sahanamag.com
சிறுகதைகள்

பட்டாம்பூச்சி (சிறுகதை) – ‘பரிவை’ சே.குமார்

“தேவி இறந்துவிட்டாள்” என்ற செய்தி கிடைத்ததும் வருத்தப்பட்ட மனசு ‘இப்பவாவது அவளுக்கு நிம்மதி கிடைத்ததே’ எனச் சந்தோசப்பட்டது. அந்தச் சந்தோசம் என் மனசுக்குள் இருந்து நீண்ட பெருமூச்சாய் வெளியானது.

என்னடா இவள் ஒரு இறப்பு சந்தோசம் கொடுத்தது என்கிறாளே என்றுதானே நினைக்கிறீர்கள்..? விரிவாக பேசினால் நீங்கள் கூட தேவியின் இறப்புக்கு வருந்துவதைவிட சந்தோசமே கொள்வீர்கள்.

தேவி…

அழகான பட்டாம்பூச்சி…

கிராமத்து நந்தவனத்தில் பூத்த அழகிய ரோஜா அவள்… எப்பவும் அவள் முகத்தில் தவழும் புன்னகை… கன்னத்தில் விழும் அழகுக் குழி… நெற்றியில் தவழும் கொத்து முடி… என வசீகரமானவள்… யாரையும் எளிதில் வசிகரிக்கக் கூடியவள்…

நான் ஆணாக இருந்திருந்தால் அவளை விரட்டி விரட்டி லவ் பண்ணி கண்டிப்பாக கல்யாணமும் பண்ணியிருப்பேன். அந்தக் கொடுப்பினை இல்லாமல் போனாலும் எங்களின் ஆத்மார்த்த நட்பு இன்று வரை… அவளின் இறுதிவரை தொடர்ந்ததில் மகிழ்ச்சி.

எனக்கும் அவளுக்குமான நட்பு பிறந்த  இடம், தூய மரியன்னை மேல் நிலைப்பள்ளி. ஆம், எங்கள் நட்பின் ஆரம்பம் ஒன்பதாம் வகுப்பு ‘இ’ பிரிவில் இருந்துதான் தொடங்கியது

எட்டாம் வகுப்பு வரை எங்கள் ஊருக்கு அருகில் இருந்த ஒரு நடுநிலைப்பள்ளியில் படித்தவள் நான், படிப்பு, விளையாட்டு, போட்டிகள் என எல்லாவற்றிலும் எனக்குத்தான் முதலிடம்… என்னோடு படித்த மாணவிகள் சிலர் அந்தப் பள்ளியில் சேர்ந்திருந்தாலும் யாரும் என்னோடு ஒன்பதாம் வகுப்பு ‘இ’ பிரிவுக்கு வரவில்லை.

அகிலாவும் ரோஷ்ணியும் ‘ஏ’ பிரிவில்…

சுமதி, சுகஸ்தி, முத்துப் பெண் ‘சி’ பிரிவில்..

கல்பனா, மகேஸ்வரி, சுந்தரி, ஆசியா ‘ஜி’ பிரிவில்…

நான் மட்டும் தனித்து விடப்பட்டேன். இரண்டாவது பெஞ்சில் எனக்கருகே வந்து அமர்ந்தவள்தான் தேவி. அவளைப் பார்த்த போது இப்படி ஒரு அழகி இருக்க முடியுமா என்றே தோன்றியது… அந்த வயதில் அவளின் அழகு ஆச்சர்யத்தைக் கொடுத்தது.

இரண்டாவது நாள் சிநேகமாய்ச் சிரித்தவளுடன் மெல்ல மெல்ல பேச ஆரம்பித்து கொஞ்ச நாளில் இணை பிரியாத தோழிகளானோம். வகுப்பில் அவள்தான் முதல் மாணவி, அவளுக்குப் பின்னே தான் நாங்களெல்லாம்… ஆனால் போட்டிகளில் எதிலும் கலந்து கொள்ளும் ஆர்வமில்லாதவள்

பத்தாம் வகுப்பு, பணிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் பள்ளியில் முதல் மாணவி அவள் தான்… ஆசிரியர்களுக்கு பிடித்த மாணவிகள் என்ற வட்டத்துக்குள் அவளுடன் நானும் சிலரும் இருந்தோம்.

கல்லூரியில் இருவரும் பிஸிக்ஸ் சேர்ந்தோம். அதுவரை பெண்கள் மட்டுமே படிக்கும் பள்ளியில் படித்த எங்களுக்கு இருபாலரும் பயிலும் கல்லூரி கொஞ்சம் வித்தியாசமாகத் தெரிந்தது

அந்த மூன்று வருடத்தில் தேவியின் அழகுக்கு அடிமையாக எத்தனையோ பேர் போட்டி போட்டார்கள்… கேலி கிண்டல் என அவளைச் சீண்டிக் கொண்டே இருந்தார்கள். அவளோ தன் குடும்ப நிலையை மனதில் வைத்து காதலுக்குள் எல்லாம் விழவில்லை. யார் என்ன சொன்னாலும் சிரிப்பால் கடந்து விடுவாள்… அதுதான் அவளுக்கு கடவுள் கொடுத்த வரம்.

மூன்றாம் ஆண்டின் தொடக்கத்தில் பி.எஸ்.ஆர்.பி. தேர்வு எழுதி வெற்றி பெற்று கல்லூரி முடியும் போது வங்கிப் பணியும் பெற்றுவிட்டாள். அதன் பின்னும் தன் படிப்பைத் தொடர்ந்து நிறையப் படித்தாள். நானும் மாஸ்டர் டிகிரி முடித்து விட்டு ஒரு பள்ளியில் தற்காலிக ஆசிரியையாக பணிபுரிந்து கொண்டிருந்தேன்

ஒருநாள் திருமண அழைப்பிதழோடு என்னைத் தேடி வந்தாள் அவள்

பத்திரிக்கையை வாங்கியபடி, “எப்படிடி இதற்கு ஒத்துக் கொண்டாய்..?” என்றேன். அவள் திருமணம் குறித்த செய்திகளை என்னிடம் முன்னரே போனில் சொல்லியிருந்தாள். அப்போது கூட இப்படித் தான் கேட்டேன்

சிரித்தபடி “இதிலென்ன இருக்கு… நேர்ல பேசுவோம்” என்றாள், இப்போது கேட்டதும் அதே சிரிப்பைப் பதிலாக்கினாள்

“சொல்லுடின்னா சிரித்து மழுப்பப் பாக்குறே..?” என்றதும்

“இங்க பாரு, உனக்கே தெரியும் கல்லூரியில என்னை லவ் பண்றேன்னு ஒரு கூட்டமே திரிஞ்சது… அதெல்லாம் எதுக்காக… என்மேல் உண்மையான காதாலா…? எல்லாமே என் அழகுக்காக மட்டுந்தான்… அறிவுக்காக ஒருத்தர் கூட என்னை விரும்புறேன்னு சொல்லலை இல்லையா..? இந்த அழகு நிலை இல்லாததுடி… ஒரு நேர சாப்பாட்டுக்கே வழியில்லாத குடும்பத்தில் பிறந்தவ தானே நான். என்னோட அழகு எனக்கு சோறு போடுமா சொல்லு. நல்லவேளை அழகோட படைச்ச இறைவன் அறிவையும் கொடுத்தான். இன்னைக்கு எங்க குடும்பம் சந்தோஷமா மூணு நேரமும் சாப்பிடுது. இவரையா கட்டிக்கப் போறேன்னு நீ கேக்குறியே… அந்த அவரு… கறுப்புத்தான்… படிப்பு இல்லைதான்… நானும் அவரும் நடந்து போனா… நாம நம்ம கெமிஸ்ட்ரி மேடம் நிர்மலா அவங்க ஹஸ்பெண்ட் கூட வரும்போது சொல்வோமே டிஎம்கே அப்படித் தான் இருக்கும்

பார்க்கிறவங்களுக்கு அவரோட புற அழகு மட்டும்தானே தெரியும்… அக அழகு தெரியாதுல்ல… அது என்னோட இந்த அழகைவிட பல மடங்கு உயர்ந்ததுடி… எங்க மாமா எங்களுக்கு நிறையப் பண்ணியிருக்கார்… அவரோட ஆசை கண்ணத்தானை நான் கட்டிக்கணும்ன்னு… இதைச் செய்யிறதால நான் எந்த விதத்துல குறைஞ்சி போவேன் சொல்லு

அழகான மாப்பிள்ளை… படிப்பு… அரசு வேலை… அப்படின்னு பார்த்து கல்யாணம் பண்ணிக்கிட்டா எனக்கு மன நிம்மதி… நிறைவான வாழ்க்கை கிடைக்கும்னு என்ன நிச்சயம்..?” என்று ரொம்ப நேரம் பேசினாள். அவள் சொல்வதில் இருந்த உண்மை என்னை அதற்கு மேல் பேசவிடவில்லை.

அவளுக்கும் திருமணம் முடிந்த சில மாதத்தில் எனக்கும் திருமணம் முடிந்து சிதம்பரத்தில் செட்டிலாகி விட்டேன். வாரம் ஒரு முறை போனில் பேசும்போது அந்த வார நிகழ்வுகளை எல்லாம் பரிமாறிக் கொள்வோம்

அவளுக்கு ஏனோ குழந்தை இல்லை… பிறக்கும் என்ற நம்பிக்கையில் இருந்தாள். எனக்கு முதல் குழந்தை பிறந்த போது அவ்வளவு சந்தோஷப்பட்டாள். கணவனுடன் வீட்டுக்கு வந்து வாழ்த்தி, குழந்தையை எடுத்து கொஞ்சி மகிழ்ந்தாள்.

நான்கு வருடங்கள் கடந்த நிலையில் தேவியின் கணவரிடமிருந்து போன். “தேவிக்கு உடம்புக்கு முடியலை… மதுரையில் வைத்திருக்கிறோம்… அவளுக்கு உங்களைப் பார்க்கணுமாம்… வரமுடியுமா?” என்றார்.

“என்னாச்சு” என்று பதட்டமாய் வினவ, அவர் நிதானமாய் விவரம் சொன்னார்.

கணவரிடம் சொல்லி விட்டு மதுரைக்கு விரைந்தேன்.

பெட்டில் கிடந்த அவளைப் பார்த்தபோது எனக்கு உயிரே நின்றுவிட்டது.

வலது பக்கம் முழுவதும் வீங்கியிருந்தது.

என்னைப் பார்த்ததும் உடைந்து அழுதாள்.

“என்ன வியாதியின்னே தெரியலை… உடம்பு ஒரு பக்கம் மட்டும் வீங்குது… டாக்டர்கள் என்னென்னமோ சொல்றாங்க… பயமில்லைன்னு சொல்றாங்க… ஒரு வாரமாச்சு… இப்ப கொஞ்சம் குறைஞ்சிருக்கு… சில நேரத்துல வலி பொறுக்க முடியாம கத்தறா… ரெண்டு நாளாவே உன்னைப் பாக்கணும் வரச் சொல்லுங்கனு அடிக்கடி சொல்ல ஆரம்பிச்சா… அதான் தம்பி உனக்குப் போன் பண்ணுச்சு… நாங்கூட வேணான்னுதான் சொன்னேன்… நீ இம்புட்டுத்தூரம் பிள்ளைகளை விட்டுட்டு வரணுமில்லையா..?” என்றார் தேவியின் அம்மா.

“அட என்னம்மா நீங்க…? இதுக்கெல்லாம் வராம இருக்குறதா..? அண்ணன் போன் பண்ணினதும் உடனே வரணுமின்னு நினைச்சேன்… முடியலை… இன்னைக்கு பொறுப்பை அவருக்கிட்ட விட்டுட்டு கிளம்பி வந்துட்டேன்” என்றபடி அவரின் கைகளைப் பிடித்துக் கொண்டேன்.

அதன் பின்னான நாட்கள் தேவிக்கு தீராத வலியைக் கொடுத்த நாட்கள்…

சில நாள் எப்பவும் போல பட்டாம்பூச்சியாய் வலம் வருவாள். திடீரென மறுபடியும் வீங்கிக் கொள்ளும். மாதத்தில் பாதிநாள் ஹாஸ்பிடலில்தான்

மாதங்கள் ஓட, அவளின் உடம்பு ரொம்ப மோசமானது… மருந்து மாத்திரை கொடுத்த பலனால் அவளின் முடிகள் கொட்ட ஆரம்பிக்க, அழகிய பட்டாம்பூச்சி நிறமிழக்க ஆரம்பித்தது

எவ்வளவோ செலவு செய்தும்… என்ன வியாதி.. எதனால் உடம்பு வீங்குகிறது… எப்படி இதை சரி பண்ணுவது என்று தெரியாமல் மருத்துவர்கள் விழித்தார்கள்.

இரண்டு வருடத்துக்குள் படுத்த படுக்கை ஆனாள்.

ஒருமுறை ஊருக்குச் சென்ற போது, அவளைப் பார்க்கப் போனேன்

ஆளே அடையாளமே தெரியாத அளவுக்கு மாறியிருந்தாள். குழி விழும் கன்னம், பொலிவிழந்து இருந்தது. அவளின் வசீகரிக்கும் சிரிப்பு, எங்கோ போயிருந்தது

ஒருபுறம் எலும்பும் தோலுமாகவும் மறுபுறம் வீங்கிய உடம்புமாகவும், வித்தியாசமாய் இருந்தவளின் புற அழகு புதைந்து நாளாகியதை அறிந்தேன். உலர்ந்த உதடுகள் மட்டுமே நிறைய பேசியது.

நான் கிளம்பும் போது “என்னால எல்லாருக்கும் தொந்தரவுடி… பாவம் கண்ணத்தான், அவரோட வாழ்க்கையை நான் கெடுத்துட்டேன். அம்மா, அப்பா, மாமானு எல்லாருக்கும் நிம்மதியில்லாத வாழ்க்கையைக் கொடுத்துட்டேன். நீ பட்டாம்பூச்சி… பட்டாம்பூச்சியின்னு சொல்வியே… அந்தப் பட்டாம்பூச்சி பட்டுப்போச்சுடி… சீக்கிரம் செத்துட்டா எல்லாருக்கும் நிம்மதியாவது மிஞ்சும்டி. நான் செத்ததும் நல்ல பொண்ணாப் பாத்து கண்ணத்தானுக்கு கட்டி வைக்க வேண்டியது உன்னோட பொறுப்புடி… அவ வர்ற நேரமாச்சும் அவரு சந்தோஷமா இருக்கட்டும்” என்றாள். எனக்குள் அழுகை சிறகு விரித்தது.

போன வாரம் தொலைபேசியில் பேசிய போது அவளை  கணவர், “படுத்த படுக்கையாகக் கிடந்து முதுகெல்லாம் புண்ணாகிவிட்டது, தண்ணீர் மட்டும்தான் சாப்பிடுகிறாள் வேறு எதுவும் இறங்கவில்லை. இப்போ பேச்செல்லாம் அதிகமில்லை எல்லாம் சைகைதான், அதுவும் இடது கை மட்டுமே தூக்க முடிகிறது. ஊருக்கு வரும் வேலை இருந்தால் அவளை வந்து பார்த்துவிட்டுப் போங்கள்… நீங்க வந்தீங்கன்னா கஷ்டப்படுற மனசுக்குள்ள சந்தோஷப்படுவா” என்றார்

எனக்கு முதல் முறையாக கடவுள் மீது கோபம் வந்தது

அவள் யாருக்கு என்ன துரோகம் செய்தாள்..?

எல்லோரும் நல்லாயிருக்கணும் என்று தானே ஆசைப்பட்டாள்.

நோய் நொடி என்று வந்து பார்ப்பது சிரமம் என்ற போதே அவளை கொண்டு போயிருக்கலாமே?

இப்படிப் படுக்க வைத்து… கஷ்டப்படுத்துகிறானே… சொன்னால் முற்பிறவியில் செய்த வினை என்று சொல்வார்கள். இந்த பட்டாம்பூச்சி முற்பிறவி என்ன ஏழேழு பிறவியிலும் பட்டாம்பூச்சியாகத்தான் இருந்திருக்கும்

அவள் கஷ்டப்படுவதை நேரில் போய் பார்க்கும் மனநிலையை எனக்கு இறைவன் கொடுக்கவில்லை… இறைவா எனக்கு ஏதாவது நன்மை செய்ய வேண்டும் என்று நினைத்தால் என் தோழியை கஷ்டத்தில் இருந்து மீட்டெடுத்துக் கொண்டு செல்… அவள் பட்டது போதும் என வேண்டிக் கொண்டபோது கன்னத்தில் கோடாய் கண்ணீர் இறங்கியது

இன்று காலை அவளின் கணவர் அழைத்து இறந்துவிட்டாள் என்ற போது, கண்ணீரை விட மனநிம்மதியே பெருமூச்சாய் வெளியேறியது

இறைவனுக்கு நன்றி சொல்லி, என் தோழியை வழி அனுப்பக் கிளம்பினேன்

(முற்றும்)

Similar Posts

6 thoughts on “பட்டாம்பூச்சி (சிறுகதை) – ‘பரிவை’ சே.குமார்
  1. கதையைப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி

  2. நல்லதொரு கதை. குமார் அவர்களின் எழுத்து என்றைக்குமே சிறப்பானதாகவே இருக்கும்.

    பாராட்டுகள் மற்றும் வாழ்த்துகள் குமார்.

    இங்கே படிக்கத் தந்தமைக்கு நன்றி .

  3. மனம் வேதனையில் ஆழ்ந்து விட்டது. இப்படி எல்லாமா உடம்புக்கு வரும்? பரிவை குமார் எப்போதுமே நன்றாக எழுதுவார். இதுவும் சோகமான முடிவென்றாலும் நன்றாகவே இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!