sahanamag.com
Short Story Contest 2021 Entries சிறுகதைகள்

வாதை (சிறுகதை) – ✍ Dr. இராஜேஷ் இராமசாமி, மலேசியா

இந்த போட்டிக்கான சிறப்புப் பரிசுகளை வழங்குபவர்கள், Madhura Boutique நிறுவனத்தார். அவர்களின் https://madhuraboutique.in/ என்ற தளத்திற்கு சென்று, உங்களுக்கோ அல்லது உங்களுக்கு வேண்டியவர்களுக்கு பரிசு தரவோ, தரமான புடவைகள், வெள்ளி நகைகள், ஜெர்மன் சில்வர் நகைகள் பெற்றுக் கொள்ளலாம்

சிறுகதைப் போட்டி 2021 (கதை எண் 63)

ணி பத்தரையை நெருங்கிக் கொண்டிருந்தது. மின் விளக்குகளின் தயவால் அதிதமாய் வெளிச்சமூட்டப்பட்ட கூடத்தில், இன்னும் எஞ்சியிருக்கும் கடைசி கிரியைகள் துரிதமாக நடந்துக் கொண்டிருந்தன.

எப்போதும் ஆட்கள் நிரம்பி, ஆரவாரமற்ற அழுகையொலிகளும் கேவல்களும் அருவமாய் நிறைந்திருக்கும் மின் சுடலை மயானத்தில், அலாதியான நிசப்தம் வெள்ளையடிக்கப்பட்ட வெற்றுச் சுவர்களில் முட்டி மோதி எதிரொலித்தது.

ஐந்தடி உயரத்திற்குத், தடிமனான வெள்ளைத் துணியால் இறுக கட்டி வைக்கபட்டிருந்த உடல், காற்று புகாத வண்ணம் நெகிழி பையினால் உறையிடப்பட்டு பொட்டலமாய் கிடத்தப்பட்டிருந்தது.

முழுகவச உடைகளில்,சவவூர்தி பணியாளர்கள், மலர் மாலைகளைச் சாற்றி, மதம் சார்ந்த குறைந்தபட்ச இறுதி மரியாதைகளைச் செலுத்திக் கொண்டிருந்தனர். அலுமினிய தகடுகளால் வேயப்பட்ட சவமேடையின் மீது விறைத்து, ஓரங்களில் நீரொழுகி உறைய வைத்திருக்கும் உடல், ஆணா பெண்ணா, இன்ன இனமா என அனுமானிக்க முடியாதிருந்தது.

பெயர் நீக்கி பிணமென அழைத்த பின், இவைகளின் பூர்வாசிரம பெயர்களை,  ஒட்டி வைத்திருக்கும்  பதிவு தாட்களின் வழியே தான் அடையாளம் காண முடியும்.

இன்றைக்கு இது எட்டாவது பிணம். காலையிலிருந்தே, சடலங்களைத் தொடர்ந்து எரித்து, வெந்த சாம்பலைத் துப்புரவாக அள்ளி, அஸ்தியைக் கோரியவர்களுக்கு ஆள்மாறிடாமல் அடையாளமிட்டு பிரித்து வைத்ததில், இடுப்பும் கால்களின் ஆடுதசைகளும் விண்ணென வலித்தன.

உரமான உடல்களை எரிப்பது எளிது.  சூடமேற்றி உள்ளே அனுப்பிய ஒரு மணி நேரத்தில் நெஞ்செலும்பும் முதுகெலும்பும் நீறு பூத்த சாம்பல் மலராய் விரிந்து, அள்ளுவதற்குத் தயாராகி விடும்.

மருந்தேற்றி தேறாமல் இறந்தவர்களையும், நாள்பட்ட படுக்கையில் காலாவதியானவர்களையும் மிச்சமில்லாமல் எரிக்க தான் மெனக்கெட வேண்டும். அதுவும், இந்த ஒரு வருடமாய் உள்ளே நுழைகிற உடல்கள் அத்தனையுமே, கொரோனா என்னும் கொள்ளை நோயால் பீடிக்கப்பட்டு, பொத்தல் விழுந்த நுரையீரலோடு குவியும் நோவுகண்ட உடல்கள்.

எந்த வேதனையில் உயிர்ப் பிரிந்ததோ, அதன் பிடிவாதம் நொய்மையாய் எரியும் உடலில் எதிரொலிக்கும். தண்டுவடமும் மார்புகூடும் முற்றாய் வெந்து விடுவதில்லை.

