இந்தத் தொடரின் அனைத்து அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
ஈரோடு சந்திப்பு எப்போதும் பரபரப்பாக ஜனநெருக்கடியாக இருக்கும். அன்று திங்கட்கிழமையானதால் வாராந்திர ரயில்களுக்கு காத்திருக்கும் கூட்டம் மற்றும் வந்திறங்கிய பயணிகள் என மக்கள் வெள்ளம். அதில் நம் வேலன் ஒரு வழியாக நீந்தி பாசஞ்சரில் கரையேறினான்.
ரொம்ப நேரம் தேட அவசியமில்லாமல் ஏறியதிலிருந்து நான்காவது பெட்டியிலேயே மகேஷையும் வைத்தீஷ்வரியையும் கண்டான்.
“வாங்க பாஸ்! ” என்றான் மகேஷ்.
“நீங்களும் ரெகுலரா இதுலதான் வருவீங்களா? உங்கள இதுவரை பார்த்ததில்லையே?”- வைத்தீஷ்வரி.
“நான் இதுலயும் வருவேன். பஸ்லயும் வருவேன். ஆபிஸ் பிரண்ட்ஸ் ரூம் இங்க இருக்கு. அதிலும் தங்கிப்பேன். வேலையை பொறுத்து”
“இந்தாங்க ” என்று வைத்தீஷ்வரி ஒரு கவரை வேலனிடம் கொடுத்தாள்.
“என்னது?”
“அதான் அந்த ஃபைன் கட்ட கொடுத்த பணம்”
கவரிலிருந்த பணத்தை எண்ணி “சரியா இருக்கு ” என்றான்.
“ஏன் வேற வேலை தேடறீங்க?”
“இன்னும் கொஞ்சம் பெட்டரா இருக்கும்னுதான் “
“நான் கன்சல்டன்சிக்கு போற எக்ஸ்போர்ட் கம்பெனி ஹங்கேரிபாளையத்துல இருக்கு. உங்களை வந்து பாக்க சொல்லிருக்காங்க”
“எப்ப வர சொல்லிருக்காங்க?”
“இந்த வாரத்துக்குள்ள போங்க. அங்க ஹெச்சார்ல சம்பத்னு இருப்பார். வேலு அனுப்பினார்னு சொல்லுங்க”
“சரிங்க”
” பாஸ்! நந்து ஃபைன் பணத்தை திருப்பி தந்துட்டானா?” என மகேஷ் கேட்டான்.
“அவங்க அப்பாட்ட ஏல சீட்டு போடறேன். அதுல அட்ஜஸ்ட் பண்ண சொல்லிட்டேன்”
“வைத்தீஷ்வரி! என்ன சாப்பாடு கொண்டு வந்துருக்கீங்க?”
“தெரியல… ஆத்தா தான் டிபன்ல போட்டாங்க”
வைத்தீஷ்வரியின் அருகிலிருந்த லஞ்ச் பேகிலிருந்து டிபன் பாக்சை அவள் அனுமதியின்றி எடுத்து உண்ண ஆரம்பித்தான். இதை சிறிதும் எதிர்பாராத மற்றும் விரும்பாத அவள் ஒன்றும். பேசாமலிருந்தாள். கைப்பையை தொட்டிருந்தால், அவன் கதி முடிந்திருக்கும். சாப்பிடுவதை தடுக்க வேண்டாமே என பொறுமைக் காத்தாள்.
“இது யாரு செஞ்சா ?”
“எங்க ஆத்தா”
“நல்லாருக்கு. உங்க ஆத்தா நேத்து சூர்யவம்சம் படம் பாத்தாங்களா என்ன?”
“ஏன்?”
“இட்லி உப்புமா செஞ்சிருக்காங்களேனு கேட்டேன்”
“எனக்கு பிடிக்கும்னு செஞ்சாங்க”
தொடர்வண்டி திருப்பூர் நிலையத்தை அடைந்தது.
“உப்புமா நல்லா இருந்துச்சுனு ஆத்தாட்ட சொல்லுங்க” என்றவாறு அங்கிருந்த குழாயடிக்கு பாக்ஸை கழுவ போனான்
“பரவால்ல அப்படியே கொடுங்க, நான் கழுவிக்கிறேன்”
“பரவால்ல பரவால்ல”
வைத்தீஷ்வரி மற்றும் வேலனிடம் விடைபெற்ற மகேஷ் அங்கிருந்து கிளம்பினான். அப்போது வீட்டிலிருந்து அழைப்பு வரவே, வைத்தீஷ்வரி போனில் பேசிக் கொண்டிருந்தாள்.
அப்போது பேரிரைச்சலுடன் ஒரு தொடர் வண்டி, நிலையத்திற்குள் நுழைந்து கொண்டிருந்தது. உடனே பரபரப்புடன் வேலன் அவள் கையை பிடித்து தரதரவென வெளியே இழுத்துக் கொண்டு வந்தான்.
“என்ன என்னாச்சு?”
