அக்டோபர் 2022 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு
பகுதி 1 பகுதி 2 பகுதி 3 பகுதி 4 பகுதி 5 பகுதி 6 பகுதி 7 பகுதி 8 பகுதி 9
“இங்க இன்னும் சிக்கல் தீரல” என்று சேத் கூற, மீண்டும் அதிரூபனுக்கு குழப்பநிலை.
“என்ன சேத்? இப்ப புதுசா என்ன பிரச்சனை?” என்றவன் கேட்க
அதற்குச் சேத், “இப்போ அந்த வ்ரித்ரா கழுத்துல இருந்து எடுத்தமே, அந்த ரெண்டும் அவன் உண்மையாவே தயாரிச்சு வச்சுருக்கற ஆயுதத்துக்கு முன்னாடி நூத்துல ஒரு பங்கு தான். தாவ் கிரகத்துல இருந்து இங்க வந்த நம்ம ஆயுதங்களைப் பராமரிக்கும் நிபுணர் குழு இங்க யகுசால இருக்க வ்ரித்ராவோட வீடு, அவனது ஆய்வுக் கூடங்கள் எல்லாம் சோதிச்சு பார்த்ததுல தான் அவன் ப்ரக்டனையும், ப்ரக்யானையும் இணைச்சு புதுசா ஒரு அழிவு சக்தியை உருவாக்கியிருக்கறதா தெரிஞ்சுது” என்று அவர் கூற, மனம் சலித்து விட்டது அதிரூபனுக்கு.
‘எவ்வளவு தான் முயன்றாலும், எத்தனை போராடினாலும் இந்தத் துர்சக்திகளானது மீண்டும் மீண்டும் எப்படி இப்படித் துளிர்த்தெழுந்து வருகிறது. வ்ரித்ராவுடைய ஒவ்வொரு கொடுஞ்செயல்களையும், ஒவ்வொரு நகர்வுகளைம் பார்த்து பார்த்துத் தகர்த்தாலும், வெட்ட வெட்ட துளிர்க்கும் கருங்காலி மரம் மாதிரி மீண்டும் மீண்டும் அவனோட கொடுஞ்செயல்கள் வெளிப்பட்டுட்டே இருக்கே’ என்று வேதனையுடன் எண்ணினான் அவன்.
மேலும், ‘அவன் இவ்வாறு மேலும் மேலும் சிக்கலுடன் போட்டிருக்கும் முடுச்சுகளை அவிழ்க்கவே இயலாது போலிருக்கு. இது எனக்கு எவ்வளவு பெரிய வேதனை. என் கண் முன்னாடி ஒருத்தன் இத்தனை துரோகம் செய்துருக்கான், ஆனா அவனை எதுவுமே செய்ய முடியாத நிலை’ இவ்வாறு தனக்குள் ஏற்பட்ட சலிப்பையும், வெஞ்சினத்தையும், தனக்குள்ளாகவே வைத்துக்கொண்டு, முகத்தை அமைதியாய்க் காண்பித்துக் கொண்டு, “அந்த வெடிபொருள் எங்க இருக்கு சேத்?” என்று அதிரூபன் கேட்க, அவர் அமைதியாகத் தனது கரத்தை நீட்டி, மூடியிருந்த கையைத் திறந்து காட்டினார்.
அவரது உள்ளங்கைக்குள் மிகவும் சிறிதாக ஒரு பேட்டி இருக்க, வாங்கிப் பார்த்த அதிரூபன் அதனைத் திறந்தான். அதைத் திறக்கவும், அந்தச் சிறிய பெட்டிக்குள் சிட்டுக்குருவியின் கருவிழியைப் போல உருண்டையாய், சிறுபளிங்கு போல ஏதோ ஒன்று இருந்தது.
அதை என்னவென்று அவன் தனது கையில் எடுக்க, “இது தான் அந்த ப்ரக்ட்டானும், ப்ரக்யானும் கலந்து செய்யப்பட்ட ஆயுதம்” என்று அவர் கூற, மிரண்டு போய் அவரைப் பார்த்தான் அதிரூபன்.
பிறகு, “இதென்ன இவ்வளவு சின்னதா இருக்கு? வ்ரித்ராவோட கழுத்துல அந்த ரெண்டு வெடிபொருளும் தனித்தனியா இருந்தப்போ கூட, அது அவ்வளவு பெருசா இருந்துச்சே?” என்று சந்தேகமாகக் கேட்க
“ஆமா ரூபா, இது அந்த இரண்டு வெடிபொருளோட தன்மையையும் மொத்தமா சேர்த்து, மீநுண்(நானோ)தொழில்நுட்பத்துல சிற்றுருவா மற்றம் செய்து உருவாக்கியிருக்கான். உருவத்துல சின்னதா இருந்தாலும், இதனோட ஆற்றல் பிரக்ட்டான விட ரொம்பவே அதிகம்” என்று சோர்வுடன் கூறினார்.
அவரது குரலில் இருக்கும் சோர்வை உணராத அதிரூபனோ, “சரி இது எவ்வளவு சக்தி வாய்ந்ததா இருந்தாலும், இத செயலிழக்கச் செய்யறதுக்கான வழிமுறை ஏதாவது இருக்கும்ல?” என்று கேட்க, அதே சோர்வு மாறாது தலையைக் குனிந்தபடி ‘இல்லை’ என தலையசைத்தார்.
“என்ன சொல்றீங்க சேத்.?” என்று இப்பொழுது முழு அதிர்ச்சியில் அதிரூபன். ஆனாலும் அவர் எதையோ மென்று முழுங்குவதாய் ஒரு சந்தேகம் அவனுள்.
“இத யாராலயும் அழிக்க முடியாது அதிரூபா, இன்னும் சில மணி நேரத்துல இது வெடிச்சு சிதறத் தான் போகுது” என்று தயக்கத்துடன் கூற, இப்பொழுது அவர் எதையோ மறைக்கிறார் என்பது அதிரூபனுக்கு நன்றாகவே தெரிய ஆரம்பித்தது.
அவனும் வெளிப்படையாகவே, “இல்ல சேத், நீங்க எதையோ மறைக்கறீங்க. உண்மைய சொல்லுங்க, உங்களுக்கு இந்த ஆயுதத்தை எப்படிச் செயலிழக்க வைக்கணும்னு தெரியும் தானே?” என்று கடுமையான குரலில் கேட்க, அவருக்குள்ளோ அதை ஒப்புக்கொள்வது போன்றதொரு மௌனம். அதைக் காணவும் அதிரூபனுக்குள் ஒரு வேகம்.. பரபரப்பு.. எல்லாமே.
அவனும், “அப்போ அது என்னனு வெளிப்படையா சொல்லுங்க சேத்” என்று அவன் கேட்க
இன்னமுமே சேத் தயங்கிக் கொண்டு இருக்க, “இந்தப் பிரபஞ்சம் காப்பாற்றபடனும்னு நீங்க நினைக்கிறீங்களா? இல்ல வேற ஏதாவது உங்களுக்கு எண்ணம் இருக்கா?” என்று இப்போது கடுமையான குரலில் கேட்டது அதிரூபன் தான்.
உடனே ஆழ்ந்த ஒரு பெருமூச்சை வெளியிட்டவர், “இந்த வெடி பொருளை செயலிழக்க வைக்கும் வழிமுறை நம்மகிட்ட இல்ல” என்று கூற
“இல்ல.. கண்டிப்பா இருக்கணும். தயவு செஞ்சு அதை உங்க நிபுணர் குழு கூடக் கலந்து பேசி எப்படியாவது கண்டுபிடிங்க” என்று அதிரூபன் கேட்க, வாயில் வழியும் ரத்தத்துடன் அவர்களைப் பார்த்து கேலியாய் சிரித்துக் கொண்டிருந்தான் வ்ரித்ரா.
“நான் வாழ முடியாத, நான் வாழ்வதற்குத் தகுதி இல்லாத ஒரு இடம் இருக்கவே கூடாது. அத்தனையும் சிதற போகுது” என்று கூறிவிட்டு மீண்டும் இடி இடி எனச் சிரிக்க, அவனை நொறுக்கிவிடும் ஆத்திரம் தான் அதிரூபனுக்கு.
ஆனால் கண்முன் இருக்கும் விஷயம் அவனைக் கொல்வதை விடப் பெரிது என்பதால் தன்னை மீண்டுமாய்க் கட்டுப்படுத்திக்கொண்டு, சேத்தின் முகத்தையே ஆர்வமுடன் பார்த்து, “இத செயலிழக்கச் செய்ய வழிமுறை உங்களுக்குக் கண்டிப்பா தெரியும். தயவு செஞ்சு அது என்னனு சொல்லுங்க. எதுக்காகவும் தயங்காதீங்க. நான் எல்லாத்துக்கும் துணிஞ்சு தான் வந்திருக்கேன்” என்று அவன் கூற, இப்போது வெளிப்படையாகவே கண்ணீர் அவர் கண்களில்.
பிறகு, “இந்த வெடிபொருளை நாம அந்த வெய்யோனொட மையப்பகுதியில் செலுத்திட்டு வரணும். அப்போ தான் இது வெடிச்சு சிதறினாலும், அதோட முழுவீரியம் வெளில வாரத்துக்கு முன்னாடி, வெய்யோனொட கதிர்வீச்சுல அது அடங்கிடும். அப்படி வெய்யோனொட மையப்பகுதி வரைக்கும் போகணும்னா.. அது உன்னால மட்டும் தான் முடியும்.
ஆனா என்ன தான் உனக்கு வெய்யோனொட வெப்பத்தைத் தங்குற அளவுக்கு ஆற்றல் இருந்தாலும், அங்க உள்ள போன உன்னால, திரும்ப வெளில வர முடியாது. ஏன்னா, எப்போ இந்த வெடிபொருள் வெய்யோனொட நிலப்பரப்பை தொடுதோ, அடுத்த நொடி இது வெடிச்சு சிதற ஆரம்பிச்சுருக்கும். அதுல இருந்து உன்னால மீள முடியாது” என்று கூறிவிட்டு வெடித்துக் கதறினார் அவர்.
இப்பொழுது அமைதியாக, ஆனால் அழுத்தமாக, “அத என்கிட்ட கொடுங்க சேத்” என்று எக்கிரும்பாய் ஆன குரலில் கேட்டான் அதிரூபன்.
ஆனால் இப்பவும் “இதைச் செய்ய வேண்டாம்” என்பதாய் சேத் தலையசைக்க, “என்கிட்ட கொடுங்கன்னு சொல்றேன்ல” என்று சிம்மாய் அவன் கர்ஜிக்க, அதில் ஒரு கணம் அவரே அதிர்ந்து தான் போய்விட்டார்.
பின்பு அமைதியான பார்வையுடன் அவன் கைகளில் அந்த வெடிகுண்டை வைத்தவர், பிறகு இன்னுமே கண்ணீர் சிந்தினார்.
அதே கண்ணீருடன், “உன்னை எனக்கு எப்பவுமே ரொம்பவுமே பிடிக்கும் அதிரூபா. இந்தச் சின்ன வயசுல உனக்கு இருக்கும் ஆளுமையும், கம்பீரமும், உன்னுடைய இந்த ஆற்றலும், அந்த ஆற்றல் தந்த திமிரும்ன்னு… எல்லாமே எனக்கு ரொம்ப ரொம்பப் பிரமிப்பா இருக்கும். இதெல்லாம் உனக்குத் தெரியுமா தெரியாதான்னு எனக்குத் தெரியல. ஆனா இப்படி எல்லாம் நான் உன்ன என் தலையில தூக்கி வைச்சு உள்ளுக்குள்ள கொண்டாடிட்டு இருக்கிறேன்னு உன்கிட்ட சொல்வேன்னும் நான் எதிர்பார்க்கல” என்று கூற, அவரது கரங்களை அமைதியாகப் பற்றிக்கொண்டான் அதிரூபன்.
பின்பு அவன் நிமிர்கையில் முகம் சற்று தெளிவடைந்த போல் இருந்தது. எனவே, “நீங்க சொன்னீங்க இல்ல, அந்த ஆளுமை, ஆற்றல்… அது தந்த திமிர், இது எல்லாமே நான் ஒரு முக்கியமான ஆள பார்த்து கத்துக்கிட்டது. அது யாருன்னா… பாலை நில தலைவர். ஒரு சின்னப் புல், பூண்டு கூட முளைக்காத நிலம். தண்ணீருக்கு கூட மற்ற நிலங்கள்கிட்ட கேட்க வேண்டிய நிலை. ஆனால் அப்போதும் கூட உங்களுடைய ஆளுமையில் எந்தக் குறையுமே இருந்ததில்லை.
ஒவ்வொரு கடினமான சூழ்நிலையிலும் வெளிப்படற உங்களோட நேர்மையும் அதை உங்க மக்களுக்கு நீங்கள் கற்றுக் கொடுக்கிற லாவகமும் தான் எனக்கு ரொம்பப் பிடிச்சது. அதுக்கப்புறம் இந்தப் பாறை மாதிரியான முகத்துக்குப் பின்னாடி இருக்கிற அந்த மென்மையான மனசும் எனக்கு நாளடைவுல புரிய ஆரம்பிச்சது” என்று கூறி விட்டு இன்னும் நெருக்கமாய் அவரைக் கட்டிக் கொண்டான்.
பிறகு ஒரு பெருமூச்சுடன் இருவரும் விலக, அடுத்துத் தாயிடம் சென்றான்.
அவரைப் பாத்து, “நல்லதே நடக்கும்மா, நீங்க கவலைப் படாம இருங்க. அப்பாகிட்ட இத சொல்லுங்க, கண்டிப்பா அவர் என்ன பெருமையா தான் நினைப்பார்” என்று மட்டும் கூறிவிட்டு, மீண்டும் அவரையும் ஒருமுறை தன் ஆசை தீர, தனது குழந்தை பருவ நேசத்துடன் அணைத்தான்.
அடுத்ததாக அரிமாவிடம் வந்தவன், அவரது கண்களைப் பார்த்து, “நிஜமாகவே நீங்க அரிமா தான். எந்த ஒரு சூழ்நிலையிலும் நிதானம் தவறாமல் அதேசமயம் உங்க ஆளுமையால உங்கள சுத்தி இருக்கிற எல்லாரையும் கட்டிப்போட உங்களால் மட்டுமே ஆகக் கூடிய காரியம். என்னுடைய வாழ்க்கைக்கு, என்னோட உயர்வுக்கு, நீங்க எல்லாரும் தான் அஸ்திவாரம்” என்று கூறிவிட்டு, அவரது தோளில் ஒரு கணம் முகம்புதைத்து நின்றிருந்தான்.
பின்பு சற்று விலகி சிருஷ்டி படுக்க வைக்கப்பட்டிருந்த இடத்திற்குச் சென்றான். எப்பொழுதும் போல அப்போதும் அவள் முகத்தின் உயிர்ப்பு குறையாது அப்படியே கண்மூடி படுத்துக் கொண்டிருந்தாள், அவள் தேவதை. இப்பொழுது உறங்கும் தேவதையாக.
அவள் அருகே சென்று அவள் அருகே முட்டி போட்டு அமர்ந்தான். பிறகு அவரது தலை முதல் பாதம் வரை கண்களாலேயே வருடிவிட்டு, மிருதுவான அவளது தலையில் ஒரு கணம் கை வைத்து அந்தக் கையை எடுத்து தன் இதழோடு ஒற்றிக் கொண்டான்.
“என் வாழ்க்கையில எனக்குக் கிடைச்ச அழகான பொக்கிஷம் நீ. இந்த விஷயம் உனக்குத் தெரிஞ்சே தான் இருக்கும். நிச்சயமா நான் இப்ப எடுத்த முடிவுக்காக நீ வருத்தப்பட மாட்டன்னு எனக்கு நல்லாவே தெரியும். என்றென்றைக்கும் உனக்குள்ள உன்னுடைய காதலாகவும், எல்லாரிடமும் நீ செலுத்த அன்பாவும் நான் இருப்பேன்” என்று கூறி விட்டு நிமிர்ந்த அவனின் கண்களில், கண்ணீருடன் காணப்பட்டான் வாசு.
உடனே வாசுவிடம் ஓடி சென்ற அதிரூபன், “நீ எனக்கு ரொம்ப ரொம்ப முக்கியமான ஒரு உறவு வாசு. என்னோட வாழ்க்கையில எனக்குக் கிடைச்ச முதல் நண்பன்.என்னை யாருன்னு தெரியாம என்ன உன்னோட நண்பனா ஏத்துக்கிட்டவன். என்னோட முடிவுக்காகக் கண்டிப்பா நீயும் பெருமை தான் படணுமே தவிர, இப்படிக் கண்ணீர் விடக்கூடாது” என்று கூறிவிட்டு அவன் தோளில் தட்டிக் கொடுத்து, அவனது கையை ஒருகணம் இறுக்கமாகப் பற்றியபடி இருந்துவிட்டு, பின்பு அனைவரையும் அப்படியே திரும்பி பார்த்தான்.
இறுதியாக அவன் பார்வை, அவனது தாயின் கண்களில் வந்து நின்றது. என்றுமே கம்பீரத்தையும் பரிவையுமே காணும் அந்தக் கண்களில், இன்று கண்ணீர்.
அதைக் கண்ட அவன், “வேண்டாம்மா” என்பதாய் தலையசைத்துவிட்டு, மீண்டும் அவனது சிருஷ்டியை அவன் கண்களால் ஆசை தீர ஒரு முறை நிரப்பி விட்டு, இதோ அந்த வெடி பொருளுடன் பறந்து விட்டான்.
அனைவரும் அதிரூபன் வானில் பறந்து சென்று ஒரு புள்ளியாய் மறையும் வரையில் பார்த்துக் கொண்டிருந்தனர். அவன் மறைந்த பின்பும், அவர்களது பார்வையை அந்த வானம் விட்டு வெளியே நகர்த்த யாருக்கும் மனமில்லை.
அதைக் கண்ட வ்ரித்ராவும் இன்னுமே ஆனந்தத்தில் கொண்டாடிக் கொண்டு இருந்தான். அவனது அந்தக் கொண்டாட்டத்தைக் கண்டு வெடித்துவிடும் சினத்துடன் அனைவரும் அவனைத் திரும்பி பார்க்க, “எப்படியும் நான் கண்டுபிடிச்ச ஆயுதத்தால தான் அவனுக்கு முடிவு நிகழ்ந்திருக்கு. மாபெரும் அழிவு சக்தியையே அழிச்சவன் நான் தான். அதனால இனிமேல் இந்தப் பிரபஞ்சத்தோட ஒட்டு மொத்த அழிவு சக்தி… இந்த வ்ரித்ரா தான்” என்று சத்தமாக, கொடூரமாய் சிரிக்க, அவனைக் கண்டு கண்டு கொள்பவர் தான் அங்கே யாரும் இல்லை.
அதிரூபன் அந்த வெடிபொருளுடன் சென்று வெகுநேரம் கழிந்த பின்பு வெய்யோனில் ஏதோ ஒரு மாற்றம் தெரிய ஆரம்பித்தது. ஏனெனில், வெய்யோன் கொஞ்சம் கொஞ்சமாக நிறம் மாறி, நிறம் மாறி, அவன் இயல்பு மாறி, கருத்த ஊதா நிறத்திற்கு வந்துகொண்டு இருந்தான்.
சுற்றிலும் எங்கும் ஒரே இருள் சூழத்துவங்கிய அந்த நொடி, மீண்டும் வெய்யோனின் உட்கருவில் ஒரு பெருவெடிப்பு நிகழ, அந்த வெய்யோனே ஒருகணம் அதிர்ந்து பின் அடங்கினான். அந்த அதிர்வு அண்டம் எங்கும் எதிரொலித்தது. இத்தகைய ஒரு நிகழ்வினால், ஐம்பூதங்களும் கூட அதன் சமநிலையை ஒருகணம் இழந்து மீண்டும் மீண்டன.
அந்த நொடி அனைவருக்கும் புரிந்துவிட்டது, அந்த வெடிபொருள் வெய்யோனின் உட்கருவினில் செலுத்தப்பட அது தனது பெரும் சக்தியை வெளிப்படுத்திய நிகழ்வு தான் அதுவென்பது. அதுமட்டுமின்றி, அதன் கூடவே அதிரூபன் என்னும் பெரும் சக்தியின் சகாப்தமும் முடிவுக்கு வந்து விட்டது என்பதும்.
அந்த வேலையில் கொஞ்சம் கொஞ்சமாகச் சிருஷ்டிக்கு மீண்டும் உயிர்ப்பு வந்து கொண்டிருந்தது. மிகுந்த சிரமத்துடன் மெல்லிய முனகலுடன் விழித்தெழுந்தாள் அவள். அவளது அந்த முனகல் சத்தம் கேட்டு அவளிடம் விரைந்து ஓடினார் அம்பரி.
விழித்தெழுந்த சிருஷ்டி சுற்றியிருக்கும் எவரையும் ஏறெடுத்தும் பாராது முதல் கேள்வியாக, “அதிரூபன் எங்கே?” என்று கேட்டாள். அவளது அந்தக் கேள்விக்கு யாரால் விடை சொல்ல முடியும்?
அனைவரும் அமைதியுடன் அவளை வேற ஏதோ பேசி திசை திருப்ப முயன்று கொண்டிருக்க, குற்றுயிரும் குலையுயிருமாய்க் கிடந்த நிலையிலும் அந்த வ்ரித்ரா தான் அப்பொழுதும் அடங்காத உக்கிரத்துடன், “உன்னோட அரும்பெரும் காதலன், அழிவின் பெருங்காதல், அந்த வெய்யோனொட அடங்கிட்டான். அதுவும் எப்படி? இந்த வ்ரித்ரா கண்டுபிடித்த ஆயுதத்தால அழிஞ்சுட்டான்” என்று பெருமையுடன் கூற, அந்தச் சொற்றொடர் காதில் விழுந்து மூளையை அடைந்த அந்நொடி, சிருஷ்டியின் கண்ணீர் சுரப்பிகள் வெடித்துச் சிதறி அவள் விழியின் உவர்நீர் கரை புரண்டு ஓடியது.
அவள் அப்படி வெடித்துச் சிதறி கதறி அழுவதைப் பார்க்கவும், அப்பேற்பட்ட பேரானந்தம் வ்ரித்ராவின் முகத்தில். இன்னுமே ஆணவச் செருக்கின் பெருமிதத்தில், நகரக் கூட முடியாத அவன் உடலை தூக்கி அந்தப் பாறையைப் பிடித்து எழுந்து கொண்டு சிருஷ்டியின் கண்ணீரை அருகிலிருந்து பார்க்க மெல்ல மெல்ல கால்களைத் தரையோடு சேர்த்து இழுத்துக் கொண்டு அவளருகே வந்து கொண்டிருந்தான்.
அவன் அருகே வந்து அழுகையால் கரையும் அவளது அந்த முகத்தைப் பார்க்க முயலவும், திடீரென்று ஏதோ ஒன்று இடிபோல் அவன் கன்னத்தில் பாய்ந்தது. அதில், அப்படியே வானில் பறந்து சென்று, மீண்டும் அப்படியே கீழே வந்து விழுந்தான். அநேகமாக அப்பொழுதே அவன் நொறுங்கியிருக்க வேண்டும். அதைக்கண்ட சுற்றியிருக்கும் அனைவரின் முகத்திலும் பேராச்சரியம், நம்ப முடியாத பெருங்கனவு கண்முன் வந்தது போல் ஒரு பேரானந்தம்.
அந்த வெய்யோனில் கரைந்து, எரிந்து சாம்பலாகி விட்டான் என்று எண்ணியிருந்த அதிரூபன், அணுவளவும் குறையாமல் அதே கம்பீரத்துடன்… அதே பலத்துடனும்… அதே திமிருடனும் அவர்கள் முன்பு நின்றிருந்தான். அதைக்கண்ட வ்ரித்ராவுக்கோ அங்கமெல்லாம் பதற அப்பொழுது தான் உணர்கிறான் தான் தோற்றுவிட்டோம் என்பதை.
அந்த உணர்வை பொறுக்க இயலாதவனாக, தான் இப்படிக் குற்றுயிராய்க் கிடக்கிறோம் என்ற நிலையும் மறந்து, அந்த நிலையிலும் அவனைத் தாக்கவே முயன்று முன்னேறிச் சென்றான். இப்பொழுது அவனை நோக்கி செல்லும் அதிரூபனை யாரும் தடுக்கவில்லை. ஆனால் அதிரூபன் ஒன்றும் அவ்வளவு கோபமாகவெல்லாம் செல்லவில்லை.
செத்த பாம்பை எத்தனை முறை தான் அடிப்பது. ஆனால் இன்னும் சீறிக்கொண்டிருக்கும் அதை, முழுதாக உயிர் குடிக்கவும் வேண்டுமல்லவா? எனவே அவனை அதிரூபன் தனது இடக்கரம் கொண்டு சற்றே தள்ள, சட்டென்று கீழே விழுந்தான் வ்ரித்ரா.
கீழே விழுந்த பின்னும் அடங்காதவனாக, “எப்படி எப்படி நீ உயிரோட வந்த?” என்றவன் கேட்க
“அழிவின் தலைவனான என்னையே அழிச்சுடலாம்ன்னு நினைச்சு, ஒரு ஆயுதத்தை உருவாக்கினது தான் உன் வாழ்க்கையிலேயே செய்த ஆகப்பெரும் முட்டாள்தனம்” என்று கூறி தனது இடக்காலால் ஓங்கி அவனது நெஞ்சில் மிதித்தான் அதிரூபன். அந்தக் கணநேரத்தில் வ்ரித்ரா இருந்ததற்கான அடையாளம் கூடத் தெரியாதவாறு, காற்றோடு காற்றாய் தூசியாய் கலந்து விட்டான்.
ஆனால் சுற்றியிருக்கும் அவர்களுக்கு ஒரு பெரும் ஆபத்திலிருந்து தப்பித்ததால் கிடைத்துவிட்ட நிம்மதியை விட, அதிரூபன் திரும்பி வந்துவிட்ட ஆனந்தமே மேலோங்கியிருந்தது. அவனை ஓடிச்சென்று முதலில் கட்டிக் கொண்டது அம்பரியே.
“எப்படிப்பா… எப்படிப்பா இது நடந்துச்சு?” அவர் துடிதுடித்துக் கொண்டு கேட்க, அங்கிருந்த அனைவருக்குமே அதே கேள்வியே உள்ளுக்குள் ஓடிக் கொண்டிருந்தது.
ஏனென்றால், அதிரூபன் அழிவின் சக்தி தான். ஆனால் யாராலும் அழிக்க இயலாத சக்தி அல்ல. அதுவும் வெய்யோனின் வெப்ப நிலைக்கு அவனாலும் ஓரளவிற்குத் தான் தாங்க முடியும். எனவே தான் அவனை உட்கரு வரை சென்று அந்த வெடிபொருட்களைச் செலுத்திவிட்டு வரச் சொல்லியிருந்தார் சேத்.
ஆனால் அந்த வெப்ப நிலைக்கு ஓரளவிற்கு அருகில் தான் அவனால் செல்ல முடியுமே தவிர, அதன் உட்கருவினுள் புகுந்து அவன் மீண்டு வருவது என்பது இயலாத காரியம். ஆனால் அந்த இயலாத காரியம் நடக்கத் தான் செய்தது.
அவனே உட்கருவிற்குள் செல்லும் வரையில் தான் திரும்பி வருவோம் என்று நினைக்கவில்லை. ஆனால் எப்பொழுதும் அவன் தாங்கும் நெருப்பின் வெம்மையை விட உட்கருவின் வெப்பநில மிகவும் அதிகமாகி கொண்டே போவதை அவனால் உணர முடிந்தது.
‘தாங்க முடியாத இடத்திலேயே அந்த வெடி பொருளை வீசி விட வேண்டும், அதற்கு மேல் தன்னால் வெளிவர முடிந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி’ என்று எண்ணி அதனுடைய உட்கருவில் மையத்திற்குச் சென்று விட்டான். ஆனால் இன்னும் இன்னும் உள்ளே போகப் போக, அவன் உடம்பில் எந்த ஒரு வேதனையும் தெரியவில்லை, துளி வெப்பத்தையும் உணரவில்லை.
அதனால் மிகவும் தைரியமாகவே லியோனின் உட்கருவில் அந்த வேதிப்பொருளை வீசிவிட்டான். எப்படி இருந்தாலும் அவை வெடித்துச் சிதறும் போது அருகில் இருக்கும் தானும் அந்த அணுக்கதிர் வீச்சினால் தாக்கப்படுவோம் என்பது அவன் உணர்ந்திருந்த ஒன்று தானே? ஆனால் அங்கேயும் அந்த அதிசயம் மீண்டும் நடந்தேறியது.
அந்த வெடிபொருள் வெய்யோனுடன் வினை புரியத் துவங்கிய அந்த முதல் நொடி, ஒரு கணநேரம் அந்த வெய்யோன் தனது ஒளியை இழந்தது. அந்த நொடியில் அதிரூபன் அதிவேகமாக வெளியே வந்துவிட்டான். அப்படி அவன் வெளியே வந்தது தான் தாமதம், அதன் பிறகு அந்த வெடிபொருள் அதனுடைய முழு வீரியத்தைக் காட்டியிருக்கிறது. அதைக்கண்டு அதிசயித்துப் போனவனாக அவன் மீண்டும் யுவாவிற்கே வந்து விட்டான்.
இதைக்கேட்ட அனைவருக்குமே ஆச்சரியம் தான். ஆனால் வாசுவிற்கோ இப்பொழுது தான் பெருங்குழப்பமே.
“அப்போ உன்னோட டி.என்.ஏவையும் யாராவது வேற மாதிரி தகவமைசுட்டாங்களா?” என்று சந்தேகப்பட்டான்.
கேட்ட அனைவருக்குமே அந்தச் சந்தேகம் பரவ ஆரம்பித்தது. அப்பொழுது அரிமாவோ, “உண்மையைச் சொல்லு அதிரூபா, அந்த வரித்ராவோட தனிப்பட்ட பயிற்சி மையத்துல நீ எந்த மருந்தும் உட்கொள்ளவில்லை தானே?” என்று கேட்க
“அட இவ்வளவு சந்தேகம் ஏம்பா? அப்படி எல்லாம் நான் எந்த மருந்தும் உட்கொள்ளல. என்னையெல்லாம் யாராலயும் இனக்கீற்று அமில மாறுதலுக்கு உட்படுத்த முடியாது. இது சாதாரணமாகவே என்னுடைய இனக்கீற்று அமிலம், தன்னை அடுத்தக் கட்டத்திற்குப் பரிணாமிச்சுருக்கு போல” என்று கூற, அப்படியும் இருக்கலாம் என்று அவனது கூற்றை ஒற்றிக் கூறினார் சேத்.
ஆளாளுக்குத் தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்துவிட்டு யுவாவின் மற்ற பிரச்சனைகளைக் கவனிக்கச் சென்ற நேரம், அதிரூபன் சிருஷ்டியின் அருகில் வந்து நின்றான். சிருஷ்டியின் அருகில் அவன் வந்து நிண்றது தான் தாமதம், உடனே அவனைக் கட்டிக்கொண்டு கதறிவிட்டாள் பெண்.
“நான் எவ்வளவு பயந்தேன் தெரியுமா? கடைசியா என்கிட்ட எதுவுமே சொல்லாம போகறதுக்குக் கூடத் தயாரா இருந்தியா?” என்று அவனைப் பார்த்து கேட்க
அவனோ… அவளுடன் இப்படி ஒன்றாக இருப்பதே போதும் என்பது போல ஆனந்தப் பரவச நிலையை முகத்தில் ஏந்திக் கொண்டு அவளைக் காற்றும் கூடப் புகை முடியாதவாறு இறுக்க அணைத்தபடி நின்றிருந்தான்.
சிருஷ்டிக்குமே வேறென்ன வேண்டும் இதைத் தவிர? அவளுமே மழையோடு உடன் வரும் மண் வாசமாக, அவனோடு இணைந்தாள்.
இங்கு யுவா கிரகத்தில் அந்த மரபணு மாற்றம் செய்யப்பட்ட பானத்தைப் பருகியவர்களைச் சரி செய்வதற்காகத் தாவ் கிரகத்திலிருந்து மருத்துவர் குழுவும் வந்திருந்தது.
இதேப் போலவே தாவ் கிரகத்திலுமே, வ்ரித்ரா கூறியது போல அவனது மருந்தனால் பாதிக்கப்பட்ட மக்களைக் கண்டறிந்து அவர்களை சரி செய்வதற்காக, மேலும் வ்ரித்ராவிற்குக் கையாளாகச் செயல்பட்டுக் கொண்டிருந்த கருப்பு ஆடுகளைக் களையெடுக்கும் பணிகளும் நடந்தேறியது.
யுவாவின் ஸ்வர தீபத்தில் அதுபோல மருத்துவப்பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த இடத்திற்குத் தான் இப்பொழுது அதிரூபனும் சிருஷ்டியும் வந்து சேர்ந்திருந்தனர். அந்த இடத்திற்கு இப்பொழுது மேற்பார்வை செய்து கொண்டிருந்த வாசு, அவர்களைப் பார்த்ததும் அவர்களிடமே திரும்பி வந்தான்.
“எல்லாம் ஒரு வழியா நல்லபடியா போயிட்டு இருக்கு அதிரூபா. எனக்கு எல்லாத்தையும் விட நீ திரும்பி வந்ததுல தான் பெரும் மகிழ்ச்சி” என்று நிஜமாகவே உள்ளுர உணர்ந்து, தனது மனதை வெளிப்படுத்தினான் வாசு.
