sahanamag.com
Short Story Contest 2021 Entries சிறுகதைகள்

மண்டையன் (சிறுகதை) – ✍ வைகை, சிங்கப்பூர்

இந்த போட்டிக்கான சிறப்புப் பரிசுகளை வழங்குபவர்கள், Madhura Boutique நிறுவனத்தார். அவர்களின் https://madhuraboutique.in/ என்ற தளத்திற்கு சென்று, உங்களுக்கோ அல்லது உங்களுக்கு வேண்டியவர்களுக்கு பரிசு தரவோ, தரமான புடவைகள், வெள்ளி நகைகள், ஜெர்மன் சில்வர் நகைகள் பெற்றுக் கொள்ளலாம்

சிறுகதைப் போட்டி 2021 (கதை எண் 57)

“டேய் அழகு.. நாளைக்கு போயி நம்ம மண்டையன ஓட்டிட்டு வரணும்,காலைல சீக்கிரம் எந்திரிக்கணும், நேரத்துல தூங்குடா” என்று அப்பாவின் குரல் கேட்டதிலிருந்து அழகுக்கு தூக்கமே வரவில்லை. 

ஏனென்றால் மண்டையனுக்கும் அவனுக்குமான பந்தம் கிட்டத்தட்ட அண்ணன் தம்பி போன்றது. அழகு பிறந்த ஒன்பது மாதங்களில் வீட்டில் உள்ள மாடு, காள கண்ணு ஈன்றது. 

அதை மாடு என்று கூட சொல்லக் கூடாது. அது பேரு “கொறட்டை”. கொறட்டை தவிர வீட்டில் “காக்காச்சி” “குள்ளச்சி” போன்ற மாடுகளும் உண்டு. எல்லோரும் மாட்டுக்கு லட்சுமி, பார்வதின்னு பேர் வைக்கும் போது அழகு வீட்டில் மட்டும் மாடுகளுக்கெல்லாம் கொறட்டை, குள்ளச்சின்னு செல்லப் பேர்கள் தான்

இந்தப் பேர்களே அழகு வீட்டில் அவர்களின் மாடுகளுடான உறவைச் சொல்லிவிடும். அழகுவிற்கு ஒரு பன்னெண்டாவது படிக்கும் ஒரு அக்கா உண்டு. அப்பாவிற்கு பக்கத்து ஊர் பஞ்சு மில்லில் வேலை. அது போக பரம்பரையாக உள்ள சொற்ப நிலத்தில் ஒரு போகம் நெல்லு போடுவார்

அதுவும் மழை தண்ணி பெஞ்சு கம்மாயில் தண்ணி வந்தா மட்டும் தான். அழகுவின் அம்மா வீட்டில் உள்ள மாடுகளை வைத்து, ஒரு பத்து வீட்டிற்கு பால் ஊற்றி, அதில் வரும் வருமானத்தை பொம்பளை புள்ளைக்குன்னு சேர்த்து வைக்கும்

காலைலே எந்திரிச்சு எந்திரகதியில் பல்லு தேச்சு, பெரிய விபூதிப் பட்டையை நெற்றியில் போட்டு கொண்டு, அம்மா கொடுக்கும் வடிகட்டின நரசுஸ் காப்பியை ஒரு பெரிய லோட்டாவில் குடிச்சுட்டு, ஒரு கூடையில் அம்மா சட்டி சட்டியாக அடுக்கிக் கொடுக்கும் பால் கூடையை எடுத்து சைக்கிளில் மாட்டிக் கொண்டு வீடு வீடாக பால் கொடுப்பது அழகுவின் வேலை

ஆரம்பத்தில் யார் வீட்டுக்கு எத்தனை உழக்கு (ஒரு உழக்கு 336மி.லி) எந்தத் தூக்குச் சட்டி என்பதில் அழகுக்கு குழப்பமாக இருக்கும், போகப் போக தூக்குச்சட்டி எடையை வைத்தே அதில் எத்தனை உழக்கு யாருக்கு என கணிப்பதில் தேர்ந்தவனாகி விட்டான்

மேலும் பால் வாங்கும் எல்லார் வீட்டிலும் அழகுவை காலங்காத்தால முழு விபூதிப் பட்டையுடன் பார்ப்பதை ஒரு நல்ல சகுனமாகப் பார்த்ததால், அவன் அப்பாவிற்கு விடுமுறை என்று ஒருநாள் அவர் பால் கொண்டு போனால் கூட, “ஏன் அழகு வரலையா?” என கேட்கத் துவங்கினார்கள். 

இதில் அழகுக்கு ஒரு சாதகமும் இருந்தது. தீபாவளி பொங்கல் வந்தால் பால் காசு போக அழகுக்கு ஐம்பது நூறு என தனியாகக் கொடுப்பார்கள். அப்படிக் கொடுக்கும் காசில் பத்து ரூவாய்க்கு கடலச்சு வாங்கி வந்து மண்டையனுக்கு கொடுத்தால் தான் அவனுக்கு மனசு ஆறும்

இந்த மண்டையன் யாருன்னு சொல்ல வந்தது, அழகு புராணம் பாடியாச்சு

அழகு பிறந்து ஒன்பது மாசத்துல கொறட்டை போட்டுச்சே ஒரு காளாங்கண்ணு, அது தான் மண்டையன். அதுக்கு மண்டையன்னு பேரு வச்சது அழகுவோட அக்கா பேச்சி.

வழக்கமா பின்னாடி பிறந்த பிள்ளையைத் தான் எச்சிப் பால் குடிச்சு வளர்ந்தன்னு சொல்லிக் காட்டுவாங்க, ஆனா அழகு தனக்கு ஒன்பது மாசம் பின்னாடிப் பிறந்த மண்டையனோட எச்சிப் பால் தான் அதிகமா குடிச்சு வளர்ந்தான். ஆனா மண்டையன் ஒரு நாள் கூட அவனிடம் சொல்லிக் காட்டியதில்லை. 

அழகு கூடவே மண்டையனும் ஒரு பிள்ளை போலவே வளர்ந்தான். அதன் பிறகும் கொறட்டை, காக்காச்சி எல்லாம் பல கண்ணுக்குட்டி போட்டுச்சு, ஆனாலும் மண்டையன் ஒரு மூத்த பிள்ளை போல வளர்ந்தான் அந்த வீட்ல

மண்டையன் கடலச்சு திங்க ஆரம்பிச்சதே ஒரு சுவாரஸ்யமான கதை. அழகோட அக்கா பேச்சி சடங்காகி கட்டுத்தரை ஓரமா ஒரு சாக்குத் தடுப்பு போட்டு அதில் தனியா வச்சுருந்தார்கள். 

மாமன் முறைக்கு பலகாரம் கொண்டு வந்தவர்கள் பேச்சிக்கு புடிக்கும்னு கடலச்சும் வாங்கியாந்து, எல்லா பலாரத்தையும் ஒரு தட்டுல வச்சு பேச்சிக்கிட்ட கொடுத்து, தடுப்பு ஓரமா இருந்தா மரபெஞ்சுல வைக்க சொல்லிட்டு பேச்சியை கூட்டிவச்சி பூ வச்சி கதை பேசிகிட்டு இருந்தாங்க

தட்டுல இருந்த கடலச்ச பின்னாடி கட்டிருந்த மண்டையன் மோப்பம் பிடிச்சு அந்தப் பொட்டலத்தை மட்டும் மறைப்புக்கு கட்டியிருந்த சாக்கு வழியா தலையை நுழைச்சு எடுத்துட்டான்.

திரும்ப உள்ள வந்து தட்டுல ஆசையா கடலச்ச தேடுன பேச்சிக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது. எடுத்த கடலச்ச திண்ணு முடிச்ச மண்டையன் இன்னும் இருக்கான்னு சாக்குக்கு நடுவுல மூக்கை விடும் போது, பேச்சிகிட்ட மூக்கும் களவுமா மாட்டிகிட்டான்

“அப்பா, இங்க பாருங்கப்பா மண்டையன் என் கடலச்ச பூராம் திண்ணுட்டான்” என்று கத்தினாள் பேச்சி

“விடுத்தா.. நான் உனக்கு வாங்கியாந்து தர்றேன்” என்று சொன்னவர், உடனே போய் கடலச்சு வாங்கியாந்தார், மண்டையனுக்கும் சேர்ந்து!

அன்று ஆரம்பித்தது மண்டையனுக்கு கடலச்சுப் பைத்தியம். பிறகு அழகு அப்பா வேலை விட்டு வரும் போது தூரத்தில் எக்ஸெல் சவுண்ட் கேட்டாலே எந்திரிச்சு நின்னுருவான், மண்டையனுக்கு ரெண்டு கடலச்ச கொடுத்துட்டு தான் வீட்டுக்குள்ளே வருவார் அழகு அப்பா

நைட் ஷிப்ட் விட்டு வந்தா கூட, கரெக்ட்டா எந்திருச்சு நிப்பான் மண்டையன். அந்த நேரத்திலும் அவனுக்கு கடலச்ச கொடுத்துட்டு தான் வீட்டுக்குள்ள வருவார்.  

அழகுக்கு பத்து வயசு ஆகும்போது மண்டையனுக்கும் கிட்டத்தட்ட பத்து வயசு ஆயிருச்சு. அழகுவ விட உயரமா வளந்துருந்தான் மண்டையன். வீட்டு ஆளுங்கள தவித்து யாரப் பார்த்தாலும் தலையை சிலுப்பிகிட்டுத் திரிஞ்சான்

பத்தாததுக்கு ஊர்ல ஒரு கிடேரிய விடாம ரோமியோ மாதிரி துரத்திக்கிட்டு திரிஞ்சான். அழகு அப்பாவிடம் ஆளாளுக்கு முறையீடும் யோசனையுமாய் சொன்னபடி, 

மண்டையனுக்கு காயடிச்சு உழவுல போட்டுப் பழக்குவது என்று முடிவானது

அழகுக்கு இது எதுவும் புரியவில்லை. ஒரு நல்ல நாள் பார்த்து மண்டையனை காயடிக்கக் கூட்டி போனார்கள். ‘நானும் வருவேன்’ என்ற அழகுவை, ‘வர வேண்டாம்’ என்று சொல்லி விட்டார் அவன் அப்பா

அழுது கொண்டே வீட்டுக்குள் வந்தவன் “போ நாளைல இருந்து நான் பாலு கொண்டு போக மாட்டேன்” என்று அவன் அம்மாவிடம் முறைத்தான். 

விடியக்காலை மண்டையனை கூட்டிக்கிட்டு போன அப்பா, மதியம் போல வந்து மண்டையனை கட்டுத்தரையில் கட்டி நல்லா கடலைப் புண்ணாக்கும் தவிடும் கலந்த தண்ணியைக் காட்டி குடிக்க வைத்து விட்டு, அவரும் வீட்டுக்குள் வந்து கஞ்சி குடிக்க உக்காந்து விட்டார்

ஓடிப் போய் மண்டையனைப் பார்த்த அழகுக்கு மண்டையன் ஏன் சோர்ந்து போய் படுத்துருக்கான்னு புரியல. கண்களில் தாரையாய் தண்ணீர்க் கோடுகள் தெரிந்தன. 

ஓடிப் போய் அதன் தலையை கட்டிக் கொண்டு கண்ணீரை துடைத்து “ஏன்டா அழகுற?” என்றான். மண்டையனுக்கு புரிந்தது போல, ஆனால் பதில் சொல்ல தெரியவில்லை

நாலு காலையும் பரப்பிக் கொண்டு படுத்துக் கிடந்தான் மண்டையன். விரைப்பை சுருங்கிப் போய் எண்ணெய் தடவிக் கிடந்தது. ஆனால் அவன் வலி அழகுக்கு புரியவில்லை.  

நாட்கள் ஓடியது, மண்டையன் வலி குறைந்து பழையபடி ஆகி விட்டான். ஆனால் முன்பு இருந்த வேகம், யாரைப் பார்த்தாலும் தலையைச் சிலுப்பும் கோவம் இல்லை. தெருக்கிடேரிகளுக்கெல்லாம் துளிர் விட்டுப் போய், மண்டையன் முன் குத்தாட்டம் போட்டன. 

மண்டையானால் ஒன்றும் செய்ய முடியவில்லை. இதையெல்லாம் கவனித்த அழகு மண்டையன் திருந்தி விட்டதாக நினைத்துக் கொண்டான்

ஆவணி மாசம் வந்து முதல் மழை பேஞ்சதும் ஒரு நல்ல நாளாகப் பார்த்து மண்டையனுக்குத் தோதாக ஒரு பங்காளி வீட்டு காளையை சேர்த்து, ஏரில் பூட்டி உழவுக்குத் தயாராக நின்றான் மண்டையன்

அழகு தான் ஏரைப் பிடித்து முடிந்த மட்டும் அதை நிலத்தில் அழுத்தி “ஹேய்ய்” என்று தொட்டான் மண்டையனை. அன்று ஆரம்பித்த மண்டையனின் பயிற்சி, அப்பசி மாசம் நடவு காலம் வரும் போது ஒரு தேர்ந்த உழவு மாடாக மாறியிருந்தான். 

தை மாசம் அறுப்பெல்லாம் முடிந்து புனையல் எல்லாம் முடிஞ்சு வைக்கோல் வீட்டுக்கு வந்திருந்தது. பள்ளி முடிந்து வீட்டுக்குள் வந்த அழகு, உள்ளே மாமா வந்திருப்பதைப் பார்த்தான்.

“மாமா” என்று கூப்பிட்டவன், அவர் கொண்டு வரும் தேங்கா பிஸ்கட்டை தேட ஆரம்பித்தான். தேடி எடுத்து அதில் பாதியை தீர்த்தவன் ரெண்டு பிஸ்கட்டை எடுத்து மறக்காமல் மண்டையனுக்கும் கொடுத்தான். 

கொடுத்து விட்டு வீட்டுக்குள் வந்தவன் காதில் விழுந்தது அந்தச் செய்தி. மாமாவுக்கு சொந்தமா ஒரு கவுல் இருக்கு, அதுல ட்ராக்டர் உழுக முடியாத இடத்துல, அவரு வீட்ல உள்ள ஒரு காளையோட சேர்த்து உழுக, மண்டையன ஓட்டிட்டுப் போக வந்துருக்காரு 

அப்பாவும் சரின்னு சொல்லிட்டாரு, இதைக் கேட்டதும் அழகு அழுது கொண்டே, “அப்பா மண்டையன ஓட்டிட்டு போக வேண்டாம்ப்பா” என்றான். 

அவனை முறைத்த அப்பா ஒன்றும் சொல்லவில்லை, முடிவில் மாமா கையேடு மண்டையனை ஓட்டிக் கொண்டு போய் விட்டார்.  

இது நடந்து விளையாட்டு போல இரண்டு வருடம் ஓடி விட்டது. இந்த இரண்டு வருடத்தில்,  அழகுவும் மாமா வீட்டுக்கு போகும் போதெல்லாம் கவுலுக்குப் போய் மண்டையனைப் பார்த்துக் கொஞ்சுவான். 

அழகுவை பார்த்ததுமே ‘கடலச்சு எங்க?’ன்னு கேக்குற மாதிரி மண்டையன் தலையைத் தலையை மேலே தூக்குவான். அழகுவும் டவுசர் பையில் கைவிட்டு பிசுபிசுத்த கடலச்சை எடுத்து மண்டையனுக்கு ஊட்டுவான். 

கடலச்சை திண்ணு முடிச்ச மண்டையன், அது பத்தாதுன்னு அழகு கையில் உள்ள பிசுபிசுப்பை நாக்கை வைத்து நக்குவான். அழகும் கையை எடுக்காமல் அதுக்கு கையைக் கொடுத்து மண்டையன் நாக்கின் சொரசொரப்பை அனுபவிப்பான். 

இப்படிப் போய்க் கொண்டிருந்த நேரத்தில் தான், நல்ல நேரமா கெட்ட நேரமா என்று தெரியவில்லை, அழகு அப்பாவிற்கும் அவன் மாமா வீட்டிற்கும் ஒரு சின்ன மனஸ்தாபம் வந்து, இதோ நாளை மண்டையனை திரும்ப வீட்டிற்கு ஓட்டி வருவது என்று முடிவானது. 

மாமா வீட்டோடு பிரச்னை என்பதையெல்லாம் உணர அழகுக்கு வயதில்லை, மண்டையன் திரும்ப வருவதே அவனுக்கு பெரிய நிம்மதியாக இருந்தது

வழக்கத்தை விட சீக்கிரம் எழுந்தவன், வீடுகளுக்கு பாலெல்லாம் கொடுத்து முடித்து விட்டு அப்பாவோடு கிளம்பத் தயாரானான். வரும் போது நடந்தே கூட்டி வருவதால், பஸ்ஸில் போனார்கள். 

பன்னண்டு கிலோ மீட்டர் இருக்கும் மாமா ஊரு, வரும் போது மண்டையனை நடக்க விட்டு காட்டு வழியே குறுக்கே நடந்தால், ரெண்டு கிலோ மீட்டர் குறையும். போகும் போது பெட்டிக் கடையில் மறக்காமல் கடலச்சை வாங்கிக் கொண்டான் அழகு

அழகுவோட மாமா வீட்டிற்கு போனதுமே அவன் அத்தை தான் கூப்பிட்டார்கள், மாமா இல்லை. மண்டையனை தயாராக குளிப்பாட்டி வெளியே கட்டியிருந்தார்கள்

அழகு அப்பா கையோடு கயறு கொண்டு போயிருந்தார். மண்டையன் கழுத்தில் இருந்த கயிறை அறுத்து அங்கேயே போட்டுவிட்டு, தான் கொண்டு போன கயிரைக் கட்டி புடி கயிறை மாற்றி விறுவிறுவென்று நடக்க ஆரம்பித்தார்

அழகு மண்டையனுக்கு முன்னாடி ஓடி கடலச்சை அதுக்கு நீட்டி கொண்டே வந்தான். மண்டையனும் நம்ம வீட்டுக்கு போகிறோம் என்ற சந்தோஷத்தில், வேகமாக நடந்தான். 

காட்டு வழி ஆரம்பம் ஆனதும், கயிறை அழகு வாங்கிக் கொண்டு மண்டயனோடு நடக்க ஆரம்பித்து, காலத்தில் வீடு வந்தார்கள். 

அழகுவின் அம்மா மண்டையனுக்கு ஆரத்தி காமித்து ஊத்தி உள்ளே விட்டார்கள், மண்டையனும் வீடு வந்த சந்தோஷத்தில் தண்ணியைக் குடித்து விட்டு நிம்மதியாய் படுத்தான். 

இப்படி அழகுவிற்கு கடலச்சும், சந்தோஷமுமாய் மண்டயனோடு ஒரு ஆறு மாதம் ஓடியிருக்கும். மீண்டும் ஒரு இடிச் செய்தி கேள்விப்பட்டான். அழகு அப்பாவின் மில்லில் ஸ்ட்ரைக் நடப்பதால் ஒரு மாதமாக சம்பளம் இல்லை, ஏதோ அம்மாவின் பால் காசின் சேமிப்பை வைத்து குடும்பம் ஓட்ட முடிகிறது

இந்த நேரத்தில், அக்கா பேச்சியை கல்லூரியில் சேர்க்க பணம் வேண்டும் என்ற போது, மண்டையனை விற்பது என்று முடிவு செய்து விட்டார்கள். அதிகமான டிராக்டர் பயன்பாட்டினாலும், ஒரு மாட்டுக்கு இப்போதைக்கு ஜோடி சேர்க்க முடியாததாலும், பணத் தேவையை சமாளிக்க இந்த முடிவை எடுத்து விட்டார்கள்

அழகு எவ்வளவோ மன்றாடிப் பார்த்தான். 

பேச்சி கூட, “அப்பா நான் படிக்கவே இல்லப்பா எனக்காக மண்டையன விக்க வேணாம்” என்று சொல்லிப் பார்த்தாள்

ஆனால் ‘சிறுபிள்ளை சொல் அம்பலம் ஏறாது’ என்பது போல, அழகுவின் அப்பா தன் முடிவில் இருந்து மாறவேயில்லை.  

அழகுவிற்கும் மண்டையனுக்குமான அந்த மோசமான நாளும் வந்தது.  ஒரு விடிகாலையிலே அழகு வீடுகளுக்கு பால் ஊற்றி விட்டு வரும் போது, வீட்டில் இரண்டு பேர் புதிதாக இருந்தார்கள். 

அவர்கள் அழகு அம்மா கொடுத்த காப்பியைக் குடித்து விட்டு அப்பா கையில் பணத்தைக் கொடுத்து “எண்ணிப் பார்த்துக்கங்க” என்றார்கள். 

அழகுவின் அப்பா மவுனமாக பணத்தை வாங்கி, அதை அழகு அம்மாவிடம் கொடுத்தார். 

அழகு அம்மா அதை எண்ணிப் பார்த்து விட்டு, ‘சரியாயிருக்கு’ என்ற அடையாளமாக அப்பாவைப் பார்த்து லேசாகத் தலையசைக்க, “அப்ப சரி, இன்னைக்கு கிழக்க சூலம், மேக்க பார்த்து நின்னு கையாள புடிச்சு கொடுங்க” என்றார்கள். 

அழகுவின் அப்பா அதே போல மண்டையன அவுத்து புடிச்சுக் கொடுக்க, மண்டையன் ஒன்றும் புரியாமல் சோம்பல் முறித்தான்.  

மண்டையனை வாங்க வந்திருந்தவர்கள் அவன் கழுத்தில் இருந்த கயிறை அறுத்து கையேடு, கொண்டு வந்திருந்த கயிறை அவன் கழுத்தில் கட்டி பெரிய புடி கவுறை அதில் இணைந்தார்கள்

“சரி அப்ப நாங்க கிளம்புறோம்” என்று அவர்கள் மண்டையனை கூட்டிக் கொண்டு கட்டுத்தரை வாசல் தாண்டும்போது 

‘நீங்க வரலையா?’ என்பது போல அழகுவையும் அவன் அப்பாவையும் பார்த்தான் மண்டையன்

“கொஞ்சம் இருங்க” என்ற அழகு, வேகமாக ஓடிப் போய், வீட்டில் டப்பாவில் இருந்த மொத்த கடலச்சையும் எடுத்து வந்து மண்டையனுக்கு ஊட்டினான்

அது திண்ணு முடித்ததும் அழகுவின் அம்மா, மண்டையனுக்கு நெட்டி முறித்து முத்தம் கொடுத்து விட்டு, முந்தானையால் வாயை பொத்திக் கொண்டாள் அழுவது தெரியாமல் இருக்க

தன் சின்ன தம்பியை பிரிய மனமில்லாமல், பேச்சியும் போய் கட்டிக் கொண்டு முத்தம் கொடுத்தாள் 

இனி நேரமில்லை என்பது போல வந்தவர்கள் மண்டையனைக் கூட்டிக் கொண்டு நடக்க ஆரம்பித்தார்கள்.  கொஞ்ச தூரம் அவர்கள் பின்னாடியே போனான் அழகு

மண்டையன் அவனை திரும்பித் திரும்பிப் பார்த்து, ‘அண்ணன் கடலச்சோட வந்து நம்மள திரும்ப வீட்டுக்கு கூட்டிட்டு வர வருவான்’ என்ற நம்பிக்கையில் தலையத் தூக்கி பார்த்துக் கொண்டே போனான்

பார்த்துக் கொண்டே நின்ற அழகு, வீட்டுக்கு வந்தான். அறுத்துப் போட்ட மண்டையனின் கழுத்துக் கவுறும், புடிகவுறும் கட்டுத்தரை வாரத்தில் தொங்கியது. 

மண்டையனைக் கட்டும் முழக்கம்பு ‘இனி மண்டையன் திரும்ப வர மாட்டான்’ என்ற வெறுமையைச் சுமந்து கொண்டு நின்றது, அழகுவை போலவே !

‘சஹானா’ இணைய இதழின் ‘சிறுகதை விமர்சனப் போட்டி’ யில் கலந்து கொண்டு பரிசு வெல்லும் வாய்ப்பு. போட்டி விவரங்கள் அறிய, இங்கு கிளிக் செய்யுங்கள்

(முற்றும்)

#ads – Deals in Amazon👇

#ads தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇

      

        

‘சஹானா’ சிறுகதைப் போட்டியில் பங்குபெறும் மற்ற கதைகளை வாசிக்க இணைப்பு இதோ – https://sahanamag.com/short-story-contest-2021-entries/

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!