in

ஆழியின் காதலி ❤ (பகுதி 16) -✍ விபா விஷா

ஆழியின் காதலி ❤(பகுதி 16)

#ads – Best Deals in Amazon Deals 👇


 

இந்த தொடரின் அனைத்து பகுதிகளையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

“நீங்கள் மூச்சுப் பயிற்சி என்றது பிராணயாமம் என்று எண்ணுகிறேன். அது மிக நல்ல காரியம் தான். மிகுந்த உபயோகமான ஒன்றும் கூட. ஆனால் நாம் இதற்கு மேலும் சில பல யோக முறைகளைக் கைக்கொள்ள வேண்டும். மேலும் சில மூலிகைகளும் இருக்கின்றன அவற்றையும் நீங்கள் உட்கொள்ள வேண்டும்.

அது மட்டுமின்றி நமக்கு இன்னும் சிறிய கால அவகாசமே இருக்கின்றது. எனவே நாம் இரவு பகல் எதுவும் பாராது கடின உழைப்புடன் பயிற்சியினை மேற்கொள்ள வேண்டும்” என்று எல்லாளன் கூறியதும், அர்னவும், விக்ரமும் ஒப்புதலாய் தலை அசைத்தனர்

அர்னவ் மேற்கண்ட யோகப் பயிற்சிகள் மட்டுமின்றி, ஈசனுக்கான நோன்பையும் கடைபிடித்தாக வேண்டிய நிலை

இதில் ஒருவேளை உட்கொண்டு, எல்லாளன் அளித்த மூலிகைகளைச் சாப்பிடுகையில், குடலில் ஒரு பருக்கை கூடத் தங்காது, ஒட்டு மொத்தமாய் வெளி வந்தது

அதனால் பறக்கும் வன்னி கொண்டு, ஏழு வகையான எழுநூறு மலர் பறிக்க எட்டு திக்கெங்கும் செல்லும் சாமினி, தன்னுடன் அர்னவையும் அழைத்துச் சென்றாள்

இதில் மிகப் பெரும் கொடுமையாய் அர்னவுக்குத் தோன்றியது என்னவென்றால், காதலியை அருகில் வைத்துக் கொண்டு காதலாய் ஒரு பார்வை கூடப் பார்க்க முடியாது இருப்பது தான்

இங்கு விக்ரமின் நிலையும் அதே. ஏனென்றால் விக்ரமுடன் நாள் முழுதும் எல்லாளனும், கயாவும் இருந்தனர். அவள் அவனருகில் இருப்பது மனத்திற்கு இதமளித்தாலும், மற்றொரு வகையில் கொடுமையாகவே பட்டது

ஏனென்றால், ஒவ்வொரு முறை கயாவைக் காணும் போதும் விக்ரமினுள் இருக்கும் காதல் மன்னன் வீறு கொண்டு எழுவதும், அவன் அவ்வாறு காதல் மன்னனாய் மாறிய மறுவினாடி அதை எல்லாளன் கையும் களவுமாக… இல்லையில்லை வாயும், வழிசலுமாகக் கண்டறிவதும் மிகக் கொடுமை

இது ஒரு புறம் நடந்து கொண்டிருக்க, இரவு வரை ஓம்கார வனத்தினில் இருந்து பூஜை முடித்து வரும் அர்னவிற்கு எல்லாளனும், விக்ரமும் சேர்ந்தே பயிற்சிகளை அளிக்க வேண்டியதாய் இருந்தது

ஆனால் இந்த நிலையில் சாமினியைப் பற்றி, அவளது கஷ்டத்தினைப் பற்றி யாரும் அறிந்திடவில்லை

ஓம்கார வனத்தினில் சிவராத்திரி சிவபூஜை அன்று, இரவில் தான் நடைபெற வேண்டுமெனக் கயாகர மூப்பர் கூறி இருந்தார்

ஆனால் இரவினில் மச்சமாக மாறும் மச்சக்கன்னி எவ்வாறு அதே இரவில் மனிதியாக ஈசனுக்குப் பூஜை புரிய இயலும்? இதைப் பற்றி எவருமே கவலை கொள்ளவில்லை

அந்தச் சோமசுந்தரனை மணவாளனாகக் கொண்ட மீனாட்சி அம்மை தான் இதற்கு உதவ வேண்டுமென எண்ணி, சாமினியும் சிவ வழிபாட்டில் மனதை செலுத்திக் கொண்டு இருந்தாள்

