in ,

பேருந்தில் நீ எனக்கு ஜன்னலோரம் (சிறுகதை) – ஸ்ரீவித்யா பசுபதி

எழுத்தாளர் ஸ்ரீவித்யா பசுபதி எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

“என்னப்பா செந்தில், தினமும் நம்ம பஸ் ஸ்டாப்புல கொஞ்ச நேரம் நின்னு, பழவூர்ல இருந்து 8 மணிக்கு வர பஸ்ஸைப் பார்த்துட்டு பிறகுதானே வேலைக்குப் போவே. இன்னிக்கு என்ன சைக்கிளை நிறுத்தாம போறியே. சீக்கிரம் போகணுமா?”

டீக்கடை அண்ணாச்சி பலமாகக் கேட்டார். என்னவென்று அவரிடம் சொல்வது?

“ஆமா அண்ணாச்சி, கம்பெனிக்கு சீக்கிரம் போலாமேன்னுதான்.”

சிரித்தபடியே அண்ணாச்சியிடம் சொல்லி சமாளித்துவிட்டு சைக்கிளை அழுத்தினேன். அவருக்குத் தெரியாதா என்ன, ஒன்றா, இரண்டா ஏழு வருடத் தவமல்லவா அது.

அப்போது நான் +1 படித்துக் கொண்டிருந்தேன். எங்கள் மருதூரிலேயே இருக்கும் அரசாங்கப் பள்ளியில்தான் பன்னிரண்டாம் வகுப்புவரை படித்தேன். காலையில் சைக்கிளை எடுத்துக் கொண்டு பஸ் ஸ்டாப் வழியாகப் பயணித்து, ஸ்கூலுக்குப் போவதில் அப்படி ஒரு ஆனந்தம். தினமும் பஸ் ஸ்டாப்பில் இருக்கும் அண்ணாச்சி கடைதான் நண்பர்கள் சந்தித்துக் கொள்ளும் இடம். எட்டு மணிக்கு அனைவரும் அங்கே கூடிவிட்டு அங்கிருந்து ஒன்றாக சைக்கிளில் ஸ்கூலுக்குப் போவோம்.

அப்படிக் காத்திருக்கும் வேளையில்தான் அருகில் இருக்கும் பழவூரில் இருந்து காலையில் 8 மணிக்கு அரசூருக்குப் போகும் பேருந்து எங்கள் பஸ் ஸ்டாப்பைக் கடந்து போகும்.

ஒரு நாள் அந்த எட்டு மணிப் பேருந்தில் ஒரு ஜன்னலோர இருக்கையில் அவளைப் பார்த்தேன். எதேச்சையாக பார்த்ததுதான். நான் பார்த்த போது அவளும் என்னைப் பார்த்தாள். புதுவிதமான உணர்வு அது.

பார்த்துவிட்டு சட்டென்று அவள் தலையைக் குனிந்து கொண்டாள். என்னவோ அன்று முழுவதும் அவள் முகம் மறுபடி மறுபடி மனதுக்குள் எட்டிப் பார்த்துக் கொண்டே இருந்தது. வித்தியாசமான அனுபவம் அது.

அதன் பிறகு தினமும் இந்தப் பார்வை பரிமாற்றம் நடந்தது. நான் ப்ளஸ்டூ வந்த பிறகும் தொடர்ந்தது. அப்போது அவளைப் பார்ப்பதற்காகவே சைக்கிளை நிறுத்த ஆரம்பித்தேன். அவளும் தவறாமல் திரும்பிப் பார்ப்பாள். அன்றைய நாள் முழுவதும் அந்தச் சிலிர்ப்பு இருந்து கொண்டே இருக்கும்.

ஒரு கட்டத்தில் நண்பர்கள் எல்லாம் கேலி செய்ய ஆரம்பித்தார்கள். அதுவும் மனதுக்குப் பிடித்துதான் இருந்தது. ஆனாலும் இதை காதல் என்றெல்லாம் என்னால் அப்போது ஏற்றுக்கொள்ள முடியவில்லை. என்னவோ காலையில் அந்த ஜன்னலோர இருக்கையில் அவளைப் பார்ப்பது ஒரு சந்தோஷமாக இருந்தது…. பிடித்திருந்தது. பிடித்திருக்கும் எல்லாமே காதல் என்று சொல்ல முடியுமா? இப்படி எல்லாம் விவாதம் செய்வேன் நண்பர்களிடம்.

ஆனால் அவள் யார், அவள் பெயர் என்ன, அரசூரில் எங்கு படிக்கிறாள் எதைப் பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும் என்றுகூட எனக்குத் தோன்றவில்லை. ஆனால் நண்பர்கள் சும்மா இருப்பார்களா? எப்படியோ அங்கே இங்கே கேட்டு அவளைப் பற்றிய தகவல்களை என்னிடம் ஒப்பித்தார்கள்.

“டேய் செந்தில், அந்தப் புள்ள பேரு என்ன தெரியுமா, தெய்வானை. பெயர்ப் பொருத்தம் பிரமாதமா இருக்கு டா. உன் பேரு செந்தில், அவ பேரு தெய்வானை. பிரமாதம் போ. ஜமாய் டா மாப்ள,” என்றான் ஒருவன்.

“டேய் செந்திலு, அவங்க அப்பா பெரிய ஆளுடா. ரொம்பப் பணக்கார வீட்டுப் பொண்ணு. ஏணி வச்சாகூட எட்டாது. அவங்க அப்பா சரியான முரட்டுப் பேர்வழி. பார்த்து டா மாப்ள, ஏதாவது வம்பு தும்புல மாட்டிக்காதே. உன்னை நம்பித்தான் உங்க குடும்பம் இருக்கு,” இப்படி இன்னொருவன்.

எனக்கு அவர்கள் சொன்ன மற்ற எதுவும் காதில் விழவே இல்லை. அவள் பெயர் தெய்வானை, அரசூரில் ப்ளஸ் ஒன் படிக்கிறாள் என்பது மட்டும்தான் மனதில் பதிந்தது.

இப்படியாக, அந்தப் பேருந்தின் ஜன்னலோர இருக்கையில் தெய்வானையைப் பார்ப்பது தினமும் காலையில் ஒரு வழக்கமாகவே ஆகிவிட்டது. நான் பிளஸ் டூ முடித்ததும் பக்கத்து ஊரில் ஒரு எக்ஸ்போர்ட் கம்பெனியில் வேலைக்குச் சேர வேண்டிய கட்டாயம். அதற்குமேல் படிக்க வைக்க குடும்பத்தில் வசதி இல்லை.

வேலைக்குப் போகும் போதும் தினமும் சைக்கிளை நிறுத்தி அவளைப் பார்த்துவிட்டுத் தான் போவேன். ஆனால் தெய்வானை ப்ளஸ் டூ முடிக்கும் வரைதான். அதன் பிறகு தினமும் காலையில் பழவூரில் இருந்து எட்டு மணிப் பேருந்து வரும். அந்த ஜன்னல் இருக்கையும் இருக்கும். ஆனால் அங்கே தெய்வானை மட்டும் இல்லை. நண்பர்கள் சொன்ன பிறகுதான் தெரிந்தது அவள் பட்டணத்தில் கல்லூரிப் படிப்புக்கு சேர்ந்து விட்டாள் என்று.

ஆனாலும் நான் தினமும் அந்தப் பேருந்தின் ஜன்னல் இருக்கையை மட்டும் பார்த்து விட்டுத்தான் வேலைக்கு போய்க் கொண்டிருக்கிறேன். ஐந்து வருடங்களாக தெய்வானை இல்லாத அந்த ஜன்னல் இருக்கையை மட்டும் பார்த்து அதே சிலிர்ப்புடன் வேலைக்கு போய்க் கொண்டிருக்கிறேன்.

இப்படியாக ஏழு வருடங்களாக நான் செய்து கொண்டிருக்கும் ஒரு செயலை இன்று திடீரென்று செய்யாமல் போனால் அண்ணாச்சி கேட்க மாட்டாரா என்ன?

டீக்கடை அண்ணாச்சியிலிருந்து என் நண்பர்கள் என்று என் நலம் விரும்பிகள் நிறைய பேர் என்னிடம் எவ்வளவோ முறை கேட்டுப் பார்த்தார்கள்.

“ஏம்பா செந்தில், அந்தப் புள்ளையப் புடிச்சிருக்கா உனக்கு? அவங்க வீட்ல போய் வேணா பேசுவோமா? இப்படி தினமும் சைக்கிளை நிறுத்திட்டு பஸ்ஸைப் பார்த்து ஏங்கிட்டு இருக்கியேடா,” என்று சொன்னார்கள்.

