2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
பகுதி 1 பகுதி 2 பகுதி 3 பகுதி 4 பகுதி 5 பகுதி 6 பகுதி 7 பகுதி 8
பரீட்சைகளும் தொடங்கி விட்டன. தர்ஷணா சீரியசாகப் படித்தாளா இல்லையா என்றே தெரியவில்லை, ஆனால் விக்னேஷ் கண்ணும் கருத்துமாகப் படித்தான். இரவு ஏழு மணியோடு ஆட்டோ ஓட்டுவதை நிறுத்தி விட்டான். அதற்கு மேல் உட்கார்ந்து இரவு இரண்டு மணி வரை படிப்பான். காலை எட்டு மணிக்கு எழுந்து குளித்து, காலை உணவை அவசரமாக முடித்துக் கொண்டு எட்டரை மணிக்கெல்லாம் ஆட்டோ எடுத்துக் கொண்டு கிளம்பி விடுவான்.
பரீட்சை முடிந்து ரிசல்ட் வரும் நாளும் நெருங்கி விட்டது. “ஏய் தர்ஷணா, இந்த மாமாவைப் பார். இரவு இரண்டு மணி வரை படித்தேன், கட்டாயம் பஸ்ட் கிளாஸ் தான். நீ பத்து மணியோடு தூங்கு மூஞ்சியாகப் போய் படுத்து விட்டாயே. ஸ்டேட் பர்ஸ்ட் வரவில்லை என்றால் என்ன செய்வாய் ?” என்றான் விக்னேஷ்.
“என்ன செய்வது? வீட்டில் தான் நீங்கள் ஒரு மாப்பிள்ளைத் தயாராக இருக்கிறீர்களே, செலவில்லாமல் உங்களைக் கல்யாணம் செய்து கொண்டு செட்டில் ஆகி விட வேண்டியது தான்” என்றாள் கண்களைச் சிமிட்டிக் கொண்டு. அத்தை, சியாமளா எல்லோரும் சிரித்து விட்டனர்.
“உன்னிடம் போய் வாய் கொடுத்தேனே, என் புத்தியைச் சொல்ல வேண்டும்” என்று தலையில் அடித்துக் கொண்டே வெளியில் சென்று விட்டான் .
ரிஸல்ட்டும் வந்தது. தர்ஷணா படித்த லட்சணத்திற்கு, குறைந்தபட்சம் பி.எஸ்.ஸி’ யில் சேருமளவு மதிப்பெண்கள் வாங்கினால் கூடப் போதும் என்று தான் நினைத்தாள் சியாமளா. ஆனால் மாநிலத்தில் முதல் மாணவியாகத் தேறியது மட்டுமின்றி, கடந்த நான்கு ஆண்டுகளில் முதல் மாணவர் வாங்கிய மதிப்பெண்களை விட அதிகமாக வாங்கியிருந்தாள். வழக்கம் போல் பள்ளியில் மீடியாக்கள் கூடி பேட்டி எடுத்தன. பத்திரிகைகளிலும், டி.வி.யிலும் வெளிவந்தன. மார்க்குகள் வந்ததும் மருத்துவக் கல்லூரிக்கும், உதவித் தொகைகளுக்கும் அப்ளை செய்து விட்டு காத்திருந்தாள்.
சி.எம். அலுவலகத்திலிருந்து பள்ளிக்கும் வீட்டிற்கும் ஒரே நேரத்தில் போன் வந்தது. தர்ஷணாவை அழைத்துக் கொண்டு நேரில் வரவேண்டும் என்று ஆணை. விக்னேஷ் சியாமளா இருவரும், தர்ஷணாவை அவள் மதிப்பெண் சான்றிதழ்களோட அழைத்துச் சென்றனர். முதல்வர் தர்ஷணாவைப் பார்த்தவுடனே சிரித்தார். அவள் கேட்டபடியே புல் ஸ்காலர்ஷிப்பிற்க ஏற்பாடு செய்திருப்பதாக்க் கூறினர். இதை தர்ஷணா தன்னை நிரூபித்ததற்காக்க் கொடுக்கப்பட்ட அன்பளிப்பு என்றார்.
“முதல் ஐந்தாண்டுகள் கிராமத்தில் போய் வேலை செய்ய வேண்டிய கட்டாயமில்லை, அந்த கண்டிஷனை அவளுடைய நேர்மைக்கே விடுகின்றேன். நீ என்ன சொல்கிறாய் தர்ஷணா?” என்று கேட்டார்.
“மருத்துவப்படிப்பு முடித்தவுடனே அரசு மருத்துவமனையில் வேலை கிடைத்தால் கட்டாயம் கிராமத்தில் ஐந்தாண்டுகள் பணியாற்றுவேன், இது சத்தியம். ஒரு முதலமைச்சராக இவ்வளவு பெரிய பதவியில் இருந்து கொண்டு நீங்கள் உங்கள் வாக்கைக் காப்பாற்றியிருக்கிறீர்கள். நான் ஒரு நல்ல சிட்டிசனாக என் வாக்கைக் காப்பாற்றுவேன்” என்று அவர் காலில் விழுந்து வணங்கி ஆசீர்வாதம் வாங்கிக் கொண்டாள் தர்ஷணா.
அவளுக்கென்று கொடுக்கப்பட்ட பேப்பர்களை வாங்கிக் கொண்டு வீடு திரும்பினர். வீடு திரும்பும் போது முதல்வர் அவளுக்கென்று ஒரு பெரிய பொக்கேவும், ஐஸ்க்ரீமும் கொடுத்தார்.
ஆட்டோவில் திரும்பும் போது தர்ஷணா, “என்ன மாமா காலேஜா மேரேஜா?” என்றாள் கிண்டலாக.
தலைக்கு மேல் இரு கைகளையும் தூக்கிக் கும்பிட்டு, “ஆளை விடு தாயே, நான் வேறு ஒருத்தர் பிராப்பர்ட்டி” என்றான்.
“அந்த பயம் இருக்கட்டும்” என்று சிரித்தாள் தர்ஷணா.
சியாமளாவோடு வேலை செய்யும் ஆசிரியர் ஆசிரியைகளும் தலைமை ஆசிரியரும் சேர்ந்து, தர்ஷணாவிற்கு ஒரு டீ பார்ட்டி வைத்தனர். பார்ட்டி முடியும் போது பரிசாக தர்ஷணாவிற்கு பத்தாயிரம் ரூபாய்க்கான செக்கும் கொடுத்தனர்.
“நீங்கள் இவ்வளவு தூரம் மரியாதை செய்ததே சந்தோஷம் ! செக் எல்லாம் வேண்டாமே?” என்றாள் சியாமளா. ஆனாலும் அவர்கள் விடாது தொந்தரவு செய்து தர்ஷணாவின் கையில் செக்கை ஒப்புவித்தனர்.
ஒரு வழியாக அதிக செலவில்லாமல் மருத்துவக் கல்லூரியில் அடியெடுத்து வைத்தாள் தர்ஷணா. விக்னேஷும் சட்டக்கல்லூரி தேர்வில் முதல் வகுப்பில் தேறினாலும், இவனை விட அதிக மதிப்பெண்கள் வாங்கியவர்கள் இன்னும் அதிகமானவர்கள் இருந்தாலும், அவனுக்கு எந்த வித சிபாரிசும் இல்லாததாலும், பிராக்டீஸ் செய்ய நல்ல ஸீனியர் லாயர் கிடைக்கவில்லை.
“முதல் வகுப்பில் பாஸ் செய்திருந்தாலும், இந்த வக்கீல் தொழிலில் முன்னேற முடியுமா என்று தெரியவில்லை. நான் ஆட்டோ ஓட்டி சம்பாதிப்பது கூட நிறைய ஜூனியர் வக்கீல்கள் சம்பாதிக்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன் சியாமளா” என்றான் விக்னேஷ்.
அன்று வெள்ளிக்கிழமை. கோயில்களில் எல்லாம் மிகவும் விசேஷ தினமாக இருந்தது. வத்சலாவும் கோயிலுக்கும் போய் விட்டு பிரசாத்த்துடன் வீட்டிற்கு வந்திருந்தாள். அப்போது பெரிய கார் ஒன்று அவர்கள் வீட்டு வாசலில் வந்து நின்றது.
வத்சலாவிற்கு அவர்கள் யாரென்றே தெரியவில்லை, “சியாமளா யாரோ வந்திருக்கிறார்கள், எனக்கு யாரென்று தெரியவில்லை” என்று உள்ளே பார்த்துக் குரல் கொடுத்தாள்.
தர்ஷணவும் சியாமளாவும் உள்ளேயிருந்து வந்தவர்கள், ஒருவரை ஒருவர் பார்த்து கேலியாக சிரித்துக் கொண்டார்கள்.
“வத்சலாக்கா, என் அம்மாவும் அப்பாவும் இறந்த அன்று காணாமல் போன மாமாவும் மாமியும் தான்” என்றாள் சியாமளா ரகசியமாய்.
வந்தவர்கள் டிரைவரைக் கூப்பிட்டு காரில் உள்ள பழம், பூ எல்லாவற்றையும் கொண்டு வந்து உள்ளே வைத்தார்கள். விக்னேஷும் அவன் அம்மாவும் பார்த்துக் கொண்டு அமைதியாகத்தான் இருந்தார்கள். சியாமளா உள்ளே போய் விட்டாள்.
விக்னேஷின் அம்மா தான், “நீங்கள் சியாமளாவின் மாமா மாமி இல்லையா? பார்த்து ரொம்ப நாளானதால் மறந்து விட்டது. வாருங்கள் உட்காருங்கள், பழம் பூ எல்லாம் எடுத்து வந்திருக்கிறீர்கள், ஏதாவது விசேஷமா?” என்றாள் விவரம் புரியாமல்.
“ஆமாம் நாங்கள் சியாமளாவின் மாமா மாமி தான். என் அக்காவிற்கு சியாமளாவை எங்கள் பிள்ளைக்குத் திருமணம் செய்து கொடுக்க வேண்டுமென்று ஆசை. இதோ… இவன் எங்கள் ஒரே மகன். ஏதோ அசம்பாவிதமாய் என் அக்காவும் அவள் கணவரும் விபத்தில் இறக்க சொத்துக்களெல்லாம் கடனில் போய் விட்டது. அதனால் சொந்த மாமாவும் மாமியுமே ஆதரவு கொடுக்க வில்லையென்றால் இந்தப் பெண்கள் போகும் என்ன ஆவார்கள் என்று யோசித்து, எங்கள் பிள்ளைக்குத் திருமணம் செய்து கொள்ளலாம் என்று வந்தோம்” என்று முடித்தார் சியாமளாவின் மாமா.
அவர்கள் பிள்ளை என்று காட்டப்பட்டவன், மீசையும் தாடியுமாக கன்னங்கரேலென்று நின்றிருந்தான். “சியாமளா ஏன் உள்ளே போய் விட்டாள்? அவளைக் கூப்பிடுங்கள்” என்றான் அவன்.
சியாமளா வெளியில் வந்தாள். “நீங்கள் கொஞ்சம் லேட்டாக வந்து விட்டீர்கள் மாமா. நாங்கள் மூவரும் அநாதையாக இங்கே வந்ததால் வெறும் சாப்பாடும் தங்க இடமும் மட்டும் கொடுத்தால் போதாதென்று என் அத்தை அவர் பிள்ளைக்கு, உறவினர் சிலபேர் முன்னிலையில் நிச்சயதார்த்தம் செய்து விட்டார். இவர் தான் என் அத்தை பிள்ளை விக்னேஷ்” என்று கூறி அவன் கைகளில் தன் கைகளைக் கோர்த்துக் கொண்டாள்.
“எங்களுக்கெல்லாம் எதுவுமே தெரியப்படுத்தவில்லையே?” என்றாள் இதுவரை அமைதியாக இருந்த அவர்கள் மாமி.
“நிச்சயத்திற்கு ரொம்ப முக்கியமானவர்களை மட்டும் தான் அழைத்தோம். கலயாணத்திற்கு கட்டாயம் அழைப்பிதழ் அனுப்பி விடுவோம்” என்றாள் சியாமளா நக்கலாக. வந்தவர்கள் பழம், பூ எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு கோபமாக வெளியேறி விட்டார்கள்.