அப்படி ஒருநாள் இவர்கள் ஓரளவிற்கு நீரினுள் மூச்சைக் கட்டும் பயிற்சியைக் கைக்கொண்டு விட்டனர் என்று எண்ணிய எல்லாளன், அவர்களை நீரினுள் ஆழத்திற்கு அழைத்துச் சென்று எவ்வளவு நேரம் அவர்களால் நீரினுள் மூச்சடக்கி இருக்கவியலும் என்பதைச் சோதிக்க முனைந்தான்

அவ்வாறு கடலின் அடி ஆழத்திற்குச் சென்றவர்கள் பேரதிர்ச்சிக்குள்ளானார்கள். ஏனெனில், அந்தச் சிப்பிக் குவியலினுள் நித்திலமாய் நீந்திக் கொண்டிருந்தது சமுத்திரா

“இன்றுடன் எல்லாம் முடிந்து விடப் போகிறது. அவள் நம்மூவரையும் அழித்து விட்டு அவள் என்றுமே இப்புவியில் சர்வாதிகாரியாக இருக்கப் போகிறாள்” என்று எல்லாளன் கூறியதும்

“அவ சிவராத்திரி அன்னைக்குத் தான என்ன பலிகொடுக்கப் போறதா சொல்லிருக்கா, அதனால நீங்க கவலைப்படாதீங்க எல்லண்ணே” என்று அர்னவ் சொன்னான்

“ஹ்ம்க்க்கும்… உங்களுக்காக யாரு கவலைப் பட்டா.  நாங்க எங்களை நினச்சு தான் பீல் பன்றோம், இல்லண்ணே” என்று விக்ரம் கூறினான்

ஆனால் அவர்கள் இவ்வளவு நேரம் அங்கே இருந்தும் கூட, அந்தச் சமுத்திரா அவர்களைக் கண்டும் காணாது, சில பல சிப்பிக்குள் இருந்து நித்திலங்களை அங்கேயே எடுத்துக் கொண்டு அவ்விடம் விட்டு அகன்றாள்

அதைக் கண்ட மூவருக்கும் ஆச்சர்யமாகி விட்டது. கண்ணில் காண்போரை எல்லாம் கொன்றே தீர வேண்டுமெனச் சபதம் செய்தவள் இன்று கையெட்டும் தூரத்தில் அவளது வேண்டப்பட்ட விரோதிகள் இருந்தும் ஏதும் செய்யாமல் அவ்விடம் விட்டு அகன்றது பேரதிசயம் என்றே அவர்களுக்குப் பட்டது.

மேலும் அவளைப் பற்றிச் சிந்தை செய்து காலம் கழிக்க வேண்டாமென எல்லாளன் கூறியதால், உடனே அவ்விடம் விட்டு வெளியேறினர்

கடலை விட்டுக் கரை வந்த மூவரும், முதலில் சந்தித்தது மூப்பரைத் தான்

அவரிடம் சென்று கடலுக்குள் நடந்ததைக் கூறவும், அவர் தனது வெண்தாடியை நீவிக் கொண்டே மென்னகை புரிந்தார்

“ஏன் மூப்பரே நகைக்கிறீர்கள்? நாங்கள் நகைப்புக்குரியதாய் ஏதும் கூறியதாய் எங்களுக்கு நினைவில்லையே?” என்று எல்லாளன் சற்றுக் காட்டமாய்க் கூறியதும், மூப்பரின் மென்னகை, புன்னகையாய் விரிந்தது

சற்றுச் சத்தமாகச் சிரித்தவர், “ஹா ஹா ஹா… இங்கே என்னருகில் அமரு எல்லாளா, நீங்கள் இருவரும் கூட அப்படி அப்படியே அமருங்கள்” என்று விக்ரமையும், அர்னவையும் அமரும்படி பணித்து விட்டு, மீண்டும் எல்லாளனிடம் திரும்பியவர்

“நான் நகைத்ததன் காரணம் தெரிய வேண்டுமா? அன்றிச் சமுத்திரா உங்களை ஏதும் செய்யாது விட்டுச் சென்றதன் காரணம் அறிய வேண்டுமா?” என மீண்டும் புதிர் போட்டார் அவர்

“ஐயோ மூப்பரே… எங்களுக்கு இரண்டு காரணங்களும் தான் தெரிய வேண்டும். எதற்கு அவள் எங்களை விட்டுச் சென்றாள்? அதன் பொருட்டு நீங்கள் நகைக்கும் காரணம் தான் யாதோ?” என்று மீண்டும் வினவினான் எல்லாளன்

“ஹ்ம்ம்… இரண்டின் காரணமும் ஒன்று தான். முதலில் அவள் உங்களை ஏன் எதுவும் செய்யாது விட்டுச் சென்றாள் என்றால், ருத்ரதேவரை சிவராத்திரி அன்று தான் பலி இட்டு அவர் முதுகெலும்பு கொண்டு யட்சிணிக்குப் பூசை செய்ய இயலும். அதன் பொருட்டுத் தான் அவள் ருத்ர தேவரை ஏதும் செய்யாது விட்டு விட்டாள்

மேலும் நாம் மட்டும் தானா இறைவனுக்காக நோன்பிருப்போம்? அவள் நோன்பு இருக்க மாட்டாளா? அதன் காரணமாகத் தான் அவள் உங்களிருவரையும் கூடக் கொல்ல எத்தனிக்க வில்லை” என்று மூப்பர் கூறியதும்

“அப்படின்னா நாங்க அவளை இப்போ ரொம்ப எளிமையா கொன்னுடலாமா ஐயா?” என்று கேட்டான் விக்ரம்

அதற்கும் பதிலாய் மீண்டும் ஒரு மென்னகையை உதிர்த்த மூப்பர், “அது அப்படி இல்லை விக்ரமரே. அவளாக யாரையும் கொல்ல வேண்டுமென்ற அவசியம் இப்பொழுது இல்லை. ஏனெனில் அவளது சக்தியை அதிகப்படுத்திக் கொள்ளும் அளவு மானுடர்களைப் பலி இட்டு முடித்து விட்டாள். ஆனால் அதற்காக நீங்கள் அவளைக் கொல்ல முயன்றாலும் கை கட்டிக் கொண்டு வேடிக்கைப் பார்ப்பாள் என்று எண்ணிவிட இயலாது” என்று கூறியதும், மூவரின் முகமும் சொத்தென்று ஆகியது

“ஆங்ங்…. அப்ப நீங்க எதுக்கு எங்களைப் பார்த்து சிரிச்சீங்க?” என்று விக்ரம் மீண்டும் மூப்பரைப் பார்த்து கேட்க

“ஐயா விக்ரமரே, நான் குருநாதரை விடச் சற்று வலிமையானவர் தான். ஆனால் இதற்கு மேலும் தங்களது கேள்விக் கணைகளைத் தாங்கும் இதயத்தை அந்த ஈசன் எமக்கு அளிக்கவில்லை, அதனால் இந்தக் கேள்விக்கான பதிலுடன் நான் கிளம்புகிறேன்” என்று எழுந்தவர்

“அந்தச் சமுத்திரா உங்களை ஏதும் செய்யாது விட்டுச் சென்றும் கூட, அலறி அடித்துக் கொண்டு ஓடி வந்தீர்கள் அல்லவா? அதன் பொருட்டே யாம் நகைத்தோம்” என்று கூறி மீண்டும் வயிற்றைப் பிடித்துக் கொண்டு நகைத்தவாறே அங்கிருந்து கிளம்பி விட்டார்

மூப்பரையே கேலி பேசி சிரிக்க வைத்துவிட்டோமே என்னும் கூச்சத்துடன், மூவரும் அவர் செல்லும் வழி நோக்கி பார்த்துக் கொண்டிருந்தனர்

விண்கொட்டும் வெண்முரசாய் வானம் இடி மின்னல்களைக் கொண்டு வெய்யோனின் வருகைக்கு வரவேற்புரை நல்கிட, அன்று நடக்கவிருக்கும் நிகழ்வினைக் காணச் சற்றுப் பயம் கொண்டே கிழக்கே எழுந்தான் கதிரவன்

பத்துத் திங்கள் செய்த தவத்திற்கு வரமாய்க் கிடைப்பது குழந்தை என்றால், இவர்களது பன்னெடுங்காலச் சாபத்திற்குக் கிடைக்கவிருக்கும் விடை எதுவோ என மனம் திக்திக் என அடித்துக் கொள்ள, விடியலை நோக்கி ஈரிரண்டு விழிகளும் விழித்திருந்தன

அர்னவும் விக்ரமும் மட்டுமின்றி, அந்த ஒட்டுமொத்த மச்சமாந்தர்களும் இனியாவது இரவினில் விழிமூடும் வரம் கிடைக்காதா? இனியாவது சாதாரண மனிதரைப் போல வாழ்ந்திடும் பேறு கிடைக்கப் பெறாதா? இத்துணைக் காலம் அனுபவித்த சாபம் இன்றாவது தீர்ந்து விடாதா? என்று ஏக்கமும் எதிர்பார்ப்பும் கண்களில் கரைபுரண்டோட, காலைப் பொழுது புலருவதை எதிர்நோக்கி இருந்தனர்

எப்பொழுதும் லொட லொடத்துக் கொண்டே இருக்கும் விக்ரமின் மனமும் கனத்துத் தான் இருந்தது. அவன் கவலையுறுவது அவனுக்காக மட்டுமின்றி, தனக்காகவும் தான் என்பதால் அவனைச் சமாதானப்படுத்தும் வகையறியாது அர்னவும் எதுவும் பேசத் தோன்றிடாமல் அமைதியைக் கொண்டு இருந்தான்.

சின்னஞ்சிறு குழந்தை முதல் வயது முதிர்ந்த பழங்கிழவர்கள் வரை கடலிலிருந்து மீண்டும் மனிதராய் உருப்பெற்றுக் கரையேறும் காட்சி கண்டு அர்னவ் மனதில் ஆயிரம் எண்ணங்கள்

ஏதுமறியா இந்தச் சின்னக் குழந்தைகள் என்ன பாவம் செய்தன? ஜென்ம ஜென்மமாய்த் தொடரும் சாபம் தீரும் வழியறியாது நிற்கும் இவர்களுக்கு விமோசனம் கிடைக்கப் போகிறதா?

அன்றி இந்தச் சிறுகூட்டத்தின் சாபம் களையும் முயற்சியில், இந்த மொத்த பிரபஞ்சமும் ஒரு கொலைகாரியின் வசம் செல்லப் போகிறதா? என்று எண்ணிக் குழம்பியவாறே, இறுதி நாள் சிவபூஜைக்குக் கிளம்பினான் அர்னவ்

நித்தமும் கொண்ட இறை நேசத்தால்

மெத்தனமான கூட்டம் ஒன்று

நேர்மை என்ற தகுதி மறந்து

கள்ளத்தனமாய் முக்தி அடையக்

கடுகளவும் அச்சமின்றி

ஈசனின் வேள்வியில் புகுந்திட – அந்த

வேள்வித் தீயெனவே பொங்கிய ஈசனின்

பெருஞ்சினம் தான் வெடித்து – இந்தச்

சிற்றெறும்புகளைப் பொசுக்கவும் முயன்று – அவன்

தன் கடைக்கண்ணால் நோக்கிட,

பாவம் அறியா மன்னனும்

பிழைபொறுக்க வேண்டி

தரணியின் தலைவனின்

தாள்பணிந்து கேட்டிட

சினம்தணிந்த எம் ஈசன் – மதுரை

மீனாட்சியின் மனம் கொண்ட மகேசன்

அந்த மீனாகவே நீர் போகக் கடவது – எனச்

சிறு தண்டனை வழங்கி வெளியேற – பின்

சாபம் தீரும் நாள் எதுவோ? – என்று

விழிகளில் தேங்கிய வினாவிற்கு

என்ரூப மேருத்திரனாய் – வந்து

நின் சாபம் களைந்து கரையேற்றும் – என்று

மனமுவந்து அவன் ஆசி தான் கூறிட

மதிகெட்டுப் போன

பெண்பிச்சி ஒருத்தியால்

காக்க வந்த ருத்திரனும் உயிர் துறந்து

கந்தலாய் இம்மண்ணில் மரித்திட

காலச் சம்கார மூர்த்தியாய்

காலப் பைரவரின் ரூபமாய்

பாராளும் பெருமாளும்

பெருங்கோபமாய் வந்து நின்று

பெண்பேயின் அழிவிற்கும்

உகந்ததொரு நாளினை

உண்மையின் பேரில் வித்திட்டான்.. இன்று

மீண்டும் ஓர் இதிகாசம்

அரங்கேறும் வேளையிலே

முக்தி கொண்டு தேவராய்

தேவலோகம் செல்ல விழைந்த

பேராசை பிடித்த ஆத்மாக்கள்

மச்சத்திலிருந்து மனிதராய்

மாறிடும் நாள் தேடிட

ஏக்கம் கொண்ட உயிர்கள் – அந்த

ஏகன் அவன் திருமொழியின் படி

மாந்தராய் தான் மாறிடுவரோ? – அன்றி

ஆழி சூழ்ந்த இப்புவியும்

மாரி பொழியா மண்ணென்றாகி

மயக்கும் மாயக்காரி

மதிகெட்ட சூழ்ச்சிக்காரி

இந்திராயுதத்தின் சொந்தக்காரி

சமுத்திரத்தின் சாபமாய் வந்திட்ட – அந்த

சமுத்திராவின் கைவசம் தான்

மீளாது சென்றிடுமோ??

இவ்வாறு அனைவர் மனத்திலும் பெருங்குழப்பமும் பேரச்சமும் நிறைந்திருக்க, ‘அனைத்தும் இறைவனின் கைங்கரியம், அவன் முடிவே இங்கு முதலாய் நடப்பது’ என்றுணர்ந்த சமுத்திராவோ. இறை நாமத்தைத் தவிர வேறெதுவும் நினையாது இருந்தாள்

அனைவரும் ஓம்கார வனத்திற்குச் சென்றிட, அன்றிருந்த புயல் மழையின் வேகம், ஓங்கார வனத்தினுள்ளும் சேதம் புரியத் துவங்கியது

அந்தப் பெரும் மழையையும், புயல் காற்றையும் கடந்து ஈசனின் உறைவிடத்தையே தஞ்சமென அடைந்த அனைவரும் உலகம் காக்கும் உமையின் மணாளன், அர்ச்சனைப் பிரியனுக்கு அவனின் பதினாயிரம் நாமம் கொண்டு ஒவ்வொரு நாமத்திற்கும் ஒவ்வொரு மலர் படைத்து வழிபடத் துவங்கினர்

அதற்கெனத் தேவைப்படும் மலர்களையும், இன்னபிற பொருட்களையும் சேகரிப்பதற்காக அர்னவும், சாமினியும் அவள் வன்னியில் புறப்பட்டனர்

நேரம் ஆக ஆகப், புயலின் வலுவும் கூடிக் கொண்டே சென்றது. ஆனால் இறைவனின் பூஜைக்காகக் கையில் மீதம் இருப்பில் இருக்கும் மலர்களின் எண்ணிக்கையோ குறைந்து கொண்டே வந்தது

அதைவிட, இந்தக் கடும் புயலில் சென்ற அர்னவும், சாமினியும் இன்னும் திரும்பாதது வேறு அங்கிருந்தோருக்குப் பீதி அளித்தது

விக்ரம் நீருள் வெகுநேரம் மூச்சடக்கிச் சென்று அந்த மகுடத்தினைக் காப்பாற்ற வேண்டுமென்ற காரணத்தினால், அர்னவையும் சாமியையும் தேடி புறப்பட்ட அவனை, அங்கிருந்தோர் தடுத்து நிறுத்தினர்

அங்குச் சாமினியும், அர்னவுமோ தங்களைச் சிதைக்க அதிவேகத்துடன் வந்து கொண்டிருக்கும் பெரும் புயலிடம் இருந்து தப்பிக்கும் வகை அறியாது திகைத்திருந்தனர்

வன்னி எவ்வளவு தான் முயற்சி செய்தும், நெருங்கி விட்ட சூறாவளியிடம் இருந்து அதனால் தப்பிக்க இயலவில்லை

அந்தச் சூறாவளி, வருகின்ற வழியெங்கும் பன்னெடுங்காலமாக இவர்களின் வாழ்விற்குச் சான்றாய் வீற்றிருந்த வைரம் பாய்ந்த மரங்களை வேரோடு பிடுங்கி எடுத்துக் கொண்டு வந்தது

அந்தப் பெருஞ்சுழலில் வன்னியுடன் சேர்ந்து, அர்னவும் சாமினியும் மாட்டிக் கொள்ள, அதிலிருந்து வெளியேறும் வகையறியாது வகைப்பட்ட பொருள்களிலெல்லாம் அடி வாங்கிப் பெரும் காயமுற்று மூவரும் மயங்கினர்

பின்பு நெடுந்தூரம் அவர்களை இழுத்துச் சென்ற புயல், பாவம் பார்த்து அவர்களது உடலை ஓரிடத்தில் இட்டுச் சென்றது

முதலில் கண் விழித்த வன்னியும் கண்களில் கசியும் கண்ணீருடன், “உனக்குக் காவலாய் இருக்க வேண்டிய நான், என் கடமையிலிருந்து பிழன்று உன்னைக் காக்கத் தவறி விட்டேன்” என்றவாறு, சாமினியின் அருகினில் அமைதியாக நின்றது

டலெங்கும் காயங்களாகத் தட்டுத் தடுமாறி எழுந்து நின்றவள், தன்னருகே கண்ணீருடன் நின்றிருக்கும் அந்த வெண் புரவியின் அருகே சென்றாள்

ஒரு விழியசைவில் அதன் மனத்தினைப் படித்தவள், “தவறு உன் பெயரில் இல்லை வன்னி, வருந்தாதே” என்றவாறு அதன் முகத்தினைத் தடவிக் கொடுத்தாள்

சுற்றும் முற்றும் பார்த்தவள், அங்கு அருகினில் அர்னவ் இல்லாததைக் கண்டு மிகுந்த பதட்டமடைந்தாள். பின்பு தடுமாற்றத்துடன் அருகினில் நடந்து சென்றவள், எங்குமே அர்னவைக் காணாது உயிர் துடித்துப் போனாள்

இறுதியாக வன்னியின் மீதேறி அர்னவைத் தேடுவதே வழியென்று எண்ணியவள், மெல்ல மெல்ல முயன்று சென்று வன்னியின் மேல் அமர்ந்து பறந்து சென்றாள்

வன்னிக்கும் மிகுந்த அடிபட்டிருந்ததால், அதனால் வேகமாகப் பறக்கவும் இயலவில்லை. ஆனால் சாமினியின் மனமறிந்து தனது முழு முயற்சியும் மேற்கொண்டு அர்னவைக் கண்டுபிடிக்க முனைந்தது

வெகுதூரம் பறந்து சென்ற பின், ஒரு முறிந்த மரத்தின் கிளைக்கு அடியில் குற்றுயிரும் குலையுயிருமாய்க் கிடந்தவனைச் கண்டாள் சாமினி

உடனே பதறிப் போய் அவனருகில் விரைந்தவள், கடும் முயற்சி செய்து அந்தக் கிளையினை அர்னவ் மீதிருந்து விலக்கித் தூர தள்ளி விட்டு அர்னவைப் பார்த்தாள்

நம் உயிர் கொண்டவரின் விழியில் நீர் வழிந்தால், நம் இதயம் கீறி இரத்தம் வரும். இங்கோ தன மன்னவன் உடலெங்கும் இரத்தக் கோலமாய் இருக்கக் கண்டவளது கண்கள், கண்ணீருக்குப் பதிலாய் உதிரத்தையே வடித்தன

“ருத்ர தேவரே… சிறிது விழி திறவுங்கள். நான் பேசுவது உங்களுக்குக் கேட்கிறதா? ஹையோ என் ஈசனே… எம் மக்களுக்கு உதவும் பொருட்டு எம் மன்னவனின் உயிருக்கு ஆபத்து வந்து விட்டதே” என அரற்றியவள், அவனை வன்னியின் மீதேற்றி தானும் உடன் அமர்ந்து தம் மக்கள் இருக்கும் இடம் நோக்கிப் பறக்கத் தொடங்கினாள்

‘சஹானா’ இணைய இதழின் ‘சிறுகதை விமர்சனப் போட்டி’ யில் கலந்து கொண்டு பரிசு வெல்லும் வாய்ப்பு. போட்டி விவரங்கள் அறிய, இங்கு கிளிக் செய்யுங்கள்

(தொடரும்)

#ads தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇

      

        

‘சஹானா’ இதழை Amazonல் வாசிக்க இணைப்பு இதோ 👇

              

          

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    புதிய அத்தியாயம் (சிறுகதை) – ✍ கி.இலட்சுமி

    மனம் தொலைந்த மலர்க்காடு (சிறுகதை) – ✍ சுஷ்மிதா கோபாலகிருஷ்ணன், வேலூர், குடியாத்தம்