நீறாய் மாறாத பாகங்களுக்கு மீண்டும் நெருப்பைப் பீய்ச்சியடித்து பஸ்பமாக்கி தான் சாம்பலை அள்ளித் தர வேண்டியுள்ளது. ஏழு பிணங்களை எரித்த களைப்போடு, சகபணியாளார் சுந்தரம் கை நனைக்க சென்றிருந்தார்.

பசி வயிற்றைக் கிள்ளினாலும், சடலத்தை வெறுமனே கிடத்தி வைத்து, உந்தியில் எரியும் இன்னொரு அக்கினியை அணைக்க ஆசை வரவில்லை.

அந்தக் கடைசிப் பிணத்தில் பதிவு ஆவணங்களை ஏதேட்சையாக பார்க்கும் போது தான், ”திருமதி சங்கீதா, வயது முப்பது, மரணத்தின் காரணம் கோவிட்-19” என எழுதியிருந்தது.

இப்படி எப்போதாவது இளவயதினரின் துர்மரணங்களைக் கையாளும் போது, அன்னிச்சையாய் உள்ளுக்குள் ஒரு வாதை என்னையும் அறியாமல். அடிவயிற்றில் தொடங்கி மண்டையின் உச்சியைத் தொடும்

ஒரு வழியாக கடைசிப் பிணத்தைப் பக்குவமாக மின்சுடலையின் இரும்பு மேடையில் கிடத்தி, கடைசியாக இந்து முறைப்படி ஒரு பிடி சூடத்தை நெஞ்சு பகுதியில் பற்ற வைத்து, வழக்கம்போல ஒரு க்ஷணம் கண்களை மெல்ல மூடி பிரார்த்தித்துக் கொண்டேன்

என்றைக்கும் இல்லாது, மனதிற்குள் ஒரு சின்ன சலனம். யார் பெற்ற பிள்ளையோ, அனாதையாய்  எரிய வந்திருக்கிறதே என மனம் மருகும் போதே, தானாகவே எனது விரல்கள் பச்சை நிற விசையை அழுத்தியது.

இருப்புறமும் சரிந்து விழும் சாமந்தி மாலைகள் சற்றே குலுங்க, மின்சுடலையின் குடவறைக்குள், அருவியென பாயும் நெருப்புக் கோளத்திற்குள் நுழைந்தது பிணம். மின்சுடலையின் உட்கதவு, தானியங்கியாய் மூடி கொண்டது.

ஈரக்கைகளை நைந்த துண்டினால் துடைத்து கொண்டே வந்து சேர்ந்த சுந்தரம், “இதானே கடைசி?” என ஓப்புக்குக் கேட்டவாறு, வெந்துக் கொண்டிருக்கும் மின்சுடலையின் கதகதப்பின் அருகே நாற்காலியை இழுத்து போட்டு அமர்ந்தார்.

“இன்னும் ரெண்டு மணிநேரத்துல ஜோலி முடிஞ்சுடும். சாம்பலை இன்னைக்கே அள்ளி வச்சா தான், நாளைக்குப் பால் ஊத்த வர்றவங்களுக்கு எடுத்துக் கொடுக்க தோதா இருக்கும்” என்னையும் அறியாமல் களைப்பின் மிகுதியால் கொட்டாவி எழுந்தது.

சாளரங்கள் இல்லாமல், அதிதமாய் குளிரூட்டபட்ட அறையின் தட்பம், சிறுநடுக்கத்தை உண்டு பண்ணினாலும், மின்சுடலையின் அருகாமையின் நின்று கொண்டிருந்ததால், அலை அலையாய் ஊனிலும் கொழுப்பிலும் உருவாகும் இளம்வெம்மை, பத்தடி தூரத்தைச் சூடாக்கிக் கொண்டிருந்தது.

“தமிழாளா?” உள்ளே கனன்று எரியும் சிதையைக் கைகாட்டி கேட்டார்.

“ஆமாண்ண, முப்பது வயது பொண்ணு. பார்ம்ல உள்ள பேரையும் வயசையும் பார்த்து திக்குனு ஆயிடுச்சு எனக்கு” என்னைத் தொற்றிய சிறு அதிர்வு, சுந்தரத்தின் முகத்தில் தெரிகிறதா என துளாவினேன்.

சுந்திரத்தின் முகம் அலையடங்கிய ஆழ்கடலாய், சலனங்களின்றி துடைத்து விட்டார் போல் இருந்தது

குரலைச் சற்றுக் செருமிக் கொண்டே, “கொரோனாவுக்கு வயசும் இனமும் ஒரு கேடா? இத்தனை நாளு வயசாளிகள தான் நிறைய எரிச்சிருக்கோம். நம்ம கெரகம், இப்ப பூவும் பிஞ்சுமா வாழ வேண்டிய ஆட்களையும் எரிக்கனும்னு விதி எழுதியிருக்கு”

“செத்தாலும் நல்ல சாவா சாவனும்ண்ண. இப்படி அனாதையா ஒரு ஈம சடங்குக்கு கூட விதியத்து கொடம் உடைக்காம, கொள்ளி வைக்காம, கொண்டவன் கடைசியா மொகம் பார்க்காம, தனியாளா நெருப்புல ஏர்றது மகா கொடுமை”

மின்சுடலையின் குடவறைலிருந்து பல வகையான சத்தங்கள் சீறல்களாய் வெடிப்புகளாய் வெளியே கசிந்துக் கொண்டிருந்தன. மென்கொழுப்பு உருகி தகதகக்கும் அனல் கம்பிகளில் வழியும் போது, ‘ஸ்ஸ்ஸ்’ என சீறியெழும் ஒலியும், வெள்ளெலும்புகள் கரைந்து, கனத்த எலும்புகள் விடுபடும் ‘கடக் மொடக்’ஒலிகளும், கதம்பமாய் வேறொரு தாளலயத்தை உருவாக்கியிருந்தன.

“பர்னர் கதவ தொறந்து பாருங்கண்ண. இந்த கொரோனா பேஷண்டோட நெஞ்செலும்பும், இடுப்பெலும்பும் சடுதியா வேகறதே இல்லை. அத அலக்கையில குத்தி நெருப்புகிட்ட வைய்யுங்க”

செந்நிற தழல்களால் மெழுகிய அரக்குமாளிகை போன்று மின்சுடலையின் குடவறை ஒளிர்ந்துக் கொண்டிருந்து. உள்ளறையின் அதீத வெப்பத்தினாலும் உருகி வழியும் கொழுப்பினாலும், தீப்போறிகள் வெடித்து சிதறிக் கொண்டிருந்தன.

கெட்டியான சாக்குதுணியால் இரும்பு அலக்கையை லாவகமாய் பிடித்துக் கொண்டு வெந்துக் கொண்டிருக்கும் பாதி உடலை திரும்பும் போது, புற்றீசல் போல தீப்பொறிகள் உள்ளறையை நிறைத்தன

இந்த நேரத்தில், தோட்ட மாரியம்மன் கோவில் கார்த்திகை தீபத்திற்குச் சொக்கபணை எரிக்கும் போது, ஆயிரம் ஆயிரம் மின்மினி பூச்சிகளாய் பறக்கும் தீப்பொறிகளைக் கண்கொட்டாமல் பார்த்தது சுந்தரத்தின் ஞாபகத்திற்கு வந்து போனது.

மீண்டும் மின்சுடலையின் தானியங்கி கதவை மின்விசையினால் மூடி அருகில் வந்து அமர்ந்தார். மாமிசம் உருகும் நெடியும், தீய்ந்த வாசனையும் ஒன்று போல கலந்து, சுந்தரத்தின் உடலில் இருந்து தூக்கலாய் வீசியது.

கடையிலிருந்து வாங்கி வந்த இரவு நேரத்திற்கான உணவு பொட்டலத்தைக் கைத்தீண்டி உண்ண மனம் ஒப்பவில்லை. இத்தனை நாள் நூற்றுக்கணக்கான பிணங்களை எரித்த போது ஏற்படாத உணர்வுகளின் பந்து, நெஞ்சுக்குழியின் நடுவில் மாட்டிக் கொண்டு விழுங்கவும் முடியாமல் துப்பவும் இயலாமல் வேதனையை உண்டு பண்ணியது

மீண்டும் என்னையறியாமல், “முப்பதெல்லாம் ஒரு வயசா?”அறுந்த ஒலிநாடாவைப் போல், இந்த சொற்கள் மூளைக்குள் சுற்றிக் கொண்டிருந்தன.

வெளியே போக வகை தெரியாமல், கூண்டைப் பிராண்டிக் கொண்டிருக்கும் எலியைப் போல, உள்ளே குடைந்துக் கொண்டிருந்த அந்த சொற்கள், மனக் கதவுகளைத் தாண்டி நாவின் வழியாக, சிறு முனகலாய் கசிந்து, சுந்திரத்தின் காதுகளுக்கு எட்டியிருக்கும் போல

“சின்ன வயசோ பழுத்த கட்டையோ, காலன் வந்து கூப்பிட்டா நடையக் கட்ட வேண்டியது தானே”

“அதுக்கில்லைண்ண, முப்பது வயசு கட்டுக்கெழுத்தி பொண்ணு. கல்யாணம் காட்சியெல்லாம் ஆகி புள்ளங்களையும் பெத்திருக்கும். எப்படி அந்த பொண்ணால கழுத்து சொந்தத்தையும் வயித்து சொந்தத்தையும் அம்போன்னு விட்டு போக முடிஞ்சது? கடைசியா மூச்சு விட முடியாம, தரையில எறிஞ்ச மீனு மாதிரி வாயைப் பெரிசா தொறந்து காத்துக்கு அல்லாடறப்ப, பெத்த கொழந்தைங்க மொகம் நினைப்புல வந்திருக்காது? இப்படியா ஒரு பொம்பள,புருஷனும் கொழந்தைகளும் பக்கத்துல இல்லாம ஆவிய விடுவா? ச்சேய், எனக்கு நினைக்கவே கையும் காலும் உதறுதுண்ண”

சுந்தரம், சற்று தினுசாக தலையைக் கோணி என்னைப் பார்த்தார்.

“என்னமோ இப்ப தான் மொத மொதலா வயசு பொண்னு பொணத்த எரிக்கற மாதிரியில்ல பேசறே குமாரு? நாம்ம எரிக்காத பொணமா? கொற மாச கருவுலேர்ந்து, கர்ப்பிணி பொண்ணுங்க வரைக்கும், அத்தனையும் தில்லா நின்னு எரிச்சிரிக்கோம். பொணத்த எரிக்கறவன் மனசையும் எரிச்சி தான் நிம்மதியா வாழ முடியும்.

இல்லனா இந்த பொழைப்புல ஊனி நிக்க முடியுமா? பாதியா எரிஞ்ச பொணம் திங்கறப்ப மனசுகுள்ள வந்தா, கவளம் சோறு உள்ள போக முடியுமா? இன்னைக்கு ஏன் கொஞ்சம் ஓவரா உணர்ச்சிவசப்படுறே?” சுந்தரத்தின் அக்கறை தெரிந்தது அவரது பேச்சில்

“அதெல்லாம் ஒண்னுமில்லைண்ண, திடீர்ன்னு விட்டு போன ஒறவெல்லாம் ஞாபகத்துல வந்துடுச்சி. ஒத்த வயசு பொம்பள புள்ள பொணத்த பார்த்ததும், மனசு ஆடிப் போச்சு”

சுந்தரத்திற்கு எனது திடீர் மனகலக்கத்தின் பின்னணி புரிந்திருக்க வேண்டும், சற்று நேரம் கழித்து, “இன்னுமா உனக்கும் உந்தங்கச்சிக்கும் பேச்சு வார்த்தை இல்லை?”

எதுவும் பேசவொன்னாமல், மௌனமாய் கல்லாய் சமைந்திருந்தேன். விழிபடலங்களில் சிக்கிய சிறுதூசியாய் சுந்திரத்தின் கேள்வி மனதிற்குள் அழுத்தமான நிரடலையும் சொல்லவொன்னா வலியையும் உண்டுப் பண்ணியது

ஞாபக கிடங்கில் மறதியெனும் போர்வையில் மூடப்பட்டு, உறங்கி கொண்டிருக்கும் விஷயங்களுக்கு உயிர் கொடுக்க விரும்பவில்லை. ஏற்கனவே அலுப்புக்கு ஆளான உடலும் கனமான மனதும், காலியான வயிறும் என்னைச் சற்று நிலைக்குலைய வைத்திருந்தது

பேச்சின் போக்கை மாற்றும் வண்ணமாக, “ஆனா ஒன்னுண்ண, இந்த கொரோனால பல பேரு வேலைக்குச் சிங்கியடிச்சாலும், நம்ம காட்டுல அடைமழை தான் போங்க. வழக்கமா தர்ற சம்பளத்துக்கு மேல போட்டு தான் மேனஜ்மெண்டும் கொடுத்துக்கிட்டு வருது. இந்த வேலைக்கு நொழைஞ்ச பத்து வருஷத்துல, இப்ப தான் கொஞ்ச காசைப் பேங்குல போட்டு சேர்த்து வைச்சுருக்கேன்”

இது சுந்தரத்தை எங்கோ வன்மையாக அடித்திருக்க வேண்டும்

“காச வைச்சுகிட்டு என்னத்த பண்ண முடியுது இந்த போதாத காலத்துல? வெளியே எங்கேயாவது பயமில்லாம சுதந்திரமா போக முடியுதா? எங்க போனாலும் மூக்கையும் மூஞ்சையும் பாதி மூடிக்கிட்டு, முன்ன போற ஆளு தெரிஞ்சவரா அன்னியமான்னு கண்டுப்பிடிக்க முடியல. வெறும் வெந்த சோத்த தின்னுகிட்டு, ஊரு ஓலகம் என்னனு பார்க்காம கடிவாளம் கட்டுன குதிரையா பொழப்பு இங்க ஓடிகிட்டு இருக்குது”

சுந்தரத்திற்கு ஏனோ தமது இரு மகள்களின் பாசமுகங்கள் தொடர்ச்சியாய் வந்து போயின.  இரு பெண் பிள்ளைகளும் வெளிமாநில பல்கலைகழகத்தில் தங்கிப் படிப்பதால், கொரோனா இல்லிருப்பு காலத்தில், வீட்டிற்குத் திரும்ப முடியாமல் மாணவர் விடுதியிலே முடங்கி படிப்பைத் தொடருகிறார்கள். அவர்களை நேரில் காண முடியாத பிரிவுத் துயரம் சுந்தரத்தை வாட்டியதில் ஆச்சரியமில்லை.

“சதா நேரமும் அப்பா அப்பான்னு காலை சுத்தி வர்ற புள்ளைங்கள தூரமா படிக்க அனுப்பி, இப்ப ஆறு மாசமா நேர்ல பார்க்காம இருக்கேன். வீடியோ கோல்ல பேசிக்கிட்டாலும், நேர்ல பார்த்து விசாரிக்கற மாதிரி  வருமா? மாசத்துக்கு ஒரு வாட்டி வீட்டுக்கு வந்து, நல்லா தூங்கி, அவங்கம்மா கையால வாயிக்கு வக்கனையா சாப்பிட்டு, தம்பியோட வெளையாண்டுட்டு, வீடே களையா இருக்கும்.

எல்லாத்தையும் இந்த கொரோனா ஓரேடியா ஒழிச்சி மூலைக்கு ஒருத்தரா நிக்க வைச்சுருக்கு. காசு பணத்தை நிறைச்சி வைச்சா மட்டும் ஆச்சா? பெத்த புள்ளைங்க மொகத்தை ஒரு தடவை ஆசையா தடவி பார்க்க முடியுதா? இதெல்லாம் வாழ்க்கையோட சேர்த்தியா குமாரு?” சுந்தரம் நிற்பதாய் இல்லை.

“நாமளும் தான் இப்ப சரியாயிடும், ஒரு மாசத்துல எல்லாம் வழக்கத்துக்கு வந்துடும்னு நம்பிக்கையை ஏத்தி வைச்சுகிட்டு இருக்கோம். ஆனா, ஆறு மாசமா இங்க வர்ற பொணங்களோட கணக்கு தான் குறைஞ்சுதா? நாளுக்கு நாளு கேசு ஒசந்துகிட்டே போனா, பக்கத்துல இருக்குற மாநிலத்துக்குக் கூட இல்லை, மாவட்டதுக்குக் கூட போக முடியாது”

சுந்திரத்தின் பேச்சில் சூடு தெறித்தது, மின்சுடலையின் பழுத்த அனல் கம்பிகளின் வெம்மை அவரது முகத்திலும் அப்பட்டமாய் தெரிந்தது.

“அட விடுங்கண்ண, அதான் ஊசி வந்துடுச்சே. இனியெல்லாம் சரியாகிடும்”

பேச்சின் போக்கை மாற்ற நினைத்தேன். சுந்தரம் அதிலிருந்து விடுபடுவதாய் இல்லை.

“மனுசன் எயிட்சு வந்து கூட செத்துப் போலாம். ஆனா இந்த கொரோனாவுல உசுர விடவே கூடாது. எங்க எடத்துல போன மாசம் கோவிட்ன்னு ஒரு பெரியவர பக்கத்து ஆஸ்பிட்டல்ல சேர்த்தாங்க. கூட இருந்து பாத்துக்க, அட தினமும் போயி விசாரிக்க ஒரு ஆளை அண்ட விடல. போன்ல தான் பேஷண்ட் கூடவும் டாக்டர்கிட்டயும் பேச முடியும்.

அனுப்பி வைச்சு அஞ்சாவது நாளு உசிரும் போச்சு. உசுரோடு இழுத்துகிட்டு இருக்குறப்ப தான் பார்க்க யாருக்கும் விதியில்ல, ஆவி ஓய்ஞ்ச பிறகாவது கடேசியா ஒரு தடவை மொகங் காண முடிஞ்சதா? நேரா எரிக்குற எடதுக்கு வந்துருங்கன்னு சொல்லி போனை வச்சுட்டாங்களாம்.

அதுவும் செத்தவங்களோட நெருங்கிய சொந்தம், மூனு பேருக்கு மேல எட்டி நின்னு பார்க்க அனுமதியில்ல. இங்க தானே அந்த பெரியவரைக் கொண்டு வந்து எரிச்சாங்க? பொட்டலமாய் கட்டி, எது தலைமாடு எது கால்மாடுன்னு புரியாம, பத்தடி விட்டு நின்னுதானே பெத்த புள்ளைங்களும் பொண்டாட்டியும் பார்த்துட்டு போனாங்க?

எங்கேயாவது மனசு விட்டு அழுது ஒப்பாரி வைச்சு துக்கத்த தீர்த்துக்க முடிஞ்சதா? வெள்ள வேட்டி மல்லு துணியில செத்தவரோட உள்ளங்கை ரேகையாவது மஞ்சள்ல பதிக்க முடிஞ்சதா?”

மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க சுந்தரம் மின்சுடலையே பார்த்துக் கொண்டிருந்தார். மின்சுடலையின் கருவறையின் உள்ளே நெஞ்செலும்பு வெந்து, அதன் மஜ்ஜைகள் பொங்கியுருகும் ஓலியை போல், சுந்தரத்தின் மூச்சு சீரற்ற ஒழுங்கில் பயணித்து என்னைத் திக்பிரமைக் கொள்ள வைத்தது.

நெகிழிக் குவளையில் மோந்து வந்த குளிர் நீரை அவருக்கு வழங்கினேன். சுந்தரம் ஒருவாறு தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டார்

பின் தழைந்த குரலில், “இங்கேர்ந்து பத்தடி தூரம் தான், புருஷனோட பொணம் மல்லாத்தி கிடக்கு. அந்தம்மா கிட்டக்க வந்து ஒரேதடவை மொகத்த பார்க்க முடிஞ்சதா? இத்தனைக்கும், அந்த பெரியவரு கூட நாப்பது வருஷம் வாழ்ந்த பழுத்த மனுஷி. மாலைய மாத்தி, போய்ட்டு வாங்கனு ஒத்த வார்த்த சொல்ல முடிஞ்சதா?

நோய் தொத்திக்கும்னு யாரையும் அண்டவிடாமா ஓரமா நிக்கவைச்சு, சாவுச்சடங்கு ஏதுவும் முழுசா செய்ய வக்கத்து, பரதேசியா போறதுக்குப் பேரு தான் சாவா? இப்படி ஒரு சாவு நம்ம ஜென்ம எதிரிக்கும் கூட வரக் கூடாதுப்பா” மின்சுடலையின் உள்ளறையில் சத்தம் முழுவதாய் ஓய்ந்திருந்தது, சுந்தரத்தைப் போல்.

“வாழற வாழ்க்கை எப்ப வேணுமானாலும் ஒரு கைப்பிடி சாம்பலா ஆயிடலாம் குமாரு. இந்த ஆட்டத்தை தானே நீயும் நானும், அரிசந்திரன் மகராசா மாதிரி, சாட்சியா பார்த்து கிட்டு நிக்கிறோம்? இன்னும் எதுக்கு வெட்டி வீராப்பு? ஊங்கூடவே இருந்து பார்த்த எனக்கு தெரியாதா உன்னோட பாசமும் கோபமும்? மூட்டைக் கணக்கா பாசத்த உள்ள மறைச்சி வைச்சுகிட்டு, எதுக்கு வெறும் ஆணவத்துல ஆடுற?”

சுந்தரத்தின் அத்தனை பேச்சும் இதற்கு தானா? சன்னதம் வந்தது போல பேசியவரின் வார்த்தை பிரவாகத்திற்குள் தொக்கி நிற்கும் விஷயம், என்னையல்லவா சாடுகிறது?

என்னால் எந்த உணர்வுகளையும் காட்டிக் கொள்ள முடியவில்லை. உடம்பிலும் மனதிலும் அதற்கான சக்தி வடிந்து போயிருந்தது. எந்தவோரு சொற்களுமின்றி நீறாய் அரும்பியிருந்த சாம்பல் குவியல்களை அள்ளி ஒரு பாத்திரத்தில் கொட்டினோம்.

எங்களுக்குள் நிலவும் அடர்த்தியான பேச்சின்மையின் கனம், சூழ்நிலையின் இறுக்கத்தை மேலும் கூட்டியது. இதிலிருந்து வெளியேறினால் மட்டுமே எம்மால் சுவாசிக்க முடியும் எனும் நிலைக்குத் தள்ளப்பட்டேன்.

அவசரமாய் பணியிட வேலைகளை முடித்துக் கொண்டு வீட்டிற்குச் சென்று உச்சந்தலை சிலிர்க்கும்படியாக ஊற்றிக் கொண்டேன். உள்ளே, மின்சுடலையின் வெப்பத்தைப் போன்று உளைந்துக் கொண்டிருக்கும் மனவெம்மை, குளிர்ந்த நீர்ப்பட்டதும் மெது மெதுவாய் அடங்க தொடங்கியது.

மனவெம்மை அகன்ற வேளை, காலி வயிற்றுக்குள் ஜடாராக்கினி மேலெழ, பசிக் கொவ்வி கொண்டது. அந்த அகால வேளையில் எதையோ வயிற்றுக்குள் திணித்து கொண்டு கட்டிலில் விழுந்தேன். மனையாளின் ஆழ்ந்த உறக்கம், சீராக ஏறியிறங்கும் மார்புகூட்டின் வழியே தெரிந்தது.

கண்ணிமைகளை அழுத்தமாக மூடி, தூக்கத்தை வலுக்கட்டாயமாக வரவழைக்க முயன்றேன். எப்போதும் படுக்கையில் விழுந்ததும், நினைவழிந்து ஆழ்துயிலுக்குச் செல்லும் எனது பிரக்ஞை, இன்று விழித்துக் கொண்டு அடம் பண்ணியது.

மீண்டும் மீண்டும், இறுதியாய் எரித்து முடித்த அந்த முப்பது வயது மாதுவின் உறையிடப்பட்ட உருவம் தான் நினைவின் செல்களிலிருந்து எழுந்து வந்தது. அதைக் காட்டிலும், அந்த இறந்த பெண்மணியின் பெயர் தான் எம்மை இன்னும் கலங்கடித்துக் கொண்டிருக்கிறது.

இறப்பு பதிவு பாரத்தில் முதல் வரியில் அந்த பெண்மணியின் பெயர் தெள்ளத் தெளிவாக தட்டச்சு செய்யப்பட்டிருந்தாலும், அதனை இன்னும் கூர்ந்துப் படிப்பதைத் தவிர்த்தேன்.

அந்த பெயர் சட்டென நினைவுகளின் பிடியிலிருந்து விடுதலை பெற எத்தனித்தாலும், பிரயத்தனப்பட்டு அதிலிருந்து விடுவித்து கொண்டேன், ஆங்கிலத்தில் அழகாக நேர்க்கோட்டில் எழுதப்பட்ட பெயர்,‘திருமதி சங்கீதா’.

சங்கீதா… மனதிற்குள் அந்த பெயரை மீண்டும் உச்சரித்துக் கொண்டேன். இத்தனை நாள் அடைக்காக்கும் கோழியாய் இதயத்தின் வெளிச்சம் படாத இருண்ட மூலைகளில் பொக்கிஷமென சேர்த்து வைத்த நினைவுகளை மீட்டெடுத்து பார்த்தேன்.

“அப்படி ஊரு ஒலகத்துல இல்லாததையா செஞ்சுட்டா உங்க தங்கச்சி? மனசுக்கு புடிச்சவனோடு கை கோர்க்கறது இங்க ஒன்னும் கொலை குத்தமில்ல”

எனது மனைவியின் சாடலும், தங்கையின் அழுது வீங்கிய முகமும் இன்றைக்கும் போல் கண்முன்னே விரிகிறது. எதற்காக, நானும் அப்பாவும் சங்கீதா தேர்வு செய்த மாப்பிள்ளையை நிராகரித்தோம்?

இத்தனை நாள் ஒற்றை பெண்பிள்ளையென பொத்தி வளர்த்த பெண், பொசுக்கென்று மாப்பிள்ளைப் பையனோடு வரும் போது, எங்களது ஆணவம் வன்மையாக அடிப்பட்டதால் தானோ?

எங்கள் எதிர்ப்பையெல்லாம் மீறி காதல் கணவனைக் கைப்பிடித்தவளை, நாங்கள் கையுதறி ஒதுக்கி வைத்தோம். அப்பாவின் சாவுக்குக் கூட, இழவு வீட்டில் அவளை அண்டவிடாது, ‘பிணத்தைச் சுடுகாட்டில் பார்த்துக் கொள்’ என விரட்டிய அவலம், இந்த அகால வேளையில் உறுத்துகிறது.

இத்தனை அசூசையான உணர்ச்சிகளின் உள்ளடுக்குகளில் வேர்ப்போல் பற்றியிருக்கும் ஆழ்ந்த அன்பு அவ்வபோது தலையை நீட்டினாலும்,‘அண்ணனை மீறி போய்ட்டால்ல’ எனும் ஒரே காரணத்தால், அந்த அன்பு வலுக்கட்டாயமாய் மறுக்கப்பட்டதே தவிர நசுக்கப்படவில்லை.

கொரோனாவில் மாண்டு விழுந்தால், கொள்ளி வைக்க மகன் வருவானா? தலைமாட்டில் கட்டிக் கொண்டு அழ அருமையாய் பெற்ற மகள்கள் வருவார்களா?

மீண்டும் மீண்டும் வெள்ளை துணியாலும், நெகிழிபையினாலும் உறையிலிடப்பட்ட அந்த பெண்ணின் உருவமே கண்முன் நின்றது. நாளை பொழுதில் உயிரோடு வி̀ழிக்க விதியிருந்தால், சங்கீதாவோடு பேசி விட வேண்டும் எனும் வைராக்கியத்தோடு கண்களை இறுக மூடிக் கொண்டேன்

‘சஹானா’ இணைய இதழின் ‘சிறுகதை விமர்சனப் போட்டி’ யில் கலந்து கொண்டு பரிசு வெல்லும் வாய்ப்பு. போட்டி விவரங்கள் அறிய, இங்கு கிளிக் செய்யுங்கள்

(முற்றும்)

#ads – Deals in Amazon👇

#ads தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇

      

        

‘சஹானா’ சிறுகதைப் போட்டியில் பங்குபெறும் மற்ற கதைகளை வாசிக்க இணைப்பு இதோ – https://sahanamag.com/short-story-contest-2021-entries/

Similar Posts

2 thoughts on “வாதை (சிறுகதை) – ✍ Dr. இராஜேஷ் இராமசாமி, மலேசியா
  1. வாகை சிறுகதை இன்றைய எதார்த்த வாழ்வின் பிரதிபலிப்பு . எழுதியவர் டாக்டர் என்பதால் விவராமாக எழுதியிருக்கிறார் . நிலையில்லா இல்வாழ்க்கையில் எதுவுமே தப்பில்லை என்ற நிலைப்பாட்டை நன்றாக சொல்லி யிருக்கிறார் . அன்பு ஒன்று தான் உலகை ஆளும் என்ற கருத்தை தெளிவாக கூறியுள்ளார். அது தான் உண்மையும் கூட . இந்த உலகத்தில் சரி , தப்பு என்று எதுவும் இல்லை . அவரவர் பார்வையை , சூழ்நிலையை பொறுத்தது . வாழ்த்துக்கள் நண்பரே .

  2. வாகை சிறுகதை இன்றைய எதார்த்த வாழ்வின் பிரதிபலிப்பு . எழுதியவர் டாக்டர் என்பதால் விவராமாக எழுதியிருக்கிறார் . நிலையில்லா இல்வாழ்க்கையில் எதுவுமே தப்பில்லை என்ற நிலைப்பாட்டை நன்றாக சொல்லி யிருக்கிறார் . அன்பு ஒன்று தான் உலகை ஆளும் என்ற கருத்தை தெளிவாக கூறியுள்ளார். அது தான் உண்மையும் கூட . இந்த உலகத்தில் சரி , தப்பு என்று எதுவும் இல்லை . அவரவர் பார்வையை , சூழ்நிலையை பொறுத்தது . வாழ்த்துக்கள் நண்பரே .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!