sahanamag.com
Short Story Contest 2021 Entries சிறுகதைகள்

உடன்கட்டை❤ (சிறுகதை) – ✍ கீர்த்திகா துரைப்பாண்டியன், கோவில்பட்டி

இந்த போட்டிக்கான சிறப்புப் பரிசுகளை வழங்குபவர்கள், Madhura Boutique நிறுவனத்தார். அவர்களின் https://madhuraboutique.in/ என்ற தளத்திற்கு சென்று, உங்களுக்கோ அல்லது உங்களுக்கு வேண்டியவர்களுக்கு பரிசு தரவோ, தரமான புடவைகள், வெள்ளி நகைகள், ஜெர்மன் சில்வர் நகைகள் பெற்றுக் கொள்ளலாம்

சிறுகதைப் போட்டி 2021 (கதை எண் 19)

னது நெருங்கிய சொந்தம் ஒருவருக்கு உடல்நலம் சரியில்லை. அரசு மருத்துவமனையில் அனுமதித்து வாரம் இரண்டாகி விட்டது

எங்கு திரும்பினாலும் மருத்துவமனைக்கே உரிய வாடை, தரைக்கும் சுவருக்குமான இடுக்குகளில் பழுப்படைந்த கரை, தினமும் இரண்டு முறை சுத்தம் செய்தும் மங்கியே இருக்கின்ற மார்ஃபில் தரை, ஆங்காங்கே குப்பை போல் நோயாளிகளால் வீசி எறியப்பட்ட மறுந்து பஞ்சுகள் என, அரசு மருத்துவமனைக்குரிய அனைத்து அம்சங்களும் பொருந்தி இருந்தன.

நாங்கள் தங்கியிருந்த கட்டிடத்திற்கு வெளியே, பெரிய அரசமரம் ஒன்று குடை என பரந்து விரிந்து நின்றது. மருத்துவமனையின் வாசம் சகிக்க மாட்டாமல், அந்த மரத்தடியில் தான் உணவு உண்டோம்‌.

அப்போது தான் செல்வி அக்கா எனக்கு அறிமுகமானாள்‌. அவளுடைய கணவனின் உடல் நலக்குறைவால் அங்கே அனுமதித்திருந்தாள்.

எங்களுக்கு முன்னாலேயே அவள் அங்கே இருக்கிறாள் போலும். அவள் ஒருத்தியாய் தன் கணவனை கவனித்துக் கொண்டாள். அவளுடன் வேறு யாருமில்லை‌. நலம் விசாரிக்கக் கூட ஒரு சிலர்தான் வந்து போனார்கள்.

அவளுடைய கணவனுக்கு 31 அல்லது 32 வயது இருக்கலாம். அவளுக்கு இருபத்தி எட்டு வயது போன்ற தோற்றம். பிரமித்து பார்க்கும் அழகு இல்லை என்றாலும், மெல்லியதான அழகு செல்வி அக்காவுக்கு

ஒடிசலான தேகம், நீளமான கற்றையான கூந்தல், இரு புருவங்களும் ஒருசேரும் முடிச்சு, திருத்தமான சேலை மடிப்பு, வலது கைவிரலில் ஒரு மோதிரம், கழுத்தில் மஞ்சள் கயிற்றில் தொடுக்கப்பட்ட தாலி என திருத்தமாக இருந்தாள்.

காலில் கொலுசு இல்லை ஆனால் முன்னே போட்டிருந்தாள் என்பதற்கான அடையாளமாய் கணுக்கால் கறுத்திருந்தது.

எங்கள் அருகில் தான் உட்கார்ந்து சாப்பிடுவாள். முதல் இரண்டு நாட்கள் நானும் செல்வி அக்காவும் ஒன்றும் பேசிக் கொள்ளவில்லை. அடுத்த நாள் நானே பேச்சை ஆரம்பித்தேன்.

“எந்த ஊரு அக்கா உனக்கு?” என்றேன். பக்கத்தில் தான் ஏதோ ஒரு சிறு கிராமம் என்றாள். ஊர் பெயர் எனக்கு சரியாக நினைவில் இல்லை.

