in

புகழினி (சிறுகதை) – எழுதியவர் : ஜெயந்தி ரமணி – December 2020 Contest Entry 10

புகழினி (சிறுகதை)

“அம்மா”

“சொல்லு புகழ்”

“அம்மா உனக்கு ஞாபகமிருக்கா? என்னோட டீச்சர் மணிமேகலை”

“உன்னோட தமிழ் ஆசிரியை தான. நீ கூட சொல்லுவியே செய்யுளை கூட அழகா பாடுவாங்க, அதனால சுலபமா மனப்பாடம் ஆகிடும்னு”

”ஆஹா, என்ன ஒரு ஞாபக சக்தி’ம்மா உனக்கு. கிட்டத்தட்ட 15 வருஷம் ஆச்சு நான் ஸ்கூல்  முடிச்சு,  எப்படிம்மா?”

“நல்ல விஷயங்களை மறக்க முடியாது புகழ்”

“சூப்பர்’ம்மா, அப்புறம் அவங்க இன்னிக்கு என்னை பார்க்க ஆபிசுக்கு வந்திருந்தாங்க”

“பிரச்னை மகனுக்கா, மகளுக்கா? இல்ல வேற யாருக்காவதா?”

“அவங்க மகளுக்குத்தாம்மா, நான் அவங்கள வர ஞாயித்துக்கிழமை நம்ப வீட்டுக்கு மகளை அழைச்சுக்கிட்டு வரச் சொல்லியிருக்கேன். சாரி கேக்க நேரமில்லை, அதான் உன்கிட்ட கேக்காமயே சொல்லிட்டேன்”

“என்ன பேச்சு பேசற? உன் வீட்டுக்கு யாரையும் வரச் சொல்ல உனக்கு உரிமை இருக்கு பெண்ணே.  சரி நாளைக்கு வெள்ளிக்கிழமை, நீ சீக்கிரம் கிளம்புவ, போய்த் தூங்கு”

”சரிம்மா”

__________________________

”அம்மா, கோயிலுக்கு வந்தா மனசே நிம்மதி ஆய்டுதில்ல. பிரகாரம் எல்லாம் சுத்திட்டோமே, இங்க கொஞ்ச நாழி உட்கார்ந்துட்டு போலாமா?”

”ம்ம்ம்… ஏதோ சொல்லணும்னு நினைக்கிற, சொல்லு சொல்லு”

“எனக்கு ஒரு விஷயம் புரியலம்மா. முந்தைய தலைமுறைப் பெண்கள் கூட்டுக் குடும்பத்துல ரொம்பவும் சிரமப்பட்டிருக்காங்கனு சொல்லுவியே.  ஆனா இந்தக் காலத்துல, சில பெண்களுக்கு மாமியார், மாமனார், நாத்தனார், கொழுந்தனார்னு சொந்தங்களே இல்லாதப்பவும் கணவர் ஒருத்தரோட மட்டுமே அனுசரிச்சுப் போக முடியலையே.”

“ம்ம்…அதெல்லாம் கூட்டுக் குடும்பத்தோட மகிமை. கூட்டுக் குடும்பங்கள் சிதைந்து போனதால, இந்த காலத்துல இவங்களுக்கு எடுத்துக்காட்டா இருக்கவும், நல்லதை சொல்லிக் கொடுக்கவும் யாரும் இல்லை.  அப்படியே சொல்லிக் கொடுத்தாலும் கேட்க அவங்க தயாராகவும் இல்லை.  புகழ், நீ எத்தனையோ பேரோட பிரச்னைகளை சுலபமா தீர்த்திருக்க.  ஆனா உன் ஆசிரியையை சந்தித்ததுல இருந்து ரொம்ப சிந்திக்கற”

“இருக்கலாம்மா, அவங்களோட சோகம் தோய்ந்த முகம் என்னை ரொம்பவும் வாட்டுது.  பாவம் சின்ன வயசிலயே அவங்க கணவர் அவங்கள விட்டுட்டு இன்னொரு பெண்ணை திருமணம் செய்துக்கிட்டு போயிட்டார்.  இந்தப் பெண்ண வளர்த்து ஆளாக்க தனி ஆளா எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பாங்க.  பெண்ணாவது அவங்கள சந்தோஷமா வெச்சுக்கலாம் இல்லையா?”

“நல்லதே நடக்கும்னு நம்பு. சரி கிளம்பலாம்.  நேரமாகுது”

__________________________ 

”வாங்க வாங்க”

“வணக்கம்மா, புகழ் இது என் மகள் ஆஷிகா.  இது என் பேத்தி நிஷா”

“நிலாவா”

“இல்லம்மா நிஷா”

“முழுநிலவப் போல அழகா இருக்கா, அதான் நிலாவானு கேட்டுட்டேன்.  அட என்னமோ ரொம்ப தெரிஞ்ச மாதிரி சிரிக்கறாளே”

”ஆமாம்மா, இவளுக்கு வேத்து முகம் இல்ல, சட்டுனு ஒட்டிக்குவா. ஆஷிகா, இது என்னுடைய மாணவி புகழினி.  பத்து, பன்னிரண்டு இரண்டு வகுப்புகளிலும் மாநிலத்திலேயே முதலாக வந்தவள்.  இது அவங்க அம்மா”

“வணக்கம் அக்கா, வணக்கம் அம்மா”

”உட்காருங்க, இதோ வரேன்”

“இந்தாங்க, குழந்தைக்கு சில்லுனு இல்லாம பழச்சாறு, உங்களுக்கும் ரொம்ப சில்லுனு இருக்காது”

“எதுக்கும்மா இதெல்லாம்?”

“நீங்க மதியம் கண்டிப்பா இங்க தான் சாப்பிடணும்.”

“எதுக்கும்மா உங்களூக்கு சிரமம்”

“சிரமமா? யாராவது இப்படி வரமாட்டாங்களானு நான் ஏங்கிக்கிட்டிருக்கேன். காலையிலேயே எல்லாம் தயார் செய்து வெச்சுட்டேன்.  சொல்லு புகழ்”

”அம்மா, அவங்களுக்கு வீட்டை சுத்தி காட்டிட்டு பேசிக்கிட்டிருங்க. நான் ஆஷிகாவை என் அறைக்கு அழைச்சுட்டு போறேன்.”

”சரி புகழ், வாங்க நாம என் அறைக்குப் போகலாம்”.

__________________________ 

”அம்மா, வீட்டை இவ்வளவு அருமையாக வெச்சிருக்கீங்களே”

“அதவிட எனக்கு வேறென்ன வேலை, நிஷாக்குட்டிக்கு தூக்கம் வரது போல இருக்கே”

“அருமையான குழந்தை’ம்மா என் பேத்தி. ஒரு வயசு தான் ஆகறது,  படுத்தல் இல்லை, சொன்னத புரிஞ்சுக்கறா. மாப்பிள்ளையும் ரொம்ப நல்லவர், என் மகள் தான் அவரை சரியா புரிஞ்சுக்கலை. பாவம்… திருடனை மாதிரி இவ வேலைக்குப் போன நேரம் பார்த்து நிஷாவ பார்த்துட்டுப் போறார்.  ஆஷிகா எங்க வீட்டுக்கு வந்து விளையாட்டுப் போல ஆறு மாசம் ஆயிடுச்சும்மா”

“கவலைபடாதீங்க… ஆஷிகா நல்ல பெண்ணா தான் தெரியறா, எல்லாம் சரியாயிடும். நிஷாவை இப்படி கட்டில்ல படுக்க வைங்க”

“அம்மா, நீங்க ஏன் இன்னும் புகழினிக்கு திருமணம் செய்து வைக்கல”

“ம்ம்ம்… அது ஒரு பெரிய கதை”

__________________________

”அக்கா, நான் பொதுவா ரொம்ப யார்கிட்டயும் பேச மாட்டேன். ஆனா உங்கள பார்த்தா என்னமோ ரொம்ப காலம் பழகின மாதிரி தோணுது. இவ்வளவு புத்தகங்களா? இதெல்லாம் நீங்க படிப்பீங்களா?”

“ஆமா, இதெல்லாம் எங்க அப்பாகிட்ட கத்துக்கிட்டது,  அவரும் நிறைய புத்தகங்கள் படிப்பார்”

”உங்க அறையை அழகா சுத்தமா வெச்சிருக்கீங்க”

“அது எங்க அம்மாகிட்ட கத்துக்கிட்டது. ஆஷிகா, யார்கிட்ட என்ன நல்லது இருக்கோ அத நாம கத்துக்கிட்டு அதன்படி நடந்தா, நம்ப வாழ்க்கை அருமையா இருக்கும்”

“அக்கா நான் உங்கள ஒண்ணு கேட்டா தப்பா நினைக்கமாட்டீங்களே”.

“தாராளமா கேளு”

“அக்கா, நீங்க ஏன் இன்னும் திருமணம் செஞ்சுக்கல?”

”இவ்வளவு தானா”

__________________________

புகழினிக்கு திருமணம் எப்பவோ ஆயிடுத்து. அவளுக்கு 18 முடிந்த உடனேயே எங்க நாத்தனார் மகனுக்கும், அவளுக்கும் திருமணம் ஆச்சு.  ஆரம்பத்துல எங்களுக்கு இஷ்டமே இல்லை.  ஆனா என் மாமனார், மாமியார் கட்டாயப்படுத்தவே திருமணம் செய்து கொடுத்தோம். கல்லூரியில் படிக்கிற பெண்ணை திருமணம் ஆன பிறகும் படிக்க வைக்கிறேனு சொன்னாங்க. ஆனா முதல் கோணல் முற்றும் கோணல்ன்னு ………………”

__________________________

”எனக்கு திருமணமாகி, விவாகரத்தும் ஆயிடுத்து.”

“என்னக்கா சொல்றீங்க?”

”காலேஜ் செகண்ட் இயர் படிக்கும் போதே எனக்கும், என் அத்தை மகனுக்கும் கல்யாணமாச்சு. ஆனா கல்யாணத்துக்கப்புறம் தான், அவர் எல்லா கெட்ட பழக்க வழக்கங்களுக்கும் அடிமைனு தெரிய வந்தது.  அவருக்கு கல்யாண வாழ்க்கையில துளிக்கூட நாட்டமில்ல,அத்தையை சொல்லியும் குத்தமில்லை.  திருமணமானா மகன் திருந்திடுவான்னு நினைச்சாங்க… ஆனா அவரு… திருந்தற வழியா இல்லை”

“என்னக்கா இவ்வளவு பெரிய விஷயத்த இவ்வளவு சாதாரணமா சொல்லறீங்க?”

”என்ன செய்ய முடியும்? தப்பு செஞ்சுட்டோம்ங்கற வருத்தத்திலயே எங்க திருமணத்துக்குக் காரணமா இருந்த தாத்தாவும், பாட்டியும் போய் சேர்ந்துட்டாங்க. கெட்டதுலயும் ஒரு நல்லது,  நம்புவயோ இல்லையோ நான் இன்னும் கன்னி தான் ஆஷிகா.  ஒரு கட்டத்துல மகன் திருந்த மாட்டான்னு முடிவு செய்து என் அத்தையே பரஸ்பர ஒப்புதலுடன் எனக்கு விவாகரத்து வாங்கிக் கொடுத்துட்டாங்க”

“அக்கா நான் உங்கள ஒரு விஷயம் கேக்கலாமா?”

”தாராளமா கேளு”

“ஒருவேளை உங்க கணவர் திருந்தி வந்தா ஏத்துப்பீங்களா?”

__________________________

“தவமிருந்து பெத்த ஒரே பொண்ணு வாழ்க்கையை இழந்து நிக்கறத பாத்து, மகளுக்கு துரோகம் செஞ்சுட்டோம்னு புலம்பிக்கிட்டே இருந்த புகழோட அப்பா,  மூணு மாசத்திலயே மாரடைப்புல இறந்துட்டார். நானும் விட்டுட்டுப் போயிட்டா எங்க மகளோட நிலமை என்ன ஆகறதுனு ,  எந்த கஷ்டத்தையும் புகழ் எதிர காட்டாம அவளுக்காகவே ஒரு புன்னகை முகமூடியோட வாழ்ந்துக்கிட்டிருக்கேன்”

”என்னம்மா இது, இதை நான் எதிர்பார்க்கவே இல்லை. இந்தப் பெண்ணுக்கு இவ்வளவு சோதனையா?”

__________________________ 

”அதுக்கு வாய்ப்பில்ல ஆஷிகா, போன வருஷம் குடிச்சுட்டு வண்டி ஓட்டும் போது விபத்து ஏற்பட்டு அவர் காலம் முடிஞ்சுடுத்து.”

“அக்கா அப்ப…”

“என்ன கேக்கப் போற, வேற யாரையாவது திருமணம் செய்துக்கலாமேன்னு தானே. எனக்கு இன்னொரு திருமணம் செய்துக்க விருப்பம் இல்லை.  அப்பா இறந்ததும் மேலே படிச்சேன்,  முதுகலை பட்டப்படிப்பை முடிச்சுட்டு சட்டம் படிச்சேன்.  ஒரு பெண் வக்கீலிடம் உதவியாளராக சேர்ந்தேன்.  கொஞ்ச நாட்களிலேயே அவர் என்னை வெளியே அனுப்பி விட்டார், பின்ன வர விவாகரத்து வழக்கோட ஜோடிகளை எல்லாம் சேர்த்து வெச்சா என்ன செய்வாங்க அவங்க.  அப்பறம் அப்பாவோட நண்பர், அவர் நடத்தற தொண்டு நிறுவனத்தை நிர்வகிக்கற பொறுப்பை என்கிட்ட கொடுத்தார், அவர் கட்டாயப்படுத்தி கொடுக்கற சம்பளம் பத்தாயிரம் ரூபாயயும் அங்க இருக்கற குழந்தைகளுக்கே செலவழிச்சுடுவேன்.  அப்பாவோட ஓய்வூதியம், சிக்கனமா இருந்து அம்மா சேர்த்த பணம் இது எல்லாம் போதுமே எங்க ரெண்டு பேருக்கும்.  எங்க காலத்துக்கு அப்புறம் இந்த வீடு, பணம் எல்லாத்தையும் அந்த தொண்டு நிறுவனத்துக்கே கொடுத்துடலாம்னு இருக்கோம்”

“அக்கா உங்ககிட்ட பேசிட்டு இருக்கற ஒவ்வொரு நிமிஷமும்… என் மனசுல நீங்க உயர்ந்துகிட்டே போறீங்க”

”ஆஷிகா, இந்த உலகத்துல எவ்வளவோ நல்லவங்க இருக்காங்க, நல்ல விஷயங்கள் இருக்கு. ஆனா அதெல்லாம் நம்ப கண்ணுக்கும், கருத்துக்கும் வரதில்ல”

__________________________

“ஆஷிகா நிஷா எழுந்துட்டா, உன்ன தேடுறா வா”

“வா புகழ் எல்லாரும் ஒண்ணா சாப்பிடலாம்”

“ம்மா…ப்பா?”   என நிஷாகுட்டி அவள் அம்மா ஆஷிகாவிடம் கேட்க

“அப்பாவா! சாயங்காலம் போய் அப்பாவ பாக்கலாம் நிஷாக் குட்டி” என்றாள் ஆஷிகா புன்னகையுடன்

ஆறு மாதங்களாக மருமகனைப் பற்றி ஒரு வார்த்தை கூட பேசாத மகள், அரைமணி நேரம் புகழினியுடன் பேசியதில் அவரைப் பார்க்கப் போகலாம் என்று சொன்னதைக் கேட்ட மணிமேகலை, கண்ணில் துளிர்த்த ஆனந்தக் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு, கண்களாலேயே புகழினிக்கு நன்றி கூறினார்

(முற்றும்)                  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

2 Comments

“மீட்டாத வீணை” (குறுநாவல்) – எழுதியவர் : சஹானா கோவிந்த்         

“சஹானா” இதழின் “புத்தக விமர்சனப் போட்டி ஜனவரி 2021”க்கான புத்தகங்கள் வரவேற்கப்படுகின்றன (Amazon தமிழ் eBooks Only)