in ,

கலையாத மேகங்கள்(சிறுகதை) – ✍ ரமணி. ச, சென்னை

கலையாத மேகங்கள்(சிறுகதை)
இந்த போட்டிக்கான சிறப்புப் பரிசுகளை வழங்குபவர்கள், Madhura Boutique நிறுவனத்தார். அவர்களின் https://madhuraboutique.in/ என்ற தளத்திற்கு சென்று, உங்களுக்கோ அல்லது உங்களுக்கு வேண்டியவர்களுக்கு பரிசு தரவோ, தரமான புடவைகள், வெள்ளி நகைகள், ஜெர்மன் சில்வர் நகைகள் பெற்றுக் கொள்ளலாம்

சிறுகதைப் போட்டி 2021 (கதை எண் 75)                                         

ழகிய  அரசமரத்தடி பிள்ளையார். குளம், கழனிகள், மலை, காடு இயற்கை அழகு மிளிரும் நாஞ்சில் கிராமம் உதயகிரி. அது ஒரு மழைக்காலம். 

இன்னிக்கு  நேத்திக்கு இல்லே. பல வருடங்கள் முன் நடந்த சம்பவம் இது. இன்றைக்கு மாதிரி கையோடவும் பையோடவும் எந்த கைபேசியும் கிடையாது. அப்போதெல்லாம் அவசரம்னா தந்தி தான்

அப்படித் தான் அன்னிக்கு சுந்தரத்திற்கு ஒரு தந்தி வந்தது. அந்த சிகப்பு சைக்கிளைப் பார்த்தாலே நமக்கு பயம் தான். அந்த ரோஸ் கலர் காகிதத்துல அணுகுண்டே இருக்கும்.

சுந்தரம் வாங்கிப் பிரிந்ததும், அது வெடித்தது. ‘Father serious…. Start immediately’.  சுந்தரம்  கைகாலெல்லாம் நடுங்க, இப்ப என்ன செய்யலாம்.  கிராமத்திலிருந்து  700 கிமீ  சென்னை,  அங்கிருக்கிறான் அவன் தம்பி நாராயணன். அவனுக்கு ஒரு கம்பெனியில் மிக உயர்ந்த வேலை.   

போன வாரம் தான்  ஊருக்கு வந்தவன்,  ஒரு மாற்றத்துக்கு  அப்பாவைக் தன்னுடன் சென்னைக்கு அழைத்து வந்தான் நாராயணன்

கிராமத்திலேயே பழக்கப்பட்டவர். அவ்வப்போது இரண்டாவது மகனுடன் சென்னை சென்று சில நாள் தங்கி விட்டு, மீண்டும் கிராமத்திற்கே ஓடி வந்து விடுவார்.

இங்கு  அவரது மளிகைக் கடையையும் தோப்பு, கழனிகளையும் பிரிந்து அதிக நாள் அவரால் இருக்க இயலாது

சுந்தரத்திற்கு ஒரு மகள் தெய்வா. SSLC  இறுதித் தேர்வு நடந்து கொண்டிருக்கிறது.  இன்னும் இரண்டு தேர்வுகள் உள்ளன. இந்த நிலையில் எல்லோரும் சென்னை செல்வது இயலாது.

மனைவி லட்சுமியிடம் கலந்து ஆலோசித்தான். கடைசியில் தான் மட்டும் இப்போது சென்னை செல்வது என முடிவு செய்து,  நாகர்கோவிலில் இருந்து மாலை புறப்படும் அரசு பஸ்ஸில் சென்னை கிளம்பினான்.

இப்போது மாதிரி பயணிகள் கூட்டம் கிடையாது.  சுந்தரம் ஏறிய பஸ் இரவு உணவுக்காக நெல்லை லாட்ஜில் நின்றது. சுந்தரம் ஏதோ சாப்பிட்டுவிட்டு பயணத்தைத் தொடர்ந்தான்.

அதன் பின் ஓரிடமும் அதிகமாக நிற்காமல்  இரவு 2 மணிக்கு திருச்சி வந்ததும் பேருந்து பழுதானது.  இதிலிருந்து பயணிகளை வேறொரு பேருந்தில் ஏற்றினார்கள்.

அது ஆடி அசைந்து காலை  9 மணிக்கு  சென்னை அடைந்தது. தம்பி வீட்டை அடையும் போது மணி 10.  வீட்டு வாசலில் பலர் நின்று கொண்டிருந்தனர். அந்த சூழ்நிலை சுந்தரத்திற்கு நிலைமை ஓரளவு புரிய வைத்தது.

ஆமாம். அவன் தந்தை இறந்து விட்டார். உள்ளே சென்ற சுந்தரம்  கதறினான்.

எல்லாம் முடிந்தது, தந்தையை வழி அனுப்பி விட்டு தம்பியிடம் ஆலோசித்தான். மற்ற காரியங்களை கிராமத்திலேயே  செய்து கொள்ள முடிவு செய்தனர்.

அடுத்த நாள் பால் கழிந்த பின் கிளம்பினான் சுந்தரம். தம்பி பத்தாவது நாளுக்கு முன் வருவதாகக் கூறினான்

தம்பி நாராயணனுக்கு  ஒரே மகன் குமார், 7வது படித்துக் கொண்டிருந்தான். முக்கியமான விஷயம் என்ன வென்றால், சுந்தரத்தின் தந்தை சரவண செட்டியார் ஏற்கெனவே மனைவியை இழந்தவர். தனது தனிமையை மறக்க தன் முழு கவனத்தையும் வியாபாரத்திலும் விவசாயத்திலும் ஈடுபடுத்திக் கொண்டார்.

சரவண செட்டியார்  கடை அந்த ஏரியாவில் மிகப் பிரசித்தம். சிறிய வெற்றிலை பாக்கு கடையாக துவங்கிய அவரது கடை, வளர்ந்து சுற்று வட்டாரத்திலுள்ள பல கடைகளுக்கு சப்ளை செய்யும் கடையாக இன்று உள்ளது. இதில் சுந்தரத்தின் பங்கு அதிகம். 

பள்ளியிருதி வகுப்பில் ஃபெயிலான சுந்தரம், தன் கல்வியை நிறுத்தி விட்டு, வியாபாரத்திலும் விவசாயத்திலும் தந்தைக்கு உதவியாக தன் தீவிர கவனத்தைச் செலுத்தினான். வியாபாரம் பெருகியது. நாராயணன் நன்கு படித்தான்

பி.இ முடித்தான். அவர்களின் தாய்மாமா சென்னையில் நல்ல நிலையில் இருந்தார். அவர் நாராயணனை அழைத்துக் கொண்டு போய் நல்ல கம்பெனியில் வேலை வாங்கிக் கொடுத்தார்.

பாஞ்சாலி,  இவர்கள் வீட்டின் பரம்பரை வேலைக்காரி…. வீட்டிலும் கடையிலும் ஏராளமான வேலைகள் செய்பவள்.  அவர்கள் குடும்பத்திலேயே ஒருவராக வாழ்பவள். 

அவளுக்கு ஒரே பெண் லட்சுமி…. வேலை விஷயமாக இவர்கள் வீட்டிற்கு அடிக்கடி வந்து போவாள். அம்மாவிற்கு உதவியாக சில வேலைகள் செய்து கொடுப்பாள்.  எனவே அவளுக்கு சுந்தரத்திடம் நெருங்கிப் பழகும் வாய்ப்பு கிடைத்தது. அது நாளாவட்டத்தில் காதலாக அரும்பியது.. 

குளக்கரை, கோவில் என அது வளர்ந்து கொண்டிருந்தது.  சரவண செட்டியார்,. தனது மகன் சுந்தரத்திற்கு வரன் தேடினார். பணக்கார மாப்பிள்ளையல்லவா…. பல பேர் போட்டி போட்டுக் கொண்டு தம் பெண்களைக் கொடுக்க முன் வந்தனர்.    

அப்போது தான் ஒருநாள், சரவண செட்டியாரின் நண்பர் ஒருவர் சுந்தரம், லட்சுமியுடன் சுற்றுவதை அவர் காதில் போட்டார்.  முதலில் செட்டியார் அதை அவ்வளவாக சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை. 

ஏதோ இளவயது, அப்படி இப்படி இருப்பார்கள், திருமணமானால் சரியாகி விடும் என நினைத்தார்.  ஆனால், மேலும் சிலர் இதைப் பற்றிக் கூறவே, சரவண செட்டியார் தன் மனைவியுடன் கலந்து ஆலோசித்தார்.

அவரது மனைவிக்கு லட்சுமியை மிகவும் பிடிக்கும். நல்ல பெண் தான். ஆனால் ஜாதி…?  அது பயங்கர கேள்விக்குறியாக இருந்தது. சுந்தரத்தை நேரடியாகவே கேட்டார். 

சுந்தரம் தன் காதலைத் தெரிவித்தான்.  யாரோ இல்லையே… மிகவும் பழகிய கிட்டத்தட்ட அவர்கள் குடும்பத்திலேயே ஒருவள் என்று பழகுபவளை நிராகரிக்க செட்டியாருக்கு விருப்பமில்லை.

ஆனால், இவர் ஜாதி விட்டு திருமணம் செய்தால் அவர் ஜாதிக்காரர்கள் சும்மா இருக்க மாட்டார்களே…. ஏற்கனவே வெறும் வாயை மெல்லும் அவர்கள் அவல் கிடைத்தால் விடுவார்களா. 

பேனைப் பெருச்சாளியாக்கும் சமூகத்தில், ‘ஓஹோ… செட்டியார் வீட்டில் வேலைக்குப் போன பெண்ணைப் பையன் கை வச்சுட்டான்’ என பேச வாய்ப்புள்ளது என எண்ணினார்

ஆனால், இந்த சமூகத்தின் நாடி நரம்பெல்லாம் அத்துப்படியான செட்டியார், இதற்கெல்லாம் கவலைப்படவில்லை. மாறாக, ஓர் ஏழைப் பெண்ணிற்கு வாழ்வளிக்கிறோம் என்ற திருப்தி அவரது மனத்தை நிறைத்தது. 

எதைப் பற்றியும் பொருட்படுத்தாமல், சுந்தரத்திற்கு லட்சுமியை மணமுடித்தார்.  ஊர்க்காரர்கள் அனைவரும் வந்து சாப்பிட்டனர்.  என்ன… ஒருவருக் கொருவர் கசமுசா கசமுசா என்று பேசிக் கொண்டனர்.

ஒரு நாள், ரெண்டு நாள்…. ஏன்… ஒரு வாரம்… அவ்வளவு தான்… அப்புறம் அடுத்த டாபிக்கைத் தேடினர். வழக்கம் போல் கதிரவன் உதயமானான்.

இந்தக் கல்யாணத்தால் ஏமாந்த பெண்களைப் பெற்றோர் பொறாமையால் இவர்களைத் தூற்றினர்.  ஆனால் செட்டியாருக்கு இன்னொரு மகன் இருக்கானே. முயற்சி செய்வோமே  என சிலர் நினைத்தனர். அங்கும் விதி விளையாடியது.

ஏனெனில் அவனது தாய்மாமா தன் பெண்ணை நாராயணனுக்கு முடிக்க முடிவு செய்திருந்தார். பெண்ணின் படிப்பு முடிவதற்காகக் காத்திருந்தவர் மெதுவாக செட்டியாரிடம் பேசத் துவங்கினார்.

மனைவியின் அழுத்தமும் சேரவே, நாராயணன் விமலா திருமணம் சென்னையில் நடந்தது. மாமாவே புதுமணத் தம்பதியரை புதிதாக வாங்கிய வீட்டில் குடியமர்த்தினார். 

ஆக சுந்தரம் கிராமத்திலும், நாராயணன் நகரத்திலும் வாழ்க்கை நடத்தினர். சுந்தரத்திற்கு ஒரு பெண்ணும், நாராயணனுக்கு ஒரு ஆணும் குழந்தைகள் பிறந்தன. ஒரு சில வருடங்கள் மக்களின் வாழ்க்கையில் சந்தோஷமாக இருந்த செட்டியாரின் மனைவி, புற்று நோயால் அவதிப்பட்டாள்.

தாயாரை நாராயணன் சென்னைக்கு கொண்டு போய் ராஜவைத்தியம் செய்தான்.  பணம் தண்ணீராய் செலவழிந்தது.  எதுவும் பலனளிக்காமல் உயிர் விட்டாள் தாயார்.

இந்த இழப்பு செட்டியாரை மிகவும் பாதித்தது. முதல் சில நாட்கள் வியாபாரம் விவசாயம் எதையும் கவனிக்காமல் வீட்டில் முடங்கி இருந்தார். சுந்தரம்  எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டான். 

ஆனால் அப்பாவை இப்படி விடுவது அவரது உடல் நிலையை பாதிக்கும் என கருதிய சுந்தரம், சில ஊர்ப் பெரியவர்களை கலந்தாலோசித்தான்.  அவர்கள் செட்டியாரைச் சந்தித்துப் பேசினர்.

அதன் எதிரொலியாக  சில நாட்களில் முன் போலவே வியாபாரத்திலும் விவசாயத்திலும் முழுக்கவனம் செலுத்தினார். அமைதியாக ஓடிக்கொண்டிருந்த ஓடம் சுழலில் சிக்கியது போல் இப்போது அவர் உயிரை விட்டார்.

என்ன ஒரு விசேஷம் என்றால், மனைவி இறந்த வீட்டிலேயே தன் இறுதி மூச்சை விட்டார்  அவன் தந்தை

16ம் நாள் காரியங்கள் முடிந்து உறவினர்கள் சென்று விட்டனர். சுந்தரம் தம்பியிடம் வந்தான்

“தம்பி…. இந்தப் பெரிய வீட்டுல நான் மட்டும் இருக்கறது எப்படியோ இருக்கு. ஸோ… நீ உன் வேலையை விட்டுட்டு இங்க வந்துடு. ரெண்டு பேருமா வியாபாரத்தைப் பாத்துக்கலாம். என்ன சொல்றே”

அங்கே அப்போது (தற்செயலாக…?) வந்த மனைவி விமலாவைப் பார்த்தான் நாராயணன்,  பார்வைகள் பேசிக் கொண்டன.

“இல்லேண்ணா… குமார் அங்க இங்கிலீஷ் மீடியத்துல படிக்கிறான். அது மட்டுமில்ல, விமலாவுக்கு கிராமமெல்லாம் பழக்கமில்லே. ஏதாவது ஆத்திர அவசரம்னா டாக்டர்ஸ் கெடைக்க மாட்டாங்க.  ஸோ…. நாங்க அங்கேயே இருக்கோம் அண்ணா…. நீ கடையப் பாத்துக்க….ஸாரி” என்றான்.

‘ஓ….. மதுரையா…’ என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டவன், “சரி தம்பி, நான் சொல்லிட்டேன், நாளைக்கு கேக்கலேங்கற பேர் எனக்கு வந்துடப்படாது” என்றான் சுந்தரம்.

நாட்கள் நகர்ந்தன. சுந்தரத்தின் மகள் தெய்வா, பள்ளியிறுதி வகுப்பில் இருந்தாள். பாடம் மட்டுமல்லாமல், விளையாட்டிலும் சிறந்து விளங்கினாள். 

அவர்கள் பள்ளி பேட்மின்டன் குழுவில் பல பதக்கங்கள் வாங்கினாள்.  இன்டர்ஸ்கூல் டூர்னமென்ட்டில் கலந்து கொள்ள சென்னை சென்று வந்தாள்

எல்லா தேர்வும் நன்றாக எழுதினாள்.  விதி இங்கே விளையாடியது.  கடைசி இரண்டு தேர்வுகள் எழுத முடியாமல் அம்மை பாதித்தது.  எனவே அந்த வருடம் வீணானது

அடுத்த வருடத்தில் மீண்டும் எழுதி நல்ல மதிப்பெண் வாங்கினாள். ஆனால் கல்லூரியில் தெய்வா எதிர்பார்த்த க்ரூப் கிடைக்கவில்லை. Second attempt என்று நிராகரிக்கப்பட்டாள்.  இரண்டாவது attemptக்கான காரணத்தை விளக்கியும் யாரும் ஏற்பதாக இல்லை. 

சரி கிடைத்த க்ரூப் படிக்கலாம் என ஆங்கில இலக்கியம் சேர்ந்தாள். கல்லூரியில் முதல் மாணவியாக  திகழ்ந்தாள், விளையாட்டையும் விடவில்லை. கல்லூரியில் மட்டுமல்ல, மாவட்டத்தில் சிறந்த வீராங்கனையாக திகழ்ந்தாள்

யின் காரணமாய், மாநில அணியில் தேர்ந்தெடுக்கப்பட்டாள் தெய்வா. நல்ல மதிப்பெண்களுடன் B.A.  முடித்து, B Ed. சேர்ந்தாள்.

இந்த நிலையில், தெய்வா இருந்த தமிழக இறகுபந்து அணி தேசிய அளவில் வெற்றி பெற, தெய்வாவிற்கு பதக்கங்கள் குவிந்தன. இந்த மகிழ்ச்சியின் ஊடே B.Ed முடித்து சென்னையில் ஒரு தனியார் பள்ளி ஆசிரியை ஆனாள்.

தெய்வா மாநில பேட்மின்டன் குழுவில் இருப்பது, பள்ளிக்கு பெருமை சேர்த்தது. அகில இந்திய அளவில் விளையாடியவள், முதல் முறையாக உலகப் போட்டியில் கலந்து கொண்டாள். 

வெண்கலப் பதக்கம் கிடைத்தது.  பாராட்டுக்கள் குவிந்தன. அந்த வருட ஒலிம்பிக்கில் விளையாட தேர்வு பெற்றாள் தெய்வா

இந்நிலையில்  நாராயணன் மகன் குமாரும் மருத்துவப் படிப்பை முடித்து, மேற்படிப்புக்காக வெளிநாடு சென்றான்.  வெளிநாட்டில் படிப்பு முடித்தவன் அங்கேயே ஒரு பிரபல மருத்துவ மனையில் பணியில் சேர்ந்தான்.  பல கடினமான அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக முடித்து, நிபுணன் ஆனான். அங்கேயே மருத்துவராக இருந்த ஜெர்மானியப் பெண்ணைக் காதலித்தான். 

இந்நிலையில் சுந்தரம் தெய்வாவிற்கு மாப்பிள்ளை பார்க்க பிள்ளையார் சுழி போட்டான். ஆனால் அது சுழியாகவே நின்றது. ஏனெனில் தெய்வா மேலும் சாதனைகளை எதிர்பார்த்தாள். 

அந்த ஒலிம்பிக்கில் வெள்ளியுடன் வந்தவளை உலகமே பாராட்டியது. ஒலிம்பிக்கில் தங்கம் பெறுவதையே தன் ஒரே குறிக்கோளாக நினைத்திருந்தவளுக்கு, திருமணத்தில் நாட்டமில்லை. அவள் பணிபுரிந்த பள்ளியும் அவளது குறிக்கோளை ஊக்குவித்தது.

சிறு இடைவெளியில் நாராயணன் மகன் குமார் இந்தியா வந்தான். நாராயணன் அவனது திருமண பேச்சை எடுக்க, கொஞ்சமும் தயங்காமல் தன் பெற்றோரிடம் தன் காதலைச் சொன்னான். மிகுந்த விவாதத்திற்குப் பின், பெற்றோர் பணிந்தனர், ஒரு கண்டிஷனுடன்

திருமணம் சென்னையில் இந்திய கலாசாரப்படி நடக்க வேண்டும்.  அவனது காதலியின் பெற்றோர்களும் ஒப்புப்  கொண்டனர். எனவே குமாரின் திருமணம் சென்னையில் ஜே… ஜே… என்று நடந்தது.

அவ்வளவு தான். அதோடு சரி. குமார் ஜெர்மனியில் செட்டில் ஆகி விட்டான்.  கிட்டத்தட்ட பெற்றோரை மறந்து விட்டான்.  எப்போதாவது ஆடிக்கொரு முறை அமாவாசைக்கொருமுறை என பெற்றவர்கள் ஜெர்மனிக்கு சென்று வந்தனர். 

அடுத்த வருடம் குழந்தை பிறக்க, அவர்களுக்கு பெற்றோரின் உதவி தேவைப்பட்டது. தனது வேலையிலிருந்து ஓய்வு பெற்ற நாராயணன், மனைவியுடன் ஜெர்மனிக்குச் சென்று மகனுடன் நிரந்தரமாக தங்கினான் 

தெய்வா ஒலிம்பிக்கில் மீண்டும் வெள்ளியுடன் வந்தாள்.  இனி தாமதிக்க முடியாது என்று எண்ணிய சுந்தரம், அவளுக்கு மாப்பிள்ளை பார்க்கத் தொடங்கினான். ஆனால், அது மிக மிகக் கடினமான பணியாயிற்று.  புகழின் உச்சியில் இருந்த தெய்வாவை மணக்க, பலரும் தயங்கினர். 

அந்த நேரம் சுந்தரத்தின் மாமியார் மறைய, அவளுக்கு இறுதி காரியங்கள் செய்த தூரத்து உறவினரான பரசு என்பவன், தெய்வாவை மணக்க சம்மதித்தான்.  இல்லை…. அவனது பேராசை அவனைத் தூண்டியது

தெய்வாவை விட… சுந்தரத்தின் சொத்தே அவனது குறிக்கோளானது.  அவனது தவறான நோக்கத்தை உணராத தெய்வா, பெற்றோரின் விருப்பத்திற்கிசைந்தாள். 

திருமணத்திற்கு முன்பே பரசு சுந்தரத்தின் சொத்துக்களில் பெரும்பாலானவற்றை தனது பெயருக்கு மாற்றிக் கொண்டான்.  அவனை நம்பி மகளைக் கொடுத்தான் சுந்தரம்.

திருமணம் முடிந்தது.  தெய்வா தொடர்ந்து வேலைக்குச் செல்லவும், விளையாட்டில் தொடரவும் விரும்பினாள். ஆனால் பரசு, கிராமத்தையும் சொத்துக்களையும் விட்டு அவளுடன் செல்ல விரும்பவில்லை.

தெய்வா சென்னையில் பணியைத் தொடர்ந்தாள். பரசு அதைப் பொருட்படுத்தவில்லை. மீன் பிடிக்க  தூண்டில் போட்டவன் கண், தக்கையிலேயே இருந்தது.

சுந்தரம் இருவரையும் சேர்த்து வைக்க எடுத்த முயற்சிகள் தோல்வியைத் தழுவின. தெய்வா இந்திய பேட்மின்டன் குழுவிற்கு பயிற்சியாளர் ஆனாள். மிகப் பெருமையுடன் புகழின் உச்சியில் இருந்த அவளின் சொந்த வாழ்க்கை, தோல்வியில் முடிந்தது

முதலில் அவ்வப்போது சென்னைக்கு வந்து கொண்டிருந்த பரசு, அதனை அறவே நிறுத்திக் கொண்டான். தெய்வாவை இது பாதிக்கவில்லை.  பரசுவும் பணத்திலேயே குறியாயிருந்தான். 

தங்கள் கண்முன்னே மகளின் வாழ்க்கை கெடுவதைப் பார்த்துக் கொண்டிருந்த தெய்வாவின் பெற்றோர், மகளுடன் சென்னைக்குச் சென்று விட்டனர்

இப்போது பரசு சுந்தரத்தின் அத்தனை சொத்துக்களையும் வளைத்துக் கொண்டான். ஒரே கொண்டாட்டம் தான்.  பல பேரின் கெட்ட சகவாசங்கள் அவனை எங்கேயோ அதல பாதாளத்திற்கு அழைத்துச் சென்றது.

குடியுடன் பெண்கள் சகவாசம் வேறு. அவன் பலரிடமும் ஏமாந்தான்.  பெருங்காயம் கடலில் கரையக் தொடங்கியது. வியாபாரத்தில் நஷ்டம். விவசாயத்தில் குத்தகைதாரர்களும் ஏமாற்றினார்கள்.  மதுவின் மயக்கத்திலேயே வீழ்ந்தவனை பெரு நோய் தொற்றிக் கொண்டது. 

அவன் இனி எழ முடியாது என்ற நிலையில், தெய்வா வந்தாள்.  அவன கதறி அழுதான், காலைப் பிடித்தான். தெய்வா,  காலிப் பெருங்காயடப்பாவில் மீதமிருந்த சில்லறையை எண்ணினாள். ஏதோ கொஞ்சம் தேறியது. அவற்றைத் தன் பெயருக்கு மாற்றிக் கொண்டாள்.

பரசுவை சென்னைக்கு அழைத்துச் சென்று உயர்தர மருத்துவ சிகிச்சை செய்தாள். அவன் உடல் தேறினான்.  

இப்போது சுந்தரம், மனைவி, மகள் மற்றும் மருமகனுடன் அமைதியான வாழ்க்கை வாழ்கிறார்கள்.

தெய்வா செய்தது சரியா…. தவறா…. ? வினாக்கள் விடையாவதில்லை.  கலைந்த மேகங்கள் திரண்டு கருக்கொள்வதில்லையா…?

‘சஹானா’ இணைய இதழின் ‘சிறுகதை விமர்சனப் போட்டி’ யில் கலந்து கொண்டு பரிசு வெல்லும் வாய்ப்பு. போட்டி விவரங்கள் அறிய, இங்கு கிளிக் செய்யுங்கள்

(முற்றும்)

#ads தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇

      

        

‘சஹானா’ சிறுகதைப் போட்டியில் பங்குபெறும் மற்ற கதைகளை வாசிக்க இணைப்பு இதோ – https://sahanamag.com/short-story-contest-2021-entries/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    வாழ்வே மாயம் (சிறுகதை) – ✍ வெங்கடரமணி

    கோடை மழை (சிறுகதை) – ✍ துரை.தனபாலன், திண்டுக்கல் மாவட்டம்