in ,

பானிபூரி ❤ (சிறுகதை) – ✍ சல்மா அம்ஜத் கான், மதுரை

பானிபூரி ❤ (சிறுகதை)

இந்த போட்டிக்கான சிறப்புப் பரிசுகளை வழங்குபவர்கள், Madhura Boutique நிறுவனத்தார். அவர்களின் https://madhuraboutique.in/ என்ற தளத்திற்கு சென்று, உங்களுக்கோ அல்லது உங்களுக்கு வேண்டியவர்களுக்கு பரிசு தரவோ, தரமான புடவைகள், வெள்ளி நகைகள், ஜெர்மன் சில்வர் நகைகள் பெற்றுக் கொள்ளலாம்

சிறுகதைப் போட்டி 2021 (கதை எண் 93)

“டேய் என்னடா ஆபீஸ் கிளம்பிட்ட? இன்னைக்கு உன்  பொண்டாட்டிக்கு பிறந்த நாள். அவள கூட்டிட்டு கோவிலுக்கு போய்ட்டு வாடா” என தன் அன்னை கூறியதும், பிரதாப் மனம் மகிழ்ச்சியுடன் தன் மனைவியை தேடியது. 

பிரதாப்பின் தங்கை மகளுக்கு உணவு ஊட்டிக் கொண்டிருந்த பிரதாபின் மனைவி அகல்யாவின் கண்கள், ஒரு நிமிடம் மகிழ்ச்சியை தத்து எடுத்தாலும், மறுநிமிடமே அதை கலைத்து விட்டு மீண்டும் குழந்தைக்கு உணவு ஊட்ட ஆரம்பித்தாள். 

“அகல்யா, போமா போய் கெளம்பு”  என பிரதாப்பின் அம்மா கௌசல்யா கூற

“பரவாயில்லை அத்தை. அவருக்கு ஆபிசுக்கு நேரமாகிரும். அவங்க கிளம்பட்டும்” என மீண்டும் உணவூட்ட ஆரம்பித்தாள். 

அவளை பார்த்து முறைத்த பிரகாஷ், “அதெல்லாம் நேரம் இருக்கு. சீக்கிரம் வர சொல்லுங்கம்மா” என கூறி விட்டு, வெளியே தன் இரு சக்கர வாகனத்தை உயிர்ப்பித்தான்  

அகல்யா தயாராகி வெளியே வர, அவனோ முறைத்துக் கொண்டே, “நீ தான இன்னைக்கு எங்கேயாவது கூட்டிட்டு போக சொன்ன. இப்ப அவங்களே அனுப்பி வைக்கும் போது ரொம்ப தான் பிகு பண்ற”  

“ஆமா நான் அப்படி தான் பிகு பண்ணுவேன். நான் கூட்டிட்டு போக சொல்லும் போது, டைம் இல்ல அது இல்ல, எல்லாரும் இருக்காங்க எப்படி கூட்டிட்டு போகனுன்னு டைலாக் பேசிட்டு, இப்ப அத்தை சொன்னதும் நீங்க கூப்பிடுவீங்க. நான் உடனே வந்துரனுமா?” முகத்தை சிலுப்பிக் கொண்டு கேட்டாள் அகல்யா

“அகிமா, நான் என்ன பண்ணுவேன்… ” என கொஞ்சலுடன் ஆரம்பிக்க

“போதும் தெய்வமே, திரும்ப அந்த பாட்டை ஆரம்பிக்காதீங்க. முதல்ல கிளம்பலாம்”  என கூறி வண்டியில் ஏறி அமர்ந்தாள்

“அகி, தோள்ல கை போடுமா?”

அகல்யா எட்டி கண்ணாடியை பார்த்து முறைக்க, அவன் அமைதியானான்.  

“கல்யாணம் ஆகி இரண்டாவது தடவை வெளிய போறோம். கொஞ்சம் சிரிச்ச மாதிரி இல்லைனாலும் முறைக்காம வரலாமே?” என்றதும் 

திருமணமான இரண்டாவது நாள் மறுவீட்டிக்கு இரு சக்கர வாகனத்தில் ‘பார்த்த முதல் நாளே’ பாடலை பாடிய வண்ணம் அவன் ஓட்டிச் சென்ற நினைவு வர, சிரித்துக் கொண்டே அவன் தோளில் கை போட்டுக் கொண்டாள் அகல்யா

பிரதாப் அதில் மகிழ்ந்து வண்டியை எடுக்கப் போக,” மாமா. ‌ மாமா….” 

“சித்தப்பா….” என கத்திக் கொண்டே நான்கு குழந்தைகள் ஓடி வர, பிரதாப் அவர்களை பார்த்து “என்ன வேண்டும்” எனக் கேட்டான் 

“நாங்களும் உங்க கூட வர்றோம், எங்களையும் கூட்டிட்டு போங்க.”  என்க, பிரதாப் மழுப்பலான புன்னகையுடன் அகல்யாவை ஏறிட்டான்

இது எப்போதும் நடக்கும் கதை தான் என்பது போல, ஒரு பெருமூச்சுடன் வண்டியிலிருந்து கீழே இறங்கி காரை நோக்கி நடந்தாள் அவள்

“இன்னைக்கு நேரம் ரொம்ப நல்லா இருக்கு” என நொந்தபடி காரின் சாவியை எடுத்துக் கொண்டு, காரில் குழந்தைகளையும் ஏற்றிக் கொண்டு கோயில் நோக்கி பயணித்தனர். 

பிரதாப்பின் குடும்பம் கூட்டுக் குடும்பம். தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா,  இரண்டு அண்ணன், ஒரு தங்கை, பெரிம்மா, பெரிப்பா, அவர்களுக்கு இரண்டு ஆண் பிள்ளைகள், மொத்தம் நான்கு அண்ணிமார்கள், எட்டு குழந்தைகள். இது போக பிரகாஷ் அகல்யா என கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வருகிறார்கள். 

அகல்யாவிற்கு அவர்களின் குடும்பம் மிகவும் பிடிக்கும். யாரும் யாரையும் விட்டுக்கொடுக்க மாட்டார்கள். அவர்களுக்கிடையே சண்டை வந்தாலும், அகல்யா பக்கமே பெரும் கூட்டம் திரண்டு  இருக்கும். 

அங்கிருக்கும் குழந்தைகளுடன் இருந்தாலே மனதில் இருக்கும் கவலைகள் எல்லாம் ஓடிப் போகும். அகல்யா தனியாக வளர்ந்தவள், இந்த கூட்டு குடும்பத்துடன் ஆசையுடன் இணைந்தாள். 

ஒவ்வொருவரின் கவனிப்பும் அவளுக்கு ஆதரவாகவும், அரவணைப்பாகவும்  இருந்து வருகிறது. ஒவ்வொரு நாளும் இப்படி ஒரு குடும்பத்தை தனக்கு கொடுத்ததற்கு கடவுளிடம் நன்றி கூறிக் கொண்டே இருப்பாள் அகல்யா. 

இவ்வளவு நன்மைகள் கூட்டு குடும்பத்தில் இருந்தாலும் ஒரு சில குறைகள் இருந்து கொண்டே இருக்கும். குடும்பமாக இருக்கும் போது ஒருவரை விட்டு ஒருவர் சாப்பிடவும் முடியாது. வெளியில் செல்லவும் முடியாது. குறிப்பாக குழந்தைகளை விட்டுவிட்டு செல்ல இயலாது.  

கணவனிடம் தனிமை என்பது இரவு மட்டுமே கிடைக்கும். திருமணமாகி ஆறு மாதங்கள் ஆகிய நிலையிலும், எங்கும் வெளியே சென்றது இல்லை. மனைவிக்கு என்று இன்னது என பிரதாப் வாங்கி வந்ததும் இல்லை‌. கூட்டு குடும்பத்தில் இது ஒரு பிரதான சிக்கல்

கணவன் மனைவிக்கு தனிமை என்பது கண்களால் பேசும் காவியம் மட்டுமே

ஆசையாய் அகல்யா நேற்று மல்லிகை பூ கேட்க, எல்லோருக்கும் சேர்த்து வாங்கி வர முடியாமல் அவளுக்கு மட்டும் வாங்கி வந்தவன் அவன் தம்பியின் மோப்ப சக்தி புலன்விசாரணையில் சாமிக்கு என சமாளித்து சாமி படத்திற்கு மாற்றி ஆகிவிட்டது. 

