sahanamag.com
சிறுகதைகள்

முதியோர் தினம்  (சிறுகதை) – ✍ பெருமாள் நல்லமுத்து  

#ads – Amazon Great Indian Festival Deals 👇


மாத போட்டிக்கான பதிவு (அக்டோபர் 2021)

”என்னங்க காலிங் பெல் அடிக்கது காதில விழலையா உங்களுக்கு? போய் கதவ திறங்க, நம்ம சிராஜா தான் இருக்கும், சீக்கிரம் போங்க” என கணவரை அவசரப்படுத்தினாள் கோமதி                                                           

துண்டை எடுத்து தோளில் போட்டுக் கொண்டு முன்வாசலை நோக்கி நடந்தார் பெரியவர் ராமநாதன். சொன்ன மாதிரியே வெளியே நின்றிருந்தான் சிராஜ்

“ஹாய் மாமா எப்படி இருக்கீங்க?’’ என்றவன் கேட்க 

“வாடாப்பா வா, எங்க இன்னும் வரலையேன்னு யோசிச்சுட்டேயிருந்தேன் வந்துட்ட” என வரவேற்றார் 

“அது எப்படி வராம இருப்பேன்? எப்ப ஞாயிறு வரும்னு தான காத்துட்டு இருக்கேன். அதுவும் இன்னைக்கு முதியோர் தினம்ல மாமா. போனவாரம் கேட்டீங்களே, சுத்தமான தேன். நேத்து மார்க்கெட் போயிருந்தேன், இந்தாங்க” என ஒரு கிலோ தேன் பாட்டிலை பெரியவரிடம் கொடுத்தான் சிராஜ் 

“அத்தை இந்தாங்க சுக்கு காபியும், நாட்டு சக்கரையும். எல்லாமே குறளகத்தில உள்ள காதி க்ராஃப்ட்ல வாங்கிட்டு வந்தேன்”                                                             

“ஏம்பா உனக்கு இவ்ளோ சிரமம்” 

“சிரமமா? அப்படில்லாம் ஒண்ணுமில்ல. வயசான காலத்துல வெளிய போய் வாங்கிட்டு வர்றது உங்க ரெண்டு பேருக்கும் தான் சிரமம். அதனாலத் தான் நான் வாங்கிட்டு வந்திருக்கேன். அது மட்டுமில்ல, வரும் போதே ஆட்டு இறைச்சியும் வாங்கிட்டு வந்திருக்கேன், இன்னைக்கு என்னோட பிரியாணி தான் உங்க ரெண்டு பேருக்கும்”

”எங்கயிருந்துப்பா இறைச்சி வாங்கிட்டு வந்த”

“நம்ம ஸ்கூல் பஸ்ஸ்டாப்புக்கு பக்கத்திலேயே ஜாகீர் அண்ணன் வெள்ளாட்டுக்கறி போடறார், அங்க தான் வாங்கிட்டு வந்தேன்”

“சூப்பர் சூப்பர்… அப்ப ரொம்ப நாளைக்குப் பிறகு நம்ம ஊர்ல கறி சோறு சாப்பிட்டா மாதிரி  இன்னைக்கு சாப்பிடலாம்”

“ஏன் இவ்ளோ நாளா நான் சமைச்சு போட்டதெல்லாம் நல்லாயில்லையா? வயசாயிடுச்சில்ல, நாக்கு செத்துப் போயிருக்கும் உங்களுக்கு” என்றாள் கோமதி

அடுப்பாங்கரைக்கு வெளியே உள்ள சாப்பாட்டு மேஜை மீது தான் வாங்கி வந்த பொருட்களையெல்லாம் எடுத்து வைத்தான் சிராஜ்

“அத்தை இங்க வாங்க” என கையை பிடித்து மெதுவாக அழைத்து வந்து சோபாவில் உட்கார வைத்தான், “மாமா நீங்களும் தான் வாங்க” என்று அவரையும் அத்தையின் அருகே உட்கார வைத்தவன்

தொலைக்காட்சியை போட்டு, “நீங்க ரெண்டு பேரும் ஒங்களுக்கு புடிச்ச பழைய படமோ பாட்டோ பார்த்துட்டு இருங்க, அதுக்குள்ளார நான் சமையல்லாம் முடிச்சிட்டு சாப்பிடக் கூப்பிடுறேன். சமத்தா ரெண்டு பேரும் சண்டையேதும் போடாம அமைதியா இருக்கணும் சரியா?” என்றான் சிராஜ்

“என்னப்பா இது சின்ன புள்ளைகள உட்கார வச்சிருக்கிறா மாதிரி எங்க ரெண்டு பேரையும் இப்படி உட்கார வச்சிருக்க”                                 

“அத்தை இன்னைக்கி நான் சொல்றா மாதிரி தான் நடந்துக்கணும், சரி சரி பாருங்க” என்றவன், அத்தையின் கையில் ரிமோட்டை கொடுத்தான் 

பின், “இருங்க வர்றேன்” என அடுப்பங்கரைக்கு சென்றான்

“சிராஜூக்கு அப்படியே அவுங்க அம்மா குணம் இல்லங்க” என கோமதி கூற 

“ஆமாமா அவ அப்படித் தான், தெரிஞ்சவங்க தெரியாதவங்க சொந்தக்காரங்கன்னு எல்லார்கிட்டயும் அன்பா நடந்துப்பா’’ என்றார் ராமநாதன் 

சிறிது நேரம் கழித்து, “அத்தை மாமா, இந்தாங்க சுக்கு காபி சூடா இருக்கு பாத்துக் குடிங்க” என சிராஜ் கொடுக்க                                                 

“ஏம்பா உனக்கு?’’                                                                         

“இதோ எனக்கும் தான்” என்றவன், சுக்கு காஃபியை உறிஞ்சிக் கொண்டே பூண்டை எடுத்து நடுவில் கத்தியை வைத்து இரண்டாக பிளந்து தோலை உரிக்க ஆரம்பித்தான்

“கொடுப்பா நானும் உதவி செய்றேன்” என்ற மாமாவை

“ம்ஷூம் நாந்தான் எல்லா வேலைகளையும் செய்வேன்” என்றவன், வேகமாக உரிக்க ஆரம்பித்தான்

“அத்தை… இந்தப் படத்த ஒரு தீபாவளிக்கு நாமெல்லாம் ஒன்னா போய் வைத்தீஸ்வரன் கோயில் சன்முகா தியேட்டர்ல பார்த்திருக்கோம், ஞாபகமிருக்கா ஒங்க ரெண்டு பேருக்கும். கல்கோனாவும் , கடலை மிட்டாயும் நீங்க தான் மாமா எனக்கு வாங்கிக் குடுத்தீங்க”

“அப்படியா எனக்கு ஞாபகமே இல்லப்பா, நீயாவது ஞாபகம் வச்சிருக்கியே ரொம்ப சந்தோஷம்பா”

இஞ்சியில் படிந்திருந்த மண்ணை கழுவி விட்டு சிறுசிறு துண்டுகளாக நறுக்கி, அதனுடன் பூண்டையும் சேர்த்து மிக்சியில் போட்டு நயமாக அரைத்து எடுத்துக் கொண்டான்

“அத்தை குக்கர் எங்க இருக்கு?’’                                                                                      

“மேடைக்கு கீழே உள்ள சிலாப்ப திறந்து பாருப்பா”

குக்கரை கழுவி அடுப்பை பற்ற வைத்து அதன் மேல் வைத்தவன், லேசாக நெய் விட்டு வெங்காயம், தக்காளி, பட்டை, லவங்கம், சீரகம், போன்ற மசாலா அயிட்டங்களை அதனுள் இட்டு அடுப்பை மெதுவான அனலில் வைத்தான்

மசாலாக்கள் பொன்னிரமாக வந்தவுடன், ஏற்கனவே கழுவி வைத்திருந்த இறைச்சியை போட்டு நன்றாக கிண்டி தண்ணீர் விட்டு அதன் மீது மிளகாய், மஞ்சள், மல்லித்தூள்களை போட்டு ஊற வைத்த அரிசியை போட்டு குக்கரை மூடிவிட்டு திரும்புகையில், அடுப்பாங்கரை வாசலில் அத்தையும் மாமாவும் நின்றிருந்தார்கள்.                                          

”பார்த்தீங்களா?’’                                                                             

“இங்கயிருந்து பார்த்துட்டு தான் இருந்தோம்’’

“நான் அதச் சொல்லல, ஒங்க ரெண்டு பேரையும் ஹால்ல ஒக்காந்து இருக்கச் சொன்னேன்ல, வாங்க வாங்க” என இருவரையும் அழைத்துச் சென்றான் சிராஜ்.

“மாமா ஒங்களுக்கு ரைத்தா வேணுமா? இல்ல கத்தரிக்கா வேணுமா?”                            

“எங்களுக்கு எதுன்னாலும் சரிப்பா” என்றார்கள் இருவரும்

“அதெல்லாம் கெடையாது, ஒங்க ரெண்டு பேரோட விருப்பம் தான் இன்னிக்கி நான் செய்து கொடுக்கப் போறேன். அதனால கரெக்டா சொல்லுங்க” என்றான் சிராஜ்

”சரிப்பா எங்க ரெண்டு பேருக்கும் தயிர் பச்சடியே போதும்பா” என்றனர் 

“உண்மையா தான சொல்றீங்க, இல்ல நான் கஷ்டப்படுவேன்னு நெனச்சிட்டு சொல்றீங்களா?’’    

“இல்லப்பா நாங்களே அடிக்கடி அதத் தான் செய்வோம், நாங்க வேணும்னா வெங்காயம் கட் பண்ணி தரட்டுமாப்பா?’’

“எல்லாத்தையும் நானே பாத்துக்கறேன், அப்புறம் குடிக்க ஏதாவது வேணுமா?’’            

“இப்பத் தானேப்பா சுக்கு காஃபி போட்டுக் கொடுத்த, எங்களுக்கு ரொம்ப கஷ்டமா இருக்குப்பா, வாரம் முழுக்க வேலைக்கு போயிட்டு வந்திட்டு, ட்ரெஸ்செல்லாம் கூட துவைக்காம இங்க வந்து எங்களுக்காக கஷ்டப்படறீயேப்பா?”      

அடுப்பங்கரையிலிருந்து பள்ளிக்கூடத்தில் விளையாட்டு ஆசிரியர் அடிக்கும் விசில் சத்தம் போல் சத்தம் வந்தது. உள்ளே சென்றவன், அடுப்பை அணைத்தான்           

“யப்பா பிரியாணி வாசனை இங்க வரைக்கும் அப்படியே மிதந்து வருதுப்பா”

“அப்படியா இப்பவே வாசனையெல்லாம் நுகர்ந்துட்டீங்கன்னா, அப்புறம் சாப்பிடும் போது வாசனை இருக்காது சொல்லிப்புட்டேன் ஆமா” என்றான் சிராஜ்

சாப்பாட்டு மேஜை மீது பெரிய வெங்காயத் தோலை உரித்து, கட் பண்ண ஆரம்பித்தான்

“என்னங்க இந்த பையன பாத்தீங்களா? எவ்ளோ அருமையா பொம்பள சமைக்கிறா மாதிரி சமைக்கிறான். ம்ம்ம் கட்டிக்கப்போற பொண்ணு ரொம்ப கொடுத்துவச்சவளாத் தான் இருப்பா”

“என்ன அத்தை ரெண்டு பேரும் ஏதோ என்னையப் பத்தி முனுமுனுத்துகிட்டே இருக்கிற மாதிரி தெரியுது” 

“ஒன்னுமில்லப்பா, நீ சமைக்கிற அழக ரசிச்சி பார்த்துட்டு இருக்கோம்”

”நீங்க ரெண்டு பேரும் மட்டும் என்னா, சின்ன வயசில என்னைய நல்லா பாசமாத் தான பாத்துகிட்டீங்க’’                                          

பேசிக் கொண்டே வெங்காயத்தை பொடிசாக வெட்டி ஒரு பாத்திரத்தில் போட்டு, அதில் தயிரை கொட்டி நான்கைந்து பச்சை மிளகாய்களை சிறு சிறு துண்டுகளாக வெட்டி கலந்து, தேவையான அளவு உப்பையும் சேர்த்தான்

“ஏம்பா சிராஜ்… நீ வரும் போதே ஒன்னோட ட்ரெஸ்செல்லாம் எடுத்துட்டு வந்திருந்தீன்னா, நம்ம வாஷிங்மெஷின்ல போட்டு துவைச்சி காயவச்சி எடுத்துட்டு போயிருக்கலாம்ல?’’                                                                               

“நான் தெனமும் குளிக்கும் போதே அன்னன்னைக்கு போடுற துணிகளை துவச்சி போட்டுருவேன், சேத்து வச்சிக்கிறது கெடையாது”

“ஆமாமா எப்பவுமே அழுக்கு துணிகளை சேர்த்து வைக்க கூடாது” என்றார்கள் இருவரும்

ஆவி அடங்கிய குக்கரிலிருந்து பிரியாணியை எடுத்து அகலமான பாத்திரத்தில் போட்டு, டைனிங் ஹாலுக்கு எடுத்து வந்தான்

“அத்தை மாமா ரெண்டு பேரும் வாங்க, சுடச்சுட பிரியாணி தயார்” என்றான் சிராஜ்.                   

“இங்கப் பாருப்பா இவ்ளோ நேரம் நீ சொன்னா மாதிரி நாங்க ரெண்டு பேரும் அமைதியா உட்கார்ந்து இருந்தோம்”                             

“அதனால ?’’                                                                                                                  

“அதனால நீயும் உங்க மாமாவும் சாப்பிட ஒக்காருங்க, நாந்தான் பிரியாணிய பரிமாறுவேன் சரியா”

“இருக்கிறது நாம மூணு பேர்தான், அப்படியே ஒன்னா உக்காந்து சாப்பிடுவோம்” என்றவன் கூற, மூவரும் சாப்பிட அமர்ந்தனர் 

இரண்டு பேரின் தட்டுகளிலும் ஆவி பறக்க பிரியானியை பரிமாறி, தட்டின் ஓரத்தில் தயிர் பச்சடியை வைத்தான்

“நீயும் போட்டுக்கப்பா?’’                                                                                           

“ம்ம்ம் எனக்கும் தான்” என அவனது தட்டிலும் போட்டுக் கொண்டான் சிராஜ்

“ம்ம் உண்மையிலேயே சொல்றேன்பா, ஒவ்வொரு ரம்ஜானுக்கும் ஒங்கம்மா போட்டுத் தர்ற பிரியாணி ருசி உன்னோட கை பக்குவத்தலயும் வந்திடுச்சுப்பா, என்னா நான் சொல்றது சரி தான கோமதி?”                                          

“அப்படியே அதே ருசிங்க, யப்பாடி நீயும் நல்லா போட்டு சாப்பிடுப்பா”

“அத்தை போன் அடிக்கிறா மாதிரி இல்ல”

“ஆமாம்பா…”

“இருங்க இருங்க நீங்க சாப்பிடுங்க, நான் போய் எடுத்துட்டு வர்றேன்” என கைப்பேசியை எடுத்து வந்து கோமதியிடம் கொடுத்தான்.                                                          

“ஹலோ நல்லாயிருக்கியாம்மா? மாப்ள, பசங்கல்லாம் நல்லாயிருக்கிங்களா? இன்னைக்கும் நம்ம சிராஜ் தம்பி வந்து பிரியாணி எல்லாம் செய்து கொடுத்திருக்கு, என்னது போன கொடுக்கனுமா?  இந்தாப்பா அன்பரசி பேசறா”                                              

“ஹலோ சொல்லுங்கா நால்லாயிருக்கீங்களா? அத்தான் பிள்ளைகள் நல்லாயிருக்காங்களா?”

“நாங்கெல்லாம் நல்லாயிருக்கோம் ப்பா, உனக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியல. நீடூர்ல பக்கத்து வீட்ல குடியிருந்த பாசத்தில, இப்ப சென்னையில வேலை பாக்குற நீ அப்பாவையும், அம்மாவையும் வாரா வாரம் வந்து பாத்துக்கிறத நினைக்கும் போது ரொம்ப சந்தோஷமா இருக்குப்பா”                                     

“அட நீ வேறக்கா, நாமென்ன பக்கத்து வீட்டு பசங்க மாதிரியா வளர்ந்தோம், ஒரே வீட்டு புள்ளைங்க மாதிரி தான வளர்ந்தோம். எனக்கு கல்யாணமானலும் கூட, வார வாரம் வந்து அத்தையையும், மாமவையும் கவனிச்சுக்கறேன் சரியா?’’

“சரிப்பா” என்று நன்றி கூறினாள், அமெரிக்காவில் இருந்து பேசிய கோமதி ராமநாதனின் மகள் அன்பரசி

மனம் விசாலமாய் இருந்தால், அன்புக்கு பஞ்சமில்லை

‘சஹானா’ இணைய இதழின் ‘சிறுகதை விமர்சனப் போட்டி’ யில் கலந்து கொண்டு பரிசு வெல்லும் வாய்ப்பு. போட்டி விவரங்கள் அறிய, இங்கு கிளிக் செய்யுங்கள்

தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇

      

        

‘சஹானா’ இதழை Amazonல் வாசிக்க இணைப்பு இதோ 👇

              

          

  

                                      

Similar Posts

2 thoughts on “முதியோர் தினம்  (சிறுகதை) – ✍ பெருமாள் நல்லமுத்து  
  1. நல்ல கதை. பரபரப்பில்லாமல் நிதானமாக எழுதி இருக்கார் கதாசிரியர். வாழ்த்துகள்.

  2. சிராஜ்மாதிரி ஒரு அன்பான மகன் இருந்தால். இன்றைக்கு முதியோர் இல்லமே தேவையில்லை. பக்கத்து வீட்டுப்பிள்ளையானாலும். எப்படி? அன்பா பழகுறான். அவங்க பெத்தபிள்ளைங்க இருந்தால் இப்படிப்பார்த்துப்பாங்கனா?தெரியாது. பிரியாணியைதான் சுவைக்க முடியலை. அருமையான கதை. இதை எழுதிய எழுத்தாளர்களுக்கு வாழ்த்துக்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!