in ,

கடவுள் நேரில் வந்தால்… (ஒரு கற்பனை) – தி. வள்ளி, திருநெல்வேலி

எழுத்தாளர் வள்ளி எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

இரவே கூறிவிட்டான் கடவுள் “நாளை உன் வீட்டிற்கு வருவேன்” என்று ..

“தாராளமாக வா.., வரும் முன் ஊரை ஒரு சுற்று சுற்றி பார்த்துவிட்டு வா” என்றேன்.

“எதற்கு?” என்றான்…

“படைத்தவன் நீதானே.. பதிலையும் அறிந்திருப்பாய்..” என்றேன்.

“நான் ஊரை சுற்றி வரும் போதும் உன் கூட பேசுவேன். உன் கண் முன் தெரிவேன்” என்றான் ..

“ஓ திருதராஷ்டிரனுக்கு யுத்த களம் சஞ்சயன் மூலம் தெரிந்தது போலவா” என்றேன்…

கடவுள் முதலில் கண்டது.. கள்ளமில்லாக் குழந்தைகளை.. பள்ளிக்குள் நுழைந்து பாலகனாய் மாறி குழந்தைகளுடன் விளையாடி குதுகலித்தான் இறைவன்.. ஆகா எவ்வளவு அருமையான படைப்பு என்னுடையது என்று பெருமைப்பட்டுக் கொண்டான்.

பள்ளிக்கு வெளியே கண் தெரியாத குருட்டு தம்பதி, தட்டு தடுமாறி ஒரு குச்சியின் உதவியுடன் நடந்து கொண்டிருந்தனர்.. காலிழந்த ஒருவன் சக்கரம் வைத்த பலகையில் ஊர்ந்து கொண்டிருந்தான். மேலும் ஒருவன் ஒரு கை செயலிழந்து போக ஒரு கையால் தனது வேலைகளை சிரமத்துடன் செய்து கொண்டிருந்தான்..

“கடவுளே.. உங்கள் படைப்பை எண்ணி சற்று முன் பெருமைப்பட்டுக் கொண்டீரே.. இவர்களையும் தாங்கள் தானே படைத்தீர்.. எதற்கு இந்த ஓர வஞ்சனை.. இவர்கள் என்ன பாவம் செய்தார்கள் ஏன் இவர்களுக்கு இந்த ஊனம்.. இந்த உலகத்தை பார்க்க முடியாத கண்ணிழந்தவர்.. ஒலிகளைக் கேட்க முடியாமல் காது கேட்காதவர்.. காலின்றி நடக்க முடியாதவர்” என்றேன் நான் நெடுநாளாய் மனதை உறுத்தி கொண்டிருந்த கேள்வியை அவனிடம் கேட்டு விட்ட திருப்தி எனக்கு.

ஆண்டவனால் பதில் சொல்ல முடியவில்லை, அசதியுடன் நடந்தான்.. நடக்க முடியாமல் கால்கள் தடுமாறின.. குண்டும் குழியுமாய் சாலைகள்.. அள்ளப்படாத குப்பை.. எதற்கும் காசை எதிர்பார்க்கும் அலுவலர்கள்.. பேராசை பிடித்த மனிதர்கள்..

இறைவனுக்கே சந்தேகம் வந்துவிட்டது நாம் படைக்கும் போது மனிதனின் மனதை சரியாக படைக்கவில்லையோ ஏன் இவ்வளவு குறுக்கு புத்தியாயிருக்கிறான். எங்கும் லஞ்ச லாவண்யம். அடுத்து கெடுக்கிறான்.. நீதியை விட அநீதியே தலைவிரித்து ஆடுகிறது. மனம் நொந்து போனான்.

“நான் பச்சை பசேலென படைத்த பூமி எங்கே? இப்போது இருக்கும் பூமி இல்லையே அது .. எத்தனை அழகிய மரங்கள்.. எத்தனை ஆறுகள்.. எத்தனை குளங்கள்.. எவ்வளவு இயற்கை வளம் நிரம்பியதாய் படைத்தேன். இப்போது அனைத்தையும் கெடுத்து எங்கும்..எதையும் எந்திர மயமாக்கி விட்டானே மனிதன்”

“சாலைகள் தோறும் எத்தனை மருத்துவமனைகள் அத்தனையிலும் நிரம்பி வழியும் கூட்டம். எல்லாம் மனிதனாக உண்டாக்கிக் கொண்டது இயற்கையோடு இணைந்து வாழ்ந்திருந்தால் இவன் இப்படி வியாதியஸ்தனாக மாற வேண்டிய அவசியம் இல்லையே” என்று மனம் நொந்தான் இறைவன் ..

“இறைவன் மனிதனாக பிறக்க வேண்டும்” என்ற கவி வரிகள் நினைவுக்கு வர, புன்னகைத்துக் கொண்டேன்.

பாவம் இதற்கு மேல் தாங்க மாட்டான் அவன்.. என்று அவசரமாக “நீ ஊரை சுற்றியது போதும் என் இல்லத்திற்கு வா” என்றேன் ..

ஆத்மார்த்தமான அன்போடு அவனை வரவேற்று, உபசரித்து, அவனுக்கு பிரத்தியோகமாக என் கையால் செய்திருந்த பொங்கலை படைத்தளித்தேன்.. அவன் புகழை என் இனிய குரலில் பாட , அவன் மனச்சோர்வு நீங்க கேட்டுக் கொண்டிருந்தான் .

மனம் நொந்து சோர்ந்து போயிருந்த இறைவன், “உன் போன்ற பக்தர்களின் ஆத்மார்த்தமான அன்பு நிறைந்த இதயம் மட்டும் தான். இவ்வுலகத்தில் நான் இனி குடியிருக்கும் இடமாக இருக்கும். அது தவிர நான் இங்கு எங்குமே இருக்க பிரியப்படவில்லை .பாவிகள் கோயில்களை கூட வியாபார ஸ்தலமாக மாற்றி விட்டார்கள்.

ஆத்மார்த்தமான பக்தி எந்த மனதில் இருக்கிறதோ.. யார் சக மனிதரை நேசித்து அறவழியில் வாழ்கிறார்களோ.. அவர்கள் மனது மட்டுமே இனி நான் வாழும் கோயில்.. நான் போய் வருகிறேன்” என்று விடைபெற்றுச் சென்றான் இறைவன்..

இனி ஒரு முறை இந்த பூவுலகிற்கு வர எண்ணுவானா.. சிரித்துக் கொண்டே ன் நான்.

எழுத்தாளர் வள்ளி எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(முற்றும்) 

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    தொடுவானம் மிக அருகில் ❤ (பகுதி 15) – ✍ பானுமதி பார்த்தசாரதி, சென்னை

    சுட்ட மண் (சிறுகதை) – தி. வள்ளி, திருநெல்வேலி