sahanamag.com
சிறுகதைகள்

பளார் (சிறுகதை) – ✍ பத்மநாதன் பரசுராமன், மலேசியா

ஜனவரி 2022 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு

‘பீம் பீம்’ தபால்காரன் வாசல் வந்து நின்றான்

நானும் எதார்த்தமாக வெளியில் செல்ல சரியாக இருந்தது

“செலாமாட் பாகி இஞ்சே” என்று நான் மொழிய

அவரும் “பாகி அடா சுராட்” என்று கூறி கடிதத்தை நீட்டினார்

அவர் சென்றதும், ஆமைத்தலையைப் போல தலையை நீட்டி சற்றுத் தெருவை வலதுபுறமாக எட்டிப் பார்த்தேன். தெருவே துடைத்து வைத்த பாத்திரமாய் காட்சி அளித்தது

இன்னும் இடதுபுறம் எனது உடல்மொழியை திருப்புவதற்குள், “அப்பா… அப்பா…” என மகள் கூப்பிடத் திரும்பினேன்

அவள் என் கால் இடுக்கில் நுழைய தன்னைத் தயார்படுத்துவதற்காகவே என்னை அழைத்தாள். அதற்குள் அவளை வாரி அணைத்து, எனது மூக்கோடு மூக்காய் முட்டினேன்

பின் அவளை உள்ளேத் தூக்கி வந்தேன். அவளை கீழே இறக்கி விட்டு, சற்று நேரம் சொகுசு நாற்காலியில் கண்ணயர்ந்தேன். 

அதற்கேற்றார் போல் வானொலியில் ‘தூக்கமும் கண்களைத் தழுவட்டுமே’ என்ற பழையப் பாடல் ஒலிக்கத் தொடங்கியது. ஆனால் அதன் இரண்டாவது வரி என்னை வாட்டியது. 

‘அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே’ அந்த வரியில் இருந்த அமைதி என் நெஞ்சில் இல்லாமல் போனது. பலவாறு புரண்டு படுத்தும் கண்ணிமை மூட மறுத்தது. 

ஊரெங்கும் உலகமெங்கும் கோறனி நச்சில் தாண்டவம் ஆடிக் கொண்டிருக்கையில், குடும்பத்தையும் வாழ்வாதாரத்தையும் இழந்தோர் பல மில்லியன்.வெளியில் போகலாம் என எண்ணி நகர்ந்தால், வெளியில் நடமாடுபவர்களைக் கண்டால் மனத்தில் ஒரே நடுக்கம்.

”இவருக்கு கோறனி நச்சில் இருக்குமா?” என பலவாறு சிந்திக்க வைக்கும் கேள்விக்கணைகள். தினமும் அஞ்சி அஞ்சி செத்துக் கொண்டிருக்கும் வாழ்க்கை

தினம் தினம் புது புது உயிர் இழப்புகளைப் பார்த்து இறுகி கல்லாகி போயிருந்தது என் மனம். இன்று இருக்கும் நான் நாளை இல்லாமலும் போகலாம், அந்த அளவுக்கு இந்த நோய் நம்மை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. 

காற்றின் ஊடே பரவும் நோய் என்பதால் சுகாதார பிரிவு மக்களுக்குப் பல எச்சரிக்கையைத் தினமும் புதுபித்துக் கொண்டு தான் இருக்கிறது. இருப்பினும் உயிர் வாழ வேண்டுமே என்ற நோக்கில் வெளியே சென்று தான் ஆக வேண்டும் என நிர்பந்தம் அவ்வப்போது வரும். 

அப்போதெல்லாம் முகக்கவரி, கைத்தூய்மி எனப் பாதுகாப்பு பெட்டகத்தோடு தான் வெளியே செல்ல முடியும். மீறினால் ரி.ம. 1500 அபராதம் எனும் பெயரில் ஒரு கொள்ளை

இந்தக் காலனோ எப்பொழுது யார் கிடைப்பார்கள் என காத்துக் கொண்டிருக்கிறான். நோய் பீடித்து மருத்துவமனை சென்றால், அங்கே யாரையும் சந்திக்க முடியாத படி  தனிமைப்படுத்தி விடும். 

ஆனால் மருத்துவமனைக்குச் சென்றவர்களில் பலர் தனிமையாயாலேயே சிவபதம் அடைந்திருக்கிறார்கள். ஊர் இருந்தும் உற்றார் உறவினர் இருந்தும்,கடைசியில் இந்த நோய் அனைவரையும் அனாதையாகவே அழைத்துக் செல்கிறது.

‘எதைக் கொண்டு வந்தோம், கடைசியில் கொண்டுச் செல்ல’ என்பதை உணர்த்திவிட்டுச் செல்கிறது. இப்படியாக நானும் வெளியே பலத்த பாதுகாப்போடு தான் செல்கிறேன். 

வாகனத்தைக் கடையின் முன் நிறுத்தி, மூன்று நெகிழிப்பை நிறைய மாத்திரைகள் வாங்கினேன். பறவைகள் பலவிதம், ஒவ்வொன்றும் ஒருவிதம் போல நான் வாங்கிய மாத்திரைகளும். மேலும் வீட்டுக்குத் தேவையான மளிகைச் சாமான்களும். 

அதோ போகிறான் என் நண்பன் நக்கீரன். பார்த்தும் பேச முடியவில்லையே. வெறும் கை அசைவுகள் மட்டுமே நாங்கள் பறிமாறிக் கொள்ள முடிகிறது. 

என்ன கொடுமையடா என எண்ணம் தோன்றுகிறது. தினமும் என் நட்பை நான் விலைக்கொடுத்து கைப்பேசி மூலமாகவே நீர் ஊற்றி வளர்க்க வேண்டிய நிலை. தொட்டால் ஒட்டுமாம், பேசினால் பரவுமாம் இந்த நோய். 

இப்படி யோசித்துக் கொண்டே, எனக்குத் தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டு நானும் வீடு வந்து சேர்ந்து விட்டேன். வீட்டிற்குள் நுழையும் முன், முதல் வேலையாக எனது பாதுகாப்பை உறுதிச் செய்ய கைகால்களைத் தண்ணீரில் கழுவினேன்

பின் முகக்கவரியை மட்டும் அணிந்து கொண்டு சோபாவில் அமர்ந்தேன். என் பிள் ளைகள் இருவரும் மிக சோர்ந்த நிலையில் என்னருகில் வந்து அமர்ந்தனர். 

தண்ணீர் புட்டியைத் தோளில் மாட்டிக் கொள்வது போல், ஆக்சிஜன் கலன்களை மாட்டிக் கொண்டிருந்தனர். சிறு பிள்ளைகளுக்கு மட்டும் அரசாங்கம் வழங்கிய சலுகைகளில் ஒன்று தான் ஆக்சிஜென் கலன்

முகக்கவரி, கைத்தூய்மி, கோறனி நச்சில் என இவை மட்டுமே அதிகம் எங்களுக்கிடையே பரிமாறிக் கொள்கின்ற வார்த்தைகளாய் இருந்தன. சூரியனைப் பார்க்கின்ற வாய்ப்பு இதுவரை என் பிள்ளைக்குக் கிடைத்ததில்லை. 

துளையிடாத கலனுக்குள் அடைக்கப்பட்ட கிளி போல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இந்த கோறனி நச்சுக் காற்றின் விளைவால் குழந்தைகள் பிறப்பு விகிதம் பன்மடங்கு குறைந்திருப்பதாய் புள்ளி விபரம்

அப்படியே குழந்தைகள் பிறந்தாலும் அங்கக் குறைபாடுகளோடு தான் பிறக்கின்றன. ஒரு சில சிசுக்கள் பிறந்து இரண்டாவது நாளில் மடிந்து போகின்றன என அதிர்ச்சித் தகவலும் கூட. 

என் பிள்ளைகளையும் பார்க்கின்றேன் உடல் வளர்ச்சியில் சற்று மாறுபட்டிருந்தன. உடல் வளர்ச்சிக்கு ஏற்ப மூளை வளர்ச்சி இல்லை. சத்தான உணவின்றி உடல் ஆரோக்கியம் குன்றி இருந்தனர். 

இவர்களின் ஆயுள் மிகவும் அற்பம் தான் என்று என்னால் அளவிட முடிகின்றது. இதுவும் கடந்து போகும் என்ற எதார்த்த நிலைக்கு என்னை நானே தயார்படுத்திக் கொள்கிறேன். 

அணு ஆயுதப் போரில் நிகழ்ந்த உயிர் சேதத்தைக் காட்டிலும் இந்த நச்சுக் கிருமிகள்  காற்றால் பலியானவர்கள் எண்ணிக்கை அதிகம். மனது வைத்திருந்தால் தொடக்கத்திலேயே இந்நோயின் ஆணிவேரைக் கண்டறிந்து வேரோடு அழித்திருக்கலாம். 

மனிதர்களின் அலட்சியப் போக்கினால் உடல் உயிரோடு கலந்து விட்டது போல், காற்றோடு கலந்து நாம் உயிரைக் கொஞ்சம் கொஞ்சமாய் குடித்துக் கொண்டிருக்கிறது. 

மருத்துவமனையின் அவசர ஒலி மேலும் பயத்தைக் கொடுத்தது. கீழிருந்து மேலே எட்டிப் பார்த்தேன். யாருக்கோ என் குடியிருப்பு பகுதியில் இந்த நோய் தொற்றியுள்ளது போலும்

அவர்களைக் கொண்டு செல்வதற்குத் தான் இந்த வண்டியோ என இப்படி யோசித்துக் கொண்டிருக்கும் போது என் பார்வையைக் கடந்து மேல் மாடியில் இருந்து ஒரு உருவம் பறந்து பொத்தென்று கீழே விழுகிறது. 

அது..அது..அது.. என் நண்பன் நக்கீரனின் அப்பா. உறவுகளை விட்டுப் பிரிந்து மருத்துவமனையில் இந்த நோயுடன் போராடி தவிப்பதை விட, தற்கொலை செய்து உயிரை மாய்த்துக் கொண்டாரோ என்னமோ? 

பாவம்… எதார்த்தம் என்னுள் வளர்ந்து விட்டதால் அங்கிருந்து அவனுக்கு மௌன அஞ்சலி செலுத்தி விட்டு மீண்டும் எழுதத் தொடங்குகிறேன். இன்னும் எத்தனை நாட்களுக்கு என் பயணம் தொடரும் என்று எனக்கே தெரியாத நிலை. 

என் பிள்ளைகளின் எதிர்காலம் என்னவாகும் என்ற பெரிய கேள்விக்குறி என் மனத்தில் தினமும் நிழலாடிக் கொண்டிருக்கிறது. சாவினூடே இந்த வாழ்க்கைப் பயணமா என்ற போராட்டத்தில் இடையே பயணித்துக் கொண்டிருக்கிறது எங்களது அன்றாட வாழ்க்கை

சில நேரங்களில் இந்தக் கொடிய நோய்க்குப் பயந்து தினம் தினம் இறப்பதை விட ஒரேடியாக தற்கொலை செய்துக் கொள்ளலாமா என்றுக் கூட சில சமயங்களில் மனதுக்குள்ளே ஓர் அனத்தல் இருந்துக் கொண்டே இருக்கும்

பிள்ளைகளின் முகங்களைப் பார்க்கையில் அவையெல்லாம் பொய்துப் போய் விடுகிறது. என் மனவோட்டத்திலிருந்துச் சற்று நிதானித்து என் வீட்டை நோட்டமிடுகிறேன். 

அதற்குள் என் வீட்டின் முன் யாரோ வருவதைப் போல் காலடிச் சத்தம் கேட்கிறது. அது காலணி சத்தமா அல்லது காலனின் சத்தமா? சத்தம் என் வீட்டின் கதவை நெருங்க நெருங்க என் படபடப்பு அதிகரிக்கிறது

என்னை ஒட்டிக் கொண்டிருந்த கொஞ்சநஞ்ச தைரியமும் என்னையறியாமலே தளர்ந்துக் கொண்டிருக்கின்றது. நிழல் கதவின் அருகே வந்ததும், கதவைத் தட்ட ஆரம்பிக்கிறது. 

எச்சிலை மெல்ல விழுங்கி விட்டு நடுக்கத்தோடு கதவைத் திறக்கிறேன். காலன் நின்றுக் கொண்டிருக்கிறான். என்னை பிடித்திழுக்க முயலுகிறான். திரும்பி என் பிள்ளைகளைப் பார்த்தேன்.

அவனைத் தள்ளி விட்டு என் பிள்ளைகளை வாரியணைத்துக் கொண்டு மேல்மாடி நோக்கி ஓடுகிறேன். காலனும் என்னை விடாது கறுப்பு போல துரத்துகிறான்.

என் பிள்ளைகளை அறையில் தள்ளி தாழிட்டு, அவனோடு சண்டைக்குத் தயாராகினேன். காலனொ ஓங்கி ஓர் உதை விட்டேன். பளார்! என ஓர் அறை. கண் விழித்துப் பார்க்கிறேன்.

என் மகள் என்னைப் பார்த்து சிரிக்கிறாள்…

‘சஹானா’ சிறுகதைப் போட்டி 2021ல் வெற்றி பெற்ற 20  சிறுகதைகள்,  நம் ‘ஸ்ரீ ரேணுகா பதிப்பகத்தின்’ வெளியீடாக, ISBN எண்ணுடன், அங்கீகரிக்கப்பட்ட ஒரு உலக சாதனை நிகழ்வில் அச்சு புத்தகமாக வெளிவர இருக்கிறது. 

இந்த நிகழ்வில் புத்தகம் வெளியிடும் எழுத்தாளர்களுக்கு, உலக சாதனை சான்றிதழ் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

உலக சாதனை நிகழ்வில் நீங்களும் புத்தகம் வெளியிட விரும்பினால், இதில் கொடுத்துள்ள வழிமுறையை பின்பற்றுங்கள். நன்றி 👇

‘சஹானா’ சிறுகதைப் போட்டி 2021 முடிவுகள் அறிய இங்கு கிளிக் செய்யவும்

#ads தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇

      

        

‘சஹானா’ இதழை Amazonல் வாசிக்க இணைப்பு இதோ 👇

              

          

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!