in

புதிய அத்தியாயம் (சிறுகதை) – ✍ கி.இலட்சுமி

புதிய அத்தியாயம்

#ads


மாத போட்டிக்கான பதிவு (அக்டோபர் 2021)

லர் மிகுந்த மனக்கவலையில் இருந்தாள். இது போன்ற சூழ்நிலை வரும் என அவள் கனவிலும் நினைக்கவில்லை

குடிசையில் வாழ்ந்தாலும் காளியப்பன் அவளைக் கவுரமாகவே வைத்திருந்தான். ஆட்டோ ஓட்டி வரும் வருமானத்தை அப்படியே கையில் கொடுத்து விடுவான்

கட்டிய புடவையோடு அவளை அழைத்து வந்த நாளிலிருந்து எந்தக் குறையும் இல்லாமல் பார்த்துக் கொண்டான்

முரடன் தான் என்றாலும், பாசமும் அதிகம் தான், அவளும் அவன் மீது உயிரையே வைத்திருந்தாள். இருவர் அன்பின் சின்னமாக பிறந்த குழந்தை தொட்டிலில் உறங்கி கொண்டிருக்கிறது. 

குழந்தையின் மீது காளியப்பனுக்கு கொள்ளைப் பிரியம், அத்துணை ஆசையாக குழந்தையைக் கொஞ்சுவான்

“மலர்… நம்ம புள்ள பெரிய ஆளா வரணும், அதுக்கு அவனை நல்லா படிக்க வைக்கணும். கூடுதலா உழைச்சு பணம் சேர்க்கணும், நைட்லயும் சவாரி கிடைச்சா போலாம்னு இருக்கேன் மலரு. இப்பத்துலருந்து சேர்த்தா தான பெரிய ஸ்கூல்ல சேக்க முடியும்.

படிச்சு முடிச்சு பெரிய ஆளா ஜம்முனு வெள்ளைச் சொக்கா பேன்ட் போட்டு கிட்டு வந்து நிக்கணும். இந்த சேரியே என் மகனைப் பார்த்து அசந்து போயிடணும். நம்ம தரித்திரப் பொழைப்பு நம்மோட முடிஞ்சுடணும் மலரு. புள்ளையாவது நல்லபடியா நாலுபேர் மெச்ச வாழணும்” 

எத்தனை கனவு கண்டிருப்பான், அத்தனையும் இன்று தவிடுபொடியாகி விட்டதே, யார் கண்பட்டதோ?

சாதாரண  ஜுரம் என்று வீட்டுக்கு வந்து படுத்தவன், மூன்று மாதத்துக்கு மேலாகியும் எழுந்திருக்கவேயில்லை

ஏதோ விஷ ஜுரம் என்றார்கள், ஒரு பக்கம் கையும் காலும் மரத்துக் கிடக்கிறது. அரசாங்க மருத்துவமனையில் மருந்து மாத்திரை கொடுத்து அனுப்பி விட்டார்கள்

“நாள்பட்டா தானா சரியாயிடும், ஆனா நடக்க மாசக்கணக்கு ஆகலாம், கவனமாப் பாத்துக்கோங்க” என்றனர்

அப்படியும் மலர் விட்டு விடவில்லை, முடிந்தவரை எத்தனையோ வைத்தியம் செய்து கொண்டு தான் இருக்கிறாள்

வாரந்தோறும் மருத்துவர் வந்து சென்றபடி இருக்கிறார், விதவிதமாய் தைலங்களையும் பூசிப் பார்த்தாயிற்று. ஒன்றும் பயனில்லை

காதில் மூக்கில் இருந்ததையெல்லாம் வித்தாயிற்று, பெரிய பாத்திரங்கள் கூட வீட்டை விட்டு அடகுக்கடைக்குச் சென்று விட்டன அக்கம் பக்கம் வாங்கிய கைமாற்றும் பத்தவில்லை

இனி கைகொடுப்பார் யாருமில்லை, சோற்றுக்கே கஷ்ட ஜீவனம். பக்கத்தில் உள்ளோர் தயவால் கால் வயிறு நிரம்பிக் கொண்டிருக்கிறது. அவர்களும் அன்றாடங்காய்ச்சிகள் தானே, எத்தனை நாள் அவர்களால் இந்த குடும்பத்திற்கு உதவ முடியும்

காளியப்பனையும் குழந்தையையும் கவனிக்கவே மலருக்கு முடியவில்லை. அதனால் கூலி வேலைக்குச் செல்லவும் அவளால் இயலவில்லை இருந்தாலும் கணவனைக் காப்பாற்ற போராடிக் கொண்டு தான் இருந்தாள் மலர்

நேற்று வழக்கம் போல காளியப்பனை பரிசோதிக்க வந்த மருத்துவர் புதிய நம்பிக்கையை விதைத்திருக்கிறார்

“இதோ பாரும்மா, இவரோட கையையும் காலையும் இயல்பு நிலைக்கு கொண்டு வர சிறப்பு மருந்தை ஊசி மூலமா செலுத்திப் பார்க்கலாம்னு இருக்கேன். அதுக்கு ஐயாயிரம் செலவாகும், உன்னால பணத்தைப் புரட்ட முடியும்னா நாளைக்கே ஊசியைப் போட நான் தயார். ஒரு வாரத்துலயே இவர் இயல்பு நிலைமைக்குத் திரும்ப வாய்ப்பிருக்கு” 

“வேண்டாம் மலரு, எனக்காக நீ பட்டபாடு போதும். எனக்கு இனிமே எந்த வைத்தியமும் வேண்டாம். நான் போனாலும் பரவாயில்லை, புள்ளைய நல்லபடியா காப்பாத்து” என்ற காளியப்பனின் பேச்சு மலரின் செவிகளுக்குள்  செல்லவில்லை

மருத்துவர் கூறிய வார்த்தைகளே மலரின் உள்ளத்தில் எதிரொலித்துக் கொண்டிருந்தது. ஐயாயிரத்துக்கு அவள் எங்கே போவாள், பணம் கிடைத்தால் காளியப்பன் குணமடையக்கூடும்

அந்த நேரம் தேவி, கையில் தட்டோடு வந்தாள்

“இந்தா மலரு… நாலைஞ்சு இட்லி கொண்டாந்துருக்கேன், நீயும் சாப்பிட்டு அவருக்கும் ஏதாச்சும் கொடு. புள்ளையப் பாரு, மெலிஞ்சுபோயி நோஞ்சானா கிடக்கிறான். நீ ஏதாச்சும் சாப்பிட்டா தான குழந்தை உசிரோட இருக்கும். டாக்டர் சொன்னதை நானும் கேட்டேன். கொஞ்சம் வெளிய வா, உன்கிட்ட பேசணும்” 

வலிந்து மலரை தன்னுடைய குடிசைக்கு அழைத்துச் சென்றாள் தேவி

“தப்பா நினைக்காத மலரு, உன்னோட பிரச்சினைக்கு என்கிட்ட தீர்விருக்கு. நாளைக்கே அஞ்சாயிரம் கிடைக்க வழியிருக்கு, ஆனா அதுக்கு நீ… நீ…” மேலே சொல்ல முடியாமல் திணறினாள் தேவி

“சொல்லு தேவி, எதுவாயிருந்தாலும் செய்ய நான் தயாராயிருக்கேன், பணம் கிடைச்சா போதும்…”

“மலர்… உன்னையே நீ இழந்தா தான் பணம் கிடைக்கும். தப்பு தான், ஆனா வேற வழியில்ல. இதோ ரெண்டு புள்ளைங்கள எனக்கு கொடுத்துட்டு காப்பாத்த முடியாம ஓடிப் போனானே பேடி. அதுக்கப்புறம் நான் எப்படி வாழ்க்கைய ஓட்டறேன் தெரியுமா? கூலி வேலைக்கு போயா?

இல்ல, பகலை இரவாக்கி படுத்துட்டு வரேன். வேலை கொடுக்க தயங்குனவன் எவனும் படுக்க தயங்கவேயில்லை. உடம்பு நாறிப் போனாலும் மனசு மரத்துப் போனாலும் துணிஞ்சு படுக்கறேன். எல்லாம் இந்த புள்ளைங்க மூஞ்சுக்காக

அடிக்கடி என் வீட்டுக்கு வந்துட்டுப் போறவனோட தொடுப்பிருக்குன்னு ஊரு பேசுதே, அவன் கள்ள காதலன் இல்ல மலரு, புரோக்கன். கிராக்கி புடிச்சு கொடுப்பான். இப்பக் கூட நல்ல கிராக்கி வந்துருக்குன்னு சொன்னான்.

என்னால மூணு நாளைக்கு எங்கயும் போக முடியாது, பெரிய இடமாம், சுளையாஅஞ்சாயிரம் கிடைக்குமாம். ஒரு ராத்திரி அவனோட போனா போதும், பணத்தோட வந்துடலாம். உன்னை தப்பு செய்ய தூண்டலை மலரு, பணத்துக்கு வழி சொல்லியிருக்கேன்

நல்லா யோசி, சம்மதம்னா பத்து மணிக்கு மேல புறப்பட தயாரா இரு. குழந்தையயும் காளியண்ணனையும் நான் பார்த்துக்கறேன். விடிஞ்சதும் திரும்பிடலாம், யாருக்கும் எதுவும் தெரியாது. இனிமே நீ தான் முடிவெடுக்கணும் மலரு…” 

தேவி சொல்லி விட்டாள், மலர் தான் குழம்பித் தவிக்கிறாள்

கட்டிய கணவனுக்கு துரோகம் செய்வதா? கேவலம் உடலை விற்று கணவனைக் காப்பாற்ற போகிறாளா? மனம் ஒப்ப மறுக்கிறது, இன்னொரு பக்கம் கணவனைக் காப்பாற்ற வேண்டும் என மனம் துடிக்கிறது

நடப்பது நடக்கட்டும் காளியப்பன் எழுந்து நடமாட வேண்டும், மனதைக் கல்லாக்கிக் கொண்டு துணிந்து முடிவெடுத்து விட்டாள் மலர்

ரவு ஒன்பது மணிக்கே உணவோடு காளியப்பனுக்கு உரிய மருந்து மாத்திரைகளை கொடுத்து விட்டாள். காளியப்பன் உறங்க ஆரம்பித்ததும் குழந்தைக்கு பாலூட்டி தூளியில் போட்டு தாலாட்டினாள்

குழந்தை கண்களை மூடியதும் சத்தமின்றி கதவை தாளிட்டு வெளியே வந்தாள். தேவி காத்துக் கொண்டிருந்தாள் 

“மலர்… தெருமுனையில புரோக்கர் ஆட்டோவோட காத்துகிட்டிருக்கான். வேலை முடிஞ்சதும் தெருமுனையில கொண்டாந்து விட்டுடுவான், போயிட்டு வா மலரு. நீ வர்ற வரைக்கும் நான் குடிசைக்கு வெளிய படுத்துகிட்டிருக்கிறேன். குழந்தை அழுதா நான் பார்த்துக்கறேன்…” எனவும், சரியெனத் தலையாட்டியபடி கண்ணீரை மறைத்தபடி இருளில் நடந்தாள் மலர்

பணமிருப்பவனின் காமப்பசிக்கு இரவோடு இரவாக இரையானாள். நடக்கக் கூடாதது நடந்து விட்டதை காணாதது போல பொழுது புலரத் தொடங்கியது

உடலைப் பறி கொடுத்து உள்ளம் நடுங்க குற்ற உணர்வோடு திரும்பி வந்து விட்டாள் மலர். கையிலிருந்த பணத்தை பார்க்கவே அருவெறுப்பாய் இருந்தது

தேவியை எழுப்பி அவளது குடிசைக்கு அனுப்பி விட்டு, பச்சைத் தண்ணீரை மொண்டு தலையில் ஊற்றிக் கொண்டு ஈரப்புடவையுடன் வீட்டுக்குள் நுழைந்தாள்

நல்லவேளை குழந்தையும் கணவனும் விழிக்கவில்லை. உடலை விட்டு உயிர் பிரிந்ததைப் போன்ற வேதனையில் துடித்தாள்

காளியப்பனுக்கு சரியானதும் உண்மையை சொல்லிவிட்டு விலகிட வேண்டும். கறைபட்ட உடலோடு அவனோடு இணைந்து வாழ முடியாது என நினைத்தாள்

நாட்கள் நகர்ந்தன. காளியப்பனுக்கு போடப்பட்ட ஊசி நன்றாகவே வேலை செய்தது. காளி மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்பிக் கொண்டிருந்தான்

மருந்தும் மலரின் கவனிப்பும் அவனைத் தேற்றியிருந்தது. மீண்டும் வேலைக்குச் செல்ல ஆரம்பித்தான். இப்போது மலர் தான் நோய் படுக்கையில் விழுந்தவளைப் போல மெலிந்து கொண்டிருந்தாள். 

அவளின் முகத்தில் புன்னகையுமில்லை, இதயத்தில் அமைதியுமில்லை

“புருசனுக்காகத் தானே இந்த தப்பை செஞ்ச மலர், எதுக்காக உன்னையே வருத்திக்கற? நடந்ததை கெட்ட கனவா நினைச்சு மறந்துடு மலர்” என தேவி கூறிய சமாதானத்தை மலர் ஏற்கவில்லை

“நான் செஞ்சது நம்பிக்கை துரோகம், உண்மையை அவர்கிட்ட சொல்லத் தான் போறேன். எந்த தண்டனையையும் ஏற்க தயாரா இருக்கேன்” என்றவளின் குரலில் உறுதி தெரிந்தது

ன்று இரவு பௌர்ணமி நிலவு ஒளி வீசிக் கொண்டிருந்தது. வேலைக்குச் சென்று திரும்பிய காளியப்பன், கை நிறைய மல்லிகைப்பூவும் அல்வாவும் குழந்தைக்கு சத்துமாவுக் கஞ்சியும் வாங்கி வந்திருந்தான்

சுரத்தேயில்லாமல் மலர் அவற்றை வாங்கி ஓரமாக வைத்தாள். கண்களில் ஆசையோடு அவளை நெருங்கினான் காளி, அவளோ விலகிச் சென்றாள். பற்றி இழுத்து முத்தமிட்டான்

“என்ன மலரு? எம்புட்டு நாளாச்சு, ஏன் விலகிப் போற?” எனக் கேட்டவாறே அவளைப் பற்றி அணைத்தான்

உடல் பதற அவன் பிடியிலிருந்து விலக முயற்சித்தாள்  மலர். கேள்விக் குறியோடு அவளை பார்த்தான். அவளால் அதற்கு மேல் பொறுக்க முடியவில்லை

“தப்பு நடந்து போச்சுய்யா, உனக்கு உடம்பு சரியாகறதுக்காக நான் சோரம் போயிட்டேன். உன்னைக் காப்பாத்துன என்னால, மானத்தைக் காப்பாத்திக்க முடியலை. எச்சில்பட்ட உடம்போட உன் கூட வாழ விரும்பல, என்னை விட்டுடு. நான் எங்கேயாச்சும் போறேன், இல்ல உன் கையால வெட்டிப் போட்டாலும் சரி தான். இந்த பாவிக்கு தண்டனை கொடுய்யா…” என மனதில் உள்ளதை எல்லாம் கொட்டியவள், கைகளால் முகத்தை அறைந்தபடி கதறினாள் மலர்

அவளின் இரண்டு கைகளையும் ஆதரவாய் பற்றிக் கொண்டான் காளி

“நடந்தது எனக்குத் தெரியும் மலர், நீயும் தேவியும் பேசினதை தற்செயலா கேட்டேன். முதல்ல ஆத்திரம் வந்தது, அப்புறம் உன் நிலைய யோசிச்சு பார்த்தேன். புருசனை காப்பாத்த தவறான வழியைத் தேர்ந்தெடுத்தாலும், என் மேல இருக்கற அன்பு தானே உன்னை தப்பு செய்ய வெச்சது. எனக்காகத் தானே விருப்பமில்லாம சோரம் போன.

கற்புங்கறது வெறும் உடம்பு சம்பந்தப்பட்ட விஷயமில்ல, மனசு தான் முக்கியம். உன்னோட உடம்பு வேணும்னா கறை பட்டிருக்கலாம், ஆனா மனசு சொக்கத் தங்கம். என்னைக்கும் அது எனக்குத் தான் சொந்தம். உன்னோட மனசு வருத்தப்படக் கூடாதுன்னு நான் எதையும் கேட்கல

நீ இல்லைன்னா நான் வாழறதுல அர்த்தமில்ல, எனக்காக நம்ம குழந்தைக்காக நடந்ததை மறந்து, நீ புதிய வாழ்க்கையை வாழத்தான் வேணும். சரின்னா ரெண்டு பேரும் சேந்து வாழலாம், இல்லைன்னா ரெண்டு பேரும் சேந்தே செத்துடலாம். நீ எந்த முடிவெடுத்தாலும் எனக்கு சம்மதம் தான்” என்ற காளி தன்கைகளை நீட்ட, ஆதரவாய் ஓடி வந்து பற்றிக் கொண்டாள் மலர்

காளியப்பனின் விரல்கள் மலரின் கண்ணீரைத் துடைக்க, சத்தமில்லாமல் அவர்களின் வாழ்க்கையில் புதிய அத்தியாயம் தொடங்கியிருந்தது

‘சஹானா’ இணைய இதழின் ‘சிறுகதை விமர்சனப் போட்டி’ யில் கலந்து கொண்டு பரிசு வெல்லும் வாய்ப்பு. போட்டி விவரங்கள் அறிய, இங்கு கிளிக் செய்யுங்கள்

#ads தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇

      

        

‘சஹானா’ இதழை Amazonல் வாசிக்க இணைப்பு இதோ 👇

              

          

  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

2 Comments

  1. அருமையான கதை.எத்தனை நிதர்சன நிகழ்வு.. நிறைய்ய வீடுகளில் ஏழ்மை இழப்புகளாக இன்றும் நேற்றும் நாளையும் மாற்ற முடியாத பெண் விலைக்கு போகிறாள். யாரோ ஓர் ஜீவனை காக்க வேண்டி..தன்னை விற்கும் நிலை உண்டு.அழகாக சொல்லிய விதம் அருமை.பாராட்டுக்கள் எழுத்தாளருக்கு.

முதியோர் தினம்  (சிறுகதை) – ✍ பெருமாள் நல்லமுத்து  

ஆழியின் காதலி ❤ (பகுதி 16) -✍ விபா விஷா