in

சேலம் ஸ்கந்தாசிரமம் (எழுதியவர் : அனு பிரேம்) – ஜனவரி 2021 போட்டிப் பதிவு

சேலம் ஸ்கந்தாசிரமம்

சேலம் நகரின் அருகில் உடையாபட்டி என்ற இடத்தில், இயற்கை எழில் சூழ முற்றிலும் மலைகளுடன் காட்சியளிக்கிறது இந்த ஆசிரமக் கோவில்

ஸ்ரீமத் சாந்தானந்த  சரஸ்வதி சுவாமிகள் நெஞ்சத்தில் கனவு போல தோன்றிய, மலைகளும், அருவிகளும் நிறைந்த சிறிய குன்றே, இன்று சேலம் அருகில் ஸ்காந்தாசிரமமாக மாறியுள்ளது.

முருகனின் சன்னதியும், முருகனின் தாயான பார்வதியின் சன்னதியும் எதிரெதிர் சன்னதிகளில் இருப்பதை, இங்கு தவிர வேறெங்கும் பார்க்க முடியாது என்பது குறிப்பிடத்தகுந்தது.

முருகனின் முகம் மிகத் தெளிவு, நம்மைக் கண்டு சிரிப்பது போலவே இருக்கும் பரவசமான நிமிடங்கள்

நான்கு வேதங்களுக்குரிய உருவங்கள் இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

16 அடி உயரத்தில் ‘தத்திராத்ரேய பகவான்’ இங்கு உள்ளார். ‘சொர்ண ஆகர்ஷண பைரவர்’ இத்தலத்தில் உள்ளார். இத்தலத்தில் உள்ள ‘சங்கடஹர பைரவர்’ மிகவும் சிறப்பு வாய்ந்தவர்.

முருகன் சந்நிதியை  சுற்றி மனைவியுடன் கூடிய நவகிரகங்களின் விக்கிரகங்கள் உள்ளன, மிகவும் தத்ரூபமாகவும் அருமையாகவும் இருக்கின்றன

வேத விநாயகர், ஆதி சங்கரர் உட்பட பல விக்ரகங்கள் அழகுற மொத்தமாக ஒரே இடத்தில் அமைந்துள்ளது இங்கு மட்டுமே.

ஸ்தல வரலாறு

இந்த ஆசிரமத்தை நிறுவியவர் ஸ்ரீமத் சத்குரு சாந்தானந்த சுவாமிகள்

ஒரு முறை இவர் கனவில் வந்த முருக கடவுள், தனக்கு ஒரு கோவில் அமைக்கவேண்டி கூறினார். அதற்கான இடமாக இந்த கோவில் தற்போது இருக்கும் இடத்தை கூறிவிட்டு மறைந்து விட்டார்.

முருகன் சொன்ன இடத்தை தேடி அலைந்த சுவாமிகள், பல இடங்கள் தேடி அலைந்து, கனவில் முருகன் சொன்ன இடம் இதுதான் என உணர்ந்து கொண்டார்.

முருகன் சிலை ஒன்றை பிரதிஷ்டை செய்து கோவில் கட்டினார் சுவாமிகள். கால மாற்றத்தில் இக்கோவில் மிகப்பெரிய கோவிலாக, மிகப்பெரும் கண்கவர் சிற்பங்கள் கொண்ட கோவிலாக உருவெடுத்துள்ளது.

உடையாப்பட்டி குன்றில் அமைந்துள்ள ஸ்கந்தாசிரமத்தில், நல்ல விசாலமான மண்டபம், வேதபாடசாலை, ஆசிரமத்தார் தங்குவதற்கு கூடங்கள் எல்லாம் கட்டப்பட்டு, 1971ல் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

மேலும் இங்கு பத்தடிக்கும் மேற்பட்ட உயரத்தில் பஞ்ச முக  கணபதி, தண்டாயுதபாணி, அஷ்ட தசபுஜ மகாலக்ஷ்மி, தன்வந்திரி, பஞ்சமுக ஆஞ்சநேயர் சுவாமிகளுக்கு தனித் தனி சந்நிதிகள் உள்ளன.

அங்கு கோயில் கொண்டு அருள்பாலிக்கும் ஸ்கந்தனின் ‘ஸ்கந்த குரு கவசம்’ சாந்தானந்த சுவாமிகள் அருளியதே ஆகும். அதன் சில வரிகள் இங்கு உங்களுக்காக:-

ஸ்கந்தா சரணம் ஸ்கந்தா சரணம்

சரவணபவ குகா சரணம் சரணம் …… 10

குருகுகா சரணம் குருபரா சரணம்

சரணம் அடைந்திட்டேன் கந்தா சரணம்

தனைத் தானறிந்து நான் தன்மயமாகிடவே

ஸ்கந்தகிரி குருநாதா தந்திடுவீர் ஞானமுமே

தத்தகிரி குருநாதா வந்திடுவீர் வந்திடுவீர் …..

….பாபத்தைப் பொசுக்கிப் பாரெல்லாம் சிறப்புறவே

ஓம் ஸெளம் சரவணபவ ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் என்றும்

க்லௌம் ஸௌம் நமஹ என்று சேர்த்திடடா நாள்தோறும்

ஓமிருந்து நமஹவரை ஒன்றாகச் சேர்த்திடடா

ஒன்றாகக் கூட்டியுமே உள்ளத்திலே இருத்தி …… 175

ஒருமனத் தோடு நீ உருவையும் ஏத்திடடா

முருகனின் மூலமிது முழுமனத்தோடு ஏத்திட்டால்

மும்மலம் அகன்றுவிடும் முக்தியுந்தன் கையிலுண்டாம்

முக்தியை வேண்டியுமே எத்திக்கும் செல்ல வேண்டாம்

முருகன் இருப்பிடமே முக்தித் தலம் ஆகுமப்பா …… 180

ஹ்ருதயத்தில் முருகனை இருத்திவிடு இக்கணமே

இக்கணமே மூலமந்த்ரம் ஏத்திவிடு ஏத்திவிடு

மூலமதை ஏத்துவோர்க்கு காலபயம் இல்லையடா

காலனை நீ ஜயிக்க கந்தனைப் பற்றிடடா

சொன்னபடிச் செய்தால் சுப்ரமண்ய குருநாதன் …… 185

கந்தன் என்ற மந்திரத்தைக் கண்மூடி உருவேற்றி

உச்சியிலும் தெளித்து உட்கொண்டு விட்டிட்டால் உன்

சித்த மலம் அகன்று சித்த சுத்தியும் கொடுக்கும்

கன்னிமார் தேவிகளைக் கன்னிமார் ஓடையிலே

கண்டு வழிபட்டு கந்தகிரி ஏறிடுவீர் …… 445

கந்தகிரி ஏறி ஞான ஸ்கந்தகுரு கவசமிதைப்

பாராயணம் செய்துலகில் பாக்கியமெல்லாம் பெற்றுடுவீர். …… 447

சென்னை ஸ்கந்தாஸ்ரமம்

சென்னை கிழக்கு தாம்பரத்தில் ஒரு ஸ்கந்தாஸ்ரமம் நிறுவி, இறை உணர்வைப் பெருகச் செய்தார் சுவாமிகள்.

தம் வாழ் நாள் முழுவதையும் குரு சேவை, இறை சேவை, மக்கள் சேவை என்றே அர்ப்பணித்த ஸ்ரீமத் சத்குரு சாந்தானந்த சுவாமிகள், 27/05/2002 அன்று முக்தி அடைந்தார். அவரது விருப்படி அவரது அதிஷ்டானம் ஸ்ரீஸ்காந்தாஸ்ரமத்தில் உள்ளது.

மிக மிக  அமைதியான இடம், மனதிற்கு இன்பமும் பரவசமும் தரும் இடம்.

நாங்கள் சென்ற போது அங்கிருந்த குருக்கள் மிக அமைதியாக பல விஷயங்களை எடுத்துக் கூறினார். மேலும், குழந்தைகளிடமும் தனியே பேசி, நாம் எப்படி இருக்க வேண்டும், இறை அருள் என்றால் என்ன என விளக்கினார். மிக மிக அருமையான அனுபவம்

அன்பிற்கு எல்லையோ முருகா – உந்தன்

அருளுக்கு எல்லை தான் இல்லையே முருகா

கண்கண்ட தெய்வமே முருகா – எந்தன்

கலியுக வரதனே அருள் தாரும் முருகா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

2 Comments

  1. சென்னையில் கிழங்கு தஆம்பரத்தில் உள்ள ஸ்கந்தாசரமத்திற்கு முருகன் அருள் இருந்தால் செல்ல விரும்புகின்றேன். கட்டுரை அருமையாக உள்ளது நன்றி. வாழ்த்துகள்

சங்கமித்ரா (குறுநாவல் – இறுதிப்பகுதி) – By Fidal Castro – ஜனவரி 2021 போட்டிப் பதிவு

“சஹானா” மாத இதழ் – டிசம்பர் 2020 தொகுப்பு