sahanamag.com
Short Story Contest 2021 Entries சிறுகதைகள்

திறந்த வீடு (சிறுகதை) – ✍ Dr. நடராஜா ஜெயரூபலிங்கம், Aylesbury, UK

இந்த போட்டிக்கான சிறப்புப் பரிசுகளை வழங்குபவர்கள், Madhura Boutique நிறுவனத்தார். அவர்களின் https://madhuraboutique.in/ என்ற தளத்திற்கு சென்று, உங்களுக்கோ அல்லது உங்களுக்கு வேண்டியவர்களுக்கு பரிசு தரவோ, தரமான புடவைகள், வெள்ளி நகைகள், ஜெர்மன் சில்வர் நகைகள் பெற்றுக் கொள்ளலாம்

சிறுகதைப் போட்டி 2021 (கதை எண் 61)

கஸ்ட் மாதம் என்பதால், மாலை ஐந்து மணியாகியும் சூரியன் வானத்தில் இன்னமும் நல்ல உயரத்தில் நின்று ஒளி வீசிக் கொண்டிருந்தான்

“அம்மா, நான் கார்த்திக் வீட்டுக்குப் போகிறேன். நாளைக்குத் தான் வருவேன். ஞாபகம் இருக்கிறது தானே? அப்புறமாக இரவு போன் பண்ணி எப்ப வருவாய் என்று கேட்கக் கூடாது. அப்பாவிடமும் சொல்லி வையுங்கோ என்னைத் தேட வேண்டாம் என்று”  

“எனக்கு நல்ல ஞாபகம் இருக்கிறது. கார்த்திக்கிடம் நான் ஹாப்பி பேர்த்டே சொன்னேன் என்று சொல்லு ரமேஷ்” என்று சொல்லி விட்டு மீண்டும் டீவியில் ஓடிக் கொண்டிருந்த சீரியலில் ஆழ்ந்து போனாள் சித்ரா. 

“அண்ணா, என்னை பேர்த்டே பார்ட்டிக்கு கூப்பிடவில்லையென்று நான் கோபத்தோடு ஹாப்பி பேர்த்டே சொன்னேன் என்று சொல்லி விடு” கோபம் கலந்த செல்லக் குரலோடு ரம்யாவின் வார்த்தைகள் வெளி வந்தன

“ரம்யா, அவனுக்கு யூனிவர்சிட்டில கேர்ள் ஃப்ரெண்ட் இருக்கிறதென்று எத்தனை தடவை சொல்லியிருக்கேன்.” கிண்டல் கலந்த சிரிப்போடு தங்கையைக் கலாய்த்துக் கொண்டே கால்களில் ட்ரெயினர்ஸ்  மாட்டினான் ரமேஷ். 

“ஆமா! எனக்கு வேற  வேலை இல்லை உன் ஃப்ரெண்ட்டை லவ் பண்றதுக்கு” என்று கோபப்படுவது போல் உதட்டைச் சுழித்துக் கொண்டு ரம்யா சொன்ன வார்த்தைகள் காதில் விழாதது போல ரமேஷ் வீட்டை விட்டு வெளியேறினான். 

ரம்யாவுக்கு கார்த்திக் மேல் ஒரு தனிப்பட்ட அன்பு இருப்பது ரமேஷ் நன்றாகவே அறிவான். ரம்யாவோ தனக்கு அப்படி ஒரு உணர்வும் இருப்பது போல் ஒரு நாளும் காட்டிக் கொள்வதில்லை. அதுவும் அம்மா முன்னாடி சிறிதளவு கூடத் தன் உணர்வுகளை வெளியில் காட்ட அவள் தயாராக இல்லை.  

