in

ஆடி மாதம் அம்மன் மாதம் (கீதா சாம்பசிவம்)

ஆடி மாதம் அம்மன் மாதம்

(Pic Courtesy – Vanitha Dhanapal)

டி மாதம் தக்ஷிணாயனம் ஆரம்பிக்கும்

தை மாதம் ஆரம்பிக்கும் உத்தராயன புண்ய காலம் ஆடி ஒன்று வரை நீடிக்கும். ஆடி ஒன்றாம் தேதி அன்று தான் சூரியன் தன் தேரைத் தெற்கு நோக்கித் (சரியாச் சொன்னால் தென்கிழக்கு) திருப்புகிறான்

ஆடி மாதத்தில் இருந்து மார்கழி வரை தக்ஷிணாயனம் ஆகும். தேவர்களின் மாலை நேரம். மார்கழி மாதம் தேவர்களின் உதய காலம் என்பார்கள்.

ஆகவே இப்போது தொடங்குவது அவர்கள் மாலை நேரம். பொதுவாகவே புண்ய காலங்களில் நதிகளில் ஸ்நானம் செய்வது உகந்ததாய்ச் சொல்லப்பட்டாலும், ஆடி மாதம் விசேஷமானது

ஆனால் ஆடி மாதம் முதல் நாலைந்து நாட்களுக்கு எந்த நதியிலும் நீராடமாட்டார்கள். ஏனெனில்  முதல் 3 நாட்களுக்குப் பெண்களுக்கு ஏற்படும் மாத விடாய் போல “ரஜஸ்வலா” என்னும்  தீட்டு ஏற்படுவதால் அந்த நாட்களில் புண்ணிய நதிகளில் நீராடுவது இல்லை. அதன் பின்னரே நீராடலாம்

டி மாதத்தில் செவ்வாய்க்கிழமைகள் சிறப்பாகச் சொல்லப்படும். அந்தக் கால கட்டங்களில் சுமங்கலிப் பெண்கள் மஞ்சள் தேய்த்துக் குளித்துவிட்டு ஔவையார் விரதம் இருப்பார்கள்

இந்த விரதத்தில் ஆண்கள் பங்கேற்க முடியாது. பெண்களுக்கு மட்டும் எனத்தனித்துச் சொல்லப்படும் விரதம். ஆனாலும் மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கைக்காகவும், குழந்தைகள் பிறக்கவும், கன்னிப் பெண்களுக்குத் திருமணம் ஆகவும் சிறப்பாகப் பிரார்த்தித்துக் கொள்வார்கள்

இதைத் தவிரவும் மங்கல கௌரி விரதமும் கடைப்பிடிப்பார்கள். பொதுவாகப் பெண்கள் திருமணம் ஆகிக் கருவுற்றால் ஐந்தாம் மாதம் வளைகாப்புச் செய்வது உண்டு

அந்த வழக்கப்படி பங்குனி உத்திரத்தில் திருக்கல்யாண உற்சவம் காணும் அம்பிகையருக்கு, ஆடி மாதம் வளையல் அலங்காரம் செய்து இன்புறுவதும் வழக்கம்

அன்றைய தினம் அனைத்துக் கோயில்களிலும் உள்ள அம்பிகையருக்கு, சிறப்பு வளையல் அலங்காரம் வெகு விமரிசையாக நடைபெறும். ஆண்டாள் திருநக்ஷத்திரம் ஆன ஆடிப்பூரத்தன்றும் பெரும்பான்மையான கோயில்களில் வளையல் அலங்காரம் நடைபெறும்.

டி மாதத்தைக் கணக்கிட்டே பண்டிகைகள் தொடங்குகின்றன. ஆடி அழைத்து வரும், யுகாதி ஓட்டும் என்பார்கள். ஏனெனில் பெரும்பாலான பண்டிகைகள் தக்ஷிணாயனத்திலேயே கொண்டாடப்படுகின்றன

ஆடி மாதம் முழுவதும் கிராமப்புறக் காவல் தெய்வங்களான கருப்பண சாமி, ஐயனார், மதுரை வீரன், மாடசாமி,, மாரியம்மன், திரௌபதி அம்மன், காளி அம்மன் போன்றோருக்கான சிறப்பு விழாக்கள் எடுக்கப்படும்

