sahanamag.com
Short Story Contest 2021 Entries சிறுகதைகள்

இசை (சிறுகதை) – ✍ மது ஸ்ரீதரன், சென்னை

இந்த போட்டிக்கான சிறப்புப் பரிசுகளை வழங்குபவர்கள், Madhura Boutique நிறுவனத்தார். அவர்களின் https://madhuraboutique.in/ என்ற தளத்திற்கு சென்று, உங்களுக்கோ அல்லது உங்களுக்கு வேண்டியவர்களுக்கு பரிசு தரவோ, தரமான புடவைகள், வெள்ளி நகைகள், ஜெர்மன் சில்வர் நகைகள் பெற்றுக் கொள்ளலாம்

சிறுகதைப் போட்டி 2021 (கதை எண் 97)

வருடைய புல்லாங்குழலில் இருந்து இசை கசிந்தோடத் துவங்கி இருந்தது. எளிமையான அந்த வீட்டின் திண்ணையைச் சுற்றிலும் மக்கள் குழுமி இருந்தார்கள்.

இரவின் நிசப்தத்தின் பின்னணியில், சில் வண்டுகளின் பக்க வாத்தியத்தில் குழலிசை பொங்கிப்  பரவி உள்ளங்களைக் கொள்ளை கொள்ள ஆரம்பிக்கிறது.

கட்புலனாகாத காற்று, அந்தச் சின்னதோர் உருளையின் வழியே உள் நுழைந்து துளைகளில் நீந்தி உருமாற்றம் பெற்று இசையாக வெளியேறி மாயாஜாலம் செய்து கொண்டிருந்தது.

இது தினமும் நடப்பது தான். வாசித்துக் கொண்டிருப்பவரை ஊர் மக்கள்  ‘வீரா’ என்று அழைத்தனர். வயல்வெளிகளில் வேலை செய்து களைத்து வருபவர்களுக்கும், கூலிவேலை செய்தும், வண்டி இழுத்தும், பாரம் தூக்கியும் அலுத்துச் சலித்துப் போய் வருபவர்களுக்கும் முன்னிரவில் அவரது இசை வலிநிவாரணியாக இருந்தது. 

அவர்களின் உடம்பு வலிக்கும், மனத்தளர்வுக்கும்  வெதுவெதுப்பான மூலிகை நீர்க்குளியலாய் புத்துணர்ச்சி வழங்கியது அந்தப் புல்லாங்குழல். சில நேரங்களில் பொழுது விடியும் வரை கூட இந்த இசை விருந்து தொடரும்.

பதிலுக்கு வீரா எதுவும் எதிர்பார்க்க மாட்டார். ஆனாலும் மக்கள் பிரதியுபகாரமாகத்  தங்களால் முடிந்த அரிசி, பருப்பு, காய்கறிகள், பழங்கள் இவற்றைக் கொடுத்து உதவுவார்கள்.

நடுத்தர வயதைத் தாண்டி விட்ட வீராவுக்கு, வேறெந்த வேலையும் தெரியாது என்பதும் நிஜம் தான். எல்லாமும் அவருக்கு இசை, இசை, இசை மட்டும் தான் தான்.

அவரது உடலுக்கும், உள்ளத்துக்கும், ஆன்மாவுக்கும் இசை ஒன்று மட்டுமே சோறு போட்டுக் கொண்டிருந்தது. 

ன்றும் வழக்கம் போல ஓர் இரவு. அக்கம் பக்கத்து மக்கள் திண்ணையைச் சுற்றிக் குழுமி அமர்ந்திருந்தார்கள். வீரா வந்து அமர்ந்தார்.

இசைப் பிரவாகம் மெல்ல மெல்ல ஊற்றாகக் கசியத் துவங்கி ஆற்றுப் பெருவெள்ளமாய் ஒடத் துவங்கி இருந்தது. கஜல்களின்  கந்தர்வ கானத்தில் மெய்மறந்து மக்கள் எல்லோரும் கண்மூடி அரை மயக்க நிலைக்குப் போய் விட்டிருந்தனர்.

தூரத்தில் குதிரைகளின் குளம்பொலிகள் கேட்கத் துவங்கின. இன்னதென்று இனம் காண முடியாத சத்தங்கள் இணைந்து கொண்டன.

அமர்ந்திருந்த மக்களிடையே சலசலப்பு. சிலர் எழுந்து நின்று விட்டிருந்தார்கள். சிலர் அங்குமிங்கும் ஓடினார்கள்.

வீராவுக்கு ஓரளவு விஷயம் விளங்கி விட்டிருந்தது. இது எதிர்பார்த்த ஒன்று தான். என்ன, இவ்வளவு சீக்கிரம் ஆபத்து வரும் என்று தான்  அவர் எதிர்பார்க்கவில்லை. இசையை நிறுத்தாமல் தொடர்ந்து வாசித்துக் கொண்டிருந்தார்.

அவரது ரசிகர்களில் ஒருவர் எழுந்து திண்ணைக்கு வந்தார். ‘போதும்’ என்று சைகை செய்து அவர் வாயில் இருந்த குழலை மென்மையாக அகற்றினார். பணிவாகக் கைகுவித்து வீட்டுக்குச் செல்லும்படி வேண்டிக் கொண்டார். 

வீரா சைகையிலேயே மறுத்தார். பின்னர் தன் ரசிகர்களுக்காக ஒப்புக் கொண்டு ஒருவாறு வீட்டுக்குள் சென்றார். கதவை அடைத்தார். கூடியிருந்த கூட்டம் மெல்ல விலகியது.

உள்ளே ஒரு குவளை நிறையக்  காய்ச்சிய பாலை ஆற்றிக் கொண்டிருந்தாள் வீராவின் மனைவி சகானா.

“இந்தப் பாலைக் கொஞ்சம் குடியுங்கள்”

“வேண்டாம்”

அருகில் வந்து அமர்ந்தாள்.

“உங்கள் கவலை எனக்குப் புரியாமல் இல்லை, நம் சக்திக்கு மீறி நடக்கும் செயல்களுக்கு நாம் என்ன செய்ய முடியும்? இறைவன் மீது பாரத்தைப் போட்டுவிட்டு இருக்க வேண்டியது தான், இந்த பாலைக் குடித்து விட்டு தூங்கச் செல்லுங்கள்.”

வீரா பதிலேதும் சொல்லாமல் சிந்தனையில் ஆழ்ந்திருந்தார்.

வெளியே குதிரைகளின் காலடிச் சத்தம் மிக அருகில் கேட்டது. படை வீரர்கள் இரவு நேர ரோந்துக்கு வந்து விட்டிருந்தார்கள். எதையோ யோசித்துக் கொண்டு யோசனையில் ஆழ்ந்தார் வீரா.

வீரா இருக்கும் பிரதேசம் ஓரளவு பெரிய தேசம். அவ்வளவு வளமான பூமி என்று சொல்லி விட முடியாது. பெரும்பாலும் வானம் பார்த்த பூமி தான்.

கல் மலைகள், பாறைப் பிரதேசம், பாலைவன பூமி…ஆங்காங்கே கொஞ்சம் நீர் நிலைகள், வயல் வெளிகள், பேருக்கு இரண்டொரு ஆறுகள். வணிகம் தான் மக்களின் பிரதான தொழில்.

பிறந்ததில் இருந்தே இங்கு தான் இருக்கிறது இவர் குடும்பம். ஏன் பரம்பரை பரம்பரையாக இந்த பூமியில் தான் வாழ்கிறது. இசை தான் இவர்களின் பரம்பரைச் சொத்து.

அரண்மனையில் அரசர்களைப் போற்றிப் பாடி இசைத்துப் பணமும் புகழும் குவிக்கும் வாய்ப்பு வீராவின் தாத்தாவுக்கும், அப்பாவுக்கும் ஏன் வீராவுக்குமே வாய்த்தது.

ஆனால் அதை மறுத்து விட்டு ‘மக்கள் கலைஞர்களாகவே’ இசைப் பயணத்தைத்  தொடர்கிறார்கள். இசையை ஒருபோதும் அடமானம் வைக்கக் கூடாது என்பது இவர்களின் அசைக்க முடியாத தீர்மானம்.