“ஏன் உடனிருந்து கவனிப்பார் இல்லை? இந்த வயதில் அவருக்கு உடலில் என்ன நலக்குறைவு?” இது போன்ற கேள்விகள் எனக்குள் எழுந்தன. ஆனால் கேட்கலாமா, வேண்டாமா என்ற தயக்கத்தில் சில வினாடி மௌனமாக இருந்தேன்.

இப்போது அவள் பேசினாள், “எம் பேரு செல்வி… செல்வலட்சுமி… அவர் என்ன செல்வா’னு தான் கூப்பிடுவாரு”. புன்னகை மாறாமல் சிறு பிள்ளைக்கே உரிய தொனியில் சொன்னாள்.

நானும் என்னை அறிமுகம் செய்துக் கொண்டேன். எவ்வித உறவு முறையும் இன்றி உறவினும் மேலாக உரிமை பாராட்டும் நபராக செல்வி அக்கா மாறிப் போனாள்.

அடுத்த இரண்டு வாரங்களில் மிகவும் அந்நியோந்யமாகிப் போனோம். முகவரி தொலைபேசி எண் எல்லாம் பகிர்ந்து கொண்டாள்.

அவள் சிறு கிராமத்தை சேர்ந்தவள் போலும். அங்குள்ள சுவாரஸ்யமான நிகழ்வுகளை பகிர்ந்து கொண்டாள். உணவுகளை பரிமாறி உண்டோம். என் அம்மாவின் மீன் குழம்புக்கு செல்வி அக்காவின் நாக்கு அடிமையாகிப் போனது.

அவளுடைய கணவனுக்கு இருதய அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பதாக கூறினாள் செல்வி அக்கா. இதை சொல்லும் போது மரத்தடியில் இருந்த மண்ணில் சுட்டு விரலால் ஏதோ கிறுக்கி கொண்டு சோகம் தாழ தலை கவிழ்ந்திருந்தாள்.

சொல்லி முடித்ததும் சோகம் கண்களில் திரவமாக உருவெடுத்து பார்வை பனித்து வடிந்து நின்றது. சட்டென எழுந்து அவ்விடத்தை விட்டு சென்று விட்டாள்.

மண்ணில் ‘ஜெகன்’ என்று எழுதியிருந்தாள். அவளுடைய கணவன் பெயராக இருக்கலாம் என யூகித்துக் கொண்டேன். அவளுடைய கனவனிடம் அவள் அதிக பிரியம் கொண்டிருந்தாள்

அன்று மாலை பொழுதில் ஊசி போட வந்த தலைமை செவிலியர், “யம்மா உன் வீட்டுக்காரனுக்கு இன்னும் ஒரு ரெண்டு நாளுக்குள்ள  ஆபரேஷன் பண்ணியாகணும். இல்லன்னா பிழைக்க மாட்டார்னு எத்தனை தடவை சொல்றது. இங்க வச்சு பாக்குற அளவுக்கு ஆபரேஷனுக்கு தேவையான எக்யூப்மன்ட் இல்லை. எங்கேயாவது தனியார் ஆஸ்பிட்டலுக்கு எடுத்துட்டு போயி செலவழிச்சு உன் வீட்டுக்காரன காப்பாத்து” என்றாள் கறாரான குரலில்

ஒன்றுக்கும் பதிலில்லாமல் அசைவற்ற பிணம் போல் நின்றிருந்தாள்

இப்போது அந்த செவிலி சற்று பரிதாபமான குரலில், “கூட யாரும் வரலையா?” எனக் கேட்டாள்

யாரும் இல்லை என்பது போன்ற முகபாவத்துடன் “இல்லை” என்று தலையசைத்தாள்

“இங்க வச்சு உன் வீட்டுக்காரனப் பார்த்துக்கலாம், ஆனா உயிருக்கு உத்தரவாதம் இல்ல” என்று மெதுவான குரலில் சொன்னவர் தொடர்ந்தார், “நான் சொல்ற இடத்துல போய் ஃபார்ம் வாங்கி ஃபில் பண்ணி குடு, நான் பேசிக்கிறேன்” என சொல்லி முடித்து அடுத்த நோயாளிக்கு அறிவுரை வழங்க கடந்து சென்றார்

அன்று மாலை மரத்தடியில் வழக்கம் போல செல்வி அக்காவிடம் பேச ஆரம்பித்தேன். எதற்கும் சரியான பதில் தரவில்லை. கவலை திட்டுக்கள் அவள் முகத்தில்  அப்பட்டமாக படிந்திருந்தது.

எப்படி தேற்றுவது எனத் தெரியாமல் வார்த்தைகளின்றி திகைத்துப் போய் நின்றேன்.

ஆதரவாக அவள் கைகளை அழுத்தி, “நீ எதுக்கும் கவலைப்படாதக்கா, எல்லாம் சரியாயிடும். நீ வேணும்னா பாரு, நல்லா சரியாகித்    தான் வரப் போறாரு. எதுவும் நினைச்சு மனச குழப்பிக்காத அக்கா” என்றேன்

உதட்டோரத்தில் அலட்சியமாக சிறு புன்னகையை உதிர்த்தாள். அந்த சிறு புன்னகையில் தான் எத்தனை அர்த்தங்கள்.

சில சமயங்களில் காலங்களும் சூழ்நிலைகளும் எவ்வளவு பெரிய சாமர்த்தியசாலிகளையும் கல்லெறியப்பட்ட குட்டையைப் போல கலங்கடித்து விடுகிறது.

அவளிடமிருந்த கவலை திட்டுக்கள் இப்போது என் முகத்திலும் படியத் தொடங்கியது. ஒரு சில நிமிடங்கள் மௌனமாக இருந்தோம். இருவருக்கிடையே மர இலைகளின் சல்லாபங்கள் தொனித்தது. அதை அவளேக் கலைத்தாள்.

“நானும் அவரும் ஒரே காலேஜ்ல தான் படிச்சோம். எங்க ஊரு ரொம்ப சின்னது தான், ஆனா எங்க குடும்பம் ரொம்ப பெருசு. நான் ஒரே பொண்ணு வேற, அதனால என்னை  ‌டவுனுக்கு படிக்க  அனுப்புனாக. படிக்க போன இடத்தில தான் இவரை பார்த்தேன். இல்ல, இல்ல அவர் தான் என்னை முதல்ல பார்த்தாரு.

‘ஜெயம்’ படத்துல வர்ற மாதிரி, பட்டணத்துக்காரக படிக்க வர்ற இடத்துல, நான் மட்டும் ஜல்ஜல்னு கொலுசு போட்டுட்டு போவேன். என் கொலுசு சத்தத்தைக் கேட்டு நான் காலேஜுக்கு உள்ளார  நுழையிறதுக்கு முன்னாடி இவர் வந்துடுவாரு. ஃபுட்பால் விளையாண்ட வியர்வையோடு வந்து நின்னு பாப்பாரு. என் ஓரக்கண்ணு பார்வைக்கு ஏங்கி போய் தவம் கிடப்பாரு” என்றாள்

இந்த நேரம் மட்டும் இத்தகைய சோகச்சூழல் இல்லாவிடில் “ஓஹோ ஆஹா” போட்டு குதூகலமாக இந்த காதல் கதையை ரசித்திருப்பேன். ஆனால் சோகச்சுவடுகள் இன்னும் எங்கள் இருவர் உள்ளத்திலும் கனத்துக் கொண்டுதான் இருந்தது.

தொடர்ந்து பேசினாள், “ஆனா நான் கண்டுக்க மாட்டேன். அவரன்னு இல்ல, யாரையும் நான் கண்டுகிட்டதே கிடையாது.  ஏன்னா காலேஜ்  உள்ள நுழையும் போதே வீட்டாளுங்களோட கண்டிப்பான குணம் கண் முன்னாடி வந்து போகும்.  அந்த பயத்தோடயே முத வருஷம் நல்லபடியா படிச்சு முடிச்சேன்.

