sahanamag.com
மற்றவை

வீட்டிலிருந்து வேலை – வரமா அல்லது தடைக் கல்லா? (கட்டுரை) – ✍ கே.என்.சுவாமிநாதன்

மே 2022 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு

கொரோனா என்ற கிருமி நம்முடன் உறவாட ஆசைப்பட்டு இவ்வுலகில் நுழைந்தது முதல், பலரும் சொல்லும் ஒரு சொல் “நான் வீட்டிலிருந்து வேலை செய்கிறேன்” என்பது.

அளவிற்கு மீறினால் அமுதமும் விஷம் என்பது பழமொழி. உலகத்தை ஆக்கிரமித்துக் கொண்டுள்ள இந்த வேலைக் கலாச்சாரம் மனிதக் குலத்திற்கு கிடைத்த வரமா அல்லது குப்பியிலிருந்து விடுவிக்கப்பட்ட பூதமா?

கொரோனா பரவலைத் தடுத்ததில் “வீட்டிலிருந்து வேலை” மிகப் பெரிய பங்கு வகித்தது. சுகாதாரம், சட்டம், ஒழுங்கு போன்ற முதன் நிலைப் பணியாளர்கள் தவிர மற்றவர்கள் “வீட்டிலிருந்து வேலை” செய்ததால், பல நிறுவனங்கள் மூடப்படாமல், தங்களுடைய நிர்வாகத்தை தொடர்ந்து நடத்த முடிந்தது. இதனால் நாட்டின் பொருளாதாரம் காப்பாற்றப்பட்டது.

“ஆன்லைன்” வகுப்புகளினால் மாணவர்கள் கல்வி கற்பதில் பாதிப்பு அதிகம் ஏற்படவில்லை. “ஆன்லைன்” தேர்வுகளால் மாணவர்கள் அடுத்த நிலைக்குச் செல்வதும் உறுதி செய்யப்பட்டது. ஆனால், இவை எல்லாவற்றிற்கும் இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகள் சந்தித்த, சந்திக்கின்ற சவால்கள் அதிகம்.

முன்னேறிய, வளர்ந்த நாடுகளில், வளர்ச்சி, நாட்டின் எல்லா மூலைகளிலும் படர்ந்து இருக்கும். ஆனால் வளரும் நாடுகளில், நகரங்களில் காணும் வளர்ச்சி போல, கிராமங்களில் இருக்காது. வளர்ச்சி, நாட்டின் எல்லா பாகங்களிலும் சென்றடைய வருடங்கள், மாதங்கள் ஆகலாம். இப்போது இருக்கின்ற சூழ்நிலை வேகமான வளர்ச்சிக்கு கிரியா ஊக்கி போல செயல்படலாம்.

வீட்டிலிருந்து வேலை, ஆன்லைன் வகுப்புகள் ஆகியவை எல்லாத் தரப்பினரையும் சென்றடைய இன்றியமையாத தேவைகள் தடையற்ற மின்சாரமும், அதிவேக வலைப்பின்னலும். ஆனால் மாநிலத் தலைநகரிலேயே அறிவிக்கப்படாத மின்தடை ஏற்படும் போது, மற்ற நகரங்களிலும், கிராமங்களிலும் மின்தடை என்பது சர்வ சாதாரண அம்சமாகிறது. தடையில்லாத மின்சாரத்தை வழங்கும் கருவிகளின் தேவை அத்தியாவசியமாகிறது.

மாநிலத் தலைநகரங்களிலும், மற்ற பெரிய நகரங்களிலும் இருக்கும் அதிவேக வலைப்பின்னல், கிராமங்களுக்கும், பட்டி தொட்டிகளுக்கும் முழுமையாகச் சென்றடையவில்லை.

மேலைநாடுகளில், பெரும்பாலும் தனிக் குடும்பங்கள். வீடுகளும் பெரியதாக இருக்கும். இந்தியாவில் கூட்டுக் குடும்பங்கள் அதிகம். அதுவும் இரண்டு, மூன்று அல்லது அதிகபட்சம் நான்கு படுக்கையறை கொண்ட வீடுகள்.

கணவன், மனைவி இருவரும் வீட்டிலிருந்து வேலை செய்ய, இரண்டு குழந்தைகள் பள்ளி அல்லது கல்லூரியில் ஆன்லைன் கல்வி கற்பதாக இருந்தால், குறைந்தது நான்கு படுக்கையறை கொண்ட வீடு தேவை, மற்றவர்கள் குறுக்கீடு இல்லாமல் அவரவர் பணியைச் செய்ய. வீட்டில் முதியவர்கள் இருந்தால், அவர்கள் ஓய்வு எடுத்துக் கொள்வதோ, பொழுது போக்கிற்காக தொலைக்காட்சி பார்ப்பதோ முடிவதில்லை.

கணவன், மனைவி அவரவர்கள் மடிக்கணிணியை உபயோகிக்க, குழந்தைகள் ஆன்லைன் வகுப்பிற்கு ஸ்மார்ட் போன் அல்லது “டாப்லெட்” போன்ற கருவிகளை உபயோகிக்க வேண்டிய நிலை. குழந்தைகள் அதிகமாகக் கைபேசி, “டாப்லெட்” உபயோகிக்கக் கூடாது என்று கூறி வந்த பெற்றோர், அவர்களை அதன் மூலம் பாடம் கற்றுக் கொள்ளச் சொல்கிறார்கள்.   

வீட்டிலிருந்து வேலையில் பெரும் பகுதியான நேரம் “அடுத்தடுத்த மீட்டிங்” என்று போய் விடுகிறது. மீட்டிங் நடைபெறும் போது வெளியுலக சத்தங்களே இருக்கக் கூடாது என்பது உயரதிகாரிகளின் எதிர்பார்ப்பு. ஆனால் இது நடைமுறையில் சாத்தியமா? சிறிய குழந்தைகள் வீட்டிலிருந்தால் அந்தக் குழந்தை அழுவதும், சிரிப்பதும், கத்துவதும், விளையாடுவதும் தடுக்க முடியுமா? மேலும் வீடு என்றால் குக்கர், மிக்சி, கிரைண்டர் சத்தங்கள், பாத்திரம் தேய்க்கும் சத்தம் ஆகியவை தடுக்க முடியாதவை.

அலுவலக உயரதிகாரிகள் ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ள மறுக்கிறார்கள். வீடு அலுவலகத்தின் உள் நுழையவில்லை. அலுவலகம் வீட்டில் நுழைகிறது. அதற்கு ஏற்றாற் போல அலுவலக அதிகாரிகள் தங்கள் எதிர்பார்ப்பை மாற்றிக் கொள்ள வேண்டும்.

அலுவலகத்தில் வேலை என்றால், குறிப்பிட்ட மணி நேரம் வேலை என்ற வரையறை இருக்கும். வாரத்தில் இரண்டு நாட்கள் விடுமுறை. ஆனால், இப்போது நடப்பதென்ன? ஏழு நாட்கள், இருபத்து நான்கு மணி நேரம் வேலை போன்ற நிலைமை. உயர் அதிகாரிகள், அவர்கள் கூப்பிடும் போதெல்லாம் பேச வேண்டும், வேலை செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.

கொரோனாவிற்கு முன்னால் உயரதிகாரிகள் தன் கீழ் உள்ளவர்களை வாரக் கடைசி நாட்களில் கூப்பிடுவது குறைவாக இருக்கும். உயரதிகாரிகளின் வார விடுமுறை நாட்கள், குடும்பத்துடனும், நண்பர்களுடனும் கழிந்து விடும். ஊரடங்கினால் அவர்கள் வெளியே போக முடியாத நிலைமை. விடுமுறை நாட்களை அனுபவிக்க முடியாத நிலை. என்னால் விடுமுறை நாட்களை அனுபவிக்க முடியாத போது, மற்றவர்கள் மட்டும் ஏன் அனுபவிக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள் போலும்.

அலுவலகத்தில் வேலை செய்யும் போது, பிரச்சனைகளுக்கு, சம்பத்தப்பட்டவர்களிடம் நேருக்கு நேர் பேசி தீர்வு காண்பது எளிதாக இருக்கும். ஆனால் “வீட்டிலிருந்து வேலை” என்ற நிலையில், தீர்வு காண்பதில் நேரத்தின் விரயம் அதிகம்.

“வீட்டிலிருந்து வேலை” என்பதில் பணியாளர்களுக்கும், அவர்களை பணியிலமர்த்தும் முதலாளிகளுக்கும் பல நன்மைகள் இருப்பதை மறுக்க முடியாது.

