in

சின்னராசு (சிறுகதை) – ✍ மா.மணிகண்டன், கோம்பை, தேனி மாவட்டம்

சின்னராசு

மாத போட்டிக்கான பதிவு (அக்டோபர் 2021)

விசில் ஊதும் சத்தம் கேட்டது, ஏழுபேரும் ஒரே வளத்தி, நல்ல கருப்பு நிறம்

முருகன் மணலில் ஆள்காட்டி விரலை வைத்து வட்டமாக வட்டத்தை வரைந்து, நடுவில் பெருக்கல் குறியீடு போட, ஏழு பெரும் வட்டத்தை சுற்றி நின்று இரண்டு கைகளை நீட்டி, ‘களத்தில் ஒற்றுமையாக நின்று ஜெயிக்க வேண்டும். ஊரின் மரியாதையும் நாங்கள் ஜெயிப்பதில் தான் இருக்கு’ என மனதுக்குள் நினைத்துக் கொண்டு, மண்ணைத் தொட்டு  தங்கள் இஷ்ட தெய்வத்தை வேண்டிக் கொண்டனர்

மதுரை, தேனி, இராமநாதபுரம் பகுதிகளில் அவ்வப்போது கபடி போட்டி நடக்கும்

மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் கம்பம் மெட்டு, போடி மெட்டு இரண்டிற்கும் நடுவில் அமைந்து இருக்கும் ஊர் தான் கோம்பை. வானம் பார்த்த பூமியான மண்ணில் துவரை, தக்காளி, சோளம், மொச்சை, தட்டான்பயிறு, நிலக்கடலை பயிரிடப்படுகிறது

லோயர் கேம்மில் இருந்து வரும் தண்ணீர், உத்தமபாளையம் ஆற்றில் கலந்து சென்று விடும். ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி மேல்நிலைப்பள்ளி, இரண்டு மாடிக் கட்டிடங்களைக் கொண்டு அழகாக காட்சியளித்தது

விளையாட்டு மைதானத்தில் வெள்ளை நிற முண்டா பனியன் காக்கி டவுசர் போட்டு மண்ணைத் தொட்டு கும்பிட்டு, “கபடி… கபடி…” என பாடி வந்தான் முருகன்.

அதே பள்ளியில் 12-ஆம் வகுப்பு ‘c’ பிரிவில் அறிவியல் பிரிவு  எடுத்து படிக்கிறான் முருகன். பள்ளிக்கு அருகில் இருக்கும் தனது மாடி வீட்டின் மேல் நின்று முருகனை பார்த்துக் கொண்டிருந்தாள் முத்துலெட்சுமி

குண்டான முகம், நடு உச்சி வகிடு எடுத்து சீவி இருக்க,நெற்றியில் சிவப்பு நிற பொட்டை வைத்திருந்தாள்

நேற்று வாங்கிய ஜிமிக்கி கம்மல் காதோரம் அசைத்து கொண்டிருக்க, கருத்த கருவிழிகளுக்கு கண் மையை பட்டையாக தீட்டியிருந்தாள்  

இவளும் முருகனும் ஒரே குரூப். இருவருக்கும் இரண்டு ஆண்டுகளாக தீராத காதல். மனிதர்களைச் சொல்லி குற்றமில்லை, பருவம் புதிய பாட்டை பாடத் தான் செய்யும்.

