அந்தக் கிராமமே விழாக்கோலம் பூண்டிருந்தது. வயது வேறுபாடின்றி, இன மத வேறுபாடு இல்லாமல், எல்லோரும் தன் வீட்டில் நடக்கும் சொந்த விழாவைப் போல, ஓடியாடி வேலை செய்து கொண்டிருந்தனர்
அப்படி யார் வரப் போகிறார்கள் இந்தக் கிராமத்திற்கு?
இந்த தாமரைக்குளம் கிராமத்தில் பிறந்து வளர்ந்து, வசதியற்ற நிலையிலும், போக்குவரத்து வசதிகள் அதிகமில்லாத காலத்தில் படித்து, இன்று தேசிய அளவில், ஏன் உலக அளவில் சாதனையாற்றி, பல உயிர்களை இறப்பிலிருந்து மீட்டெடுத்த சாதனைப் பெண்ணின் வரவிற்காகவும், அந்த மங்கையின் செயலைப் பாராட்டவுமே இந்த விழாக் கோலம்.
இத்தனை சிறப்புக்கும் காரணமான அந்த நாயகி ஜென்சிகா, இதோ வந்து கொண்டிருக்கிறாள். இரவின் நெடிய இருட்டு சன்னலுக்கு வெளியே அடர்ந்து இருந்தது
இருப்பினும், இரயில் அதைக் கடந்த சில நிமிடங்களில், ஆங்காங்கே தூரத்தில் வெளிச்சப் புள்ளிகளாய் தோன்றி, அடுத்தடுத்த சில நிமிடங்களில் வெளிச்சமாகத் தோன்றியது
வாழ்க்கையும் இப்படித் தானே என நினைத்தாள். துரித இரயில் முன்னோக்கி ஓட, அவளின் நினைவுகள் பின்னோக்கி நகரத் தொடங்கியது
ஜென்சிகா குடும்பத்தில் மூத்தவள். தங்கை, அடுத்து தம்பி. அப்பா தென்னந்தோப்புகளைப் பராமரித்து வந்தார். டவுனில் உள்ள கம்பெனியில் கணக்கராகவும் பணி புரிந்து வந்தார்.
இவள் பத்தாம் வகுப்பு படிக்கும் போதே, அம்மா காச நோயினால் இறக்க நேரிட, அப்போதிருந்தே ஜென்சிகாவிற்கு மருத்துவத் துறை சார்ந்த படிப்பு படிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது.
தன் அம்மாவைப் போல் கஷ்டப்படும் பலருக்குத் உதவ வேண்டும் என உறுதி பூண்டாள்
செவிலியர் ஆகி, நிறைய பேருக்குச் சேவை செய்ய வேண்டும் என்றும், ஊரில் ஒரு மருத்துவமனை ஏற்படுத்த வேண்டுமென்றும் நினைத்திருந்தாள்
அதே தெருவில் வசிக்கும் ஆனந்த் என்பவன், பலநாள் பின்னால் சுற்றி, ஒருநாள் தன் காதலை ஜென்சிகாவிடம் கூறினான்
ஊரில் பெரிய முதலாளியின் மகன் அவன். அவனுக்கும் இவளுக்கும் மத வேறுபாடு வேறு.
முதலில் மறுத்தாலும், இளமை, வயது முதலிய காரணங்களால் அவள் மனதிலும் ஆனந்த் பற்றி நல்ல எண்ணங்கள் தோன்றித் தொடங்கியது
அவனின் பேச்சும், உதவி செய்யும் மனப்பான்மையும், அவளுக்கு அவன் மேல் ஒருவித ஈர்ப்பை ஏற்படுத்தியது.
ஜென்சிகாவின் அப்பா சாமிநாதனும், ஆனந்தின் அப்பா சண்முகநாதனும் தொழில் சார்ந்து மட்டுமல்லாது, நண்பர்கள் போல் பழகினர்
சண்முகநாதன் இந்த ஊருக்கு வந்த ஆரம்ப காலங்களில், சாமிநாதன் தான் சிறு சிறு உதவிகள் செய்தார்.
தன் சொந்தத் திறமையாலும், மனைவி வீட்டில் உள்ள வசதியாலும், இன்று பல பேருக்கு வேலை கொடுக்கும் முதலாளியாக மாறியிருந்தார் சண்முகநாதன்
ஜென்சிகா நல்ல எடுப்பான தோற்றமும், மாநிறமும் கொண்டவள். அவள் கண்கள் எப்போதும் கனிவாக, துறுதுறு என்று இருக்கும்.
அவளின் இரக்க குணமும், அன்பான பேச்சும், அவள் மீதான மரியாதையை ஏற்படுத்தும். அது தான் ஆனந்த் அவளை விரும்பக் காரணம்.
செவிலியர் பயிற்சிக்கு விண்ணப்பித்து, பயிற்சிக்காக வெளியூர் சென்றாள் ஜென்சிகா
அங்கே சென்ற பின்னர் தான், ஆனந்தை தான் எவ்வளவு தூரம் நேசிக்கிறோம் என்பதை உணர்ந்தாள். அவனைப் பிரிந்து இருப்பது அவளுக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது.
மொபைல் வந்த புதிது என்பதாலும், விடுதி விதிகளின் படியும் அவளால் அவனோடு பேச முடியவில்லை. வெளியே வரும் போது தொலைபேசியின் வழியாக, எப்போதாவது தொடர்பு கொள்வாள்
ஒருவழியாய் படிப்பை முடித்துவிட்டு, ஊருக்கு வந்தாள்.
சில மாதங்களில், மருத்துவமனை பணிக்கான அழைப்பு வர, மீண்டும் வெளியூர் பயணமானாள்.
அங்கிருந்து, பெங்களூர் செல்ல வாய்ப்பு கிடைக்க, அங்கு செல்லும் முன் ஊருக்கு வந்தாள்
அப்போது அவளின் தந்தை திருமணப் பேச்சை எடுக்க, தனக்கு இப்போது திருமணம் வேண்டாம் என்றும், இன்னும் நிறைய சாதிக்க வேண்டும் என்றும் கூறினாள்
அப்போது அங்கு வந்த சண்முகநாதன், ஜென்சிகா பெங்களூர் செல்லவிருப்பதை அறிந்ததும்,”பெண் பிள்ளைகள் வெளிமாநிலம் சென்று வேலை பார்ப்பது அவ்வளவு நல்லது இல்லை. அதுவும் நர்ஸ் பணி, எல்லோருடனும் பழக வேண்டும். டாக்டர்களுடன் நெருங்கிப் பழக வேண்டிய சூழ்நிலை வரும்” என்றார்
சண்முகநாதனை பொறுத்தவரை, நர்ஸ் பணி இழிவானது
ஜென்சிகா பிடிவாதமாக பெங்களூர் புறப்பட ஆயத்தமானாள். செல்லும் முன், ஆனந்தைச் சந்தித்து, தான் பெங்களூர் போகும் விபரத்தைக் கூறினாள்
“அப்பாவிற்கு இந்த நர்ஸிங் வேலையே பிடிக்கவில்லை. நீ கட்டாயம் போகத் தான் வேண்டுமா? எனக்காக இதை விட முடியாதா? நாளை திருமணம் என்றால் அப்பா எப்படி சம்மதிப்பார்?” எனக் கேட்டான்.
“ஆனந்த், இது என் இலட்சியம். என் அம்மாவின் ஆசையும் கூட” என்றாள் அவள்
ஆனந்த் அவளையே பார்த்துக் கொண்டு பேசாமல் நின்றான். இதற்கு மேல் அவளிடம் பேசிப் பயனில்லை என்று அவனுக்குத் தெரியும்
தன் இலட்சியப் பயணத்தைத் தொடர்ந்தாள் ஜென்சிகா
ஆனந்திடம், “நீ எனக்காக காத்திராதே, உன் அப்பா பேச்சைக் கேள்” என்று சொல்லி விட்டு சென்றாள்.
வேலையில் சேர்ந்த இரண்டு வருடங்களில், திறமையின் காரணமாக வெளிநாடு செல்லும் வாய்ப்பு ஜென்சிகாவுக்கு கிடைத்தது.
அப்பாவின் ஆசியுடன் வெளிநாடு சென்றாள். தம்பி, தங்கையை நல்ல படிப்பு படிக்க வைத்தாள். ஓரளவு வசதியுடன் வாழ்ந்தனர்.
ஒவ்வொரு தடவையும் போனில் பேசும் போதும் திருமணம் பற்றிப் பேசுவார் அப்பா
“தங்கையின் படிப்பு முடியட்டும்” என்பாள்
இரண்டு வருடங்கள் ஊருக்கு செல்லவும் இல்லை, ஆனந்த் பற்றி விசாரிக்கவும் இல்லை.
ஆனால், ஆனந்த் அவளையே நினைத்துக் கொண்டிருந்தான். ஒரு தடவை சாமிநாதனிடம் எப்படியோ கைபேசி எண் வாங்கிப் பேசினான்
ஜென்சிகாவோ,”இனி மேல் பேச வேண்டாம். என் இலட்சியம் வேறு. அதில் காதல் வராது” என்று சொல்லி விட்டு தன் சேவையைத் தொடர்ந்தாள்
தங்கைக்கு வரன் தேடும்படி அப்பாவிடம் கூறினாள்
சில வருடங்கள் கடந்த நிலையில், ஒரு மாநாட்டிற்காக மும்பை வந்தாள்
இவள் வந்த மூன்று நாட்களில் கொரோனா என்னும் கொடிய கிருமி பரவ ஆரம்பித்தது. அடுத்த சில நாட்களில் ஊரடங்கு பிரகனப்படுத்தப்பட்டது
இதன் காரணமாய், ஜென்சிகா வெளிநாட்டிற்கு திரும்பி செல்ல இயலாத நிலை ஏற்பட்டது
மாநாட்டை ஏற்பாடு செய்திருந்த மருத்துவமனையில் செவிலியர் பற்றாக்குறை என அறிந்ததும். அங்கு விரைந்து சென்றாள் ஜென்சிகா
அன்று காலை, மருத்துவமனைக்கு தமிழர்கள் இருவர் வந்திருப்பதாகவும், ஹிந்தி தெரியாத அவர்களுக்கு தமிழ் தெரிந்த செவிலியர் இருந்தால் நல்லதென டாக்டர் கூற, போய் பார்த்தாள்
அங்கு ஆனந்தின் தந்தை சண்முகநாதனும், அவருடைய நண்பர் வேலுவும் கொரோனாத் தொற்றின் காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்தனர்
வியாபார நிமித்தமாக மும்பை வந்தவர்களுக்குத் தொற்று ஏற்பட்டுவிட்டது. மாஸ்க் அணிந்து சீருடையில் இருந்ததால், அவர்களுக்கு ஜென்சிகாவை அடையாளம் தெரியவில்லை
அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு, உடல்தேறி ஊருக்குப் புறப்படும் போது, தனக்கு சிகிச்சை அளித்த அந்த செவிலியரைப் பார்க்க வேண்டும் என்று சொல்லவும், அங்கிருந்த நர்ஸ்,”வெளிநாட்டில் இருந்து வந்திருக்கிறார்” என்று தனக்குத் தெரிந்த தமிழில் கூறினார்
“பெயர் என்னம்மா?” என சண்முகநாதன் கேட்க
“ஜென்சிகா” என்றவுடன்
“என்ன? ஜென்சிகாவா?”என அதிர்ச்சியில் நெஞ்சைப் பிடித்தார்.
இதைத் தொலைவில் நின்று கவனித்துக் கொண்டிருந்த ஜென்சிகா, ஓடி வந்து “என்ன செய்கிறது அங்கிள்?” என பதறினாள்
“அம்மா தாயே, என் தெய்வமே! என்னை மன்னித்து விடு! உன்னையும், இந்தத் தொழிலையும்… தப்பும்மா.. இது தொழில் அல்ல, சேவை….சேவைம்மா. இதை தப்பாக நினைத்து, தப்பாகப் பேசி விட்டேன்” என்று கைகளைப் பிடித்துக் கொண்டு அழுதார் அவர்
அருகில் நின்ற வேலுவோ, “அம்மா! நான் தானம்மா இதற்குக் காரணம். நான் தான் அவனிடம் அப்படிக் கூறினேன். டாக்டருக்கு அடுத்து செவிலியர் தானே உயிரைக் காப்பாற்றும் தெய்வம், என்னையும் மன்னித்து விடு” என்றார்
பின்னர், லாக்டவுன் நேரமாதலால், வாகன ஏற்பாடுகள் செய்து அனுப்பி வைத்தாள்
ஊரில் மருத்துவ வசதி இல்லாததால், மருத்துவமனை ஒன்று கட்ட நினைத்து, சண்முகநாதன் ஏற்பாடுகள் செய்தார். ஜென்சிகாவும் தன்னால் இயன்ற பண உதவியை செய்தாள்
மருத்துவமனையை திறப்புக்கு சிறப்பு விருந்தினராய் ஜென்சிகாவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதோடு, அவ்விழாவில் அவளை கௌரவிக்கவும் ஏற்பாடு செய்திருந்தார் சண்முகநாதன்
அதற்காகத்தான் இப்போது அவள் ஊருக்கு சென்று கொண்டிருக்கிறாள்
மறுநாள் காலை மருத்துவமனை திறக்கப்பட்டது. சண்முகநாதன் அனைவர் முன்னிலையிலும் ஜென்சிகாவைப் பாராட்டிவிட்டு, தன் மருமகளாக அவளை ஏற்றுக் கொள்வதாக கூறினார்
ஜென்சிகா அமைதியாக எழுந்தாள். அவள் முகத்தில் சலனமும் இல்லை.
“மிகவும் நன்றி. இந்த ஊர் இன்னும் பெருமை அடைய வேண்டும். உங்கள் பிள்ளைகளை நன்றாகப் படிக்க வையுங்கள். பெண் பிள்ளைகள் படிக்க நானும் உதவுகிறேன்” என்று கூறி விட்டு
சண்முகநாதனிடம், “உங்களுக்கு விருப்பமிருந்தால் என் தங்கையை உங்கள் மருமகளாக்கிக் கொள்ளுங்கள். அதுவே எனக்கு நீங்கள் செய்யும் உதவி. நான் என் தங்கையிடமும், ஆனந்திடமும் இது பற்றிப் பேசி விட்டேன். நான் என் இலட்சியத்தை நோக்கிப் போகிறேன்” என்று முடித்தாள்
தன்னை சுற்றி உள்ளவர்களின் அறியாமை எனும் இருளை விரட்டி, ஒளியாக நின்றாள் ஜென்சிகா
எழுத்தாளர் சஹானா கோவிந்தின் நாவல்கள் மற்றும் சிறுகதைத் தொகுப்புகளை வாசிக்க விரும்புவோருக்கு, இணைப்புகள் 👇
“சஹானா” மாத இதழ்களை வாசிக்க விரும்புவோருக்கு, இணைப்புகள் 👇
(முற்றும்)
நல்லா இருக்கு