in

தத்துப்பிள்ளை (சிறுகதை) – ✍ குணா, கோவை

தத்துப்பிள்ளை (சிறுகதை)

ஜனவரி 2022 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு

லேசான நடுக்கத்தோடு மெல்ல அந்த சடலத்தின் அருகே சென்றான் கண்ணன். மனம் வேகமாகப் படபடக்கத் தான் செய்தது.

“டேய்.. உனக்கு எதுக்குடா இந்த வீண் வேல? பேசாம இந்த பக்கம் வா” என்று கூட்டத்தில் இருந்து குரல் கொடுத்தாள் அந்த கூன் விழுந்த கிழவி.

“யாரோ எக்கேடோ கெட்டுப் போறா, பெரிய்ய்ய கர்ண மகாராசா உதவி செய்யப் போறாரு” என்று குமட்டில் வழிந்த எச்சிலைத் துடைத்தபடி சொன்னாள் இன்னொரு கிழவி

ஆனாலும் கண்ணனின் மனம் அவர்கள் பேச்சுக்கு உடன்படுவதாய்  இல்லை.

காலையில் எழுந்தவுடனேயே அவன் கேட்ட முதல் செய்தி, “ஊர் அரசமரத்தடில ஒரு பொணம் கிடக்குது” என்பது தான்

எல்லோரும் ஓட, கூடவே ஓடி வந்தவ‌ன் தான் இந்தக் கண்ணனும். ஒட்டு மொத்த கூட்டமும் ஏதேதோ பேச, கண்ணன் மட்டும் அதை கவனித்தான்.

வெள்ளை நிற வேட்டி சட்டையில் வானத்தை  வெறித்து பார்த்துக் கிடந்த அந்த பிணத்தில் ஒரு சிறிய அசைவு தெரிந்தது.

“எல்லோரும்  செத்து போயிட்டாங்கனு சொல்றாங்க, ஆனா மொகத்துல அசைவு தெரியுதே” என்று லேசான நடுக்கத்தோடு மெல்ல பிணத்தின் அருகில் சென்றான் கண்ணன்.

“ஏன்டா! சொன்னா கேக்கறானான்னு பாரு! நாளைக்கு போலீசு கேஸுன்னு அலைஞ்சா தான் புத்தி வரும்” என்ற கூட்டத்தின் பேச்சிற்கு செவி கொடுக்காமல், மெல்ல அந்த மனிதனின் தோளைப் பற்றி மெதுவாக உலுக்கினான்.

“ஐயா… ஐயா…” என்று கூப்பிட்டுக் கொண்டே முகத்தை பார்த்தவனுக்கு, சற்றே அதிர்ச்சியாகத் தான் இருந்தது.

ஆம்… நிலைக்குத்திக் கிடந்த அந்தப் பெரியவரின் கண்கள், இப்போது கொஞ்சம் நகர ஆரம்பித்தன.

“யோவ்… யாருய்யா அது?.. செத்த பொணம் அது இதுனு சொல்லிகிட்டு. இன்னும் உயிர் இருக்கு, வந்து பாருங்க” என்று கூட்டத்தை நோக்கிக் கண்ணன் கத்த, இப்போது கூட்டத்தில் சிறு சலசலப்பு தொற்றிக் கொண்டது.

“என்ன உயிர் இருக்குதா? நா அப்பவே சொன்னேன்” என்று பல்லை காட்டினான் அந்த நடுத்தர  வயது ஆசாமி.

“அப்ப சாகலையா?” என்றான் இன்னொருவன்.

இப்படிக் கூட்டத்தில் ஏதேதோ சலசலத்தார்களே தவிர,  யாரும் உதவ முன் வரவில்லை. அவர்கள் உதவியையும் கண்ணன் எதிர்பார்க்கவில்லை.

மெல்ல அந்தப் பெரியவரின் தோள்களைப் பற்றி தூக்கி மரத்தில் சாய்த்தவாறு உட்கார வைத்தான் கண்ணன். என்ன ஏதென்று அறியாமல் அங்கும் இங்கும் அலைபாய்ந்து கொண்டிருந்த அந்த முதியவரின் கண்கள்,  இப்பொழுது கண்ணின் மேல் நிலைகுத்தி அவனையே உற்றுப் பார்த்தன‌.

“தம்பி… யாரு நீ?  நா எங்க இருக்கேன்?” என்று தழுதழுத்த குரலில் கேட்ட அந்த அப்பாவி முதியவரின் பேச்சு அவனுக்குள் தூக்கி வாரிப் போட்டது.

“என்னங்கய்யா இது? நீங்க தான் சொல்லணும், யாரு நீங்க? எங்கிருந்து வந்தீங்க? ஏன் இப்படி கெடக்கறீங்கனு  எங்களுக்கு எப்படி தெரியும்?” என்றான் கண்ணன். 

அதே சமயத்தில் “ஏ!! தள்ளு தள்ளு.. இந்தாப்பா இந்த தண்ணிய மொதல்ல குடு கொஞ்சம் குடிக்கட்டும்.. அப்படியே முகத்திலும் கொஞ்சம் தொளிச்சுவுடு….” என்று செம்பை நீட்டினாள் கூன் கிழவி.

செம்பை வாங்கிய கண்ணன் நீரை கையில் ஊற்றி அந்த முதியவரின் முகத்தில் தெளித்தான்.

“ஐயா…! இந்தாங்க இந்த தண்ணிய மொதல்ல‌ குடிங்க..!” என்று செம்பை அவரிடம் நீட்டிய மறுகணமே, அவரின் கண்களில் இருந்து கண்ணீர் பெருக்கெடுத்தது. அந்த முதியவர் எழுந்த அழுகையை அடக்க முடியாமல் குபீரென்று சத்தமிட்டு அழத் தொடங்கினார்.  

அந்த நிமிடம் கண்ணனுக்கு ஒன்றும் புரியவில்லை.

“ஐயா என்னாச்சு? ஏன் திடீர்னு அழறீங்க? இந்தாங்க தண்ணிய மொதல்ல குடிங்க….” என்று மறுபடியும் அவரிடம் செம்பை நீட்ட….

“எப்படீப்பா முடியும்…? எனக்குத் தான் ரெண்டு கையும் காலும் வெளங்கறது இல்லையே…..!! பின்ன எப்படி என்னால செம்பை வாங்கிக் குடிக்க முடியும்…??” என்று அவர் கூற, கண்ணன் மட்டுமல்ல மொத்தக் கூட்டமும் அந்த முதியவரின் இயலாமையை எண்ணி அதிர்ச்சியில் மௌனமானது.

முதியவர் இப்பொழுது முன்பை விட சற்று தெளிவாக‌ பேச தொடங்கினார்.

“ஆமாம்ப்பா ஆமாம்..! ஒரு காலத்துல ஊருக்கே சோறு போட்ட விவசாயி நான்.. வெயில் மழை,  ராத்திரி பகல்னு நேரங்காலம் பாக்காம ஓடி ஓடி உழச்சவன் பா. ஆனா இப்போ தண்ணி குடிக்கக் கூட அடுத்தவங்களை எதிர்பாக்கற நெலம‌ எனக்கு..” என்று பெருமூச்சு விட்டு, பேச்சை மீண்டும் தொடர்ந்தார்.

“என் பேரு மருதாசலம், மார்த்தாண்டம் பக்கதிலிருக்கற‌ திசையன்விளை கிராமம் தான் என்வூரு. எங்கப்பாவும் பெரிய விவசாயி தான். சின்ன வயசுலேயே  படிப்பை விட விவசாயம் தான் பெருசுனு என்னையும் விவசாயம் பாக்க வெச்சாரு, நானும் முப்போகம் வெளவிச்சேன். கலியாணம் பண்ணி கொழந்த குட்டி பெத்தெடுத்தேன், அதுகளை நல்லபடியா தான் படிக்க வெச்சேன். ஆனா இப்போ என்னாச்சு…” என்று இழுத்தபடி, தொண்டை கம்ம தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்தார் மருதாசலம்.

“அழாதீங்க பெரியவரே….! அழாதீங்க…..!” என்று  ஆறுதல்படுத்தினான் கண்ணன். மருதாசலம் மெதுவாக‌ தன்னை  ஆசுவாசப்படுத்திக் கொண்டு பின் மெல்ல தொடர்ந்தார்.

“தம்பி… எனக்கு நாலு பசங்க தம்பி. கஷ்டப்பட்டு படிக்க வெச்சு, நல்ல நிலைமைக்கு கொண்டு வந்து, பட்டணத்துல வேலை தொழில்னு சம்பாரிக்க வெச்சு, கலியாணம் பண்ணி எல்லாம் நல்லாத் தான் போயிட்டு இருந்தது.

ஒரு நாள் திடீர்னு வயக்காட்டுல யானை மிதிச்சு என் பொண்டாட்டி சாகிறத நேர்ல பாத்த அதிர்ச்சில எனக்கு கைகால் வெளங்காம‌ நின்னுறுச்சு தம்பி… அதோட எல்லாம் போச்சு தம்பி.

விவசாயி இருந்தா ஊரே வாழும்… அதே விவசாயி விழுந்தா அவன் மட்டும் தான் சாவான். எங்களோட வாழ்க்க போராட்டம் மனுஷங்களோட மட்டும் இல்ல….  விலங்குகளோடவும் இயற்கையோடையும் சேர்த்துத் தான். ‘பல்லு போச்சுன்னா சொல்லு போச்சு’ன்னு சொல்லுவாங்க, அந்த மாதரி தான் தம்பி என் கை கால் விழுந்ததுக்கப்பறம் வாழ்க்கையே தலைகீழா மாறிடுச்சு.

என் பொண்டாட்டி செத்ததை விட, அரசாங்கம் கொடுத்த காசு தான் தம்பி வாழ்க்கையோட உண்மையான பக்கத்தைக் காட்டுச்சு. எம் பசங்களுக்கு பெத்தவ செத்தத‌ விட, அந்தக் காசு தான் பெருசா போச்சு. யாரு காச வாங்கறதுனு போட்டி தான் போட்டானுக. காசு போனா போகட்டும், ஆனா அவ காலமெல்லாம் வேர்வை சிந்தி உழைச்ச எங்க கழனிலயே அவளை ஒரு ஓரமா புதைக்கணும்னு சொன்னேன்.

மண்ணு திங்கறதுதானே, அது எங்க பொதச்சா என்ன..? நாளைக்கி விக்கோணும் புடிக்கோணும்னா என்ன பண்றது? பொண‌த்தை நம்ம நெலத்துலேயே புதைச்சது தெரிஞ்சா யாராவது வாங்குவாங்களானு  சொல்லிட்டானுக. அவுங்களுக்கு பொணம்… எனக்கு பொண்டாட்டி, வாழ்க்கையே எனக்கு அவதாம்ப்பா” என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே பெரும் குரலெடுத்து அழுத அந்த முதியவரின் அழுகை, கூட்டத்தைக் கண் கலங்கச் செய்தது

“அதுக்கப்றம் அவனுக நெனப்பெல்லாம் அந்த நெலத்து மேல ‌தான் இருந்தது. நெலத்த எழுதிக் குடு எழுதிக் குடுன்னு கேட்டானுக, நான் முடியாதுனு சொல்லிட்டேன். கேட்டுக்கேட்டு பாத்தானுக முடியல, கடைசியா அன்னைக்கி நாலு பேரும் ஒண்ணா வந்தானுக. ஏதோ அவனுகளுக்குள்ளையே பேசிட்டானுக. அன்னிக்கு சாயங்காலம் பெரிய பையன் எங்கிட்ட‌ வந்து, அப்பா நீங்க எதுக்கும் கவலப்படாதீங்க, நெலத்த விக்க மாட்டோம்.  நாங்களே விவசாயம் பாக்றோம்ன்னு சொன்னானுக. அதைக் கேட்டு எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்தது. சரீப்பான்னு நானும் சொல்லிட்டேன்

கொஞ்ச நேரங்கழிச்சு இந்தாங்கப்பான்னு டம்ளர் நெறைய  பால் குடுத்தான் எம்  பெரிய பையன், நானும் வாங்கிக் குடிச்சேன். கண் திறந்து பாத்தா இங்க கெடக்கறேன்” என்று மருதாசலம் கண்ணீர் மல்கக் கூற, அவர் இடப்புற கட்டை விரலில் இருந்த மை, மேற்கொண்டு அங்கு என்ன நடந்திருக்கும் என கண்ணனுக்கு படம் போட்டுக் காட்டியது.

“ஏண்டா! என்னடா பசங்க அவுனுக. பெத்த அப்பன்னு கூட பாக்காம இங்க கொண்டு வந்து போட்டுட்டானுக, வெளங்குவாங்ளா..?” என்று சாபம் கொடுக்க ஆரம்பித்து விட்டாள் கூன் கிழவி

“சரி கிளம்புங்க‌….” என்று கண்ணன் அவரைத் தோள் பிடித்துத் தூக்க ஆள் தேட,

“எதுக்குப்பா? அப்படியே இந்த அரசமரத்தடிலேயே விட்ருங்கப்பா… பிச்ச கிச்ச வாங்கி சாப்டுட்டு மிச்ச இருக்குற கொஞ்ச காலத்தையும் கழிச்சுக்கறேன். இல்ல எதாச்சு நாய் நரி சாப்ட்டுட்டு போகட்டும்” என்று பரிதாபமாகச் சொன்னார் மருதாசலம்.

“ஊருக்கே சோறு போட்ட விவசாயி நீங்க.. நீங்க எதுக்காக பிச்ச எடுக்கனும்..? என் கூட என் வீட்ல தங்கிக்கங்க…” என்று அவரை அழைத்தான் கண்ணன்.

“உன் வீட்லயா…?” என்று ஆச்சர்யமாய் பார்த்து விட்டு, “ஏம்பா…. நான் பாரம்னு தான  பெத்த பசங்களே இங்க எறிஞ்சிட்டு போய்ட்டானுக… ஒழுக்கமா எந்திருச்சு வெளிய போய் காலைக் கடனக் கூட கழிக்க முடியாது, எல்லாமே இருந்த எடத்தில தான். என்னப் போய்…” என்று இழுத்தவரின் கையைப் பற்றிக் கொண்ட கண்ணன்..

“ஐயா… எங்க அப்பாவும் என்ன நல்லா படிக்க வச்சாரு. பட்டணத்துல கை நெறய சம்பளம் வாங்குனேன். திடீர்ன்னு அப்பா பக்கவாதத்துல படுத்துட்டாரு…. கூடவேயிருந்து அவர என்னால‌ கவனிக்க முடியல. இதோ இந்த கூன் கிழவிதான் எல்லாம் செஞ்சுது எங்கப்பனுக்கு. ஒரு நாள் எங்கப்பா காலமாய்ட்டாரு. அப்ப தான் வாழ்க்கைல ஒன்னு புரிஞ்சுகிட்டேன். ‘வளர்ரப்ப நாம அவங்களுக்கு கொழந்த.. நாம வளந்ததுக்கப்பறம் வயசான அவங்க நமக்குக் கொழந்த’. அவங்க கடமைய அவங்க சரியா செஞ்சிட்டாங்க ஆனா நான்…” என்று விசும்பினான் கண்ணன்

சில நொடிகளில் தன்னை ஆறுதல்படுத்திக் கொண்டு, “பணத்த எப்ப வேணாலும் சம்பாதிச்சுக்கலாம், ஆனா அப்பா கூட இருக்கற அந்த நிமிஷங்கள திரும்ப சம்பாதிக்கவே முடியாது. எங்கப்பாவ சரியா கவனிச்சுக்க முடியாத அந்தக் குறை எம் மனசுல கரையான் மாதிரி அரிச்சுக்கிட்டே இருக்குது. இன்னைக்கு உங்கள பத்தி தெரிஞ்சுகிட்டதும் நான் முடிவு பண்ணீட்டேன், உங்கள எங்கப்பாவா தத்தெடுத்துக்கலாம்னு” என்று முடித்தான் கண்ணன்

“எதுக்குப்பா நீ தத்தெடுக்கணும்? ஊருக்கே சோறு போட்ட விவசாயி அவரு… அவர ஊரே தத்தெடுக்கறது தான் சரி” என்று அந்த ஊர்ப் பெரியவர் சொல்ல….

“ஆமாம் அது தான் முறை… தூக்குங்க அவரை” என்று ஆர்ப்பரித்தது கூட்டம்

தன்னை வீசிச் சென்ற அந்த நான்கு கைகள் கொடுத்த சோகத்தை, இப்பொழுது தாங்கிப் பிடிக்கும் இந்த ஆயிரம் கைகளின் அரவணைப்பு மறக்கடித்தது.

மருதாசலம் இப்போது அந்த ஊரின் தத்துப்பிள்ளை..!

‘சஹானா’ சிறுகதைப் போட்டி 2021ல் வெற்றி பெற்ற 20  சிறுகதைகள்,  நம் ‘ஸ்ரீ ரேணுகா பதிப்பகத்தின்’ வெளியீடாக, ISBN எண்ணுடன், அங்கீகரிக்கப்பட்ட ஒரு உலக சாதனை நிகழ்வில் அச்சு புத்தகமாக வெளிவர இருக்கிறது. 

இந்த நிகழ்வில் புத்தகம் வெளியிடும் எழுத்தாளர்களுக்கு, உலக சாதனை சான்றிதழ் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

உலக சாதனை நிகழ்வில் நீங்களும் புத்தகம் வெளியிட விரும்பினால், இதில் கொடுத்துள்ள வழிமுறையை பின்பற்றுங்கள். நன்றி 👇

‘சஹானா’ சிறுகதைப் போட்டி 2021 முடிவுகள் அறிய இங்கு கிளிக் செய்யவும்

#ads தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇

      

        

‘சஹானா’ இதழை Amazonல் வாசிக்க இணைப்பு இதோ 👇

              

          

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    மண்ணைத் தங்கமாக்கும் துபாய் ✈ (பயணக்கட்டுரை) – ✍ ராம் ஸ்ரீதர், சென்னை

    என்னையும் கொஞ்சம் தூங்க விடு (கவிதை ) – ✍ ஸ்ரீவித்யா பசுபதி, சென்னை