in

வீணையடி நீ எனக்கு ❤ (இறுதிப் பகுதி) – ✍ பானுமதி பார்த்தசாரதி, சென்னை

வீணையடி நீ எனக்கு ❤ (இறுதிப் பகுதி)

ஜூன் 2022 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு

இந்த தொடரின் மற்ற பகுதிகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

ஞ்சுளா பணிபுரியும் பல்கலைகழகத்தில், ஒரு அமெரிக்க மாணவன் கையில் துப்பாக்கியோடு கண்டபடி  சுட்டுக் கொண்டிருந்தான். திடீரென்று அவன் ஒரு கறுப்புப் பெண்ணை குறி பார்த்து துரத்திக் கொண்டிருந்தான். அந்த பெண்ணோ பயந்து தலை தெறிக்க ஓடிக் கொண்டிருந்தாள்.

அப்போது யாரும் எதிர்பார்க்காத விதமாக மஞ்சுளா தன்னையறியாமல் ஒரு வேகத்தோடு குறுக்கே புகுந்து அந்த பெண்ணை தன் பக்கம் இழுத்துக் கொண்டாள். அந்த நேரத்தில் துப்பாக்கி வெடிக்க, மஞ்சுளாவின் கழுத்திற்கும், மார்பிற்கும் இடையில் குண்டு பாய்ந்தது. இரத்த வெள்ளத்தில் மஞ்சுளா துடித்தபடி கீழே விழுந்தாள்

இதற்குள் போலீஸ் வந்து  அந்த மாணவனைச் சுற்றி வளைத்து கைது செய்தது. ஒரு ஆம்புலன்ஸ்  மஞ்சுளாவை அள்ளிச் சென்றது.

ஏதோ ஆங்கிலப்படம் பார்ப்பது போல் இருந்தது நந்தகோபாலிற்கு.  செய்வதறியாமல் திகைத்து நின்றான். உடனே சுயநினைவடைந்து தன் பர்ஸையும், கார் சாவியையும் எடுத்துக் கொண்டு பதறியபடி காரை எடுத்து மஞ்சுளாவின் கல்லூரிக்குக் கிளம்பினான்.

விஷயம் தெரிந்து  பக்கத்து பங்களாவில் இருந்த அவன் டாக்டர் நண்பர் மார்ட்டினும் உடனே ஓடி வந்து அவன் காரில் ஏறிக் கொண்டார் .

“டாக்டர் , நீங்கள் மிகவும் டென்ஷனாக இருக்கிறீர்கள் ! நான் காரை ஓட்டுகிறேன்” என்று கூறி விட்டு, டாக்டர் மார்டின் காரை ஓட்டத் தொடங்கினார் .

நந்தகோபால் ஒன்றும் பேசவில்லை. உயிரில்லாத சிலை போல் அமர்ந்திருந்தான். வழியெல்லாம் கடவுளை வேண்டிக் கொண்டே போனான்.

“பெருமாளே என்னை மன்னித்து விடு;  தண்டித்து விடாதே. என் மஞ்சுவை என்னிடம் கொடுத்து விடு. நான் நடந்தே  உன் சன்னதிக்கு வந்து என் காணிக்கையை செலுத்துகிறேன்” என்று மனமுறுக வேண்டிக் கொண்டான்.

பல்கலைகழகத்திற்கு சென்று சில விவரங்களைப் பெற்று  பின்னர் வேகமாக மஞ்சுளாவை சேர்த்திருக்கும் மருத்துவமனைக்கு சென்றனர். மஞ்சளாவை ஆபரேஷன் தியேட்டரில் வைத்திருந்தனர் .

இவர்கள் யாரையும் ஆபரேஷன் தியேட்டர் அருகில் கூட அனுமதிக்கவில்லை. மிகுந்த இரத்த சேதம் ஏற்பட்டுள்ளது என்றும், குண்டு காலர் எலும்பிற்கும், விலா எலும்பிற்கும் இடைப்பட்ட சதைப் பகுதியில் மாட்டிக்கொண்டு இருக்கிறது என்றும் சொன்னார்கள். சர்ஜரியே ஆறுமணி நேரம் நடந்து, குண்டை எடுத்தார்கள்.

இதற்கிடையில் நந்தகுமார், நிவேதிதாவிற்கு ஃபோன் செய்து விஷயத்தைச் சொன்னான். அவள் கோபியை பள்ளிக்கூடத்திலிருந்து பிக்-அப் செய்து அவனைப் பார்த்துக் கொள்வதாகவும் வாக்களித்தாள்.      

ஆபரேஷன் முடிந்து மஞ்சுளாவை வார்டில் கொண்டு வந்து படுக்க வைத்தார்கள். பிறகு மூன்று மணி நேரம் கழித்த பிறகு தான் கண்களைத் திறந்தாள். நந்தகோபால் அவ்வளவு நேரமும் எதுவும் சாப்பிடாமல் வெறும் காபி மட்டுமே குடித்துக் கொண்டு காத்திருந்தான்.

