சமையல்

சிறுதானிய முருங்கை பக்கோடா (ஆதி வெங்கட்)

Sirudhaniya Pakkoda

சிறுதானியங்களில் ஊட்டச்சத்து நிறைந்து காணப்படுகிறது. இப்போதெல்லாம் அரிசிக்குப் பதிலாக சிறுதானியங்களை நிறைய பேர் உண்டு வருகிறார்கள். எடை குறைத்தலுக்கு சிறுதானியங்கள் மிகவும் பயன்படுகின்றன. இதைத் தொடர்ந்து உண்பதால் நோய் எதிர்ப்பு சக்தி மேம்படுகிறது

எங்கள் வீட்டில் சில வருடங்களாகவே அடைக்கு அரைப்பது என்றால் அது சிறுதானியங்களை வைத்து தான். வரகு, சாமை, திணை, குதிரைவாலி என்று நான்கையும் வாங்கி கலந்து வைத்துக் கொள்வேன்

அடைக்கு அரைப்பது என்றால் சிறுதானியங்களுடன் கடலைப்பருப்பு, துவரம்பருப்பு மற்றும் ஏதேனும் ஒரு பயறு வகைகளை முளைகட்டி அதையும் சேர்த்து அரைத்துக் கொள்வேன்

சிறுதானியங்களுடன் பருப்புகள், பயறு வகைகள் என எல்லாம் சேரும் போது முழுமையாக உணவாக மாறிவிடுகிறது. முருங்கைக் கீரையில் நிறைந்துள்ள சத்துகள் பற்றி அனைவரும் அறிந்ததே, அதுவும் சேரும் போது சத்துக்களுக்கு சொல்லவும் வேண்டுமா!

இப்போது நாம் பார்க்கப் போவது இந்த அடைமாவில் சட்டென்று மாலைநேர கரகர, மொறுமொறு ஸ்நாக் செய்யலாம் வாங்க!

தேவையான பொருட்கள்:-

 • சிறுதானியங்கள் – 1 தம்ளர்
 • கடலைப்பருப்பு – ¾ தம்ளர்
 • துவரம்பருப்பு – ¼ தம்ளர்
 • ஏதேனும் ஒரு பயறு வகை – 1 கைப்பிடி
 • வரமிளகாய் – 4 (அ) 5
 • கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு
 • பெருங்காயத்தூள் – ½ தேக்கரண்டி
 • இஞ்சி – ஒரு சிறு துண்டு
 • உப்பு – தேவையான அளவு
 • எண்ணெய் – பொரிக்க
 • முருங்கைக்கீரை – 1 கப்
 • ரவை – (மாவு தளர்வாக இருந்தால்) 2 தேக்கரண்டி

செய்முறை:-

 • சிறுதானியங்கள், பருப்புகள், பயறு என அனைத்தையும் நீரில் நன்கு சுத்தம் செய்து இரண்டு மணி நேரமாவது ஊறவிடவும்
 • பின்பு அதனுடன் வரமிளகாய், இஞ்சி, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை, கொத்தமல்லி என அனைத்தையும் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும்
 • அரைத்த மாவுடன் உப்பு, முருங்கைக் கீரையும் சேர்த்து கலந்து அடையாக செய்யலாம்
 • இதனுடன் வெங்காயம் மற்றும் தேங்காய்த்துருவலும் சேர்த்துக் கொள்ளலாம். நம் விருப்பம் தான்.  
 • மாவு சற்று தளர்வாக இருந்ததால் சிறிது ரவை சேர்த்து  மாவை ஸ்பூனால் எடுத்து சூடான எண்ணெயில்  போட்டு பொரித்து எடுக்கலாம்.

எண்ணெயில் பொரித்து எடுப்பதைத் தவிர வயிற்றுக்கு கெடுதல் செய்யக்கூடியது இதில் ஒன்றுமில்லை. என்றேனும் ஒருநாள் எண்ணெய்ப் பலகாரம் சாப்பிடுவதில் தவறொன்றுமில்லை என்று நினைக்கிறேன்

பக்கோடா பொன்னிறமானதும் எடுக்கவும். வீட்டில் இருப்பதை வைத்து சட்டென்று ஒரு கரகர மொறுமொறு ஸ்நாக், சாஸுடனோ, சட்னியுடனோ  சுவைத்து மகிழுங்கள். நன்றி

ஆதி வெங்கட் பற்றி:-

படித்தது பொறியியல் துறை என்றாலும், இப்போது எல்லோருக்கும் “ஆதி வெங்கட்” என்றாலே நினைவுக்கு வருவது அவரது சமையல் தான். சிறுவயது முதலே சமையல் செய்வதில்  அவருக்கு ஒரு ஈர்ப்பு உண்டு என்கிறார்

புத்தகங்கள், தொலைக்காட்சி, இணையம் என பார்த்து சமைத்து சுவைத்து, அதில் சிறந்தவைகளை நமக்கும் இணையம் மூலம் பகிர்கிறார். ஆர்வமும், விடாமுயற்சியும் இருந்தால் யாராலும் சுவையாக சமைக்க முடியும் என்கிறார் ஆதி

பத்து வருடங்கள் முன் இணையத்தில் எழுதத் தொடங்கிய நாட்களிலேயே ஆதியின் அறிமுகம் எனக்கு உண்டு என்றாலும், 2018 செப்டம்பரில் ஸ்ரீரங்கம் ரங்கநாதரை தரிசிக்கச் சென்ற போது தான் ஆதியின் சமையலை ருசிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. சமையலுக்கு மட்டுமல்ல, விரும்தோம்பலிலும் ஆதி ‘ஆதி’ தான். சஹானா இணைய இதழுக்காக பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி தோழி

ஆதி வெங்கட் Amazonல் மூன்று புத்தகங்களை வெளியிட்டிருக்கிறார். இரண்டு புத்தகங்கள், மற்றது பயணம். சமையல் புத்தகத்தில் நிறைய நல்ல ரெசிபிக்கள் காணக் கிடைத்தது. பயணப் புத்தகமும் சுவாரஷ்யமாக எழுதி இருக்கிறார் ஆதி.நீங்களும் வாங்கி பயனடைய லிங்க் இதோ:-

ஆதியின் அடுக்களையிலிருந்து…

இரு பயணங்கள் 

லாக் டவுன் ரெசிபீஸ் 

என்றும் நட்புடன்,

சஹானா கோவிந்த்

 

Similar Posts

6 thoughts on “சிறுதானிய முருங்கை பக்கோடா (ஆதி வெங்கட்)
 1. முகநூலிலும், பதிவிலும் படித்தேன், ரசித்தேன், முருங்கைக்கீரையை இங்கே வெறும் அரிசி அடையிலும், சாதாரணமாக அடைக்கு அரைக்கும் மாவிலும் சேர்ப்பேன். சூப் பண்ணுவேன். முருங்கைக்கீரை, தேங்காய், பருப்பு சேர்த்துப் பொரியல் (கறி) பண்ணுவேன். பருப்பு உசிலி பண்ணுவேன். உசிலிக்கு அரைத்துவிட்டுக் கீரையை நன்கு ஆய்ந்து நறுக்கி அரைத்ததோடு சேர்த்து வேட்டில் (இட்லித்தட்டில்) வேக வைத்துப் பின்னர் தாளித்து உதிர்க்கணும். குழம்பும் பண்ணலாம். முருங்கைக்காய் போட்டாப்போல் மணக்கும்.

 2. பகோடா படம் கவர்கிறது.  நாவில் சுவை நரம்புகள் உயிர் பெற்றன! 

 3. ரெசிப்பி நன்றாக இருக்கிறது ஆதி!

  படம் சூப்பர்.

  கீதா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
%d bloggers like this: