in ,

டிர்ரக்கா (சிறுகதை) – ✍ உடுமலை கி. ராம்கணேஷ்

டிர்ரக்கா
இந்த போட்டிக்கான சிறப்புப் பரிசுகளை வழங்குபவர்கள், Madhura Boutique நிறுவனத்தார். அவர்களின் https://madhuraboutique.in/ என்ற தளத்திற்கு சென்று, உங்களுக்கோ அல்லது உங்களுக்கு வேண்டியவர்களுக்கு பரிசு தரவோ, தரமான புடவைகள், வெள்ளி நகைகள், ஜெர்மன் சில்வர் நகைகள் பெற்றுக் கொள்ளலாம்

சிறுகதைப் போட்டி 2021 (கதை எண் 58)

ரசுவுக்கு இரண்டாவது பிரசவம். தர்மாஸ்பத்திரியில் சேர்த்திருந்தார்கள். பாப்பாத்தியிடம் பேத்தி செண்பகத்தை பார்த்துக் கொள்ளச் சொல்லியிருந்தாள் ராமாத்தாள்.

‘சாமி எம்புள்ளக்கி நல்லபடியா சொகப்பிரசவம் ஆயிறனும்’ ஊரிலுள்ள தெய்வங்களையெல்லாம் வேண்டிக் கொண்டிருந்தாள். பிரசவ வலியில் துடித்தாள் சரசு

“நர்ஸம்மா! எம் புள்ளக்கி வலி வந்திருச்சும்மா. சீக்கிரம் வாங்கம்மா” கெஞ்சினாள் ராமாத்தாள்

“கவலைப்படாதம்மா. டாக்டரம்மா வந்துட்டாங்க. கூட்டிட்டு வர்றன்” வேகமாகச் சென்று டாக்டரை அழைத்து வந்தாள்.

ஏழு பிள்ளைகளைப் பெற்றிருந்தாலும், மகளின் வலி அவளை வருத்தியது. வெளியில் குட்டி போட்ட பூனையைப்போல் இங்குமங்குமாக அலைந்து கொண்டிருந்தாள்

“தாயும் கொழந்தியும் நல்லாயிருக்காங்க. பொம்பளப் புள்ள பொறந்திருக்கு’ என்றாள் நர்ஸ்

“சொகப்பிரசவமா?”

‘ஆமாம்’ எனத் தலையாட்டி விட்டு அடுத்த வேலையைப் பார்க்க நகர்ந்தாள் நர்ஸ்

சுகப்பிரசவம் என்பதால், மூன்று நாளில் வீட்டிற்கு அனுப்பி விட்டனர். வெளியூர் வேலைக்குச் சென்றிருந்த சுப்பிரமணி வந்து சேர்ந்தான். மகளைப் பார்த்துப் பார்ததுப் பூரித்தான்

தங்கையின் கையைத் தொட்டுப் பார்த்தாள் செண்பகம். அம்மாவின் அருகில் அமர்ந்து தங்கையைக் கொஞ்சிக் கொண்டேயிருந்தாள். வேணி எனப் பெயரிட்டனர்

மாதங்கள் உருண்டோட, குலதெய்வம் கோயிலுக்குச் சென்று மொட்டையடித்தனர். ஒன்றரையாண்டுகள் கடந்து விட்டன.  வேணியின் நிலை மற்ற பிள்ளைகளிடமிருந்து வேறுபடுவதாக நினைத்தாள் சரசு.

“ஏனுங்க! வேணிய கவனீச்சீங்களா?”

“எம்புள்ளக்கி என்னடி, அவ ராசாத்தி” எனச் சொல்லி சரசுவைப் பார்த்தான்

“இல்லீங்க, எனக்கென்னமோ பயமா இருக்குது. சரியா பேச மாட்டீங்கறா?. நடக்க மாட்டீங்கறா” சுப்பிரமணியிடம் சொன்னாள்

“உனக்கென்ன பைத்தியமாடி? சில கொழந்தீக ரெண்டு மூனு வயசு வரையில கூட பேசாது நடக்காது, பொறுத்துப் பேசட்டும் நடக்கட்டும்” என்றான்

சரசுவின் முகம் சரியாக இல்லை. சரசு சொன்னதிலிருந்து வேணியை கவனிக்க ஆரம்பித்தான் சுப்பிரமணி

‘அவள் சொன்னது உண்மை தான். இனியும் காலம் கடத்தக் கூடாது’ என நினைத்தபடி, ராமாத்தாளிடம் மூத்தவளை விட்டு விட்டு சரசுவுடன் வேணியை நகர்ப்புறத்திலிருக்கும் பிரபல குழந்தைகள் மருத்துவரிடம் காட்டுவதற்காக அழைத்துச் சென்றான்.

கணவனும் மனைவியும் மனதுக்குள் கடவுளை வேண்டிக் கொண்டே மருத்துவமனையை அடைந்தனர்

மருத்துவர் வேணியை பரிசோதனை செய்து பார்த்தார். சரசுவுக்கு மனம் அடித்துக் கொண்டிருந்தது.

“உங்க குழந்தை பொறக்குறதுக்கு முன்னாடி டாக்டர்கிட்ட போனீங்களா?. ஸ்கேன் எடுத்தீங்களா?”

சரசு இல்லையென்பதாகத் தலையாட்டினாள். பிரசவத்துக்கு மட்டும் மருத்துவமனை சென்றதைத் தெரிவித்தாள்.

“சுப்பிரமணி!  உங்களுக்கு எத்தனை குழந்தை இருக்கு?”

டாக்டர் இப்படிக் கேட்டதும் சுப்பிரமணிக்குப் பதற்றம் அதிகரித்தது.

“ரெண்டு கொழந்தீங்க” என்றான்

“மனசை திடப்படுத்திக்கங்க. இந்தக் குழந்தை நார்மலா இல்லை. மூளை வளர்ச்சி குறைவு, ஐம்பது சதவீதம் மட்டுந்தான்”

சொல்லி முடிக்கும் முன்பே சரசு ஒப்பாரி வைத்தாள். சுப்பிரமணியும் அழுதான். மருத்துவர் இருவரையும் சமாதானப்படுத்தினார்.

“முறையா ட்ரீட்மெண்ட் பாருங்க. காலப்போக்குல கொஞ்சங் கொஞ்சமா சரியாயிரும்” என்றார்.

வேணிக்கு என்ன நடக்குது என்பது புரியாமல் அம்மாவின் மடியிலிருந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள். மனதை திடப்படுத்திக் கொண்டு வீடு வந்து சேர்ந்தனர். 

ராமாத்தாள் செண்பகத்துடன் வீட்டிலிருந்தாள்

“ஐ அம்மா வந்தாச்சு” அம்மாவை ஓடிப்போய்க் கட்டிக்கொண்டாள் செண்பகம்.

தெருவில் அமைதியாக நடந்து வந்த சரசுவுக்கு, அம்மாவையும் மகளையும் பார்த்ததும் அடக்க முடியாமல் கண்ணீர் புறப்பட்டது. ஒப்பாரி வைத்தாள்.

“அழுகாதடி, என்னாச்சு?” சரசுவைப் பிடித்து உலுக்கினாள் ராமாத்தாள்.

“நம்ம வேணிக்கு மூளை வளர்ச்சி கொறவுனு சொல்லிட்டாங்கம்மா?” கட்டிக் கொண்டு அழுதாள். மாறி மாறி இருவரும் அழுதனர். சுப்பிரமணி சமாதானப்படுத்தினான்.

மருத்துவர் சொன்ன விவரங்களை முழுமையாக அம்மாவிடம் சொல்வி விட்டாள். சரசு இயல்பாக இல்லை. மகளைப் பற்றிய கவலை மனதில் அப்பிக் கொண்டது.

மாதம் தவறாமல் மருத்துவமனைக்குக் கூட்டிச் சென்றனர். பெரிதாக ஒரு பலனும் இல்லை. செண்பகம் பள்ளிக்கூடம் செல்கிறாள். சுப்பிரமணி முன்பை விட அதிகம் உழைக்கத் தொடங்கினான்

வேணியை பார்த்துக் கொள்ள ராமாத்தாள் இருந்தாள். சரசுவும் வேலைக்குச் செல்ல ஆரம்பித்தாள். 

ஊருக்குள் இருப்பவர்கள் துக்கம் விசாரிப்பது போல் வேணியைப் பற்றிக் கேட்டனர். சரசுவுக்கு அழுவதைத் தவிர வேறெதுவும் சொல்ல முடியவில்லை. அம்மாவிடம் சொல்லிக் கொண்டு அழுதாள்.

“அழுகாத, சாமி தொணையிருக்கு. ஒல வாய மூடுனாலும் ஊரு வாய மூட முடியாது. பேசினா பேசிட்டிப் போறாங்க” சமாதானப்படுத்தினாள்.

நான்கு வயதைக் கடந்தாள் வேணி. தெளிவாகப் பேசாவிட்டாலும் ஏதோ பேசுவாள். சரசு ஆறுதலடைந்தாள். ராமாத்தாளும் வேலைக்குச் செல்ல வேண்டிய தேவை அதிகரித்தது

வேணியைப் எதிர் வீட்டிலிருக்கும் மல்லிகா அக்காவின் வீட்டுத் திண்ணையில் படுக்க வைத்து விட்டு, ஒரு குண்டாவில் சாப்பாட்டைப் போட்டு வைத்து விட்டு சரசுவும் ராமாத்தாளும் வேலைக்குச் சென்று விடுவர்.

மல்லிகா வீட்டிலிருப்பவள். கணவர் அரசு வேலையில் இருந்தார். மூன்று பிள்ளைகளும் படித்துக் கொண்டிருந்தனர். சரசுவின் நிலைமையைப் புரிந்து கொண்டதால், வேணியை கவனித்துக் கொண்டாள்.

வேலையில்லாத சமயங்களில் வேணியிடம் பேச்சுக் கொடுப்பாள். நடக்க வைப்பாள். இப்படியாக நாட்கள் நகர்ந்து கொண்டிருந்தன.

பெரும்பாலும் வேணி சாப்பிடச் சாப்பிடத் தூங்கி விடுவாள். சிரிப்பாள். இப்போது ஓரளவு பேச ஆரம்பித்து விட்டாள். மல்லிகா அக்காவை “மல்லக்கா” என்பாள். சிலரின் பெயர்களை வேணி தெரிந்து வைத்திருந்தாள்.

இப்போது வேணி நடக்க ஆரம்பித்துவிட்டாள். சேட்டையும் ஆரம்பித்து விட்டது. பாட்டியிடம் சண்டைக் கட்டுவாள். கோபம் வந்தால் போட்டிருக்கின்ற ஆடைகளைக் கழற்றி வீசிவிடுவாள்.

வீட்டிற்குப் பக்கத்திலிருக்கும் கடையில் தின்பண்டங்கள் வாங்க நச்சரிப்பாள். தரவில்லையென்றால் தரையில் அமர்ந்து கைகைளை கீழே வைத்துத் தலையை டங்… டங் என்ற சத்தம் கேட்குமளவிற்கு அடித்துக் கொள்வாள். சரசுவுக்கு வேணியைச் சமாளிப்பது பெரும் சவாலாக இருந்தது.

வருடங்கள் உருண்டோடின. வேணிக்கு அடுத்த படியாக இரண்டு தம்பிகள் பிறந்தனர். பக்கத்து வீடுகளில் குழந்தைகள் இருந்தால், வேணி அங்கு தான் இருப்பாள்.

வீட்டில் ஒரு வேலையும் செய்யமாட்டாள். அடுத்தவர்களுக்கு எல்லாமும் செய்வாள். துணி துவைத்தால் அலசிக் கொடுப்பாள். குழந்தைகளுக்கும் வேணியென்றால் கொள்ளைப் பிரியம்.

எந்நேரமும் “டிர்… டிர்…” என்று ஒலியெழுப்புவாள். அதனால் குழந்தைகள் “டிர்’ரக்கா” என்று தான் அவளை கூப்பிடுவார்கள்.

வேணிக்குச் சந்தோசமாக இருக்கும். குழந்தைகள் பள்ளி செல்ல ஆரம்பித்தால் வேணியைக் கண்டுகொள்ள மாட்டார்கள். வேணியும் பிள்ளைகளுள்ள வேறு வீடுகளுக்குச் சென்று விடுவாள்.

குழந்தைகள் அடித்து விட்டால் அழுவாள். சில நேரங்களில் சற்று பெரிய குழந்தைகள் சீண்டினால், அடித்து விட்டு வீட்டுக்கு ஓடி விடுவாள். தான் அடித்த பிள்ளைகளின் வீட்டுக்கு, இரண்டு நாட்கள் கழித்து செல்வாள்.

“குழந்தையை ஏன் அடித்தாய்?” எனக் கேட்டால், புகார் சொல்லுவாள். திட்டினாலும் கவலைப்பட மாட்டாள்.  இப்போது வேணி பருவமடைந்துவிட்டாள். சரசுவுக்கு கவலை அதிகரித்து விட்டது.

சிலநாட்கள் வீட்டிலிருந்து பார்த்துக் கொள்வாள். அடுத்தவர்கள் வீடுகளுக்குச் செல்லக் கூடாத நாட்களை வேணி அறிந்திருந்தாள்

பக்கத்து வீட்டிற்கு யாராவது உறவினர் வந்திருந்தால் போய் விசாரிப்பாள்.

“நல்லாக்கியா? சாப்டியா?” எனக் கேட்பாள். கட்டிப்பிடித்துக் கொள்வாள். ஒரு சிலர் ஏற்றுக்கொள்வர். சிலர் முகம் சுளிப்பர்.

கள்ளங்கபடமில்லாதவள் வேணி என்பது எல்லோருக்கும் தெரியும். வேணியிடம் யாராவது வம்பிழுத்தால் கெட்ட வார்த்தையில் பேசிவிட்டு வீட்டுக்கு ஓடிவிடுவாள்.

கேலியாக வேணியிடம் பேசுபவர்கள் நிறைய பேர் இருந்தனர். பெண் பிள்ளையாக இருப்பதால், சரசு கவனமாக இருப்பாள். வேணிக்கு அடி கொடுத்தும் சில நேரம் கண்டித்தும் வந்தனர்.

வேணிக்கு டிவி பார்ப்பது ரொம்பவும் பிடிக்கும். செல்போனில் யாராவது பேசினால் தானும் பேச வேண்டுமெனக் கேட்பாள். கெஞ்சுவாள். சில வார்த்தைகள் பேசி விட்டுக் கொடுத்து விடுவாள்.

எதிர்முனையில் பேசுபவர்களைப் பற்றி அவளுக்குக் கவலையில்லை. மகிழ்ச்சியாகச் சிரிப்பாள். வெற்றிலை, பாக்கு , புகையிலை போடுவாள். இப்பொழுது தின்பண்டங்களைக் கூட அவள் விரும்புவதில்லை.

வாசல் கூட்டுதல், துணி துவைத்தல், பாத்திரம் கழுவுதல் உள்ளிட்ட சில வேலைகளைத் தன் வீட்டிலும் செய்து கொடுக்கிறாள். வேணியை விட சிறு பிள்ளைகள் “போடி” என்று சொல்லி விட்டால் அவளால் தாங்கிக் கொள்ள முடியாது.

இரவு ஒன்றிரண்டு மணிக்கெல்லாம் சாப்பிடும் பழக்கமும் இருக்கிறது. அந்த ஊரில் காலை 4.00 மணிக்கெல்லாம் டீக்கடையைத் திறந்து விடுவார்கள். கடைக்காரர் ஒரு முறை வேணியை அந்த நேரத்தில் அங்கு பார்த்து பயந்த சம்பவமும் நடந்திருக்கின்றது.

வேணிக்கு நாய்கள் என்றால் கொள்ளைப் பிரியம். தெருவில் குட்டி நாய்களைப் பார்த்தால் வீட்டுக்கு தூக்கி வருவாள். நாய் வாயினுள் கை விடுவாள். பெரிய நாயாக இருந்தாலும் அவளுக்கு பயம் இல்லை. ஏனோ தெரியவில்லை.

பிறரைக் கடிக்கும் பெரிய நாய்கள் கூட வேணியை ஒன்றும் செய்வதில்லை. சாலையில் நாய் அடிபட்டு இறந்து போனால் அழுவாள்.  அதே போல் எவ்வளவு இருட்டு இருந்தாலும் பயப்பட மாட்டாள்

புதுத்துணி போட்டு விட்டால் வீடு வீடாகச் செல்வாள்

“துணி நல்லாக்கா?” எனக் கேட்பாள்.

“துணி எவ்வளவு?” என்று கேட்டால்

“அம்பருவா” என்பாள்

“எனக்குத் தர்றியா?” என்று கேட்டு விட்டால்

“குசுக்கு” என்று சொல்லி விட்டு ஓடி விடுவாள்

சரசு வெளியில் கிளம்பினால் தானும் உடன் வருவதாகச் சொல்லி அடம் பிடிப்பாள். வேணியை ஏமாற்றிச் செல்வது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. சில முறை பேருந்துக்குப் பின் ஓடிய நிகழ்வுகளும் நடந்திருக்கின்றன.

காலையில் வீட்டு வேலையில் ஈடுபட்டிருக்கும் குழந்தைகளுள்ள பெண்களுக்கு உதவுவாள். குழந்தைகளை வெகு நேரம் வைத்திருப்பாள். யாராவது  வீட்டில் காலை ஆறுமணிக்கு மேல் தூங்கிக் கொண்டிருந்தால் கதவைத்தட்டி எழுப்பி விடுவாள்.

“வேலக்குப் போலியா? நீவு விட்டாச்சா?” எனக் கேட்பாள்.

காலையில் பெரியவர்கள் கண்டுகொள்ளவில்லை யெனினும் குழந்தைகளின் உச்சிக்கு எண்ணெய் வைத்து விடச் சொல்வாள். அவர்கள் பொருட்படுத்தவில்லையென்றால் தானாகவே வீட்டுக்குள் சென்று எண்ணெய் பாட்டிலைத் தேடி எடுத்து வந்து தேய்த்து விடுவாள்.

குழந்தைளுடன் வெளியூர் கிளம்பியவர்களை பேருந்து நிறுத்தம் வரை சென்று வழியனுப்பி டாட்டா காட்டுவாள். அறிமுகமில்லாதவர்களுக்கும்  டாட்டா காட்டுவாள். அவர்களும் திருப்பி டாட்டா சொன்னால், பெருமையாகச் சிரித்துக் கொண்டு வருவாள்.   

வேணியின் அக்கா செண்பகத்துக்கு திருமணமானது. வேணிக்கு சந்தோசம்

“செம்பாக்கு கலியாணம்” எனச் சொல்லிச் சிரிப்பாள்

யாராவது “உனக்கெப்ப கல்யாணம்?” எனக் கேட்டால், வெட்கப்பட்டு ஓடுவாள். சில சினிமாப் பாடல்களும் வேணிக்குத் தெரிந்திருந்தது. வேணியைப் பாடச் சொன்னால் பாடிக் காட்டுவாள்.

“ஒரு பாட்டுப் பாடு” என்றால்

“வாதி வாதி நாத்துத் தத்தை வசமா வந்து மாத்தித் திட்ட. ர.ர. ரட்டார… ர. ர. ரட்டார…” என ஓசையுடன் பாடுவாள். டிவியில் போடும் பாடல்களுக்கு குழந்தைகள்  ஆடினால் இவளும்  சேர்ந்து ஆடுவாள்.

வேணி சட்டை பாவாடை போட்டிருப்பாள். வெளியூருக்குப் போக சில சுடிதார்கள் அவளிடம் இருந்தன. சட்டை ஜோப்புக்குள் வெற்றிலை, பாக்கு உள்ளிட்டவற்றை வைத்திருப்பாள். செலவு செய்ய சண்டை கட்டி காசு வாங்கி வைத்திருப்பாள்.

காலை நான்கரை மணிக்கெல்லாம் டீக்கடைக்கு வந்து விடுவாள். அங்கு உலக அரசியல் வரை பலபேர் பேசிக் கொண்டிருப்பார்கள். சற்று நேரம் அவர்கள் பேசுவதை நின்று வேடிக்கை பார்ப்பாள்.

ஒரு பாத்திரத்தில்  டீ வாங்குவாள். வீட்டிற்குச் சென்று குடித்து விட்டு, பிறகு தான் ஊருக்கு உழைக்கச் செல்வாள். வேணி பயப்படுவது அப்பாவுக்கு மட்டும் தான்.

தம்பிகள் வளர்ந்து விட்டனர். “யார் வீட்டுக்கும் போகக் கூடாது” என்று மிரட்டி வீட்டுக்கு அனுப்புவார்கள். அவர்கள் செல்லும் வரை வீட்டுக்குப் போவது போல் பாவனை காட்டி விட்டு, அவளுக்குப் பிடித்த வீடுகளுக்குச் சென்று விடுவாள்.

யார் வீட்டிலாவது திருமண ஏற்பாடுகள் நடந்தால், உடனே வந்து மல்லிகாவிடம் சொல்லி விடுவாள். கால ஓட்டத்தில் எல்லாமும் மாறி விட்டது. எல்லாரும் மாறி விட்டார்கள். அவள் மட்டும் மாறவேயில்லை.

சரசுவுக்கு தன் காலத்திற்குப் பின் மகளின் நிலை எப்படியிருக்கப் போகிறதோ? என்ற கவலை உருக்கிக் கொண்டிருக்கிறது.

“கடவுளே நா சாகறதுக்குல்ல எம் புள்ளய கூப்புட்டுக்க” மன ரணத்தோடு எந்நேரமும் வேண்டிக் கொண்டிருக்கிறாள்.  

இப்பொழுதும் விவரம் தெரியாத பிள்ளைகளுக்கு வேணியைக் கண்டால் மிகவும் பிடிக்கும்.

குழந்தைகளுக்கான உலகத்தில் முடிசூடா ராணியாக எதைப் பற்றிய கவலையும் இல்லாமல் “டிர்ரக்கா”வாக வாழ்ந்து கொண்டிருக்கிறாள் வேணி

‘சஹானா’ இணைய இதழின் ‘சிறுகதை விமர்சனப் போட்டி’ யில் கலந்து கொண்டு பரிசு வெல்லும் வாய்ப்பு. போட்டி விவரங்கள் அறிய, இங்கு கிளிக் செய்யுங்கள்

(முற்றும்)

#ads – Deals in Amazon👇

#ads தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇

      

        

‘சஹானா’ சிறுகதைப் போட்டியில் பங்குபெறும் மற்ற கதைகளை வாசிக்க இணைப்பு இதோ – https://sahanamag.com/short-story-contest-2021-entries/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    மண்டையன் (சிறுகதை) – ✍ வைகை, சிங்கப்பூர்

    விசிட் விசா (சிறுகதை) – ✍கார்த்திக் கிருபாகரன்