 1. பணியாளர்களின் பயண நேரம் தவிர்க்கப்படுகிறது.
 2. உற்பத்தித் திறன் அதிகரிக்கிறது.
 3. வாகனப் போக்குவரத்து குறைவதால் வீதிகளில் நெரிசல்கள் குறைகின்றன.
 4. சாலையில் குறைவான வாகனங்கள், ஆகவே எரிபொருள் மிச்சப்படுகிறது.
 5. காற்றிலுள்ள மாசு குறைகிறது.
 6. வீட்டிலிருந்து வேலை என்பதால், பணியாளர்கள் நிறுவனம் இருக்கின்ற நகரத்தில் இருக்க வேண்டிய அவசியமில்லை. அவர்கள் தங்கள் சொந்த ஊரிலிருந்து பணி புரியலாம்.
 7. நிறுவனங்கள், பிரம்மாண்டமான அலுவலங்களிலிருந்து சிறிய அலுவலகங்களுக்கு குடி போகலாம்.
 8. நிறுவனத்தின் பராமரிப்புச் செலவு குறைகிறது.

இது வரவேற்கத்தக்கது என்றாலும், இதற்காக நாம் பலவற்றை இழக்க நேரிடுகிறது. “வீட்டிலிருந்து வேலை” கலாசாரம் நிரந்தரமானால், பல தொழில்கள் பாதிக்கப்பட்டு, பலர் தங்களது வாழ்வாதாரத்தை இழக்க நேரிடும்.

 1. பெரிய அலுவலகங்கள், அடுக்கு மாடிக் குடியிருப்பின் தேவை குறைவதால், கட்டுமானப் பணி செய்யும் நிறுவனங்களின் வளர்ச்சி குறையும். இந்தத் தொழிலில் இடைநிலை, கடைநிலை தொழிலாளர்களின் தேவை அதிகம். இவர்கள் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும்.
 2. கட்டுமானத் தொழிலைச் சார்ந்துள்ள சிறிய, நடுத்தர நிறுவனங்கள் நசியும்.
 3. புலம் பெயர்ந்து வந்து வேலை செய்யும் பணியாளர்கள் தங்குவதற்காக நடத்தப்படும் “தங்கும் விடுதிகள்” மூடும் நிலைக்குத் தள்ளப்படும். வீடு, வாடகைக்கு விட்டு, அதனால் வரும் வருமானத்தில் வாழ்வு நடத்துவோர் வாழ்வாதாரம் கேள்விக் குறியாகும்.
 4. பணியாளர்கள் அலுவலகத்திற்குச் செல்ல உதவும் பேருந்துகளின் தேவை குறைவதால், பேருந்து ஓட்டுநர் பாதிக்கப்படுவர். பேருந்து உற்பத்தியில் ஈடுபட்டிற்கும் நிறுவனங்களும், அவர்களுக்குத் தேவையான உதிரி பாகங்களைத் தயாரிக்கும் நடுத்தர, சிறிய நிறுவனங்களும் பாதிக்கப்படும்.
 5. சிற்றுண்டிச் சாலைகள் தேவை குறைவதால், சில உணவு விடுதிகள் மூடும் நிலைக்குத் தள்ளப்படும்.
 6. பேருந்து, ரயில், விமான சேவை ஆகியவற்றைப் பயன்படுத்துவோர் குறைவதால், வருமானம் கணிசமாகக் குறையும்.
 7. இவை எல்லாவற்றையும் விட முக்கியமானது – அதிகாரிகளுக்கும், பணியாளர்களுக்கும் உள்ள பிணைப்பு குறைவதுடன், பணியாளர்களுக்கு நிறுவனத்தின் மீது உள்ள விசுவாசம் குறையும் வாய்ப்புக்கள் அதிகம்.

நிறுவனங்களுக்கு “வீட்டிலிருந்து வேலை” கலாசாரம், வரப்பிரசாதமாக இருக்கலாம். ஆனால் நாட்டின் ஒட்டு மொத்த பொருளாதார வளர்ச்சிக்கு தடைக்கல்லாக இருக்குமோ என்று அஞ்சுகிறேன்.

(முற்றும்)

டிசம்பர் 2021, ஜனவரி 2022 மற்றும் பிப்ரவரி 2022 மாதங்களின் சிறந்த படைப்புப் போட்டி முடிவுகள் காண இங்கு கிளிக் செய்யவும்

#ads தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇

      

        

‘சஹானா’ இதழை Amazonல் வாசிக்க இணைப்பு இதோ 👇

              

          

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!