பிப்ரவரி 2023 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு
பகுதி 1 பகுதி 2 பகுதி 3 பகுதி 4 பகுதி 5 பகுதி 6 பகுதி 7 பகுதி 8
அடுத்த நாள் காலை அலாரம் வைத்து ஐந்து மணிக்கே எழுந்து ஷாம்பு பாத்தும் எடுத்து விட்டாள். சுருண்டு அடர்ந்த நீண்ட கூந்தல் ஆதலால், டிரையர் போட்டால் தான் முடி காயும். இல்லையென்றால் உள்ளுக்குள் ஈரமாகவே இருக்கும். நீண்ட வளைவில்லாத முடியானால் சொல்படி கேட்கும், இந்த சுருண்ட கூந்தலோ மனித மனம் போன்றது, எதையும் கேட்காது. ஆதலால் இரண்டு பக்கமும் கொஞ்சம் முடியெடுத்து பை பின்னல் போட்டு, பிறகு எல்லா முடியையும் சேர்த்து ஒற்றைப் பின்னலாய் போட்டு விட்டாள்.
அப்படியும் நெற்றியின் மீதும், இரு காதோரங்களிலும், கழுத்திலும் ஸ்பிரிங் போல் சுற்றிக் கொண்டு நின்ற முடியை அவளால் ஒன்றும் செய்ய முடியவில்லை. ஆனால் அது அவள் அழகிற்கு அழகைத்தான் சேர்த்தது. லேசான பௌடர் பூச்சோடு, ஒரு சின்ன சிகப்பு கலர் ஸ்டிக்கர் பொட்டோடு தன் ஒப்பனையை முடித்துக் கொண்டாள்.
தன்னிடம் உள்ள பட்டுப் புடவைகளில் மிகக் குறைந்த சரிகையுடன் உள்ள தாமரைப் பூ நிற பட்டுப்புடவை இவளுக்கு மிகவும் பிடிக்கும். அதற்குப் பொருத்தமான பச்சை நிறச் சோளியும் அணிந்து கொண்டாள்.
அவளிடம் தங்க நகை என்று எதுவும் பெரியதாக இல்லை. மெல்லியதாக ஒரு தங்கச் சங்கிலி ஒண்ணரை பவுனில் ஒரு சிறிய லாக்கெட்டுடன் அணிங்து கொண்டாள். அது கூட மும்தாஜும், வயலட்டும் தொந்தரவு செய்து போனஸ் பணத்தில் அவளை வாங்கவைத்தது தான். பூஜையென்றதால் போலி நகைகள் வேண்டாம் என்றதால் புடவைக்கு ஏற்றாற்போல் கண்ணாடி வளையல்களை ஒரு கையில் அணிந்து கொண்டாள்.
ஒரு கையில் சிறிய கருப்பு டயலுடன் கூடிய வாச். இத்தோடு தன் ஒப்பனை போதும் என்று நிறுத்திக் கொண்டாள். கண்ணாடியில் தன்னைப் பார்த்ததும் சிரிப்புத்தான் வந்தது அவளுக்கு.
‘முகவரியே இல்லாத எனக்கு, அழகை மட்டும் அள்ளிக் கொடுத்த இறைவா, நீ நல்லவனா, அல்லது அதே அழகால் என்னை மேலும் நிர்கதியாக்குவாயா?’ என்று தனக்குத் தானே கேட்டுக் கொண்டாள்.
தன்னைத் தானே ஆயிரம் கேள்விகள் கேட்டுக் கொண்டு கண்ணாடி முன் நிற்கும் போது அவள் செல்போன் ஒலித்தது .
சபரீஷ்வர் தான் அழைத்தது. ‘மணி ஆறரை தானே ஆகிறது, அதற்குள் ஏன் போன்?’ என்று சிணுங்கியவாறு “ஹலோ” என்றாள்.
“இது வேக் அப் கால் தான். எழுந்து விட்டாயா?” என்றான்.
“நான் ரெடியாகவே ஆகி விட்டேன்” என்றாள் கிருத்திகா .
“அப்படியானால் அப்படியே கீழே இறங்கி வந்து காரில் ஏறிக் கொள் பார்க்கலாம்” என்றான் சிரித்துக் கொண்டு .
“கீழேயா இருக்கிறீர்கள்?” என்று கேட்டுக் கொண்டு, தன் அறையைப் பூட்டி விட்டு, வார்டனிடம் விடை பெற்று கீழே வந்து அவன் காரில் ஏறிக் கொண்டாள்.
அவளைப் பார்த்துத் திகைத்து விட்டான் சபரீஷ்.
‘இப்படியும் ஓர் அழகா?’ என்று ஆச்சர்யப்பட்டான்.
‘ஒரே ஒரு மெல்லிய தங்கச் சங்கிலி. இரண்டு காதுகளிலும் இரண்டு சிறிய வளையங்கள். இந்த அழகே என்னைப் பைத்தியம் ஆக்கி விடும் போல் இருக்கிறதே! மலர்களைப் போல் மென்மையும், மகாராணி போல் கம்பீரமும் கொண்ட இவள் எங்கிருந்து வந்தாள் என்னைப் பைத்தியமாக அடிக்க?’ என்று நினைத்தான்.
“என்ன சார் ஆபீஸில் ஏதாவது பிரச்சனையா? அதைப் பற்றி யோசிக்கிறீர்களா?” கிருத்திகா.
‘உன்னைப் பார்த்த நாளாய் என்னால் உன்னைப் பற்றி மட்டும் தான் யோசிக்க முடிகிறது. ஆபீஸ், வீடு எதுவும் என் மனதிற்கு வரவில்லையே’ என்று மனதில் நினைத்துக் கொண்ட சபரீஷ்வர், ‘ஒன்றுமில்லை’ என்று தோள்களைக் குலுக்கித் தலையாட்டி விட்டு ஒரு பூக்கடை எதிரில் காரை நிறுத்தினான்.
ஒரு செண்டு மல்லிகைப் பூ தனியாக வாங்கி அவளிடம் கொடுத்தான். ஒரு ஐந்து முழம் மல்லிகைப் பூவைத் தனியாக வாங்கி அவளிடம் கொடுத்தான்.
“இந்தப் பூவை நீ வைத்துக் கொள் கிருத்திகா” என்றவன் அவளை ஏற இறங்கப் பார்த்திவிட்டு, “பூ ஒன்று தான் குறையாக இருக்கிறது. இதை வைத்துக் கொள், அந்த செண்டுப் பூவை பூஜைக்கு எடுத்துக் கொள்ளலாம்” என்றான் சபரீஷ்வர்.
கிருத்திகா அந்தப் பூவை வாங்கி ஹேர் பின்னில் குத்தி அதை நீளமாகத் தொங்க விட்டாள்.
‘தேவதையோ இவள்’ என்று தோன்றியது சபரீஷ்வருக்கு. வெறும் மல்லிகைப் பூ இந்தப் பெண்ணிற்கு எவ்வளவு அழகைக் கூட்டுகிறது என்று ஆச்சர்யமானான் அவன். மௌனமாக அவளைப் பார்த்தவாறும், ரோடைப் பார்த்தவாறும் வண்டியை ஓட்டி ஒரு வழியாக வீட்டிற்கு வந்து சேர்ந்தார்கள்.
வீட்டில் பூ அலங்காரம் மிக அழகாகச் செய்யப்பட்டிருந்தது. எல்லாம் கருத்திருமன் அங்கிளின் வேலை போலும் என்று நினைத்துக் கொண்டாள்.
ஆனால் வீட்டின் முன்னால் விடியற்காலையில் வேலைக்காரி போட்ட சிறிய கோலம் முக்கால் பாகம் அழிந்து போயிருந்தது. கருத்திருமனும், சாம்புத் தாத்தாவும் இவளை மாறி மாறி உபசரித்தார்கள்.
சாம்புத் தாத்தாவிடம் கோலப் பொடியைப் கேட்டு வாங்கி, விசேஷங்களுக்கு அவள் ஹோமில் பிள்ளையார் கோயிலில் போடுவது போல் பெரிய கோலம் போட்டாள். கோலத்தைச் சுற்றி செம்மண் பட்டைத் தீட்டினாள். கலர் பொடியும் சாம்புத் தாத்தாவிடம் கேட்டு வாங்கி, கலர் பொடியை நிரப்ப வேண்டிய இடத்தில் எல்லாம் நிரப்பினாள்.
இதையெல்லாம் அங்கே வந்து பார்த்துக் கொண்டிருந்த சபரீஷ்வர், “கிருத்திகா, உனக்கு கோலமெல்லாம் போடத் தெரியுமா?” என்றான் ஆச்சர்யத்தோடு.
“கொஞ்சம் தெரியும். எங்கள் ஹோமில் ஒரு சிறிய பிள்ளையார் கோயில் இருக்கிறது. ஒரு சர்ச்சும், ஒரு மசூதியும் இருக்கிறது. பிள்ளையார் கோயில் எதிரில் தினம் யாராவது ஒருவர் கோலம் போடுவோம். சர்ச் எதிரில் கிறிஸ்துமஸ், ஈஸ்டர் சன்டே போன்ற விசேஷ நாட்களில் பெரிய கோலங்கள் போடுவோம். கோலம் நன்றாக இருக்கிறதா?”
“நீ செய்யும் ஒவ்வொரு வேலையும் அழகாய்த்தான் இருக்கிறது கிருத்திகா” என்றான் சபரீஷ், அவளை வாத்சல்யத்துடன் பார்த்துக் கொண்டே.
‘இது என்னைப் பார்வை, ஆளை அப்படியே கரைப்பது போல்’ என்று நினைத்துக் கொண்டாள் கிருத்திகா.
இதற்குள் அங்கு வந்த சாம்பு தாத்தா, “பூஜை அறையில் சாமிக்கு எதிரே ஒரு சிறிய மாக்கோலம் போடம்மா கிருத்திகா” என்றார்.
“தாத்தா, கிருத்திகாவை ரொம்ப வேலை வாங்காதீர்கள். இன்னும் கொஞ்ச நாட்களில் கிருத்திகா கலெக்டர் ஆகப் போகிறாள்” என்றான் பயந்தாற் போல் நடித்த சபரீஷ்வர்.
“நிஜம்மா வாம்மா?” என்றார் சாம்புத் தாத்தா.
“அதெல்லாம் இல்லை தாத்தா, அவர் சும்மா கலாட்டா செய்கிறார்”
அழகான மாக்கோலம் போட்டு அங்கும் கோலத்தைச் சுற்றி செம்மண் கோடு போட்டாள். பிறகு கோலத்தைச் சுற்றி வந்து அழகுப் பார்த்தாள். கருத்திருமன் கையில் காபியுடன் வந்து அவளிடம் கொடுத்தார்.
“என்ன அங்கிள் நீங்கள்? என்னைக் கூப்பிட்டால் நான் வந்து வாங்கிக் கொள்வேன்” என்றவள் காபியைக் குடித்துக் கொண்டே கருத்திருமனிடம், “அங்கிள், சார் என்னைப் போய் பூஜையில் கலந்து கொள்ள வேண்டும் என்று சொல்கிறாரே! எனக்கு பூஜை பற்றியெல்லாம் என்ன தெரியும் ? நட்சத்திரம், கோத்ரம் எல்லாம் கேட்பாரே ஐயர் ! நீங்களாவது எம்.டி. சாருக்கு விளக்கி சொல்லக் கூடாதா?” என்றாள் .
“இது ஒரு மேட்டரா? எல்லாம் பார்த்துக் கொள்ளலாம்” என்றார் கருத்திருமன்.
வெற்றிலைப் பாக்கு, பழம், புஷ்பம் வைத்த தட்டுகளை வரிசையாக அடுக்கி வைத்து விட்டு, அழகான வெளிர் நீல வண்ண காஞ்சிபுரம் பட்டு சேலை ஒன்றும், அதற்கு பொருத்தமான சோளி ஒன்றும் வைத்து ஒரு அட்டைப் பெட்டியுடன் வந்தான் சபரீஷ்வர்.
ஒவ்வொரு வருடமும் அவன் அம்மாவின் பிறந்த நாளில் ஒரு பட்டுப் புடவையுடன், ஜாக்கெட்டும் பூஜையில் வைத்து, பூஜை முடிந்த பிறகு அவன் பெரியம்மா அல்லது சித்திக்கோ தருவது வழக்கம். அதேபோல் தான் இந்த வருடமும் வைத்தான்.
பூஜை முடிந்ததும் அந்தப் பட்டுப் புடவையை கிருத்திகா விடம் கொடுக்கும்படி ஐயரிடம் வேண்டினான் சபரீஷ்வர்.
அவரும், ”குழந்தே ! உன் பேரும் நட்சத்திரமும் சொல். அப்படியே உன் பெயருக்கு ஒரு அர்ச்சனை செய்து விட்டுத் தருகிறேன்” என்றார் .
‘அடடா ! நாம் நினைத்தது போலவே கேட்கிறாரே’ என்று நினைத்தாள் கிருத்திகா.
கருத்திருமன் உடனே, “பெயர் கிருத்திகா, கார்த்திகை நட்சத்திரம், சில கோத்ரம்” என்றார்.
“இந்தப் பெண்…” என்று இழுத்தார் ஐயர்.
“என் பெண் தான். என் இரண்டாவது மகள்” என்றார் கருத்திருமன் தலைநிமிர்ந்து.
சபரீஷ்வரும், கிருத்திகாவும் ஏன் சாம்புத் தாத்தாவும் கூட ஆச்சர்யத்தில் ஸ்தம்பித்து நின்றனர்.
கிருத்திகாவின் கண்களில் கண்ணீர் தாரையாக வழிந்தது. அப்படியே கருத்திருமன் காலில் விழுந்து விட்டாள். அவளைத் தூக்கி நிறுத்தி அவள் கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்து விட்டார்.
ஐயர் காலில் விழுந்து அவர் ஆசீர்வதித்துக் கொடுத்த புடவைப் பெட்டியையும் வாங்கிக் கொண்டாள் கிருத்திகா.
ஐயர் தட்சிணை பெற்றுக் கொண்டு கிளம்பினார். அவருக்கு தட்சிணைப் பணத்துடன், பழம், பூ, இனிப்புகள், தேங்காய் எல்லாம் வைத்து கொடுத்தனுப்பினான் சபரீஷ்வர்.
கருத்திருமன் அவரை காரில் அவர் வீட்டில் விட்டு வர ஏற்பாடு செய்தார். அன்று இரவு எல்லோருக்கும் டின்னர் அங்கேயே என்று சபரீஷ் உத்தரவிட்டான்.
சாம்புத் தாத்தா அன்று இட்லி, பொங்கல், சர்க்கரைப் பொங்கல், சட்னி, சாம்பார் என்று வரிசையாக செய்து வைத்திருந்தார்.
எல்லோரையும் உட்கார வைத்து, சாம்புத் தாத்தாவையும் வற்புறுத்தி அவர்களோடு உட்கார வைத்து கிருத்திகா பரிமாறினாள்.
“கிருத்திகா, தாத்தாவைக் காக்காய் பிடிக்கிறாயா? நல்ல சமையல் கற்றுக் கொள்ள வேண்டுமா?” என்றான் சபரீஷ்வர் சிரித்தேன் கொண்டே.
“நீங்கள் மிகவும் அதிர்ஷ்டம் செய்தவர் சார். அப்பா போல் பாசமிக்க கருத்திருமன் அங்கிள், அம்மாவைப் போல் ஒரு தாத்தா. இல்லையா தாத்தா?” என்று சொல்லிக் கொண்டே, ஏதோ எடுத்து வர சமையல் அறைக்குச் சென்றாள்.
பின்னாலேயே சென்ற சபரீஷ்வர், “அதுமட்டுமில்லையடி பெண்ணே! தேவதை போல் ஒரு காதலி; அவளே என் மனைவி” என்றான் அவள் காதருகில் ரகசியக் குரலில். கன்னத்துடன் காது மடல்கள் கூடச் சிவந்தன கிருத்திகாவிற்கு.
“வெட்கப்பட்டால் உன் கன்னத்தில் ரோஜாப்பூ பூக்கிறதே கிருத்திகா” என்றான் அவள் கன்னத்தை லேசாகத் தட்டியபடி.
கிருத்திகா அவனைப் பார்த்து லேசாக நாணத்துடன் சிரித்தாள்.
“கிருத்திகா, மாடியில் என் அறையில் போய் பூஜையில் இப்போது வைத்துக் கொடுத்தப் புடவையைக் கட்டிக் கொண்டு வா” என்றவன், “ஓ இதுவரை நீ மாடிக்குப் போனதில்லை இல்லையா; வா, நான் காட்டுகிறேன்” என்று மாடிக்கு அழைத்துச் சென்றான்.
(தொடரும் – திங்கள் தோறும்)
GIPHY App Key not set. Please check settings