“ரப்திசாகர் சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் உள்ள வருதுங்க. அப்போ நாம ப்ளாட்பாரம்ல இருந்தா, சப்ளிமென்ட்ரி டிக்கெட் கைல இல்லனா அதுல தான் வந்தோம்னு முடிவு பண்ணி ஃபைன் போட்டுருவாங்க”
கருப்பான கையால என்ன புடிச்சான், காதல் என் காதல் பூ பூக்குதம்மா…… ஹேய்! ஹேய்! என்று பாடியபடி அந்த இசைக் குழுவினர்கள் இவர்களை கடந்தார்கள். இவனுங்க வேற என சலித்தபடி இருவரும் அவரவர் வழியில் சென்றனர்.
மதியம் பன்னிரண்டு மணி வைத்தீஷ்வரியின் போன் அடித்தது.
“ஹலோ! வேலன் பேசறேங்க”
“ம் சொல்லுங்க”
“உங்க ஆபிஸ் வாசல்ல தான் இருக்கேன். கொஞ்சம் வெளில வரீங்களா?”
“ம் வரேன்”
‘ஐயோ! இவனோட ஒரே தொல்லையா போச்சு. இப்ப எதுக்கு இங்க வரான்?’ என்றவாறே வெளியில் வந்தாள்.
“உங்களுக்கு தான் இது. ஒரு அர்ஜென்ட் மீட் இருக்கு. நான் அப்புறம் போன் பண்றேன்” என வேலன் ஒரு பையை அவளிடம் தந்துவிட்டு பைக்கில் கிளம்பினான்.
உள்ளே வந்து பேகை திறந்தால் கமகமவென்ற மணம் உள்ளே இருப்பது சாம்பார் சாதம் என்றது. கூடவே இரண்டு சமோசாக்களும் இருந்தன.
‘பரவால்லயே இவன், அவசரப்பட்டு தப்பா நினைச்சுட்டோமோ’ என்றபடி பையை ஓரமாக வைத்தாள்.
சொன்னபடி வேலன் அவன் வேலையை முடித்துக் கொண்டு அலைபேசினான்.
“முதல்ல சாரிங்க”
“சாரி எதுக்கு? நாந்தான் தேங்க்ஸ் சொல்லனும் “
“நான் யார்ட்டயாவது பழகிட்டா, ரொம்ப உரிமை எடுத்துக்குவேன், அதான் உங்க டிபன் பாக்ச எடுத்து சாப்டுட்டேன். அப்புறந்தான் நீங்க சைவம்னு ஞாபகம் வந்துச்சு. இந்த ஏரியால சைவ ஓட்டலும் இல்லை. அதான் செல்லம் கேண்டீன்ல வாங்கிட்டு வந்தேன். நல்லா இருந்துச்சா?” இடை நிறுத்தாமல் பேசினான்
“நல்லா இருந்தது. ஈவினிங் பாசஞ்சர்ல பாக்கலாம்” இணைப்பு துண்டிக்கப்பட்டது.
திருப்பூர் ஸ்டேஷன் காலையிலிருக்கும் பரபரப்புக்கு சற்றும் குறையாமல் மாலையிலும் அவ்வண்ணமே இருக்கும். எப்போதும் மகேஷ் முன்னமே வந்திருப்பான். அவன் வந்த சிறிது நேரத்தில் வைத்தீஷ்வரியும் வந்து விடுவாள்.
அவன் வேடிக்கை பார்த்து அமர்ந்திருப்பான். அவள் பாட்டுக்கு புத்தகம் படித்துக் கொண்டிருப்பாள். அவ்வபோது ரயில், திருப்பூரிலிலுள்ள வேலை வாய்ப்புகள், நூல் விலையேற்றம் என பொது விஷயங்கள் பேசிக் கொள்வார்கள்.
ஆனால் சிங்கார வேலன் வந்த இந்த இரண்டு மாதங்களில் நிறைய மாற்றங்கள். அவரவர் வசதிக்கேற்ற ரயிலில் போவதற்கு பதில் மூவரும் பாசஞ்சரில் போவது என்று எழுதா உடன்படிக்கையானது.
நண்பர்களின் அறையில் தங்கியிருந்தவன் தினமும் பாசஞ்சரில் வருகிறான். விடுமுறை என்றாலும் ஈரோட்டில் வேலை என்றாலும் பாசஞ்சர் இரவு ஈரோடு வருவதற்கு முன்னரே வந்து விடுவான். சிறிது நேர அரட்டைக்குப் பின்னே சங்கம் கலையும்.
நீங்க வாங்க நீ வா என்றானது. எல்லாரது பெயரும் சுருங்கி வைத்தி, வேலு, மகி என்றானது. மகி, வேலுக்கும் சேர்த்து காலை உணவை வைத்தி கொண்டு வருவாள். மூவருக்கிடையே ஒரு அழகான நட்பு அங்கே மலர்த்திருந்தது.
இந்த நட்பு இப்படியே நீடிக்குமா? இதில் ஏதாவது சங்கடங்கள் வருமா? வைத்தீஷ்வரிக்குள் மறைந்துள்ள துயரம் என்ன? இவர்களது நட்பால் அவள் துயரம் தீருமா? அல்லது அதிகமாகுமா என்பதை அடுத்தடுத்த அத்தியாயங்களில் காண்போம்.
இந்தத் தொடரின் அனைத்து அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(தொடரும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings