in

வீணையடி நீ எனக்கு ❤ (பகுதி 12) – ✍ பானுமதி பார்த்தசாரதி, சென்னை

வீணையடி நீ எனக்கு ❤ (பகுதி 12)

மே 2022 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு

இந்த தொடரின் மற்ற பகுதிகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

போலீஸைப் பார்த்ததும், ஜோஸப் என்ற அந்த மலையாள டாக்டர் நழுவத் தொடங்கினான். ஆனால் உயர் போலீஸ் அதிகாரியில் ஒருவர் வேகமாகச் சென்று அவன் சட்டையின் காலரைப் பிடித்து காவலர்களிடம் ஒப்பித்து, “இவனை ஜாக்கிரதையாக தப்பி ஓடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்” என்றார் ‌லேசான உறுமலுடன்.

‘போலீஸ் எப்படி திடீரென்று வந்தது?’ என்று மஞ்சுளா ஆச்சரியம் அடைந்தாள். அவள் சந்தேகத்திற்கு நந்தகோபால் பதில் சொன்னான்.

“டாக்டர் ஸ்ரீதர், மாடியில் ஒரு அறையில் பரிசோதித்த போது போதை மருந்துகளையும் ஊசி போடும் சிரஞ்ஜ், மற்றும் கையுறைகளையும் பார்த்தவுடன், அவருடைய நண்பரான உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு போன் செய்து உடனே வரவழைத்தார்” என்று விளக்கினான்.

ஏதோ ஆங்கிலப் படம் பார்ப்பது போல் திகைத்த மஞ்சுளா, கோபியை இறுக அணைத்துக் கொண்டாள்.

ஜோஸப்பைக் கைது செய்த காவலர்கள் சிந்துவைக் கைது செய்யும் போது, “எங்களுக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை. இது டாக்டர் நந்தகோபாலின் மருத்துவமனை, இங்கே டாக்டர் முரளி தான் எல்லாவற்றிற்கும் பொறுப்பு” என்று கத்தினாள்.

போலீஸ் அதிகாரிகள் அவள் கத்துவதைப் பொருட்படுத்தவில்லை. வீடு பெருக்கும் அந்தப் பெண்களிடமும், வாட்ச்மேன், மற்றும் தோட்டக்காரனிடமும் நிறைய கேள்விகள் கேட்டுக் குறித்துக் கொண்டனர்.

டாக்டர் ஸ்ரீதரும், பெரிய போலீஸ் அதிகாரியிடம், “நந்தகோபால் அமெரிக்கா கிளம்பியதும், கிளினிக்கை ரிப்பேர் செய்வது போல் எல்லா இடங்களிலும் சி.சி.டி.வி. கேமரா யாருக்கும் தெரியாமல் ‘பிக்ஸ்’ செய்திருக்கிறேன். அதன் புட்டேஜ் எடுத்தால் கூட உங்களுக்கு நிறைய விஷயங்கள் தெரியவரும்” என்றார்.

எல்லாவற்றையும் குறித்துக் கொண்ட அந்த காவல்துறை அதிகாரி, பிறகு டாக்டர் ஸ்ரீதரிடம் விடைபெற்றுச் சென்றார்.

“மேற்கொண்டு எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை காவல்துறை பார்த்துக் கொள்ளும்” என்றனர். முரளியின் தொலைபேசி எண்ணைக் கொடுத்து, தொடர்பு கொள்ளச் சொல்லி விட்டு எல்லோரும் கும்பகோணம் சென்றனர்.

நந்தகோபால் தான் அவமானம் தாங்காமல் குன்றி நின்றான். ‘இந்த அசிங்கம் என்னால் தானே’ என்று வருந்தினான். சிந்து இந்த கிளினிக்கில் போதைப் பொருட்களை எல்லாம் உபயோகித்துப் பணம் சம்பாதிப்பாள் என்று நினைக்கவில்லை. இவ்வளவு மோசமான நடத்தையுள்ள பெண்ணுடன் பழகி, மனைவி குழந்தையெல்லாம் தொலைத்து விட்டு இருப்பான்.

நல்ல காலம், கடவுள் புண்ணியத்தால் தப்பித்தான். மஞ்சுளா தன்னை எவ்வளவு மட்டமாக நினைப்பாள்! கோபிக்கு இதெல்லாம் பெரியவனாக பிறகு தெரியவந்தால் அப்பாவைப் பற்றி எவ்வளவு கேவலமாக நினைப்பான்! தன் செயலுக்குத் தானே தலை குனிந்து நின்றான் நந்தகோபால். ஸ்ரீதரும், லட்சுமியும் கூட அவனைக் கடுமையாகத் தான் பார்த்தனர். ஆனால் மஞ்சுளா அவனுக்காகப் பரிதாபப்பட்டாள்.

எவ்வளவு பெரிய ஆக்ஸிடென்ட்டிலிருந்து மீண்டு வந்திருக்கிறான். இப்போது தான் திருந்தி நம்மிடமும், குழந்தை கோபியிடமும் அன்பைப் பொழிகிறானே! அவனிடம் எப்படி கடுமையாக நடப்பது?

அவனருகில் சென்று அவனுடைய தோளைத் தொட்டாள். அந்தத் தொடுதலில் அவன் திரும்பி அவளைப் பார்த்தான். தவறு செய்து விட்டு வருந்தும் குழந்தையை மன்னிக்கும் தாயின் அருளை அவள் கண்களில் பார்த்தான்.

“இந்த ‌அவமானம், அசிங்கம் எல்லாம் என்னால் தானே மஞ்சு! என்னை மன்னிப்பாயா?” என்றான் தவிப்புடன் அவள் கைகளைப் பிடித்துக் கொண்டு.

“அது மோசமான கடந்த காலம், காலண்டரில் கிழித்தெறியப்பட்ட நாட்கள். நீங்கள் இப்போது ஒரு நல்ல டாக்டர். அருமையான பெற்றோரின் ஒரே மகன். எனக்கு ஒரு அன்பான கணவர். எல்லாவற்றிற்கும் மேலாக நம் குழந்தை கோபிக்கு உயிரான தந்தை. இறந்த காலத்தை மறப்போம், நிகழ் காலத்தைக் கொண்டாடுவோம்” என்றாள் மஞ்சுளா.

லட்சுமியும், ஸ்ரீதரும் அதைப் பற்றி சமாதானமாக இவளிடம் பேச வரும் போது, “அத்தை, மாமா கசப்பான அந்த விஷயங்களைப் பேசினால் இவரது மனம் தான் புண்படும். நம் வீட்டில் ஒரு சந்தோஷமான நிகழ்ச்சி நடந்தால் இதெல்லாம் மறந்து விடும். முரளியின் கல்யாணம் பற்றிப் பேசலாமே” என்றாள்.

“நல்லவேளை, கடவுள் எங்களைக் காப்பாற்றினார். இப்படிப்பட்ட ஒரு நல்ல மருமகளை எங்களிடமே திருப்பிக் கொடுத்து விட்டார்” என்றார் டாக்டர் ஸ்ரீதர் மன நிறைவுடன்.

“மஞ்சுளா சொல்வது ரொம்ப சரி. மீனா, நாராயணன் இருவரையும் உடனே வரச் சொல்ல வேண்டும். அவர்கள் வந்தவுடன் முரளியின் திருமணத்திற்கு ஏற்பாடு செய்யலாம்” என்று பரந்தாமன்.”

“மீனாவும், நாராயணனும் யார் அத்தை?”

“முரளியின் பெற்றோர்கள் அவர்கள். மீனா என்னுடைய தோழி, தூரத்து உறவுக்காரப் பெண். ஆனால் மனதளவில் மிகவும் நெருக்கம். ரொம்பவும் அன்பானவள். துபாயில் அவளும் அவள் கணவரும் டாக்டர்கள். உன்னைப் பார்க்காமலே அவள் உன்னை மிகவும் நேசிக்கிறாள்” என்றாள் லட்சுமி.

முரளியின் பெற்றோர்களும் அவன் திருமணத்தை ஆவலுடன் எதிர்பார்த்து இருந்ததால், லட்சுமி போனில் கூப்பிட்டவுடன் ஒரு வாரத்தில் இந்தியா வந்தனர். எந்த ஆடம்பரமும் இல்லாமல் மிக எளிமையாக இருந்தனர். இருவரும் நிறைய பரிசுகளுடன் வந்தனர்.

மஞ்சுளாவிற்கு நிறைய ஜார்ஜெட் புடவைகளும் ஒரு தங்கச் சங்கிலியும் பரிசளித்தனர். கோபிக்கு நிறைய ‘மாடர்ன் டிரஸ்’ கொண்டு வந்திருந்தனர். மீனாவையும் நாராயணனையும் மஞ்சுளாவிற்கு மிகவும் பிடித்து விட்டது.

அடுத்த நாளே ராகவனுக்கு அறிவித்து விட்டு எல்லோரும் அவன் வீட்டிற்குச் சென்றனர். கார் ஓட்டிப் போகும் போது முரளியை மிகவும் கலாட்டா செய்தாள் லட்சுமி. அவள் செய்த கலாட்டாவை  சிரித்துக் கொண்டு மிகவும் ரசித்தான். ராகவன்  வீட்டில் இவர்களுக்கு பலத்த வரவேற்பு.

ஜானகி எல்லோருக்கும் டிபன், காபி கொண்டு வந்து வைத்தாள். முரளி வேண்டுமென்றே ஜானகியை வம்பிற்கிழுத்தான். 

“அண்ணா, பெண்ணிற்குப்  பாடத் தெரியுமா என்று கேளுங்கள்” என்றான்  நந்தகோபாலிடம்.

“டேய் உன்னோடு சேர்ந்து நானும் வாங்கிக் கட்டிக் கொள்ள வேண்டுமா?” என்றான் நந்தகோபால்.

முரளியை முறைத்து விட்டு உள்ளே ஓடி விட்டாள் ஜானகி.

துபாயிலிருந்து கிளம்பும் போது, பெண் பார்த்துப் பிடித்து விட்டால், சுற்றத்தினருடன் கலந்து பேசிப் பிறகு நிச்சயம் செய்து கொள்ளலாம் என்று தான் மீனாவும் நாராயணனும் முதலில் நினைத்தனர். ஆனால் மஞ்சுளாவைப் பார்த்தவுடன், அவள் மென்மையான பேச்சையும், நல்ல குணங்களைப் பார்த்தவுடன் நிச்சயதார்த்தம்  மட்டும்  இப்போது வைத்துக் கொள்ளலாம் என்று உறுதி செய்தனர்.

நேரில் ஜானகியைப் பார்த்தவுடன், அவள் அழகிலும், மென்மையான குணத்தினாலும் மீனாவும், நாராயணனும் மிகவும் கவரப்பட்டார்கள். உடனே திருமணம் முடித்துவிட வேண்டும் என்று முடிவு செய்தனர். சாரதாவும், ராகவனும் மிகவும் ஆதர்ச தம்பதிகள் என்று மகிழ்ந்தனர்.

“ஜானகி, இங்கே வாம்மா , எங்கள் மகன் முரளியைத் திருமணம் செய்து கொள்ள உனக்கு சம்மதமா?” என்று கேட்டாள் மீனா சிரித்துக் கொண்டே. ஜானகி முகமெல்லாம் சிவக்க மெதுவாக “ஆமாம்” என்பது போல் தலையாட்டி விட்டு உள்ளே போகத் திரும்பினாள்.

அப்போது மீனா அவள் கையைப் பிடித்து நிறுத்தினாள். மீனா, தன் அழகிய ஹேண்ட் பேகிலிருந்து கொத்தாக நகைகளை எடுத்து  அருகில் இருந்த காபி டேபிள் மேல் வைத்தாள். சில பட்டுப் புடவை பெட்டிகளையும் வைத்தாள். அந்த நகைகளைப்  பார்த்து பிரமித்தாள் சாரதா.

“இந்த நகைகளை நான் முரளியின் வரப்போகும் மனைவிக்காக என்று வாங்கி  வைத்திருக்கிறேன். ஜானகி, நீ அந்தப் பட்டுப் புடவையைக் கட்டிக் கொண்டு நகைகளையும் அணிந்து கொண்டு வாம்மா” என்றாள் மீனா கனிவுடன்.

“ஆன்ட்டி, துபாயில் பெட்ரோல் தான் எடுக்கிறார்கள் என்று கேள்விப்பட்டேன். தங்கம் கூட எடுக்கிறார்களா என்ன?” என்றாள் கிண்டலாக ஜானகி.

“அம்மா! இவள் அண்ணியைப் போல் இருக்க மாட்டாள். சரியான வாயாடி, இப்போதே தொடங்கி விட்டாள் பார்”  என்றான் முரளி கிண்டலாக.

“பேசட்டும் முரளி, பெண்கள் பேசினால் தான் அழகு. ஆண்கள் செயல்பட்டால் தான் அழகு” என்றார் நாராயணன். முரளிக்கு நாக்கை சுழற்றி அழகு காட்டி விட்டு உள்ளே ஓடி விட்டாள் ஜானகி.

பட்டுப்புடவையும், நகைகளில் சிலவற்றையும் மட்டும் அணிந்து வந்த ஜானகியைப் பார்த்து  மீனாவே மயங்கி நின்றாள். ஒரு பெண்ணைப் பார்த்து பெண்ணே மயங்க முடியுமா? என்று ஆச்சர்யமடைந்தாள்.

வெற்றிலைப் பாக்கு, பழங்கள் மாற்றி எளிமையான ஒப்புத் தாம்பூலம் என்று உடனே முடித்தனர்.