விசில் சத்தம் கேட்க,  ‘போனஸ் – 1’ என்ற குரல் கேட்டது

சால்னா ராஜா, மொக்கை ரீகன், சிலை ரங்கன், பெருமாள் சிலம்பரசன், மாரிமுத்து மற்றும் முருகனையும் சேர்த்து மொத்தம் ஏழு பேர், எதிரணியுடன் கோதாவில் இறங்கினார்கள் 

ஐந்து நிமிடம் கழித்து விசில் சத்தம் கேட்டது. அம்பயர் வலது கையை படுக்க வைத்து இடது கையைத் தூக்கிக் காட்டினார் 

கபடி பிட்சை சுற்றி இளைஞர்கள் கூட்டம் நின்றிருந்தது, இரண்டு டேபிள்கள் போடப்பட்டு இருந்தன

குடத்தில் இருந்த தண்ணீரை, “மடிக்கு மடிக்கென” குடித்தார்கள் விளையாட்டு வீரர்கள். கோலப் பொடியை எடுத்துக் கோடு போட்டார்கள், இரண்டு சிறுவர்கள் தரையில் தண்ணி தெளித்து முடிக்க, பாடிச் சென்றான் சிலம்பரசன் 

இரண்டு விரலை மடக்கி வைத்துக் கொண்டு விசில் அடித்தான் சின்னராசு. கூட்டத்தில் இருந்த அனைவரும் அவனையே பார்த்தார்கள்.

“சிலம்பு அண்ணே, பாயிண்ட்டோட வா..” என கூட்டத்தில் இருந்து சிலர் கத்த, நடுக்கோட்டைத் தாண்டி விழுந்தான் சிலம்பரசன்.  கண்டு எதிர்புறம் ஒரே சத்தம்

சின்னராசு  10ம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறான். அப்பா சிறு வயதிலே தவறி விட, தன் அம்மா மூக்கம்மாள் விளக்குமாரு கிழித்து அவனைப் படிக்க வைக்கிறாள். கபடி மீது தீராத ஆசை. முருகன் அண்ணனைப் போல பெரிய ஆளாக வரவேண்டுமென்று கனவு இருந்தது அவனுக்கு 

பலகைனால் செய்யப்பட்ட கரும்பலகையில் ‘முருகன் கபடிகுழு 10 பாயிண்ட், வேங்கை கருப்பு கபடி குழு 5 பாயிண்ட்’ என  எழுதப்பட்டு இருந்தது.

முருகன் ‘கபடி கபடி’ என பாடிக் கொண்டே போய், வேங்கை கருப்பு காலை பிடித்துவிட்டான்

“யாருகிட்ட…”

வேங்கை கருப்பு முன்னால் அமைச்சர் ராமசந்திரன் மகன், கட்சியை வைத்து சாதி அரசியல் பேசுவான். முருகன் மீது கடும் கோபத்தில் இருந்தான் வேங்கை கருப்பு 

அவன் ‘கபடி கபடி’ என வர, செயின் போட்டு அள்ளி வயற்றில் அமுக்கினான் முருகன். லாபி தாண்டி புழுதி பறக்க போய் விழுந்தான் வேங்கை கருப்பு 

இரண்டு பெரும் எதிர்த்து நிற்க, அம்பயர் பழனிவேல் விலக்கி விட்டார். 

“அண்ணே அப்படிப் போடு” என சத்தம் போட்டான் சின்னராசு. அவனுக்கு மனம் முழுக்க சந்தோசம்.

வேங்கை கருப்புடன் இருந்த வீரக்குமார், “கருப்பு இது பெரிய பிரச்சனையா வரும், வேணாம் விட்ரு” எனவும் 

“டேய் கேனே, பெரிய இவன் மாதிரி பேசுற. அவனை சும்மா விடக் கூடாது. பழிக்கு பழி வாங்குவேன் பாரு” என கறுவினான் வேங்கை கருப்பு 

முருகன் உயரத்திற்கு ஏற்ற எடை, கருத்த முகம். காலில் நரம்பு புடைத்துக் கொண்டிருக்க, நீல நிற பனியன் சிவப்பு டவுசர், வெள்ளை நிறத்தில் ‘நம்பர் 5 முருகன்’ என எழுதி இருந்தது

வேங்கை கருப்பு குட்டையாய் மாநிறதில் பரட்டைத் தலையுடன் இருந்தான். சிவப்பு பனியன், மஞ்சள் நிற டவுசர், ‘நம்பர் 12 வேங்கை கருப்பு’ என எழுதி இருந்தது.

தேனியில், அகில அளவில் கபடி போட்டிக்கு பரிசுத் தொகை அறிவித்து இருந்தார்கள். பெரிய கட் அவுட் விளம்பரம் 

முதல் பரிசு  – 20,000

இரண்டாம் பரிசு – 15,000

மூன்றாம் பரிசு – 10,000

தேனி பங்களா மேட்டைச் சுற்றி வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்த மைதானத்தைச் சுற்றி, சிறுவர்கள் முதல் வயதான கிழவன்கள் வரை கூட்டமாக குழுமியிருந்தனர் 

பெரிய கட் அவுட் நிறுத்தப்பட்டு இருந்தது. போட்டி தொடங்கும் முன், கபடி வீரர்களுக்குக் கை கொடுத்து விளையாட்டை ஆரம்பித்து வைத்தார் அமைச்சர்  

கோம்பை முருகன் கபடிக் குழுவும் வேங்கை கருப்பு கபடிக் குழுவும் மோதப் போகிறார்கள் என மைக்கில் ஒலிபரப்பப்பட்டது.

மொக்கை ரீகன் “கபடி கபடி” என பாடி வர

“வாடா வெண்ண இருக்கு உனக்கு” என போனசை தொட்டான் 

ரீகன் அம்பயர் வேங்கை கருப்புக்கு சாதகமாக, “போனஸ் இல்லை, நோ பாயிண்ட்” என விசில் அடித்தார்

“சார் கால் தடம் பாருங்க, விளையாட்ட விளையாட்டா விளையாட விடுங்க சார்” என முருகன் கூற 

“என் சாதிக்காரன எல்லாம் தோக்க வைக்க முடிவு பண்ணிட்டயோ, யாரு ஜெயிக்கறாங்கன்னு பார்க்கலாம் போ” என்றான் வேங்கை கருப்பு கோபமாய் 

“டேய் கருப்பு, இது விளையாட்டு. உன் சாதிவெறி பலிக்காது, விளையாட்டை நியாயமாக விளையாடனும்” என எச்சரித்தான் முருகன் 

சால்னா ராஜாவிற்கு சிள்ளி மூக்கு உடைந்து விளையாட முடியாமல் போக, யாரைச் சேர்க்கலாம் என தெரியாமல் விழித்தனர் 

“அண்ணே, நான் வாரேன், நல்லா விளையாடுவேன்” என்றான் சின்னராசு ஆர்வமாய். ஒருமனதாக முடிவு செய்யப்பட்டு, குழுவில் சேர்க்கப்பட்டான் சின்ராசு 

சின்னராசு, “கபடி கபடி” எனப் பாட, அனைவரும் அவனையே பார்த்தார்கள். ஏறுக்கோட்டை மிதித்து கார்னரில் இருக்கும் ஆளைப் பார்த்தான்.

“இறங்கி கொடு… ஏய்…” எனச் சத்தம் கேட்க, ஒரு காலை தூக்கி முகத்திற்கு நேராக ஏத்தினான்.

மூன்று பேரை தொட்டு நடுக்கோட்டை வந்தடைந்தான், தனது டவுசரை ஏத்திவிட்டு கால் தொடையில் தட்டினான்.

ஐந்து புள்ளிகள் வித்தியாசத்தில் முருகன் கபடி குழு ரூ. 20,000 பரிசை வென்றது.          

தூரத்திலிருந்து முருகனை காதலித்த முத்துலெட்சுமி, “நான் பெரியகுளம் அக்கா வீட்டுக்கு போயிட்டு வாரேன்” என தன் அம்மா நாகம்மாளிடம் கூறி விட்டு, முருகன் விளையாடுவதைப் பார்க்க தேனி வந்தாள்.

நிறைய நாளாக முருகனுக்கு கொடுக்க வேண்டுமென பாதுகாத்து வைத்த வாட்ச் அவளின் பையில் பத்திரமாய் இருந்தது 

“முருகா நில்லு” என்றவள் அழைக்க, திரும்பி பார்த்தான்

“என்ன புள்ள இங்க?” என்றான் 

“உனக்கு ஒண்ணு வாங்கியாந்தேன்” என புன்னகையுடன் அவள் கூற 

“என்னது?” என்றான் ஆர்வமாய் 

தன் பையிலிருந்து கை கடிகாரத்தை எடுத்து முருகன் கையில் கட்டியவள், “எப்படி இருக்கு?” எனக் கேட்டாள் 

ஒன்றும் பேசாமல் முருகன் சிரிக்க, தரையைப் பார்த்தாள் அவள் 

தன் விரலைக் கொண்டு முருகன் விரலைப் பிடித்தவள், படாரென்று சிரித்துக் கொண்டே ஓடி விட்டாள் முத்துலெட்சுமி

வெற்றிக் களிப்பில் எல்லோரும் சந்தோசமாக துள்ளிக் குதித்து நடக்க, மின் கம்பத்திலிருந்த வயர், நேராய் முருகன் மேல் விழ, அக்கணமே அவன் உடலில் தீ பற்றி எரிந்தது 

சின்னராசு ஓடிவந்து “அண்ணே என்னாச்சு அண்ணே… எழுந்திரி…” என கத்தினான் 

சிவப்பு விளக்கை அலற விட்டுக் கொண்டே அரசு மருத்துவமனைக்கு சென்றது ஆம்புலன்ஸ் 

கால்களில் இரத்தம் வழிந்தோட ஒரு சிறுமியை ஸ்ட்ரெச்சரில் வைத்து தள்ளிக் கொண்டு ஓடினார்கள். மருத்துவமனை முன் செருப்பு, மலை போல் குவிந்து கிடந்தது

மருத்துவமனைக்கு வெளியே மனைவியை பிரசவத்திற்காக அனுமதித்து விட்டு, தாடி வளர்த்துக் கொண்டு தன் மனைவியை ஜன்னல் வழியே எட்டி பார்த்துக் கொண்டிருந்தான் ஒரு கணவன் 

பேருந்தை விட்டிறங்கி, “சின்னவனே… சின்னவனே” என கதறியபடி முருகனின் தந்தை மாரிமுத்து முன்னே ஓடி வர, அவர் மனைவி மாரியம்மாள் நெஞ்சில் அடித்து அழுதபடி வந்தாள் 

முருகன் கபடி குழுவில் இருக்கும் அனைவரும் மருத்துவமனைக்கு வர, அனைவரையும் பார்த்தான்  முருகன். மின்சாரம் தாக்கியதில், உடம்பு முழுவதும் கருப்பாக இருந்தது.

அடுத்த சில நாட்கள் எத்தனை முயன்றும் அவனை காப்பாற்ற முடியாமல் போக, பிணமானான். ஏற்கனவே முக்காலும் எரிந்து போனவனை மீண்டும் எரித்தனர்  

சுடுகாட்டு புளியமரத்தடியில் வந்தமர்ந்த மாரியம்மாள், “நான் பெத்தமகனே, என்னை விட்டு போயிட்டேயே” என கதறி அழுதாள்

நரைத்த தாடியுடன் தலையில் துண்டை கட்டி இருந்த மாரிமுத்து கண்ணீர் வற்றிப் போய் ஜீவனற்ற விழிகளுடன் வெறித்து அமர்ந்திருந்தான் 

பிணம் எரிய எரிய, சாம்பல் காற்றில் பறந்தது. புளிய மரத்தில் அமர்ந்த காகங்கள் எல்லாம் தன் கூடுகளுக்கு பறந்து சென்றது

கோம்பை புதுகுளம் சுடுகாடு அமைதியாய் காட்சியளித்தது

கோயில் திருவிழா அன்று முருகன் வாங்கி கொடுத்த கொலுசினை எடுத்து இரவு முழுவதும் முருகனை நினைத்து நினைத்து அழுதாள் முத்துலெட்சுமி

“ஏண்டி நம்ம சாதியிலே இல்லாத ஆம்பளையா. நீ அவன் கூட பேசும் போதே கொன்னு போட்டிருக்கணும். நாளைக்கு உசிலம்பட்டியிலிருந்து உன் மாமன் பரிசம் போட வாரான். போ..போயி வேலையைப் பாரு” என வைதாள் அவளின் அம்மா 

”அண்ணே..”னு ஓடிவந்த சின்னராசு, எரியும் பிணத்தின் மேல் அடிச்சு, “உன் மேல் சத்தியம் அண்ணே, இந்தக் குழு இப்படியே போகாது அண்ணே” என்றான் 

“நம்ம சாதிக்காரன எதிர்க்கப் பார்த்தான்’ல்ல, அதான் எரியறான்” என கேலி பேசினான் வேங்கை கருப்பு 

சின்னராசு தலைமையில் புதிதாய் ‘முருகன் கபடி குழு’ உருவானது. மேடையில் வைத்திருந்த முருகன் போட்டாவை வணங்கி போட்டிக்கு சென்றான் சின்ராசு. பட்டிதொட்டியெல்லாம் ஜெயித்தது முருகன் கபடிப் குழு 

மதுரையில் நடந்த கபடி போட்டிக்கு அமைச்சர் தலைமை தாங்க, சின்னராசு தன் குழுவுடன் செல்ல, வேங்கை கருப்பு எதிரில் வந்து நின்றான் 

“உன் சாதி வெறியால என் அண்ணனை கொன்னுட்ட, நான் நினைச்சா இப்பவே உன்னை வெட்ட முடியும். அப்புறம் என் சபதம் ஜெயிக்காதுனு அமைதியா இருக்கேன். நீ எல்லாம் விளையாட்டுல ஜெயிக்காதவன், சாதில ஜெய்ச்சி என்ன பண்ணப் போற? உன் வீரத்த விளையாட்டுல காட்டு” என கர்ஜித்தான் 

முருகன் கபடி குழு 25 புள்ளிகள் பெற்று ஜெயித்தது. கோபத்தில் வேங்கை கருப்பின் தந்தையான அமைச்சர்  கத்தியை எடுத்து வேகமாக சின்ராசுவை குத்த வர, வேங்கை கருப்பனின் அன்னை நாச்சியம்மாள், எதிர்பாராத நேரத்தில் கணவனை கத்தியால் குத்தினாள் 

அனைவரும் விக்கித்து நிற்க, “இருபது வருஷம் இந்த சாதி வெறியன் கூட குடும்பம் நடத்தி என் இரண்டு பிள்ளைகளை இழந்தது தான் மிச்சம். இவன் திருந்த மாட்டான், நீ நல்லா இருப்ப தம்பி” என்ற நாச்சியம்மாள், காவல் நிலையம் நோக்கி நடந்தாள்

‘சஹானா’ இணைய இதழின் ‘சிறுகதை விமர்சனப் போட்டி’ யில் கலந்து கொண்டு பரிசு வெல்லும் வாய்ப்பு. போட்டி விவரங்கள் அறிய, இங்கு கிளிக் செய்யுங்கள்

#ads – Amazon Deals 👇


 தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇

      

        

‘சஹானா’ இதழை Amazonல் வாசிக்க இணைப்பு இதோ 👇

              

          

  

                                      

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    உடன்கட்டை❤ (சிறுகதை) – ✍ கீர்த்திகா துரைப்பாண்டியன், கோவில்பட்டி

    ரகசியத்தைச் சொல்லி விடாதே (சிறுகதை) – ✍ தீபா வேலு, வெள்ளக்கோவில், திருப்பூர்