மனிதன் தெய்வமாகலாம்
மனிதன் புத்தனாகலாம்.
மனிதத்தின் நிறைவே துறவு!!
மனிதம் உணர்த்த
துறவுபூண்டான் சித்தார்த்தன்
வறுமை புத்தம் உணர்த்தியது
முதுமை புத்தம் உரைத்தது
பிணியும் புத்தம் வகுத்தது
கௌதமபுத்தருக்கு மூன்றிலே உதித்தபுத்தம்
போதிமரத்தடி ஞானம் போதித்தது
அவதாரப் புருஷராய் அவனிவலம் வந்து
மானிடம் உய்ய எண்மார்க்கம் தந்தார்
நானும் புத்தன் தான்…
வாழும் சூழல்
நித்தம் என்னை புத்தனாக்குகிறது
வாக்கில் பொய்மை நீங்கி
வாய்மை என்றும் நிலைக்குமானால்
நானும் ஒரு புத்தன் தான்
ஈ என இரத்தல் கண்டு
கொள்ளென என்கரம் நீளுமானால்
நானும் ஒரு புத்தன் தான்
பிறன் தன்வாழ்வில் உயர
என் கை ஏணியாயிருக்குமானால்
நானும் ஒரு புத்தன் தான்
பிறன் கண்ணில் நீர்வீழக்கண்டு
என்கண் செந்நீர் உகுக்குமானால்
நானும் ஒரு புத்தன் தான்
விழியற்றோர் வழிபெற
அவர்விழியாய் நான் இருந்தால்
நானும் ஒரு புத்தன் தான்
கதியற்றோர் கலக்கம் தீர
உடல்தந்து பொருள்தந்து
கதிமீள் புன்னகை காண்கையில்
நானும் ஒரு புத்தன் தான்
துன்பக்காரகன் ஆசை
ஆசை நீங்கின் துன்பம் அற்றுப்போம்
முனியின்நிலை மேற்கண்டநிலை
முனிவன் ஒரு புத்தன்
சாமானியன்?!!!!!
பௌத்தமும் பழகலாம்
புத்தனும் ஆகலாம்
ஆனால் – அவசரத் தேவை
மனிதாபிமானம் காருண்யம்
நல்வாக்கு நன்னடத்தை
அனைவர் உணர்வாய்
நான் இருந்தால்
நானும் ஒரு புத்தன் தான்
ஆணின் துயரம் பெண்மை உணர்ந்தால்
பெண்ணின் மேன்மை ஆண் அறிந்தால்
குழந்தை உலகை நம் வசமாக்கினால்
முதுமை வரத்தை இளமை போற்றினால்
நாம் அனைவருமே புத்தன் தாம்
வள்ளுவன் மார்க்கம்
வள்ளலார் மார்க்கம்
புத்தம் உரைக்க
அம்மார்க்கமே என் மார்க்கமாய்
வாழ்பாதையில் நடைப்போட்டால்
நானும் ஒரு புத்தனே!!!
பேச்சில் இல்லாமல்
செயலிலும் வடிவம் கொள்ள
முயற்சிக்கும்
✍ சக்தி ஸ்ரீநிவாஸன்
“சஹானா” மாத இதழ்களை வாசிக்க விரும்புவோருக்கு, இணைப்புகள் 👇
எழுத்தாளர் சஹானா கோவிந்தின் நாவல்கள் மற்றும் சிறுகதைத் தொகுப்புகளை வாசிக்க விரும்புவோருக்கு, இணைப்புகள் 👇
GIPHY App Key not set. Please check settings