இதுநாள் வரை வீராவின் வாழ்வில் எல்லாம் சரியாகத் தான் சென்று கொண்டிருந்தன. காலையில் இசைப் பயிற்சி. இறைவனைப் போற்றிப் பாடுதல். நண்பர்களைச் சந்தித்தல். எளிய மதிய உணவு. குட்டித் தூக்கம். புத்தகம் படித்தல். இசை ஆராய்ச்சி. மாலையில் வகுப்புகள். இரவில் பாமர மக்களுக்கான இசை- இவ்வாறு.. 

விதியின் விளையாட்டாக இந்த தேசத்துக்குப் புதிய அரசன் ஒருவன் வந்து சேர்ந்திருக்கிறான்.  ஒரு விதத்தில் கொடுங்கோலன் என்றும் சொல்லலாம்.

கலை, இலக்கியம், இசை, இவையெல்லாம் அவனுக்கு அறவே பிடிக்காத வார்த்தைகளின் பட்டியலில்  முதலிடம் பெற்றிருந்தன. இவை எல்லாம் தேவை இல்லாத  வேலைகள்  என்பதும் இசையும் இலக்கியமும் தேசத்தின் வருமானத்துக்கு எந்த விதத்திலும் உதவாத கால விரயம் செய்யும் செயல்கள் என்பதும், கலைஞர்களும் கவிஞர்களும் நாட்டைக் கெடுக்க வந்த நயவஞ்சகர்கள் என்பதும்  அவன் கருத்து. 

அவன் பயந்ததிலும் ஓரளவு அர்த்தம் இருந்தது. புரட்சிக் கருத்துகளை, அதிகாரத்துக்கு எதிரான சிந்தனைகளை இசையும், கவிதையும், இலக்கியமும்  மிக எளிதாக மக்கள் மனதில் விதைத்து விட முடியுமே!

அப்புறம், எந்த இசை ஆபத்தான இசை, எந்தக் கவிதை ஆபத்தில்லாத கவிதை, எந்த இசை பொழுதுபோக்கிற்கு, எந்த இசை புரட்சிக்கு என்றெல்லாம் எப்படி ஆராய்ந்து கொண்டிருப்பது? ஒட்டுமொத்தமாகத் தடை செய்து விட்டால் ஆயிற்று!

ஆட்சிக்கு வந்த மறுநாளே தேசத்தில் எங்கும் இசை, இலக்கிய நிகழ்ச்சிகள் நடக்கக் கூடாது என்று உத்தரவிட்டு விட்டான். நூலகங்கள் மூடப்பட்டன. இசை அரங்கங்கள் மூடப்பட்டன.

இசைக் கருவிகள் உறை போடப்பட்டு பரணுக்கு ஏறின. மீறிப் பாடுபவர்களுக்கு, இசைக்கருவிகள்  இசைப்பவர்களுக்குக் கடுமையான தண்டனைகள் தரப்பட்டன.

வீரா இருப்பது எல்லையோரப் பகுதி. இங்கே இவ்வளவு நாள் அவ்வளவாகத் தொல்லைகள் இல்லை. எப்போதும் போல இரவில் இசைக் கச்சேரி நடந்து கொண்டு தான் இருந்தது. இப்போது தான் ஓரிரு வாரங்களாகத்  தலைவலிகள் ஆரம்பமாகி இருக்கின்றன.

இரவுக் கச்சேரிக்கு வந்து கொண்டிருந்த மக்கள் கூட்டம் மெல்ல மெல்லக் குறையத் துவங்கியது. ஐந்நூறு நூறாகி, நூறு ஐம்பதாகி, ஐம்பது ஐந்தாகி விட்டது. 

‘இனிமேல் இந்த வீட்டில் சங்கீதம் கேட்டால் வாசிப்பவரைச் சிறையில் அடைத்து விடுவோம்’ என்று மிரட்டிச் சென்றார்கள் காவலர்கள். 

வீட்டில் இருந்த தட்டுமுட்டுச் சாமான்கள் வெளியே வீசப்பட்டன. புல்லாங்குழல் பிடுங்கி எறியப்பட்டது. எரிக்கப்பட்டது. 

அபராதம் விதித்தார்கள். வீட்டுச்சிறை வைத்தார்கள். இதோ, வீரா ஓராண்டு கடுங்காவல் சிறைக்கும் சென்று வந்தாகி விட்டது. தங்கையின் வீட்டில் தங்கி காலத்தை ஓட்டினாள் சகானா.

திரும்பி வரும்போது கணவனும் மனைவியும்  பாதியாகி விட்டிருந்தார்கள். வந்ததும் வராததுமாக புல்லாங்குழலைக் கேட்டார் வீரா.

“சகானா, எங்கே அந்த ஒளித்து வைத்த புல்லாங்குழல்? அதை எடு! கதவுகளை வேண்டுமானால் அடைத்துக் கொள், எனக்கு இப்போதே வாசிக்க வேண்டும் போல் இருக்கிறது”

மறுத்தாள் சகானா

“உங்களுக்குப் பைத்தியமா என்ன? புல்லாங்குழல்  இப்போது இங்கே இல்லை”

“ஏன், அதை என்ன செய்தாய்?”

“வாசித்தால் செத்துப் போவோம்”

“வாசிக்காவிட்டாலும் நான் செத்துப் போவேன், ஏற்கனவே நடைப்பிணமாகத் தான் இருக்கிறேன் “

“உங்களுக்கு இசை முக்கியமாக இருக்கலாம். எனக்கு நீங்கள் தான் முக்கியம், இன்னும் நீண்ட நாள் நான் உங்களுடன் வாழ வேண்டும்”

“இதைப் பார் சகானா, சுத்தப் பைத்தியக்காரத் தனம் இது. இந்த மடையர்களால் இசைக்குத் தடை போட முடியுமா என்ன? இசை மனிதர்களின் வாயிலிருந்தும், கையில் இருந்துமா வருகிறது? சதா அலைகளின் வழி  இரைந்து கொண்டிருக்கும் கடலின் இன்னிசைக்கும், குயிலின் சங்கீதத்திற்கும், மழையின் தாள ஒலிக்கும், வீசும் காற்றின் சீழ்க்கைக்கும், வண்டுகளின் ரீங்காரத்திற்கும், தியானத்தில் நிகழும் தெய்வீகமான மௌன ஓசையின் ஸ்வரங்களுக்கும் இவர்களால் தடை போட முடியுமா?”

“நான் ஒன்று சொல்வேன், கேட்பீர்களா?”

“சொல்”

“பக்கத்து நாட்டுக்கு அகதிகளாகத் தப்பிச் செல்ல நம் ஊர்க்காரர்கள்  திட்டமிட்டு இருக்கிறார்கள், இன்னும் ஒருசில நாட்களில். அவர்களுடன் சேர்ந்து கொண்டு நாமும் இங்கிருந்து தப்பி விடுவோம்”

“என்ன விளையாடுகிறாயா?”

“வேறு வழியே இல்லை..”

“பரம்பரை பரம்பரையாக வாழ்ந்த வீடு, இசைத்த வீடு, இந்த வீட்டின் ஒவ்வொரு செங்கல்லிலும் சங்கீதம் ஒலித்துக் கொண்டிருக்கிறது, இதற்கு முன்பு போர் வந்த போது எல்லோரும் இப்படி ஊரைக் காலி செய்தார்கள், நாம் இங்குதானே இருந்தோம்! இப்போதும் இருப்போம்!”

“புது தேசத்தில் நீங்கள் சுதந்திரமாக வாசிக்கலாம்”

“அடி போடி, இவளே! இவர்கள் படையெடுத்து அங்கேயும் வருவதற்கு வெகுகாலம் பிடிக்காது!”

“தற்காலிக நிம்மதியேனும் கிடைக்குமே!”

“இசை தான் எனக்கு நிரந்தர நிம்மதி!”

“ஒன்றை யோசித்துப் பாருங்கள்..அங்கே போனால் நீங்கள் மீண்டும் உழைக்கும் வர்க்கத்தினருக்கு இசைக் கச்சேரிகள்  வாசிக்கலாம்.. ஒருவேளை அங்கே வாழ்க்கை இதை விடச் சிறப்பாய் அமையலாம்..”

மெல்ல மெல்லப் பேசி அவர் மனதைக் கரைத்தாள் சகானா. அரைமனதாகச் சம்மதித்தார் வீரா.

ப்பித்துச் செல்லும் அந்த நாளும் வந்து விட்டது.

ஒரு ஐநூறு பேர் இரவில் தப்பிச் செல்வதென்று ஏற்பாடு. எல்லைப்பகுதி என்பதால் விடிவதற்குள் பக்கத்து தேசம் சென்று விடலாம். கால்நடைப்பயணம். காட்டுவழி என்பதால் யார் கண்ணிலும் படாமல் சுலபமாக  நழுவி விடலாம்.

படகுகள், குதிரைகள், தீவட்டிகள், ஈட்டிகள், கத்திகள், வழிகாட்டுவதற்கு காட்டை நன்கறிந்த இளைஞர்கள் என்று எல்லாம் தயார் நிலையில் இருந்தன. தட்டுமுட்டுச் சாமான்களை, எல்லாம் எடுத்துக் கட்டி மூட்டையை ஒளித்து வைத்துக் கொண்டு காத்திருந்தாள் சகானா.

காவலர்கள் ரோந்து வருவதற்குள் கிளம்பி விட வேண்டும். சந்தேகம் வராமல் பத்துப் பத்து பேராகக் கிளம்ப வேண்டும். ஏற்கனவே ஏழெட்டுக் குழுக்கள் கிளம்பிச் சென்று  விட்டிருந்தன.

இதோ, நிலவு மேலே ஏறிக் கொண்டிருக்கிறது. வீராவின் குடும்பம் கிளம்புவதற்கு இன்னும் அரை  மணிநேரம் தான் பாக்கி இருந்தது. 

அந்தச் சமயத்தில் பெண் ஒருத்தி முக்காடிட்டபடி அவசர அவசரமாக வீராவின் வீட்டுக்குள் நுழைகிறாள்.

கூட வந்த இருவர் அவளது பத்து வயதுப் பெண்ணைத் தூக்கி வந்து  கூடத்தில் படுக்க வைக்கிறார்கள். அந்தச் சிறுமி ஆடாமல் அசையாமல் படுத்திருக்கிறாள். அவ்வப்போது சிறு முனகல் சத்தம் மட்டும் கேட்ட வண்ணம் இருக்கிறது. அரிதாக அவ்வப்போது விக்கல் வந்து வந்து அடங்குகிறது.

உள்ளே வந்த பெண், அதாவது சிறுமியின் அம்மா விடாமல் அழுகிறாள். 

“ஐயா, இவளை ஞாபகம் இருக்கிறதா?”

வீரா கண்ணைக் குறுக்கிப் பார்த்தார்.

“ஆமாம், ஒருநாள் கூட விடாமல் கச்சேரிக்கு வந்து முதல் வரிசையில் அமர்ந்து கொள்வாளே இந்தச்  சுட்டிப் பெண், என்ன ஆயிற்று குழந்தைக்கு?”

“ஒரு வாரமாகக் காய்ச்சல் கண்டு விடவே இல்லை. செய்யாத வைத்தியம் இல்லை. மருத்துவர் கைவிரித்து விட்டார், இனி கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் என்று சொல்லி விட்டார்” – அவள் மீண்டும் வெடித்து அழுதாள்.

வீரா அந்தச் சிறுமியின் தலையை வருடி விட்டார்.

அந்தப் பெண் தொடர்ந்தாள். “நாங்களும் உங்களுடன் அகதிகளாக இப்போது புறப்பட  இருக்கிறோம். என் கணவர் இவளை விட்டுவிட்டு மகனை மட்டும் அழைத்துக் கொண்டு  தப்பிச் சென்று விடலாம் என்கிறார். என் பெண்ணுக்கு உடம்பின் அத்தனை இயக்கங்களும் நின்று விட்டன. உயிர் மட்டும் ஏனோ ஊசலாடிக் கொண்டிருக்கிறது, இவளின் மரண அவஸ்தையைக் காண முடியவில்லை, ஐயா!”

சகானா அவளைத் தேற்றினாள். “இறைவன் இவளுக்குக் கொடுத்த ஆயுள் அவ்வளவு தான் என்று எண்ணிக் கொள் மகளே, என்ன செய்வது, நாமே இப்போது நாடோடிகள், அகதிகள், நாளைய வாழ்வு நிச்சயமற்ற நிலையில் இருப்பவர்கள்

இன்னும் கஷ்டம் கொடுக்காமல் இறைவன் சீக்கிரம் தன்னிடம் அழைத்துக் கொள்ளட்டும்.  இருக்கும் இன்னொரு குழந்தையையாவது காப்பாற்றிக் கொள், உன் மகனை அழைத்துக் கொண்டு கிளம்புவோம் வா, சீக்கிரம்..”

அந்தப் பெண் வீராவைப் பார்த்தாள்.

“ஐயா, இவளுக்கு உங்கள் புல்லாங்குழல் இசை என்றால் உயிர், ஒவ்வோர் இரவும் வெகு நேரத்துக்கு முன்பாகவே உங்கள் வீட்டுத் திண்ணையில் வந்து அமர்ந்து இடம் பிடித்து விடுவாள், பனியோ, மழையோ, புழுக்கமோ ஒருநாள் கூடத் தவற மாட்டாள்.

படை வீரர்கள் கட்டுப்பாடு போட்டபிறகு, கச்சேரி நடக்காவிட்டாலும் வந்து திண்ணையில் சும்மா உட்கார்ந்து கொள்வாள். இசைப் பித்து பிடித்த பிறவி! இப்போது உங்கள் குழல் ஓசையைக் கடைசியாகக் கேட்காமல் உயிர் போகாது போலிருக்கிறதே!”

சகானா கலவரமானாள்.

“என்ன சொல்கிறாய், பைத்தியமா நீ? திறந்து வைத்த இனிப்பை எங்கிருந்தோ தேடி வந்து உடனே மொய்க்கும் எறும்புகள் போல சங்கீதம் எங்கே கேட்டாலும் ஓடி வந்து வெறியுடன்  கொன்றுபோடும் அளவு வன்முறையாளர்களாக மாறி விட்டார்கள் கருணையற்ற இந்தப்  படைவீரர்கள். அதுவும் இல்லாமல் எங்களிடம் இப்போது எந்த வாத்தியமும் இல்லை, தூக்கி வீசியாகி விட்டது, நீ இங்கிருந்து கிளம்பு”

அந்தப் பெண் சேலைத் தலைப்பில் இருந்து ஒரு புல்லாங்குழலை எடுத்தாள்.

“இதை எங்கிருந்தோ ஒருநாள் எடுத்து வந்தாள் இவள், முன்பெல்லாம் வாயில் வைத்துத் தனக்குத் தெரிந்தபடி வீரா ஐயா வாசிப்பது போலவே இவளும் ஊதிக்கொண்டு இருப்பாள், அதன்பிறகு இந்தப் பொல்லாத ஆட்சியாளர்கள் வந்ததும் நான் தான் அவளிடம் இருந்து இதைப் பிடுங்கி ஒருவருட காலமாக மறைத்து வைத்திருந்தேன்”

அவள் குழலை வீராவிடம் நீட்டினாள். சகானா அலறினாள்.

“அடிப்பாவி, என்ன செய்கிறாய், கொண்டு போ இதை இங்கிருந்து! கடைசி நேரத்தில் எல்லாம் திட்டமிட்டபடி சென்று கொண்டிருக்கும்போது எங்களுக்கு எமனாக வந்து சேர்ந்து விட்டாயே!”

கணவனிடம் கண்களால் கெஞ்சினாள். வீரா கையமர்த்தி மனைவியை அடக்கினார்.

“சகானா, கொஞ்சம் அமைதியாக இரு! இறைவனின் திருவுள்ளப்படியே இவையெல்லாம் நடக்கின்றன. நான் இப்போது இவளுக்காக வாசிக்கத் தான் போகிறேன், இருப்பவர்கள் இருக்கலாம், உயிருக்குப் பயந்தவர்கள் கிளம்பலாம், இது உனக்கும் சேர்த்துத் தான்”

வீரா பாய் ஒன்றை விரித்து அதன் மேல் அமர்ந்தார். மடியில் சிறுமியின் தலையைக் கிடத்திக் கொண்டார். அவரது கண்களில் இருந்து நீர் வழிந்தது. குரல் கம்மியது.

“ஓர் உயிர் தவித்துக் கொண்டு இருக்கும்போது உதவாத இசை, ஒரு சின்னங்சிறு குருத்தின் இறுதி ஆசையை நிறைவேற்ற லாயக்கற்ற இசை, அதனால் பயன் என்ன? சொல்லப் போனால் இதுவரை வாசித்ததிலேயே என்னைப் பெருமைப்படுத்தப் போகும் இசை, எனக்கு நிஜமான நிறைவைத் தரப்போகும் இசை இது தான், இப்போது வாசிக்காமல் விட்டு விட்டு நான் என்ன செய்யப் போகிறேன்?

உயிருக்குப் பயந்து எங்கு போய் ஓடி ஒளியப் போகிறேன்? ‘நானும் ஓர் இசைக் கலைஞன்’ என்று பொய்யான முகமூடி சுற்றிக்கொண்டு பரதேசத்தில் யாருக்காக நடமாடிக்கொண்டு உயிர் வாழப் போகிறேன்?”

“..”

“இது இவளது இறுதி இசை, இசை மீது தாகம் கொண்ட ஓர் உயிரின் இறுதி ஆசை! தவிக்கின்ற இந்த உயிரை, இருக்கவும் முடியாமல் போகவும் முடியாமல் அல்லாடும் ஆத்மாவை இந்த இசை  சாந்தப்படுத்தட்டும்

ஆனந்தமாகக் கொண்டாட்டமாக வழியனுப்பி வைக்கட்டும், இதன் மூலம் நானும் சாகவேண்டும் என்று இருந்தால் அதுவும் எனக்கு மகிழ்ச்சியே, என் இறுதிப் பயணமும் இந்த இசையுடனேயே நடக்கட்டும்.”

வீரா குழலை எடுத்து வாசிக்க ஆரம்பித்தார். இசை மெல்ல மெல்ல வழிந்து ஓட ஆரம்பித்தது. நீரோடையாய், அருவியாய், பிரவாகமாய் மாறி ஓடத்துவங்கி இருந்தது. ராகம் ‘மக்வம்’ அதன் கஜல்களில் கலந்து சுழன்றோடி ஒரு நறுமணம் போல அந்த ஊரையே வசப்படுத்தி நிறைக்கத் துவங்கி இருந்தது.

எத்தனை காலம் கடந்திருக்கும் என்று தெரியவில்லை. வீரா கண்ணைத் திறந்தார்.

சுற்றுமுற்றும் யாரும் இல்லை. சகானாவைத் தவிர. சகானா இன்னும் அந்த நின்று விட்ட இசையைக் கண்மூடி  ரசித்துக் கொண்டிருந்தாள்.

சிறுமியின் மூச்சு நின்று விட்டிருந்தது.

நிர்மலமான அந்தக் குழந்தை  முகத்தில் ஒரு குருங்சிறுப்பும், ஆத்ம நிம்மதியும் உறைந்து அப்படியே தங்கி விட்டிருந்தன.

குதிரைகளின் குளம்பொலி அருகே, மிக அருகே நெருங்கி வந்து விட்டிருந்தது

‘சஹானா’ இணைய இதழின் ‘சிறுகதை விமர்சனப் போட்டி’ யில் கலந்து கொண்டு பரிசு வெல்லும் வாய்ப்பு. போட்டி விவரங்கள் அறிய, இங்கு கிளிக் செய்யுங்கள்

(முற்றும்)

#ads தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇

      

        

‘சஹானா’ சிறுகதைப் போட்டியில் பங்குபெறும் மற்ற கதைகளை வாசிக்க இணைப்பு இதோ – https://sahanamag.com/short-story-contest-2021-entries/

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!