sahanamag.com
சிறுகதைகள்

புதுச்சட்டை (சிறுகதை) – ✍சுதா.மு (முனைவர் பட்ட ஆய்வாளர்)

 

மாத போட்டிக்கான பதிவு (அக்டோபர் 2021)

குடிசைகள் நிரம்பிய அந்த ஊரில், அய்யனார் கோவில் தெரு வேப்பமரத்தின் குளிர்ச்சியும் தென்னை மரங்களின் கூட்டமும் எளிதில் எவர் மனதையும் கவர்ந்துவிடும்

ஊரின் கவர்ச்சி காண்போர் கண்களை நிறைத்தாலும், பசிபோக்க வயிறு நிறைந்தால் தானே உயிர் வாழ முடியும்

ஒவ்வொரு தெருவுக்கும் ஒரு சிறிய தீப்பெட்டி தொழிற்சாலையாவது இருந்தே தீர வேண்டும் என்பது நியதியோ என்னவோ, தெருவுக்கொன்று இருந்தே இருக்கின்றது.

கிராமப்புறங்களில் பள்ளிக்கூடம் இருக்க வேண்டுமென்பது கட்டாயமெனினும் மதுக்கடைகளுக்கும் குறைவில்லை. 

கார்த்திக் இரண்டாம் வகுப்பு படிக்கும் ஏழுவயது சிறுவன். வெளிர் நிற சட்டையும் ஒட்டுப் போட்ட டிரவுசரும் தான் அவனது உடை. 

அவனையொத்த பிள்ளைகளைப் போல சட்டையும் ஒட்டுப் போடாத  டிரவுசரும் அணிய வேண்டுமென்பது அவனது உச்சபட்ச ஆசை. 

தாயம்மாள் பெற்ற ஒரே செல்லப்பிள்ளை கார்த்திக். திருமணமாகி நான்கரை ஆண்டுகளுக்குப் பின் தாய்மை நிலையினை அடைந்தவள். 

தனது முப்பத்தேழு வயதிலேயே ஐம்பது வயது தோற்றம் பெற்றவள். வறுமையும், நிம்மதியின்மையுமே தோல் சுருக்கத்திற்கான காரணிகளாகப் பெற்றன. 

மதுக்கடையும் மரத்தடி நிழலுமே தாயம்மாள் மணாளனின் வாசஸ்தலங்கள். தாயம்மாள் சம்பாத்தியத்தின் முக்கால் பகுதியும் மதுக்கடையே குடித்து விடுகிறது. 

“ஒரே மகனின் ஆசையைக் கூட நிறைவேற்ற முடியாத பாவியாகிவிட்டேனே” என்று அடிக்கடி அங்கலாய்ந்து கொள்வாள். 

“அம்மா… இந்த தீபாவளிக்காவது எனக்கு புதுச்சட்டை வாங்கித் தருவியா” என்று கார்த்திக் கேட்டதன் விளைவாகத், தனக்குக் கிடைக்கும் சம்பளத்திலிருந்து முப்பது ரூபாய் வீதம் எடுத்து காய்ந்த இலைச்சருகுகளை வெளிப்பகுதியிலும், தாளில் பொதிந்த பணத்தை உட்புறமாகவும் வைத்து குடிசையின் கம்புகளுக்கிடையே சொருகி வைக்கிறாள்

பாத்திரங்களிலோ, துணிப்பெட்டியிலோ வைத்தால் சக்கையன் எடுத்துவிடுவான் என்பதாலேயே, இம்முறை புதிய முயற்சியில் இறங்கினாள். 

பள்ளி வளாகத்தின் முன் கார்த்திக் விளையாடிக் கொண்டிருக்கும் போது, ஆறாம் வகுப்பு படிக்கும் முருகன், தன் நண்பன் சீனிவாசனுடனான உரையாடலைக் கேட்டான். 

“சீசன் ஆரம்பிச்சிருச்சி பாத்தியாடா, மரத்துல காயெல்லாம் காய்க்கத் தொடங்கிருச்சி. இந்த வாட்டி நாம ரெண்டு பேரும் ஷேர் பண்ணிக்கலாம்டா” என்றான் முருகன். 

கார்த்திக்கிற்கு ஒன்றும் புரியவில்லை. இருப்பினும் ஏதோ விஷயம் இருக்கிறது என்பது மட்டும் புரிந்தது

தயக்கத்துடனேயே அவர்களிடம் சென்று, “அண்ணா…ஏதோ காய் சொன்னீங்களே, என்னது?” என்று கேட்டான். 

அதற்கு சீனிவாசன், “நீ சின்ன பையன்டா…உனக்கு ஒன்றும் புரியாது”. என்றான்.  

அப்போது முருகனின் மனதில் ஒரு எண்ணம் உதித்தது. சீனிவாசனைத் தனியே அழைத்துச் சென்று, “டேய்…சீனி இவனையும் நம்ம கூட சேத்துக்கலாம்டா. இவனும் மரத்துல ஏறுனா நிறைய காய் பறிப்பான். ஒரு கிலோவுக்கு முப்பத்து நாலு ரூபாய்னா, இவனுக்கு நாம கொஞ்சமா பணம் குடுத்தா போதும். சின்ன பையன் தானடா, கேள்வி கேட்க மாட்டான்” என்று ஆலோசனை கூறினான். 

 இருவரும் கார்த்திக்கையும் கூட்டு சேர்த்தனர்.

”ஏய் சின்ன பையா உன்னோட ஷேர் ரெண்டு கிலோவுக்கு பத்து ரூபாய் சரியா” என்றான் முருகன். 

கார்த்திக்கிற்கு மகிழ்ச்சியாக இருந்தது. அவனைப் பொறுத்தவரையில் பத்து ரூபாய் என்பதே பெரிய தொகை தான். 

“அண்ணே…எனக்கு ஒரு சட்டையும் டிரவுசரும் வாங்குற அளவுக்கு பணம் கெடச்சதுன்னா போதும்னே. எம்புட்டு மரம் வேண்லும் ஏறி காய் பறிக்குறேன்”. என்று ஆர்வம் பொங்க கூறிய சிறுவனைப் பார்த்து இருவரும் சிரித்தனர்

பெரிய அளவில் வசதி படைத்தவர்களாக இருப்பினும், பணமும் புகழும் எவ்வளவுதான் கிடைத்தாலும் போதும் என்ற திருப்தியடையாத மனம் படைத்தவர்கள் பெருமளவில் இருக்கத் தான் செய்கிறார்கள்

ஊரின் பிரசிடென்ட் குருசாமி தன் மச்சினன் கேசவனுக்காக அந்த ஊரிலேயே மிகப் பெரிய பட்டாசு தொழிற்சாலை கட்ட வேண்டுமெனத் தீர்மானித்தான். 

எந்த தொழில் மேற்கொள்வதாக இருந்தாலும், ஜாதகத்தை எடுத்துக் கொண்டு தனக்கு நேரம் எப்படியிருக்கிறது என்பதை அறிய கணிகனிடம் செல்வது  குருசாமியின் வழக்கம்

அப்படிப்பட்டவன் பெரிய தொழிற்சாலை தொடங்குவதற்கான திட்டம் தடையின்றி நடைபெற, பெரிய அளவில் சிந்தித்து தன் மச்சினனை அழைத்துக் கொண்டு, மாந்திரீகரிடம் சென்றான். 

மாந்திரீகர்கருக்குத் தேவை பணம். தனது தேவைக்காக எத்தனை உயிர்கறை வஞ்சிக்கவும் தயங்க மாட்டான் 

குருசாமியிடம் முன் பணமாக மூவாயிரம் ரூபாயினைப் பெற்றுக் கொண்டு, அமாவாசை தினத்தன்று சுடுகாட்டில் வைத்து  உச்சி பூஜை செய்ய வேண்டும். நரபலி கொடுக்க வேண்டும், அதிலும் தலைப்பிள்ளையை பலி கொடுத்தால் தடையின்றி தொழில் தொடங்கலாம் என்று கூறி விட்டான்

“உச்சி பூசைனா நடுச்சாமமா?” என குருசாமி கேட்க, பகல் நேரமாகக் கூட இருக்கலாம் நண்பகல்…அதிலொன்றும் தவறில்லை. ஆனால் வேறு யாரும் பார்த்திராதவாறு சம்பவம் நடைபெற வேண்டும்” எனக்  கூறினான் மந்திரவாதி 

யாரை பலி கொடுக்கலாம் என்று வெகுநேரம் யோசனை செய்து கொண்டிருந்த குருசாமிக்கு, மழைக்காலங்களில் தோன்றும் வானவில்லைப் போல சட்டென ஒரு எண்ணம் தோன்றியது

இடது கையால் மீசையை முறுக்கிக் கொண்டே,  “கேசவா… குடிகார சக்கையனுக்கு ஒரு மவன் இருக்கான்ல…” எனக் கேட்க

இவ்வாறு கேட்பதற்கான காரணத்தைப் புரிந்து கொண்ட கேசவன், “மச்சா சரியான ஆளத் தான் சொன்னீங்க. அவன் வெட்டிப்பய தான், குடிச்சு குடிச்சே குடல் வெந்து சாவப் போறான். மவன படிக்க வெச்சு என்ன செய்யப்  போறான். இவன் குடும்பத்துக்கு ஒன்னுனா எவன் கேக்கப் போறான். சக்கையன்கிட்ட நாசூக்கா பேசி நம்ம வழிக்குக் கொண்டு வந்துறலாம். அவன நான் பாத்துக்கறேன் மச்சா, நீங்க வெசனப்படாம போங்க…” என்றான் 

கார்த்திக் தன் அம்மாவிடம், புத்தகத்தினுள்ளிருந்து ஐம்பது ரூபாய் எடுத்து நீட்ட, திகைத்துப் போனாள் அம்மா 

அம்மாவின் முகபாவம் மாறும் முன்னமே, “அம்மா இது வேப்பங்காய் விற்று கிடைத்த பணம், இதோட நீ கொஞ்சம் காசு போட்டு எனக்கு சட்டை  வாங்கித் தாம்மா…” என பிள்ளை கேட்க

தாயம்மாளுக்கு என்ன சொல்வதென்றே தெரியாமல் வாயடைத்துப் போனவளாய், நீர் கசியும் கண்களோடு தன் மகனை மார்போடு கட்டியணைத்துக் கொண்டாள். 

பெரும்பாலான வசதிபடைத்தவர்கள் எவரும் தங்களை விட எல்லா விதத்திலும் வசதி குறைந்தவர்களைத் தங்களுக்குச் சமமாக அமருவதை விரும்ப மாட்டார்கள். குறிப்பாகக் கிராமப்புறங்களில் இது அதிகமாகக் காணப்படக் கூடியதே.

அதிலும் ஒரு [குடி]மகனை அவ்வாறு அமரச் செய்வதென்றால், அவனால் தனக்கு ஏதேனும் காரியம் ஆக வேண்டுமென்ற நோக்கத்தைத் தவிர  வேறென்னவாக இருக்க முடியும்

கேசவன் தன் கையிலிருக்கும் மதுக்குடுக்கையின் கழுத்தை ஒரே திருகாகத் திருகி ஒரு டம்ளரில் அரைக்கு அரை என்கிற அளவில் நீரிட்டு நிரவி சக்கையன் கையில் கொடுத்தான்

கண்ணை மூடிக் கொண்டு ஒரே வாயில் சரித்துவிட்டு இடத்கையால் வாயைத் துடைத்தபடி, “சேதி என்னனு சொல்லுங்கையா?” என்றான்

“உன் மவனால நமக்கொரு காரியம் ஆகணும்பா” என  கேசவன்  கூற

அடுத்த மிடறை வாயில் வைத்த சக்கையன், ஒரு நிமிடம் திகைத்துப் போனான். 

‘என் மவன் அவ்ளோ பெரிய ஆளாகிட்டானா என்ன?’ என்று மனதிற்குள் எண்ணிக் கொண்டான்

சுற்றும் முற்றும் கண்களால் வட்டமிட்ட கேசவன், சக்கையன் காதில் ரகசியமாக, “நீ பயப்படுற அளவு ஒண்ணுமில்லப்பா, ஒரு சின்ன காரியம் தான். ஒரு சின்ன பூசை முடிஞ்சதும் உன் மவன திருப்பியனுப்பிருவேன். நீ ஒன்னும் சும்மா அனுப்ப வேண்டாமடா, உன் கையில ரொக்க பணமா ஐயாயிரம் ரூபாய் தாரேன்” எனக் கூறினான்

 “ஐயா… இதுக்கு என் பொண்டாட்டி சம்மதிக்க மாட்டாளே” என சக்கையன் யோசனையாய் பார்க்க

“டேய் உன்ன சரிக்குச்சமமாக உக்கார வச்சு எதுக்கு பேசிக்கிட்டு இருக்கேனு நெனச்ச, உன் பொண்டாட்டிய சமாளிக்கறது உன் கையில் தான்டா இருக்கு” என்று குரலை சற்று உயர்த்தியும் தாழ்த்தியும் கூறிவிட்டு, சட்டைப் பையிலிருந்து நூறு ரூபாய் தாள் ஒன்றை எடுத்து சக்கையன் கையில் கொடுத்து விட்டுக் கிளம்பினான் கேசவன் 

கையிலிருந்த டம்ளரைக் கீழே வைத்து விட்டு, மதுக் குடுக்கையை எடுத்து மடக்கென்று வாயில் சரித்தான். 

நடையின் தடுமாற்றத்தில் நடப்பதற்கே திராணியற்றவனாக மரத்தடியில் சென்று விழுந்து கிடந்தான். போதை தெளிந்து அவனே வீடு சென்று சேர்ந்து விடுவான் என்பதால் எவரும் கண்டு கொள்ளவில்லை

சக்கையன் தன் மனைவி, மகனிடம் ஒருநாளும் அன்பாகப் பேசியதே இல்லை. முதல் முறையாக ‘தாயி’ என்று கரிசனமாக அழைத்தான்

அவனது பேச்சுக்கு இடம் கொடுக்காத தாயம்மாள்,“புள்ளைக்கு சட்ட வாங்கத்தான்யா என்கிட்ட காசு இருக்கு. ரொம்ப கஷ்டப்பட்டு சேத்து வச்ச காசுய்யா. இந்த வாட்டி நீ என்னய கொன்னுட்டு தான் பணத்த வாங்க முடியும். என் புள்ள ஆசப்பட்டு கேட்ட ஒரே விஷயம் இத்தான்யா. நாளைக்கு டவுன்ல போய் என் புள்ளைக்கு சட்ட வாங்கனும்யா. இந்த ஒருநாள் மட்டும் என்கிட்ட பணம் கேக்காதய்யா” என கதறினாள்

முகத்தில் எந்தவித சலனமுமின்றி பார்த்த சக்கையன், அமைதியாகப் படுத்து விட்டான்

மறுநாள் தாயம்மா டவுனுக்குக் கிளம்பியவுடன் தன் மகனிடம், “டேய் மவனே என் கூட ஒரு இடம் வரைக்கும் வருவியாடா?” என்று முதல் முறையாகக் கெஞ்சலான குரலில் கேட்டான்

அப்பாவின் கெஞ்சலான வார்த்தை, அவனை எந்தக் கேள்வியும் கேட்கவிடாமல் தடுத்தது. மறுக்க மனம் வராது, தந்தையுடன் சென்றான்

தாயம்மாள் பேருந்தில் ஏறியதிலிருந்தே அவள் மனது ஏதோ நடக்கக் கூடாதது நடப்பது போன்ற  உள்ளுணர்வினால் படபடவென அடித்துக் கொண்டது. 

மகனுக்கு புதுச்சட்டை வாங்கப் போகும் மகிழ்ச்சி ஒருபுறம் இருப்பினும், தன் மகனை வீட்டில் தனியாக விட்டுவிட்டு வந்திருப்பதை எண்ணி வருந்தினாள். அவளை 

அறியாமலேயே அவளது கை கால்கள் நடுங்கத் தொடங்கின

“அப்பா… சுடுகாட்டுப் பக்கம் எதுக்குப்பா போறோம்” என்று கேட்ட மகனிடம்

“ஒரு சின்ன பூசை இருக்குதுப்பா… முடிச்சிட்டு உடனே நாம திரும்பி வந்துரலாம்” எனக் கூறிய சக்கையனின் கையினை இறுகப் பற்றிக்  கொண்டு, நம்பிக்கை துளிர்விட நடக்கத் தொடங்கினான்  சிறுவன்

வழியிலேயே  சக்கையனை வழிமறித்து, கையிலிருந்த மதுபாட்டிலை அவன் கையில் கொடுத்து விட்டு, “இத குடிச்சிட்டு இங்கேயே இரு, நாங்க பூசை முடிச்சிட்டு வர்றதுக்கு அரைமணி நேரமாவது ஆகும்” எனக் கூறி கார்த்திக்கை உடனழைத்துப் போனான் கேசவன் 

தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை உணராத சிறுவன், பூசை சாமான்களையும், மண்டை ஓட்டையும் பார்த்து அதிர்ந்து போனான்

கையில் அரிவாளுடன் மிரளவைக்கும் தோற்றத்துடன் அமர்ந்திருக்கும் மந்திரவாதியைப் பார்த்தவுடன், “ஐயோ…எனக்கு பயமா இருக்கு, என்னிய எங்கப்பாகிட்ட கூட்டிட்டு போங்க. என்னிய விடுங்க… விடுங்க…” என்று கண்களில் தாரையாய் கண்ணீர் வடிய, உடல் நடுக்கத்தோடு கேசவனை ஏறெடுத்துப் பார்த்தான்

அவனது பிடியிலிருந்து தப்பிச் செல்ல முயன்ற சிறுவன், அடுத்த கணமே மந்திரவாதியின் பார்வைக்கு கட்டுப்பட்டு பார்வைக்கு கட்டுப்பட்டு கட்டளைகளுக்குச் செவிமடுத்தான்

மந்திரங்களை ஓதிக்கொண்டே பூசைகளை செய்து கொண்டிருந்தான் மந்திரவாதி. மந்திரவாதியின் கண்கள் கோழி முட்டையைப் போல  உருண்டு விரிந்தன

அவனது பற்கள் மடித்து வைத்த நாக்கினைக் கடித்துக் கொண்டிருந்தன. உடலில் பேய் இறங்கியவன் போல உக்கிரமான தோற்றத்துடன், சிறுவனின் கழுத்துக்கு நேராக அரிவாள் வைத்திருந்த கையை ஓங்கினான்

வெளியில் எந்தவித சத்தமோ ஆரவாரமோ இன்றி, சிறுவனின் தலை துண்டிக்கப்பட்டது. மது மயக்கத்தில் வீழ்ந்து கிடந்த சக்கையனின் கையில், ஒப்பந்தப் பணம்  ஐயாயிரம் ரூபாயை வைத்து விட்டு, கேசவனும் உடனிருப்போரும் கிளம்பினர்

அதே நேரம், தன் மகனுக்குப் புதுச்சட்டை வாங்கிய மகிழ்ச்சியில் பேருந்தை விட்டு இறங்கினாள்  தாயம்மாள் 

‘சஹானா’ இணைய இதழின் ‘சிறுகதை விமர்சனப் போட்டி’ யில் கலந்து கொண்டு பரிசு வெல்லும் வாய்ப்பு. போட்டி விவரங்கள் அறிய, இங்கு கிளிக் செய்யுங்கள்

#ads – Amazon Deals 👇


 தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇

      

        

‘சஹானா’ இதழை Amazonல் வாசிக்க இணைப்பு இதோ 👇

              

          

  

                                      

Similar Posts

0 thoughts on “புதுச்சட்டை (சிறுகதை) – ✍சுதா.மு (முனைவர் பட்ட ஆய்வாளர்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!