in ,

நாளைய காதல்💗 (பகுதி 1) – ரவி கீதா

வித்தியாசமான காதல் கதை எனில், மாலை மணி ஐந்தாயிற்று.

மகேஷ் தன் சீட்டில் இருந்து எழுந்து கழுத்து “டை”யை சற்றே தளர்த்துக்கொண்டு தன் அறையிலிருந்து வெளிய வந்தான் .

ஆபிஸ் போர்டிகோவில் தயாராக இருந்த தன் பியட் காரில் விசிலடித்தபடியே ஏறி உட்கார்ந்து லாவகமாக கியர் போட்டு வண்டியை கிளப்பினான் .

போகன் வில்லா சூழ்ந்த தன் வீட்டு கேட்டை தாண்டி வீட்டிற்குள் காரை செலுத்தினான்.

வாசலில் சாம்பு மாமா சமையல்காரர் சிரித்தபடியே “வாங்க என்று வரவேற்றார்” – என்பது போல மணியன் பாணி கதை தளம் ….வேணுமா …?

அந்த ஒண்டுக்குடித்தன வீட்டில் ரங்கு என்று செல்லமாக அழைக்கப்படும் ரங்கநாதன், ராத்திரி சாப்பாட்டுக்கு ராயர் மெஸ்ஸிலிருந்து ரெண்டு ரவா தோசை பார்சல் கட்டிக்கொண்டு, ஒடுக்கு மாடிப்படியில் ஏறி தன் ரூம் கதவை தட்டினான் .

உள்ளே பாத்ரூமிலிருந்து அவசர அவசரமாக லுங்கியை மார்ப்பு வரை தூக்கி கட்டிக் கொண்டு கையில் playboy புத்தகத்தை வைத்துக்கொண்டு கதவை திறந்த பாச்சு (பார்த்தசாரதி) மூச்சிரைக்க வந்தான் – என தலைவர் சுஜாதா பாணியில் கதை தளம் அமைக்கலாமா …?

கனவுகள் நம் ரஹஸ்ய ஆசைகள் தம் நிறைவு காணத்தேடும் ஒரு வழி என்று கொண்டால் என் எந்தப் பிறவியின் எந்த ஆசை நீ? – என்று லா ச ரா பாணியில் கதை தளம் அமைக்கலாமா ….?

“தன் இடுப்பில் குருவாள் இருப்பதை உறுதியாக நம்பிய இளமாறன் தன் எதிரே நிற்கும் , முகத்தை துணியால் மூடிய, அந்த உருவத்தை இது ஆணா, அல்லது பெண்ணா , என்று யூகிக்கமுடியாத மனநிலையில் இருந்தவன், அது பெண்ணாக இருந்துவிடக்கூடாதா  என்ற ஏக்கத்தில் அந்த உருவத்தை கூர்நது நோக்கும் தருணத்தில்,   அந்த இடைவெளியில்,   அந்த உருவம் தன் உடைவாளை சரேலென அவன் கழுத்தில் வைத்தது ….” – என்று மகாபிரபு சாண்டில்யன் பாணியில் பயணிப்பதா ….?

காலையில் எக்காளமிட்ட அந்த ஆலை சங்கின் சத்தத்தில்” அட ச்சீ இந்த எழவு புட்ச சத்தம்” என்று பிளாட்பாரத்தில் படுத்திருந்த  சோலையாப்பன் தன் வேஷ்டியை இழுத்து முகத்தை மூடிக்கொண்டு தன் உடல் முழுவதையும் அந்த கிழிந்த வேஷ்டிக்குள் முடக்கினான் – என தானைத் தலைவன் ஜெயகாந்தன் பாணியில் எழுதுவதா ….?

வேண்டாம் வேண்டாம் ……

காதல் கதை தானே ….?

“ஆச வச்சேன் உன்மேல மச்சான், உடன் அரளிவிதை அறைச்சேன் 

அம்மியிலே மச்சான்…..,

இந்த கரிசக்காட்டு வெப்பத்தில என் மேனி தீஞ்சு போச்சு என் ஆச மச்சான் ………

என்று வைரமுத்து பாணியிலே போகலாமா …?

ஏ … என்னவே ….?

வித்தியாசமான காதல் கதை எழுதறேன்னுட்டு ….

அவனவனுக்கு ச்சோலி இல்ல ன்னு நினச்சுக்கிட்டேயல ….?

அவன மாதிரி எழுதவா இவன மாதிரி எழுதவான்னுட்டு ….?

என்னமாச்சும் எழுதுலே …!!

இல்லீங்…. என்ன எழுதறதுன்னு ஒன்னும் வெலங்கலீங்க ….

தெரியாம எழுதரேன்னுட்டு வந்து போட்டனுங்க …

அதுல பாருங்க காதலாமுங்க ….

நமக்கு அதெல்லாம் சரிப்பட்டு வராதுங்கோவ் …

ஷிப்புட்டுக்கு போனோமா ஊட்டுக்கு வந்தோமான்னு இருக்கணுமுங்க ….

இந்த வளத்தி செல்வாவானுங்க சும்மா இல்லாம வித்தியாசமான காதல் கதை எழுதுன்னு சொல்லிப்போட்டாநுங்கோ ….

தென்னபன்றதென்னு தெரிலீங்கோ ..

உன்னிய கொண்டேபுடுவேன் ….பாத்துக்க மாப்பிள …..

மதுரைகாரேன் கோவப்பட்டா …. அவ்ளோதான் பாத்துக்க ….

என்னமாச்சும் எழுதுவியா அத விட்டுட்டு ….

ஏம்பா… இன்னா உனுக்கு பிரச்சன இப்ப …… லவுதானே ….

ரோட்ல நாய்ங்க கூட தான் லவு பண்ணுது ….

இத்த போய் ……

சோக்கா போனோமா இந்தாமே …மல்லிகா பொண்ணு ….

எனுக்கு உமேல டாவு …

நீ இன்னா சொல்லுறன்னு கேப்பிய்யா அத்த உட்டுட்டு இன்னாமோ பெனாத்திக்கினு கீர…..?

அப்படியெல்லாம் இல்லைகாணும் , நீர் பாட்டுக்கு காதல் கீதல் ன்னுட்டு பேசப்பிடாது 

லோகத்துல அததுக்குன்னு ஒரு லவ்கீகம் தாத்பர்யம்லாம் இருக்கு 

எடுத்தேன் கவுத்தென்னுட்டு பேசப்பிடாது ……

காதெல் ல்லாம் சினிமாவுலதான் வரும் நிஜ வாழக்கையில் சரிப்படாது சொன்னா கேளுங்கோ …

பின்னால யாரோ முதுகை சுரண்டினார்கள் என்று திரும்பிப் பார்க்க நம்ம கூடவே ஒட்டிக்கிட்டு இருக்குற சின்னான் வெற்றிலை போட்டு,பீடி குடித்து பழுப்பேறி இருந்த பற்களை காட்டி நீங்க சிக்கிக்கிடீங்கலாற்று போலீங்கோ…….. சாக்கிரதீங்கோ என்றான்.

அவனை சும்மா இருப்பா நீ வேற நடுவுல வந்துகிட்டு என்று அடக்கினேன்.

இதான் ! இதான் !! புதுசா காதல் கதை எழுதறதாக இருந்தா பிரச்சனை …!

காதல் நா என்ன ஒரு யுவனும் யுவதியும் ஒத்தரை ஒத்தர் விரும்பி, எப்படா சொல்லுவோம் என்று காத்திருந்து சொல்லி , சினிமா பார்க் பீச்ன்னு சுத்தி பிறந்தநாள் கிப்ட் குடுத்து ….வீட்டுல சொல்லி ஒத்துக்கிட்டா கல்யாணம் .இல்லைனா பிரண்ட்ஸ் கிட்ட சொல்லி ரிஜிஸ்டெர் மேரேஜூ பண்ணிண்டு முதலிரவு …..

அவ்ளோதான் …!

இதான் வித்தியாசமான காதல் கதை …!

இருங்க ….. இருங்க …ஹலோ ….பிரச்சனையின் தீவிரம் தெரியாம நீங்கபாட்டு பெனாத்திக்கிட்டே இருக்கீங்க ……?

இங்க காதலே பண்ணக்கூடாதுன்னு சொல்லப்போறாங்க….

யாரு சொல்லப்போறாங்க…….அரசாங்கம்…..!

காதல் எங்கே ..? இனிமே தொடருமா ….?

(தொடரும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    உபத்திரமான… உதவி (சிறுகதை) – மலர் மைந்தன், கல்பாக்கம்

    காத்திருக்கிறார்கள் (சிறுகதை) – நாமக்கல் எம்.வேலு