அப்போது ஜானகி, “திருமணத்தில் என் அத்தை மஞ்சுளாவும், மாமாவும் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும்” என்று ஒரு வேண்டுகோள் வைத்தாள்.

“அதற்கு நான் உத்தரவாதம்” என்றார் ஸ்ரீதர். மஞ்சுளா திகைத்தாள்

“மாமா எனக்கு விடுமுறை முடிய இன்னும் ஒரு மாதம் தான் இருக்கிறது. அதற்குள் திருமணம் முடிக்க முடியுமா?” என்றாள்.

“ஒரு மாதம் எதற்கு அண்ணி ? வெற்றிலைப் பாக்கு மாற்றிய இந்த நல்ல நேரத்தில், இப்போதே தாலியைக் கட்டி விட்டால் திருமணம் முடிந்தது. இல்லையா ஜானகி?” என்றான் ஜானகியைப் பார்த்து கண்களைச் சிமிட்டியபடி. ஜானகியின் முகம் வெட்கத்தில் அந்தி வானமாகச் சிவந்தது.

“டேய் முரளி, ரொம்ப அவசரமோ?” என்று லட்சுமியும் கலாட்டா செய்ய, எல்லோரும் சிரித்தனர். மஞ்சுளாவும் சிரித்துக் கொண்டே திரும்பி நந்தகோபாலைப் பார்க்க, அவன் அவளையே ஆவலுடன் பார்த்துக் கொண்டிருந்தான். அவன் பார்வையின் தீட்சண்யம் தாங்காமல் மஞ்சுளா தலைகவிழ்ந்தாள்.

அப்போது மஞ்சுளாவின் செல்போன் அழைத்தது. அவளுடைய நீண்ட நாள் தோழி சியாமளா, அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தற்போது பணிபுரிந்து வருகிறாள். அவள் தான் அழைத்தாள்.

“மஞ்சு, உனக்கு நம் பல்கலைக்கழகத்தில் நாளை நம் தமிழ் இலாக்காவில் ஒரு சின்ன பார்ட்டி ஏற்பாடு செய்திருக்கிறோம். அதற்கு நீயும் உன் குடும்பமும் கட்டாயம் வரவேண்டும். முக்கியமாக உன் அத்தை, டாக்டர் லட்சுமியை அழைத்துக் கொண்டு வர வேண்டும். நீ இப்போது சிதம்பரத்தில் உன் அண்ணா வீட்டில் தான் இருக்கிறாய் என்று தெரியும். ஆதலால் எந்த மறுப்பும் சொல்லாமல் நாளை மாலை நான்கு மணிக்கு வந்து சேர்” என்று உத்தரவிட்டாள்.

“ஏய் எதற்காக திடீர் பார்ட்டி? அதென்ன தேதியும் நேரமும் நீங்களே குறித்து விட்டு என்னை கூப்பிடுவது? அதென்ன அப்படி ஒரு பார்ட்டி?” என்று கேட்டாள் மஞ்சுளா சிரித்துக் கொண்டு.

“காரணமெல்லாம் கேட்காதேடி பெண்ணே! வா என்றால் வர வேண்டும்” என்றவள் போனைத் துண்டித்தாள். அவள் அப்படித்தான் சினிமா பாணியில் கலாட்டா செய்வாள்.

“நான் எதற்கு?” என்று திகைத்த லட்சுமி, “ஓ! ஓஹோ!!”  என்றாள்  வியப்புடன்.

“எதற்காக இந்த பார்ட்டி என்று உங்களுக்குத் தெரியுமா அத்தை?” என்றாள் மஞ்சுளா வியப்புடன்.

காது கேட்காத மாதிரி் “சாரதா” என்று கூப்பிட்டுக் கொண்டு சமையல் அறைக்கு சென்று விட்டாள் லட்சுமி.

(தொடரும் – புதன் தோறும்)

டிசம்பர் 2021, ஜனவரி 2022 மற்றும் பிப்ரவரி 2022 மாதங்களின் சிறந்த படைப்புப் போட்டி முடிவுகள் காண இங்கு கிளிக் செய்யவும்

#ads தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇

      

        

‘சஹானா’ இதழை Amazonல் வாசிக்க இணைப்பு இதோ 👇

              

          

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    சிட்டுக்குருவியும் சுட்டிக்குரங்கும் (சிறுவர் கதை) – ✍ பத்மாசினி மாதவன், சென்னை

    வீட்டிலிருந்து வேலை – வரமா அல்லது தடைக் கல்லா? (கட்டுரை) – ✍ கே.என்.சுவாமிநாதன்