கூட வந்த டாக்டர் மார்டின் மட்டும், வீட்டிற்குப் போய் வரும் போது நிவேதாவையும், கோபியையும்  அழைத்து வந்தார். கோபி நிறைய அழுதிருப்பான் போல் இருக்கிறது. கண்கள் கலங்கி முகம் எல்லாம் சிவந்திருந்தது.

நந்தகோபாலையும், கோபியையும் மட்டும் பார்க்க அனுமதித்தார்கள். கோபி அவன் அம்மாவின் கைகளப் பிடித்துக் கொண்டு அழுதான். கோபி அருகில் இருப்பதையும் மறந்து நந்தகோபால் மஞ்சுளாவின் நெற்றியில் முத்தமிட்டான். குலுங்கிக் குலுங்கி அழுதான். கணவனை ஒரு கையாலும், மகனை மறுகையாலும் அணைத்துக் கொண்டு களைப்புடன் கண்களை மூடிக் கொண்டாள் மஞ்சுளா.

மருத்துவமனையில் நந்தகோபால் காட்டிய அன்பில் மஞ்சுவிற்கு மூச்சு முட்டியது. இவ்வளவு அன்பாகக் கூட ஒரு கணவன் இருப்பானா என்று ஆச்சர்யப்பட்டாள். அந்த நேரத்தில் அவன் அம்மாவாக, அப்பாவாக, தெய்வமாகத் தெரிந்தான்.

‘ஆனாலும் ஏன் அவன் தன்னை மனைவியாக மட்டும் ஏற்றுக் கொள்ளவில்லை ? கோபிக்குத் தாயாக மட்டும் தான் தன்னைக் கருதுகிறானோ’ என்று வேதனைப்பட்டாள். நிராகரிப்பால் துக்கம் மார்பை அடைத்தது.

மஞ்சுளா காப்பாற்றிய அந்த கருப்பினப் பெண்ணும், அவள் பெற்றோரும் தினமும் ஒருமுறை வந்து அவளைப் பார்த்து விட்டு சென்றனர். ஒரு வாரம் கழித்து மஞ்சுளா மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டாள்.

கொஞ்சம் உடல் நிலை தேறியதால்  மீடியா  ஆட்களும்  வந்து பேட்டி எடுத்தார்கள். அந்த பேட்டி  அநேக தொலைகாட்சிகளில் ஒளிபரப்பாகியது.

“நீங்களோ வேற்று நாட்டைச் சார்ந்த ஒரு பெண்மணி. உங்கள் உயிரைப் பற்றியும் கவலைப்படாமல் எப்படி இந்த நாட்டைச் சேர்ந்த ஒரு பெண்ணைக் காப்பாற்ற துணிந்தீர்கள்?” என்றார் ஒரு நிருபர்.

“எப்படி இந்த தியாகம் செய்ய மனம் வந்தது?”  என்றார் மற்றொரு நிருபர்.

மஞ்சுளா மெதுவாக சிரித்தாள்.”உயிர் எல்லோருக்கும் ஒன்றே; இந்திய நாட்டு உயிர், அமெரிக்க நாட்டு உயிர் என்று தனித்தனியே இருக்கிறதா என்ன? அந்த நேரத்தில் எப்படியாவது  ஒரு நிற வெறி பிடித்தவனின் துப்பாக்கி குண்டிலிருந்து அந்த பெண்ணைக் காப்பாற்ற வேண்டும் என்ற வேகம் மட்டும் அதன் இருந்தது. மேலும் நான் செய்தது தியாகமல்ல, என் கடமையைத் தான் செய்தேன். மாணவர்கள் வீட்டில் இருக்கும் போது, அவர்கள் பாதுகாப்பிற்கு பெற்றோர்கள் பொறுப்பு. கல்லூரிக்கு வந்த பிறகு  அந்தக் கல்லூரி நிர்வாகம் தானே பொறுப்பு”

பேசிக் கொண்டிருக்கும் போதே களைப்புடன் கண்களை மூடிக் கொண்டாள்.

அவர்கள் சென்ற கொஞ்ச நேரத்தில் கோபி அவளிடம் வந்தான்.

“அம்மா, நான் ஒன்று கேட்டால் தப்பாக  நினைக்க  மாட்டாயே? அந்தப் பெண்ணின் பாதுகாப்பிற்கு  பொறுப்பை ஏற்றுக் கொண்டாயே!  உனக்கு ஏதாவது  ஆகியிருந்தால் எங்களுக்கு யார் பொறுப்பு?” என்று கேட்டுவிட்டு  அவள் மடியில் தலை வைத்து அழுதான். மஞ்சுளாவின் கண்களிலும் கண்ணீர் .

அவன் சுருண்ட முடியைகைகளால் அளைந்து கொண்டே, “ராஜா, ஊரார் பிள்ளையை ஊட்ட வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும் என்று ஒரு பழமொழி தமிழில் இருக்கிறது. கடவுள் எல்லோரையும் காப்பாற்றுவார்” என்று அவன் கன்னங்களில் முத்தம் கொடுத்தாள்.

நந்தகோபால், மஞ்சுளாவிற்குக் கொடுக்க வேண்டிய மருந்துகளை ஒரு  ‘ட்ரே’வில் வைத்துக் கொண்டு வந்தான். கோபி அழுவதையும், பேசுவதையும் பார்த்துக் கொண்டிருந்தான். கோபியை வெளியே போய் விளையாடிவிட்டு வரும்படி நந்தகோபால் கூற, மஞ்சுளாவும்  அவன் கண்களைத் துடைத்து கன்னத்தில் முத்தமிட்டு அனுப்பினாள்.

நந்தகோபால் மஞ்சுவின் அருகில் அமர்ந்து அவளுக்குக் கொடுக்க வேண்டிய மருந்துகளைக் கொடுத்தான்.

அவனையே உற்றுப் பார்த்த மஞ்சுளாவிடம், “என்ன மஞ்சு அப்படிப் பார்க்கிறாய்?” என்று கேட்டான்.

“இந்த பத்து நாட்களில் மிகவும் மெலிந்து விட்டீர்கள். நேரத்தோடு தூங்குவதில்லை, ஒழுங்காக சாப்பிடவும் முடியவில்லை. எல்லாம் என்னால் தான்” என்றாள் தழுதழுத்த குரலில்.        

“அதெல்லாம் பரவாயில்லை மஞ்சு . நீ உயிர் பிழைத்து வந்ததே போதும். உன்னை இரத்த வெள்ளத்தில் பார்த்ததும் என் உயிரே நின்று விடும் போல் இருந்தது. உனக்கு ஏதாவது ஆகியிருந்தால் கோபியும் நானும் அனாதை ஆகியிருப்போம்” என்றான் நந்தகோபால் கரகரத்த குரலில்.

“உங்களுக்கு என் மேல் அவ்வளவு அன்பா?  நிஜமாகவே உங்களுக்கு என்னைப் பிடிக்குமா?”

“இது என்ன அசட்டுக் கேள்வி மஞ்சு! ஒரு முறை என் மதியீனத்தால் தவறவிட்ட உன்னை, ஒரு கணவனாக நெருங்குவதற்கே வெட்கப்பட்டு அஞ்சி நிற்கின்றேன். என் குறைகளை மன்னித்து என்னை ஏற்றுக் கொள்வாயா?” என்றான் கெஞ்சும் குரலில்.

“அப்படியென்றால் நிஜமாகவே உங்களுக்கு என்னைப் பிடிக்குமா? இல்லை கோபியின் அம்மா என்பதால் நான் வேண்டும் என்று நினைக்கிறீர்களா?”

“இப்படிக் கேட்டால் நான் என்ன செய்ய முடியும்?  ஹனுமாராக இருந்தால் என் நெஞ்சைத் திறந்து காட்டுவேன். என் மஞ்சுளா தான் என் உயிர். நீ இல்லை என்றால் என் கண்மணி கோபி எனக்குக் கிடைப்பானா? நல்லதோர் வீணையைப் புழுதியில் எறிந்தவன் நான். இப்போது அந்த வீணையை இதய வீணையாய் மீட்ட ஆசைப்படுகிறேன். எங்கே கைக்கு எட்டியது கிடைக்காமல் போய் விடுமோ என்று மிகவும் பயந்து விட்டேன் மஞ்சு” என்றவன் இருகைகளையும் விரித்து அவளிடம் நீட்டினான்.

மஞ்சுளா, அவன் மார்பில் தஞ்சமானாள். அவள் காதுகளில் தன் இதழ்களைப் பொறுத்தி “வீணையடி நீ எனக்கு” என்று அவன்  பாட,  “மேவும் இசை நான் உனக்கு” என்று பாடிவிட்டு அவனைப் பார்த்து கலகலவென்று சிரித்தாள் மஞ்சுளா.

(முற்றும்)

டிசம்பர் 2021, ஜனவரி 2022 மற்றும் பிப்ரவரி 2022 மாதங்களின் சிறந்த படைப்புப் போட்டி முடிவுகள் காண இங்கு கிளிக் செய்யவும்

#ads தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇

      

        

‘சஹானா’ இதழை Amazonல் வாசிக்க இணைப்பு இதோ 👇

              

          

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

One Comment

அழைத்தான் அம்பலத்தான் (அத்தியாயம் 9) – ✍ செந்தமிழ் சுஷ்மிதா, குடியாத்தம்

அன்பின் வழியது உயிர்நிலை (சிறுகதை) – ✍ மாலா ரமேஷ், சென்னை