sahanamag.com
சிறுகதைகள்

மோனம் (சிறுகதை) – எழுதியவர் : வித்யா அருண், சிங்கப்பூர்

ரத் திரையில் தெரிந்த ஆசிரியரையும், மற்ற வகுப்பு தோழர்களையும் பார்த்துப் புன்னகைத்தான்

”அம்மா என் நண்பன் சுஹான் பாரு அம்மா!” திரையில் தெரிந்த முகங்கள் ஒவ்வொன்றாக, சமைத்துக் கொண்டிருந்த எனக்கு அறிமுகம் செய்யப்பட்டன

போன வாரம் சோதனை முயற்சியில் பயன்படுத்தபட்ட  ஜூம்(Zoom) தொழில்நுட்பத்தில், ஒவ்வொரு சிறுவனும் தான் இருக்கும் இடத்தின் பின்புலத்தை மாற்ற முடிந்தது

மிருதுளா கடற்கரையிலிருந்து முகம் காட்டினாள்; பரத் ஆகாயத்தில் கோள்களுக்கு நடுவே பிரசன்னம் ஆனான்

இந்த வாரத்திலிருந்து ஜூம் அஸ்தமனம் ஆகி, கூகிள் கூட்டங்களாக வகுப்புகள் நடக்கின்றன

வாண்டுகளின் சேட்டைகளைத் தாங்க முடியாமல், பேச்சுக்கானச் சாளரத்தைப் பூட்டி வைத்திருக்கிறார் ஆசிரியர்

வகுப்புகள் முடிந்த பிறகு, தூங்க நிறைய நேரம் இருந்தாலும், “மெத்தை வாங்கினேன், தூக்கத்தை வாங்கல”னு கண் விழித்தபடியே இருக்கிறான் பரத்

நீச்சல் வகுப்புகள் சில மாதங்களுக்குக் கிடையாது என்பது,  தொடக்க நிலை மூன்றில் படிக்கும் பரத்துக்கு ஏற்றுக் கொள்ளும்படி இல்லை

பெருமழை வருவதற்கான அறிகுறிகள் இருந்தாலும், நீச்சல் வகுப்பை நடத்திக் கொண்டே இருப்பார், அவனது நீச்சல் பயிற்றுனர் அங்கிள் லொயிட்

பதிமூன்றாம் மாடியிலுள்ள எங்கள் வீட்டின் சன்னல் வழியாக, கீழேத் தெரியும் முழு நீல வண்ண நீச்சல்குளத்தைச் சுற்றி, சிவப்பும் வெள்ளையுமாக வண்ணம் தீட்டப்பட்ட நெகிழி கயிற்றால், நாற்காலிகளையும், கால் நீட்டி படுத்துக் கொள்வதற்கான இருக்கைகளையும் கட்டி வைத்திருக்கிறார்கள்

”கொரோனா வெரி வெரி பேட்!” என்று அர்ச்சனை செய்தவாறே தினமும் ஏக்கத்தோடு பார்த்துக் கொண்டிருக்கிறான் பரத்

 

 

“அம்மா கணக்கு” திரைப்படத்தை அவனுக்காகப் நேற்று போட்டோம்

தினமும் தரை தளத்துக்கு கீழே இருக்கும் சிற்றுந்துகளை நிறுத்துவதற்கான தளத்தில், நானும் பரத்தும் முகக்கவசம் அணிந்து  நடைப்பயிற்சிக்கு செல்கிறோம்

ஒலிச்சித்திரம் போல, ‘அம்மா கணக்கு’ கதையை காட்சி வாரியாகச் சொல்ல வேண்டும். குழந்தைகளின் மனதில் சொற்களும் காட்சிகளும் எளிதில் அழுத்தமாய் பதிந்து விடுகின்றன

அது போல், கொரோனோவும் நெஞ்சில் என்றும் நிற்கும் நினைவாகிவிடும்  என்றே தோன்றுகிறது

இரண்டொரு நாட்களாக இந்தக் கிருமித் தொற்று சிங்கப்பூரை அதிகம் பாதிக்காது; எல்லாம் சரியாகிவிடும் என்ற நம்பிக்கை பொய்த்துக் கொண்டிருக்கிறது

தினமும் கந்தர் அநுபூதியும், அப்பர் பெருமானின் ‘சுண்ணவெண் சந்தன சாந்தும்’ பதிகமும் பாடி, இறைவனிடம் இறைஞ்சியவாறே இருக்கிறேன்

சிங்கப்பூரில் வேலை என வந்தவர்களில், கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்ட வெளிநாட்டினர்களின் எண்ணிக்கை, தினமும் ஆயிரமாக இருக்கிறது. எங்களுக்கு அருகிலிருக்கும் நோர்த் பாயிண்ட் மாலில் கூட கிருமித் தொற்றாம்.

“அம்மா, கோவிட் 19 ரொம்ப ரொம்ப மோசம்! இது வரலைனா  நான் தினமும் பள்ளிக்கு போய் இருப்பேன்”, அவ்வப்போது புலம்பும் ஒன்பது வயது மகனுக்கு, வீட்டில் செய்த தின்பண்டங்கள், கதை புத்தகங்கள், நானாக சொல்லும் கதைகள் என்று, வெளித்தொடர்பு இல்லாத வாழ்க்கையின் நேரத்தை அர்த்தமாக்கிக் கொண்டிருக்கிறேன்

ஒற்றைப் பிள்ளையாய் இருக்கும் அவனுக்கு, நண்பர் பட்டாளம் தான் அண்ணா, தம்பி, அக்கா,தங்கை எல்லாம்.

மின்னணு பொருட்களைத் தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை செய்கிறேன். மலேசியாவில் உள்ள இந்த நிறுவனத்தின் தொழிற்சாலைகள், ஏப்ரல் மாதம் முழுக்க இயங்காது

ஆனாலும் ஆளில்லாத கடையில் டீ ஆத்துகிற என் கடமை உணர்ச்சியும், பக்கத்துக்கு வீட்டுக்காரன் தலையில கொள்ளிக்கட்டை இருந்தா எனக்கென்ன என்பது போல, கிருமித் தொற்றால் மீண்ட நாடுகள் விற்பனைக்கான சரக்குக்கு நெருக்கடி கொடுப்பதும், கூடுதல் வேலை பளுவை உண்டாக்கி வைத்திருக்கின்றன.

முன்னெல்லாம் பல நாட்கள் அவசரகதியில் பரத்தை பள்ளியில் விட்டுவிட்டு, யிஷுனிலிருந்து கெண்ட்ரிட்ஜ் வரை விரைவு ரயிலில் பயணம் செய்து, அதிவேகமாக இரண்டு இட்லிகளை அள்ளிப் போட்டபடியே, வேலையை ஆரம்பிப்பேன்.

இப்போது நிலைமை கொஞ்சம் மாறி இருக்கிறது. அதிகாலை மூன்றுக்கு எழுந்து அலுவலக வேலைகளில் அன்றைய முக்கியமான வேலைகளை முடித்து, பரத்தோடு முதல் பாதி நாளை அவன் பள்ளிப் பாடங்களுக்கெனக் கொடுக்கிறேன்

 

ஜூன் விடுமுறையில் எங்கள் பரத்திற்கு பாண்டிச்சேரியில் பூணூல் போடும் வைபவம்

இயல்பாகவே பக்தியும் நற்குணங்களுமாக இருக்கிறான். அன்பான பிள்ளை, வீட்டின் மூத்த பேரன்

மாமியார் படுத்த படுக்கையாகி விட்டதால், அவரின் நிலையை நினைத்து, சீக்கிரம் பூணூல் வைபவத்தை முடிக்க ஏற்பாடு செய்துவிட்டோம்.

மண்டப வாடகை, சமையல்காரருக்கு முன் பணம் எல்லாம் கொடுத்தாகி விட்டது. பத்திரிக்கையை அச்சுக்குக் கொடுக்க வேண்டும்

சென்னையிலிருந்து வந்து போகும் உறவுகள் தங்குவதற்காக, அதே பகுதியில் வீடும், ஒரு சில நாள் வாடகைக்கு பேசி வைத்து விட்டோம்.

பூணூல் போட்டு வைக்க, கும்பகோணத்திலிருந்து வேதம் நன்றாக கற்றறிந்த விற்பன்னர் வருகிறார்

மாமனார் தான் தேதி குறித்துக் கொடுத்திருந்தார். சஷ்டி, அவிட்டம் அவனுக்கு நல்லபடியாக அமையும் என்றார்.

ஆனால், இப்படி உலகத்துக்கே உலை வைக்கிற ஒன்று வரும் என்று யாருக்கும் தெரியவில்லை.

பாரிஜாதம், சாய் பாபா கைத்தறிக்கடை, போத்திஸ், பிரசாந்தி, குமரன் சில்க்ஸ் என்று அத்தனையிலும் இணைய வழியாக, கோர்வை புடவை, கோபுரம் வைத்த சரிகை, சில்க் காட்டன், லினன், வைர ஊசி என்று எங்கள் வீட்டுச் சொந்தங்களுக்கு புடவை பார்த்துக் கொண்டிருந்தேன். ரயிலில் வரும் நேரங்களில் இதுவும் ஒரு பொழுதுபோக்காக இருந்தது.

எங்களின் வளைகாப்பு, குழந்தைபிறப்பு, பெயர் சூட்டு விழா என்று அத்தனையும் சிங்கையில் எங்கள் வீட்டுக்குள் நடந்துவிட்டதால், எனக்கு பரத்தின் பூணூல் விழாவை மண்டபத்தில், உறவினர் சூழ நடத்துவதற்கு ஆசையாக இருக்கிறது.

“சந்தியா, பகவான் நம்மளை சோதிக்கிறார், ஆனா கை விட்டுட மாட்டார்”

“பரத்துக்கு சீக்கிரம் பூணல் போடுறது நல்லது. ஏழு வயசுலேந்து பதினோரு வயசுக்குள்ள போடுறது, அவன் ஆன்மீகமா வளர வைக்கும்.” என்பாள் அம்மா.

கண்டறியப்படும் போதே கர்ப்பப்பை புற்றுநோயின் மூன்றாம் நிலையிலிருந்த அம்மா, நம்பிக்கையுடன் மூன்றாண்டுகளுக்கு முன்னால் சொல்லிக் கொண்டிருந்தாள். அவளுக்கும் செல்லப் பேரன் பரத்

‘மதம் என்பது மனங்களை நெறிப்படுத்தத்தான்; மற்றவர்களை நேசிக்கத்தான்’ என்று எனக்கு வாழ்க்கைப் பாடம் சொல்லிப் போன என் அம்மா, காற்றோடு கலந்து இரண்டு வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டன.

ஒழுங்கான தூக்கம் இல்லாமல், வேலை அழுத்தமும், என்ன ஆகுமோ என்ற கவலையிலும் இருக்கிறேன்.

திருமுறை பற்றிய எனது புத்தகத்தையும், அந்த விழாவில் வெளியீடு செய்யத் திட்டமிட்டிருந்தேன். அதற்கான வேலைகளும் முடியும் தருவாயில் இருக்கின்றன.

சுனாமி கூட ஒரே நாளில் ஓய்ந்து விட்டது, கொரோனா நின்று வேட்டையாடுகிறது.

தொலைபேசி உரையாடல்களில், புள்ளி விவரங்களைத் தான் எல்லாரும் பேசுகிறோம். இன்று மாலை நிகழ்ந்த சிங்கை பிரதமரின் உரையில், இங்கு வாழும் மக்களுக்கு, கூடுதல் நெறிமுறைகளை விதித்திருக்கிறார்.

ஒரு மாதத்துக்காவது முடிவெட்டும் கடைகள் இருக்காது. ”இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா” படத்தில் வரும் விஜய்சேதுபதி போல,  முடிக்குள் தான் முகங்களைத் தேட வேண்டியிருக்கும்.

இந்தியாவிலும் ஊரடங்குக்குள் தான் வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள். அங்குள்ள ஊடகங்களில் வரும் செய்திகளால், சிங்கப்பூரின் நிலைமை பற்றிய கேள்விகள் அதிகமிருக்கின்றன.

“என்னமா? தினமும் ஆயிரம் பேருக்கு பாதிப்பாமே!”

“இங்க பரவாயில்லமா. ஒரு நாலு பேருக்குத்தான் இருக்கு”

“அப்பா கை கால் சுத்தம் ரொம்ப முக்கியம். வீட்டுக்குள்ள யாரையும் விட வேண்டாம். அப்படியே வந்தாலும், கை கால் சுத்தம் பண்ணிட்டு, முகத்தை அலம்பிக்கிட்டு வர சொல்லுங்க”

கிளிப்பிள்ளைக்கு சொல்வதைப் போல நினைவூட்டல் நடந்து கொண்டே இருக்கிறது.

இன்று எண்ணிக்கையில், என் மாமனார் வாழும் பாண்டிச்சேரியில் பாதிப்பு அதிகம் இல்லை என்றாலும், இது எந்த நிமிடமும் மாறுமோ என்ற பயமும் இல்லாமல் இல்லை.

நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக பிள்ளை வளர்ச்சியைத் தான் சொல்லுவோம். இப்போது, ஒவ்வொரு நாளின் மேனி வண்ணமும், அது சுமந்து வரும் கொரோனா தாக்கத்தை வைத்து தான் சொல்கிறோம்.

நிச்சயமில்லாத தன்மை பல நாட்களாக நீடிப்பது, ஒரு வித மன அழுத்தத்தைத் தருகிறது. சும்மா இருப்பது அவ்ளோ ஈசி இல்ல என்று வடிவேலு வாட்சப்பில் உலகம் முழுக்க சுற்றி வந்து நினைவுபடுத்துகிறார்.

ஞானிகளின் வாழ்க்கையில் சும்மா இரு என்பது அவர்களுக்கு உபதேசிக்கப்பட்ட மந்திரம். சராசரி மக்களுக்கு சுலபமா என்ன?

இரவு தூங்கப் போகும் போது, சிங்கை கல்வி அமைச்சு அனுப்பியிருந்த நீண்ட அறிக்கை, என் தோழிகளின் வழி எனக்கும் வந்திருந்தது.

“வருண் ஸ்கூல் ஜூன் மாசம் தொறக்கப் போறாங்க. மே மாசம் முழுக்க பரத் வீட்ல இருக்கணுமாம்”

என் குரல் ஏமாற்றத்தை உள்ளபடியே வெளியிட்டது.

அன்றைய தூக்கமும், என் கனவு கலைந்த வருத்தத்தில், பின் சக்கரத்தில் மாட்டி சுற்றிவிட்ட துப்பட்டா போல, எண்ணங்களால் சிக்குவதும் விடுவிப்பதுமாகக் கழிந்தது.

“ஒழுங்கா தூங்கினியா இல்லையா?  யாராலயும் ஒண்ணும் பண்ண முடியாது சந்தியா. கார்த்திகை மாசம், டிசம்பர்ல போய் நடத்திக்கலாம். பெருசா என்னென்னமோ நடக்குது. இன்னிக்கு நம்ம குடும்பம் நல்லபடியா இருக்கோம்னு நன்றி சொல்லிக்க வேண்டியது தான்” என்றார் அந்தக் கணத்தில் மட்டுமே யோசிக்கும் கணவர்

அதிகம் குழப்பிக் கொள்ளாத என் கணவருக்கு நான் எதிர் ரகம்.

நூடுல்ஸ் போல, பல நிகழ்ச்சிகளை கோர்த்து, ஏன் எதற்கு என்று ஆராய்வது என் இயல்பு.

போன வருடம் என் சித்தப்பா மகளின் வளைகாப்பின் போது, இந்தியாவில் இருக்க நேர்ந்தது.

சுற்றம் சூழ, அத்தைகள், மாமிகள், சித்திகள் என்று வீட்டின் எல்லா பெண்களும் நலங்கு இட்டு, வளையல் போட்டார்கள்

மருத்துவ காரணங்களால், கர்ப்பிணியாக இருந்த போது என்னால் ஊருக்கு செல்ல முடியவில்லை. குறைமாச பிள்ளையாக பரத் பிறந்ததால், யோசித்து யோசித்து தான் இந்தியப் பயணங்கள்

எங்கள் திருமணம் தவிர, வேறு எந்த விழாவையும் ஊரில் நடத்த எங்களுக்குச் சூழல் அமையவில்லை. அந்த மனக்குறையை போக்கும் விதமாக திட்டமிட்ட பூணூல் விழாவிலும், கொரோனா வந்து குழப்பியதில், உச்சபட்சமாக கோபத்தில் இருக்கிறேன்

“எப்போ பார்த்தாலும் நமக்கு மட்டும் தான் இப்படி ஏதாவது நடக்குது!. மூணு மாசம் முன்னால கூட, எவ்வளவு பெருசா உங்க அத்தை மக கல்யாணம் நடந்துச்சு. காது குத்து, கிரஹப்ரவேசம்னு, போன டிசம்பர் மாசம் எல்லாம் ஒரே ஆட்டம் தானே. நாம நம்ம பையனுக்குனு நினைக்கும் போது மட்டும் ஏன் இப்படித் தடங்குது?

நம்மளால முடிஞ்ச தான தருமம் செய்யாம எப்பயும் இருந்ததில்லை. ஒரு பத்து குடும்பத்துக்காவது நம்ம உழைப்பிலேந்து படிப்புக்கு உதவி செய்யறோம். நம்ம சொந்தத்துல அது அது சொத்து சேக்கறதுல தான் இருக்காங்க. அவங்களுக்கு எல்லாம் நல்லபடியா தானே நடக்குது. நம்ம முருகன் நம்மளத் தான் சோதிக்கிறார்”.

அழுது அழுது புலம்பியபடி, தீர்வொன்றும் தோன்றாமல் கலங்கியிருக்கிறது என் மனம்.

“நமக்கும் நல்லது நிறையவே நடந்து தான் இருக்கு. தேவையில்லாம மத்தவங்க வாழ்க்கையோட நம்ம வாழ்க்கையை ஒப்பிட்டு பார்த்தோம்னா நமக்கு நிம்மதி போய்டும் சந்தியா!” மென்மையாய் அணைத்து அவர் ஆறுதல் சொல்லிவிட்டு போனாலும், மனபாரம் அழுத்தியபடி தான் இருக்கிறது.

வெந்தய தோசைக்கென அரைத்துக் கொண்டிருக்கிறேன். மாவும் மனதும் சேர்ந்தே சுற்றிக் கொண்டிருக்கின்றன. பரத்திற்கு கணினிப் பயன்பாடு இப்போது சுலபமாகி விட்டது

அறிவியல் பாடம், பட்டாம் பூச்சியின் வாழ்க்கைச் சக்கரம். காணொளி ஒன்றை உயிர்ப்பித்தான் பரத். முட்டையிலிருந்து புழு; அழகிய பச்சை வண்ணப் புழுக்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக வாழ்க்கை தின்றுத் தீர்க்க என்பதைப் போல தன் தோலின் வண்ணத்தை ஒத்திருந்த இலைகளை ஒரு கை பார்த்துக் கொண்டிருந்தன

அடுத்தது கூட்டுப் புழுவாக மாறும் பருவம். பரோட்டா சூரிப் போல சாப்பிட்ட புழுக்கள், தன்னிலை மாறி, பழுப்பு நிறத்தில் காய்ந்த இலையைப் போல செடியில் ஒட்டிக் கொண்டிருந்தன

ஒரு கூட்டுப் புழுவை மட்டும் காண்பிக்கிறார்கள். தவம் போல, உணவு நீர் எதுவுமின்றி, அசையாமல் தன் அடுத்த பருவத்துக்காக மோனத்தில் ஆழ்ந்திருக்கிறது. சில வகை ஒரு வருடம் கூட அப்படியே இருக்குமாம்.

 இயற்கை எனக்கு அளித்திருக்கும் கூட்டுப்புழு பருவமா இது? ஓயாத எண்ணக் கசிவோடிருக்கும் என் மனதையும், மாவோடு சேர்த்து வழித்தேன்

இந்நிலை மாறும் என்ற நம்பிக்கையோடு, கூட்டுப் புழுவாய் காத்திருக்கிறேன்

(முற்றும்)


 
கதை ஆசிரியர் பற்றி:-
திருமதி.வித்யா அருண் சிங்கப்பூரில் வசித்து வருபவர். பன்னாட்டு நிறுவனத்தில், மேலாண்மை பொறுப்பில் இருக்கிறார்
 
சிறுகதைகள், கட்டுரைகள் இவருக்கு விருப்பமான களங்கள். இவரது படைப்புகள் தங்கமீன் இணைய இதழ், செராங்கூன் டைம்ஸ் இதழ், தமிழ் முரசு நாளிதழ், மற்றும் சொல்வனம் இணைய இதழில் வெளிவந்துள்ளன
 
திருமுறைகள் பற்றிய கட்டுரைகள் அடங்கிய இவரது முதல் தொகுப்பு, “எளிதாய்க் கற்கலாம் திருமுறை” விரைவில் வெளியீடு காண இருக்கிறது    
 
சஹானா இணைய இதழுக்கு, உங்கள் சிறுகதையை பகிர்ந்தமைக்கு நன்றி வித்யா அருண். உங்கள் “எளிதாய் கற்கலாம் திருமுறை” நூல் வெற்றி பெற வாழ்த்துக்கள்  
 
 
 
 
 
என்றும் நட்புடன்,
சஹானா கோவிந்த்

 

 

 

Similar Posts

2 thoughts on “மோனம் (சிறுகதை) – எழுதியவர் : வித்யா அருண், சிங்கப்பூர்
  1. சொந்த அனுபவத்தையே பகிர்ந்திருக்கிறார் போலும்! சிறப்பான பகிர்வு. திருமுறைகளுக்கெல்லாம் விளக்கம் சொல்லும் அளவுக்குத் தமிழில் தேர்ச்சி பெற்றிருப்பதை அறிய வியப்பு மேலிடுகிறது. வாழ்த்துகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!