ஆண்டு விழா வந்ததுச்சு. விளையாட்டு போட்டில நிறைய பரிசு வாங்கினாரு இவரு. அன்னைக்கு நான் சேலையில போயிருந்தேன். என்னைத் தாண்டி போகும் போது, ‘சேலைல நீ ரொம்ப அழகா இருக்க செல்வா’னு சொல்லிட்டு, வரவேற்புக்கு வச்சிருந்தா ரோஜா பூவூல ஒண்ணை  எடுத்து என் கைல திணிச்சுட்டு போயிட்டாரு.

ஒரு நிமிஷம் எனக்கு உடம்புல ஏதோ ஒரு நடுக்கமும், மனசுல பயமும் வந்து, என்னையே எனக்கு புதுசாக் காட்டுச்சு. சிரிக்கவா, அழவா, என்ன நடக்குதுனு சிந்திக்கவா, எதுவும் புரியாம திக்கிச்சு போயி நின்னேன்” என்றாள்

அந்தக் காட்சியை இப்போது கண்முன்னே கொண்டு வந்து சொன்னாள் போலும். செல்வி அக்காவின் கருவிழியின் முகப்பில் ஒளி தோன்றியது. 

“அவரு என் கையில தினுச்சுட்டுப் போன ரோஜாப் பூவை, வீட்டுக்கு வர்ற வரைக்கும் கையை திறந்து பார்க்கவே இல்லை. வீட்டுக்கு வந்து கைய திறந்துப் பாத்தேன். என் உள்ளங்கை வேர்வையில ரோஜாப்பூவோட வாசமே மாறியிருந்தது. அத புத்தகத்துக்குள்ள பத்திரப்படுத்தி வச்சேன்.

மறுநாள் காலேஜுக்கு போகும் போது ஆவலும், எதிர்பார்ப்பும், முதல் நாளிலிருந்த நடுக்கமும் என் கூடவே வந்துடுச்சு. காலேஜ் வாசல்ல வழக்கம் போல நின்னாரு. ஆனா என்ன ஆச்சரியம் வழக்கத்துக்கு மாறா வியர்வையே இல்லாம நின்னாரு. நான் எப்ப வருவேன்னு எதிர்பாத்துட்டு இருந்தாரு போல.

நான் வந்ததும் வண்டி மேல உட்கார்ந்து இருந்தவரு எழுந்து நின்னாரு. நான் என்ன பேசப் போறேன், எப்படி பாக்க போறேன், சிரிப்பேனா மாட்டேனா, இப்படி ஆயிரம் எதிர்பார்ப்போட நின்னாரு. ஆனா நான் அன்னைக்கி எதுவுமே வெளிக்காட்டிக்காம அமைதியாக நடந்து போனேன்.

நான் அவரை தாண்டி நடக்கும் போது,  அவரோட ஊசிப் பார்வை என் முதுக பதம் பார்த்துச்சு. அந்த நாள் முழுக்க ஆனந்தக் கூத்தாட்டம் தான். ரொம்ப சந்தோஷமா இருந்தேன். ஆக மொத்தத்தில் பாடத்த கவனிக்கல. மதியத்துக்கு மேல எங்க வகுப்புக்கு வந்தார். என்ன சொல்றதுக்காக வந்திருக்கிறார்னு ஆவலோடு நிமிர்ந்து உக்காந்தேன்.

அப்ப எங்க வகுப்புல இருந்த ஆசிரியர்கிட்ட ஏதோ சொல்லி ஒரு கையெழுத்து வாங்கிட்டு போய்ட்டாரு. நான் பெருமூச்சு விட்டு கள்ளத்தனமா சிரிச்சுகிட்டேன்.

காலேஜ் முடிஞ்சு வீட்டுக்கு போகும் போது அவரைத் தான் என் கண்ணு தேடுச்சு. கிரவுண்ட்ல ஃபுட்பால் ஆடிக்கிட்டு இருந்தாரு. எனக்கு அவரோட கூர்மையான பார்வையும் , தைரியமா அழகா என்கிட்ட பேசின பேச்சும் ரொம்ப புடிச்சு போச்சு.

வீட்டுக்கு வந்து எந்த வேலையும் சரியா செய்யல. விளக்கேத்தல, வாசல் தெளிச்சு கோலம் போடல. பித்து பிடிச்ச மாதிரி அடுத்த ரெண்டு நாள் முழுக்க திரிஞ்சேன். திங்ககிழமை வந்தது தான் தாமதம். அதுக்காகவே காத்துகிட்டு இருந்த மாதிரி சீக்கிரம் காலேஜுக்கு கிளம்பி போனேன்.

வகுப்புக்கு வெளிய நின்னுட்டு இருந்தேன்.  அவர் வந்தாரு, என் கண்ண பாக்காம சுத்தி சுத்தி பார்த்துட்டே பேசுனாரு. ‘செல்வா நான் ஏதாவது தப்பா சொல்லி இருந்தா மன்னிச்சுக்கோனு’ ஆரம்பிச்சார்

இடது பக்கமும் வலது பக்கமும் ‘இல்லை’ என்பது போல தலையாட்டுனேன். ஆனா அவரு என் முகத்தை பார்க்காம தான் பேசிகிட்டு இருந்தாரு.

‘நான் வந்து… திடீர்னு வந்து… உன்கிட்ட வந்து…… அப்படி பேசியிருக்க கூடாது தான். உன்ன பாத்ததுல இருந்து எனக்கு ரொம்ப பிடிச்சு போச்சு. நீ எனக்குன்னு தோணுது. அதுவும் இல்லாம அன்னைக்கு உன்ன சேலையில பார்த்ததுமே எதைப் பத்தியும் யோசிக்காமல் வந்து சொல்லிட்டேன். இதுக்கு முன்னாலே என்ன பார்த்திருக்கியானு கூட தெரியலை’ இப்படி என்னென்னெமோ உளறிக் கொட்டுனாரு.

ஏன் பாத்தது இல்ல… நான் தினமும் பார்த்து தான் இருக்கேன்னு சொல்லிட்டு சிரிச்சிட்டே வகுப்புக்குள்ள போய்ட்டேன். எனக்கு புடிச்ச Green Musk பெர்ஃப்யூம் போட்டிருந்தாரு. அந்த நேரம் அவ்ளோ அழகா இருந்துச்சு.

ஒன்றரை வருஷம் பழகுனோம். நாங்க ரெண்டு பேரும் வேற வேற சாதி,  வீட்ல ஒத்துக்க மாட்டாங்க தெரிஞ்சு, ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கிட்டு மாலையும் கழுத்துமாக எங்க வீட்டு வாசல்ல போய் நின்னோம்.

எங்கள ஏத்துக்கல. அவருக்கும் அம்மா அப்பா யாரும் கிடையாது. ரெண்டு பேருமா சேர்ந்து வாழ்க்கை ஆரம்பிச்சோம். இன்ன வரைக்கும் எங்க வீட்ல ஏத்துக்கல. இவருக்கு உடம்பு முடியலனு தெரிஞ்சும் கூட யாரும் பார்க்க வரல, தனிமரமா நிக்கிறேன். என் உசுரே அவரு தான். ஏதோ ஆறுதல் சொல்ல நீங்க நிக்கறீக. அதுவும் இல்லேன்னா நாதியத்த சிறுக்கி தான் நான்” என சிறு விசும்பலுடன் கூறி முடித்தாள்

“நாங்க எப்பவும் உன் கூட நிப்போம்க்கா, ஒட்டு உறவுன்னு சொல்லிக்கிட யாருமில்லனு நெனைக்காத. நாங்க இருக்கோம் உனக்கு, சொந்த பந்தமா. அப்பா, அம்மாவை நினைச்சு கவலைப்படாத. கோபம் தணிஞ்சதும் வந்து பேசுவாக” என்றேன் சமாதானமாக.

இதைத் தவிர சொல்வதற்கு வேறு ஆறுதல் வார்த்தை ஏதும் என்னிடம் இல்லை.

மறுநாள் காலையில் செல்வி அக்காவின் கணவனுக்கு அறுவை சிகிச்சை. பயரேகை அவளுள் படியத் தொடங்கி விட்டது. காலையில் எழுந்தாள். அறுவை சிகிச்சைக்கு பரபரப்பாக எல்லாவற்றையும் தயார்படுத்திக் கொண்டிருந்தாள்.

