in ,

சுட்ட மண் (சிறுகதை) – தி. வள்ளி, திருநெல்வேலி

எழுத்தாளர் வள்ளி எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

சூரியன் தன் செந்நிற கதிர்களை பரப்பி மேலே எழும்பிக் கொண்டிருந்தான். திருநெல்வேலி அருகே அமைந்திருக்கும் கல்லிடைக்குறிச்சி இயற்கை எழில் கொஞ்சம் அழகிய கிராமம்.

கிராமமே ஞாயிறு சோம்பலை போத்திக் கொண்டிருக்க, காந்திமதி ஆச்சி வீடு மட்டும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது.

படபடத்துக் கொண்டிருந்தாள் காந்திமதி ஆச்சி. வேலை பார்க்கும் ஆட்களை எல்லாம் உட்கார விடாமல் விரட்டிக் கொண்டிருந்தாள்.

“ஏலே பொன்னு!! அந்த ஜன்னலயெல்லாம் நல்ல தூசி இல்லாம தொட. புள்ளைக வெளிநாட்டியிருந்து வருதுக ..அந்த நாட்ல எல்லாம் தூசி தும்பட்ட ஒன்னு கிடையாதாம்.. அப்படி சுத்தமா இருக்குமாம். காத்தும் சுத்தமா இருக்குமாம். அந்த பிள்ளைங்க இங்க வந்தா கொஞ்சம் சங்கடப்படத்தான் செய்யுங்க .அதனால தான் நாம எவ்வளவு வசதி பண்ண முடியுமோ அவ்வளவு வசதி பண்ணி கொடுத்திடனும். அதுவும் இந்த தடவ ஒரு மாசம் இருக்கேன்னு சொல்லியிருக்காக.”

பேசிக் கொண்டே போன காந்திமதிக்கு வாசலில் உட்கார்ந்து பேப்பர் படித்துக் கொண்டிருந்த சுந்தரம் பிள்ளை கண்ணில் பட்டார்.

“ஏங்க நான் இப்படி கிடந்து கத்திக்கிட்டு கிடக்கேன், நீங்க கொஞ்சம் கூட அலட்டிக்காம, பேப்பரப் பாத்துட்டு இருக்கீக அப்படி என்னதான் சேதி படிப்பீகளோ… அதான் நாள் முச்சூடும் அரை மணி நேரத்துக்கு ஒருக்க, இந்த டிவி பொட்டியில சேதி வச்சு கேக்கீக ..அத தாண்டி என்னது பேப்பர்ல வரப்போகுது. வேலைய பாத்தாலாவது ஒரு பிரயோசனம் உண்டு. நீங்க பாக்கிற வேலைய நீங்க தானே பாக்கனும். அண்ணாமலை இளநி கொல கொண்டாந்து போடறேன்னு சொன்னான்.. இன்னும் போடல “

“அடியே என்னதான் டிவி பொட்டில நியூஸ் பாத்தாலும் பேப்பர்ல படிக்கிற சொகம் வருமா?? ஏன் காந்திமதி நானும் பாத்துகிட்டு தான் இருக்கேன் தல குப்புற நடக்கிற. உன் புள்ள அமெரிக்காவிலிருந்து வர்றான் தான்? அதுக்குன்னு இந்த பாடா, உன் மருமவளும், மவனும் இந்த நாட்டுல பிறந்து வளர்ந்த புள்ளைக தானே. எல்லாம் ஒரு மாசத்துக்கு இருக்கிறத அனுசரிச்சுகுவாக”

“ஏதாவது சொன்னா உடனே விதண்டாவாதம் தான் பண்ணுவீக” மேற்கொண்டு பேசும் முன் பொன்னு குரல் கொடுத்தான்.

“ஆச்சி கரண்ட் வேல பாக்க டவுன்ல இருந்து ஆட்க வந்திருக்காக”

வந்தவர்கள் ஏசி மாட்ட வந்திருந்தார்கள். போன வாரமே திருநெல்வேலி டவுன்ல காந்திமதி ஆட்சியும் சுந்தரமும் போயி புள்ளைங்க தங்க வசதியா இருக்கட்டும்ன்னு, ஏசி, ஏர் கூலர், பெரிய டிவி, பிரிட்ஜ் எல்லாமே வாங்கிக் வந்திருந்தார்கள்.

இவ்வளவு புது மின் சாதனங்களை பார்த்தறியாத அந்த பழைய வீடு … டப்பு டப்பு என்று ஒன்று போட ஒன்று அடி வாங்கியது. அவ்வளவுதான், காந்திமதி ஆச்சி செம டென்ஷன் ஆகி விட்டார்.

“ஆச்சியம்மா இது பழைய வீடு. ஒயரிங் எல்லாம் ரொம்ப பழசு ..ஸ்விட்ச் போர்டு எல்லாமே ரொம்ப பழசா இருக்கு. இதுல இவ்வளவு சாமான் லோடு தாங்காது. ஒயரிங் புதுசா பண்ணுனா தான் அந்த சாமான்களை எல்லாம் வைக்கலாம்.” என்று சொன்னது தான் தாமதம், ஆச்சி கொஞ்சம் கூட யோசிக்காமல் ஒயரிங் பண்ண ஆட்களை வரச் சொல்லி விட்டாள். அவள் அடிக்கும் கூத்தைப் பாத்து சுந்தரம் பிள்ளைக்கு தாங்கவில்லை. 

“ஏன்டி.. பேசாம உன் பிள்ளைக்கு தின்னவேலில ஓட்டல்ல ரூம் போட்டுடலாமா?” என்றார். அவ்வளவுதான் ருத்ர தாண்டவம் ஆடிவிட்டாள் காந்திமதி ஆச்சி..

“பூர்வீக வீடு இருக்கு ..அரமணை மாதிரி வீட்டை விட்டுட்டு எட்டடிக்கு எட்டடி ரூம்ல போய் தங்க சொல்றீக ..இந்தப் பூர்வீக வீட்டுல பேரப்பிள்ளைகள் நடமாடாதான்னு நான் ஏங்கிட்டு இருக்கேன் ..சோபனா பெரிய மனுசியான பிற்பாடு இப்பதான் வாறா… அதனால சொந்த பந்தங்களை எல்லாம் கூட்டி ஒரு சின்னதா சடங்கு சுத்திரலாம்னு நான் நினைச்சுகிட்டு இருக்கேன். பிரசாதும் வளர்ந்திருப்பான். போன தடவயே ஆச்சி ஆச்சி..ன்னு சுத்தி சுத்தி வந்தான். புள்ளைங்கள பாத்து நாலு வருசத்துக்கு மேல ஆச்சு.. பாக்க எம்புட்டு ஆசையாயிருக்கு தெரியுமா. “

ஸ்வப்னா பெயர் வாயில் நுழையாததால் எப்பவுமே ஆச்சிக்கு அவள் சோபனா தான். “பேத்திக்கு சடங்கு செய்ற பிளான் வேற இருக்கா” என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டார் சுந்தரம் பிள்ளை.

கொத்தனார் வேலை வேறு நடந்து கொண்டிருந்தது. குளிக்கிறதுக்கு நவீன வசதி உள்ள ஒரு பாத்ரூமும் அதோட சேர்ந்து ஒரு வெஸ்டன் டைப் கிளாஸட்டும் மாட்ட சொல்லி இருந்தாள் ஆச்சி.

“புள்ளங்க எல்லாம் வளந்தாச்சு.. இனி சுத்த பத்தமா புதுசா குளிக்கிற ரூம்பு இருந்தாத் தான் அருவருப்பு படாதுக ..” தனக்கு தானே சமாதானம் சொல்லிக் கொண்டாள் ஆச்சி .

‘குளிச்சியான நாட்டிலிருந்து வருதுக.. இந்த வெக்கை தாங்க முடியாது’ என்று தட்டிப் பந்தலை வீட்டை சுத்தி போட சொல்லி மொட்டை மாடிக்கும் போடச் சொன்னாள்.

“தனம் அவக எல்லாம் வரமுன்னியே அடைக்கு, ஆப்பத்துக்கு எல்லாம் அரைச்சு வச்சிடனும் …புள்ளங்க நம்ம ஊரு சாப்பாடு சாப்பிடுமான்னு தெரியவில்லை .. அந்த மெத்த வீட்டு துரராசு அமெரிக்கா போயிட்டு அடிக்கடி வர்றான் அவன்கிட்ட கேட்டா என்னென்ன சாமான் வாங்கனும்னு லிஸ்ட் போட்டு கொடுத்துடுவான். “

சொன்னபடியே துரைராஜ்கிட்ட கேட்டு கான்பிளேக்ஸ், ஜாம், சாஸ், என சாமான்களை லிஸ்ட் போட்டு வாங்கிக்கொண்டு திருநெல்வேலி ஒரு நடை போயி சூப்பர் மார்க்கெட்டில் எல்லாவற்றையும் வாங்கிக் கொண்டு வந்தார்கள்.

அந்த சின்ன கிராமத்தில் திடீர் என தேவைப்படும் சாமான்கள் வாங்க முடியாது. எனவே ஆச்சி, லிஸ்ட் பெரிதாகவே போட்டு சாமான்கள் வாங்கி வைத்துக் கொண்டாள். ..அத்தோடு அபூர்வமாக வரும் பேரப்பிள்ளைகளுக்கு ஆளுக்கு ரெண்டு பவுனில் சங்கிலியும் அமீத் ஜுவல்லரியில் வாங்கினாள்.

வேலை பார்க்கும் தனம் “ஆச்சிக்குத்தான் பிள்ளைங்க வராங்கன்னு எவ்வளவு சந்தோஷம், ஒன்னு ஒன்னையும் பாத்து பாத்துல்லா செய்தாக. ரெண்டு மாசமா பாவம் உட்கார நேரமில்லாம வேல பாக்காக… பணத்தையும் தண்ணியாத் தான் செலவழிக்காக .பிள்ளைகளுக்கு எந்த சவுரிய குறைவும் இருக்கக் கூடாதுன்னு நினைக்காக ” ..என்று எண்ணிக் கொண்டாள்.

பிள்ளைகள் வந்து சேர்ந்தனர். சென்னையில் இருந்து தூத்துக்குடி வந்தவர்களை வாகைகுளம் விமான நிலையத்திற்கு போய் சுந்தரம்பிள்ளை காரில் அழைத்து வந்தார் .நெடுநெடுவென்று வளர்ந்திருந்த ஸ்வப்னாவையும் பிரசாத்தையும் ஆச்சி ..கட்டியணைத்துக் கொண்டாள்.

நால்வரையும் வாசலில் நிற்க வைத்து ஆரத்தி சுற்றி வீட்டுக்குள் அழைத்தாள். வெளிநாட்டில் இருந்து கொண்டு வந்திருந்த சாமான்களையும், மற்ற பிஸ்கட், நட்ஸ் எல்லாவற்றையும் அப்பா, அம்மாவிடம் கொடுத்தான் சிவ சுப்ரமணியம்.

மருமகள் அபிநயா கணவனைப் பார்த்து, “ஷிவ்… லக்கேஜ்களை இறக்கி கொண்டு வாங்க  என்றாள்.

சிவசுப்பிரமணியம் என்ற மகனின் பெயரை ஷிவ் என்று அழைத்தது ஆச்சிக்கும் ,சுந்தரம் பிள்ளைக்கும் சங்கடமாக இருந்தாலும் அதை காட்டிக் கொள்ளவில்லை. ரொம்ப நாளைக்கு பிறகு அப்பா அம்மாவை பார்க்கும் சந்தோஷம் சிவசுப்ரமணியத்தின் முகத்தில் தெரிந்தது.

“அம்மா அப்பா ரெண்டு பேரும் நல்லா இருக்கீங்களா? உடம்பெல்லாம் சௌக்கியமா இருக்கா?” என்றான் வாஞ்சையோடு…

“நல்லா இருக்கோம் ராசா… உன்ன எப்படி நேரா பார்க்கிறது எவ்வளவு சந்தோஷமா இருக்கு. என்னதான் போன்ல பேசினாலும், பார்த்தாலும் நேர்ல பாக்குற சுகம் வருமா?” என்றாள் காந்திமதி கண்கலங்க ..

“சரி சரி ..புள்ளகளை சாப்பிட சொல்லு .”

“உங்கம்மா பாத்து பாத்து உங்களுக்காக தானே சமைச்சிருக்காங்கப்பா.. போய் சாப்பிடு” என்றார் மகனிடம் வாஞ்சையோடு. 

ஆச்சி பார்த்து பார்த்து சமைத்த உணவையெல்லாம் அபிநயா நிராகரித்தாள்.. ஆப்பம் மணக்க மணக்க தேங்காய் பாலுடன் சிவசுப்பிரமணியம் விரும்பி சாப்பிட்டான்.

சாயங்காலம் காந்திமதி செய்த கார கொழுக்கட்டையை தட்டில் எடுத்து வைத்து விரும்பி சாப்பிடும் போது …”நோ ஷிவ் ..டூ மச் கார்போஹைட்ரேட்ஸ் வெயிட் போடும்” என்று தடுத்தாள் அபிநயா.

லேசாக ருசி பார்த்த பிள்ளைகளையும் அதிகம் சாப்பிட விடாமல் பாலில் கான்ஃப்ளெக்ஸ் போட்டு கொடுத்தாள்.

ரெண்டு நாள் பிள்ளைகளும் அந்த கிராமத்தில் உள்ளவை புதிதாக இருக்க, ஆர்வமாக பொழுதை கழித்தார்கள். மூன்றாவது நாளிலிருந்து மொணமொணக்க ஆரம்பித்தார்கள்.

“டாட் போர் அடிக்குது நெட் எடுக்க மாட்டேங்குது” என்று ஆரம்பிக்க ..அபிநயாவும், “எனக்கும் ஆபீஸ் வேலை பார்க்க முடியல நெட் கனெக்ஷன் சரியில்லை” என்று எரிச்சல் பட்டாள்.

உடனே சுந்தரம் தன் நண்பன் மூலமாக அடுத்த நாளே… வேறு ஒரு இன்டர்நெட்டுக்கு ஏற்பாடு பண்ணினார். காந்திமதி ஆச்சி என்ன விதவிதமாக செய்தாலும் அவை ருசியாக இருந்தாலும் …அவர்கள் கையில் கொண்டு வந்திருந்த…. இவர்கள் சூப்பர் மார்க்கெட்டில் வாங்கி வைத்திருந்த ஐட்டத்தையே சாப்பிட்டார்கள்

காந்திமதி ஆச்சி பொறுக்க முடியாமல், “நீங்க சாப்பிடுறதை எல்லாம் விட, இது நம்ம கிராமத்து சமையல். ருசியாவும் இருக்கும் உடம்புக்கும் சத்து” என்று கூற

மனைவி முகம் சுழிப்பதைக் கவனித்து கொண்டே சிவசுப்பிரமணியம், “அம்மா உன்னுடைய சாப்பாடும் கைமணமும் அருமை தான் இல்லைன்னு சொல்லல. ஆனா அங்க எங்களுக்கு லைட்டா சாப்பிட்டு பழகியாச்சு. திடீர்னு இந்த மாதிரி சாப்பாடு எல்லாம் அதிகமா சாப்பிட்டா வயிறு ஒத்துக்காது. இருக்கிற ஒரு மாசத்துல டாக்டர்கிட்ட தான் அலையனும்” என்றான் அம்மா மனம் வருத்தப்படாமல்.

காந்திமதி ஆச்சியின் மனதில் எரிச்சல் மண்டியது. “இவன் பொண்டாட்டிக்கு பயப்படுறான்.. வீட்ல செஞ்ச சாப்பாடு என்ன பண்ணும் வயிற்றுக்கு” தாய் மனம் மறுகியது ..

“பொறுமையா இரு காந்திமதி. இருக்க போறது ஒரு மாசம். அதுவே முழுசா இருப்பாங்களானு தெரியல ..நீ வேற பேசி, அத பிரச்சனையா கொண்டு வந்துடப் போறா அபிநயா …உன் மேல எவ்வளவு பாசம் வைச்சிருந்தாலும், அவன் எதார்த்த வாழ்க்கையில அபிநயாவுக்கு புருஷன். அவன் பிள்ளைகளுக்கு அப்பா.”

மறுநாள் மகனும், மருமகளும் இருக்கும்போது பேத்திக்கு, “ஒரு பத்து வீட்டை கூப்பிட்டு சடங்கு விசேஷம் செஞ்சிடலாமா? ஏற்பாடு பண்ணவா?” என்று கேட்டாள் காந்திமதி . 

சுந்தரம்பிள்ளையும் “அம்மா சொல்லிக்கிட்டே இருக்காப்பா. உன்கிட்ட கேட்டுட்டு ஏற்பாடு பண்ணலாம்ன்னு சொன்னேன்” என்றார்

அபிநயா, “மாமா நீங்க இருக்கிறது கிராமம். சடங்கு அதெல்லாம் இந்த ஊருக்கு சரி. அமெரிக்காவில் வளர்ந்தவ ஸ்வப்னா. அவ இதுக்கெல்லாம் கண்டிப்பா ஒத்துக்க மாட்டா. அங்க இதெல்லாம் அவங்க பர்சனல் விஷயம். அதையெல்லாம் நம்ம கேட்க கூட கூடாது. அவ என்ன எனக்கே இது பிடிக்கல, இந்தப் பேச்சையே விட்டுடுங்க” என்றாள் வெடுக்கென்று. அதற்கு பிறகு அந்த பேச்சை இருவரும் எடுக்கவில்லை. 

சுந்தரம் பிள்ளை கூறியது மிகச் சரியாக இருந்தது .. கிராமம் பிள்ளைகளுக்கு போர் அடிக்குது என்று சொல்லிவிட்டு கார் ஏற்பாடு பண்ணச் சொல்லி ‘கேரளாவுக்கு போயிட்டு ஒரு வாரம் ஏதாவது ரிசார்ட்டில் தங்கி விட்டு வருகிறோம்’ என்றார்கள்.

சிவசுப்பிரமணியம் மட்டும் “அப்பா, அம்மா நீங்க ரெண்டு பேரும் எங்களோட வாங்களேன். உங்களுக்கும் ஒரு மாறுதலா இருக்கும்” என்றான் 

அபிநயா “அவங்க வயசானவங்க அவங்களை இழுத்தடிக்காதீங்க ..நாம ஊருக்கு போகும்போது கொண்டு போறதுக்கு எல்லாத்தையும் ரெடி பண்ணனும்னு அத்தை சொல்லிக்கிட்டு இருந்தாங்க” என்றாள் அவசரமாக.

‘வேலை பாக்க மட்டும் மாமியார் வேண்டும்’ என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டாள் தனம். ‘ஆச்சி பாவம் முகம் வாடிப் போச்சு’ என மனதுக்குள் வருத்தப்பட்டுக் கொண்டாள் .

தனியாக இருக்கும்போது சிவசுப்பிரமணியம் அம்மாவின் அருகில் வந்து “அம்மா நீ வருத்தப்படாதே.. அடுத்தது லீவு கிடைக்கும்போது நான் மட்டும் வந்து உன் கூட இருந்துட்டுப் போறேன் ” என்றான் அவள் அன்பு மகன்.

சொன்னது போல மறுநாள் கிளம்பி கேரளாவுக்கு போய்விட்டு அங்கே ஒரு வாரம் இருந்து விட்டு, பிறகு பக்கத்தில் உள்ள இடங்களை எல்லாம் பார்த்துவிட்டு 10 நாள் கழித்து வந்து சேர்ந்தார்கள்.

இன்னும் ஊருக்கு கிளம்ப 15 நாட்கள் இருந்தது சரி பத்து நாட்கள் இருக்கு.. பிள்ளை, பேரப்பிள்ளைகள் கூட இருக்கலாம் என்று மனதை ஆறுதல்படுத்திக் கொண்டாள் காந்திமதி..

அடுத்த இரண்டு மூன்று நாட்கள் மகனுடனும் பேரக்குழந்தைகளோடும் சந்தோஷமாக கழித்தாள்.

“அம்மா நாங்க நாளைக்கு காலையில சென்னை கிளம்பலாம்னு இருக்கோம்” என்றதும் தூக்கி வாரி போட்டது சுந்தரத்திற்கும், காந்திமதிக்கும்.

“என்னப்பா இன்னும் பத்து நாள் லீவு இருக்கு ..வேற ஏதாவது வசதி தேவையா இருக்கா” என்றார் அவசரமாக சுந்தரம் பிள்ளை.

“அதெல்லாம் ஒன்னும் இல்லப்பா. வளர்ந்த பிறகு பிள்ளைங்க இப்பதான வராங்க அதனால சென்னையை சுத்திப் பார்க்கனும்ங்கறாங்க. அதனால நாங்க அங்க தங்கி சென்னையில எல்லா இடமும் போலாம்னு இருக்கோம். ஹோட்டல்ல தங்கறதால தான் உங்களை எப்படி கூட்டிட்டு போறது பத்து நாள் வெளி சாப்பாடு உங்களுக்கு ஒத்துக்குமோன்னு அபிநயா சொன்னா… அது தான் யோசிக்கிறேன்” என்றான் சிவசுப்பிரமணியம்.

இதற்கு மேல் என்ன பேச… மறுநாள் கண்ணீரோடு அவர்களுக்கு விடை கொடுத்தார்கள் இருவரும் ..

கண்ணில் நீரோடு, மனம் முழுக்க பாரத்தோடு, இருந்த மனைவியை பார்த்து சுந்தரம் …

“நீ வருத்தப்பட்டு பிரயோஜனம் இல்லை காந்திமதி எதார்த்தம் இதுதான். நாம புரிஞ்சுகிட்டு ஏத்துக்கத்தான் செய்யனும். சுட்ட மண்.. ஒட்டாது. அவங்களுடைய உலகத்துல நாமளும் நூத்தில ஒண்ணா இருக்கோம். ஆனா நமக்கு உலகமே அவங்க தான். அதனாலதான் நிறைய அவங்ககிட்ட எதிர்பாத்து..எதிர்பாத்து ஏமாந்து போயிடறோமோன்னு தோணுது. நம்மகிட்ட பாசமாய் இருக்கிற நம்மள சுத்தி உள்ளவங்களகிட்ட நம்ம பாசத்தை செலுத்துவோம். பெத்தால் மட்டும் தான் புள்ளையா? ஊர்ல இருக்கிற அத்தனையும் நம்ம பிள்ளைங்க தான் .வா உள்ள போவோம்” என்றார் ஆறுதலாக .

“அம்ம்ம்ம்மா…” பின்னால் தொழுவத்தில் நின்ற லக்ஷ்மி பசு குரல் கொடுக்க …சுந்தரம் கூறிய வார்த்தைகளின் பொருளை உள்வாங்கிய காந்திமதி ஆச்சி …”உன்ன மறந்துட்டேன் பாரு இத வந்துட்டேன்டா தங்கம் ” என்று அதற்கு கழநீர் வைத்தவள் அதன் முகத்தோடு முகம் வைத்துக் கொஞ்சினாள்.

பிள்ளைகள் வந்திருந்ததால் கவனிக்காமல் இருந்த எஜமானி தன்னை கொஞ்சியதில் மிகவும் மகிழ்ச்சியடைந்த லட்சுமி பசு, வாஞ்சையோடு அவள் முகத்தோடு முகம் உரசி “அம்ம்ம்ம்மா..” என்று கொஞ்சியது.

அந்த வாயில்லா ஜீவனின் அன்பு அவள் மனதை நெகிழ வைத்தது. பாசம் வற்றி போன மனங்களிடம் பாசத்தை தேடுவதை விட பாசத்துக்கு ஏங்கும் ஜீவன்களுக்கு நம் பாசத்தை காண்பிக்கலாமே …காந்திமதியின் மனதில் ஒரு  புதிய கதவு திறந்தது.

எழுத்தாளர் வள்ளி எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(முற்றும்) 

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    கடவுள் நேரில் வந்தால்… (ஒரு கற்பனை) – தி. வள்ளி, திருநெல்வேலி

    முள் பாதை (இறுதி அத்தியாயம்) – பாலாஜி ராம்