கும்பகோணம் மடத்துத் தெரு காளி அம்மன் கோயிலில் பச்சைக்காளி, சிவப்புக்காளி வேஷமிட்டுக்கொண்டு காளி ஆட்டம் ஆடுவார்கள். அப்போது பெண்கள் இதற்கெனச் சிறப்பாகத் தனியாக விரதம் இருந்து வேஷம் கட்டுவார்கள், உக்கிரமாகவும் இருப்பார்கள்

நெல்லை மாவட்டம் சங்கரன் கோயிலில் கோமதி அம்மன் ஆடி மாதம் தபஸ் இருந்து ஈசனை மணந்தாள் எனச் சொல்வதால், அங்கே ஆடித் தபஸு உற்சவம் விமரிசையாகக் கொண்டாடுவார்கள்

எல்லாவற்ரையும் விடச் சிறப்பானது என்னவெனில், நம் நாட்டைப் போன்ற பருவ மழையை எதிர்பார்த்திருக்கும் விவசாய நாட்டில், இந்தச் சமயங்களில் பெய்யும் தென்மேற்குப் பருவமழையால் எல்லா நதிகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும்

தமிழ்நாட்டுக்கெனச் சிறப்பாக இருக்கும் காவிரி ஆற்றில் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்யும் மழையால் வெள்ளம் நிறைவாக இருக்கும்

இந்தப் புது வெள்ளம் வருவதை வைத்து, ஆடி மாதம் பதினெட்டாம் தேதி அன்று, “ஆடிப் பெருக்கு” எனப் பண்டிகையாகக் கொண்டாடி, கலந்த சாதங்கள் செய்து, நதிக்கரையில் அமர்ந்து மக்கள் கூட்டம் கூட்டமாக உண்பார்கள்

அப்போது நதிகளுக்குக் காணிக்கையாகப் புடைவை, மலர் மாலைகள், கருகமணி, பிச்சோலை போன்றவை போட்டு தீப ஆராதானை காட்டி நதித் தாய்க்குப் பூஜை செய்வார்கள். பெண்கள் தங்கள் தாலிச் சரடைப் பிரித்துக் கட்டிக் கொள்வார்கள்

ஆடி மாதத்தின் பதினெட்டாம் நாளில் இருந்து நீர் பெருகும் என்பது நம்பிக்கை. ஆகையால் தங்கள் மணவாழ்விலும் பெருகி மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டிக் கொண்டு மங்கல நாணை மாற்றிக் கொள்வார்கள். 

புதிதாகத் திருமணம் ஆன புதுமணத் தம்பதிகள் தலை ஆடிக்கு மாப்பிள்ளை தன் மனைவியுடன்  மாமியார் வீட்டிற்குச் சிறப்பான விருந்துக்குச் செல்வார்கள்

மாப்பிள்ளைகளுக்குச் சிறப்பான பரிசுகள், புதுத்துணிகளாகவும், நகைகளாகவும் வெள்ளிப் பாத்திரங்களாகவும் வழங்கப்படும். இதைத் தவிர அன்று தேங்காய்ப்பாலில் வெல்லம் போட்டுக் காய்ச்சி வெள்ளி டம்பளரில் மாப்பிள்ளைக்குக் கொடுப்பார்கள்

“ஆடிக்கு அழைக்காத மாமியாரைத் தேடிப் பிடித்துச் செருப்பால் அடி!” என சில வட்டார வழக்கில் விளையாட்டாகச் சொல்லுவார்கள்

ஆடி மாதம் புதிதாய்க் கல்யாணம் ஆன கணவன், மனைவி சேர்ந்து இருந்தால், அடுத்த சித்திரையில் கடுங்கோடையில் குழந்தை பிறக்கும் என்பதால், கணவன் மனைவியைப் பிரித்து வைப்பது உண்டு

மாமியார் தன் மருமகளை (பெண்ணை)ப் பிறந்த வீட்டிற்கு அனுப்பி விடுவார்கள்.  பெண் திரும்பிப் புக்ககம் வரும்போது சிறப்பான சீர் வரிசைகளும் கூட வரும்.

ஆண்டாளின் அவதாரத் திருநாளான “ஆடிப்பூரம்” இந்த மாதமே வரும். ஸ்ரீவில்லிபுத்தூரில் சிறப்பாகக் கொண்டாடப்படும். ஆடி மாதத்தில் அனைத்து அம்மன் கோயில்களிலும் அம்மனின் சக்தி பரிபூரணமாக இருக்கும் என்பது ஐதிகம் என்பதோடு, கண்கூடாகவும் காணலாம்

தக்ஷிணாயன புண்ணிய காலமான ஆடி மாதத்தில் தான் பொறுமையின் சிகரமான பூமா தேவியின் அவதாரம் என்பது ஆண்டாளின் அவதாரத்தோடு பொருந்தியும் போகிறது அல்லவா? 

மேலும் சொல்ல வேண்டுமெனில் விவசாயிகளுக்கும் மகிழ்ச்சியைத் தரும் ஆடி மாதத்தில் “ஆடிப்பட்டம் தேடி விதை” என்பதற்கேற்ப, விவசாய வேலைகள் ஆரம்பிப்பார்கள்.  ஆடியில் விதை விதைத்தால் தை மாதம் அறுவடை செய்துவிடலாம். நல்ல மகசூல் வரும் என்பது நம்பிக்கை. 

ஆடி மாதத்தில் காவல் தெய்வங்கள் குடி இருக்கும் கோயில்களில் “ஆடிக் கூழ்” காய்ச்சி அனைவருக்கும் கொடுப்பார்கள். பல்வேறு தானியங்களும் போட்டு, தேங்காய்கள், காய்கள் மற்றும் மூலிகைகள் சேர்த்துக் காய்ச்சப்படும் இந்தக் கஞ்சிப் பிரசாதம் உடலுக்கு நல்லது எனச் சொல்லப்படுகிறது

ஆடி மாதம் சுவாதி நக்ஷத்திரத்தில் கருடன் பிறந்ததாகவும், ஆடிப் பௌர்ணமிக்கு ஹயக்ரீவர் அவதாரம் நிகழ்ந்ததாகவும் சொல்வார்கள்

ஆடி மாதம் முழுவதுமே அம்பிகைக்கு உகந்த  மாதம் என்றாலும், ஆடிக் கிருத்திகையில் முருகனும், ஆடிப் பௌர்ணமியில் ஹயக்ரீவரும், ஆடி சுவாதியில் கருடாழ்வாரையும் தரிசித்தல் சிறப்பாகச் சொல்லப்படுகிறது

அது மட்டுமில்லாமல் ஆடி மாதத்தின் அனைத்துச் வெள்ளிக் கிழமைகளில் அம்பிகைக்குச் சிறப்பு வழிபாடுகள் செய்யலாம். ஆடி மாதம் முழுவதும் பக்தி பூர்வமாக இருந்து அம்பிகையின் அருளைப் பெற்று உய்வோம் !!!

‘கீதா சாம்பசிவம்’ என்னும் பெயரில் நான் பதினைந்து வருடங்களாக இணையத்தில் எழுதி/உலவி வருகிறேன். குறிப்பிட்டுச் சொல்லும்படியான தனித் திறமைகள் எதுவும் இல்லை. ஆனால் புராணங்கள், இதிகாசங்கள், பாரம்பரியம் ஆகியவற்றில் உள்ள முக்கியமான விஷயங்களை இளைய தலைமுறையினருக்குக் கொண்டு செல்வதை ஆர்வத்துடன் செய்து கொண்டிருக்கிறேன்

பல கோயில்கள், இதிகாச சம்பந்தப்பட்ட இடங்கள், திருக்கயிலை, போன்றவற்றிற்குப் பயணம் செய்து அவற்றைக் குறித்த தகவல்களையும் கொண்டு சேர்த்து வருகிறேன்

இப்போது “தென்னிந்தியப் பாரம்பரியச் சமையல்”களில் முக்கியமானவற்றை இடுகைகளாகத் தொகுத்து, அவற்றை மின்னூலாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன்

நான் கணினியில் எழுத ஆரம்பித்ததில் இருந்து இன்று வரை, என் கணவர் என் எழுத்திற்கு உறுதுணையாகவும் சமயங்களில் ஆலோசனைகளும் சொல்லி வருகிறார்  

“பிள்ளையார், பிள்ளையார்”, “கதை கதையாம் காரணமாம்”, “ஓம் நமசிவாய”, “உபநயனம்”, “யோகாசனம்”, “லலிதாம்பாள் சோபனம்”, “மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால்” (திருப்பாவை பற்றிய விளக்கம்)” ஆகிய மின்னூல்கள் க்ரியேடிவ் காமன்ஸ் மூலம் வெளி வந்திருக்கின்றன. தொடர்ந்து எழுதி வரவும் ஆண்டவனைப் பிரார்த்திக்கிறேன்

புவனாவுடன் (சஹானா கோவிந்த்) என் நட்பு பத்து வருடங்களுக்கும் மேலானது. அவர் மூலம் பல இனிய நட்புகளையும் பெற்றிருக்கிறேன்

நகைச்சுவை உணர்வு அதிகம் உள்ள புவனாவின் (சஹானா கோவிந்த்) பல எழுத்துக்கள், அச்சு வடிவிலும் வெளி வந்திருக்கின்றன என்பதில் சந்தோஷம்

இந்தத் தளம் சிறப்பாக இயங்கவும், இணைய உலகில் பேராதரவைப் பெறவும், எல்லாம் வல்ல ஈசனைப் பிரார்த்திக்கிறேன்.  புதிய தளத்திற்கு என் மனமார்ந்த நல்வாழ்த்துகள்

 

கீதா சாம்பசிவம் அவர்கள் பற்றி :-

கீதா மாமி என்றும், கீதா பாட்டி (😀) என்றும், இணையத்தில் பிரபலமான  கீதா சாம்பசிவம் அவர்கள்,  நிறைய விஷய ஞானம் உள்ளவர்

ஆனால் மிகவும் சாதாரணமாய் இருப்பார். அதுவே அவரது தனிச் சிறப்பு. அவரது “தென்னிந்தியப் பாரம்பரியச் சமையல்” பற்றிய புது மின்னூலை, வாசிக்க காத்திருக்கிறேன் 

மாமி சொன்னது போல், பத்து வருட நட்பு எங்களுடையது. இருமுறை அவரது திருச்சி இல்லத்திற்கு சென்றிருக்கிறேன், அவரது கைப்பக்குவத்தையும் ருசித்திருக்கிறேன்

முதல் முறை சென்றே போதே, வீட்டில் ஒருவர் போல் உணரச் செய்தது அவரது இயல்பான அணுமுகுறை 

ஆடி மாத சிறப்பு பதிவை அளித்தமைக்கு நன்றி மாமி. வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி 

கீதா சாம்பசிவம் அவர்களின்  வலைத்தளங்களில், சமையல், ஆன்மிகம், பயணம், புகைப்படங்கள் இன்னும் ஏராளமான விஷயங்கள் இருக்கின்றன. அவரது வலைப்பக்க இணைப்புகளை (Links) இங்கு கொடுத்திருக்கிறேன். வாசித்து மகிழுங்கள் / பயன் பெறுங்கள்  

எண்ணங்கள்

சாப்பிடலாம் வாங்க

என் பயணங்களில் 

ஆன்மிக பயணம் 

கண்ணன் வருவான் 

சஹானா இணைய இதழில், அடுத்த ஆன்மீக பதிவு வெளியிடப்படும் போது, Auto Notification மூலம் Email பெற விரும்பினால், கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை (Link) கிளிக் செய்து, Subscribe செய்யலாம். நன்றி

https://sahanamag.com/subscribe/

என்றும் நட்புடன்,

சஹானா கோவிந்த்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

8 Comments

  1. சகோதரி கீதா சாம்பசிவத்திற்கும் , இணைய இதழ் தொடங்கியிருக்கும் சகோதரிக்கும் வாழ்த்துகள். உங்கள் இணைய இதழ் குறித்து வெங்கட்ஜி அவர்களின் தளத்திலும் தற்போது சகோதரி கீதா சாம்பசிவம் தளத்திலும் அறிந்து கொண்டோம்.

    துளசிதரன்

    கீதாக்கா வாழ்த்துகள்! கட்டுரை சிறப்பு.

    அப்பாவி தங்கமணி (புவனா கோவிந்த்) உங்களுக்கும் வாழ்த்துகள்! ஆதியும் எழுதியிருந்தாங்க உங்கள் இதழ் குறித்து.

    கீதா

    • வாழ்த்துக்கு மிக்க நன்றி துளசிதரன் சார்  
      மிக்க நன்றிங்க கீதா’ம்மா 

      சஹானா இணைய இதழ் பற்றி பகிர்ந்த, ஆதி, வெங்கட் அண்ணா, கீதா மாமி எல்லாருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் 

Sirudhaniya Pakkoda

சிறுதானிய முருங்கை பக்கோடா (ஆதி வெங்கட்)

ஆசிரியர் பக்கம் – August 2020