பாறையில் மோதி தெறிக்கும் அலை போல தடுமாறி அலை மோதினாள். நாங்களும் அவளுக்கு ஒத்தாசையாக நின்று அறுவை சிகிச்சை அறையில் அவர் அடைக்கப்படும் வரை அவளுடன் அலைந்து சோர்ந்தோம்.

தேனீர் தவிர வேறு எதுவும் செல்வி அக்கா உட்கொள்ளவில்லை. ஆதரவாக அவளருகிலேயே நின்றிருந்தேன். நாலு மணி நேர சிகிச்சைக்கு பிறகு அவளது கணவன் பழைய இடத்திற்கே கொண்டு வந்து போடப்பட்டார்.

இன்னும் சில நாட்கள் மிகவும் பத்திரமாக பார்த்து கொள்ளும்படி திரும்பத் திரும்ப அழுத்தமாகச் சொன்னார் மருத்துவர். இப்போது சிறிது தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டாள் செல்வியக்கா. மூன்று வாரங்கள் மிகக்கவனமாக பார்த்துக்கொண்டாள்.

ஒருகணம் கூட பிரியாமல், இரவிலும் கண்ணயராமல் அவரை கவனித்துக் கொண்டாள். மறுநாள் காலையில் அந்த வியப்பு காத்திருந்தது, அவளுக்கு மட்டுமல்ல எங்களுக்கும் தான்.

செல்வி அக்காவின் வீட்டாள்கள் வந்து நின்றனர். வெள்ளை வேட்டிச் சட்டையும், திடகாத்திரமான தோற்றமுமாக அவளுடைய அப்பா, சித்தப்பா, மாமன், அண்ணன்மார்கள் வந்திருந்தார்கள். முகத்தில் ஏற்பட்ட வியப்பைத் துடைத்துக் கொண்டு வெகுபிரியமாய் அவர்களை உபசரித்தாள்.

அவளுடைய அண்ணன் ஆதரவாக அவளுடைய தலையை வருடிக் கொடுத்தான். ஏதோ வெகுநேரம் பேசிக்கொண்டிருந்தாள். முதலில் அழுதாள், பின்பு உரிமையாகக் கோபம் கொண்டாள். பின்னர் அவர்கள் வந்ததினால் ஏற்பட்ட மகிழ்ச்சியை விவரித்தாள்.

அவர்களும் அவளுடைய கணவனின் உடல்நிலை பற்றி விசாரித்துக் கொண்டார்கள். சற்று நேரம் சென்ற பின் அவளுடைய சித்தப்பா அவளிடம், “செல்வி… நீ போமா, வீட்டுக்கு போய் குளிச்சிட்டு வேற சேலை உடுத்திட்டு மாப்பிள்ளைக்கு ஏதாவது சமைச்சு எடுத்துட்டு வா” என்றார்.

அவளும் அவர்கள் வந்தடைந்த திருப்தியில், “சரி சித்தப்பா நல்லா பாத்துக்கோங்க. நான் சீக்கிரமே வந்துறேன். ரெண்டு நாளா ரத்தமா வாந்தி எடுக்கிறாரு. ரொம்ப சீரியஸ்னு சொன்னாங்க. எதுவும் ஒன்னுனா அங்க இருக்குற நர்ஸ் அம்மாவ கூப்பிடுங்க, நான் சீக்கிரம் வந்திடறேன்”, என்று சொல்லி விட்டு விடைபெற்றாள் செல்வி அக்கா

எங்களை கடந்து செல்லும்போது பெரிதாகப் புன்னகை பூத்தாள். “என் வாழ்க்கையில இப்ப தான் எல்லாம் கைகூடி வருது. பெத்தவக வந்து சேர்ந்துட்டாக. அவருக்கும் நல்லபடி ஆபரேஷன் முடிஞ்சது. எப்படியும் தேறி வந்திடுவாரு” என மகிழ்ச்சி பொங்க சொல்லி விட்டு கடந்து சென்றாள்