“ஒரே கல்லில் இரண்டு மாங்காய் “ என்றாள் தர்ஷணா கை கொட்டிச் சிரித்துக் கொண்டே.
சியாமளா என்ன என்பது போல் அவளைப் பார்த்தான்.
“சம்பந்தமில்லாமல் ஏதோ பேசுகிறாள்” என்றாள் வத்சலா.
“அவள் ஒன்றும் சம்பந்தமில்லாமல் பேசவில்லை. பரிசம் போட வந்தவர்களையும் விரட்டி விட்டாள், நமக்கும் விஷயம் தெரிவித்து விட்டாள்” என்றாள் அத்தை சிரித்துக் கொண்டே.
“அப்படியா சியாமளா?” என்று ஆச்சர்யத்தில் அழகிய விழிகளை மேலும் அகலமாக விரித்தாள் வத்சலா.
“வத்சலாக்கா நீங்கள் ரொம்ப டியூப் லைட், அதனால்தான் மாமா உங்களை நன்றாக ஏமாற்றுகிறார்” என்றாள் தர்ஷணா.
சியாமளா அன்று பன்னிரண்டாம் வகுப்பில் பிஸிக்ஸ்… அதாவது இயல்பியல் பாடம் நடத்திக் கொண்டிருந்தாள். ஆர்க்கிமிடீஸ் தத்துவம் பற்றி விளக்கிக் கொண்டிருந்தாள். எல்லா மாணவிகளும் அக்கறையாகப் பாடம் கேட்டுக் கொண்டிருக்க கடைசி வரிசையில் இருந்த நான்கு மாணவிகள் மட்டும் ஏதோ தங்களுக்குள் முணுமுணுத்தவாறு சிரித்துக் கொண்டிருந்தனர்.
சியாமளாவிற்குக் கோபம் வந்து விட்டது. நான்கு மாணவிகளுமே நல்ல வசதியான வீட்டு மாணவிகள். தினம் ஒரு காரில் வந்து இறங்குவார்கள். அவர்களுக்கு வேண்டுமானால் இந்த படிப்பு தேவையற்ற ஒன்றாக இருக்கலாம், ஆனால் மற்ற மாணவ மாணவிகள்? இவர்களின் சிரிப்பும், பேச்சும் மற்றவர்களைத் தொல்லைபடுத்தும் அல்லவா? அவர்கள் நால்வரையும் அழைத்து ஒவ்வொருவரையும் தனித்தனியாக ஒவ்வொரு வரிசையில் அமர வைத்தாள்.
“நான் ஏற்கெனவே விளக்கிய ஆர்க்கிமிடீஸ் தத்துவத்தை உங்கள் நால்வருக்காக மீண்டும் நடத்துகிறேன். ஆனால் நாளை உங்களைக் கேள்விகள் கேட்கும் போது, சரியான விளக்கங்களோடு பதில் சொல்ல வேண்டும்” என்றாள் சியாமளா.
அதிலிருந்து கவனித்துப் படிக்க ஆரம்பித்தார்கள். அந்த நால்வரில் ஒரு பெண் திடீரென்று பள்ளிக்கு வரவில்லை, அவள் தந்தை பெரிய பிஸினஸ் மேன். திடீரென்று ஹார்ட்அட்டாக்கில் இறந்து விட்டார் பிஸினஸில் நிறைய நஷ்டம் என்று கூறினார்கள். வீடு தவிர மற்றதெல்லாம் கடனில் போய் விட்டது என்று வகுப்பில் மற்ற மாணவிகள் பேசிக் கொண்டனர். அந்தப் பெண்ணின் பெயர் கமலா.
“கமலா எப்போது பள்ளிக்கு வருவாள்?” என்று அவள் தோழிகளிடம் கேட்டாள் சியாமளா. ஒருவருக்கும் பதில் சொல்லத் தெரியவில்லை.
“நீங்கள் யாரும் அவளைப் போய்ப் பார்க்கவில்லையா?
“இல்லை”
“ஏன் உங்களுக்கு அவள் வீடு தெரியாதா? இதற்கு முன் போனதில்லையா?”
(தொடரும் – வெள்ளி தோறும்)
GIPHY App Key not set. Please check settings