சஹானா
சிறுகதைகள்

நாளாம் நாளாம் திருநாளாம் (சிறுகதை) – ✍ ஜா. ரிஜ்வானா

திடுக்கென்று கண் விழித்துப் பார்த்த அரவிந்த், அலுவலகம் செல்ல நேரமாகி விட்டதென அவசரமாய் படுக்கையிலிருந்து எழுந்தான்

வழக்கத்திற்கு மாறாய், காபியை தன் கைகளால் கொண்டு வந்து அரவிந்திடம் கொடுத்து விட்டு முகத்தில் சிறு புன்னகையுடன் சென்றாள் அவன் மனைவி. அரவிந்துக்கு ஒரே ஆச்சரியமாய் ஆனது 

‘என்னடா இது எப்போதும் என்னோடு சிடுசிடுவென்று பேசி சண்டைப் போட்டுக் கொண்டிருப்பவள், இப்போது காபியை அவள் கையால் அன்போடு கொண்டு வந்து தருகிறாளே?’ என வியப்புடன் சிந்தித்துக் கொண்டே கழிவறைக்குள் நுழைந்தான்

பின் குளித்து தயாராகி வெளியே வர, “சாப்ட்டயா?” என தந்தை மகேஷ் அன்போடு கேட்டார்

ஆச்சர்யத்துக்கு மேல் ஆச்சர்யம் என திகைத்து நின்றான் அரவிந்த். ஏனெனில், எப்போதுமே தன்னை ஒரு பொருட்டாகவே நினைக்காத தன் தந்தை, இன்று பாசத்தோடு “சாப்ட்டயா?” என்று கேட்கிறாரே

‘என்ன காலையிலிருந்து ஒரே அதிசயம் நடந்து கொண்டே இருக்கிறது?’ என்று சிரித்தவாறு இருசக்கர வாகனத்தின்  அருகில் நின்றான்

எப்போதும் காலே முறிந்து விழும் படி அடித்தாலும் ஸ்டார்ட் ஆகாத வண்டி, இன்று ஒருமுறை அடித்த உடனேயே ஸ்டார்ட் ஆகி விட்டது. இதிலும் அரவிந்துக்கு ஆச்சரியம்

‘இன்று நமக்கு நல்ல நாளாக உள்ளது போல’ என நினைத்துக் கொண்டே அலுவலகம் புறப்பட்டான்

சாலையில் எப்போதும் நெருக்கடி இருந்து கொண்டே இருக்கும். ஆனால் இன்றோ, சாலையே வெறிச்சோடி இருந்தது

‘காலையிலிருந்தே இப்படித் தான் நமக்கு நிகழ்வுகள் நடந்து கொண்டிருக்கிறது’ என சிரித்துக் கொண்டே வாகனத்தை ஓட்டிச் சென்றான் அரவிந்த்

தன் அலுவலகத்தில் ஒரு கௌரமான பதவியில் இருக்கிறான் அரவிந்த். ஆனாலும், இன்னும் உயர் பதவிக்கு செல்ல வேண்டும் என்பது அவனது ஆசை கனவு

அலுவலகம் நுழைந்தவுடன், “குட் மார்னிங் சார்” என அரவிந்திற்கு முகமன் கூறி அனைவரும் வரவேற்றனர்

‘என்னடா இது அதிசயம்? வருவதையும் போவதையும் கண்டு கொள்ளவே மாட்டார்கள், இப்போது திடீரென்று  அனைவரும்  நமக்கு மரியாதை தருகிறார்கள். இன்று காலையிலிருந்தே இப்படித் தான் எல்லாமும் எனக்கு சாதகமாக நடந்து கொண்டிருக்கிறது’ என நினைத்துக் கொண்டே தன் அலுவல் அறைக்கு சென்றான்.

தன் இருக்கையில் வேறொருவர் அமர்ந்து கொண்டிருப்பதை பார்த்ததும், புரியாமல் விழித்தவாறே அறைக்கதவை திறந்து உள்ளே சென்றான். 

“இது என்னோட ஒர்க் ஸ்பேஸ், இங்க நீங்க என்ன பண்றீங்க? யார் நீங்க?” என வினவினான் அரவிந்த் 

“உங்கள இந்த போஸ்ட்ல இருந்து எடுத்துட்டாங்க, உங்க இடத்துக்கு என்னை அப்பாயிண்ட் செஞ்சுருக்காங்க. எதுவா இருந்தாலும், நீங்க மேனேஜர்கிட்ட கேட்டுக்கோங்க” என்றார் அந்த புதியவர் 

கோபமும் பயமுமாய் உயர் அதிகாரியின் அறைக்கு சென்ற அரவிந்த், அறையின் முன் நின்று, “மே ஐ கம் இன் சார்?” என அனுமதி கேட்க 

“வா அரவிந்த், உனக்காகத் தான் காத்துட்டு இருக்கேன். உள்ள வா”  என்றார் உயர் அதிகாரி

“என்னோட எடத்துல இன்னொருத்தர் இருக்கார், கேட்டா  நீங்க தான் அவரை அப்பாயிண்ட் செஞ்சதா சொல்றார். ஏன் சார், நான் என்ன தப்பு செஞ்சேன்?” என வருத்தத்துடன் அரவிந்த் கேட்க 

“ஆமா அரவிந்த், உன்னை வேலையிலிருந்து எடுத்துட்டேன். நீ வேலைல ஈடுபாடோட இல்லாத மாதிரி எனக்கு தோணுது, அதான்  இந்த முடிவை எடுத்தேன்” என்றார் உயர் அதிகாரி.

அதைக் கேட்டதும் என்ன செய்வதென்று தெரியாமல், திகைத்துப் போய் நின்றான் அரவிந்த்

“போதும் போதும்… இதுக்கு மேல நான் ஏதாவது சொன்னா நீ அழுதுடுவ போலருக்கு. நான் உண்மைய சொல்லிடறேன் அரவிந்த், நீ  ஏற்கனவே இருந்த பதவியிலிருந்து உன்னை தூக்கினது நிஜம் தான். ஆனா, நீ விரும்பின ப்ரோமோஷன் கிடைச்சுருக்கு, அதான் உன் இடத்துக்கு வேற ஒருத்தரை செலக்ட் செஞ்சோம். உன்னோட சேலரி டபிள் ஆகி இருக்கு.  இதை கொண்டாடும் விதமா, இரண்டு வார காலம் வெளிநாட்டுக்கு உன் குடும்பத்தோடு போயிட்டு வர செலவு முழுக்க ஆபீஸே ஏத்துக்கும்” என உயர் அதிகாரி கூறிக் கொண்டே போக, உறைந்து போய் நின்றான் அரவிந்த் 

“கூல் அரவிந்த்… போய்  இந்த மகிழ்ச்சியான  செய்திய உன் பேமிலிகிட்ட சொல்லி என்ஜாய் பண்ணு” என அதிகாரி புன்னகையுடன் கூற 

“தேங்க்ஸ் சார், தேங்க்ஸ் சார்” என நன்றி தெரிவித்து விட்டு, உற்சாகத்துடன் வீட்டுக்கு கிளம்பினான் 

மகிழ்வுடன் சாலையில் சென்று கொண்டிருந்த நேரம், திடீரென்று நாய் குறுக்கே வர, சட்டென்று பிரேக்கை அழுத்தினான். அதன் பின் என்ன நடந்தது என்றே அவனுக்கு தெரியவில்லை 

கண்விழித்த போது, வீட்டில் தன்னறயில் படுத்திருந்தான் அரவிந்த்

“டேய் அரவிந்த்… இன்டெர்வியூ போகணும்னு சொல்லிட்டு இப்படி தூங்கிட்டே இருந்தா வேலை என்ன உங்கப்பனா குடுப்பான்?” என வழக்கம் போல் அர்ச்சனை செய்து கொண்டிருந்தார் அவனின் தந்தை 

ஒரு கணம் புரியாமல் விழித்தவன், பின் புரிந்ததும், ‘அடச்சே எல்லாம் கனவா? ச்சே… ஆனாலும் ப்ரொமோஷன், பாரின் ட்ரிப்… ஹ்ம்ம் கனவா இருந்தாலும் கொஞ்சம் ஓவர் தான். இனி நிஜத்துல எப்ப இன்டெர்வியூ போய், எப்ப வேலை வாங்கி, எப்ப கல்யாணம் பண்ணி, எப்ப ப்ரொமோஷன் வாங்கி, எப்ப பாரின் போய்…’ 

“டேய் கூப்ட்டது காதுல விழலியா…?” என மீண்டும் தந்தை ஆரம்பிக்க, தலைதெறிக்க குளியல் அறைக்குள் ஓடினான் அரவிந்த் 

#ad ‘சஹானா’ இதழை Amazonல் வாசிக்க இணைப்பு இதோ 👇

              

          

#ad

      

        

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
%d bloggers like this: