சஹானா
சிறுகதைகள்

என்னுள் கரையும் கனவே…(சிறுகதை) – ✍ கரோலின் மேரி

ஞ்சாவூர் தமிழகத்தின் நெற்களஞ்சியம் ஆகும். தமிழகத்தில் நெல் உற்பத்தியில் தஞ்சாவூர் முதலிடம் வகிக்கிறது.

இந்த பெயர் வரக் காரணமாக சொல்லப்படும் புராணக்கதை ஒன்று உண்டு

முற்காலத்தில் தஞ்சன் என்னும் அசுரன், இவ்விடத்தில் மக்களை துன்புறுத்தி வந்தான். மக்களைக் காக்க அவனை சிவபெருமான் வதம் செய்த இடமாதலால் தஞ்சாவூர் என்ற பெயரும், சிவபெருமான் இந்த ஊரில் தஞ்சபுரீஸ்வரர் என்ற திருப்பெயருடன் கோயில் கொண்டுள்ளார் என்றும் கூறப்படுகிறது.

இங்கு பலாமரத்தில் செய்யப்படும் வீணை, தம்புரா போன்ற இசைக்கருவிகள் இசைக்கலைஞர்களின் விருப்பத்திற்குரியதாகும்.

இப்படி இயற்கை வளம் நிரம்பிய ஊரில் இருக்கும் ஒரு இல்லத்தில் என்ன நடக்கிறது என்பதை பார்க்கலாம் வாருங்கள்…

“அப்பா” என்று தயங்கியபடி தன் முன் நிற்கும் மகளை கண்டவர்

ஒன்றும் பேசாமல் ‘கொடு’ என்பது போல் கைகளை மட்டும் நீட்டினார். அவர் அந்த வீட்டின் தலைவர் அகரமுதல்வன்

அதில் மகிழ்ந்து தன்னிடம் இருந்த கடிதத்தை நீட்டினாள் அவரின் தவபுதல்வி தவமதி, அதை வாங்கிக் கொண்டு சென்று விட்டார் அவர்

“இது எத்தனையாவது?” என கேட்டுக் கொண்டே வந்தார் அவளின் தாய் யாழிசை

“அம்மா அது…” என இழுக்க

“பத்து” என ஒரு ஆண் குரல் பின்னால் இருந்து ஒலித்தது

அதை கேட்ட தவமதியோ, தலை குனிந்தாள்

“என்ன தவா சரியா?” என்று கேட்டவாறு அருகில் வந்தான் அவளின் அருமை  தம்பி முகிலன்

“பத்தா? ஏண்டி இப்படி செய்ற?” என்று அவளை திட்டத் துவங்க

“அம்மா ப்ளீஸ்” என கெஞ்சினாள்

“இன்னும் இரண்டு கடிதம் வேற இருக்கு” என்று எடுத்து கொடுத்து, எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றினான் முகிலன்.

“நீயெல்லாம் எங்க திருந்த போற?” என சலித்துக் கொண்டே சென்று விட்டார்

‘ஏண்டா இப்படி’ என்பது போல் தன் தம்பியை பார்க்க, அவனோ நக்கலாக சிரித்தவாறு சென்று விட்டான்

தன் நிலையை எண்ணி நொந்தபடியே அறைக்குள் சென்று விட்டாள் தவமதி. அவளுக்கு இவர்களின் இந்த பேச்சை எல்லாம் கேட்டுக் கேட்டு பழகிவிட்டது

யாருக்கு கடிதம் எழுதி அனைவரின் வெறுப்பையும் இலவசமாக வாங்கி கொள்கிறாள். அந்த கடிதத்தின் சொந்தக்காரர் யார் என்றால் அது அவளின் ‘கனவு’

ஆம்… அவள் ‘வரிகளின் தோழி’. அவளுக்கு கவிதை மற்றும் கதைகளை எழுத, சுவாசிக்க பிடிக்கும்

கல்லூரியில் கால் பதித்த நாள் முதல், ஏதாவது ஒரு வார இதழுக்கு அனுப்புவாள். ஏனோ அவள் எழுத்துக்கள் தேர்வாகாது                 

அவளும் சலிக்காமல் எழுதி அனுப்பிக் கொண்டு இருக்கிறாள். பார்க்கலாம் அவள் முயற்சிக்கு பலன் கிடைக்குமா என்று

டுத்த வாரம் ஆவலுடன் அந்த வார இதழை பார்க்க, வழக்கம் போல் அவள் படைப்பு வெளியாகவில்லை

கல்லூரிக்கு சென்றவளை கேலி செய்ய ஒரு கும்பல் காத்துக் கொண்டிருந்தது

அவர்களுள் ஒருத்தி புகழியா. பெயருக்கு ஏற்றாற் போல் புகழ் பெற்றவள் தான், பிறர் மனதை வலிக்கச் செய்வதில். அவளிடம் இன்று அகப்பட்டாள் தவமதி.

தவமதியை கண்டவள், “ஏய் தவம் இங்க வா” என்றழைத்தவள், “அந்த புக்கை எடு” எனக் கட்டளையிட்டாள்

அது எந்த புக் என அறிந்தவளின் கண்கள் கலங்கியது. அதை கண்ட புகழியா முகத்தில் திருப்தி புன்னகை வந்தது.

“எடு” என்று மறுபடியும் வற்புறுத்த, வேறு வழியின்றி அதை எடுத்து அவளிடம் நீட்டினாள். அதை வாங்கி, புக்கில் இருந்த ஒவ்வொரு பக்கத்தையும் புரட்டினாள் புகழியா

பின் நிமிர்ந்து பார்த்து, “என்ன தவம் உன்னுடைய கதை வந்துருக்கும் என்று நினைத்தேனே?” என்று அக்கறையாக கேட்பது போல் கேட்க

“வரலை” என மெல்லிய குரலில் பதிலளித்தாள் தவமதி

“ஏய் கவி 100 ரூபாய் கொடு” என அடுத்தவளை பார்த்து கரம் நீட்ட

அவளோ, “போ தவம், உன்னால எனக்கு 100 ரூபாய் நஷ்டம்” என்று தவமதியை குற்றம் சாட்டினாள்

தவமதியின் கண்களில் அருவி போல் கண்ணீர் பெருக, புகழியா அவளின் அருகே வந்து, “உன்னால ஒரு வரியை கூட எந்த புத்தகத்திலும் வர வைக்க முடியாது புரியுதா? உனக்கு தகுந்த பெயர் தான் வைத்து இருக்கிறார்கள். எத்தனை வருடம் ஆனாலும் தவம் மட்டுமே தான் உன்னால பண்ண முடியும்” என்று கூறி, அவள் கண்ணீரை ரசித்து விட்டு சென்றாள் 

‘இல்லை… நான் மனம் தளர மாட்டேன். நிச்சயமா என்னுடைய கவிதை, கதை எல்லாம் புத்தகத்தில் வரும். எனக்கு நம்பிக்கை இருக்கு’ என்று ஆயிரமாவது முறையாக, தன் மனதில் சொல்லிக் கொண்டாள்

திறமை இருந்ததும் வாய்ப்புகள் நிராகரிப்படும் போது ஏற்படும் வலி கொடுமையானது. அதை அனுபவித்தவர்களுக்கு மட்டுமே புரியும், மற்றவர்களால் அதை புரிந்து கொள்ள முடியாது

நாட்கள் அதன் போக்கில் செல்ல, தவமதிக்கு திருமணம் ஆனது

அவளின் துணைவன் பெயர் அன்பினியன், கல்லூரி பேராசிரியராக இருந்தான்

பெயரில் மட்டுமே இனிமை இருக்கும், குணமோ கோபமானவன். சின்ன விஷயத்திற்கு எல்லாம் கத்துவான்

என்ன தான் கடுமையாக இருந்தாலும், தவமதியுடன் மன நிறைவான வாழ்க்கையை வாழ்ந்தான் அன்பினியன்

திருமணம் முடிந்த சில நாட்களில், தவமதி எழுதிய கதை அவன் கண்ணில்பட்டது

அடுத்த நொடி அந்த காகிதத்தை கசக்கி குப்பை தொட்டியில் போட்டு விட்டு, கோபத்தில் கண்கள் சிவக்க மனைவியிடம் சென்றான்

“யாரைக் கேட்டு இத எழுத ஆரம்பிச்ச?”

பயத்தில் குரல் நடுங்க, “எனக்கு எழுத பிடிக்கும் அதான்”

“திருமணத்திற்கு முன்னால் நீ எப்படி வேணாலும் இருக்கலாம். ஆனால் இப்ப எனக்கு பிடிச்ச மாதிரி தான் இருக்கணும். இனிமே இது போல் கிறுக்குறத பார்த்தேன், நான் என்ன செய்வேன்னே தெரியாது” என்று எச்சரித்து விட்டு நகர்ந்தான்

‘அய்யோ ஏன் எல்லாரும் இப்படி பண்றீங்க? எனக்கு பிடித்ததை நான் செய்யக் கூடாதா? எனக்கு எழுத எவ்வளவு பிடிக்கும் என்பதை உங்களால் புரிந்து கொள்ள முடியலையே. நான் என்ன செய்வேன்’ என மனதிற்குள் கதறினாள்.

அதன் பின் அன்பினியன் எந்த நேரமும் அவளை கண்காணித்துக் கொண்டே இருக்க, அவளால் பேனாவை தொடக் கூட முடியவில்லை.

தனக்கு பிடித்த எழுத்து பணியை தற்காலிகமாக நிறுத்தி வைத்தாள் தவமதி

சில மாதங்களில் அவள் தாய்மை அடைய, எழுத்து  அவளுக்கு முற்றிலும் மறந்தே போனது

எழிலோவியன், எழில்நிலா என இரு குழந்தைகள் பிறக்க, தவமதிக்கு அவர்களை சமாளிக்கவே நேரம் சரியாக இருந்தது.

இப்படியே நாட்கள் செல்ல, பிள்ளைகள் இருவரும் பள்ளிக்கு செல்லத் தொடங்கினர்

தவமதிக்கு கொஞ்சம் நேரம் கிடைக்கவே, என்ன செய்யலாம் என்று யோசிக்க ஆரம்பித்தாள்

பல நாட்களாக புதைந்து கிடந்த தன் வரிகளுக்கு உயிர் கொடுக்கலாம் என எண்ணியவள், இண்டர்நெட் மூலம் ஒரு தளத்தை ஆராய்ந்து பார்க்க, அதில் கதைப் போட்டி பற்றிய அறிவிப்பு இருந்தது.

விரைவாக அதை படிக்க ஆரம்பித்தாள். போட்டி பற்றி சில விதிமுறைகளும், சிறந்த படைப்பாக தேர்வு செய்யப்படும் கதையை அவர்களே புத்தகமாக வெளியிடுவார்கள் என்ற செய்தியை வாசித்தவுடன், தவமதிக்கு மகிழ்ச்சியாக இருந்தது.

போட்டிக்கு இரண்டு மாதங்கள் இருப்பதால், தன் போனில் கதையை பதிவு செய்யத் தொடங்கினாள்

யாருக்கும் தெரியாமல் தினமும் நேரம் கிடைக்கும் போதெல்லாம், தன் மனதில் தோன்றும் கதைக்களத்தை தேர்வு செய்து, அதற்கு தலைப்பு, கதை மாந்தர்களின் பெயர், ஊர் என்று அனைத்து விவரங்களையும் குறித்துக் கொண்டாள்

அவளுக்கு முதலில் கதையை தொடங்குவது சற்று கடினமாக இருந்தது. பல வருட இடைவெளியால் தடுமாறினாள், சில முயற்சிக்கு பிறகு சுலபமாக எழுத வந்தது

நாள்தோறும் தவறாமல் கதையின் பதிவுகளை, தன் போனில் சேமித்துக் கொண்டே வைத்தாள்

ஒரு மாதத்தில் கதையை முடித்து அனுப்பி விட்டு வீட்டுக்கு வந்தவளுக்கு, எதையோ சாதித்த சந்தோஷம் இருந்தது முகத்தில்

அதைக் கண்ட அவளின் கணவன், “என்ன மதி ரொம்ப சந்தோஷமா இருக்க? என்ன விஷயம்?” என்று வினவ

கணவனிடம் கூறலாமா? வேண்டமா? என்று மனதில் விவாதம் நடத்தியவள், வேறு வினையே வேண்டாம் என்று முடிவு செய்து, “எதுவும் இல்லை இனியன், கோயிலுக்கு போயிட்டு வந்தேன் அதான்” என்று கடவுளின் பெயரில் பொய் சொல்லி விட, அவனும் அதற்கு மேல் எதுவும் கேட்கவில்லை.

மூன்று மாதங்களுக்கு பிறகு, போட்டி முடிவு வெளியிடப்பட்டது

அதில் அவள் கதை பரிசு பெற்ற கதையாக தேர்வு செய்து புத்தகமாக வெளியிடப்படும் என அறிவித்து இருந்தார்கள்

அதைக் கேட்ட தவமதி விண்ணுக்கும், மண்ணுக்கும் குதித்தாள் என்றே சொல்லலாம், அவ்வளவு மகிழ்ச்சி அவளுக்கு

இன்னும் கொஞ்ச நாட்களில் அவள் கரங்களில் தவழும் புத்தகத்தை எண்ணிக் காத்திருந்தாள்

சில நாட்களிலேயே அவள் கரங்களில் தவழ்ந்தது அவளின் கனவு

முதல் முறை தன் குழந்தைகளை கரங்களில் வாங்கும் போது எப்படி சிலிர்த்தாளோ, அதைப் போல் இன்றும் அவள் உடல் சிலிர்த்தது.

கண்களில் ஆனந்த கண்ணீரா அல்லது இத்தனை நாள் ஏங்கிய ஏக்கத்தின் கண்ணீரா என்பதை, அவளால் பிரித்துக் கூற முடியவில்லை

நடுங்கும் கரங்களால் அட்டை பக்கத்தை வலிக்குமோ என்பது போல் மென்மையாகத் தடவி பார்த்தாள்.

உள்ளே திறந்து படிக்க

“என்னுள் கரைந்து விடுவாய்

 என ஏங்கிய எனது கனவு

 என் கரங்களில் தவழுகிறது…”

என்ற வரிகளை வாசித்தவளின் இதயத்தில், எத்தனை நாள் ஏங்கி தவித்த தன் நிலையை எண்ணி கலங்கியவாறு படிக்கத் தொடங்கினாள்

படித்து முடித்து விட்டு மூடி வைத்தவளின் கண்களில், அட்டைபடம் பட்டது

அதில் ‘என்னுள் கரையும் கனவே’ என்றும், ஆசிரியர் பெயர் ‘கவினி’ என்றிருக்க, தன் சொந்த பெயரில் புத்தகத்தை வெளியிட முடியவில்லையே என்ற கவலை மனதை வருத்தினாலும், இதுவே தன் இத்தனை வருட தவத்திற்கு கிடைத்த வரம் என்று நிம்மதியடைந்தாள்

பிள்ளைகளிடம் இருக்கும் திறமைகளை கண்டு, அவர்களை ஊக்குவிக்கும் குணம் பெற்றோர்களிடம் இருக்க வேண்டும். அவர்களின் திறமைக்கு முதல் விசிறிகள் அவர்களை பெற்றவர்களாக இருக்க வேண்டும்

(முற்றும்)

Click Pictures here to view April 2021 Contest Entry Videos👇

Similar Posts

One thought on “என்னுள் கரையும் கனவே…(சிறுகதை) – ✍ கரோலின் மேரி
  1. கதையும் கதைக்கருவும் அருமையான தேர்வு. ஆனால் விறுவிறுப்பு இல்லாமல் சப்பென்று முடிந்து விட்டதோ? ஏமாற்றம் தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
%d bloggers like this: