சஹானா
கவிதைகள்

ஊத்தை (கவிதை) – ✍ ஜெ.கார்த்திக், கரூர்

ஊரெங்கும் ஓடியாடி விளையாடி
வீதிதோரும் புழுதியில் உருண்டு
கிடைத்தாயின பல்வகை ஊத்தைகள்
இடைவெளி காணாச் சதைபோர்த்திய
கரிய நிறத்துப் பிறவித் தோல்களுக்கு
மேலும் மைதீட்டி ஆழகூட்டின ஊத்தைகள்

பூசனங் கிளையை ஒடித்து
அடிக்க வந்தாள் அம்மாச்சி
அடித்தும் விட்டாள்!
கரியனுக்குப் புடைத்ததில்
விளைந்தது செந்நிறக் கோடிரண்டு

ஊத்தைகள் அனைத்தும்
அழுதொழுகிய உவர் நீரில்
ஊறித்தான் போய்விட்டன
தேம்பிய அழுகையில்
ஒழுகிய சளியும்
ஊத்தைகளோடு புணர்ந்துவிட்டன

’ஆரடா அடிச்சா? அம்மாச்சியா?’
‘ஓ ஓ’ என கரியனின் முதுகுத்தட்டி
அழுகையைக் நிறுத்தினாள் அன்னை
வெண்ணீர்கொண்டு நீக்க முற்பட
அடித்த வலி மறந்துவிட்டது…
ஆனால்,
சூட்டின் உக்கிரம் ஏறிவிட்டது!

மீண்டும் அழுதான் அரற்றினான்
எப்படியோ குளித்ததில்
ஊத்தைகள் வழிந்தோடி விட்டன
கருமை மட்டும் பிறவியே என்பதால்
அது எங்கும் ஓடவில்லை!

பக்கத்து வீட்டுப் பார்வதியிடம்
முகப்பவுடர் கடன் பெற்று
கரிய மகனுக்குப் பூசிவிட்டாள்
ஆரத் தழுவி மகனவனை
உச்சி முகர்ந்து முத்தமிட்டாள்

இரவு விருந்திற்கு கொஞ்சம் அரிசியில்
வேகும் உலையின் அடுப்புக் கரியில்
கடைந்தெடுத்தக் கரு ‘மை’யில்
திருஷ்டிப் பொட்டிட்டு அழகு பார்த்தாள்

ஊத்தைகள் சேர்ந்துள்ள
புடவை தலைப்பு கொண்டு
சோற்றுக் கஞ்சியை வடிக்கலானாள்!

#ad ‘சஹானா’ இதழை Amazonல் வாசிக்க இணைப்பு இதோ 👇

              

          

#ad

      

        


	

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
%d bloggers like this: