இந்த தொடர்கதையின் அனைத்து அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
தீபாவளி முடிஞ்சது, சரி இந்த வருஷ பண்டிகைல்லாம் ஒண்ணை ஒண்ணு துரத்தி கையை கடிச்சு பாடா படுத்தி இப்பதான் ஓஞ்சது. அடுத்து கார்த்திகை ஒண்ணுதான் பாக்கி அதுல அதிகம் செலவு வராது.இப்படி கொஞ்சம் நான் மூச்சு விடலாம்னு பாத்தா,”இந்த தடவை பொங்கலுக்கு பட்டுப் புடவைல்லாம் வேண்டாம்னு”சரோஜா டிக்ளேர் பண்ணினா.
“யார் சொன்னா பட்டுப் புடவை வாங்கப் போறதா”
“சொன்னாதானா, ஒவ்வொரு தடவையும் நீங்க ஆசையா வாங்கித் தருவீங்களே”
“அம்மா பரதேவதை, அது பத்து வருஷத்துக்கு முன்னால, இப்ப ரெண்டு குழந்தைகளை வச்சிட்டு ஆசை,தோசைன்னா ரெண்டு மூணாயிடும்”
“அய்யே பேச்சைப் பாரு,இப்பல்லாம் நீங்க என் கிட்ட பழைய மாதிரி பிரியமாவே இருக்கறதில்லை க்கும்.”
“அம்மா என் சரோ செல்லம்,இப்படி ஆரம்பிச்சு மெதுவா மகாபாரதம் ஸ்டார்ட் ஆயிடும் விட்டுடுடா கண்ணா எனக்கு சக்தி இல்லை.”
“ஆமாம் உங்கம்மா கேக்காமலயே வழிஞ்சு வழிஞ்சு ஒரு ஜாண் ஜரிகை போட்டு வருஷா வருஷம் புடவை எடுப்பீங்க.நான் எதுவும் கேக்காதப்பவே மகாபாரதம்,ராமாயணம்னு வாயை அடைச்சிடுவீங்க”
“அதில்லைப்பா, சரி நீ இப்ப என்ன பண்ணணும்ன்றே”
“கமலா ஒரு புது டிசைன்ல ஹாரம் பண்ணி போட்டுட்டு வந்து மினுக்கிட்டுப் போறா,எனக்கும் அதை விட ஒசத்தியா ஹாரம் வேணும் பொங்கலுக்கு”
“என்னது ஹாரமா தங்கத்துலயா?”
“பின்ன என்ன தகரத்துலயா பண்ணுவாங்க”
“டி.வி. ல நியூசைப் போடு தங்கம் விலையைப் பாரு,வாங்கற மாதிரியா இருக்கு?”
“அமெரிக்க ஜனாதிபதி எலக்ஷனுக்கப்பறம்,டொனால்ட் டிரம்ப் வந்து தங்கம் விலையெல்லாம் ஏகத்துக்கு குறைச்சிட்டார்னு கமலா சொன்னாளே”
அடிப் பாவி அவர் எப்படிடீ தங்கம் விலையை குறைக்க முடியும் சுரங்கத்தையா திறந்து விட்டார்”
“அதெல்லாம் எனக்குத் தெரியாது தைப் பொங்கலுக்கு 4 பவுன்ல ஹாரம்தான் வேணும், அதான் பட்டுப் புடவை வேண்டாம்னாச்சே அப்பறம் என்னவாம்,பண்டிகை செலவெல்லாம் இருக்கேன்னுதான் இத்தனை நாள் சும்மா இருந்தேனாக்கும்”
இவ முடிவு பண்ணிட்டா ஒண்ணும் பண்ண முடியாது,மனசுக்குள்ளேயே கணக்குப் போட்டுப் பாத்தேன் 4 பவுன்னா கிட்டத் தட்ட இரண்டரை லட்சத்துக்கு மேலே ஆயிடும்.எங்கே போறது அத்தனை பணத்துக்கு. என் கழுத்து செயின்,கை மோதிரம்,பேபியோட குட்டிச் செயின் எல்லாத்தையும் மாத்தினாலும் பாதி கூட தேறாதே சரி எல்.டி.ஏ. போட்டு பாப்போம்.
இப்படி என் தலைல 4 பவுன்தான் அன்னிக்கு பூரா சுத்தி சுத்தி வந்தது. இதை யோசிச்சிட்டே சோஃபால உக்காந்திருந்தேன்,எதிர்ல டி.வி.ல நடிகை திரிஷா வீட்ல எல்லோரும் ஏதோ ஒரு பாட்டில் நெய்யை அப்படியே கவுத்து சமையல் பண்ணிட்டிருந்தாங்க.இவ்வளவு நெய் கவுத்தா அந்த சமையலை சாப்டா குமட்டிட்டு வராதோ,என்னவோ தெரியலை திரிஷா சொன்னா சரியாதான் இருக்கும்.
அம்மா உள் ரூம்ல இருந்து மெதுவா நடந்து வந்து பக்கத்துல உக்காந்தா.”என்னடா வாசு என்ன யோசனைல இருக்கே”
“ஒண்ணுமில்லைம்மா”
“நான் ஒண்ணு கேட்டா கோச்சிக்க மாட்டயே”
“என்ன உனக்கும் 4பவுன்ல காசுமாலை வேணுமா”
“என்னடா உளரறே,இந்த வயசுல எனக்கு எதுக்கு காசு மாலையும்,ஒட்டியாணமும்”
“மன்னிச்சுக்கோம்மா ஏதோ நினைப்புல சொல்லிட்டேன்,சரி நீ சொல்லு ஹார்லிக்ஸ் லைட் ,தீந்து போச்சா”
“அதில்லை என்னை ஒரு தடவை கண் செக்அப் கூட்டிட்டு போயேன், உச்சந்தலை ரொம்ப சுள்னு வலிச்சிட்டே இருக்கு,ஒண்ணும் படிக்க முடியலை,கண்ணாடி போட்டாலும் மங்கலா இருக்கு,காபி டம்ளர்ல சக்கரை போட்டா பக்கத்துல இருக்கற சட்ணி கிண்ணத்துல விழறது”
“ஏன்மா முதல்லயே சொல்லலை? ஐ கேர் சென்டர் பக்கத்துலதானே இருக்கு நாளைக்கு காலைல போலாம் சரியா”
“என்னவோப்பா வரிசையா பண்டிகை இருந்தது,நிறைய செலவு இருக்கும்னுதான் சொல்லலை”
“அதானே பண்டிகை பண்டிகைனு அடுப்படில எண்ணை பட்சணம் பண்ணி அந்த புகைல வந்த விளைவுதான் இது, சொன்னா எங்க கேக்கறே”
இந்த தொடர்கதையின் அனைத்து அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(தொடரும்)
This post was created with our nice and easy submission form. Create your post!


GIPHY App Key not set. Please check settings