அவள் சென்று அரை மணி நேரத்தில் அவளுடைய கணவன் ரத்த வாந்தி எடுத்தான். அவள் குடும்பத்தார் பதை பதைத்துப் போனார்கள். நான் விரைந்து சென்று செவிலியரை அழைத்து வந்தேன்

கையில் சில மருத்துவ உபகரணங்களுடன் ஓடி வந்து சிகிச்சை அளித்தார். இன்னும் இரண்டு செவிலியர்கள் இணைந்து கொண்டனர். தொடர்ந்து ரத்தமாக வாந்தி எடுத்தான். இப்போது நாசித் துவாரங்களிலிருந்தும்,  செவிகளிலிருந்தும் கூட ரத்தம் சொட்டத் தொடங்கியது.

இதற்கு மேல் சிகிச்சை அளிப்பதில் பயனில்லை என்று உணர்ந்து கொண்ட செவிலியர், குடும்பத்தாரில் ஒருவரை தனியே அழைத்து, “இனி பிழைக்க மாட்டார் அதிகபட்சம் இரண்டு மணி நேரம்தான் உயிரோடு இருப்பார்” என்று சொல்லி கடந்து சென்றார்.

அந்த இடம் மயான அமைதி அடைந்திருந்தது. அவளின் அப்பா அழுதே விட்டார். அவள் வந்து நிற்கும் போது என்ன பதில் சொல்ல என்பதறியாமல் அவளின் அண்ணன்மார்கள் வெளியே நின்று கொண்டிருந்தார்கள்.

அந்நிகழ்வைக் காண விரும்பாமல் நான் அவ்விடம் விட்டு நகர்ந்து நின்றேன். அடுத்த ஒரு மணி நேரத்தில் செல்வி அக்கா வந்து விட்டாள்.

வெளியே நின்றிருந்த அண்ணனிடம், “ஏன்ணே வெளியே நிற்கிற. உனக்கும் சேர்த்து சமைச்சு எடுத்துட்டு வந்தேன். அவரு என்ன பண்றாரு? உங்களலாம் கண்ண திறந்து பார்த்தாரா?” என கேட்டுக் கொண்டே உள்ளே நுழைய போனாள்

அவன் அவளை தடுத்தான்

“ஏன்ணே ஒரு மாதிரி இருக்க? என்னாச்சு?” என்றாள்

எதுவும் பேச வாய் திறந்தால் அழ நேரிடும் என்ற பயத்தில், அவன் வாய் திறவாமல் நின்றான்

ஏதோ விபரீதம் என்பதை புரிந்து கொண்டவளாய், “அவருக்கு எதுவும்….” இதற்கு மேல்  முடியாமல் விம்மி நின்றாள்.

இப்போது அவள் குடும்பத்தினர் அனைவரும் அவளை சூழ்ந்து நின்றனர். மறுமொழி இல்லாமல் தவித்துப் போய் நின்றார்கள்.

அப்போது ஒரு செவிலி அவசரமாக வெளியே வந்து, “யம்மா! உன் புருஷன் தானம்மா அது, அவரு செத்துப் போயிட்டாரு” என்றாள் இரக்கமற்ற உத்தியோகத் தோரணையில்

இதைக் கேட்ட மாத்திரத்தில் “என்ன….” என்ற பெரிதான அலறலுடன், கீழே விழுந்து அக்கணமே உயிர் நீத்தாள் செல்வி அக்கா

ஆம், அவள் உடன்கட்டை ஏறி விட்டாள். இராஜாராம் மோகன்ராயால் கூட, இந்த உடன்கட்டையை தடுத்திருக்க முடியாது

‘சஹானா’ இணைய இதழின் ‘சிறுகதை விமர்சனப் போட்டி’ யில் கலந்து கொண்டு பரிசு வெல்லும் வாய்ப்பு. போட்டி விவரங்கள் அறிய, இங்கு கிளிக் செய்யுங்கள்

#ads – Amazon Deals 👇


 தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇

      

        

‘சஹானா’ இதழை Amazonல் வாசிக்க இணைப்பு இதோ 👇

              

          

 

 

சஹானா சிறுகதைப் போட்டி 2021ல் பங்குபெறும் மற்ற கதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

 

Similar Posts

error: Content is protected !!