2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
அத்தியாயம் 1 அத்தியாயம் 2 அத்தியாயம் 3 அத்தியாயம் 4
அத்தியாயம் 5 அத்தியாயம் 6 அத்தியாயம் 7 அத்தியாயம் 8
அத்தியாயம் 9 அத்தியாயம் 10 அத்தியாயம் 11 அத்தியாயம் 12
அத்தியாயம் 13 அத்தியாயம் 14 அத்தியாயம் 15 அத்தியாயம் 16
கிட்டத்தட்ட இருநூறு பேர் இருக்கும் மாற்றுத் திறனாளிகள் இல்லத்திலிருந்து வெறும் பத்து பேரை மட்டுமே ஆறுமுகத்தால் தேர்வு செய்ய முடிந்தது. ஆர்வம் பலருக்கு இருந்தாலும் பாராலிம்பிக்ஸின் நிபந்தனைகளுக்கு உட்பட்டே ஆறுமுகம் தேர்வு செய்தார். தான் தேர்வு செய்தவர்களின் பட்டியலை நகரத்திலுள்ள தலைமை அலுவலகத்திற்கு தானே நேரில் கொண்டு சென்றார்.
செகரட்டரி நாராயணசாமியைச் சந்தித்து பாராலிம்பிக்ஸில் கலந்து கொள்ள இல்லத்திலுள்ள மாற்றுத் திறனாளிகள் விரும்புவதாகவும் அதற்கான உதவியை அவர் செய்து தர வேண்டும் என்கிற கோரிக்கையையும் வைத்தார்.
“என்ன ஆறுமுகம்… இருக்கற பிரச்சினைகள் போதாது!ன்னு நீங்க வேற எதையோ கொண்டு வந்திருக்கீங்க?… இதெல்லாம் தேவையா ஆறுமுகம்?”
“சார்… நான் கொண்டு வந்திருப்பது பிரச்சினை அல்ல சார்… நம் வாழும் நாட்டுக்கு ஏதாவது செய்தாகணும் என்கிற அந்த மாற்றுத் திறனாளிகளின் துடிப்பு சார்” அழுத்தமாய்ச் சொன்னார் ஆறுமுகம்.
“அய்யய்ய… உங்களுக்குப் புரிய மாட்டேங்குது ஆறுமுகம்!… இதுக்கெல்லாம் நிறைய செலவாகுங்க!… இதுவும் கிட்டத்தட்ட ஒலிம்பிக் மாதிரித்தான்!னு சொல்றீங்க… அப்ப அதுக்குத் தகுந்த மாதிரி பயிற்சி குடுக்க வேணுமல்லவா? ஸ்பெஷல் மைதானம் வேணும், பயிற்சி பெற்ற கோச்சுக்கள் வேணும்… “ செகரட்டரி புலம்பினார்.
“சார்… நீங்க அப்ளை மட்டும் பண்ணிக் குடுங்க சார்!… அதுக்கப்புறம் பாருங்க… அப்ரூவல்… தேவைப்படும் உபகரணங்கள்… கோச்சுகள் எல்லாம் தானா வரும்!…“ ஆறுமுகம் உக்கமூட்டினார்.
நீண்ட நேர வற்புறுத்தலுக்குப் பிறகு செகரட்டரி ஒப்புக் கொண்டு, “சரி ஆறுமுகம்… நீங்க இவ்வளவு தூரம் சொல்றதினால… அரசு விளையாட்டுத் துறைக்கு அப்ளை பண்றேன்…” என்றார்.
அவர் அவ்வாறு சொன்னதே பெரிய வெற்றியாய் எடுத்துக் கொண்டு இல்லம் திரும்பினார் ஆறுமுகம்.
புதிய விளையாட்டு வீரர்களுக்கு, அதிலும் பாராலிம்பிக்ஸில் கலந்து கொள்ள ஆர்வம் காட்டும் வீரர்களுக்கு அதிக முக்கியத்துவம் காட்டி உதவிகளைக் குவிக்கும் அரசாங்கம் செகரட்டரி அனுப்பியிருந்த விண்ணப்பத்தை உடனே பரிசீலித்து இல்லத்திலுள்ள மாற்றுத் திறனாளிகளையும், அந்த இல்லத்தில் உள்ள கட்டுமான வசதிகளையும் பார்வையிட குழுவை மறு வாரமே அனுப்பி வைத்தது.
அதிகாலை நேரத்தில் ஆறுமுகத்தின் மொபைல் அதிர, தூக்கக் கலக்கத்துடன் எடுத்துப் பார்த்தார். செகரட்டரி நாராயணசாமிதான் அழைத்திருந்தார்.
“இவர் எதுக்கு இந்த நேரத்துல கூப்பிடறார்?” சொல்லிக் கொண்டே இணைப்பிற்குள் புகுந்தார். “ஹல்லோ… சொல்லுங்க சார்”
“ஆறுமுகம் ஒரு குட் நியூஸ்” என்றார் செகரட்டரி.
“என்ன சார்?…” கேட்டார் ஆறுமுகம்.
“விளையாட்டுத் துறையிலிருந்து தகவல் வந்திருக்கு… நாளைக்கு ஒரு குழு வருதாம்… பசங்களையும்… இடத்தையும் பார்த்திட்டு… மேற்கொண்டு முடிவெடுக்க…” என்று நாராயணசாமி சொன்னதும்,
“ஹேய்ய்ய்ய்ய்ய்” என்று கத்தினார் ஆறுமுகம். “பார்த்தீங்களா?… நான் சொன்னேனல்ல?… அரசு உடனடியா நடவடிக்கை எடுக்கும்ன்னு”
“நீ செலக்ட் பண்ணின பசங்களை நாளைக்குத் தயார் பண்ணி வை!… என்ன?”
“ஓ.கே.சார்!…”
இணைப்பிலிருந்து செகரட்டரி வெளியேறிய அடுத்த நிமிடம் கோபியை மொபைலில் அழைத்து விஷயத்தைச் சொன்னார் ஆறுமுகம்.
அடுத்த அரை மணி நேரத்திலேயே அங்கு பரபரப்புக் கூடியது. ஆறுமுகம் தேர்வு செய்து வைத்திருந்த மாற்றுத் திறனாளிகள் தயாராயினர்.
இடுப்பிற்குக் கீழ் சூம்பிப் போன கால்களுடைய முருகன், பார்வையிழந்த சத்தியவேந்தன், முதுகு கூனமாயிருக்கும் காந்தி, தலை மட்டும் பெரிதாகவும் உடல் சிறியதாகவும் இருக்கும் மாரிமுத்து, பதினேழு வயதிற்குரிய வளர்ச்சியில்லாமல் ஐந்து வயதுச் சிறுவனைப் போலிருக்கும் ஈஸ்வரன், வாய் பிளவுபட்டிருக்கும் சரஸ்வதியின் மகன் ராஜா, இன்னும் பல்வேறு வித மாற்றுத் திறனாளிகள் அனைவரும் ஏதோவொரு எதிர்பார்ப்புடன் அங்கு குழுமியிருந்தனர்.
“சார்… நெஜம்மா நாங்கெல்லாம் கூட உலக அளவிலான ஒலிம்பிக் போட்டில கலந்துக்க முடியுமா சார்?” நம்பிக்கையில்லாமல் கேட்டான் முருகன்.
“நிச்சயம் முடியும்… கலந்துக்க மட்டுமில்லை… ஜெயிச்சு தங்கப் பதக்கம் கூட வாங்க முடியும்” அவன் முதுகைத் தட்டிக் கொடுத்துச் சொன்னார் ஆறுமுகம்.
கோபியும் தலையைச் சொறிந்து கொண்டே கேட்டான். “ஆறுமுகம் சார்… நான் கேட்கிறேன்னு தப்பா நினைக்காதீங்க… இவங்களையெல்லாம் என்ன மாதிரிப் போட்டிக்கு சார் யூஸ் பண்ண முடியும்?… எனக்கு ஒண்ணுமே புரிய மாட்டேங்குது”
அழகாய்ச் சிரித்தார் ஆறுமுகம். “ம்ம்ம்… ஆக்சுவலா இவங்கள்ல யாரை என்ன போட்டிக்குப் பயன்படுத்தணும் என்பதை… இவங்களை ஆய்வு செய்ய வர்றாங்க பாருங்க?… அந்த நிபுணர்களாலதான் சொல்ல முடியும்!… பார்ப்போம்…”
சரியாகப் பதினோரு மணி வாக்கில் இல்லத்தின் முன் வந்து நின்றது அந்த வேன். அதிலிருந்து இறங்கிய விளையாட்டுத் துறையைச் சேர்ந்த சுமார் பத்து பேரை ஓடிப் போய் வரவேற்றார் ஆறுமுகம்.
“நீங்க…?” என்று முகத்தில் கேள்விக் குறியோடு கேட்ட, அந்த சீனியர் ஆபீஸருக்கு, “சார் நான் ஆறுமுகம்!… இந்த இல்லத்தின் நிர்வாகி” என்றார்.
“யெஸ்… யெஸ்… நீங்கதான் விண்ணப்பம் கொடுத்ததா சொன்னாங்க!… வெரி குட்… வெரி குட்!.. பை த பை… ஐ யாம் கோகுல்தாஸ்” என்றவர், குழுவில் உள்ள மற்றவ்ர்களையும் ஆறுமுகத்திற்கு அறிமுகம் செய்து வைத்தார்..
அந்தக் குழுவினர் முதலில் இல்லத்தின் முன் முறமிருந்த காலி இடத்தை ஆராய்ந்தனர். பின்னர் அங்கிருந்து நகர்ந்து இல்லத்தின் பின் பகுதியில் உள்ள பெரிய மைதானத்திற்குச் சென்றதும் அந்த சீனியர் ஆபீஸர், “வாவ்… இந்த இடம் போதும்… நாம இங்க ஒரு மினி ஒலிம்பிக்கே நடத்திடலாம் போலிருக்கு” என்றார் புன்னகையோடு.
அதற்குள் சில மாற்றுத் திறனாளிகள் அவர்களுக்கு எலுமிச்சம் பழரசத்தைக் கொண்டு வந்து கொடுத்து உபசரித்தனர்.
“ஓ… தேங்க் யூ… தேங்க் யூ” என்றபடி பெற்றுக் கொண்ட அந்த குழுவினர், இப்போது அந்த மாற்றுத் திறனாளிகளை பார்வையால் அளக்க ஆரம்பித்தனர். பின்னர், “மிஸ்டர் ஆறுமுகம்…. இங்க நான் உங்களிடமும். இந்த மாற்றுத் திறனாளிகளிடமும் நிறைய பேசணும்” என்றார்.
“மீட்டிங் ஹாலுக்குப் போகலாம் சார்” என்றபடி அவர்களை அழைத்துக் கொண்டு நடந்தார் ஆறுமுகம்.
மீட்டிங் ஹாலில் மேடை போன்ற இடத்தில் அந்தக் குழுவினரை அமர வைத்து விட்டு அவர்களுக்கு எதிரே தரையில் மாற்றுத் திறனாளிகளை அமர வைத்தார் ஆறுமுகம்.
ஒரு பிளாஸ்டிக் ஃபைலை கோகுல்தாஸிடம் தந்த ஆறுமுகம். “சார் இதில் இவர்களைப் பற்றிய விபரங்கள் இருக்கு சார்” என்றார்.
நிதானமாய் அதைப் படித்து முடித்த அதிகாரி, “நான் ஒவ்வொருத்தர் பேரையும் சொல்லிக் கூப்பிடுவேன் அவர்கள்… இங்கே என் பக்கத்தில வர வேண்டும்… என்ன?” என்றவர் முதல் பெயராக பார்வையற்ற இளைஞனான சத்தியவேந்தனை அழைத்தார்.
குரல் வந்த திசையை அடையாளம் வைத்துக் கொண்டு எந்தவித தடுமாற்றமும் இல்லாமல் அவன் அந்த அதிகாரியின் அருகில் வந்து நிற்க, தன் கைகளைத் தட்டி அவனைப் பாராட்டிய கோகுல்தாஸ், “இந்த பாராலிம்பிக்ஸ்ல ஃபுட்சல் என்று அழைக்கப்படும் பார்வையற்றவர்களுக்கான ஒரு கால் பந்துப் போட்டி உள்ளது… அதுக்குத் தேவை செவிக் கூர்மை… என் கணிப்புப்படி இந்த சத்தியவேந்தனுக்கு அந்த செவிக் கூர்மை மிக நன்றாகவே உள்ளது… இவனை நாம் அந்தக் கால் பந்துப் போட்டிக்கு தயார் செய்யலாம்!” சொல்லி வீடு அவர் தன் குழுவினரைப் பார்க்க, அவர்கள் “ஓ.கே.சார்” என்றனர்.
தொடர்ந்து சூம்பிப் போன கால்களை உடைய முருகனை வீல் சேரில் அமர்ந்தபடி விளையாடும் தட்டு எறிதல் போட்டிக்கும், சக்கர நாற்காலி ஓட்டம் போட்டிக்கும் தேர்வு செய்தார்.
முதுகு வளைந்து, புடைப்பாக இருக்கும் காந்தி குறுகிய தூர ஓட்டப்பந்தயத்திற்கும், தரையில் அமர்ந்தபடியே நகரும் சுந்தரம் வில் வித்தைப் போட்டிக்கும், சரஸ்வதியின் மகன் ராஜா நீளம் தாண்டுதல் போட்டிக்கும், தலை பெரிதாகவும் உடல் சிறிதாகவும் இருக்கும் மாரிமுத்து நடுத்தர தொலைவு ஓட்டப் பந்தயத்திற்கும், பதினேழு வயதிற்குரிய வளர்ச்சியில்லாமல் ஐந்து வயதுச் சிறுவனைப் போலிருக்கும் ஈஸ்வரன் உயரம் தாண்டும் போட்டிக்கும் தேர்வு செய்யப்பட்டனர்.
தங்களது தேர்வுப் பட்டியலை எடுத்துக் கொண்டு, அந்தக் குழுவினர் புறப்பட்டுச் சென்றதும் அந்த இல்லத்தில் மகிழ்ச்சி வெள்ளம் கரை புரண்டோடியது.
(தொடரும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings