்க, கமலி எதுவும் பேசாமல் நின்றிருந்தாள். 

“இவன் என்னம்மா உன்ன தள்ளி வெக்கறது. நீ இவன தள்ளி வெய்.. உனக்கு நல்ல பையனா பாத்து நா உனக்கு கல்யாணம் பண்ணி வெக்கிறேன்..” என்று பரிமளம் அதிரடியாய்க் கூற, கமலி இப்போதும் எதுவும் பேசவில்லை. 

இதைக் கேட்டு அதிர்ந்த தினகரன், “அம்மா..”என்று கத்த, பரிமளம் அவனை சட்டை செய்யவேயில்லை.

ஆனால் சித்ரா, “சம்மந்தீ..”என்று கையெடுத்துக் கும்பிட்டு அழுதாள். 

“நீங்களும் என்ன மன்னிச்சிடுங்க சம்மந்தி. நா என் மகன் மேல ரொம்ப நம்பிக்கை வெச்சிருந்தேன்.. ஆனா அவன் அத தவறா பயன்படுத்தி ஒரு பொண்ணு வாழ்க்கையில இவ்ளோ கஷ்டத்த குடுப்பான்னு நான் நெனச்சி கூட பாக்கல. இனிமே அவன் என் புள்ளையே இல்ல.. கமலிதான் என் புள்ள.. அவ நல்வாழ்க்கைக்கு எத வேணும்னாலும் செய்வேன் நான்..” என்று கூறிய பரிமளம், கமலியிடம் திரும்பினாள். 

“போம்மா கமலி! நல்ல புருஷனா கட்டிகிட்டு நிறைய ஆண் குழந்தைங்க பெத்துக்கணும்னு அந்த அம்மன் கிட்ட வேண்டிக்கம்மா..” என்றாள். 

இவ்வளவு நேரம் பேசாமல் இருந்த கமலி, “எதுக்கு அத்த.. உங்க பிள்ளை மாதிரி செய்யக் கூடாத தப்பு எல்லாம் பண்ணிட்டு, பெத்தவளையும் கட்டிகிட்டவளையும் எல்லா வகையிலயும் ஏமாத்திகிட்டு திரியவா?” என்றாள். 

தினகரன் மெதுவாக கமலியின் அருகில் வந்தான். 

“சாரி கமலி!” என்றான். ஆனால் அவனை யாருமே சட்டை செய்யவில்லை. 

“உண்மைதாம்மா! நீ சொல்றதும் சரி தான்.. ஆண் குழந்தை வேணாம்.. உன்ன மாதிரியே மனசில அன்பும் மரியாதையும் இருக்க மாதிரி.. பெண் குழந்தையே பொறக்கட்டும்.. போம்மா.. மகாலட்சுமி மாதிரி பொண்ணு பொறக்கணும்னு சொல்லி வேண்டிகம்மா..” என்று பரிமளம் இறங்கி வந்தாள். 

“அதுவும் தான் எதுக்கு அத்த? இந்த கேடு கெட்ட சமுதாயத்தில பிறந்த குழந்தைலேர்ந்து பல் போன கிழவி வரைக்கும் எல்லா பெண்களையும் இந்த ஆம்பளைங்க தங்களோட சுய லாபத்துக்குதானே பயன்படுத்திக்கறாங்க.. 

இதோ உங்களையே எடுத்துக்கோங்க.. பெத்த புள்ளைன்னு பாசம் வெச்சீங்க.. பதிலுக்கு உங்க புள்ளை கிட்டேந்து உங்களுக்கு என்ன கிடைச்சது.. ஏமாற்றம்தானே? உங்க நல்லதுக்கு நா அமைதியா இருந்தேனே.. எனக்கு மட்டும் என்ன கிடைச்சது? கேடு கெட்டவங்கற பட்டம் தானே கிடைச்சது.. 

இதோ நிக்கறாங்களே எங்கம்மா.. அவங்களுக்கு தினம் தினம் அடியும் உதையும் தானே எங்கப்பா கிட்டேந்து கிடைச்சது.. உங்க புள்ளை கிட்டேர்ந்து மாமியார்ன்னு மரியாதையாவது கிடைச்சுதா.. இல்லையே.. 

படிச்சிருந்தாலும் படிக்காம இருந்தாலும் வேலைக்கு போனாலும் போகலன்னாலும்.. எவ்ளோ திறமையிருந்தாலும் இந்த உலகத்தில எந்த பொண்ணாவது நிம்மதியா வாழ முடியுதா.. 

இப்டி ஒரு சமுதாயத்தில வாழறதுக்கு எதுக்கு வாரிசு.. ஆண் குழந்தைய பெத்து இந்த சமூகத்துக்கு மேலும் மேலும் கெடுதலை விளைவிக்க வேணாம்.. பெண் குழந்தைய பெத்து அதுக்கும் இந்த உலகத்தில அழுதுகிட்டே இருக்கற வாழ்க்கைய குடுக்க வேணாம்.” என்றாள். 

“அப்றம் என்ன தாம்மா வேண்டிக்குவ?” புரியாமல் கேட்ட சித்ராவை புதிராய்ப் பார்த்தாள் கமலி. 

“நா பொறந்தது பொறந்துட்டேன்.. படிப்பிருக்கு.. படிப்புக்கேத்த வேலை கிடைக்கலன்னாலும் ஏதாவது ஒரு வேலைய தேடிக்க துணிவிருக்கு.. மனசிலயும் உடம்பிலயும் தெம்பிருக்கு.. இப்டியே வாழ்ந்துக்குவேன்.. என் இஷ்டப்படி.. நிம்மதியா.. சந்தோஷமா.. 

இனிமே எனக்கு புருஷனும் வேணாம்.. குழந்தையும் வேணாம்.. இது தான் அந்தக் கடவுள் கிட்ட நா வெச்சிருக்கற வேண்டுதல்.. அத அவர் கண்டிப்பா நிறைவேத்துவார்ங்கற நம்பிக்கை எனக்கிருக்கு..” என்று தெளிவாகக் கூறி விட்டு அவள் அங்கிருந்து நடக்கத் தொடங்கினாள்.

தினகரன் அவமானத்தில் கூனிக் குறுகி நிற்க, பரிமளமும் சித்ராவும் செய்வதறியாது திகைத்து நின்றனர். 

‘சஹானா’ இணைய இதழின் ‘சிறுகதை விமர்சனப் போட்டி’ யில் கலந்து கொண்டு பரிசு வெல்லும் வாய்ப்பு. போட்டி விவரங்கள் அறிய, இங்கு கிளிக் செய்யுங்கள்

(முற்றும்)

#ads – Deals in Amazon👇

#ads தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇

      

        

‘சஹானா’ சிறுகதைப் போட்டியில் பங்குபெறும் மற்ற கதைகளை வாசிக்க இணைப்பு இதோ – https://sahanamag.com/short-story-contest-2021-entries/

Similar Posts

One thought on “வேண்டுதல் (சிறுகதை) – ✍ அன்னபூரணி தண்டபாணி, சென்னை
  1. இந்த கதை‌ மிகவும் எதார்த்தமான நடையில் எழுதப்பட்டுள்ளது. வாழ்த்துக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!