in ,

மனம் தொலைந்த மலர்க்காடு (சிறுகதை) – ✍ சுஷ்மிதா கோபாலகிருஷ்ணன், வேலூர், குடியாத்தம்

மனம் தொலைந்த மலர்க்காடு
இந்த போட்டிக்கான சிறப்புப் பரிசுகளை வழங்குபவர்கள், Madhura Boutique நிறுவனத்தார். அவர்களின் https://madhuraboutique.in/ என்ற தளத்திற்கு சென்று, உங்களுக்கோ அல்லது உங்களுக்கு வேண்டியவர்களுக்கு பரிசு தரவோ, தரமான புடவைகள், வெள்ளி நகைகள், ஜெர்மன் சில்வர் நகைகள் பெற்றுக் கொள்ளலாம்

சிறுகதைப் போட்டி 2021 (கதை எண் 22)

தாமரை மலர்கள் வாவியில் படந்திருப்பது போல வெண்மேகங்கள் வானத்தாய் மடியில் தவழ்ந்து கொண்டிருந்தன. மெல்லிசை தென்றலானது மெல்லிழை போர்வையைப்  மேகங்கள் மேல் போர்த்தியவாறே நகர்ந்து சென்றன.

ஆதவநாயகி, தன் நாயகனுக்கு விடைகொடுப்பதன் அடையாளமாய்த் தலையைச் சாய்த்துக் கொள்கிற நேரமது. இருட்பகைவன் மேற்கில் மெதுவாக மறைந்து கொண்டிருந்தான்.

எல்லோன் இல்லம் சென்று விட்டான் என்பதை அறிந்த அல்லான் (சந்திரன்), தன் விண்மீன் கூட்டத்திற்கு, வானத்தை அலங்கரிக்குமாறு உத்தரவிட்டான்

இவ்வாறு ஒற்றைச் சூரியன் மறைந்து ஆங்காங்கு நட்சத்திரம் உதிக்கும் காட்சியைத் தன் பூந்தோட்டத்தில் உட்கார்ந்தபடி, ரசித்துக் கொண்டிருந்தார் கிருஷ்ணன்.

மலர்க்காட்டில் மனத்தைத் தொலைத்தவர்க்கு, தன் தேகமானது குளிர்க்காற்றில் நடுங்குவது, மனைவி வள்ளி சொல்லித் தான் தெரிந்தது

“என்னங்க… இதுங்க கூட பேசுறதுக்கு என் கூட பேசுனா ஒரு பேச்சு தொணையா இருக்கும்ல” என்றாள் சிரித்த முகத்தோடு

கிருஷ்ணன் வள்ளியை நோக்கி, “நீயும் வந்துட்டியா.. இங்க வந்து இந்த நட்சத்திரப் பூக்களைப் பாரேன். அழகா இருக்கல?” என்று ஆர்வம் அடங்காமல் கேட்டார்.

“நம்மள பாக்க, பொண்ணும் மாப்பிள்ளையும் பசங்கள கூட்டிட்டு வந்திருக்காங்க. பேரன், பேத்திங்க கூட இருக்காம, இங்க வந்து என்ன பண்றீங்க?” என்று அதட்டி, அங்கிருந்து கைகளைப் பிடித்து இழுத்துச் சென்றாள்

அவ்வாறு செல்கையில், கிருஷ்ணனின் கையிலிருந்து காகிதம் போல் ஏதோ ஒன்று நழுவிக் கீழே விழுந்தது. வள்ளி அதைக் கவனிக்கவில்லை என்றாலும், கிருஷ்ணனின் கண்களிரண்டும் அதை நோக்கியவாறே நகர்ந்தன.

“ஒரு வழியா இவர.. கூட்டிட்டு வந்துட்டேன்” என்று வள்ளி தன் மருமகன் மாறனிடம் சொல்லிவிட்டு, கிருஷ்ணனைக் கோபத்தோடு பார்த்தாள்

அந்தப் பார்வையைச் சிறிதும் இலட்சியம் செய்யாதவராக, “பா.. மாறா எப்படி பா இருக்க? என் பொண்ணு எங்க? என் செல்லங்களெல்லாம் எங்க?” என்று பாசத்தோடு வினவினார்

“நல்லா இருக்கேன் மாமா..! அவ பைய்யெல்லாம் எடுத்து வைக்க போனா..” என்று சொல்லியவாறு, “பட்டு…இங்க வாங்க.! தாத்தா வந்துட்டாரு பாருங்க” என்று குழந்தைகளைக் கூப்பிட்டான். 

குரல் கேட்டவுடன் அறையில் இருந்து, சிட்டுக் குருவிகளாய்ப் பறந்து வந்தனர் கனியும் வெற்றியும்.

அவர்கள் இருவரையும் ஆரத்தழுவிக் கொண்ட கிருஷ்ணன், “எப்படி இருக்கீங்க என் செல்லங்களா? இந்த முறை தாத்தா உங்களுக்காக புதுசா ஒன்னு வாங்கி வெச்சிருக்கேனே” என்று மழலை போலவே பேசினார்

கனிமொழி கொஞ்சம் ஆவல் மிகுதியானவளாய், “தாத்தா.. எனக்கு இப்போவே சொல்லுங்களேன்” என்று அடம் பிடித்தாள்.

இதையெல்லாம் கவனித்தவாறு கிருஷ்ணனின் மகள் மயில்மொழி அங்கு வந்தாள். அனைவரும் சில மணி நேரம் ஒன்றாய்ப் பேசி தங்கள் நினைவுகளில் நேரம் கழித்தனர்.

மணி இரவு 7.20 இருக்கும். வள்ளியும் மயில்மொழியும் சமைக்கச் சென்று விட்டார்கள்.  மாறன், தாழ்வாரத்துத் தூணில் சாய்ந்தபடி தன் மாமனார் மழலையோடு விளையாடுவதைப் பார்த்து தன்னையும் அறியாமல் சிந்தனையில் ஆழ்ந்தான். 

“கடவுளுக்கு அருகில் இருப்பவர்கள் குழந்தைகளும் முதியவர்களும் மட்டுமே. அதில் ஒரு தெய்வீகத் தன்மையைத் தரிசிக்க முடிகிறது” என்ற நா. முத்துக்குமாரின் வரிகள் அவன் நினைவில் நிழலாடிக் கொண்டிருந்தன. அதே நினைவுகளோடு தன் அறைக்குச் சென்று இமைக் கதவுகளை மூடினான்.

அங்கே சமையல்காட்டில் வள்ளியும் மயிலும் பேசியபடியே இரவு உணவு செய்து கொண்டிருந்தனர்.

மயில் தன் அம்மாவிடம், “அப்பா நல்லார்காங்களா? மாத்திரை மருந்துலாம் சரியா எடுத்துக்குறாரா? இப்போவும் தோட்டத்திலே இருக்காரா?” என்று கேட்டாள். 

தோட்டத்தைப் பற்றி பேச்சை எடுத்தவுடன் வள்ளியின் முகம் லேசாக வாட்டமுற்றது. கண்களில் ஈரம் மேலிட்டது

வருத்தம் தோய்ந்த குரலில், “நல்லா தான்ம்மா இருக்காரு. நீங்களெல்லாம் இல்லன்னா தோட்டமேதா கதின்னு கெடப்பாரு” என்று சொல்லி கண்களைத் துடைத்தாள்.

மேலும், “அந்தத் தோட்டத்தில அப்டி என்னதா இருக்குனு ஒரு நாள் காலைல அவர் பின்னாடியே போனே. திரும்பிப் பாக்க போறாருன்னு மறைஞ்சி நின்னே. அந்த ஒரு நிமிஷம் தா… அதுக்கப்றோம் அவர் அங்க வந்த சுவடே இல்ல. எல்லா இடமும் தேடுன. இப்போ புதுசா விதச்ச பொன் அரளியும் நந்தியாவட்டமு வேற  காடு மாறி வளர்ந்துடுச்சு. சரின்னு ஜன்னல் வழியா  தோட்டம் தெரியுற ரூம்ல உட்காந்து கவனிச்சேன். நான் எங்க தேடுனனொ அங்கேர்ந்து சாதரணமா நடந்து வந்தாரு உங்கப்பா” என்று அதிர்ச்சியோடு கூறினாள்.

அதற்குப் பிறகும் எதையோ கூற வாய் திறந்தவள், அப்படியே அந்த வார்த்தைகளைத் தொண்டைக்குள் அமுக்கி, அழுது கொண்டே இருக்கலானாள். தன் அம்மா வள்ளி, மனம் குமுறி அழுவதைப் பார்த்த மயிலின் விழிகளும் குளம் போல் தேங்கி, அதில்  கண்ணீர் வழிந்தும் நெளிந்தும் இருந்தன.

இமைக் கதவுகளை அடைத்த மாறன், வேலை களைப்பில் அப்படியே உறங்கிப் போனான். சிறிது நேரதிற்கு அந்த அறை அமைதியே உருவாக இருந்தது.

பிறகு, வெளியே வானம் இருட்டிக் கொண்டு வந்து, அஞ்சனை மைந்தனின் தந்தையை அழைத்ததும், பூமியில் உள்ள அசையும் பொருட்கள் யாவும் அவன் வசம் போல் ஆடத் தொடங்கின.

மாறன் அடைக்க மறந்த ஜன்னல் கதவுகளும் அதற்கு இசைந்தது போல் “படார்..! படார்..!” என்று அடித்துக் கொண்டன.

மாறன் பதற்றத்தோடு கண்களைத் திறந்து, ஜன்னல் கதவுகளை மூடினான். பிறகு என்ன தோன்றியதோ தெரியவில்லை. சிந்தை தவறியது போல, “மயிலு…மயிலு…” என்று பயத்தோடு வீல்லென்று கத்தினான்.

சமையல்காட்டில் தன் அம்மாவிற்கு ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்த மயிலுக்குத் தூக்கி வாரிப்போட்டது. கிருஷ்ணனும் குழந்தைகளும் கூட பதறிப் போய் அவர்களோடு மாறன் அறைக்கு வந்தனர்.

மயில், மாறனின் அருகில் சென்றமர்ந்து, முதுகைத் தடவி கொடுத்தவாறு “என்னங்க… தண்ணி குடிங்க முதல்ல” என்று ஆசுவாசப்படுத்தினாள்.

கனியும் வெற்றியும் பயந்து விட்டது அவர்கள் விழியிலேயே தெரிந்தது. குழந்தைகளை அழைத்துச் செல்லுமாறு வள்ளி தன் கணவன் கிருஷ்ணனிடம் சைகை காட்டினாள்.

அதைப் புரிந்து கொண்ட கிருஷ்ணன் குழந்தைகளோடு தாழ்வரத்திற்கு வந்தார். கனி அழுது கொண்டே, “அப்பாக்கு என்ன ஆச்சு?” என்று கேட்டு அடம் செய்தாள். கிருஷ்ணனுக்கு கூட அது பற்றி தெரியாது என்றாலும் சமாதானம் செய்ய முயற்சித்துக் கொண்டிருந்தார்.

மாறன் அறையில் திகில் அடைந்தது போல் மூவரும் உட்கார்ந்து கொண்டிருந்தனர். வெகு நாட்களாய் மாறனைத் தூக்கத்தில் பின்தொடர்ந்து கொண்டிருக்கிற கனவு

அந்தி மயங்கிய காரிருள் வேளையிலும் கூட அழைப்பில்லாமல் வந்து விட்டிருந்தது. அதே.. பயமூட்டும் காட்சி நிழல்..! மாறன் நெப்பு நிதானமின்று கனவைக் கூறினான்.

“மயிலு..! ஒரே கும்மிருட்டு. உங்கப்பா தோட்டத்துக்குப் போறாரு. பொன்னரளி மலரும் நந்தியாவட்டம் பூவும் காடு போல் வளர்ந்திருக்கு. அப்பா பின்னாலேயே நீயும் போற. ரகசியம் ரகசியம்னு ஒரு குரலின் ஒலி மெல்லிய சுவரத்தில் கேட்குது” என்று முடித்து, ஏதோ யோசனை வந்தவன் போல் தான் அடைத்த ஜன்னல் கதவைத் திறந்தான்.

அங்கே அந்தக் காட்சி அவனை மேலும் தடுமாறச் செய்தது. “மயிலு.. இது நம்ம தோட்டமா? இது வரிக்கும் எங்கேயோ யார் வீட்டுத் தோட்டமோனு நினைச்சேன். அப்போ.. இந்தக்கனவு என்கிட்ட என்னமோ சொல்ல வருது. எனக்கு பயமா இருக்கு” என்று புலம்பித் தீர்த்தான்.

இதைக் கேட்டுக் கொண்டிருந்த மயிலின் உடலெங்கும் வியர்வைப்பூ பூக்கத் தொடங்கி விட்டிருந்தது. அம்மா வள்ளி கூறியதை மனதில் இருத்தி கணவன் மாறன் கூறியதோடு ஒப்பிட்டுப் பார்த்தாள் மயில்மொழி.

தன் மாமனார் (மாறனின் அப்பா) இறக்கும் போது தன் கணவருக்கு இது போல் வேறொரு பயமூட்டும் கனவு வந்ததும், அந்தக் கனவு வந்த ஒரே வாரத்தில் அவர் இறப்பு நேர்ந்ததும் நினைவிற்கு வந்தது. மயில்மொழியின் அகத்தில் ஏற்பட்ட அதிர்ச்சி அனைத்தும் அவள் முகத்தில் வெளிப்பட்டது.

தாழ்வரத்தில் இருந்தபடியே கிருஷ்ணன் வள்ளியைக் கூப்பிட்டான். “மா.. கனி அழுவுது. எதுவா இருந்தாலும் அப்ரோம் பேசிக்கோங்க. குழந்தைய முதல்ல வந்து பாருங்க!” என்று சற்று கோபத்தோடு கூப்பிட்டார்.

வள்ளி விறுவிறுவென வந்து, சாப்பாடு இடும் இடத்தைச் சுத்தம் செய்து, தட்டு, சட்னி என அனைத்தையும் எடுத்து வைத்தாள். வள்ளி சென்ற ஓரிரு நிமிடங்களில் மயில்மொழி கூறிய ஆறுதலில் தேறியவனாய் மாறனும் சாப்பிட வந்தான்.

கனியைச் சமாதானப்படுத்தி சாப்பிட வைப்பதற்குள் மாறனுக்குப் போதும் போதும் என்றாகி விட்டது. சாப்பிடும் நடுவில், “அப்பா! நீங்க ஏன் கத்துனீங்க? இப்போ நீங்க சொல்லனா முருகர்கிட்ட சொல்லிடுவேன்” என்று மழலை கொஞ்ச தன் மகள் கண்டிப்பதை ஒரு தகப்பனாக மாறனும் ரசித்தான்.

அனைவரும் இரவு உணவு உண்டபின், வள்ளியை உறங்கச் சொல்லி விட்டு, மயில்மொழி சாமான்களைத் துலக்கிக் கொண்டிருந்தாள்.

தொலைகாட்சியில் ஏதோ ஒரு பாடல் ஒளிபரப்பு சேனலில் “உறவுகள் வந்து சேரும் நீங்கும் நீ தான் நிலையாய்.!” என்ற மதன் கார்கியின் பாடல் வரிகள்  ஒலித்துக் கொண்டிருந்தது

அது கிருஷ்ணனின் மனத்தை உலுக்கி விட்டதோ என்னவோ! உடனே ஒரு பேப்பரை எடுத்து ஏதோ எழுதி விட்டு அங்கிருந்து எழுந்து சென்றுவிட்டார்.

கனியைத் தோளில் சுமந்தவாறு நடந்து கொண்டிருந்த மாறனோ, இங்கு என்ன நடக்கிறது என்ற உணர்விழந்து தொலைகாட்சியில் மூழ்கியிருந்த வெற்றியோ கிருஷ்ணனின் செயலைக் கவனியவில்லை.

மயில்மொழி அங்கு வந்து, “அப்பா..அப்பா..!” என்று கூப்பிட்ட போது தான் இருவரும் அவரிருந்த இடத்தை விறுவிறுவென நோக்கினர். அங்கிருந்த பேப்பரை எடுத்து மயில் பரபரப்புடன் படித்தாள்.

அதில், “தனிமை எனும் உணர்வில், என் எழுத்துக்களோடு மட்டும் தான்… நான் என்னை உணர்கிறேன்” என்பதைப் படித்து முடித்த நொடி, பின்னாலே தோட்டக்கதவு காற்றில் படபடவென அடிக்கும் சத்தம் கேட்டது.  மயில் விரைந்து ஓடினாள்…

கிருஷ்ணன் தோட்டத்திற்குள் செல்லும் போது காற்று சுழன்று சுழன்று அடித்து மழையை வரவேற்பதற்குத் தயாராக இருந்தது.

தன் மகள் வந்த போது, வள்ளி தன்னை அழைத்துச் செல்கையில், விட்டுச் சென்ற காகிதம் அங்கு அசைந்து கொண்டிருக்க, அதை கிருஷ்ணன் கையிலெடுத்து ஒரு பொன்னரளி செடியில் செருகினார்.

சற்றுப் பொறுங்கள்..! அது காகிதமல்ல. காகிதத்தில் செய்யப்பட்ட பட்டாம்பூச்சி. இருட்டிக் கொண்டிருந்த இரவில் நட்சத்திரப்பூக்கள் போலவே அதுவும் மின்னி மின்னி மறைந்தன.

கிருஷ்ணன் மேலும் நடந்து சென்றார். அதாவது அந்தப் பட்டாம்பூச்சி எங்கெல்லாம் செடியில் செருகப்பட்டிருக்கிறதோ, அதை பாதையாய்க் கொண்டு கொடிகளின் நடுவில் நடந்து சென்றார். 

சில மணித்துளிகளுக்குப் பிறகு, அவர் அங்கு வந்ததற்கான எந்த அடையாளமுமின்றி தோட்டம் வெறிச்சோடி விட்டது. செடிகளின் நடுவே மறைந்த கிருஷ்ணன் நேரே ஒரு வீட்டிற்குச் சென்றார்.

அது…வீடா? இல்லை காடா? என்று தோன்றியது. வெறும் தென்னைக் கீற்றுகளால் வேயப்பட்ட கூரை என்று சொல்லலாம். வீட்டினுள் கீத்துகளுக்கு நடுவில் அலமாரி போல் அமைக்கப்பட்டிருந்தது. அதனுள் ஏராளமான புத்தக்கங்கள் புதைந்து கிடந்தன.

அங்கு அமர்வதற்கு ஒரு நாற்காலியும் அதன் எதிரே காகிதங்கள் சிதறிக் கிடக்க, ஒரு மேசையும் இருந்தது. அதே அறையின் மறுவோரத்தில் ஒரு பழைய வானொலி. ஓடுமோ இல்லை உடைந்து விடுமோ என்னும் அளவிற்கு தூசி படிந்திருந்தது.

 கிருஷ்ணன் நாற்காலியில் அமர்ந்து காகிதங்களைச் சரிசெய்தவாறு, “என்ன உங்களுக்கு ஆச்சு? ஏன் இப்படி பறக்கிறீங்க? என் பேச்ச கேக்காம என் பின்னாடியே வந்தா… அவ்ளோ தான் பாத்துக்கோங்க..!” என்று அதட்டலாகப் பேசினார்.

தனது மாமனார் பின்னாலேயே சென்று இதையெல்லாம் கவனித்த மாறனுக்கு இதயத்தின் “லப்-டப்” சத்தம் காதுகளைக் கிழித்துக் கொண்டு வெளியே கேட்பது போலிருந்தது.

பயம் ஆட்கொண்டதும் புத்தி தனக்கென்ன என்று உடலின் உணர்ச்சிகளை மனத்திடம் கொடுத்து விட்டு ஓய்வெடுத்துக் கொண்டது. மழையின் பொட்டுத் துளிகள் மாறனின் தேகத்தைச் சொட்டுச் சொட்டாய் நனைக்க தொடங்கியவுடன் உடலைச் சிலுப்பிக் கொண்டு அங்கிருந்து வேகமாய் ஓடினான்

வேலை செய்யாமல் தான் பார்த்த வானொலியிலிருந்து வந்த இரைச்சல் சத்தம் மட்டும் அவனைத் துரத்துவது போல் ஒலித்தது. மொட்டை மாடியில் தனக்காக காத்திருக்கும் மயில்மொழியிடம் சென்றடையும் வரை அவன் ஓட்டம் ஓயவில்லை.

“மயிலே…” என்று மூச்சிரைக்கச் சொல்லி அவள் சிந்தனையைக் கலைத்தான்.

“என்னங்க.. கண்டுபிடிச்சாச்சா?” என்று அவளும் ஆர்வத்துடன் கேட்டாள்

மாறன், தான் பார்த்த அனைத்தையும் மயிலிடம் விரிவாகக் கூறி, “உங்கப்பாக்கு நான் பின்னாடி போனது தெரிஞ்சிருக்குமோ?” என்று பயத்தோடு கேட்டான்.

“தெரிலயேங்க..! ஆனா.. தெரியணும். எங்கப்பாக்கு ஒன்னும் இருக்காது. அங்க நிறைய புக்ஸ் இருக்குறதுனால தப்பா ஒன்னும் நடக்க வாய்ப்பேயில்ல..!” என்று உறுதியாகச் சொல்லி மாறனைத் தூங்குவதற்குப் போகச் சொன்னாள்.

மாறன் தன் அறைக்குச் சென்று பட்டையை இட்டுக் கொண்டு படுத்தான். மயில்மொழி நேரே சமையலறைக்குச் சென்று தண்ணீர் குடித்து, தன் அறைக்குத் திரும்புகையில், “ஐயோ…” என்ற கிருஷ்ணனின் குரல் கேட்டது.

சத்தம் கேட்டு பட்டை இட்டுப்படுத்த மாறனும் அசந்த உறக்கத்திலிருந்த வள்ளியும் திடுக்கிட்டு எழுந்து தாழ்வரத்திற்கு வந்தனர். மயில்மொழி அவர்களைச் செல்லவிடாமல் தடுத்தாள்.

“நான் போய்ப் பாக்குறேன்” என்று வேக வேகமாக தோட்டத்தை நோக்கிச் சென்றாள். மாறன் சொன்னபடி பட்டாம் பூச்சியைத் தொடர்ந்து கொடிகளில் மிதந்து, அந்த தென்னங்கீற்று வீட்டிற்குள் நுழைந்தாள்.

அப்பா மேசையிலிருந்து விழுந்து அலங்கோலமாகக் கிடந்தார். “அப்பா.. எழுந்திருங்க பா..” என்று அலறினாள் மயில்மொழி.

கிருஷ்ணன் கண் விழித்தவுடன் மயில் அங்கிருப்பதைப் பார்த்துப் பயந்து, “நீ எப்படி இங்க?” என்று கேட்பதற்குள் அவள் அங்கிருந்த புத்தகங்களை ஒரு கண்ணோட்டம் விட்டாள்.

எத்தனை பழைய நூல்கள் அங்கிருப்பதைப் பார்த்து ஆச்சரியப்பட்டாள். தனக்கு 21 அகவை இருக்கும் போது, தான் தேடிய புத்தகங்கள் எல்லாம் அலமாரியில் அடுக்கி வைக்கப்பட்டிருப்பதைப் பார்த்து அவள் மனம் ஏங்கியது.

“பா.. இதெல்லாம் நான் தேடுன புக்ஸ்.. ல” என்று கண்ணீர் வடித்துக் கேட்டாள்.

“ஆமாம்மா! எனக்கு பிடிக்கும்னு தான பேனாவைக் கையிலெடுத்த..! என்ன பிடிச்ச பேனா பைத்தியம் உனக்கும் பிடிக்கக் கூடாதுன்னு தான்ம்மா இப்படி செஞ்சேன்” என்று அழுது கொண்டே கூறினார்.

“சரிப்பா..! இப்போ நான் நல்லா தன இருக்கேன். ஏன் இந்த வருத்தம். உங்களுக்கு ஏன் இந்த தனிமை?” என்று மயில் விசும்பிக் கொண்டே கேட்டாள்.

கிருஷ்ணன் அங்கிருந்த காகிதங்களை எடுத்தவாறு, “உன்கிட்ட ஒரு ரகசியத்தை இவ்வளவு நாளா மறைச்சி வெச்சிட்டேன்மா. அதுக்கு நானே எனக்கு குடுத்துக்குற தண்டனை இது” என்றார்.

மயல்மொழி தன் இருகண்களைத் துடைத்து உறுதியாய் எழுந்து நின்றாள். “எனக்கு தெரியும்பா அந்த ரகசியம் என்னன்னு. போன தடவை வீட்டுக்கு வரும் போது உங்க பெஸ்ட் பிரண்ட் கோபாலன் அங்கிள்கிட்ட சொல்லிட்டிருந்ததை நானும் கேட்டேன். நான் வள்ளியம்மாக்கு பொறந்த பொண்ணு இல்ல. எங்கம்மா நான் பொறந்தப்பவே செத்துட்டா. இது தான அந்த ரகசியம்?” என்று அலட்சியமாகக் கேட்டாள்.

கிருஷ்ணன் ரொம்பவும் அதிர்ச்சி அடைந்து, “அ…ஆமாம்..மா.. வள்ளிய ரெண்டாம் தாரமா கட்டும் போது வள்ளி உன்னை ஏத்துக்கிட்டா. வள்ளி வீட்ல யாருமே உன்னை ஏத்துக்கல. ஊர்லே இருந்தா அவங்க வீட்டு ஆளுங்க உன்னை நிம்மதியா இருக்க விடமாட்டாங்கனு நானும் வள்ளியும் கிளம்பி சென்னைக்கு வந்துட்டோம். வள்ளி எனக்கு தெய்வம் மாறி.!” என்று சொல்கையில் தென்னங்கீற்று  வீட்டிற்கு வெளியில் நின்று இதைக் கேட்டுக் கொண்டிருந்த வள்ளி குமுறி அழுதாள்.

மாறன் தன் மாமியாரை சமாதானம் செய்ய முயற்சித்துக் கொண்டிருந்தான்.

தன் கண் முன் தந்தையும் வெளியே தாயும் அழுவதை உணர்ந்த மயில்மொழி, “அப்பா நீங்க கவலபடக் கூடாது. இந்த ஜென்மத்தில எனக்கு ரெண்டு அம்மா. ஒரு அம்மா கடவுளாகிட்டாங்க. இன்னொரு அம்மா நான் கடவுளா மதிக்கிற வள்ளியம்மா” என்று தீர்க்கமாகக் கூறினாள்.

வள்ளி ஓடி வந்து மயில்மொழியை அணைத்துக் கொண்டாள். தன் மனைவி மயிலின் மீது மாறனுக்கு பாசம் அதிகம். அவள் முகம் வாடினாலே இவன் மனம் கசந்துவிடும்.

இப்போது அவளின் விசும்பலைக் கேட்க கேட்க, அவன் இதயம் சுக்கு நூறாய் உடைந்து விட்டிருந்தது.

மாறனை அங்கு பார்த்ததும், கிருஷ்ணன் தொப்பென்று அவன் காலில் விழுந்து, “என்ன மன்னிச்சிருங்க மாப்ள.. இந்த உண்மை தெரிஞ்சதுக்கு அப்ரோம் என் பொண்ண ஏத்துப்பீங்களா?” என்று கவலையோடு கேட்டார்.

மாறன் வெடுக்கென்று தன் கால்களை எடுத்து, “மாமா.. எப்டி மாமா இவளோ பெரிய கூரை வீடு. சூப்பரா இருக்கு. நீங்களே கட்டுனீங்களா? ஜிலுஜிலுன்னு காத்து. இடமே சொர்க்கம் மாறி இருக்கே..! இந்த மாறி இடம் தான் புக்ஸ் படிக்க, கதை எழுத எல்லாம் சரி…! செம்ம மாமா நீங்க.! புக் பேப்பரு எல்லாமே ரெடியா இருக்கே..!” என்று சொல்லிக் கொண்டு கவிதை எழுதும் பாணியில் உட்கார்ந்தபடி ஒரு நிழற்படம் (செல்பி) எடுத்துக் கொண்டான்.

அனைவரும் அவனை முறைத்துப் பார்த்து, பின் கலகலவென்று சிரித்தனர்.

மாறன் கிருஷ்ணனிடம் மனம் விட்டு சொன்னான், “மாமா. இப்படி ஒரு பொண்ணு கிடைக்க நான் தான் கொடுத்து வெச்சிருக்கணும். பத்தாம் வகுப்பு படிச்சிட்டு, கடை வெச்சி வாழ்க்கைய ஓட்டிட்டு இருந்த என்ன நம்பி பொண்ணு குடுத்த உங்க மனசு யாருக்கு வரும் மாமா?” என்று நெகிழ்ந்து கேட்டான்.

கிருஷ்ணன் இப்போது தெம்பாகச் சொன்னார். “நல்ல செழிப்புள்ள மரத்திலிருந்து சத்து மிகுந்த கனிகளை வளர வைப்பது எளிது. ஆனால், காய்ந்த பாலை மணலில் ஒரு செழிப்பான மரம் வளர்த்து அதிலும் கூட சத்தான கனிகளை வளர வைப்பது தான் கடினம். நீங்க இப்போ உழைச்சி மேல வந்திருக்கீங்க. ஆனா.. நீங்க கஷ்டப்பட்ட காலத்துல கூட மயிலையும் பசங்களையும் சந்தோஷமா தான் வெச்சிருந்தீங்க” என்று ஆறுதல் கூறினார்.

அனைவரும் மனம் விட்டு இறக்கிய பாரத்தை மறந்து மகிழ்ச்சியாய் தென்னங்கீற்று வீட்டிற்கு விடைகொடுத்தனர்.

தாழ்வாரத்தில் கனியும் வெற்றியும் யாருமில்லாமல் பயந்து போய் நின்றிருப்பது போல் தெரிந்தது. மயல்மொழி அவர்களிடம் செல்லமாகப் பேசி பயத்தைப் போக்கினாள்.

கனி உற்சாகம் வந்தவளாய் “தாத்தா என்னோட பரிசு எங்கே?” என்று கேட்டாள். யாரும் கவனியாமல் தான் எடுத்து வந்த புத்தகத்தை கனியிடம் “இந்தாங்க பட்டு.!” என்று  மண்டியிட்டுக் கொடுத்தார் கிருஷ்ணன்.

கனி அதைப் பெற்று, “அ..ணி.. லாடும் முன்றில்..” என்று எழுத்துக் கூட்டி படித்துக் கைகளைத் தட்டினாள்.

வெற்றியின் பக்கம் திரும்பிய கிருஷ்ணன், “இது உனக்கு..” என்று ஏதும் எழுதாத ஒரு நோட்டை நீட்டினார். பட்டாம்பூச்சி வடிவத்தில் இருந்த அந்த நோட்டைப் பார்த்தவாறே இருந்த வெற்றி, “தேங்க்ஸ் தாத்தா” என்றான்.

அவனின் கேள்விக் கணையை கண்களிலே புரிந்து கொண்டவரான கிருஷ்ணன் பின் வருமாறு கூறினார். “இந்த பட்டாம்பூச்சி மாறி நீ உலகமெல்லாம் பறக்கணும். கனியையும் பறக்க வைக்கணும். ஒன்னும் எழுதலனு நினைக்காத. உன் வாழ்க்கைல எதுலாம் உனக்குப் புதுசா தெரியுதோ அதுலாம் நீ இதுல எழுதி வைக்கலாம். அந்தப் புதிய விஷயம் சந்தோசமாவும் இருக்கலாம் துக்கமாவும் இருக்கலாம். உன் மனசுக்கு உண்மைன்னு படுற விஷயத்தை இதுல எழுது. இந்த நோட் பாக்கும் போது உன் மனசு பூரா அன்பால நிறைஞ்சி இருக்கணும்” என்று முடித்தார்.

புதிரெல்லாம் உடைந்து சந்தோஷம் மட்டுமே நிறைந்து அனைவரும் உறங்கச் சென்றனர். அடுத்த நாள் காலை சூரியன் சற்று உதயமானதும் தாத்தாவும் பேரனும் தோட்டத்திற்குச் சென்றார்கள்.

அவர் கொடுத்த புத்தகத்தைக் கையில் எடுத்து வந்த வெற்றி, “என் தாத்தா எனக்குக் கொடுத்த புது நோட். எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு” என்று எழுதி நேற்றைய தேதியைப் போட்டு வைத்தான்.

கிருஷ்ணனுக்கு இதைக் காண்கையில் சந்தோசமாய் இருந்தது. அந்த நள்ளிரவிற்குப் பிறகு வீட்டில் உள்ள அனைவருக்கும் பிடித்த பிரத்யேக இடம் அந்த தோட்ட வீடு தான்.

சிலருக்கு புத்தகம் படிக்கும் இடமாக.. சிலர்க்கு அமைதியே உருவாக.. குழந்தைகளுக்கு ஆரவாரமாய் விளையாடும் இடமாக.. கிருஷ்ணனுக்கு மட்டும் நிம்மதியளித்த இடமாக..!

‘சஹானா’ இணைய இதழின் ‘சிறுகதை விமர்சனப் போட்டி’ யில் கலந்து கொண்டு பரிசு வெல்லும் வாய்ப்பு. போட்டி விவரங்கள் அறிய, இங்கு கிளிக் செய்யுங்கள்

(முற்றும்)

#ads – Best Deals in Amazon Deals 👇


 

#ads  தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇

      

        

‘சஹானா’ இதழை Amazonல் வாசிக்க இணைப்பு இதோ 👇

              

          

 சஹானா சிறுகதைப் போட்டி 2021ல் பங்குபெறும் மற்ற கதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

ஆழியின் காதலி ❤ (பகுதி 16) -✍ விபா விஷா

காலங்களில் அவள் வசந்தம் ❤ (சிறுகதை) – ✍ சுஸ்ரீ, சென்னை