ஜூன் 2022 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு
சில்லென்ற சாரல் ஜன்னலின் வழியாக லேசாக நனைக்க ஆரம்பித்த நேரம். காற்றில் திறந்திருந்த ஜன்னல் கதவுகள் படார் படாரென சாத்திக் கொள்ளவும், அவற்றின் கண்ணாடிகளைக் காப்பாற்றுவதற்காக ஓடினாள் ரம்யா.
இரண்டு ஜன்னல் கதவுகளை மூடியவள், மூன்றாவதை மூட மனமில்லாமல் ஜன்னல் வழியே கம்பி கம்பியாய் விழும் மழையை ரசித்தாள். மழையைப் பார்ப்பது எந்த வயதிலும் அலுப்பதில்லை.
ஈரக்காற்று முகத்தை வருட, லேசான சாரல் மேலே விழ… அப்படியே நின்றுகொண்டு எதிர்வீட்டைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
எதிர்வீடு என்பது பதினாறு வீடுகளைக் கொண்ட ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பு. அதன் முன் பகுதியில் உட்கார்ந்திருக்கும் வாட்ச்மேன் முதல், அதைக் கூட்டிப் பெருக்கும் அஞ்சலை வரை எல்லாரும் ரம்யாவைப் பார்த்தால் ஒரு சினேகப் புன்னகை பூத்து இரண்டு வார்த்தைகள் பேசாமலிருக்க மாட்டார்கள்.
மழை மெதுவாக வலுக்க ஆரம்பிக்க, வாட்ச்மேன் சொல்லிக் கொண்டு வீட்டுக்குப் புறப்பட்டுப் போவதை ரம்யா தன் ஜன்னலிலிருந்து பார்த்துக் கொண்டிருந்தாள்.
முன்புறம் இருந்த மோட்டர் ஷெட்டில் இருந்த எதிர்வீட்டுப் பூனை மிகுந்த எச்சரிக்கை உணர்வோடு இங்கிருந்து அங்கும் அங்கிருந்து இங்குமாகப் போனது. அதையே கண்களால் பின் தொடர்ந்தாள் ரம்யா. குட்டியை லாவகவமாக வாயில் கவ்விக்கொண்டு ஓரமாக…மழை படாமல் இடம் மாற்றிக் கொண்டிருந்தது.
தாய்மை உணர்வில் விலங்கென்ன…மனிதனென்ன…? பற்கள் அழுந்தாமல், பிடியையும் விடாமல், கொஞ்சமும் சலிக்காமல், இடத்தை மாற்றிக் கொண்டே இருந்தது. அதனையே பார்த்து கொண்டிருந்தாள் ரம்யா.
“ரம்யா…..வெளில துணி காயப் போட்டு இருந்தியே….எடுத்தாச்சா….? அப்றம் மொத்தமா நனஞ்சிடப் போகுது” என்ற தன் மாமியார் கிருஷ்ணவேணியின் குரலைக் கேட்டு, நிகழ்காலத்துக்கு வந்தாள்.
ஜன்னலை மூடியபடியே, “ஆங்….எடுத்திட்டேன் அத்தை…” என்றாள்.
வானம் பொத்துக் கொண்டு ‘சோ’வெனக் கொட்ட ஆரம்பித்தது. மின்னலும் இடியும் காதைப் பிளந்தன. மழை மேகங்கள் சூழ்ந்து, வானம் மொத்தமாக இருண்டு கிடந்தது. மாலை ஆறு மணியே இரவு 8 மணி போல இருந்தது.
ஆபீசுக்குப் போன ராகவன் வந்து சேர எப்படியும் ஒன்பது மணி ஆகும். இந்த மழையில் எப்படித்தான் வரப் போகிறானோ என்ற எண்ணம் அவள் மனதில் ஓடிக் கொண்டிருந்தது. மழை வர வேண்டும் என்று ஒரு நேரம் ஏங்கும் மனது, வந்தபின் சில விஷயங்களை நினைக்காமல் இருப்பதில்லை.
சிறிது நேரம் கழித்து, மழை முற்றிலுமாக விட்டிருந்தது. பால்கனியிலிருந்து தெருவில் வெள்ளமாக ஓடிய மழை நீரில் வாத்துகளாய் நீந்திச்செல்லும் கார், ஆட்டோ, டூவீலர்களைப் பார்ப்பதில் ஒரு அலாதி ஆனந்தம்
இதில் தடை தாண்டும் ஓட்டப்பந்தயம் போல சேறு வாரி அடிக்காதபடி, தப்பித்து… தப்பித்து…. நடக்கும் பாதசாரிகளுக்கு தெருவில் தேங்கும் மழைத்தண்ணீர் ஒரு சவால்தான்.