ரமேஷும் கார்த்திக்கும் சிறு வயது முதலே மிகவும் நெருங்கிய நண்பர்கள். இப்போ ஒரே பல்கலைக்கழகத்தில் ஒரே பட்டப் படிப்பு படித்துக் கொண்டு ஒரே ஹாஸ்டல் அறையைப் பகிர்ந்து கொள்வதால், அவர்களது சிறு வயது நட்பு இன்னும் நெருக்கமாக வந்து விட்டது

கார்த்திக் அடிக்கடி வீட்டுக்கு வந்து போவதால், ரம்யா அவனை நன்றாகவே அறிவாள். அவளுக்கு கார்த்திக் மேல் ஒரு கவர்ச்சி இருப்பதென்பது என்னவோ உண்மைதான்

கார்த்திக்குக்கும் அவள் மேல் ஒரு கவர்ச்சி இருக்கிறது. ஆனாலும் நண்பனின் தங்கை என்பதாலோ என்னவோ அதை இன்னும் வெளிப்படையாக ரம்யாவிடம் காட்டிக் கொள்ளவில்லை.  

அண்ணன் வெளியில் செல்லத் தனது அறைக்குச் சென்று நண்பிகளோடு அவர்களுக்கு மிகவும் பிடித்த உணவகத்தில் இரவுச் சாப்பாட்டுக்குப் போகத் தயாராகினாள் ரம்யா. அவளுக்கும் 

அவளது நண்பிகளுக்கும் இரண்டு நாட்களுக்கு முன்னர் GCE (O/L) பரீட்சை முடிவுகள் வெளிவந்தன. அதைக் கொண்டாடுவற்கே இந்த இரவு உணவு. 

“அம்மா, என்னை ரேணு வீட்டில் கொண்டு போய் விடுகிறீங்களா?” ரம்யாவின் குரல் கேட்டு நிமிர்ந்து பார்த்தாள் சித்ரா

ரம்யா அவளது வயதொத்த மற்றப் பெண் பிள்ளைகளைப் போல கோடை காலத்துக்கேற்ற மாதிரி அவளது பருவ உடலை அதிகம் மறைக்காமலும், உடலோடு ஒட்டிக் கொண்டு அவளது இளமையினைப் பறைசாற்றும் உடை அணிந்திருந்தாள். 

அளவான மேக் அப்புடன் மிகவும் கவர்ச்சியாகவும் அழகாகவும் அவள் காட்சி கொடுத்தது சித்ராவுக்குப் பிடிக்கவேயில்லை. 

நான் இந்த வயதில் எவ்வளவு அடக்க ஒடுக்கமாக உடுப்பு போடுவேன். இப்படி என் அம்மா முன்னால போய் நின்றால் அடிதான் விழுந்திருக்கும் என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டாள் சித்ரா

“ரம்யா, இப்படி செக்ஸியாக ட்ரெஸ் பண்ணிக் கொண்டு வெளியில் போகாதே என்று எத்தனை தடவை சொல்லியிருக்கேன்.” கோபம் கலந்த கடுப்பான குரலில் சொன்னாள் சித்ரா.  

இது ரம்யா எதிர்பார்த்தது தான். ஒவ்வொரு தடவை வெளியில் போக அவள் தயாராகும் போதும் கிடைக்கும் அர்ச்சனை தான் இது. வார்த்தைகள் தான் வேறுபடும் ஆனால் விஷயம் ஒன்றாகத் தானிருக்கும்

“அம்மா, இந்த ஆகஸ்ட் மாதத்தில மூடி மறைச்சுக் கொண்டு போனால் தான் மற்றவர்கள் என்னை ஒரு மாதிரிப் பார்ப்பார்கள். உனக்கே தெரியும் என்னுடைய வெள்ளைக்கார ஃப்ரெண்ட்ஸ் போடறதை விட உங்க பாஷையில் சொன்னால் அடக்கமாகத் தான் நான் போட்டிருக்கிறேன்” எரிச்சல் கலந்த குரலோடு பதில் வந்தது.  

“ப்ளீஸ் செல்லம், வேற ஏதாவது மாற்றிக் கொண்டு வாம்மா” பதினாறு வயதான தனது பதின்ம வயது மகள் மாற்ற மாட்டாள் என்று தெரிந்தாலும், ஒரு நப்பாசையில் கோபக் குரலைச் செல்லக் குரலாக மாற்றி முயற்சி செய்தாள் சித்ரா. 

“அண்ணா போகும் போது இப்படி என்னைக் கேட்கிற மாதிரி ஏதாவது கேள்வி கேட்கிறீங்களா? அவன் எங்கே வேண்டுமென்றாலும் எப்போ வேண்டுமென்றாலும் போகலாம். போய் இரவு தங்கி விட்டு அடுத்த நாளும் வரலாம். சந்தோஷமாக அனுப்புவீங்க. அதில் பாதிச் சுதந்திரம் கூட எனக்கு இல்லை. உங்களுக்கு நானும் அவனைப் போல ஒரு பிள்ளை தானே. எனக்கு மட்டும் ஏனிந்த பாரபட்சம்?” 

 “அவன் ஆண் பிள்ளை” 

“ஆண், பெண் சமத்துவம் பற்றி உலகமே பேசுது ஆனால் உங்களுக்கு மட்டும் அது என்னவென்றே தெரியாது. நீங்கள் ஒரு பெண்ணாக இருந்தும் அண்ணாவை விட என்னைக் குறைவாகவே பார்க்கிறீங்க” சமூக அநீதிப் பிரச்சினைகளை அம்மாவின் பாரபட்சத்துடன் ஒப்பிட்டாள் ரம்யா. 

“ரம்யா, நான் உன் நல்லதுக்குத் தானேயம்மா சொல்லுகிறேன்” 

“நான் ஒன்றும் சின்னப் பிள்ளையில்லை. பதினாறு வயதாகி விட்டது. எது எனக்கு நல்லது என்று நன்றாகவே தெரியும்”  

“ரம்யா, சேலை முள்ளில் பட்டாலென்ன, முள் சேலையில பட்டாலென்ன சேலைக்குத் தான் சேதம் என்று ஒரு பழமொழி உண்டு. நான் உன்னைப் பெண்பிள்ளை என்று குறைவாகப் பார்க்கவில்லை. பெண்பிள்ளை என்பதால் உன்னைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று அக்கறையோடு அம்மாவாக புத்திமதி சொல்கிறேன்”

“நீங்கள் சொல்லும் பழமொழிக்கும் என்னுடைய ட்ரெஸ்ஸுக்கும் என்ன சம்பந்தம்?” 

“நீ ஒரு அழகான டீனேஜ் கேர்ள். இப்படி செக்ஸியாக ட்ரெஸ் பண்ணிட்டுப் போனால் உன்னைப் பார்க்கிறவங்க மனசில் என்ன தோணும் என்பது எனக்குத் தெரியும்.” 

“தெருவால போறவன் மூளையில் என்ன யோசனை வரும் என்று கற்பனை செய்து அதற்கேற்ற மாதிரி என்று நான் ட்ரெஸ் பண்ண முடியுமா? இப்போ என் வயசில இருக்கிற மற்ற பிள்ளைகள் மாதிரித் தான் நான் ட்ரெஸ் பண்ணுகிறேன். இது ஒன்றும் இந்தியாவில் ஒரு மூலையிலிருக்கும் கிராமம் இல்லை. இங்கிலாந்தின் தலை நகரமான லண்டன். ஊருக்கும் காலநிலைக்குமேற்ற மாதிரித் தான் நான் ட்ரெஸ் பண்ணியிருக்கேன்” கொஞ்சம் கடுப்பாகவே பதில் சொன்னாள் ரம்யா.  

இங்கிலாந்தில் பிறந்து வளர்ந்த தனது டீனேஜ் மகளுக்கு எப்படி என் மனதிலிருப்பதைப் புரிய வைப்பது என ஒரு சில வினாடிகள் யோசித்தாள் சித்ரா.  

“ஓகே. ஒரு கேள்வி கேட்கிறேன் பதில் சொல்லு. நாங்கள் வீட்டை விட்டு வெளியில் போகும் போது எதற்கு வீட்டுக் கதவைப் பூட்டி விட்டுப் போகிறோம்? கதவை நன்றாகத் திறந்து வைத்து விட்டுப் போகலாம் தானே”  

“யாராவது திருடன் வீடு திறந்திருக்கிறது என்று வீட்டுக்குள்ள வந்து திருடிக் கொண்டு போகாமல் இருக்க வீட்டுக் கதவைப் பூட்டுகிறோம்” 

அம்மா ஏன் இப்படி பேச்சை மாற்றுகிறாள் என்று குழப்பத்துடன் பதில் சொன்னாள் ரம்யா

“அதே போலத் தான் நான் உன்னை அடக்கமாக ஆடை அணியச் சொல்வதும். வீட்டில் யாருமில்லாத போது வீட்டுக் கதவைத் திறந்து விட்டுப் போனால், தெருவால் போகும் திருடனுக்குத் திருட ஒரு சலனத்தையும் சந்தர்ப்பத்தையும் உருவாக்குகிறோம்.

அதே போல நீ செக்ஸியாக ட்ரெஸ் பண்ணுவதால் ஒரு சலனம் சில பேர் மனதில் வரும் வாய்ப்பு உண்டு. சந்தர்ப்பமும் கிடைத்தால் உனக்கு ஆபத்து வர வாய்ப்பு அதிகம். அதனால் தான் உனது பாதுகாப்புக்காக வீட்டைப் பூட்டி வைத்துக் கொள் என்று சொல்கிறேன். இப்போ புரிகிறதா?” 

நல்ல ஒரு உதாரணத்தோடு மகளுக்குப் புரியும் படி சொல்லி விட்டோம் என்று சித்ரா தன்னைத் தானே மனதுக்குள் பாராட்டிக் கொண்டாள். 

“அம்மா, நீங்கள் புத்திசாலித்தனமாகச் சொல்வது போல் ஏதோ தொடர்பில்லாத விஷயங்களுக்கு முடிச்சுப் போடறீங்க. மற்றவர்களுக்காக எனது சுதந்திரத்தை விட்டுக் கொடுக்க முடியாது. மற்றவர்களுக்கு வரும் உணர்ச்சிகளுக்கு நான் ஒன்றும் செய்ய முடியாது, அதற்கு நான் பொறுப்புமல்ல. ஆனாலும், நீங்கள் சொன்ன உதாரணத்தில் முக்கியமான பாயிண்ட் என்னவென்றால் சந்தர்ப்பம் கொடுப்பது. நான் அப்படி ஒரு சந்தர்ப்பமும் யாருக்கும் கொடுக்க மாட்டேன்” 

இவளுடன் வாதம் செய்து வெல்ல முடியாது, மீண்டும் தோல்வி தான் என்று முடிவெடுத்த சித்ரா, தனது அறைக்குப் போய்க் கார் சாவியை எடுத்துக் கொண்டு வந்தாள் 

ரம்யாவை ரேணு வீட்டில் விட்டு விட்டுத் திரும்பி வரும் போது, அவளது கணவன் சுந்தரின் கார் வீட்டில் நின்றது

கதவைத் திறந்து கொண்டு வர “எங்கே பிள்ளைகள் இரண்டு பேரையும் காணோம்?” என்று கேள்வி தொடுத்தான் சுந்தர். 

“ரமேஷ் கார்த்திக்குடைய பேர்த்டே பார்ட்டிக்குப் போயிட்டான். நாளைக்குத் தான் வருவான். ரம்யா ரேணுவோடும் அவளது வகுப்பு நண்பிகளோடும் பரீட்சை முடிவுகளைக் கொண்டாட ரெஸ்டாரண்டில் சாப்பிடப் போயிருக்கிறாள். அவளைத் தான் ரேணு வீட்டில் விட்டு விட்டு வருகிறேன். பசிக்கிறதா? சாப்பாடு எடுத்து வைக்கவா?” என்று சொல்லி விட்டு, சுந்தரின் பதிலை எதிர்பார்க்காமலே சமையலறைக்குப் போனாள்.  

சரியாக இரவு 9:00 மணிக்கு ரேணுவின் அம்மா ரம்யாவை வீட்டுக்கு கொண்டு வந்து விட்டாள். சித்ராவுக்கு மகள் நேரத்துக்கு வீட்டுக்கு வந்ததில் சந்தோஷம். ரேணுவின் அம்மாவுக்கு நன்றி சொல்லி அனுப்பினாள். 

அதிகாலை நான்கு மணிக்கு வீட்டுத் தொலை பேசி அலறியது. சுந்தர் படுக்கையிலிருந்த படியே ஒரு படியாகப் பக்கத்தில் மேசையிலிருந்த போனைத் தடவி எடுத்துப் பாதித் தூக்கக் கலக்கத்தோடு “ஹலோ” என்றான்.  

“அங்கிள். நான் கார்த்திக் பேசறேன். வந்து ரமேஷைக் கூட்டிப் போக முடியுமா?” 

“ஏன்? என்ன நடந்தது?” கொஞ்சம் அதிர்ச்சியோடு தூக்கம் கலைந்து பதட்டத்தோடு வந்தது சுந்தரின் கேள்விகள்.  

“பெரிய பிரச்சினை ஒன்றும் இல்லை அங்கிள். வாங்க நான் விபரமாகச் சொல்கிறேன்.” என்று சொல்லி விட்டுப் போனை வைத்தான் கார்த்திக்.  

“யார் இந்த நேரத்தில் போன் பண்ணினது?” சித்ராவின் கேள்விக்குச் சுருக்கமாகக் கார்த்திக் சொன்னதைச் சொல்லி விட்டுக் கட்டிலை விட்டு எழுந்தான் சுந்தர்

கார்த்திக் விளக்கமாகச் சொல்லாமல் வந்து ரமேஷைக் கூட்டிச் செல்லும்படி சொன்னதிலிருந்து நிச்சயமாக ஏதோ பிரச்சினை, அதில் ரமேஷ் சம்பந்தப்பட்டிருக்கிறான் என்பது சுந்தர், சித்ரா இருவருக்குமே தெளிவாகப் புரிந்தது.  

சுந்தர் அறைக் கதவைத் திறந்து கொண்டு வர ரம்யா அவளது அறை வாசலில் நின்றாள். “அப்பா இந்த நேரத்தில் எங்கே போறீங்க?” 

“அண்ணாவுக்கு ஏதோ பிரச்சினை போல கார்த்திக் வந்து கூட்டிப் போகச் சொன்னான். அதுக்குத் தான் போகிறேன்.” பதில் சொல்லிக் கொண்டே மாடிப் படிகளில் இறங்கினான் சுந்தர்.  

தொலைபேசிச் சத்தத்தால் எழுந்த போதே அவள் நேரம் என்னவென்று பார்த்து விட்டாள். அதிகாலை நாலு மணிக்கு வரும் படி சொன்னால் நிச்சயம் ஏதோ சிக்கல் தான். அப்பா எனக்குச் சொல்லாமல் மறைக்கிறாரோ? என்ற சிந்தனையுடன் தாயிடம் போய் விசாரிக்க அவளது அறைக்குச் சென்றாள். 

கட்டிலில் ஆழ்ந்த சிந்தனையோடு உட்கார்ந்திருந்தாள் சித்ரா. 

“அம்மா விளக்கம் சொல்லாமல் அப்பா போகிறார். உங்களுக்கு என்ன விஷயம் என்று தெரியுமோ?” 

“இல்லை ரம்யா. எனக்கும் அது தான் யோசனையாக இருக்கிறது”  

என்னவென்று தெரியாமல் மீண்டும் தூங்கப் போக முடியாததால் இருவரும் ஆழ்ந்த சிந்தனையிலிருந்தனர். அரை மணி நேரம் செல்ல நிசப்தமான அந்த அதிகாலை நேரத்தில் சுந்தரின் கார் வீட்டு ட்ரைவில் வந்து சேரும் சத்தம் தெளிவாகக் கேட்டது.  

ஆவலோடு இருவரும் கீழே இறங்கிச் சென்றனர். கதவைத் திறந்து கொண்டு வந்தான் ரமேஷ். முகத்தில் கண்டல் காயம் தெளிவாகத் தெரிந்தது. யாரோ அடித்திருக்கிறார்கள் போல

“என்னடா நடந்தது ரமேஷ். யாராவது அடிச்சுப் போட்டாங்களா?” தாய்மைக்கே உரித்தான பதட்டத்துடன் ரமேஷுக்குக் கிட்டப் போனாள். 

ரமேஷ் நிமிர்ந்து கூடப் பார்க்காமல் ஷூவைக் கழற்றிக் கொண்டிருந்தான்.  

“ரமேஷ், நீ ரூமுக்குப் போய் ரெஸ்ட் எடு. நான் அம்மாவுக்கு விளக்கம் சொல்கிறேன்.” கொஞ்சம் கடுமையான குரலில் சுந்தர் சொன்ன வார்த்தைகள், சித்ராவுக்குக் கோபத்தை வரவழைத்தது என் பிள்ளை அடி வாங்கிக் காயத்துடன் வந்திருக்கிறான். நான் என்ன ஏது என்று அவனிடம் கேட்க முன்னர், அவனை அறைக்குப் போகும்படி கலைக்கிறார் இவர் என்று கோபத்துடன் சுந்தரைப் பார்த்தாள் சித்ரா.  

ரமேஷ் தாயையும் தங்கையையும் நிமிர்ந்து கூடப் பார்க்காமல் மாடிப் படியேறித் தனது அறை நோக்கிச் சென்றான். போகும் போது அவன் கண்கள் கலங்கியிருந்ததை இருவரும் காணத் தவறவில்லை.  

சோஃபாவில் போய் உட்கார்ந்தான் சுந்தர்.  அவனது முகத்தில் கோபம் நிறைந்திருப்பது தெளிவாகத் தெரிந்தது. அப்பாவுக்கு கோபம் அவ்வளவு எளிதில் வருவதில்லை என்று ரம்யாவுக்குத் தெரியும். 

அதனால் ஏதோ செய்யக் கூடாத காரியம் ரமேஷ் செய்திருக்க வேண்டும் என்று ரம்யா ஊகித்துக் கொண்டாள்.  

“என்ன நடந்ததப்பா?” மௌனத்தைக் கலைத்தாள் ரம்யா. 

ஒரு சில வினாடிகள் பதில் சொல்லாமல் தன் முன்னால் நிற்கும் மனைவியையும் மகளையும் பார்த்தான் சுந்தர். சித்ராவுக்கு எரிச்சல் கூடியது. 

ரமேஷோடும் பேச விடாமல் அவனை அறைக்கு அனுப்பி விட்டு இவரும் சொல்லாமல் இருந்தால் எப்படிக் கோபப் படாமல் இருக்க முடியும். ஆனாலும் பொறுமையோடு கணவனின் பதிலுக்காகக் காத்திருந்தாள் சித்ரா.  

“ரம்யா, உனக்கு முன்னால் எப்படிச் சொல்வதென்றே தெரியலைம்மா” சுந்தரின் குரல் தழுதழுத்தது. 

அப்பாவை இப்படியான ஒரு உணர்ச்சி வசப்பட்ட நிலையில் அவள் இது வரை கண்டதில்லை. ஏதோ பெரிய சிக்கலாகத் தான் இருக்க வேண்டும் எனப் புரிந்து கொண்டாள். 

அவர் பக்கத்தில் போய் உட்கார்ந்து அப்பாவுக்கு ஆறுதலளிக்கும் முறையில் அவர் தோளில் ஒரு கையை வைத்துக் கொண்டு “நான் சின்னப் பிள்ளையில்லையப்பா. அப்படி என்னதான் எனக்கு முன்னால் சொல்ல முடியாத விஷயம்? தைரியமாகச் சொல்லுங்கப்பா”

 மகளது செய்கையும் வார்த்தைகளும் சுந்தரின் கண்களைக் கலங்க வைத்தன.  

“உன் அண்ணன் ரொம்பக் கேவலமான ஒரு காரியம் செய்து விட்டான். எனக்கே அவமானமாக இருக்கிறது என் பிள்ளையா இப்படி நடந்து கொண்டான் என்று”  

சித்ரா பொறுமை இழந்து விட்டாள். அப்படி என்ன என் மகன் தப்புச் செய்து விட்டான் இவர் கண் கலங்கி அவமானப்படுமளவுக்கு

“என்னவென்று சொன்னால் தானே தெரியும். ஏதோ செய்து விட்டான் என்று சொல்லிக் கொண்டிருக்காமல் என் மகன் அப்படி என்னதான் செய்தான் என்று சொல்லுங்களேன்” கொஞ்சம் கடுமையான குரலில் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினாள் சித்ரா.  

“உன் மகன் ஒரு பெண்பிள்ளை மேல் கை வைத்து விட்டான். அதை எவ்வளவுதான் மரியாதையுடன் பவ்வியமாகச் சொன்னாலும், கார்த்திக்கின் வாயால் கேட்கும் போது என் மானமே போய் விட்டது” கோபத்துடன் பதில் வந்தது சுந்தரிடமிருந்து.  

சித்ராவுக்கும் ரம்யாவுக்கும் அதிர்ச்சி. அவர்கள் இப்படி ஒரு விஷயத்தை எதிர் பார்க்கவில்லை.  முகத்தில் காயத்துடன் வந்தபடியால் பார்ட்டியில் குடித்திருப்பார்கள், ஏதோ குடி போதையில் யாருடனாவது தகராறு வந்து கை கலப்பில் முடிந்திருக்கும் என்று தான் இருவரும் நினைத்திருந்தார்கள்.  

கார்த்திக் வீட்டில் பெற்றோர்கள் இல்லை. அவர்கள் வெளிநாட்டுக்குச் சுற்றுலா போய் விட்டார்கள். கார்த்திக் தனது பிறந்த நாளை ஜாலியாக வீட்டில் ஒரு பத்து  நண்பர்களை வரவழைத்துக் கொண்டாடியிருக்கிறான். 

வந்தவர்களில் பாதிப் பேர் பெண்கள். பார்ட்டிக்கு வந்தவர்கள் விதவிதமா ன மதுபானங்களைக் கொண்டு வந்ததனால் எல்லோருமே நன்றாகக் குடித்திருக்கிறார்கள். 

கார்த்திக்கின் உறவுக்காரப் பெண் லீலா, ரமேஷோடு கொஞ்சம் நெருக்கமாக உட்கார்ந்து பேசியிருக்கிறாள். அதைத் தப்பாகப் புரிந்து கொண்ட ரமேஷ், அவளை ஒரு படுக்கையறைக்குக் கூட்டிப் போய் அவளைக் கட்டிப் பிடித்திருக்கிறான். 

அவள் மறுப்புச் சொல்லக் கேட்காமல் இவன் மீண்டும் அவளைத் தொட முயற்சி செய்ய அவள் தனது கையில் அகப்பட்ட பெட்சைட் லாம்ப் ஒன்றினால் இவனுக்கு நல்ல அடி போட்டிருக்கிறாள். இது தான் நடந்தது.  

தன் மகன் இப்படி அத்து மீறி நடந்து கொண்டான் என நினைக்க சித்ராவுக்குத் தலை சுற்றியது. அந்த லீலா பழகிய விதத்தை தப்பாக அண்ணன் புரிந்து கொண்டிருந்தாலும், அவள் மறுக்கும் போதும் அவளைத் தீண்ட முயற்சி செய்யக் கூடிய ஒரு காமுகனாக அவள் அண்ணனைக் கற்பனை செய்யக் கூட ரம்யாவால் முடியவில்லை.  

“லீலா எப்படி இருக்கிறாள் அப்பா?”  