ஆனால் அவளைக் காதலிக்கிறேன் என்று மட்டும் என்னால் சொல்ல முடியவில்லை. காதலிக்கிறேனா இல்லையா என்று எனக்கே தெரியவில்லை.

என்னவோ அந்தப் பேருந்தின் ஜன்னல் ஓர இருக்கையை, அதுவும் தெய்வானை தினமும் அமர்ந்து பயணம் செய்யும் அந்த ஜன்னல் ஓரத்து இருக்கையைப் பார்ப்பதில் எனக்கு அப்படி ஒரு நிறைவு. அதைத் தவிர எனக்கு வேறு எதுவும் தோன்றவில்லை. அப்படி எனக்குள் காதல் இருந்திருந்தால், அவளிடம் பேச வேண்டும் நேரில் போய்ப் பார்க்க வேண்டும் என்று நானே முயற்சி செய்திருக்க மாட்டேனா? எனக்கு அதெல்லாம் எதுவும் தோன்றவில்லை.

இப்போதுவரை வெறுமனே அந்த ஜன்னலோர இருக்கையைப் பார்ப்பதில் மட்டும்தான் எனக்கு ஒரு நிறைவு. ஐந்து வருடங்களாக அவளைப் பார்க்கவே இல்லை என்ற ஏக்கமோ, வருத்தமோ எனக்கு வரவே இல்லை.

அப்படியிருக்க, அதை காதல் என்று எப்படி நான் ஏற்றுக் கொள்வது? அவளைப் பற்றிய பேச்சை நண்பர்கள் எடுத்த போதுகூட நான் கொஞ்சம் கோபமாகப் பேசி விட்டேன். அதனால் அவளைப் பற்றி என்னிடம் பேசுவதையும் நண்பர்கள் விட்டுவிட்டார்கள்.

வழக்கம்போல நேற்று காலை 8 மணிக்கு, அண்ணாச்சி கடை அருகில் சைக்கிளை நிறுத்திவிட்டு காத்திருந்த போது பழவூரிலிருந்து அந்த எட்டு மணிப் பேருந்து வந்தது. அதே ஜன்னலோர இருக்கையில் ஒரு சிறு பெண் குழந்தை உட்கார்ந்திருந்து. பேருந்து நின்றவுடன், ஜன்னலுக்கு வெளியே கையை நீட்டி அசைத்தது.

நானும் கையசைத்த போதுதான் குழந்தையின் முகத்தை உற்றுப் பார்த்தேன். அச்சு அசல் தெய்வானையைப் பார்ப்பது போலவே இருந்தது. அதே சிலிர்ப்பு என்னுள் படர்ந்தது. என்னை மறந்து குழந்தையை பார்த்துக் கொண்டிருந்தபோது, அருகே நின்று கொண்டிருந்த கூட்டத்தில் இருந்து தெய்வானை குனிந்து, குழந்தையின் கையை ஜன்னலுக்கு உள்ளே எடுத்து விட்டாள். அப்போது நிமிர்ந்து பார்க்க, ஐந்து வருடங்கள் கழித்து மீண்டும் பார்வைப் பரிமாற்றம்.

நிலைமையைப் புரிந்து கொள்ளும் முன்பு, பேருந்து கிளம்பியது. நானும் சைக்கிளில் கிளம்பினேன். ஆனால் இப்போது என்னுள் நாள் முழுவதும் அந்தச் சிலிர்ப்பு இல்லை.

அதனால்தானோ என்னவோ இன்று பேருந்திற்காகக் காத்திருக்க வேண்டும் என்று எனக்குத் தோன்றவில்லை. நான் ஏன் டீக்கடையில் சைக்கிளை நிறுத்தவில்லை என்ற காரணம் புரியாமல் அண்ணாச்சி கேட்கிறார்.

எனக்கே காரணம் தெரியவில்லை. ஏழு வருடங்களாக ஏன் காத்திருந்து பேருந்தின் ஜன்னலோர இருக்கையைப் பார்த்தேன். நேற்று குழந்தையோடு தெய்வானையைப் பார்த்த பின் ஏன் இன்று மாறிப் போனேன்? புரியவில்லை.

ஒரு வேளை இதுதான் காதலா?

எழுத்தாளர் ஸ்ரீவித்யா பசுபதி எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    நந்தகுமாரா (சிறுகதை) – ஸ்ரீவித்யா பசுபதி

    ஒத்தையில நின்னதென்ன (சிறுகதை) – ஸ்ரீவித்யா பசுபதி