அப்போது பூ விற்கும் பார்வதி அம்மா வந்தார்
“ரம்யாம்மா….”
“வாங்க… ஆமா, இன்னைக்கு மழைல பூக்கடை போட முடியாதே…. பூவெல்லாம் என்ன ஆச்சு….?
“இருக்கும்மா…..ரொம்ப வெல தாஸ்தி….கடசில இப்பிடி மழை வந்து…இருக்கிற யாவாரத்தையும் கெடுத்துடுச்சு…”
“என்ன செய்யறது பார்வதிம்மா…. மழை வரலன்னா தண்ணி இல்லன்னு பொலம்பறோம். மழை வந்தா உங்களுக்கு பூ விக்க முடில…..எது வேணும்…? மழையா….? பூவா….?” என்று விக்ரமாதித்தனிடம் வேதாளம் கேட்டது போலச் சிரித்துக் கொண்டே கேட்டாள்.
“ஆங் ….. ரெண்டுந்தான் வேணும்… நான் இன்னைக்கு கடயே போடல…..ஒரு பத்து மொழம் மல்லிப்பூ வெச்சிருக்கேன்…..அப்றம் உதிரியா அளரியும் தொளசியும், நீதாம்மா கொஞ்சம் ப்ரிஜ்ஜ்ஜுல வச்சிக்கணும்”
வருஷக்கணக்காகச் சொல்லிக் கொடுத்தும் அரளியும் துளசியும் பார்வதி அம்மாவுக்கு வந்தபாடில்லை. எப்போதெல்லாம் பார்வதிக்கு எதிர்பார்த்தபடி பூக்கள் விற்கவில்லையோ, அப்போதெல்லாம் ரம்யா தான் ஆபத்பாந்தவி.
பூவை வாங்கி வைத்துவிட்டு, பார்வதியுடன் கீழே இறங்கினாள், தபால் பெட்டியை சோதிப்பதற்காக.
அப்போது வீட்டுக்கு வெளியே, வாசலில் ஒரு இசகு பிசகான பொந்தினுள் “மியாவ்” என்ற குரலைக் கேட்டதும் நின்றாள். மீண்டும் மீண்டும் அந்தக் குரல், பரிதாபமாக சுற்றி சுற்றி வந்தது பூனை.
நன்றாக இருட்டிவிட, தெரு விளக்கும் சதி செய்ய… கைபேசியிலுள்ள விளக்கை ஒளிரச் செய்து பார்த்தாள்.
பாவம், பூனைக்குட்டி மாட்டிக் கொண்டிருந்தது. திரும்ப மழை வருவதற்குள் வீட்டுக்குப் போகும் அவசரத்தில் பலரும் அந்த இடத்தைத் தாண்டிச் செல்ல, மகனுக்குப் போன் செய்தால், “ஸ்விட்ச் ஆஃப்” என்று சொன்னது.
மனம் பதைபதைக்க அடுத்து என்ன செய்ய என்று யோசித்தாள். வீட்டுக்குள் போய், ஒரு நீளமான கழி, டார்ச் லைட் என்று எல்லவற்றையும் எடுத்துக் கொண்டாள்.
“எதுக்கு ரம்யா இதெல்லாம்…? மழைல எங்க போற…?”
“இங்கே தான் அத்தை, கீழே… ஒரு பூனைக்குட்டி மாட்டிக்கிச்சு…”
“உனக்கெதுக்கு இந்த வேண்டாத வேலை, யாராவது பாத்தா தூக்கி விடப் போறாங்க. இருட்டுல போயி கண்ட இடத்துல ஏதாவது செஞ்சா, பூச்சி பொட்டு கடிக்க போகுது. மழை வேற பேஞ்சிருக்குது” என்ற கிருஷ்ணவேணியிடம் ஒரு சிரிப்பை மட்டுமே பதிலாகக் கொடுத்துவிட்டு, “தோ, வந்துடறேன்…” என்று போனாள்.
பூவை வைக்க வந்த பார்வதி அம்மாவும் சேர்ந்து கொள்ள, முக்கால் மணிநேரத்துக்கும் மேலாக இருட்டில் விடாமல் போராடி, அந்தக் குட்டியை மீட்டுக் கொடுத்ததும்…. தாய்ப்பூனை சுற்றி சுற்றி வந்தது. நாவால் நக்கிக் கொடுத்தது.
போரில் வெற்றி பெற்ற கணக்காய் மகிழ்ந்தனர் இருவரும். கிருஷ்ணவேணியின் மனதில், ”எவ்ளோ பிடிவாதம் இவளுக்கு…?” என்ற எண்ணம் ஓடுவது ரம்யாவுக்கு நன்றாகவே தெரிந்தது.
அப்போது வாசலில் ராகவனின் கார் வந்து நிற்க, அவர் யாரையோ மேலே அழைப்பதும், அவர்கள் மறுத்து விட்டு கிளம்ப முயல்வதும், இவர் மீண்டும் அழைப்பதுமாக இருப்பதை பால்கனியிலிருந்து பார்த்தாள் ரம்யா.
பின் மேலே வந்த ராகவனிடம், “என்னங்க….கீழே யாரு….?” என்றாள்.
“வரும்போது மழைல பள்ளம் மேடு தெரில, ஒரு இடத்துல கார் பள்ளத்துல மாட்டிடுச்சு”
“ஐய்யய்யோ ராகவா, உனக்கு ஏதாவது அடி பட்டுடுச்சாடா?” பதறிக் கொண்டு ஓடிவந்து மகனை தடவிப் பார்த்தார் கிருஷ்ணவேணி.
“இல்லம்மா… எனக்கு ஒண்ணும் ஆகல. ஆனா, கார் சக்கரத்தை மேல தூக்கி எடுக்கிறதுக்குள்ள பெரும் போராட்டமாயிடுச்சு. யாருமே சட்டை செய்யல, கார் சர்வீஸ் போன் கால் எதுவுமே போகல. இப்ப இருக்கிற சூழ்நிலைல நிறய பேர் சர்வீஸ் சென்டர்லயும் இல்ல…”
“அப்றம் என்ன ஆச்சு…?”
“யாரோ ரெண்டு பசங்க….ரொம்ப கஷ்டப்பட்டு…. அரை மணி நேரத்துக்கு மேல போராடி, சக்கரத்தை வெளியே கொண்டு வந்தாங்க…அவங்களும் இந்தப் பக்கம் போறதா சொன்னதால, நான் கார்ல கூட்டிட்டு வந்தேன்… டீ குடிச்சுட்டுப் போலாம்ன்னு மேலே வீட்டுக்கு வரச் சொன்னேன்… வேண்டாம்னு அவங்க அப்படியே கிளம்பிட்டாங்க….” என்று சொல்லவும், ரம்யா தன் அத்தையைப் பார்த்தாள்.
வெளியே பூனையின் “மியாவ்” என்ற குரல் கேட்டது.
(முற்றும்)
ரொம்ப நல்ல சிம்பிளான கதை. அழகா சொல்லி இருக்காங்க.
அருமையான கதை மாலா. உங்களுடைய எழுத்து நடை மிகவும் சுவாரசியமாக உள்ளது. கடைசியில் பூனையின் மியாவ் சத்த்துடன் முடித்தது அருமை. பலனை எதிர்பாராமல் பிறருக்கு உதவ வேண்டும் என்பதை கதை நங்கூரம் பாய்ந்தது போல் சொல்லி இருக்கிறது. வெற்றி பெற வாழ்த்துக்கள்.
Short story by Mala Ramesh has conveyed a deep meaning of life in elegant way.. Interesting background situation description with minute details make the reader to read completely to get the essence.. With wishes for many more such stories in Sahana mag. Vazhthukkal to Asiriyar
புண்ணிய கணக்கு பார்க்காமல் கருணை உள்ளத்துடன் செய்த செயலுக்கு இறைவன் இன்னோரு பக்கம் காட்டிய கருணை
Excellent story with a very good moral.. nicely written…
அருமையான படைப்பு மாலா. வெற்றி பெற வாழ்த்துக்கள்.
Very excellent and liked very much
அருமையான கதையின் வர்ணிப்பு. அந்த இடத்திற்கே நம்மை கொண்டு போய் சேர்த்து விட்டது. கதையின் காட்சிகள் நம் கண் முன்னே நிறுத்தி விட்டார் மாலா. மொத்தத்தில் Super Story