“அவள் நிதானமாக அமைதியாகத் தான் இருந்தாள். இவன் செய்த கேவலமான காரியத்துக்கு நான் அவளிடம் மன்னிப்புக் கேட்டேன். பெரிய மனதோடு ‘பரவாயில்லை அங்கிள், ஒரு சிறிய தவறான புரிதல் அவ்வளவு தான். நான் இந்த விஷயத்தை அநாவசியமாகப் பெரிதுபடுத்த விரும்பவில்லை’ என்று அவள் சொல்லும் போது எனக்கு எவ்வளவு அவமானமாக இருந்திச்சு தெரியுமா?

அவள் நினைத்திருந்தால் இதைப் பெரிய பிரச்சினை ஆக்கியிருக்கலாம். அவள் நிதானமாக இருந்ததால் ஒரு தடவை சொல்லக் கேட்காதவனுக்கு அடி போட்டுப் புரிய வைத்து விஷயம் மேலே போக விடாமல் தடுத்தது மட்டுமல்லாமல் பெரிய மனதோடு இவனை மன்னித்து விட்டிருக்கிறாள்” 

அப்பாவின் நிலைமை புரிந்தது ரம்யாவுக்கு. அண்ணன் செய்த தப்பை மது போதையில் செய்தான் என்று நியாயப்படுத்த முடியாது. அவளுக்கும் அண்ணன் மேல் கெட்ட கோபம் வந்தது. ஆனாலும் நடந்து முடிந்த விஷயத்துக்கு நாம் இப்போ என்ன செய்ய முடியும். 

“நடந்தது நடந்தது தான். அண்ணன் இன்று ஒரு பாடம் கற்றுக் கொண்டான் என்று எடுத்துக் கொள்வோம். உங்களுக்கு ஒரு காப்பி போட்டுத் தருகிறேன்” 

அப்பாவுக்குத் தன்னால் முடிந்த ஆறுதல் சொல்லி இதற்கு முற்றுப் புள்ளி வைக்க காப்பி போட எழுந்தாள் ரம்யா

“தாங்க் யூ ரம்யா. இப்போ இருக்கும் மன நிலையில் ஒரு காப்பி தேவைதான் எனக்கு” 

ரம்யா சமையலறை நோக்கிப் போக சித்ராவும் கண்களில் கண்ணீரோடு அவளைப் பின் தொடர்ந்தாள். தனது மகன் ஒரு பெண்ணிடம் அத்து மீறி நடந்து கொள்வான் என்பதை அவளால் ஜீரணிக்க முடியவில்லை.  

“தெருவில் போகும் திருடன் வீட்டுக்குள் வராமல் இருக்க கதவைப் பூட்டி வைத்திருக்க வேண்டும் என்று எனக்குச் சொன்ன மாதிரி, நீங்கள் வீடு திறந்திருந்தாலும் அனுமதி கேட்டு முழுச் சம்மதத்தோடு தான் உள்ளே போக வேண்டும் என்று அண்ணனுக்குச் சொல்லிக் கொடுக்கவில்லையே அம்மா” 

கண்கள் கலங்கிய படி ரம்யா கேட்ட கேள்விசித்ராவின் கண்களில் ஆறாக நீரோட வைத்தது

‘சஹானா’ இணைய இதழின் ‘சிறுகதை விமர்சனப் போட்டி’ யில் கலந்து கொண்டு பரிசு வெல்லும் வாய்ப்பு. போட்டி விவரங்கள் அறிய, இங்கு கிளிக் செய்யுங்கள்

(முற்றும்)

#ads – Deals in Amazon👇

#ads தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇

      

        

‘சஹானா’ சிறுகதைப் போட்டியில் பங்குபெறும் மற்ற கதைகளை வாசிக்க இணைப்பு இதோ – https://sahanamag.com/short-story-contest-2021-entries/

Similar Posts

One thought on “திறந்த வீடு (சிறுகதை) – ✍ Dr. நடராஜா ஜெயரூபலிங்கம், Aylesbury, UK

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!