இதைக் கூட தெரியாம கொண்டு வர தெரியவில்லை என தலையில் அடித்துக் கொண்டு நகர்ந்தாள் அகல்யா 

இன்று அகல்யாவிற்கு பிறந்தநாள் என இன்று கோவிலுக்கு கிளம்பிய போது குழந்தைகள் சூழ்ந்து கொள்ள, அவர்களையும் அழைத்துச் செல்ல வேண்டியதாகி விட்டது. கோவிலுக்கு தனியாக கிளம்பி, பட்டாளமும் கூட வந்தாகி விட்டது

குழந்தைகளுடன் கோவிலுக்கு சென்றவள், குழந்தைகளை கவனத்துடன் பார்க்க வேண்டியதாயிற்று. கணவனிடம் திரும்பவும் இல்லை. 

அவனும் குழந்தைகளிடம் கவனத்தை செலுத்திக் கொண்டு இருந்தாலும் ஓரக்கண்ணால் தன் மனைவியையும் பார்த்துக் கொண்டிருந்தான்

“அகல்யா” என பிரதாப் பேச ஆரம்பிக்க

“பிரதாப்  நேரமாச்சு வாங்க கிளம்பலாம். குழந்தைகளுக்கு பசிக்க ஆரம்பிச்சு இருக்கும்” என அக்கறையாய் கூற, ஒரு பெருமூச்சுடன் பிரதாப் மீண்டும் அவர்களை வீட்டில் விட்டுவிட்டு, தன் இருசக்கர வாகனத்தை எடுத்து கொண்டு அவன் அலுவலகம் சென்று விட்டான். 

எல்லா வேலைகளையும் முடித்து விட்டு ஹாலில் சிறிதுநேரம் அமர்ந்து பிரதாப்பின் அண்ணிகளுடனும் தாயுடனும் அளவளாவிக் கொண்டிருந்தாள் அகல்யா

“குழந்தைங்க எல்லாம் வனிதாகிட்ட பாடம் படிச்சிட்டு இருக்காங்க. நீ போய் நாலு அப்பள கட்டு மட்டும் வாங்கிட்டு வரியாமா. இப்ப குழந்தைங்க யாராவது ஒருத்தர கூப்பிட்டா எல்லாரும்  ஓபி அடிச்சுட்டு வந்துடுவாங்க” என அத்தை கேட்க

அகல்யாவும் “சரி” என சம்மதித்தாள். 

இன்று காலை அப்பாவியாய் முகத்தை சுருக்கிக் கொண்டு, “சாரி” என கெஞ்சிய தன் கணவனின் முகம் ஞாபகம் வர, தன்னை அதில் தொலைத்தவளாய் சாலையில் நடந்து கொண்டிருந்தாள் அகல்யா

திடீரென ஒரு இரு சக்கர வாகனம் அவள் முன் வந்து நிற்க, அவள் உடல் ஒரு நிமிடம் தூக்கி வாரிப் போட்டது. 

அந்த வண்டியில் அமர்ந்து இருந்த உருவத்தை பார்த்த அகல்யா தன் மூச்சை சீராக்கிக் கொண்டு முகத்தை சுளித்துக் கொண்டு நகர்ந்தாள். 

மீண்டும் அந்த வண்டியில் இருந்தவன் அவள் முன்னே வண்டியை நிறுத்த அவனை ஏகத்துக்கும் முறைத்தாள், அகல்யா. 

“அகல் சாரிடி. சீக்கிரம் வண்டில ஏறு, யாராவது பாத்துடப் போறாங்க” அவன் கெஞ்ச அவள் குழப்பமாக அவனை பார்த்தாள். 

“அப்புறம் பாரு, இப்ப ஏறு” என அவசரப்படுத்த, அவளும் சுற்றி முற்றி ஒருமுறை பார்த்து விட்டு வண்டியில் ஏறி அமர்ந்தாள்

“எங்க போற?” 

“நீ சொல்லு, எங்க போகனும்?” 

முன்னாலிருந்த மிரரில் எட்டிப் பார்த்தவள், ஏளனமாக சிரித்தாள். 

தன்னைத் தானே நொந்தவன், “சாரி. நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவே இல்லை, குழந்தைகளும் நம்ம கூட கோயிலுக்கு வருவாங்கன்னு. பிறந்தநாள்னு தனியா கோயிலுக்கு கூட்டிட்டு போக சொன்ன, ஆனா என்னால தான் குழந்தைங்க கேட்டதும் நோ சொல்ல முடியல.” 

“எனக்கு தான் தெரியுமே, உங்களால எதுவும் முடியாதுன்னு. எனக்காக வாங்கிட்டு வந்த மல்லிகபூவ சாமிக்கு போட்டாச்சு. ஒரு மல்லிகைப்பூவ மறைச்சு கொண்டு வர தெரியல. எல்லாருக்கும் சேர்த்து வாங்க பணம் இல்ல. என்ன பண்ண?” 

“நான் என்ன பண்ணுவேன். ஒருத்தர் ரெண்டு பேர்னா வாங்கிட்டு வரலாம். நம்ம வீட்டில மொத்தம் எட்டு பொண்ணுங்க அது போக ரெண்டு குட்டி பொண்ணுங்களும் கூட இருக்காங்க. அத விட்டுட்டு என் பொண்டாட்டிக்கு மட்டும் வாங்கிட்டு வந்தா. நல்லா இருக்காது தானே அகல்” 

அந்த உண்மை அவளும் அறிந்ததே. அதனால் தான் எதுவும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இன்று அவள் பிறந்தநாள், அதுவும் பிரதாப் உடனான முதல் பிறந்த நாள். இன்று கூட எதிர்பார்க்கவில்லை என்றால் எப்படி?  

கடந்த வருடம் பிரதாப்பின் அண்ணிக்கு அவன் அண்ணன் பரிசு வாங்கி வர்ற, எனக்கு இதுவரை வாங்கி தந்தது இல்லை என வீட்டில் ஒவ்வொரும் கேட்க ஒரு போர்க்களம் உருவானதை ஏற்கனவே பிரதாப் கூறி இருந்ததால், அவள் அதை எதிர்ப்பார்க்கவில்லை. 

கணவனுடன் ஐந்து நிமிட தனிமையே அவள் வேண்டியது. அதுவும் அவளுக்கு கிடைக்கவில்லை. 

இன்று முதல்முறையாக யாருக்கும் தெரியாமல் பிரதாப் அவளை அழைத்துச் செல்கிறான். இது அகல்யாவிற்கே வியப்பாக இருந்தது. 

“பிரதாப் எங்க போறோம்?” 

“உன் ஃபேவரிட் பானிபூரி சாப்பிட” 

“நிஜமாவா?” 

“பின்ன பொய்யா வா?” என கேட்க, அகல்யா பின்னிருந்து அவனை அணைத்துக் கொள்ள, வண்டி சடன் பிரேக் இடப்பட்டது. 

“என்னாச்சு?” 

“அய்யோ … போச்சு … போச்சு… ” என புலம்பியவன்,  வண்டியை நிறுத்தி விட்டு அவளை இழுத்துக் கொண்டு ஒரு சந்தின் மறைவிற்கு சென்றான். 

“என்னாச்சு?” 

“அங்க பாரு. பானிபூரி கடையில என் தம்பி இருக்கான். போச்சு போச்சு….” என சந்தின் மறைவிலிருந்து எட்டிப் பார்த்தான் பிரதாப்

அவன் பின்னே அகல்யாவும் எட்டிப் பார்க்க, அவளை உள்ளே இழுத்தான். 

“அங்க என்ன பாக்குற. அவன் மட்டும் பார்த்தான். அவ்ளோ தான்” என புலம்ப, அகல்யா பிரதாப்பை முறைத்ததில் அவன் திரும்பிக் கொண்டான். 

மெதுவாக எட்டிப் பார்க்க, இன்னும் அவன் தம்பி ஆருத் பானிபூரி சாப்பிட்டுக் கொண்டிருந்தான். யதார்த்தமாக ஆருத் திரும்ப, பிரதாப் மறைந்து கொண்டான். 

கையிலிருந்த ஹெல்மெட்டை அகல்யா தலையில் மாட்டி  விட்டவன், “அகல் மெதுவா அவன் நம்மல பாக்குறானா பாரு?” என கேட்க அவனை வெட்டவா குத்தவா என பார்த்தாள். 

“நாம என்ன லவ்வர்ஸா, இப்படி பயந்து பயந்து வெளிய வர” என முறைக்க

“செல்லம் ப்ளீஸ்மா, நானே இன்னைக்கு தான் உன்னை முதமுறையா வெளிய கூட்டிட்டு வரேன். இது மட்டும் வீட்டுக்கு தெரிஞ்சது, டெய்லி உன்னை கூட்டிட்டு சுத்துன மாதிரி ரவுண்டு கட்டி திட்டுவாங்க. ப்ளீஸ், செல்லம்ல” என கொஞ்சினான், அவன். 

“பொண்டாட்டியை கூட்டிட்டு வந்துட்டு எவளயோ கூட்டிட்டு வந்த மாதிரி இருக்கு நீ பண்றது.” 

“நான் என்ன பண்ணுவேன்.” என மீண்டும் ஆரம்பிக்க

“அய்யோ தெய்வமே போதும். திரும்ப புராணத்தை ஆரம்பிக்காத” என நொந்த அகல்யா எட்டிப் பார்க்க, ஆருத் பானிபூரி சாப்பிட்டுக் கொண்டிருந்தான். 

“இன்னுமா சாப்பிடுறான், திரும்ப ஒரு தடவை எட்டி பாரு” 

அகல்யா திரும்ப பார்க்க, ஆருத் பானிபூரிகாரனிடம் பணத்தை செலுத்தி விட்டு நகர்ந்து கொண்டிருந்தான். 

“போயிட்டான்” என அகல்யா கூற, அவளை இழுத்துக் கொண்டு வேகமாக கடைக்கு சென்றான்

“பையா ஏக் ப்ளேட் பானிபூரி” என்றவன், தன்னை யாரும் பார்க்கிறார்களா என கண்காணித்துக் கொண்டிருந்தான்.  

“பிரதாப் உனக்கு வாங்கலையா?” 

“எனக்கு வேணாம், நீ சாப்பிடு” என மீண்டும் நோட்டமிட்டான். 

அவள்  முதல் பூரியை எடுத்து பிரதாப்பிடம் நீட்ட, பிரதாப் அலைபேசி அழைப்பு வந்தது. 

“நீ சாப்பிடு, நான் இத மட்டும் பேசிட்டு வரேன், அம்மா போன் பண்றாங்க” என அமைதியாக கிசுகிசுத்தான். 

அதை பேசி விட்டு வைத்தவன், “நாம இன்னொரு நாள் பானிபூரி சாப்பிடலாம்.  நீ வா” என அவள் கையில் இருந்ததை பிடுங்கி பானிபூரி கடைக்காரரிடம் கொடுத்து விட்டு, அவளை இழுத்துக் கொண்டு வந்து வண்டியில் ஏற சொன்னான். 

“பிரதாப் என்ன பண்ற? நான் ஒரு பூரி தான் சாப்பிட்டு இருக்கேன்” 

“மீதிய இன்னொரு நாள் சாப்பிடலாம்” 

“என்ன ஆச்சு?” 

“நீ அப்பளம் வாங்க போனவ இன்னும் காணோம்னு அம்மா தேடிக்கிட்டு இருக்காங்க. சீக்கிரம் போகனும்” வண்டியை முறுக்க, அது சீறி பாய்ந்தது

அவன் வீட்டு தெரு முனையில் வண்டியை நிறுத்தியவன், அவளை உள்ளே செல்லுமாறு கூறி விட்டு ஐந்து நிமிடம் கழித்து அவனும் சென்றான். 

உள்ளே சென்றதும் அவள் கூடத்தில் இல்லை என, அவன் அறைக்கு  செல்ல முயல, அவன் அண்ணி அவனை தடுத்து நிறுத்தினாள். 

“நீங்க ரொம்ப மோசம் கொழுந்தனாரே?” என அவன் இரண்டாவது அண்ணி கூற,  ஒரு நிமிடம் அதிர்ந்தான் பிரதாப் 

“நா..  நான் என்ன பண்ணேன், அண்ணி.”  எதுவும் தன் குட்டு வெளிவந்துவிட்டதோ, என எண்ணி முழித்துக் கொண்டு இருந்தான். 

“என்ன அண்ணா, அண்ணி வெளிய போய் ரொம்ப நேரம் ஆச்சுன்னு அம்மா சொன்னா, நீ இவ்வளவு லேட்டா வர்ற. அதுவும் வந்து அண்ணி எங்கன்னு ஒரு வார்த்தை கூட கேட்கல. நீ ஒரு வேஸ்ட் அண்ணா….”என அவன் தங்கை குற்றப்பத்திரிகை வாசித்தாள். 

‘அது சரி’ என மனதில் எண்ணியவன், “இன்னும் வரலையா?” என அப்பாவி முகத்துடன் கேட்டான். 

“கூட்டம் அதிகமா இருந்துச்சாம். இதுவரை கடைகளுக்கு போகாததால, யாருன்னு தெரியாம கடைகாரன் ரொம்ப நேரம் நிப்பாட்டிடானாம்.அப்புறம் நம்ம வீட்டு பேர் சொன்னதும் சீக்கிரம் கொடுத்து அனுப்புனானாம்” என்றார் அவன் அம்மா. 

“ஓ…. அப்படியா?” 

“என்னடா கொஞ்சம் கூட அக்கறையே இல்லாமா. இவனுக்கு இன்னும் பொறுப்பே வரல, இன்னும் நாலஞ்சு வருசம் கழிச்சு கல்யாணம் பண்ணி குடுத்துருக்கனும். பாவம் நம்ம அகல்யா, இவன் கிட்ட வந்து மாட்டிக்கிட்டா” என பாட்டி புலம்ப,  மெதுவாக அறை நோக்கி நழுவினான் பிரதாப்

பிரதாப் அறையினுள் நுழைய, கட்டிலில் அமர்ந்து யோசனையில் இருந்தாள் அவள் 

காலையில் இருந்து அவள்‌ முறைத்தது எல்லாம் நியாபகம் வர, ‘இன்னைக்கு நாம செத்தோம். சும்மா இருந்துருந்தா கூட அமைதியா இருந்திருப்பா. ஆனா கூட்டிட்டு போய் நிம்மதியா பானிபூரி கூட சாப்பிட விடல. சாப்பிட்டு இருந்ததையும் பிடிங்கிட்டோம். இதுக்கு நான் கூட்டிட்டு போகாமலே இருந்து இருக்கலாம்’ என தன் தலையில் அடித்துக் கொண்டான்

அவள் முன் மண்டியிட்டு,  “சாரி” என்றவனை, சற்றும் எதிர்பாரா வண்ணம், அணைத்தாள் அகல்யா. 

“ஐ அம் சோ ஹாப்பி பிரதாப், ஐ லவ் யூ சோ மச்” என்றாள் மகிழ்ச்சி பொங்க

“அகி, என் மேல கோவமா இருப்பன்னு நெனச்சேன்‌” 

“நான் எதுக்கு கோபப்பட போறேன் பிரதாப். நான் ரொம்ப சந்தோசமா இருக்கேன்” 

“பாதியிலேயே கூட்டிட்டு வந்ததுக்கு என் மேல கோபம் இல்லயா?” 

“சுத்தமா இல்லை.” 

“நிஜமாவா?” 

“பின்ன பொய்யா வா?” என அவனைப் போல் சொல்லி அவன் முகம் பார்த்தாள். 

“அகி மா, நீ எனக்காக தான பொய் சொல்ற. எனக்கு தெரியும்.” 

“நான் ஏன் பொய் சொல்லனும்” 

“நீ தனியா சுதந்திரமா வளர்ந்த பொண்ணு. நினைச்ச நேரம் வெளிய போவ. மனசுக்கு பிடிச்சத வாங்கி சாப்பிட்டுறப்ப. ஆனா இங்க வந்து உன்னால வெளியவும் போக முடியல. என்னாலயும் உனக்கு எதுவும் வாங்கி தர முடியல. உன் பிறந்தநாளுக்கு கூட என்னால் உன் கூட டைம் ஸ்பென்ட் பண்ண முடியல. நான் நினைச்சும் உனக்கு எதுவும் பண்ண முடியலன்னு ரொம்ப கஷ்டமா இருக்கு” அவன் குற்ற உணர்வுடன் அவளிடம் கூறினான். 

ஆனால் அகல்யா அவன் கண்களையே பார்த்துக் கொண்டிருக்க, “ஏன் அகி மா என்னை இப்படி பார்க்குற. இப்படி ஒரு கூட்டுக் குடும்பத்துல இவன்கிட்ட வந்து மாட்டிக்கிட்டோம்னு வருத்தப்படுறியா?” 

“லூசு பிரதாப், நான் எவ்ளோ சந்தோசமா இருக்கேன் தெரியுமா? என்ன சொன்ன தனியா சுதந்திரமா வளர்ந்தேனா? உனக்கு தெரியுமா பிரதாப், என் அப்பா அம்மா லவ் மேரேஜ். அவங்க கல்யாணம் பண்ணுனதும் அவங்கள யாரும் குடும்பத்துல சேர்த்துகவே இல்ல.

சொந்தம்னு எங்களுக்கு  யாருமே  இல்ல. எவ்ளோ நாள் எனக்கு தோள் கொடுக்க அக்காவோ அண்ணனோ இல்லன்னு வருத்தப்பட்டுருப்பேன்னு தெரியுமா? 

ஆனா இங்க தாத்தா, பாட்டி, அத்தை,மாமா, அக்கா,அண்ணி,அண்ணான்னு நிறைய சொந்தங்கள் எனக்கு இருக்கு. எனக்கு ஏதாவதுனா அவங்க எனக்காக இருப்பாங்க. அவங்கள நான் என்னைக்கும் தொந்தரவா நினைச்சது இல்ல

அப்புறம் நீ.  நீ தான் எனக்கு எல்லாம். இத்தனை சொந்தம் எனக்கு இருக்குன்னா அதுக்கு நீ தான் காரணம்.  நீ எனக்கு என்ன வாங்கி குடுத்து இருந்தாலும் இன்னைக்கி நான் சாப்பிட்ட அந்த ஒரு பானிபூரிக்கு ஈடாகாது பிரதாப்” 

“நீ இப்படி சொல்லும் போது ஹாப்பி யா இருக்கு அகிமா, ஆனா ஒரு பானிபூரில நீ ஃபிளாட் ஆவன்னு தெரியாம போச்சு.” 

“மரமண்டை பிரதாப். என்னோட திருப்திக்கு காரணம் பானிபூரி இல்ல. அந்த பானிபூரியை எனக்கு வாங்கி தரணும்னு நீ எடுத்த பாரு ஒரு ரிஸ்க் எடுத்தியே, அதுல இருக்கு. அந்த ரிஸ்க் உன் காதலை சொல்லுச்சு

இதுவும் நல்லா தான் இருந்தது. மறைஞ்சு மறைஞ்சு லவ்வர்ஸ் மாதிரி போறது‌. நான் உண்மையிலேயே ரொம்ப அதிர்ஷ்டசாலி. லவ் யூ சோ மச் பிரதாப்‌” என அவனிடம் அணைப்பை இறுக்கினாள். 

‘பானிபூரி சாப்பிடாமல் விட்டதற்காக தன்னை திட்டுவாள்’ என நினைத்து வந்தவனுக்கு, இப்படி ஒரு புரிதலான மனைவி கிடைத்ததில் மகிழ்ச்சி. அவளை இறுக்கி அணைத்து உச்சியில் முத்தமிட்டான் பிரதாப். 

“மாமா…. மாமா….” என வாண்டுகளின் குரல் கேட்க இருவரும் விலகினர்.  

“அத்தை, மாமாவ கூட்டிட்டு சாப்பிட வர சொன்னாங்க பாட்டி” என கூறி, கையோடு பிரதாப்பையும் இழுத்துக் கொண்டு சென்றனர். 

பிரதாப், அகல்யாவை திரும்பி பார்த்து, ‘நாளைக்கும் பானிபூரி சாப்பிடலாமா?’ என உதட்டை அசைக்க, அவள் வெட்கி தலை குனிந்தாள்

‘சஹானா’ இணைய இதழின் ‘சிறுகதை விமர்சனப் போட்டி’ யில் கலந்து கொண்டு பரிசு வெல்லும் வாய்ப்பு. போட்டி விவரங்கள் அறிய, இங்கு கிளிக் செய்யுங்கள்

(முற்றும்)

#ads தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇

      

        

‘சஹானா’ சிறுகதைப் போட்டியில் பங்குபெறும் மற்ற கதைகளை வாசிக்க இணைப்பு இதோ – https://sahanamag.com/short-story-contest-2021-entries/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    அவள் ஒரு தொடர்கதை (சிறுகதை) – ✍ யுவராஜ்.பா, சென்னை

    இலவசப் பேருந்து (சிறுகதை) – ✍ பூமா ப்ரியா, சென்னை