இப்பொழுதும் அவன் கண்களில் நீர், அதைக் குறித்து ஏதோ சொல்ல அதிரூபன் வாயைத் திறக்கவும், “ஆனந்த கண்ணீருக்கெல்லாம் அணை கட்ட முடியாது ரூபா” என்று அழுகையால் கனத்த குரலில் கூறினான் வாசு.
பிறகு யுவா கிரகத்தில் சிதைந்துபோன மலைகளையும், சீர்கெட்டுப் போன ஆறுகளையும், காணாமல் ஆக்கப்பட்ட அந்த ஏழாம் கண்டத்தையும், சிருஷ்டிக்கும் பொறுப்பு சிருஷ்டியை சேர்ந்ததானது.
அவை ஒவ்வொன்றையும் தனது அன்பை கரைத்து, பரிவை குழைத்து, ஆசை ஆசையாய் மீண்டும் உயிர்ப்பித்தாள் சிருஷ்டி. அவள் அப்படி ஒவ்வொன்றாய் உயிர்ப்பிக்க உயிர்ப்பிக்க, யுவா கிரகமே புதிதாய்ப் பிறந்தது போல ஆனது. அங்கு அப்பொழுது துளிர்த்த ஒவ்வொரு உயிரும் அவளையே அன்னை எனக் கருதி, அவளது அன்பையே தாய்ப்பால் எனப் பருகியது.
இதையெல்லாம் கண்டு ஆனந்தவெள்ளத்தில் ஆழ்ந்து கொண்டிருந்த அனைவரும், ஒரு நாள் ஒன்றாய் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும் வேளையில், “எல்லாமே சரி… ஆனா இவனுங்க அந்த மாமோத் யானையையும், கட்டுக்கதைன்னு சொல்லப்பட்ட யாளியையும் எப்படி மறுபடியும் உருவாக்கியிருப்பாங்க?” என்று சந்தேகப்பட்டான் வாசு.
அவனது இந்தக் கேள்வியில் திருதிருவெனச் சிருஷ்டி விழிக்க, இப்போது அனைவரின் சந்தேகப் பார்வையும் அவள் மீது விழுந்தது.
அவள் இவ்வாறு விழிப்பதையே பார்த்த வாசு, “உண்மைய சொல்லு சிருஷ்டி, நீதான இது எல்லாத்துக்கும் காரணம்?” என்று கேட்க
அவள் தயக்கத்துடன், “ஆமாம்” என தலையசைத்தாள்.
உடனே அதிர்ச்சியுடன் “என்ன?” என்ற கூவலுடன் எழுந்து விட்டான் அவன்.
பிறகு சிருஷ்டியே, “அந்த வ்ரித்ரா தான் என்னோட அப்பான்னு நினைச்சுருந்தேன். அவன் எனக்கு இந்த மாதிரியான அதீத சக்திகள் இருக்குன்னு சொன்னதும், நாம ஏதோ வரம் செய்த குழந்தைனு நெனச்சுட்டு இந்தச் சக்திகள் மூலமா அந்த வ்ரித்ராவ சந்தோஷப்படுத்தி, அவனோடு அன்பைப் பெறலாம்ன்னு ஒரு மகளா யோசிச்சேன். அதனால தான் அவன் சொன்ன எல்லாத்தையும் செஞ்சேன். அதுமட்டுமல்ல அவன் செய்து வைத்திருந்த அபரமேயர்களுக்கு உயிர் கொடுத்ததும் நான் தான்” என்று கூற
உடனே வாசு, “ஏன் மா? அப்பாவும் மகளும், சேர்ந்து இன்னும் டைனோசரையும் உருவாக்கியிருக்கலாம்ல?” என்று கிண்டலாகக் கேட்க, இப்பொழுது அடக்கப்பட்ட குமிழ் சிரிப்பு அவளிடம்.
அதைக் கண்ட வாசுவோ, “ஏய் ஏய் ஏய்… நீ சிரிக்க மட்டும் செய்யாத. உன்னோட சிரிப்ப பார்த்தாலே எனக்குச் சந்தேகமா இருக்கு” என்று கூற, இப்பொழுது சத்தமாகச் சிரித்தாள் சிருஷ்டி.
“ஓஓஓஓ… அப்போ அதுவும் உங்க பிளான்ல இருந்துச்சா? அடப்பாவிங்களா… ஆஆஆஆஆஆ” என்று அவன் நெஞ்சை பிடித்துக் கொண்டு மீண்டும் தொப்பென அவன் அமர
மாறாத சிரிப்புடன் சிருஷ்டி, “நீங்களும் ஆதியும் என்ன வ்ரித்ரா வீட்ல சந்திக்க வந்திருந்த அந்த இரவு தான் வ்ரித்ரா ஏற்கனவே செய்து வைத்திருந்த டைனோசர்களுக்கு நான் உயிர் கொடுப்பதா இருந்தேன்” என்று கூற, இப்பொழுது பேச்சு மூச்சற்றுத் தரையில் கிடந்தான் அவன்.
“வாசு… ஏய் என்ன ஆச்சு? என்ன ஆச்சு?” என்று மற்ற அனைவரும் பதறிப் போய் அவனைத் தூக்க
சட்டென எழுத்து நின்ற அவன், “யாரும் என்னைத் தொட வேண்டாம், இப்போ அவன் செஞ்சு வச்சிருந்த அந்த டைனோசர்களையெல்லாம் நீங்க அழிச்சுட்டீங்களா இல்லையா?” என்று கேட்க
“அதையெல்லாம் அப்போவே பட்.. பட்.. பணால் பண்ணிட்டேன்.” என்று அதிரூபன் கூற, பெருத்த ஆசுவாச பெருமூச்சு வாசுவிடம்.
அதைப் பார்த்து அதிரூபன் சிரிக்க, இப்பொழுது அவனை முறைத்தவாறே, “இப்போ என்னத்துக்கு இந்தச் சிரிப்பாம்?” என்று வாசு கேட்க
“அது ஏன்னா, டைனோசர் விட மிகப் பலசாலி அந்த யாளி. ஆனா, அது தன்னோட மொத்த வித்தையையும் நம்மகிட்ட காட்டறதுக்கு முன்னாடி, அரிமா வந்து மொத்தமா துவம்சம் பண்ணிட்டார்.இல்லாட்டி டைனோசரெல்லாம், யாளியோட கைக்குழந்தைன்னு நீ உணர்ந்திருப்ப” என்று அதிரூபன் கூற, அவனைப் பார்த்து கையெடுத்துக் கும்பிட்டான் வாசு. அதைக்கண்ட அவர்கள் அனைவருக்கும் சிரிப்பு பீறிட்டது.
அப்பொழுது ஏற்கனவே எழுந்திருந்த அதிரூபன், முகத்திலிருந்த சிரிப்பு மாற, மெல்ல நடந்து சென்று வாசுவின் அருகே சென்று அவனது கரங்களைப் பற்றினான்.
அப்போது அவன் என்ன கூற வருகிறான் என்று உணர்ந்த வாசுவும், “எனக்குப் புரியுது ரூபா, இந்த வாழ்க்கையில் எனக்குக் கிடைச்ச முதல் உறவு நீ தான். முதல் நம்பிக்கை நீ தான். முதல் நல்ல நட்பு நீ தான். ஆனா, அதே சமயம், நீ நிரந்தரமா என் கூடத் தங்கவும் முடியாது என்ற நிதர்சனம் எனக்கு புரியுது. உங்களை எல்லாம் பிரியர துக்கம் எனக்கு உள்ளுக்குள்ள கொட்டிக் கிடக்கு. ஆனா இயற்கையை மீறுவதுக்கும் எனக்கு விருப்பம் இல்ல. அதனால உயிர் போற அளவுக்கு வலிச்சாலும், இதையெல்லாம் நான் ஏத்துக்கிட்டு தான் ஆகணும்” என்று அழுதுவிடும் குரலில் அவன் கூற, இன்னும் அவனது அருகில் சென்று தோளோடு அணைத்துக் கொண்டான் அதிரூபன்.
“அவரவர் அவரவர் இடத்தில் இருப்பது தான் என்னைக்கும் நல்லது இல்லையா? எனக்குத் தாவ் கிரகத்துலையும் நிறையக் கடமைகள் இருக்கு. உனக்கு இது தான் உன்னுடைய இடம், இதநல்ல படியா பார்த்துக்கோ. இங்க இருக்கற எல்லாருக்கும் இது இனி புரிஞ்சுடும், நம்ம வீட்ட நாம தான் பத்தரமா பார்த்துக்கணும் இல்ல?” என்று அதிரூபன் கூற
மற்ற அனைவரும் வாசுவிடம் விடைபெற்று விட்டுத் திரும்பச் சிருஷ்டி அவனிடம் வந்து, “என்ன எல்லாரும் ஒரு தாயா உயர்ந்த இடத்துல.. தள்ளி வச்சு பார்த்தப்போ, நீங்க தான் உங்களோட சகோதரியா என்ன பார்த்தீங்க. என் மனசுக்கு ரொம்ப நெருக்கமான ஒரு சகோதர உறவை உணர்ந்தது உங்ககிட்ட தான். கொஞ்ச நாளுன்னாலும் என்ன ரொம்ப இயல்பா இருக்க வச்சீங்க. இந்த அன்பு நாம எவ்வளவு தொலைவில் இருந்தாலும், எத்தனை காலம் கடந்தாலும் மாறவே மாறாது” என்று கூறிவிட்டு அவளும் சென்று விட
செல்லும் அவர்களைப் பார்த்தவாறே வாசு நின்றிருக்க, இங்கு அவர்களும் தங்கள் முன் திறந்திருக்கும் அந்தப் புழுத்துளையில் ஒருவர் பின் ஒருவராகச் செல்ல, இறுதியாகச் சிருஷ்டியும், அதிரூபனும் தங்களுக்குக் கிடைத்த அந்த உன்னதமான உறவான வாசுவை மிகுந்த வாஞ்சையுடன் பார்த்துவிட்டு, அந்தப் புழுத்துளையில் புகுந்து கொண்டனர்.
நதி என்பது புனிதமாய் உங்கள் தாயாய் இருக்க வேண்டியது இல்லையே, அது நதியாய் இருந்தாலே போதும். அதைப் புனிதமென மாற்றி உங்கள் பாவங்களைச் சுமந்து அசுத்தமாக்க வேண்டாமே.
மழையானது அனைவருக்கும் சமமாய்த் தான் இருந்துவிட்டு போகட்டுமே, நீ நான் என்ற ஏற்றத்தாழ்வு இல்லாது எங்கும் நிறைந்திருக்கும் இயற்கை அதன் சமநிலையுடனே சாந்தமாக இருக்கட்டுமே.
மனிதன் என்பவன் கடவுளாகவோ, மிருகமாகவோ மாற வேண்டாமே… அவனென்றுமே மனிதத்துடன் மனிதனாகவே இருக்கட்டுமே!!
(சுபம்)
பகுதி 1 பகுதி 2 பகுதி 3 பகுதி 4 பகுதி 5 பகுதி 6 பகுதி 7 பகுதி 8 பகுதி 9
GIPHY App Key not set. Please check settings