“நான் சாப்ட மாட்டேன்” என அடம் பிடித்துக் கொண்டிருந்த சாரதாவை
“இன்னம் ஒரே ஒரு வாய் சாப்பிடுமா செல்லம், சாப்பிட்டா தான் உடம்புக்குச் சக்தி வரும். இதப் பாரு உனக்கு பிடிச்ச வெங்காய சாம்பாரும், உருளைக்கிழங்கு காரக்கறியும். இன்னும் கொஞ்சம் சாப்பிடுமா” என்று கெஞ்சிக் கொண்டிருந்தார் கேசவன்
“மாட்டேன்” என தலையசைத்த சாரதா, ‘ஒ’வென்று அழத் தொடங்கினாள்
“சரி சரி…அழாதே தங்கம். சாப்பாடு தரலை, சரியா. நீ கொஞ்ச நேரம் தூங்கு” என சாரதாவைத் தூங்க வைத்து விட்டு வேலையைப் பார்க்கச் சென்றார் அவர்
சிறிது நேரம் கழித்து ஏதோ சத்தம் கேட்கவே, படுக்கை அறையில் சென்று பார்த்த போது, பாத்ருமில் குழாயைத் திறந்து விட்டு சோப்பைக் கையில் பிதுக்கி விளையாடிக் கொண்டிருந்தாள் சாரதா
தொப்பலாக நனைந்திருந்தாள், குழாயை மூடி அவள் கையிலிருந்து சோப்பை வாங்கி வைத்த கேசவன், “என்னடா இப்படி நனைஞ்சிருக்கே, சளி பிடிச்சுடும் டா!” என்று கூறி, சாரதாவின் நனைந்த உடையைக் களைந்து, துடைத்து விட்டு, வேறு உடையை மாற்றி நாற்காலியில் உக்கார வைத்தார்
இரண்டு நாளில் அஜயும், மாதவியும் வெளிநாட்டிலிருந்து வந்தார்கள். அவர்களைப் பார்த்ததும் சாரதா அழத் தொடங்கி விட்டாள்.
அவர்களை தன் அருகில் வரக் கூட அவள் அனுமதிக்கவில்லை
எத்தனை முயன்று அவர்கள் அருகில் சென்றாலும், முகத்தைத் திருப்பிக் கொள்வாள் சாரதா
“என்னப்பா இது? இத பார்க்கவா நாங்க வெளிநாட்டிலிருந்து வந்தோம்?” என்று கேட்டான் அஜய்.
“அவ நிலைமை அப்படி அஜய். ஆல்சைமர்ங்கற மறதி நோயால பாதிக்கப்பட்டுருக்கா. அதனால அவளுக்கு எல்லாமே மறந்து போயிடுச்சு. உன்னையும், என்னையும் மட்டுமல்ல, அவளையே அவளுக்கு யாருனு தெரியாது. அப்படி ஒரு கொடிய நோய் இந்த ஆல்சைமர்ஸ். ஒரு குழந்தையா மாறிடுவாங்க, அவங்க என்ன செய்றாங்கன்னு அவங்களுக்கே தெரியாது. ஒரு குழந்தையைப் பார்த்துக்கற மாதிரி பாத்துக்கணும்” என்றார் கேசவன்
ஒரு வாரம் சாரதாவின் நடவடிக்கையைப் பார்த்த அஜயும், மாதவியும், “நீங்க இப்படி கஷ்டப்பட்றத எங்களால பார்க்க முடியலை, பேசாம அம்மாவை ஏதாவது ஹோம்ல சேர்த்திடலாம் ப்பா!” என்றனர்
அதைக் கேட்டதும், கேசவனுக்குக் கோபம் சுர்ரென்று தலைக்கு ஏறியது
“என்ன பேசுறீங்க நீங்க? இப்படிச் சொல்ல உங்களுக்கு நாக்கு கூசலை? எனக்காக, உங்களுக்காக, நம்ம குடும்பத்துக்காக எவ்வளவு உழைச்சிருப்பா? எவ்வளவு தியாகம் செஞ்சிருப்பா? உங்களை இந்த அளவுக்கு ஆளாக்க அவ பட்ட கஷ்டங்களை நீங்க வேணா மறந்து போயிருக்கலாம், ஆனா நான் மறக்க மாட்டேன். என்னைக் காதலித்து எனக்காகவே வாழ்த்த அவளை எந்த ஹோம்லயும் விட நான் தயாரில்லை. கணவனும், மனைவியும் ஒருத்தருக்கொருத்தர் விட்டுக் கொடுத்து வாழறது தான் உண்மையான காதல். அதுவும் வயசான காலத்துல, அந்த காதல்ல அன்பு, பாசம், நேசம், அரவணைப்பு மட்டுமே இருக்கும். சாரதாவிற்கு ஒரு காதலனா, கணவனா மட்டுமில்லாம, ஒரு தாயா, தந்தையா நான் வாழ்ந்துட்டு இருக்கேன். என் உயிர் உள்ள வரைக்கும் என் சாரதாவை எங்கேயும் அனுப்ப நான் தயார் இல்லை” என உறுதியாகச் சொன்னார் கேசவன்
வயதான பின்பு, தம்பதியர் இடையே காதல் மேம்படுமே தவிர, எள்ளளவும் குறையாது, அந்த காதலில் காமமோ , மோகமோ இருக்காது, உண்மையான அன்பு மட்டுமே இருக்கும். அந்த காதல் காலத்துக்கும் அழியாது என புரிந்து கொண்டனர் அஜயும், மாதவியும்
(முற்றும்)
விமர்சனம் அனுப்ப கடைசி நாள் : மார்ச் 30, 2021 👇
Exclusive வாசிப்புப் போட்டி – சி.நா.உதயசூரியனின் ‘கல்யாண சந்தை’ நூல்
“சஹானா” மாத இதழ்களை வாசிக்க விரும்புவோருக்கு, இணைப்புகள் 👇
GIPHY App Key not set. Please check settings