in ,

இலவசப் பேருந்து (சிறுகதை) – ✍ பூமா ப்ரியா, சென்னை 

இலவசப் பேருந்து (சிறுகதை)

இந்த போட்டிக்கான சிறப்புப் பரிசுகளை வழங்குபவர்கள், Madhura Boutique நிறுவனத்தார். அவர்களின் https://madhuraboutique.in/ என்ற தளத்திற்கு சென்று, உங்களுக்கோ அல்லது உங்களுக்கு வேண்டியவர்களுக்கு பரிசு தரவோ, தரமான புடவைகள், வெள்ளி நகைகள், ஜெர்மன் சில்வர் நகைகள் பெற்றுக் கொள்ளலாம்

சிறுகதைப் போட்டி 2021 (கதை எண் 94)

தேவி, கனகா, வனஜா மூவரும் தாம்பரம் செல்லும் பஸ்ஸில் அவசர அவசரமாக ஏறினார்கள் 

“தூக்கித் தூக்கிப் போட்டாலும் பரவாயில்லை, நாம் மூவரும் ஒன்றாகக் கடைசி சீட்டில் உட்காரலாம்” என்று அமர்ந்தனர். 

”ஒரு ஸ்டாப் நடந்து வந்து சீட் பிடிக்கிறோம். இரக்க குணத்தைக் காட்டுகிறேன்னு எந்திரிச்சு யாருக்காவது உக்கார சீட் குடுத்தீங்கனா கடுப்பாயிருவேன்” என்றாள் தேவி. 

”வனஜா தான் யார் கேட்டாலும் சீட்ட குடுத்துட்டு நின்னுகிட்டே வருவா” என்றாள் கனகா. 

”அன்னைக்கு ஒரு கர்ப்பிணி வந்தாங்க, அதான் இடம் கொடுத்தேன். பாவம் இந்த நெரிசல்ல எப்படிக் கஷ்டபடுவாங்க அதான்” என்றாள் வனஜா. 

”ஒரு லேடி எப்பவும் இடம் கேட்குமே, அதுக்கு குடுத்தில!” 

”அவங்க வயசானவங்க அதனால குடுத்தேன்.” 

”அவங்க ஒன்னும் நிக்க முடியாத கிழவி இல்ல, இன்னைக்கு அந்தம்மா வந்து இடம் கேட்கட்டும் வச்சுக்கிறேன்” என்றாள் தேவி. 

பஸ் கிளம்பியது, கல்லூரி மாணவர்கள் ஏறினர்.  

“ஏய் தேவி, அன்னைக்கு உன்னையே பாத்துகிட்டு இருந்தான்ல… இப்ப பாரேன் இந்தப் பக்கமே பாக்க மாட்டேங்குறான்” என்றாள் வனஜா. 

”அங்க பார் காலேஜ் ஸ்டூடண்ட்ஸ் இருக்காங்க… அவங்க இறங்கும் வரை இந்தப் பக்கம் திரும்ப மாட்டாங்க. இறங்கிய பின்னாடி நம்மளையே பார்ப்பாங்க” என்று சிரித்தாள் தேவி. 

”ஆமா வேற ஆளே இல்லைனா தான் நம்மைப் பார்ப்பாங்க. இவன்களுக்கு வேற வேலை இல்லை” என்றாள் கனகா. 

இதில் தேவி பன்னிரண்டாம் வகுப்பு வரை படித்திருக்கிறாள். நன்றாகவே படித்தாள். அவள் வீட்டின் வறுமை காரணமாக அண்ணன், தங்கை இருவரையும் படிக்க வைக்க முடியாது. யாரையாவது ஒருத்தரைத் தான் படிக்க வைக்க முடியும் என்ற நிலை. 

பையனை விடப் பெண் நன்றாகப் படித்தாலும், பையன் கடைசி வரை நம்மைப் பார்த்துக் கொள்வான் என்பதால், பையனையே படிக்க வைத்தார்கள். 

தேவியைத் திருமணம் செய்யும் வரை எக்ஸ்போர்ட் கம்பெனி வேலைக்கு அனுப்பி வைத்தனர். எதையும் சீக்கிரம் கற்றுக் கொள்வாள். தெளிவாக இருப்பாள் தேவி

கனகா ஆறாம் வகுப்பு வரையும் வனஜா எட்டாம் வகுப்பும் படித்திருந்தனர். இதில் வனஜா எதையும் சீக்கிரம் நம்பிவிடுவாள், கனகா கொஞ்சம் நிதானமாக நடந்து கொள்வாள்.

ஞாயிறு மட்டும் விடுமுறை. அன்று வீட்டில் வேலை இருக்கும். எப்போதாவது சினிமா போவார்கள். அதுவும் இப்போது குறைந்து விட்டது.

ஞாயிற்றுக்கிழமையும் ஓவர் டைம் வைத்து விடுகிறார்கள். இந்த பஸ்ஸில் ஜாலியாகப் பேசிக் கொண்டு போவது தான் அவர்களுக்குக் கிடைத்த மகிழ்ச்சி. 

இரண்டு ஸ்டாப் சென்றதுமே சீட் நிறைந்தது. மூன்றாவது நிறுத்தத்தில் அந்தப் பெண் ஏறினார். 

‘யாரிடம் சீட் கேட்கலாம்?’ என்று ஒவ்வொருத்தராகப் பார்த்துக் கொண்டே வந்தார்.  சில கல்லுரி மாணவிகளிடம் கேட்ட போது, “இல்ல, வேற யார்கிட்டயாவது கேட்டுக்குங்க” என்று செல்போனில் மூழ்கினர். அவர்களிடம் மேலும் பேச முடியாமல் அங்கிருந்து நகர்ந்து ஒரு வாலிபரிடம் கேட்டார் அந்தப் பெண். 

அந்த வாலிபர் காதில் விழாத மாதிரி திரும்பிக் கொண்டார். இறுதியாக இந்த மூவரையும் நோக்கி வந்தார்.  

”ஏம்மா, கொஞ்சம் யாராவது எழுந்து இடம் குடுக்கலாமே” என்றார். 

“இல்லைங்க எங்களுக்கும் கால் வலிக்குது. நீங்க யாரையாவது கேளுங்க” என்றாள் கனகா. 

”நீங்க சின்ன வயசு, ரொம்பக் கஷ்டமாக இருக்காது. வயசானவங்களுக்கு இடம் குடுத்து உதவி செய்யலாம், உங்களுக்குப் புண்ணியம் தான்” என்றார் அந்தப் பெண். 

வனஜா எழப் போனாள். தேவி வேகமாக எழுந்து இடம் கொடுத்தாள். 

“கனகா, நம்மள சொல்லிட்டு, இப்ப இவ இடம் குடுக்கிறா பாரு” என்று கிசுகிசுத்தாள் வனஜா. 

‘பேசாம இரு’ என்று சைகை செய்தாள் தேவி. ”மேடம் உங்களுக்கு கால் வலியா?” என்றாள்

”ஆமாம், ரெண்டு வருஷமா இந்த மூட்டுவலி இருக்குமா?’ 

”இதோட வீட்ல எல்லா வேலைகளையும் பார்த்துட்டு, வேலைக்கும் போய்ட்டு வர்றீங்களா?” 

”இல்ல, வீட்ல எல்லா வேலைக்கும் ஆள் வச்சுருக்கேன். இப்ப சமைக்க கூட ஆள் வச்சுட்டேன். வெஜிடபிள் சாலட்டும் ஜுஸ் மட்டும் நான் செய்து எடுத்து வருவேன்.”  

”வீட்டுக்குப் போனதும் காபி, டிபன் நீங்க செய்யணுமா?” 

”காபி என் வீட்டுக்காரர் போட்டுத் தந்துடுவார், இரவு டிபன் நான் செய்வேன்.” 

”மாவு ஆட்டுவது?” 

”அதையும் வேலைக்காரப் பெண் ஆட்டி வச்சுடுவா, காலையில் பாத்திரம் தேய்த்து சமையல் செய்து, வீட்டைப் பெருக்கி, மாவும் ஆட்டி வச்சுடுவா.” 

“சார் ரிடையர்டு ஆகிட்டாரா?” 

”ஆமா, சென்ட்ரல் கவர்மெண்ட் வேலை. போன வருஷம் ரிடையர்டு ஆனார்.” 

”குழந்தைகள்?” 

”எனக்கு ஒரு பொண்ணு, ஒரு பையன். பொண்ணு எம்.காம் படிச்சுட்டு பேங்குல வேலை பார்க்கிறா. மாப்பிள்ளையும் பேங்ல தான் வேலை பார்க்கிறார். மும்பையில் இருக்காங்க. பையன லண்டன்ல வேலை பார்க்கிறான்” என்றார் பெருமையாக. 

”மேடம், நான் சொன்னா தப்பா நெனைச்சுக்க மாட்டிங்களே?” 

“சொல்லுமா…” 

”சார் சென்ட்ரல் கவர்மெண்ட் வேலை பார்த்து ரிடையர்டு ஆனவர். அவருக்கு நல்லாவே பென்ஷன் வரும். நீங்களும் நல்ல வேலைல இருக்கீங்க. உங்களுக்கு எப்படியும் லட்சத்துக்கு பக்கத்திலோ அதுக்கு மேலோ சம்பளம் வரும். சொந்த வீடு, பசங்களும் நல்லா படிச்சுட்டு சம்பாதிக்கிறாங்க.”  

சற்றே முகம் மாறிய அந்தப் பெண்மணி, ”என்ன சொல்ல வர்ற?’’ என்றார் 

”நீங்க கால் டாக்ஸி, ஆட்டோவில் போகலாம். இல்லைனா ஏசி பஸ் இருக்கு. அதுல போகலாம். அதுவும் வேணாம்னா கட்டணப் பேருந்து இருக்கு, அதுல போகலாம். அதையெல்லாம் விட்டுட்டு டிக்கெட் இல்லாத இந்த பஸ்ல தான் வரணுமா? அப்படி வருவது உங்கள் விருப்பமாக இருக்கலாம், அப்ப நீங்க நின்னுகிட்டு தான் வரணும்” 

”இந்த இடத்தைப் பிடிக்க ஒரு ஸ்டாப் நடந்து வந்து ஏறுறோம். இங்க உட்கார்ந்து பேசிக் கொண்டு போவது மட்டும் தான் எங்களுக்குப் பொழுதுபோக்கு. தாம்பரம் இறங்கிய பின் அங்கிருந்து வேற பஸ்ல போகணும். அதுல நிக்கக் கூட இடம் இருக்காத. பஸ் விட்டு இறங்கி அஞ்சு நிமிஷம் நடந்தா தான் வீடு வரும்.

வீட்ல போனவுடன் எங்களுக்கு காபி போட்டுக் கொடுக்க ஆள் இருக்காது. அம்மா பக்கத்துல வேலைக்குப் போயிருந்தா சீக்கிரம் வந்து சமைச்சு வச்சிருப்பாங்க. தூரமா சித்தாள் வேலைக்குப் போயிருந்தா நான் தான் போனவுடன் சமைக்கணும்.”  

”சமைத்துச் சாப்பிட்டு, டீவிய போட்டுட்டு படுத்தா அதுல என்ன ஓடுதுனு கூடத் தெரியாது, தூங்கிடுவோம். காலைல நாலரை மணிக்கு எழுந்து வாசல் பெருக்கிக் கோலம் போட்டு, சமைத்து குழம்பு சாதம் எடுத்து வந்தா கெட்டுடும்னு கலந்த சாதம் வேற செஞ்சு,

அதுக்குப் பெரும்பாலும் ஊறுகாய் எடுத்துட்டு வருவோம். குளிச்சு, துணி துவைச்சு, அவசரமா பழைய சாதம் சாப்பிட்டு, ஏழு மணி பஸ்ஸ புடிச்சா தான் தாம்பரத்தில் எட்டு மணிக்குள் கம்பெனி போற பஸ்ச பிடிக்க முடியும். அப்பதான் நாங்க ஒன்பது மணிக்குள் கம்பெனிக்குப் போக முடியும்.” 

”ஒன்பது மணிக்கு வேலை ஆரம்பிச்சா, மதியம் சாப்பிடும் போது தான் எந்திரிப்போம். நடுவுல டாய்லெட் போகணும்னா கூடத் திட்டுவாங்க. சாப்பிட்டு வேலையில் உட்கார்ந்தா ஐந்தரைக்கு தான் விடுவாங்க

அதிலும் சில சமயம் ஓவர் டைம் போட்டுடுவாங்க. அப்பறம் வெளிய வந்தா பஸ்ல இடம் கிடைக்காது. அதான் ஒரு ஸ்டாப் நடந்து வந்து இடம் பிடிச்சா தான் தாம்பரம் வரை நாங்க சந்தோஷமாக பேசிக்கிட்டு வருவோம். 

கம்பெனி அனுப்புற கேப்ல போனா ஐநூறு ரூபாய் ஆகும். வீட்டுகிட்ட ஏறி அங்கேயே இறங்கியும் விடுவாங்க. அதை மிச்சம் பிடிக்க நாங்கதான் இப்படிக் கஷ்டபடுகிறோம், நீங்க ஏன் கால்வலியோட கஷ்டபடணும்?” என்றாள் தேவி

அந்தப் பெண்மணிக்குக் கோபம் வந்தது. ”இடம் குடுக்க இஷ்டம் இருந்தா குடு, இல்லைனா மாட்டேன்னு போ. இப்படி உட்கார வச்சு அவமானப்படுத்தாதே” என்றார்

”நான் அவமானப்படுத்தல, எங்க நிலமையைச் சொன்னேன். ஏசில வேலை, வீட்லயும் வேலை செய்ய ஆள், சத்தான சாப்பாடு, பழங்கள்னு சாப்பிடுகிற நீங்க ஈசியா வந்து சீட் கேக்குறீங்க… எங்க நிலமை உங்களுக்குத் தெரிய வேண்டாமா? அதான் சொன்னேன்” என்றாள் தேவி. 

”இந்த மாதிரி பஸ்ல ஏறியது என் தப்பு தான். மரியாதை தெரியாதவங்க” என்று எழுந்தார் அந்தப் பெண். 

”எங்களுக்கு மரியாதை தெரியும் மேடம். நீங்க ஒண்ணு செய்ங்க, முடியலைனா பேசாம விஆர்எஸ் வாங்கிடுங்க. எங்களை மாதிரி கஷ்டபடுகிறவங்களுக்கு வேலையாவது கிடைக்கும்” என்றாள் தேவி. 

பக்கத்தில் உள்ளவர்கள், ’’சூப்பர்மா, சரியா பேசின” என்று சொன்னவுடன் அந்தப் பெண் அடுத்த ஸ்டாப்பில் இறங்கிட்டார். 

”ஏய் பாவம்டி… அவங்கள இப்படிப் பேசியிருக்கக் கூடாது” என்றாள் கனகா. 

”நான் ஒண்ணும் தப்பாவோ கோபமாகவோ பேசல, உண்மையை மெதுவா சொன்னேன் அவ்வளவு தான்” 

”இனிமே அந்தம்மா இந்த பஸ்ல ஏறவே ஏறாது” என்றாள் வனஜா

ந்தச் சம்பவம் நடந்து இரண்டு மாதங்கள் ஆகியிருந்தன. தாம்பரத்தில் பஸ் ஏறினர் தேவி, கனகா, வனஜா மூவரும்.  

“ஏய், இங்க பாரு நமக்குப் பிடிச்ச பின் சீட்டு இன்னைக்குக் காலியாக இருக்கு” என்று சொல்லிக் கொண்டே ஓடிப் போய் உட்கார்ந்தாள் வனஜா.  

”இன்னைக்கு ஸ்கூல் காலேஜ் லீவு, அதான் இடம் கிடைச்சிருக்கு” என்றாள் தேவி. 

”அந்த லேடிய அதுக்கப்புறம் பார்க்கவே முடியல, அவங்க ஏறுற ஸ்டாப்பில் கூட காணோம்”  

”இவ கொஞ்சம் நிதானமா பேசியிருக்கலாம், பாவம் அவங்க” என்றாள் கனகா. 

”சும்மா என்னையே குறை சொல்லாதீங்கடி, நான் தப்பா ஒரு வார்த்தை கூடப் பேசல. அங்க பாரு சீட்டுக்கு ரெண்டு பேர் எப்படிச் சண்டை போட்டுக்கிறாங்க. அசிங்க அசிங்கமா திட்டிக்குறாங்க. இப்படி ஏதாவது பேசினேனா?

அதோ அந்த அம்மாவ நாம் அடிக்கடி பஸ்ல பார்க்கறோம். அந்த லேடிய விட வயசு அதிகம் இருக்கும். கோயம்பேடிலோ பாரிஸிலோ பூ வாங்கி அதைத் தூக்கிகிட்டு தாம்பரம் வரை ஒரு பஸ், அதுக்கப்புறம் இந்த பஸ்ல வருவாங்க.

இடம் கிடைக்காது. இடம் கிடைச்சா பூ கட்டுவாங்க. ஆனா, ஒரு நாள் கூட எனக்கு இடம் குடுனு கேட்டது இல்லை. நம்மள கூப்பிட்டு உக்கார வச்சா பூ கட்டிக்கிட்டே வருவாங்க, ஏன் இவங்களுக்கு வலியே இல்லைங்கிறீயா?” என்றாள் தேவி

”சரி, அந்தப் பேச்ச விடுங்கடி. நமக்கு இருக்கிற பிரச்னை பத்தாதா, அதையே திரும்பத் திரும்ப பேசிகிட்டு” என்று இந்தப் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தாள் கனகா. 

 றுநாள் காலை ஏழரை மணிக்குத் தாம்பரம் வந்து நின்ற பஸ்ஸில் மூவரும் இறங்கினர். அப்போது தூரத்தில் யாரோ இவர்களைப் பார்த்து கை அசைப்பது தெரிந்தது

”நேத்து தான் அவங்கள பத்திப் பேசினோம்… இப்ப நம்ம கிட்ட வர்றாங்க பாரு” என்ற வனஜாவின் குரலில் பயம் தெரிந்தது

தேவிக்கும் கொஞ்சம் பயமாக இருந்தது

அருகில் வந்தவர்,”எல்லோரும் எப்படி இருக்கீங்க?” என்று புன்னகை செய்தார்

”சாரி மேடம், அன்னைக்குப் பேசினது தப்பு தான், மன்னிச்சுக்குங்க. அதை நெனைச்சு பல தடவை சங்கடப்பட்டேன். உங்ககிட்ட மன்னிப்பு கேட்க நினைத்தேன், உங்களைப் பார்க்கவே முடியல” என்றாள் தேவி

”நீ பேசினது என்னை ரெம்பவே கஷ்டப்படுத்திருச்சு, ஓங்கி உன் கன்னத்துல நாலுஅறை விடலாம்னு தோணுச்சு. ஒரு வாரம் வேலைக்கு கூட போகாம எப்படி அவ என்னை இப்படிக் கேக்கலாம்னு புலம்பினேன். ஆனால், நாள் போகப் போக நீ பேசியது ஒண்ணும் தப்பு இல்லைனு புரிஞ்சுது. என்ன செய்யலாம்னு யோசிச்சேன், ஒரு நல்ல முடிவு கிடைச்சது”

”மேடம்…”   

”நான் வி.ஆர்.எஸ் வாங்கிட்டேன்” 

”ஏன் மேடம்?” 

”நீ சொன்னது தான் காரணம். எனக்குப் பணம் வேண்டியளவு இருக்கு. இதில் கால் வலியோட சம்பாதிச்சு எதுக்குச் சேர்க்கணும்? பிள்ளைகளும் நல்லா இருக்காங்க, இனி வரும் காலங்களில் நிம்மதியாக இருக்கலாம். மேலும் கஷ்டபடுறவங்களுக்கு அந்த வேலை கிடைக்கலாம், சரி தானே?’’ 

”உன் பேர் என்னம்மா?”  

”தேவி…” 

”நான் கும்பிடும் தேவி கருமாரியம்மன் தான் உன் ரூபத்தில் வந்து எனக்குப் புரிய வச்சிருக்கு. நான் பிறந்தது ரொம்பப் பணக்காரக் குடும்பம் கிடையாது, லோயர் மிடில் கிளாஸ் தான். என் கூடப் பிறந்தது மூன்று பேர். அம்மா வேலைக்குப் போகல, அப்பாவின் ஒரு சம்பளத்தில் கஷ்டபட்டுப் படிக்க வச்சாங்க.

படிப்பு சம்மந்தமா என்ன கேட்டாலும் கஷ்டப்பட்டு செய்வாங்க, ஆனா மத்த எல்லா விஷயத்திலும் ரொம்பக் கணக்கு பாத்துப் பாத்து தான் செலவு செய்வாங்க. இது செஞ்சா செலவு கொறையுமா அத செஞ்சா செலவு கொறைக்கலாமானு யோசிச்சு பார்த்து எங்கள நல்லபடியா வளர்த்தாங்க. அது என் ரத்தத்தில் ஊறிருச்சு.

அதனால தான், அரசாங்கம் பஸ்ல  ‘பெண்களுக்கு இலவசம்’ என்று சொன்னவுடன், இது கஷ்டப்படுறவங்களுக்குனு நினைக்கவேயில்லை. பஸ் காசு மிச்சம் என்று மட்டும் தான் தோணுச்சு

நீ சொன்னவுடன் தான் யோசிச்சு பார்த்தேன். அரசாங்கம் ஏழைகளுக்குச் செய்ற உதவி எங்கள் மாதிரி வசதி உள்ளவங்க போட்டி போடாம இருந்தா முழுசா போய்ச் சேரும். அதைப் புரிய வச்சதுக்கு  உனக்கு நான் நன்றி சொல்லணும்” என்றார். 

”மேடம், பெரிய வார்த்தை எல்லாம் சொல்லாதீங்க… எனக்குச் சங்கடமா இருக்கு”

“நீ சங்கடப்பட வேண்டாம்மா. எப்ப நான் பணத்துக்காகக் கஷ்டபட தேவையில்லைனு யோசிக்க ஆரம்பிச்சேனோ, அப்பயிருந்து மனசு லேசா ஆயிடுச்சு. ஏதோ பெரிய பாரம் குறைஞ்ச மாதிரி நிம்மதியாக இருக்கேன். எத்தனையோ தடவை என் பசங்களும் என் வீட்டுக்காரரும் சொல்லிருக்காங்க. அப்பெல்லாம் நான் செய்வது தான் சரினு பிடிவாதமாக இருந்தேன்.

நீ சொன்ன பிறகு தான் புரிஞ்சிருக்கு. என்ன தான் நல்லா படிச்சு அறிவா இருந்தாலும், சில விஷயங்கள் புரியாம போய்டுது, திடீர் ஞானம் வந்தமாதிரி இருக்கு. பணம்ங்கிற எண்ணத்தை விட்டு வெளியே வந்த பிறகு புது மனுஷியா தெரிறேன். மனசு விசாலம் ஆகிருச்சு. 

முன்னாடியெல்லாம் எங்க வீட்ல வேலை செய்யும் பெண் சம்பளம் அதிகம் கேட்டா கோபம் வரும், திட்டிக்கிட்டே கொடுப்பேன். இப்ப கேட்டதை விட அதிகமா தரேன். அவ சந்தோஷம் எனக்கு மனநிறைவு தருது. 

காய்கறிகள், பழங்கள், கீரைனு எது வாங்கினாலும் பேரம் பேசாமல் வாங்குறேன். அந்தக் காச வச்சுகிட்டு அவங்க கோட்டை கட்டப் போறது இல்லை, நானும் கஷ்டப்பட போறது இல்லை” என்று அந்த பெண்மணி பேசப் பேச பெண்கள் மூவரும், ஆச்சரியமாகப் பார்த்துக் கொண்டிருந்தனர்.      

”இனிமே பத்மா ஆண்ட்டினு கூப்பிடுங்க, உங்க பேர் என்னமா?” 

இருவரும் பெயர்களைச் சொன்னார்கள். 

”அடுத்த மாசம் என் பையனுக்குக் கல்யாணம் வச்சுருக்கேன். நீங்க மூணு பேரும் கட்டாயம் வரணும்” என்று பத்திரிகையில் பெயர் எழுத ஆரம்பித்தார் பத்மா. 

”ஆண்ட்டி, ஒரே பத்திரிகை போதும். அதுலேயே மூணு பேரையும் எழுதிக் குடுங்க.”

”சரி, உங்க விருப்பம்… மூணு பேரும் வரணும். நான் எதிர்பார்த்துட்டே இருப்பேன். தாம்பரத்தில் தான் கல்யாணம்” என்றார் பத்மா. 

”நாங்க கண்டிப்பாக வர்றோம் ஆண்ட்டி” என்று பத்திரிகையை வாங்கிக் கொண்டார்கள் 

 ”கிஃப்ட், மொய் தவிர்க்கவும்னு பத்திரிகையிலே போட்டிருக்கேன். நீங்க மட்டும் வந்தால் போதும்” 

”கல்யாணம் முடிஞ்ச பிறகு, கவர்மெண்ட் வேலைக்கு கோச்சிங் கிளாஸ் எடுக்கப் போறேன், கஷ்டபடுகிறவர்களுக்கு மட்டும் ஃப்ரீ கிளாஸ். நீங்க வந்து சேர்ந்தாலும் ஒகே, அட்ரஸ் பத்திரிகைல இருக்கு” என்று போன் நம்பரை வாங்கிச் சென்றார் பத்மா. 

பத்மா கிளம்பியதும்,  ”என்னடி இப்படி ஆயிருச்சு கதை? இவங்கள நம்பலாமா?” என கனகா கேட்க

”நம்பலாம், உண்மையா பேசின மாதிரி தான் தெரியுது” என்றாள் தேவி. 

”ஏய், லேட்டாய்டுச்சு, இப்பவே ரெண்டு பஸ்ஸ விட்டாச்சு. இன்னிக்கு அந்த சூப்பர்வைசர்கிட்ட பாட்டு வாங்கப் போறோம்” என வனஜா கூற, மூவரும் வேகமாக ஓடி இலவசப் பேருந்தில் ஏறினர்

‘சஹானா’ இணைய இதழின் ‘சிறுகதை விமர்சனப் போட்டி’ யில் கலந்து கொண்டு பரிசு வெல்லும் வாய்ப்பு. போட்டி விவரங்கள் அறிய, இங்கு கிளிக் செய்யுங்கள்

(முற்றும்)

#ads தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇

      

        

‘சஹானா’ சிறுகதைப் போட்டியில் பங்குபெறும் மற்ற கதைகளை வாசிக்க இணைப்பு இதோ – https://sahanamag.com/short-story-contest-2021-entries/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

4 Comments

பானிபூரி ❤ (சிறுகதை) – ✍ சல்மா அம்ஜத் கான், மதுரை

எத்தனைக் கோடி இன்பம்!!! (சிறுகதை) – ✍ சக்தி ஸ்ரீநிவாஸன், சென்னை