in

ஜோதி (சிறுகதை) – ✍ ஸ்ரீவித்யா பசுபதி

ஜோதி (சிறுகதை)

“ஜோதி… நான் ரஞ்சனியம்மா வீட்டுல வேலையை முடிச்சுட்டு வந்துடறேன். ஒழுங்கா வீட்டுல உக்காந்து படி. ஜீவா சைக்கிள எடுத்து சுத்திட்டிருக்கான். ஆறு மணி ஆச்சுன்னா அவனையும் உள்ளார புடிச்சுப் போட்டு படிக்க வையி. என்னா…. சொல்றது காதுல விழுதா..? அப்புறம், பசிச்சதுன்னா அடுப்படில காலைல வச்ச இட்லியும், கொழம்பும் இருக்கு, சாப்பிடுங்க. ராத்திரிக்கு நான் வந்து தோசை சுட்டுத் தரேன். அப்புறம், உங்கப்பன் வழக்கம் போல நல்லா குடிச்சுட்டுத் தான் வருவாரு. அவருக்கு சோத்தையும், கொழம்பையும் போட்டு சாப்பிடச் சொல்லு… சரியா” என பர்சை எடுத்துக் கொண்டு கிளம்பினாள் வசந்தா

“அம்மா…. நானும் உன்கூட…” என்று ஜோதி முடிக்கும் முன்னே

“தெரியும்டி… என்கூட வரேன்னு தானே சொல்லப் போறே? கொஞ்ச நாளா நீ சரியில்லடி. ஒம்பதாங் கிளாசுல இருக்கே… படிப்புல கவனம் வேணும் ஜோதி. படிக்குற நேரத்துல, இப்படி வீட்டு வேலைக்குப் போற எடத்துக்கு, உன்னையும் கூட்டிட்டுப் போனா, படிப்பு கெட்டுப் போயிடும்டி. தெனமும் சொல்லணுமா? நம்ம குடும்ப நெலம தெரிஞ்சுமா இப்படி அடம் புடிக்கறே? நீ ஒழுங்கா படிச்சா தானே, உன்னைப் பாத்து உன் தம்பியும் ஒழுங்கா படிப்பான். அவன் தலையெடுத்தாத்தான் எனக்கு ஒரு விடிவுகாலம் பொறக்கும். புரிஞ்சுக்கடி”

‘அம்மாவிடம் சொல்லி விடலாமா?’ என தொண்டை வரை வந்ததை, சிரமப்பட்டு அடக்கிக் கொண்டாள் ஜோதி

மகளின் முகத்தில் தெரிந்தக் கலவையான உணர்வுகளுக்கு அர்த்தம் புரியாமல், குழப்பத்துடன் கிளம்பினாள் வசந்தா.

வழியெல்லாம் அதே சிந்தனை தான் அவளுக்கு. கவலையும், குழப்பமும் கலந்து வயிற்றில் ஏதோ இம்சை செய்தது. பெருமூச்சு விட்டப்படி வேகமாக நடந்தாள்.

வசந்தா… 45 வயது. வாழ்க்கையில் பட்ட அடி அவளை முதிர்ச்சியாகக் காட்டியது. ஆனால் உடலில் 35 வயதின் வேகம். வீட்டு வேலைகள் செய்பவள்.

 காலை 8:30 மணிக்கு ஆரம்பித்தால், வரிசையாக பத்து வீடுகளில் வேலை முடித்து, மதியம் மூன்று மணிக்கு வீடு திரும்புவாள்

ஜோதியும், ஜீவாவும் நான்கு மணிக்கு பள்ளியிலிருந்து வருவார்கள். அவர்களைக் கவனித்து விட்டு, வீட்டில் உள்ள வேலைகளை முடித்து, இரவு உணவுக்கு ஏதாவது தயார் செய்ய வேண்டியிருந்தால் செய்து  வைத்து விட்டு, பூக்காரம்மா கஸ்தூரிக்கு பூ கட்டி குடுப்பாள். அதில் ஏதோ ஐம்பதோ, நூறோ கிடைக்கும்.

பின் 5:30 மணிக்கு ரஞ்சனியம்மா வீட்டு வேலைக்குக் கிளம்புவாள். அதை முடித்து 7:30 மணிக்கு வீடு திரும்புவாள். இதுதான் அவளது தினசரி வேலை அட்டவணை.

பக்கத்திலிருக்கும் நகராட்சிப் பள்ளியில், வசந்தாவின் மகள் ஜோதி ஒன்பதாம் வகுப்பும், மகன் ஜீவா ஆறாம் வகுப்பும் படிக்கிறார்கள்.

படிப்புக்கு ரஞ்சனியம்மா மிகவும் உதவி செய்கிறார். வசந்தாவின் கணவன் குமரன், எலக்ட்ரிக்கல் வேலை செய்து கொண்டிருந்தான். கிட்டத்தட்ட பத்து வருடங்களாக குடிக்கு அடிமையாகி, வேலையும் இல்லாமல் இருக்கிறான். குடும்ப பாரம் முழுவதும் வசந்தாவின் தலையில்தான்.

வீட்டில் ஆண்துணை என்று வேண்டுமே என்பதற்காக, அவனை பொறுத்துக் கொண்டிருக்கிறாள் வசந்தா. வயது வந்தப் பெண்ணையும் வைத்துக் கொண்டு தனியாக இருந்தால்…. யோசித்துப் பார்க்கவே அவளுக்குப் பயமாக இருந்தது.

கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் முன்பு, திடீரென ஒரு நாள், வசந்தா ரஞ்சனியம்மா வீட்டுக்கு வேலைக்குக் கிளம்பும் போது, ஜோதி தானும் வருவதாகச் சொன்னாள்.

சரி…. ஏதோ பொழுது போகாமல் கேட்கிறாள் என நினைத்து, வசந்தாவும் தன்னுடன் அழைத்துப் போனாள். ஜோதியும் அம்மாவுக்கு உதவியாக, கூட மாட வேலைகள் செய்தாள். மறுநாளும் இது தொடர்ந்தது. அதற்கு மறுநாளும், ஜோதி இதே போல் கேட்கவே, வசந்தா கத்தி விட்டாள்

“என்னாடி நினைச்சுட்டிருக்கே உன் மனசுல? ஏதோ சும்மா ஒரு நா, ரெண்டு நா போனாப் போவுதுன்னு கூட்டிட்டுப் போனா, தெனமும் என்கூட கெளம்பறே? படிக்க வேணாமா? என்னைய மாதிரி வீட்டு வேலை செய்யப் போறியா? அதுக்காகவாடி நான் இவ்வளவு மெனக்கெட்டு உங்க ரெண்டு பேரையும் படிக்க வைக்கறேன்? என் கோவத்தக் கெளறாதடி ஜோதி. இனிமே இப்படிக் கேக்காம, படிப்புல கவனம் வையி…. புரிஞ்சுதா” என அதட்டினாள்

அதன் பின்னும், தினமும் ஜோதி அதே கேள்வியைக் கேட்பது தொடர்ந்தது. சில நேரம் பொறுமையாகவும், சில நேரம் கோபமாகவும் பதில் சொல்வாள் வசந்தா. இதோ இன்றும் அப்படித்தான். ஆனால் ஜோதி ஏன் அப்படிக் கேட்கிறாள் என்பது மட்டும் வசந்தாவுக்குப் புரியவில்லை.

வசந்தாவின் வாழ்க்கைப் போராட்டத்தின் வெறுப்புகளையும், கோபத்தையும் கொட்டும் வடிகால் ஜோதியும், ஜீவாவும் மட்டுமே. அதனால் இது மாதிரி ஏதாவது நச்சினால் கோபம் தான் வருகிறதே ஒழிய, அதை அலசி ஆராயும் மனநிலை வசந்தாவுக்கு இல்லை.

பலவித யோசனைகளுடன் ரஞ்சனியம்மா வீட்டுக்கு வந்து, வேலைகளை ஆரம்பித்தாள். ஆனால் ஜோதியைப் பற்றிய கவலை மட்டும் அவளைக் குடைந்து கொண்டிருந்தது.

“என்ன வசந்தா… ஏதோ குழப்பத்துல இருக்கற மாதிரி இருக்கு? ஏதாவது பிரச்சனையா?” என்றாள் ரஞ்சனி.

“இல்லங்கம்மா….. ஒண்ணுமில்ல…”

“இல்லையே… உன் முகமே சரியில்லையே…. என்ன… உன் புருஷன் வழக்கம் போல குடிச்சுட்டு வந்து கலாட்டா பண்றானா?”

“அது தெனமும் நடக்கறது தானேம்மா. அந்தாளை நான் ஒரு மனுஷனாவே மதிக்கறதில்லமா. இந்த ஜோதி என்னவோ சரியில்லம்மா. அதான் கொஞ்சம் கவலையா இருக்கு”

“என்ன வசந்தா இப்படிச் சொல்றே? ஜோதி தங்கமான பொண்ணாச்சே. அதிர்ந்துக் கூட பேச மாட்டாளே… நீ தேவையில்லாம போட்டு குழப்பிக்கிட்டு, அவளையும் நோகடிச்சுடாதே. படிக்கற பொண்ணு… மனசு நொந்தா படிப்புல கவனம் போயிரும்”

“இல்லங்கம்மா… அன்னிக்கு ஒரு ரெண்டு நா உங்க வீட்டுக்கு கூட்டியாந்தேனில்ல…. அதுல இருந்து, தெனமும் நான் உங்க வீட்டுக்குக் கெளம்பும் போது, கூட வரேன்னு நிக்குதும்மா. நானும் அன்பா சொல்லிப் பார்த்துட்டேன், திட்டியும் விட்டுட்டேன். ஆனா அவ கேக்கறத மட்டும் நிறுத்தல. இதோ… இன்னிக்குக் கூட கேட்டா. அதான் குழப்பமா இருக்கு”

“அப்படியா…? அவ ஏன் அப்படி கேக்கறான்னு அவகிட்ட விசாரிச்சியா? என்ன காரணம் சொல்றா?”

“காரணம் என்னம்மா காரணம். அது வெளையாட்டுப் புள்ள. படிக்காம ஒப்பேத்தறதுக்கு வழி தேடுது. வேற என்ன?”

“தப்பு வசந்தா. ஒரு பொண்ணு தினமும் இப்படிக் கேக்கறானா, வேற ஏதாவது காரணம் கூட இருக்கலாம். அந்த நேரத்துல, வீட்டுல இருக்க அவளுக்குப் பிடிக்கலையோ என்னவோ?”

“என்னம்மா சொல்றீங்க?”

“இல்ல வசந்தா… உன் புருஷன் தினமும் இந்த நேரத்துக்குத் தானே குடிச்சுட்டு வீட்டுக்கு வரான். அவன் வந்து ஏதாவது தகராறு பண்றானோ என்னவோ… அதுல இருந்து தப்பிக்கக் கூட ஜோதி அப்படி கேக்கலாம். என்ன, ஏதுன்னு விசாரி” எனவும்

‘பக்’கென்றது வசந்தாவுக்கு. அதன் பின் வேலையே ஓடவில்லை. ரஞ்சனியம்மாவிடம் நாளை வந்து செய்வதாய் சொல்லி விட்டு, ஓட்டமும், நடையுமாக வீட்டுக்கு வந்தாள்.

வீட்டில் அவள் கண்ட காட்சியில் அதிர்ந்துப் போனாள் வசந்தா.

கையில் அரிவாள்மனையுடன் கோபமாய் நின்றிருந்தாள் ஜோதி

“வேண்டாம்…. அப்பனாச்சேனு நானும் பொறுமையா இருக்கேன். அதுக்காக மேல கை வைக்கற வேலையெல்லாம் வேண்டாம். அம்மாவுக்காக நானும் பாக்கறேன். குடிச்சுட்டா கண்ணு மண்ணு தெரியாதா…? பெத்தப் பொண்ண போயி… தூ… தெனம் தெனம் உனக்கு பயந்து வாழறதவிட ஒரே போடு… எல்லாத்துக்கும் நிம்மதி…” ஆக்ரோஷமாகக் கத்தினாள் ஜோதி

வசந்தா ஓடிப் போய் குமரனைப் பிடித்துத் தள்ளிவிட்டு, ஜோதியைக் கட்டிக் கொண்டாள். இருவர் கண்களிலும் கண்ணீர் பெருகியது. அந்தக் கண்ணீரில் வசந்தாவின் குழப்பமும், ஜோதியின் பயமும் கரைந்துப் போயின

(முற்றும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

4 Comments

  1. இதை எப்படித் தவற விட்டேன்? ஆனால் இதை யூகம் செய்ய முடிந்தது. என்றாலும் இப்படித்தானே நடக்கிறது! இதற்கு முதல் பரிசு கிடைத்திருப்பதற்கு வாழ்த்துகள்.

  2. ஸ்ரீவித்யா பசுபதி அவர்களின் படைப்பான “ஜோதி”சிறுகதை
    இன்றைய சமூக சிக்கலின் நிதர்சனம் காட்டுகிறது. வசந்தா, ஜோதி போன்றோரின் நித்திய
    வாழ்க்கைப் போராட்டம் நாம்
    அனுதினமும் சந்திக்கும் நிகழ்வான போதும், அதனை சிறந்த எழுத்து
    நடையிலும் கருத்துச் செறிவிலும் வாசகர் மனதில் பதிய வைத்து விட்டார். முதற்பரிசு பெற்ற அவர்கட்கு எனது வாழ்த்துக்கள்!!!

விழிநீரே வடிகாலாய் !!! ✍ சக்தி ஸ்ரீனிவாஸன் – ஏப்ரல் 2021 போட்டிக்கான பதிவு

வருவதும் போவதும்…! (கவிதை) ✍ ஆர்.பூமாதேவி